ஹிந்துத்வ இயக்கத்தினரால் சற்றே பயம் கலந்த மரியாதையுடனும், இடதுசாரி மற்றும் திராவிட இயக்கவாதிகளால் எரிச்சலுடனும் சுட்டப்படும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் தமிழ் பேப்பர் இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் பண்டைய காலத்தின் சிந்தனைப் போக்கையும், காலம் காலமாக அது எழுப்பி வந்த கேள்விகளைப் பற்றியும் ஆராய்கிறது இந்த நூல்.
வடக்கே சிந்து நதி முதல் தெற்க்கே கடல் கொண்ட ( அல்லது கொண்டதாகக் நம்பப்படும் ) லெமுரியா வரை பரவி இருந்தது தமிழர் நாகரீகம், அதனை கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் அழித்து விட்டார்கள் எனவும் பரந்த இந்த நிலப்பரப்பு ஒரே நாடாக ஒருநாளும் இருந்தது இல்லை என்றும், பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக வெவ்வேறு தேசிய இனங்கள் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டது இந்தியா என்ற தோற்றம் என்றும் பேசுபவர்களுக்கு, பண்பாட்டு ரீதியாக எப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலப்பரப்பில் ஒரே தத்துவம் உயிர்ப்போடு இருக்கிறது என்று பதில் அளிக்கிறது இந்த நூல்.
ஒரே இறைவன் ஒரே இறைநூல் ஒரே மார்க்கம் என்ற தத்துவம் எதனாலோ இந்த மண்ணில் ஒருபோதும் வேர்விடவில்லை. உண்மையை அறிய பல்வேறு வழிகள் இருக்கலாம் என்ற பன்மைத்தன்மையை இந்த நாடு மீண்டும் மீண்டும் உரக்கக் கூறிக்கொண்டே இருக்கிறது.
இறை நம்பிக்கை மட்டும் அல்ல இறைமறுப்பும் இணைந்தே இங்கே வேர்விட்டு உள்ளது. படைப்புக்கு ஒரு முதல்வன் தேவையா ? படைப்பும் படைத்தவனும் வேறுவேறா அல்லது ஓன்றுதானா ? படைத்தவன் முதல்பொருளா அல்லது காரணப் பொருளா ? படைப்பு என்பது அவனிடம் இருந்தே படைக்கப் பட்டதா இல்லை வேறு எதையோ வைத்து அவன் படைத்தானா என்ற விரிவான விவாதங்கள் இங்கே நடந்து இருக்கிறது.
"வேத ரிஷிகள் கேள்விகளைக் கேட்கத் தூண்டினார்கள். தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். என்றாலும் இறுதிவிடை உங்களிடமிருந்துதான் வரவேண்டும். கையேடு பாதையாகிவிடாது. அனுபவமே சத்தியம். வேதங்கள் அனுபவத்துக்கு கீழேதான். எனவே கேள்விகளை அவர்களே கேட்டார்கள்."
இப்படிக் கேட்ட கேள்விகளும் அதற்க்கு கிடைத்த கிடைத்த பதில்களும் தான் உபநிடதங்கள் எனத் தொகுக்கப் பட்டன. அதுபோலவே அரவிந்தன் இந்த நூலில் பலப் பல கேள்விகளை எழுப்பி அதற்க்கு விடை காண முயற்சி செய்கிறார்.
வேதத்தில் குறிக்கப் படும் வேள்விகள் எதனைச் சுட்டுகின்றன, வேள்வி மேடைகளுக்கும் இன்றும் நமது வீடுகளில் வரையப்படும் கோலங்களுக்கும் ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா ?
இன்று போதை அளிக்கும் பானமாக காட்டப்படும் சோமம் என்ற பானம் உண்மையில் என்னவாக இருக்க முடியும் ?
அநேகமாக எல்லா இறைக் கோட்பாடுகளிலும் காட்டப் படும் பிரளயம் என்பது என்னவாக இருந்து இருக்கக் கூடும் ?
இன்றும் பல்வேறு மக்களின் நினைவில் வாழும் சரஸ்வதி நதி பற்றிய விவாதங்கள்
இந்திய நாகரீகத்தில் பெண் தெய்வங்கள் இருந்தனவா ? இருந்தால் அவர்கள் எந்த இடத்தைப் பெற்று இருந்தார்கள் ?
காலத்தையும் மனதைப் பற்றியும் வேத நூல்கள் என்ன கூறுகின்றன ?
பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு கடல் பற்றிய ஞானம் இருந்ததா, கடலோடிகள் அந்த சமுதாயத்தில் இருந்தார்களா ?
வேத நூல்கள் காட்டும் அறம் என்பது எவையெல்லாம் ? விவசாயம் பற்றி, உணவைப் பகிர்ந்து அளிப்பது பற்றிய சிந்தனை எப்படி உருவாகி வளர்ந்து வந்து இருக்கிறது
அஸ்வமேத யாகம் என்பது என்ன ? அது வளமையைக் குறிக்கும் சடங்கா அல்லது திராவிடவாதிகள் சொல்வது போல வெறும் பாலியல் ஆபாசமா ?
( இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம், இந்தக் கலாசாரத்தில் ஆண் பெண் உறவு என்பது பாவம் என்று ஒருபோதும் கருதப்படவில்லை என்பது )
ஆரிய என்ற சொல் எதனைச் சுட்டுகிறது ? ஒரு தனி இனத்தையா ? அல்லது குணத்தைக் குறிக்கவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதா ?
தமிழர்கள் தனி இனம், அவர்களுக்கும் இந்தியப் பண்பாடு என்று குறிக்கப் படுவதற்கும் தொடர்ப்பு இல்லை என்ற கருத்து உண்மையா ?
புறநானூறும் மற்றைய சங்க இலக்கியங்களும் வேத நெறிகளைப் பற்றி, வேள்வி முதலான சடங்குகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா ?
சதியைத் தடை செய்த ஆங்கிலேய அரசு, குழந்தைத் திருமணங்களை ஏன் தடை செய்ய விரும்பவில்லை ?
கேள்விகள் கேள்விகள், முடிவுறாது மீண்டும் மீண்டும் எழும்பும் கேள்விகள். இவற்றிக்கு மிகச் சிறந்த வழக்கறிஞர் போல வேத நூல்களில் இருந்தும், பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தரும் விவரங்கள் மூலமும் தனது வாதத்தை முன்வைக்கிறார்.
நல்ல விவாதச் சூழலில், அரவிந்தனின் இந்தப் புத்தகத்தை முன்வைத்து எதிர் வாதங்களும், அதற்க்கான ஆதாரங்களும் அளிக்கப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்ட வசமாக இணையத்தில் இந்தத் தொடர் வெளியாகும் போது இதற்கான எதிர்மறை வெறும் கூச்சலும், பழிச் சொல்லுமாகவே முடிந்து போய் விட்டது.
ஹிந்துத்வர்களும், அவர்களை மறுப்பவர்களும் கட்டாயம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.
ஆழி பெரிதா என்பதை நான் அறியேன், ஆனால் அரவிந்தனது படிப்பும் உழைப்பும் மிகப் பெரிது.