செவ்வாய், 31 மார்ச், 2026

மார்ச் 31 - பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி பிறந்ததினம்

எந்த ஒரு மருத்துவமனைக்கு நாம் சென்றாலும் அங்கே பெண் மருத்துவர்கள் நிரம்பி இருப்பது என்பது இன்று நமக்கு இயல்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த இடத்திற்கு பாரதப் பெண்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது என்பது நமக்கு தெரியாத ஓன்று. அப்படி மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு பாரதநாட்டின் முதல் பெண் மருத்துவராக உருவான ஆனந்திபாய் ஜோஷி அவர்களின் பிறந்ததினம் இன்று.


இன்றய மும்பை நகரின் கல்யாண் பகுதியில் இருந்த ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் 1865ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் ஆனந்தி. இவரது இயற்பெயர் யமுனா என்பதாகும். மாறிய சூழ்நிலைகளால் யமுனாவின் குடும்பம் வறுமை நிலைக்கு ஆளானது. யமுனா தனது ஒன்பதாவது வயதில் தன்னைவிட இருபது வயது மூத்தவரான, மனைவியை இழந்த  கோபால்ராவ் ஜோஷி என்பவரை மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு யமுனா ஆனந்தி என்று அழைக்கப்படலானார். அதிர்ஷ்டவசமாக  கோபால்ராவ் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், பெண்கள் படிப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அவர்தான் ஆனந்தியைப் படிக்கத் தூண்டினார். பெண்களுக்கான கல்விநிலையங்கள் இல்லாத சூழலில் அவரே தன் மனைவிக்கு ஆசிரியராக இருந்து கற்பிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் தனது பதினான்காவது வயதில் ஆனந்தி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். ஆனால் பிறந்த பத்தே நாட்களில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. பெரும் இழப்பு ஆனந்தியை பெரும் சவாலை எதிர்கொள்ள தயார்செய்தது. ஆனந்தியை மருத்துவராக்க கோபால்ராவ் முடிவு செய்தார். அதற்கான தயாரிப்பில் அந்த தம்பதியினர் ஈடுபடலானார்கள்.

அமெரிக்காவில் சென்று ஆனந்தி மருத்துவம் பயில பல்வேறு மக்களோடு கோபால்ராவ் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். ராயல் வில்டர் என்ற அமெரிக்க பாதிரியாருக்கு அவர் எழுதிய கடிதம் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானது. அந்தக் கடிதம் திருமதி கார்பெண்டர் என்பவர் கண்ணில் பட்டு, அவர் கோபால்ராவுடனும் ஆனந்தியுடனும் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் ஆனந்தியை அவரே பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார்.

பென்சில்வேனியாவில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் ஆனந்திக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது. அமெரிக்காவிற்கு வந்த ஆனந்தியை திருமதி கார்பெண்டர் வரவேற்று தன்னோடு தங்க வைத்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் மிக நெருங்கிய உறவு உருவானது.

கடுமையான குளிர் சூழலில், ஒன்பது கஜம் உள்ள சேலையைச் சுற்றிக்கொண்டு பத்தொன்பது வயதான பாரத நாட்டுப் பெண் மருத்துவக் கல்லூரிக்குப் போவது என்பது அன்று யாருக்குமே ஒரு புதிய காட்சியாகத்தான் இருக்கும். அதிலும் அசைவம் உண்ணாத ஆனந்திக்கு அமெரிக்காவில் வசிப்பது அங்கே கல்வி கற்பது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கும். படிக்கும் காலத்தில் ஆனந்தியை காசநோய் தாக்கியது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு
1886ஆம் ஆண்டு முறைப்படி ஆனந்தி தனது படிப்பை முடித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அன்றய இங்கிலாந்து அரசி விக்டோரியா மஹாராணி  பாரதநாட்டின் பேரரசி என்ற முறையில் ஆனந்தியைப் பாராட்டி செய்தி அனுப்பினார். கோல்ஹாபூர் அரசர் தனது ராஜ்யத்தில் உள்ள ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் நலப்பிரிவில் சேருமாறு ஆனந்திக்கு அழைப்பு விடுத்தார்.

எளிய பெண்மணியாக பாரத நாட்டை விட்டுச் சென்ற ஆனந்திபாய் 1886ஆம் ஆண்டு இறுதியில்  மருத்துவராக நாடு திரும்பினார். ஆனால் அவர் உடலை அரித்த காசநோய் அவரின் உயிரையும் பறித்து விட்டது. 1887ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் அவர் காலமானார். அப்போது அவரின் வயது இருபத்தி இரண்டு மட்டும்தான்.

அவரது அஸ்தி கலசம் திருமதி கார்பெண்டர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் குடும்ப கல்லறைகளோடு ஆனந்திபாயின் அஸ்தி புதைக்கப்பட்டது. பாரத நாட்டில் இருந்து கல்வி பெற வந்த முதல் பிராமணப் பெண் என்ற குறிப்போடு நியூயார்க் நகரில் உள்ள போகேப்சி கல்லறைத் தோட்டத்தில் கல்வியைத் தேடும் மனித குலத்தின் வரலாற்றுச் சான்றாக அது உள்ளது.


மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி வகுத்த பாதையில் இன்று பல்வேறு பாரதப் பெண்கள் மருத்துவத்துறையில் இணைந்து பெரும் சாதனைகளைப் படைத்தது வருகிறார்கள். பாரத நாட்டின் முன்னோடிகளில் ஒருவரான ஆனந்திபாய் ஜோஷியின் மகத்தான சாதனைகளை நினைவு கூறுவோம். மனிதகுல மேம்பாட்டுக்கு நமது பங்களிப்பை என்றும் செய்வோம். 

திங்கள், 30 மார்ச், 2026

மார்ச் 30 - புரட்சியாளர் பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா நினைவுநாள்

நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது சிறப்பானது, அதிலும் சிறந்தது நாட்டுக்காக உயிரோடு இருப்பது. அதிலும் சிறப்பு நாட்டை அடிமைப்படுத்தியவர்கள் நாட்டில் இருந்து கொண்டே தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பது, அதற்கான தேசபக்தர்களை உருவாக்குவது. அப்படி உழைத்த தியாகி பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவுநாள் இன்று.


பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஆயுதம் தாங்கிய போராளிகளை லண்டன் நகரில் உருவாக்கிய நிறுவனம் இந்தியா ஹவுஸ். வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா, மண்டயம் பார்த்தசாரதி திருமலாச்சாரியா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, காமா அம்மையார், லாலா ஹர்தயாள் என்று புகழ்பெற்ற வீரர்களை உருவாக்கி, தேசசேவைக்கு அளித்த இடம் அது. அதனை நிறுவியவர்தான் பண்டிட் ஷயாமாஜி கிருஷ்ண வர்மா.

1857ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் நூற்பாலை ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த கிருஷ்ணதாஸ் பானுஷாலிக்கும் கோமதிபாய் அம்மையாருக்கும் மகனாக இன்றய குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் மாண்டவி பகுதியில்  பிறந்தவர் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா. தனது சிறு வயதிலேயே தாயாரை இழந்ததால் இவர் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை புஜ் நகரத்தில் முடித்த கிருஷ்ண வர்மா மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சமிஸ்க்ரித மொழியில் புலமையை வளர்த்துக்கொண்டார்.

ஆர்ய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்தரின் சீடராக, வேதாந்த தத்துவத்தை கிருஷ்ண வர்மா கற்றுக்கொண்டார். வடநாட்டில் பல்வேறு இடங்களில் வேதாந்த ஞானத்தைப் பற்றிய சொற்பொழிவுகளை அவர் நடத்தலானார். அவரது மேதைமையைப் பாராட்டி அதனை அங்கீகரிக்கும் விதமாக வாரணாசி நகரத்தில் உள்ள ப்ராஹ்மணர்கள் கிருஷ்ண வர்மாவுக்கு பண்டிட் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தனர். இவரது சமிஸ்க்ரித அறிவைக் கண்டு வியந்த மோனிர் வில்லியம்ஸ் என்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ண வர்மாவை தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

1879ஆம் ஆண்டு லண்டன் சென்ற கிருஷ்ண வர்மா 1883ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1885ஆம் ஆண்டு நாடு திரும்பிய கிருஷ்ண வர்மா வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரது மேதமைக் கேள்விப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரத்தினபுரி அரசு இவரை தங்கள் திவானாக நியமித்தது. சிறிது காலத்தில் உடல்நிலை காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்த கிருஷ்ண வர்மா அஜ்மீர் நகருக்குக் குடியேறி அங்கே வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் உதய்ப்பூர் மன்னரின் அமைச்சராகவும் ஜூனாகாட் அரசின் திவானாகவும் பணியாற்றினார். ஆனால் அன்றய அரசர்களுக்கு வரையறை செய்யப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. பெரும்பான்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் வசமே இருந்தது. இதனால் மனம் நொந்த கிருஷ்ண வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்.

ஹிந்து ஞானமரபு வேறு ஹிந்து அரசியல்மரபு வேறு என்று இப்போது சில அறிஞர்கள் பேசத்தொடங்கி உள்ளனர். ஆனால் எப்போதெல்லாம் ஹிந்து அரசியல்மரபு ஹிந்து ஞானமரபோடு இணைந்து செயல்பட்டதோ அப்போதுதான் பாரதம் தலைசிறந்து இருந்தது என்பதுதான் வரலாறு. விஷ்ணுகுப்த சாணக்யனும் சந்திரகுப்த மௌரியன், சமர்த்த ராமதாசரும் சத்ரபதி சிவாஜியும், வித்யாரண்ய ஸ்வாமிகளும் ஹரிஹர புக்கரும், குரு நானக் தொடங்கி குரு கோவிந்தசிம்மன் வழியாக குரு கிரந்த சாஹேப் என்று தேவை ஏற்படும்போதெல்லாம் ஹிந்து ஞானமரபு ஹிந்து அரசியல்மரபிற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது.

அதன் நீட்சிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல்வேறு ஹிந்து தர்மத்தின் காவலர்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர்களின் வரிசை ஒருபுறமும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் மறுபுறமும் என்று இந்த நாட்டை வழிநடத்த அவதரித்தார்கள். இங்கிலாந்து நாட்டுக்கு படிக்க வரும் பாரத மாணவர்களுக்காக அவர்கள் வசதிக்காக லண்டன் நகரில் வசதி செய்து கொடுக்கும்படி ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கு தயானந்த சரஸ்வதி அறிவுறித்தினார். அதன்படிதான் லண்டன் நகரில் ஒரு பெரிய கட்டடத்தை விலைக்கு வாங்கி இந்தியா ஹவுஸ் என்ற பெயரில் அவர் நிறுவினார். இதன் தொடக்க விழாவில் தாதாபாய் நௌரோஜி, மேடம் காமா ஆகியோர் கலந்து கொண்டனர். லண்டன் வரும் பாரத மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடமாக லண்டன் ஹவுஸ் விளங்கியது. அதிலும் தேசிய சிந்தனை உள்ள மாணவர்கள் ஓன்று கூடி, நாட்டின் விடுதலைக்காக என்ன செய்யலாம் என்று திட்டமிடும் இடமாகவும் அது விளங்கியது.

அரசியல் சிந்தனைநீட்சியில் கிருஷ்ண வர்மா திலகரின் வழியைப் பின்பற்றுபவராக இருந்தார். மீண்டும் மீண்டும் ஆங்கில அரசுக்கு விண்ணப்பம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவருக்கு உவப்பாக இல்லை. லண்டன் நகருக்கு வருகை தரும் பல்வேறு தலைவர்கள் லண்டன் ஹவுஸுக்கு வந்து, அங்குள்ள மாணவர்களிடம் உரையாடுவது வழக்கமாக இருந்தது. லாலா லஜபதி ராய், காந்தி போன்றவர்கள் அங்கே வந்துள்ளார்.

ஆயுதம் தாங்கிப் போராடும் எண்ணமுடைய பல்வேறு புரட்சியாளர்களை லண்டன் ஹவுஸ் உருவாக்கியது. அதில் முக்கியமானவர் வீர சாவர்க்கர், வ வே சு ஐயர், மதன்லால் திங்ரா போன்றவர்கள் முக்கியமானவர்கள். ஆங்கில அரசின் கண்கள் இந்தியா ஹவுஸ் மீது படிந்ததைத் தொடர்ந்து கிருஷ்ண வர்மா 1907ஆம் ஆண்டு யாரும் அறியாமல் பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கும் சாத்தியக்கூறுகளை யூகித்து அறிந்த கிருஷ்ணவர்மா அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்த்து ஜெனீவா நகருக்கு சென்றுவிட்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் நாட்டை விட்டுப் பிரிந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா 1930ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் காலமானார். தேசபக்தரின் மரணச் செய்தியை வெளியில் தெரியாமல் வைத்திருக்க ஆங்கில அரசு முயற்சி செய்தது. ஆனாலும் செய்தி கசிந்து லாகூர் சிறையில் தூக்குத் தண்டனைக்காக காத்துகொண்டு இருந்த பகத்சிங் மற்றும் அவர் தோழர்களும், திலகர் தொடங்கிய மராத்தா போன்ற பத்திரிகைகளும் அவரின் புகழைப் பேசி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாட்டில் கழிந்த கிருஷ்ண வர்மா தனது அஸ்தியும், தன் மனைவி பானுமதியின் அஸ்தியும் பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு பாரத நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கேதான் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து, நூறாண்டுகளுக்கு அவர்கள் அஸ்தியை ஜெனீவாவில் உள்ள தூய ஜார்ஜ் கல்லறைத் தோட்டத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார்.

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே சகல மரியாதைகளோடும் அவரின் அஸ்தி பாரத நாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி எழுத முனைப்பாக இருந்த அரசியல்வாதிகளால் அது நடைபெறவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்றய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி, பண்டிட் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மாவின் அஸ்தியையும் அவர் மனைவி பானுமதியின் அஸ்தியையும் பெற்றுக்கொண்டு பாரதம் வந்தார். மும்பையில் இருந்து அவரின் சொந்த ஊரான மாண்டவி நகருக்கு பெரும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அந்த தியாகியின் அஸ்தி கிராந்தி தீர்த் என்ற நினைவிடத்தில் மரியாதையோடு வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுஸ்  நினைவிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. கட்ச் நகரில் அருகே உருவான புது நகரம் ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மா நகர் என்றும், கட்ச் பல்கலைக்கழகத்திற்கு ஷ்யாமாஜி கிருஷ்ணவர்மாவின் பெயரைச் சூட்டி நாடு அந்தத் தியாகிக்கு மரியாதை செலுத்தியது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாது நாட்டுக்காக தங்களை முழுவதும் அர்ப்பணம் செய்த பல்லாயிரம் தியாகிகளின் உதிரத்தால் கிடைத்தது நமது சுதந்திரம். அதனைக் காப்பாற்றுவதும், நாட்டின் பெருமைக்காக நமது திறமைகளை அர்ப்பணம் செய்வதுதான் அந்தத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். 

புதன், 25 மார்ச், 2026

மார்ச் 25 - போராளி உஷா மேத்தா பிறந்ததினம்

"42.34 மீட்டர் அலைவரிசையில் பாரத நாட்டின் ஒரு பகுதியில் இருந்து காங்கிரஸ் வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு  இது" - 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் அது. பாரத நாட்டின் வானொலிகளில் இந்தக் குரல் திடீர் என்று கேட்டது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாக் குரல்களையும் ஒடுக்கி விட்டோம் என்று இறுமார்ந்திருந்த ஆங்கில ஆட்சிக்கு ஒரு நேரடி சவாலை அந்தக் குரல் எழுப்பியது.  

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நகரில் கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் " வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.  ஆனால் அதற்கு முன்னரே ஆங்கில அரசு எல்லாத் தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. நாட்டு மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் செய் அல்லது செத்து மடி என்ற அறிவுரை வழங்கப்பட்டது. ஆங்கில அரசோடு எந்த வகையிலும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும், கல்வி நிலையங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாகாணங்களில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கம் அனைத்தும் ராஜினாமா செய்தன. 

தலைவர்கள் இல்லாத நிலையில் மாநாட்டுப் பந்தலில் காங்கிரஸ் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக போராட்டத்தை தொடங்கி வைத்து விட்டு அருணா ஆசப் அலி தலைமறைவானார். போராட்டத்தை தொடர்ந்து நடத்தவும், போராட்டக்காரர்களை ஊக்குவிக்கவும், போராட்டம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலி நிலைய சேவையை உருவாக்கி நடத்தியவர்தான் போராளி உஷா மேத்தா. 

தொடர்ச்சியான அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து பல்வேறு இடங்களில் இருந்து இந்த வானொலி தனது ஒளிபரப்பை நடத்தி வந்தது. ராம் மனோகர் லோஹியா, ஜெயப்ரகாஷ் நாராயணன், அச்சுத பட்வர்தன் முதலியோர் உஷாவிற்கு துணையாக இருந்தார்கள். இறுதியில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் நாள் உஷா கைது செய்யப்பட்டார். எல்லா ஒலிபரப்பு கருவிகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. 

உஷா மேத்தா 1920ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் பிறந்தவர். இவரது தந்தை ஆங்கில அரசில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் பகுதியில் சரஸ் என்ற கிராமமே உஷாவின் பிறந்த இடமாகும். உஷாவின் ஐந்தாவது வயதில் அந்தப் பகுதிக்கு காந்தி வருகை தருகிறார். அங்கே காந்தி நடத்திய முகாமில் கலந்து கொண்டு உஷா ராட்டையில் துணி நெய்யக் கற்றுக்கொள்கிறார். சைமன் கமிஷனை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் உஷா கலந்து கொள்கிறார். 

அரசு அதிகாரியான உஷாவின் தந்தைக்கு உஷாவின் நிலைப்பாடு பிடிக்கவில்லை. உஷாவின் தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் குடும்பம் மும்பை நகருக்குக் குடியேறுகிறது. இங்கே உஷாவிற்கு பல்வேறு அரசியல்வாதிகளோடு நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. மிகச் சிறு வயதிலேயே உஷாவின் மனதில் காந்தியின் தாக்கம் ஏற்பட்டதால், வாழ்க்கை முழுவதும் கதர் துணியை மட்டுமே அணிவதாகவும், திருமண உறவில் ஈடுபடாமல் இருக்கப் போவதாகவும் உஷா உறுதி எடுத்துக் கொள்கிறார். மும்பை நகரில் வில்சன் கல்லூரியில்  தத்துவத் துறையில் இளம்கலை பட்டம் பெற்ற பிறகு உஷா சட்டம் படிக்கத் தொடங்குகிறார். ஆனால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் சட்டக் கல்லூரியில் இருந்து விலகுகிறார். 

1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் சரியான தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால்தான் வெற்றி அடையவில்லை என்று நம்பிய உஷா வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அப்படி முடிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ் வானொலி நிலையத்தை தலைமறைவாக நடத்தி வந்தார். அரசின் தணிக்கை முறை கடுமையாக இருந்த காலம் அது. பத்திரிகைகள் மூலமாக எந்த விதமான தகவல்களும் நாட்டு மக்களுக்கு சென்று சேரவில்லை. அந்தக் குறையை உஷா நடத்திவந்த காங்கிரஸ் வானொலி தீர்த்து வைத்தது. பதிவு செய்யப்பட்ட பல்வேறு தலைவர்களின் சொற்பொழிவுகள், போராட்டம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இதில் ஒலிபரப்பானது 

கைது செய்யப்பட்ட உஷா ஆறுமாதங்கள் தன்மைசிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வானொலியை தான் மட்டுமே நடத்தியதாகவும் இதில் வேறு எவருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்று உஷா கூறினார். அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உஷாவிற்கு நான்காண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு அவர் பூனா நகரில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாம்பாய் ராஜதானியின் தற்காலிக உள்துறை அமைச்சர் திரு மொரார்ஜி தேசாய் உஷாவை விடுதலை செய்து ஆணை பிறப்பித்தார். 

நாடு விடுதலை அடைந்த பிறகு தனது படிப்பை மீண்டும் தொடர்ந்த உஷா மேத்தா, காந்திய சித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கிய உஷா மேத்தா வரலாறு மற்றும் குடிமையியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் உஷா பல்வேறு கையேடுகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். 

காந்தி அமைதி இயக்கம் மற்றும் பாரதிய வித்யாபவன் ஆகிய அமைப்புகளோடு இணைத்து உஷா பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உஷா நோய் வாய்ப்பட்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் காலமானார். 

உஷா மேத்தாவின் சேவைகளை அங்கீகாரம் செய்யும்விதமாக பாரத அரசு 1998ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி சிறப்பித்தது. 

உஷா மேத்தா போன்று பல்வேறு தியாகிகளின் வீரச் செயல்களால் கிடைக்கப்பெற்றது நமது சுதந்திரம். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை என்று நினைவில் வைப்போம். 

திங்கள், 23 மார்ச், 2026

மார்ச் 23 - அரசியல் வானில் ஒரு இளம்தாரகை - ஸ்ம்ரிதி இராணி பிறந்தநாள்

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று


அஜய் குமார் மல்ஹோத்ரா - ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த மகளாக ஸ்ம்ரிதி 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் பிறந்தார். ஸ்ம்ரிதியின் தாத்தா ஒரு ஸ்வயம்சேவக், அவர் தாயார் ஜனசங்கத்தின் உறுப்பினர். எனவே இயல்பாகவே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லை.

சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஸ்ம்ரிதி, தனது சிறு வயதிலேயே அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து பொருளீட்டத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து போட்டியாளர்ககளில் ஒருவராகத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க ஸ்ம்ரிதி மும்பை நகருக்கு குடியேறினார்.

ஊச் லா லா லா என்ற தொலைக்காட்சித் தொடரை தொகுத்தளிக்கத் தொடங்கிய ஸ்ம்ரிதி, ஏக்தா கபூர் தயாரித்த குன்கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் துளசி விரானி என்ற பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடரின் வெற்றி அவரை வட மாநிலங்களில் அறியப்பட்ட முகமாக மாற்றியது. அந்தக் காலகட்டத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஸ்ம்ரிதி தயாரித்து வழங்கினார்.

2003ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஸ்ம்ரிதி, அடுத்த ஆண்டே மஹாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தற்காலிகப் பின்னடைவு அவரின் அரசியல் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. தனது தொடர்ந்த உழைப்பினால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், பெண்கள் அணியின் தேசியத்தலைவராகவும் அவரை கட்சி நியமித்தது. 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சார்பாக ஸ்ம்ரிதி இராணி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி இராணி களமிறங்கினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்று இருந்தன. அதில் ஒரு முறை ஜனதா கட்சியும், ஒரு முறை பாஜகவும் வெற்றி பெற்று இருந்தது. 12 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதிலும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதியாக சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக (1988 தேர்தல் தவிர ) அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்த தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டார். ஒருலட்ச ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் அப்போது வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டு காலகட்டத்தில் ஸ்ம்ரிதி இராணி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். எதிர்பார்த்தது போல ராகுல் காந்தியைவிட ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ம்ரிதி அமேதி தொகுதியைக் கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதி தலைமையிலான அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை, அதனைத் தொடர்ந்து செய்தித் தொடர்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, ஜவுளித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும், 2019ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையில் ஜவுளிதுறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் ஸ்ம்ரிதி இராணி பணியாற்றி வருகிறார்.

ஸுபின் இராணி என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட ஸ்ம்ரிதி இராணிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அரசியல் வானில் 44 வயது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நீண்ட கால அரசியல் வாழ்வு ஸ்ம்ரிதி இராணிக்கு உள்ளது என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் சேவையில் ஸ்ம்ரிதி இரானியின் பங்கு இன்னும் வீரியமாக இருக்கட்டும் என்று ஒரே இந்தியா தளம் மனமார வாழ்த்துகிறது. 

ஞாயிறு, 22 மார்ச், 2026

மார்ச் 22 - தொழிலதிபர் T V சுந்தரம் ஐயங்கார் பிறந்தநாள்

தமிழகத்தின் முக்கியமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் பிறந்ததினம் இன்று


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி என்ற சிறு கிராமத்தில் 1877ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர் திரு சுந்தரம் ஐயங்கார். திருநெல்வேலி ஹிந்து கல்லூரியில் படித்த அவர் சட்டபடிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வேயில் குமாஸ்தாவாகவும் பின்னர் வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் தொழில்துறையில் சுந்தரம் ஐயங்கார் கால்பதித்தார்.

1911ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை ஆரம்பித்த ஐயங்கார் 1912ஆம் ஆண்டு பஸ் போக்குவரத்தைத் தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழியில் இவரது முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேரம் பேசும் நிலைமையை மாற்றி தூரத்திற்கு ஏற்ப கட்டணம், பயணிகள் கொடுக்கும் பணத்திற்கு ஒப்புகை சீட்டு, குறிப்பிட்ட காலத்தில் கிளம்பி சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்று அந்தக் காலத்திலேயே தரத்தில் கவனம் செலுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்தின் பேருந்துகள் வருவதை வைத்து கடிகாரத்தின் நேரத்தை சரி செய்துகொள்ளலாம் என்று அன்று பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தது.

பேருந்து போக்குவரத்தைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய பல்வேறு தொழில்களிலும் டிவிஎஸ் நிறுவனம் கால்பதிக்கத் தொடங்கியது. வாகன உதிரிப்பொருள்கள், பெட்ரோல் / டீசல் விநியோகம், டயர் உற்பத்தி என்று விரிவடைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் விநியோக உரிமையும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. எந்தவிதமான சமரசமும் இல்லாத தரக்கட்டுப்பாடு, அரசின் சட்டதிட்டங்களை மீறாத செயல்பாடு, பணிபுரியும் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துதல் என்று ஒரு உதாரண நிறுவனமாக டிவிஎஸ் நிறுவனத்தை ஐயங்கார் வார்த்தெடுத்தார். நிறுவனத்தில் கான்டீன் வசதி, தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, அவர்கள் பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் என்று அன்றய காலகட்டத்தில் எந்த தொழிலதிபரும் யோசிக்காத வசதிகளை தங்கள் தொழிலாளிகளுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

வாகன விநியோகத்தில் ஈடுபட்ட நிறுவனம், தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய சுந்தரம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தையும் உருவாக்கியது. இன்று வாகன கடன் வழங்குவதில் சுந்தரம் பைனான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு தனியார் போக்குவரத்தை அரசுமயமாக்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டது. வீல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ்,  என்று பல்வேறு நிறுவங்களாக அவை உருவெடுத்தன.

தாங்கள் தயாரிக்கும் பொருள்களின் தரத்திற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனங்கள் பல்வேறு உதிரிப்பாகங்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றன. டிவிஎஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தரக் கட்டுபாட்டுக்கான டெமிங் தர விருதையும் பெற்றுள்ளன. இன்று ஏறத்தாழ 60,000கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு 8.5 பில்லியன் அமெரிக்கா டாலர் வியாபாரத்தை டிவிஎஸ் குழுமம் செய்து வருகிறது.

சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கு ஐந்து மகன்களும் மூன்று மகள்களும் உண்டு. முற்போக்கு சிந்தனையாளராகவும், காந்தியைப் பின்பற்றுபவராகவும் சுந்தரம் ஐயங்கார் இருந்தார். சிறுவயதில் விதவையான தனது மகள் சௌந்தரம் அவர்களுக்கு ராமச்சந்திரன் என்பவருக்கு மறுமணம் செய்து வைத்தார், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்த தம்பதியினரே. 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் சுந்தரம் ஐயங்கார் காலமானார்.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த திரு சுந்தரம் ஐயங்கார் அவர்களின் பிறந்ததினத்தில் அவரை ஒரே இந்தியா செய்தித்தளம் போற்றி வணங்குகிறது. 

சனி, 21 மார்ச், 2026

மார்ச் 21 - ஷெனாய் மேதை பிஸ்மில்லாஹ்கான் பிறந்தநாள்

பாரதம்  ஒரு விசித்திரமான தேசம். ஏறத்தாழ இருநூறாண்டு கால ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் சுதந்திரம் அடையும்போது இந்த நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களோடு இணைந்து வாழ  முடியாது என்று எண்ணிய இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது. பிரிவினை பல லட்சம் மக்களைக் கொன்று, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்மேலே  இரண்டு நாடுகள் உருவானது.

ஆனாலும் இந்தநாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பல லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அப்படி தங்கிய இஸ்லாமியர் ஒருவர்தான் இந்தியாவின் சுதந்திரநாள் அன்றும் இந்தியா குடியரசாக மலர்ந்த நாளன்றும் மங்கள வாத்தியம் இசைத்து வலிமையான பாரதத்தை வரவேற்று வாழ்த்தினார் என்பதும் அந்த மகத்தான கௌரவத்தை அவருக்கு இந்த நாடு அளித்தது என்பதும் யாரையும் நெகிழவைக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் புகழ்பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் அவர்கள்.

இன்றய பிஹார் மாநிலத்தில் உள்ள தூம்ரான் மாவட்டத்தில் பாரம்பரியமான ஒரு இஸ்லாமிய இசைக்குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு பிஸ்மில்லாகான் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு கமருதீன் என்றுதான் பெயர் சூட்ட இருந்தார்கள். ஆனால் இவரது தாத்தா ரசூல் பாக்ஸ்கான் குழந்தையைப் பார்த்த பொழுதில் பிஸ்மில்லாஹ் ( அல்லாஹ்வின் திருப்பெயரால் ) என்று மகிழ்ச்சியோடு கூவினார். அதனால் பிஸ்மில்லாஹ்கான் என்றே இவர் அழைக்கப்பட்டார்.

தனது ஆறாவது வயதிலேயே காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஷெனாய் வித்வானாக இருந்த தனது தாய்மாமா அலி பக்ஷிகானிடம் இவர் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். தனது இசை காசி விஸ்வநாதரின் அருள் என்பதில் பிஸ்மில்லாஹ்கான் உறுதியான நம்பிக்கை கொண்டுஇருந்தார். ஷெனாய் வாத்தியத்திற்கு இவரால் உலகப்புகழ் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்தியபிரதேச அரசின் தான்சேன் விருது, சங்கீத நாடக அக்காதெமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றார். இவை எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தது போல 2001ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சங்கீத நாடக அக்காதெமி இவர்பெயரால் உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் யுவபுரஸ்கார் என்ற விருதை 2007 ஆண்டு நிறுவியது. கலையுலகின் வளர்ந்துவரும்  இளம்கலைஞர்களுக்கான விருது இது.

காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும், வங்காளத்தின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளன.
முதுமையால் நோயுற்று இருந்த உஸ்தாத் பிஸ்மில்லாஹ்கான் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் காலமானார். இந்திய ராணுவத்தின் 21 குண்டு முழங்க இவரது நல்லடக்கம் நடைபெற்றது. இந்திய அரசு ஒருநாள் துக்கம் அனுஷ்டித்து. இவரது ஷெனாய் வாத்தியமும் இவர் உடலோடு புதைக்கப்பட்டது.

தனது இசையால் இந்த உலகத்தை மகிழ்வித்த உஸ்தாத் மறுஉலகிலும் தனது இசையால் புகழ்பெற்று இருப்பார்.

வியாழன், 19 மார்ச், 2026

மார்ச் 19 - இசையரசி டி.கே. பட்டம்மாள் பிறந்ததினம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் திருமதி டி கே பட்டம்மாள் அவர்களின் பிறந்ததினம் இன்று.

காஞ்சீபுரத்தைச் சார்ந்த தாமல் கிருஷ்ணஸ்வாமி தீக்ஷிதருக்கும் காந்திமதி என்பவருக்கும் மகளாக பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவருமே கர்நாடக இசை பயின்றவர்கள். மிகச் சிறு வயதிலேயே கேட்கின்ற பாடல்களைப் பாடும் திறமை இவருக்கு இருந்தது.

தனது பத்தாவது வயதிலேயே இவர் அன்றய சென்னை வானொலியில் தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தனது பதின்மூன்றாம் வயதில் சென்னையில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் முழுமையான கச்சேரியை நடத்தினார். இசை பயிலவும், இசையுலகில் முன்னேறவும் இவர் பெற்றோர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறினர். சென்னை மட்டுமல்லாது நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இவரது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

அன்றய காலகட்டத்தில் ப்ராமண சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் பொதுமேடைகளில் ஆடவோ பாடவோ மாட்டார்கள். அதனை மாற்றி பரதநாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல் போல சங்கீத மேடைகளில் முதலில் ஏறியவர் திருமதி பட்டம்மா அவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய பாடல்கள் பல இவரால் பாடப்பட்டு பிரபலமானது. திருப்புகழ், தேவாரம் ஆகியவற்றை முறையாகக் கற்றுத்தேர்ந்து அவைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பாடினார். புகழ்பெற்ற சாகித்யகர்த்தா பாபநாசம் சிவன் அவர்களிடம் இருந்து நேரடியாகப் பயின்று அவரது பாடல்களையும், மஹாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்களையும் இவர் பெருமளவில் பரப்பினார். பயில்வதற்கு பாடுவதற்கும் கடினமான ராகம் தாளம் பல்லவி என்பதில் திறமைவாய்ந்தவராக இருந்ததால் இவர் பல்லவி பட்டம்மாள் என்று அழைக்கப் பட்டார்.

1940களில் பல்வேறு கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களை, குறிப்பாக பாரதியார் பாடல்களை, அதிக அளவில் பாடிவந்தார். தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, திரு.வி.க போன்ற தலைவர்கள் இவரை ”அதிகமாக தேசபக்திப் பாடல்களைப் பாட வேண்டாம். பெண்ணென்றும் பாராமல் வெள்ளையரசு சிறை வைத்துவிட்டால் என்ன செய்வாய்” என்று எச்சரித்தனர். ஆனாலும் விடாமல் தேசபக்திப் பாடல்களை மேடை தோறும் பாடிவந்தார்.

பல்வேறு திரைப்படங்களில் தேசபக்தி பாடல்களையும் ஆன்மீகப் பாடல்களையும் இவர் பாடி உள்ளார். AVM நிறுவனம் தயாரித்த படங்களில் பாரத சமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, வெற்றி எட்டுத் திக்கும் என கொட்டு முரசே போன்ற பாரதியார் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

நம் நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்டு பதினைந்து அன்று அதிகாலை (நள்ளிரவு) 12 மணிக்கு விடுதலை அறிவிப்பு வந்த பிறகு, நேருவின் பேச்சு முடிந்தவுடன் வானொலி நிலையத்தார் பட்டம்மாள் அவர்களை “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” பாடலைப் பாடச் செய்தனர்.

இவரது மேதைமையைப் பாராட்டி இவருக்கு சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கான சரஸ்வதி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் இவர் சென்னையில் காலமானார். 

செவ்வாய், 17 மார்ச், 2026

மார்ச் 17 - விண்வெளி வீர மங்கை கல்பனா சாவ்லா பிறந்ததினம்

மனிதகுலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே விண்வெளியும், அதில் பறப்பதும் மனிதனுக்கு கிளர்ச்சியூட்டும் கனவாகவே இருந்து வந்துள்ளது. விண்வெளியில் கால்பதித்த முதல் பாரத பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று.  


