வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நூலகவியலின் பிதாமகர் எஸ் ஆர் ரெங்கநாதன் நினைவுதினம் - செப்டம்பர் 27

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர்கள் கூறுவார்கள். மகத்தான மனிதர்கள் தங்கள் சிந்தனைகளை, வாழ்வியலை புத்தகங்கள் மூலமாகவே வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் நாம் அனுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது, எனவே பல்வேறு புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவே நாம் அறிவைப் பெருகிக் கொள்ள முடியும், அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விவாதங்கள் மூலம் மனிதகுலம் முன்னேறமுடியும். அப்படியான சிறப்பான புத்தகங்களை பலரும் பயன்பெறும் வண்ணம் சேர்த்து, சேமித்து தேவைப்படும் ஆட்களுக்கு வழங்கும் நூலகங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் காட்டியவர் சீர்காழி ராமாமிர்தம் ரெங்கநாதன் என்ற எஸ் ஆர் ரெங்கநாதன். பாரதநாட்டின் நூலகவியலின் தந்தை என்று திரு ரெங்கநாதன் கொண்டாப்படுகிறார்.



ராமாமிர்த ஐயர் - சீதாலட்சுமி தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12நாள் பிறந்தவர் திரு ரெங்கநாதன். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த ரெங்கநாதனையும் அவரது உடன்பிறப்புகளையும் அவர் தாயார் வளர்த்து வந்தார். சீர்காழியில் உள்ள எஸ் எம் ஹிந்து பள்ளியில் தனது பள்ளியிறுதி வகுப்பை முடித்த ரெங்கநாதன், அதன் பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சித் தேர்விலும் வெற்றிபெற்று ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மங்களூரிலும், கோவையிலும் பணியாற்றிய ரெங்கநாதன் அதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார்.  அதே காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்றுவந்த ஆசிரியர் சங்கத்தின் இயற்பியல் மற்றும் கணிதத் துறையின் செயலாளராகவும் இருந்தார். பொதுமக்களும் மாணவர்களும் அறிவியல்துறையில் ஆர்வம் கொள்ள அவர் தொடர்ந்து பல்வேறு சொற்பொழிவுகளையும் நடத்தி வந்தார்.

1924ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகராக அவர் தேர்வானார். மாணவர்கள் சூழ ஆசிரியர் பணி செய்துகொண்டு இருந்த ரெங்கநாதனுக்கு ஆள்களே வராத நூலகத்தில் பணியாற்ற விருப்பமில்லை. ஆனால் நூலகவியல் பற்றி தெரிந்து கொள்ள இங்கிலாந்து செல்லுமாறும், அதன் பின்னரும் நூலகர் பணி விருப்பமானதாக இல்லாமல் இருந்தால் அவரை மீண்டும் ஆசிரியர் பணிக்கு மாற்றுவதாகவும் பல்கலைக்கழகம் உறுதி அளித்து, அவரை நூலகராக நியமனம் செய்தது.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்ற ரெங்கநாதன் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் அங்கே தங்கி இங்கிலாந்து நாட்டில் நூலகங்கள் செயல்படும்விதம் பற்றி ஆராய்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறையின் விரிவுரையாளராக பணியாற்றிய பெர்விக் சாயேர்ஸ் என்பவர் நூலகத்துறையின் நுணுக்கங்களை ரெங்கநாதனுக்கு கற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு ரெங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் தொழிலாளிகள், ஆராய்ச்சியாளர், பெண்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்றவாறு நூலகங்களை எப்படி அமைக்க
வேண்டும் என்ற புரிதல் ரெங்கநாதனுக்கு ஏற்பட்டது. ஆசிரியர் பணியைக் காட்டிலும் நூலகராக தனது பணி இன்னும் தேவையானது என்ற உறுதியோடு அவர் 19025ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதம் திரும்பினார்.

நாடு திரும்பிய ரெங்கநாதன் சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகத்தை சீரமைக்கும் வேலையத் தொடங்கினார். நூலகத்திற்கு வாசகர்களின் வருகையைக் கூட்டுவதிலும், அவர்கள் நிம்மதியாக அமர்ந்து படிக்கும் அளவிற்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவும், புத்தகங்களை முறைப்படி அட்டவணைப் படுத்தவும் என்று அவரது வேலைகள் ஆரம்பமானது. இவரது சேவைகளைப் பார்த்த அன்றய அரசு, சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கி ஆதரவு தந்தது.

சென்னை நூலக சங்கத்தை நிறுவி, அதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும், படிக்கும் பழக்கத்தையும் முன்னெடுக்கும் பணியும் ஆரம்பமானது. அன்றய சென்னை ராஜதானி என்பது இன்றய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா வரை பரவியிருந்த பெரும் நிலப்பரப்பு என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்று தென்னிந்தியாவில் பரவியுள்ள நூலகங்கள் என்பது ரெங்கநாதனின் முயற்சியின் பலனே ஆகும்.

ஐந்து நூலக விதிகள். 

ரெங்கநாதனின் பெரும்பங்களிப்பு என்பது அவர் உருவாக்கிய நூலக விதிகளே ஆகும்.

1, புத்தகங்கள் என்பது பயன்படுத்தவே
2, ஒவ்வொரு வாசகருக்கும் எதோ ஒரு தேவையான புத்தகம்
3, ஒவ்வொரு புத்தகத்திற்கும் எதோ ஒரு வாசகன் உண்டு
4, வாசகரின் நேரத்தை நூலகம் வீணடிக்கக்கூடாது
5, நூலகம் என்பது தொடர்ந்து வளரும் நிறுவனம்.

சென்னையில் நூலகவியலுக்கான கல்லூரி ஒன்றை ரெங்கநாதன் 1929ஆம் ஆண்டு தொடங்கி, அதன் இயக்குனராக 15 ஆண்டு காலம் பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தை நூற்றாண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக தனது மனைவி பெயரில் சாரதா ரெங்கநாதன் நூலக இருக்கையை உருவாக்க ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

21 ஆண்டு கால நூலகப் பணிக்கு பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ரெங்கநாதன் விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட எண்ணி இருந்த அவரை காசி ஹிந்து சர்வகலாசாலை தங்கள் நூலகத்தை சீரமைக்க அழைப்பு விடுத்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட அந்த நூலகத்தை தனியொருவனாக ரெங்கநாதன் மேம்படுத்தினார்.

1947ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை ஆசிரியராக ரெங்கநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கண்காணிப்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நூலகப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டது. டெல்லியிலும் நூலகத்துறை பற்றிய கலந்தாய்வு கூட்டங்களை ரெங்கநாதன் வாரா வாரம் தனது வீட்டில் நடத்தி வந்தார். நூலகங்கள் சந்திக்கும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.

டெல்லியில் பணியாற்றிய காலத்தில் பாரத நாட்டில் நூலகத்துறையின் வளர்ச்சிக்கான முப்பதாண்டு கால வரைவு அறிக்கையை ரெங்கநாதன் உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பித்தார்.

உலகளவில் நூலகத்துறை செயல்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள சிறுது காலம் ஸுரிச் நகரிலும், பின்னர் பெங்களூரு நகரிலும் ரெங்கநாதன் வசிக்கத் தொடங்கினார். அப்போது அவர் மத்திய திட்டக்குழு மற்றும் பல்கலைக்கழக நிதி ஒதுக்கீடு குழு ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்தார். மத்திய அரசு அவரை தேசிய நூலக ஆராய்ச்சிப் பேராசிரியர் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தது. அந்தக் காலத்தில் இந்தப் பெருமையைப் பெற்ற ஐந்தாவது அறிஞர் ரெங்கநாதன். நூலகத்துறைக்கு திரு ரெங்கநாதன் ஆற்றிய சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அறுபது புத்தகங்களையும், 2000 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ரெங்கநாதன் எழுதி உள்ளார்.

இவரது பிறந்தநாள் நாடெங்கும் தேசிய நூலகர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

திரு ரெங்கநாதன் 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக