செவ்வாய், 31 மார்ச், 2020

பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி - மார்ச் 31

எந்த ஒரு மருத்துவமனைக்கு நாம் சென்றாலும் அங்கே பெண் மருத்துவர்கள் நிரம்பி இருப்பது என்பது இன்று நமக்கு இயல்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த இடத்திற்கு பாரதப் பெண்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது என்பது நமக்கு தெரியாத ஓன்று. அப்படி மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவராக உருவான ஆனந்திபாய் ஜோஷி அவர்களின் பிறந்ததினம் இன்று.


இன்றய மும்பை நகரின் கல்யாண் பகுதியில் இருந்த ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் 1865ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் ஆனந்தி. இவரது இயற்பெயர் யமுனா என்பதாகும். மாறிய சூழ்நிலைகளால் யமுனாவின் குடும்பம் வறுமை நிலைக்கு ஆளானது. யமுனா தனது ஒன்பதாவது வயதில் தன்னைவிட இருபது வயது மூத்தவரான, மனைவியை இழந்த  கோபால்ராவ் ஜோஷி என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு யமுனா ஆனந்தி என்று அழைக்கப்படலானார். அதிர்ஷ்டவசமாக  கோபால்ராவ் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், பெண்கள் படிப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அவர்தான் ஆனந்தியைப் படிக்கத் தூண்டினார். பெண்களுக்கான கல்விநிலையங்கள் இல்லாத சூழலில் அவரே தன் மனைவிக்கு ஆசிரியராக இருந்து கற்பிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் தனது பதினான்காவது வயதில் ஆனந்தி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். ஆனால் பிறந்த பத்தே நாட்களில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. பெரும் இழப்பு ஆனந்தியை பெரும் சவாலை எதிர்கொள்ள தயார்செய்தது. ஆனந்தியை மருத்துவராக்க கோபால்ராவ் முடிவு செய்தார். அதற்கான தயாரிப்பில் அந்த தம்பதியினர் ஈடுபடலானார்கள்.

அமெரிக்காவில் சென்று ஆனந்தி மருத்துவம் பயில பல்வேறு மக்களோடு கோபால்ராவ் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். ராயல் வில்டர் என்ற அமெரிக்க பாதிரியாருக்கு அவர் எழுதிய கடிதம் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது. அந்தக் கடிதம் திருமதி கார்பெண்டர் என்பவர் கண்ணில் பட்டு, அவர் கோபால்ராவுடனும் ஆனந்தியுடனும் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் ஆனந்தியை அவரே பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார்.

பென்சில்வேனியாவில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் ஆனந்திக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது. அமெரிக்காவிற்கு வந்த ஆனந்தியை திருமதி கார்பெண்டர் வரவேற்று தன்னோடு தங்க வைத்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் மிக நெருங்கிய உறவு உருவானது.

கடுமையான குளிர் சூழலில், ஒன்பது கஜம் உள்ள சேலையைச் சுற்றிக்கொண்டு பத்தொன்பது வயதான பாரத நாட்டுப் பெண் மருத்துவக் கல்லூரிக்குப் போவது என்பது அன்று யாருக்குமே ஒரு புதிய காட்சியாகத்தான் இருக்கும். அதிலும் அசைவம் உண்ணாத ஆனந்திக்கு அமெரிக்காவில் வசிப்பது அங்கே கல்வி கற்பது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கும். படிக்கும் காலத்தில் ஆனந்தியை காசநோய் தாக்கியது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு
1886ஆம் ஆண்டு முறைப்படி ஆனந்தி தனது படிப்பை முடித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அன்றய இங்கிலாந்து அரசி விக்டோரியா மஹாராணி  பாரதநாட்டின் பேரரசி என்ற முறையில் ஆனந்தியைப் பாராட்டி செய்தி அனுப்பினார். கோல்ஹாபூர் அரசர் தனது ராஜ்யத்தில் உள்ள ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் நலப்பிரிவில் சேருமாறு ஆனந்திக்கு அழைப்பு விடுத்தார்.

எளிய பெண்மணியாக பாரத நாட்டை விட்டுச் சென்ற ஆனந்திபாய் 1886ஆம் ஆண்டு இறுதியில்  மருத்துவராக நாடு திரும்பினார். ஆனால் அவர் உடலை அரித்த காசநோய் அவரின் உயிரையும் பறித்து விட்டது. 1887ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் அவர் காலமானார். அப்போது அவரின் வயது இருபத்தி இரண்டு மட்டும்தான்.

அவரது அஸ்தி கலசம் திருமதி கார்பெண்டர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் குடும்ப கல்லறைகளோடு ஆனந்திபாயின் அஸ்தி புதைக்கப்பட்டது. பாரத நாட்டில் இருந்து கல்வி பெற வந்த முதல் பிராமணப் பெண் என்ற குறிப்போடு நியூயார்க் நகரில் உள்ள போகேப்சி கல்லறைத் தோட்டத்தில் கல்வியைத் தேடும் மனித குலத்தின் வரலாற்றுச் சான்றாக அது உள்ளது.


மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி வகுத்த பாதையில் இன்று பல்வேறு பாரதப் பெண்கள் மருத்துவத்துறையில் இணைந்து பெரும் சாதனைகளைப் படைத்தது வருகிறார்கள். பாரத நாட்டின் முன்னோடிகளில் ஒருவரான ஆனந்திபாய் ஜோஷியின் மகத்தான சாதனைகளை நினைவு கூறுவோம். மனிதகுல மேம்பாட்டுக்கு நமது பங்களிப்பை என்றும் செய்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக