ராமகிருஷ்ண பரமஹம்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமகிருஷ்ண பரமஹம்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜனவரி, 2026

ஜனவரி 12 - வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்ததினம்


கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை                    குறள் 736

தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட  நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. 

பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர். 

பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை. 

ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார். 

வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. "உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்" என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. 

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். 

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் " எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது. 

பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக்  என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார். 

எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம். 

திங்கள், 22 டிசம்பர், 2025

டிசம்பர் 22 - அன்னை சாரதா தேவி - அவதார தினம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்கைத்துணையாகவும், முதல் சீடராகவும் ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவியருக்கும் மற்றும் பல பக்தர்களுக்கும் அன்னையாகவும் போற்றி வணங்கப்படும் அன்னை சாரதா தேவியரின் அவதாரதினம் இன்று.


இன்றய மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெயராம்பட்டி என்ற சிறு கிராமத்தில் ராமசந்திர முகோபாத்யாய - ஷ்யாம சுந்தரி தேவி தம்பதியரின் முதல் மகவாக 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் அவதரித்தவர் சாரதா தேவி. அவரின் இயற்பெயர் சாரதாமணி என்பதாகும். கங்கை பாயும் செழிப்பான பூமியை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து மக்களை வறுமையின் பிடியில் வாட வைத்திருந்த காலம் அது. வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றில்தான் அன்னையும் பிறந்தார். அவர் பள்ளி சென்று படிக்கவில்லை. ஆனால் எல்லா ஹிந்து குடும்பங்களையும் போல இதிகாசங்களையும் வாழ்வியல் பாடங்களும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. சிலை வடிவில் ஆண்டவனை அமைத்து, பூஜை செய்வது அவரின் முக்கியமான வேலையாக இருந்தது.

அன்னையின் வாழ்வு கொல்கத்தா நகரில் இருந்த கதாகதரோடு இணைக்கப்பட்டு இருந்தது. தக்ஷிணேஸ்வர் கோவிலில் ஆன்ம சாதனையில் மூழ்கி இருந்தார் கதாகதர், அவரின் அருமை தெரியாத அவரின் குடும்பத்தினர் திருமணம் ஆகிவிட்டால் ஆவர் நம்மைப்போல உலகவாழ்வில் உழலும் மனிதராக மாறி விடுவார் என்று எண்ணி அதற்கான வேலையில் ஈடுபடத் தொடங்கினர். கதாகாதர் சாரதாமணிதான் தனக்கு சரியான துணை என்று கூற, அந்தத் திருமணம் நடைபெற்றது. கதாகாதர்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறியப்பட்ட ஜீவன் முக்தர். விவேகானந்தர் என்ற ஞானச்சுடரை இந்த உலகுக்கு கொடுத்த குருநாதர். திருமணம் நடைபெறும் போது சாரதாமணியின் வயது ஆறுதான். ராமகிருஷ்ணரின் வயது இருபத்தி மூன்று. அந்தக் கால வழக்கப்படி திருமணம் ஆன பிறகும் தனது தந்தையின் வீட்டிலே இருந்த அன்னை, தனது பதினெட்டாம் வயதில் தன் கணவரோடு இணைந்து கொண்டார். ராமகிருஷ்ணர் சாதாரண மனிதர் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவரின் முதல் சீடராக, தொண்டராக அவர் தன் வாழ்க்கையை நடத்தினார்.

இனிப்பை நோக்கி எறும்பு வருவது போல, ராமகிருஷ்ணரை நோக்கி பல்வேறு சீடர்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். தினம்தோறும் தனது தியானத்தையும், பூஜைகளையும் முடித்து ராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு தயாரித்து உபசரிப்பது அன்னையின் பணியாக ஆனது. இல்வாழ்வில் ஈடுபடாது இருந்த அன்னைக்கு ஆயிரமாயிரம் மகன்கள் கிடைத்தார்கள். பராசக்தியின் வடிவமாகவே அன்னையைக் கண்ட ராமகிருஷ்ணர் அன்னையையே பீடத்தில் அமர்த்தி மாதா திரிபுரசுந்தரியாக வரித்து பூஜை செய்வதும் உண்டு. ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் விதவைக்கோலம் பூணத் தொடங்கிய அன்னையின் முன் ராமகிருஷ்ணர் தோன்றி " நான் எங்கே சென்று விட்டேன், இங்கேதானே ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சென்றுளேன்" என்று கூறி அதனை தடுத்து விட்டார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அப்போதுதான் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் ஆணிவேராக அன்னை செயல்பட்டார்.

தனது பெண் சீடர்கள் தொடர அன்னை காசி, மதுரா மற்றும் அயோத்தி ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். பின்னர் ராமகிருஷ்ணர் பிறந்த கமர்புக்கூர் கிராமத்தில் ஓராண்டு தங்கி இருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு அன்னையின் அருமை தெரியவில்லை. அவரையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அன்னையின் நிலையைத் தெரிந்து கொண்ட ராமகிருஷ்ணரின் சீடர்கள் அன்னையை மீண்டும் கொல்கத்தாவிற்கே அழைத்து வந்தனர். அங்கே பல்வேறு மனிதர்கள் அன்னையின் சீடர்களாக ஆனார்கள். ராமகிருஷ்ண மடத்து துறவிகளை சமுதாய சேவைக்கு தூண்டியது அன்னையின் பெரும் கருணையேயாகும். அமெரிக்கா நாட்டுக்கு அனைத்து சமய மாநாட்டுக்கு செல்லலாமா என்ற கேள்விக்கு விடையளித்து விவேகானந்தரை அங்கே அனுப்பி வைத்ததும் அன்னையே.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரத ஞானத்தை விவேகானந்தர் பரப்பினார். அங்கே அவருக்கு பல்வேறு அயல்நாட்டினர் சீடர்களாக மாறி பாரதம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக ஏற்று தனது கருணையெனும் அமுதமழையில் அன்னை ஆசீர்வதித்தார். மிக எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. கனவிலே அன்னை தனக்கு மந்திர உபதேசம் செய்தார் என்று பலர் கூறுவதும் உண்டு.

"உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் பிறரின் குறைகளை பார்ப்பதை நிறுத்துங்கள், அதற்குப் பதில் உங்கள் குறைகளை கண்டறியுங்கள். உலகம் முழுவதையும் உங்கள் உறவு என்று நினைக்கப் பழகுங்கள். உலகில் யாரும் உங்களுக்கு அந்நியர் அல்ல, அனைவரும் உறவினர்கள்தான்" இது அன்னை அளித்த உபதேசம். பெண் கல்வியின் முக்கியத்தை அறிந்த அன்னை, தனது சீடர்களை பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்க வைத்தார்.

ஜீவன் முக்தரின் வாழ்க்கைத்துணையாக, தன்னலத்தை ஒழித்த துறவியர் வரிசையின் ஆணிவேராக, உலக மக்களின் தாயாக விளங்கிய அன்னை சாரதாதேவி 1920ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் தனது உடல்கூட்டை உதறி பரம்பொருளோடு கலந்தார்.

அன்னையின் நினைவு நம்மை எல்லாப் பொழுதும் நல்வழியில் செலுத்தட்டும். எத்தனையோ ஞானிகள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்.  

வியாழன், 2 அக்டோபர், 2025

அக்டோபர் 2 - ஸ்வாமி அபேதானந்தர் பிறந்ததினம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடராக, ஸ்வாமி விவேகானந்தரின் சக தோழராக, மேற்கு நாடுகளில் வேதாந்த அறிவைப் பரப்பிய ஞானியாகத் திகழ்ந்த  ஸ்வாமி அபேதானந்தரின் பிறந்ததினம் இன்று.



கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் ரஸிகலால் சந்திரா - நயன்தாரா தேவி தம்பதியினருக்கு 1866ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் ஸ்வாமிஜி. அவரின் இயற்பெயர் காளிபிரசாத் சந்திரா என்பதாகும்.

தனது 18ஆம் வயதில் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போது, தக்ஷிணேஸ்வரில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கச் சென்றார். காளிபிரசாத் அவரிடம் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். காளிபிரசாத்தின் நாக்கில் தனது வலதுகை நடுவிரலால் காளி மாதாவின் பெயரை எழுதி அவரை தியானத்தில் ஈடுபட ராமகிருஷ்ணர் தூண்டினார். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் மங்கை தலைவன் தாளே என்று அப்பர் ஸ்வாமிகள் கூறியது போல, காளிபிரசாத் அன்றே ராமகிருஷ்ணரின் சீடராக மாறினார்.

தனியறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நீண்டநேரம் சமாதியில் அமர்வது காளிபிரசாத்தின் வழக்கமாக இருந்தது. அதனால் அவரது தோழர்கள் அவரை காளி தபசி என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் துறவறம் மேற்கொண்டு, வேதாந்த ஞானத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்ப உறுதி பூண்டனர். காளிபிரசாத் துறவறம் பூண்டார், அவருக்கு ஸ்வாமி அபேதானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. இரண்டல்ல ஒன்றேதான் உண்மை என்ற அத்வைத மரபை முன்னெடுத்தவருக்கு பேதம் என்பதே இல்லை என்ற பொருளில் பெயர் அமைந்தது சரிதானே.

நாடெங்கும் கையில் ஒரு பைசாவும் இல்லாமல் அலைந்து திரியும் பரிவ்ராஜ சன்யாசிகளின் வரிசை என்பது பாரத நாடு போன்றே என்று தோன்றினை என்று கூறவும் இயலாத பழமை வாய்ந்த ஓன்று. ஸ்வாமி அபேதானந்தாவும் நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேலாக பாரதம் முழுவதும் சுற்றி வந்தார். இமயமலை சாரல்களிலும், கங்கோத்ரியிலும், யமுனோத்ரியிலும் அவர் தவம் செய்தார். புகழ்பெற்ற பேச்சாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தலைசிறந்த அறிஞராகவும், அத்வைத வேதாந்தத்தில் கரைக்கண்ட ஞானியாகவும் ஸ்வாமிஜி விளங்கினார்.

1896ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்ற அபேதானந்தர் அங்கே அத்வைத ஞானத்தைப் பரப்பினார். அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று நியூயார்க் நகரில் வேதாந்த நிலையத்தை நிறுவி அமெரிக்கா முழுவதும் பாரத ஞானமுறையை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா மட்டுமல்லாது கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் வேதாந்தத்தை பரப்பினார்.

1922ஆம் ஆண்டு நாடு திரும்பிய ஸ்வாமிஜி திபெத் சென்று அங்கே புத்த தத்துவங்களையும் படித்தறிந்தார். 1923ஆம் ஆண்டு கொல்கத்தா நகரிலும் பின்னர் 1924ஆம் ஆண்டு டார்ஜிலிங் நகரிலும் ராமகிருஷ்ண வேதாந்த மடத்தை நிறுவினார். அதன் சார்பில் இன்றும் வெளியாகும் விஷ்வவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1938 வரை இருந்தார்.

ராமகிருஷ்ணரின் நற்செய்தி, ராமகிருஷ்ணரின் உபதேச மஞ்சரி, கல்வி பற்றிய சிந்தனைகள், இறப்பு என்னும் புதிர் - கடோபநிஷத், ஹிந்து தர்மத்தில் பெண்களின் பங்கு, கர்மா கோட்பாடு - செயல்பாட்டின் அறிவியலும், தத்துவமும் என்று பல்வேறு புத்தகங்களை ஸ்வாமிஜி எழுதியுள்ளார்.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஸ்வாமிஜி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

எத்தனையோ மஹான்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் குரு வணக்கம். 

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

செப்டம்பர் 30 - குருஜியின் குரு ஸ்வாமி அகண்டானந்தா பிறந்ததினம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும், ஸ்வாமி விவேகானந்தரின் தோழரும், ராமகிருஷ்ணா மடத்தின் மூன்றாவது தலைவரும், பரம பூஜனிய குருஜி கோல்வால்கரின் ஆன்மீக குருவுமான ஸ்வாமி அகண்டானந்தாவின் பிறந்ததினம் இன்று.



ஸ்ரீமதா கங்கோபாத்யாய - வாமசுந்தரிதேவி தம்பதியினரின் மகனாக 1864ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர் சுவாமி அகண்டானந்தா. இவரது இயற்பெயர் கங்காதர் கதக். சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டமும், இரக்ககுணமும் கொண்டவராக அவர் விளங்கினார். தனது பத்தொன்பதாம் வயதில் கங்காதர்,  தனது நண்பர் ஹரிநாத்துடன் ( பின்னாளில் ஸ்வாமி துரியானந்தா என்ற பெயரில் அறியப்பவர் இவர் ) ராமகிருஷ்ண பரமஹம்சரைமுதன்முதலாக சந்தித்தார். ஆத்ம சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் கங்காதர் மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பிய ராமகிருஷ்ணர் அவரை நரேந்தரநாத் தத்தாவோடு ( ஸ்வாமி விவேகானந்தர் ) அறிமுகம் செய்துவைத்தார். கங்காதருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரோடும் விவேகானந்தரோடும் வாழ்நாள் முழுவதுமான உறவு இப்படித்தான் ஆரம்பமானது.

இல்லற வாழ்வில் கங்காதரரை ஈடுபடுத்த எண்ணிய அவர் தந்தை அவருக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் அந்த வேலையில் இருந்த கங்காதர், அதனை துறந்து முழுநேரமும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சேவைக்கே தன்னை அர்பணித்துக் கொண்டார். ராமக்ரிஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், கங்காதர் இமயமலை சாரலிலும் திபேத் நாட்டிலும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து, வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது பயண அனுபவங்களை அவர் ஸ்ம்ரிதி கதா என்ற புத்தகமாகவும் எழுதினார். கையில் பணமோ மாற்றுத்துணியோ இல்லாமல் அவர் சுற்றிவந்தார்.

1890 ஆம் ஆண்டு அவர் துறவறத்தை மேற்கொண்டார். அவருக்கு அகண்டானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. மீண்டும் ஸ்வாமி விவேகானந்தரோடு இமயமலைப் பயணங்களை அவர் தொடங்கினார். ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் பதினேழு பேர் முதலில் சன்யாசம் பெற்று, நாடெங்கும் அலைந்து திரிந்து சமுதாய சேவையையும் அதே நேரத்தில் வேதாந்த ஞானத்தை மக்களுக்கு புகட்டும் வேலையையும் செய்யத் தொடங்கினார்கள்.

ஸ்வாமி அகண்டானந்தா அவதூத கீதை, பாணினியின் வடமொழி இலக்கண நூலுக்கு பதஞ்சலி எழுதிய விளக்கவுரை, மஹாபாரதம், பஞ்சதஸி, மருத்துவம் பற்றிய சரகர் - சுஸ்ருதர் எழுதிய நூல்கள், சுக்ல யஜுர் வேதம், யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களில் சமுதாய சேவையை முன்னெடுத்தவர் என்ற பெருமை ஸ்வாமி அகண்டானந்தாவையே சாரும். 1894ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கத்ரி சமஸ்தானத்தில் இருந்தபோது வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, அவர்கள் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்குமாறு கூறினார். அவரது உழைப்பின் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகை பலமடங்கு உயர்ந்தது. அவரது வழிகாட்டுதலின் பேரில் கத்ரி சமஸ்தானத்தின் மன்னர் அஜித்சிங் பல்வேறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

1897ஆம் ஆண்டு வங்காளத்தில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்கொள்ள ஸ்வாமிஜி தயாரானார். கடுமையான முயற்சிக்குப் பிறகு அவர் உணவுப் பொருள்களை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து, வறுமையின் பிடியில் இருந்த ஏழைகளுக்கு வழங்கினார். பெர்ஹாம்பூர் நகரில் ஒரு ஆதரவற்ற குழைந்தைகள் விடுதி, சர்கஞ்சி பகுதியில் ஒரு ஆஸ்ரமம், பின்னர் அதோடு இணைந்த பள்ளி ஆகியவைகளை அவர் ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அந்தப் பள்ளியில் தச்சு வேலையும், துணி நெய்யும் படிப்பும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர், சுவாமி அகண்டானந்தாவின் சீடர். நீண்ட காலம் குருஜி ஸ்வாமிகளோடு தங்கி, வேதாந்தத்தைப் பயின்றார். ஸ்வாமிஜி குருஜி கோல்வாக்கர் அவர்களுக்கு தீக்ஷை அளித்தார்.

துறவிக்கான இலக்கணத்தோடு வாழ்ந்த ஸ்வாமிஜி 1937ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். ஸ்வாமிஜி காட்டிய வழியில் இன்றும் ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு துறவிகள் உலகெங்கிலும் சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.