புதன், 1 ஜூலை, 2020

ஹவில்தார் அப்துல் ஹமீத் பிறந்தநாள் ஜூலை 1.

பாரத நாட்டின்  சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் தன் உயிரையே பலிதானமாகத் தந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் பிறந்தநாள் இன்று.  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளித்து நாடு அப்துல் ஹமீதைக் கௌரவித்தது.


இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூர் மாவட்டத்தின் தமுப்பூர் என்ற கிராமத்தில் தையல் கலைஞராக தொழில் செய்து வந்த மொஹம்மத் உஸ்மான் என்பவரின் மகனாக 1933ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் அப்துல் ஹமீத். இவர் தாயார் பெயர் சகினா பேகம். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் இரண்டு சகோதிரிகளும். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே அப்துல் ஹமீதின் கனவாக இருந்து வந்தது.

1954ஆம் ஆண்டு இறுதியில் ஹமீது பாரத ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். க்ரெண்டியர்ஸ் என்று அழைக்கப்படும் காலாள்படை பிரிவில் ஹமீது பணியாற்றினார். தனது படைப்பிரிவொடு ஆக்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அமிர்ஸ்தர், டெல்லி என்று பல்வேறு இடங்களில் இவர் வேலை பார்த்து வந்தார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போரிலும் ஹமீது கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவம் 30,000 தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து காஷ்மீரில் ஊடுருவியது. வழக்கம் போல அது மக்கள் புரட்சி என்று கூறி அவர்களுக்குத் துணையாக ராணுவம் களமிறங்கியது என்று கூறுவதுதான் அவர்கள் திட்டம்.

பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பு செம்பருந்துப் படை என்று அழைக்கப்படும் காலாள்படையின் நான்காம் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படையின் ஒரு பகுதிதான் க்ரெண்டியர் படை.  1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் இரவில் க்ரெண்டியர் படை பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.  விமானம் மூலமாகவும், பீரங்கிகளைக் கொண்டும் பாரத எல்லையை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. அமெரிக்க நாடு அளித்திருந்த பட்டன் பீரங்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது.

அதுவரை அன்றய நிலையில் உலகத்தின் மிகச் சிறப்பான பீரங்கி என்ற பெருமை பட்டன் பீரங்கிக்கு இருந்தது. ஆனால் தனது ராணுவ ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு இரண்டு நாள்களில் எட்டு பட்டன் பீரங்கிகளை அப்துல் ஹமீது அழித்தொழித்தார். பட்டன் பீரங்கி பற்றிய பிம்பம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. உயர்தர தளவாடங்களால் அல்ல, நாட்டுப் பற்றும் வீரமும் கொண்ட வீரர்களாலதான் போர்கள் வெல்லப்படுகின்றன என்ற உண்மையை ஹவில்தார் அப்துல் ஹமீது உறுதியாக்கினார்.

இந்தப் போர்முனையில் நாட்டைக் காக்கும் பணியில் அப்துல் ஹமீது தனது உயிரை ஆகுதியாக்கினார். நாட்டின் கௌரவத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் உயிரையும் கொடுப்பேன் என்று பாரத ராணுவத்தில் சேரும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தன் இன்னுயிரைக் கொடுத்து அப்துல் ஹமீது உண்மையாக்கினார்.

போர்க்களத்தில் மிகப் பெரும் வீர சாகசத்தை நடத்திக் காட்டி, பலிதானியான அப்துல் ஹமீது அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அவர் நினைவாக அவர் போரிட்ட பஞ்சாபில் உள்ள அசல் உத்தார் கிராமத்தில் செப்டம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்துல் ஹமீதின் பிறப்பிடமான தமுப்பூர் கிராமத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாவீரர் அப்துல் ஹமீது அவர்களின் பிறந்தநாளான இன்று ஒரே இந்தியா தளம் அவர்க்கு புகழஞ்சலி செலுத்துகிறது. 

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள் - ஜூலை 1


பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.