மேற்கு பஞ்சாபில் ( இன்றய பாகிஸ்தான் ) முல்தான் பகுதியைச் சார்ந்த பனாரசிலால் சாவ்லா நாட்டின் பிரிவினையின் போது இன்றய ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அவர் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார். சவாலான ஒரு காலகட்டத்தை அந்தக் குடும்பம் கடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நான்கு குழந்தைகளில் இளையவராக 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் கல்பனா பிறந்தார். 

சிறுவயதிலிருந்தே படிப்பிலும், ஓவியம் வரைவதிலும், நடனமாடுவதிலும் சிறந்து விளங்கினார் கல்பனா. மொட்டை மாடியில் அமர்ந்தவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதிலும், விண்மீன்களை எண்ணுவதும் அவரின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த கல்பனா 1982ஆம் ஆண்டு சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் ( Aeronautical Engineering ) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அன்று இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் மாணவி கல்பனாதான். அதனைத் தொடர்ந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

கல்பனாவின் கனவு விண்வெளிப் பயணம்தான். 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பதினைந்து நாட்கள்  252 முறை பூமியைச் சுற்றி ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் என்று விண்வெளியில் பறந்த முதல் பாரதப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். 

2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 அனுப்பி வைக்கப்பட்டது.கல்பனா உள்பட ஏழு விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்காக இந்த விண்கலத்தில் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி 1ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். 

பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, அவர் பார்க்க விரும்பிய முக்கியமானவர்களில் ஒருவர் கல்பனா சாவ்லா. 
விண்ணில் இருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு அழகாகத் தெரிந்தது என்று கல்பனா பிரதமரிடம் குதூகலமாகக் கூறினார்.  

ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, விண்வெளியில் மிதந்து பாரத மக்களின் விடா முயற்சியை, எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை உலகெங்கும் பறைசாற்றிய கல்பனா சாவ்லாவின் இறப்பு என்பது பாரத நாட்டின் தேசிய துயரமாக அனுசரிக்கப்பட்டது. 

பாரதம் விண்ணில் ஏவிய வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோளுக்கு கல்பனா என்ற பெயர் சூட்டப்பட்டது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதி, ஹரியானா மாநிலத்தின் குருஷேத்திரா நகரில் அமைந்துள்ள கோளரங்கம், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மௌலானா அபுல்கலாம் ஆஜாத் தொழ்ல்நுட்ப பல்கலைக்கழகம் என்று பல்வேறு கல்வி நிலையங்களின் மாணவ விடுதிகள் இன்று கல்பனா சாவ்லாவின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பாரதத்திலும், அமெரிக்காவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவர் பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்குகின்றன. 

வீர தீர சாகசச் செயல்களைப் புரியும் பெண்களுக்கான பரிசு கல்பனா சாவ்லா பெயரில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 


இன்னும் பல ஆண்டுகளுக்கு பாரதநாட்டின் பெண்களுக்கு கல்பனா சாவ்லாவின் வாழ்வு உத்வேகம் தருவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 

சனி, 7 மார்ச், 2026

மார்ச் 7 - கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் பிறந்தநாள்


பாரத நாட்டின் வடகிழக்கு பகுதியில் பிறந்து, தெற்குப் பகுதியில் ராணுவப் பயிற்சி முடித்து வடக்கு எல்லையில் நாட்டைக் காக்க தனது உயிரை தியாகம் செய்த கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. 1975ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்த இவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் நாள் கார்கில் போர்முனையில் கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த 4812 என்ற சிகரத்தை தனது உயிரை பலிதானம் செய்து எதிரிகளிடம் இருந்து மீட்டெடுத்தார்.

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் நகரைச் சார்ந்த திரு கெய்ஷிங் பீட்டர் - சைலி நான்க்ராம் தம்பதியரின் மகன் கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம். தனது பள்ளிப்படிப்பை டான் போஸ்கோ பள்ளியிலும் பின்னர் அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்பை தூய அந்தோனியார் கல்லூரியிலும் படித்தவர் கேப்டன் கெய்ஷிங். படிக்கும் காலத்திலேயே கால்பந்தாட்டத்திலும், குத்து சண்டையிலும் திறன் பெற்று விளங்கிய கெய்ஷிங் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்று இந்திய ராணுவத்தில் இணைந்தார்.

பயிற்சியை முடித்த கெய்ஷிங், ஜம்மு காஷ்மீர் காலாள்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே இமயத்தின் உச்சியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி, எல்லைகளை மீட்டெடுக்கும் கார்கில் போர் தொடங்கியது. இறுதியில் பாரதம் இந்தப் போரில் வெற்றி பெற்றது என்றாலும், அதற்காக நாம் கொடுத்த விலை மிக அதிகம். வீரமும் துணிச்சலும் சாகசமும் நிரம்பிய பல இளைய ராணுவ அதிகாரிகளின் பலிதானத்தால் அந்த வெற்றி ஈட்டப்பட்டது.

1999ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இரவில் 4812 என்ற சிகரத்தை எதிரிகளிடம் இருந்து மீட்டெடுக்குமாறு கேப்டன் கெய்ஷிங்க்குக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செங்குத்தான வழியில் ஏறித்தான் மலை உச்சியை அடைய முடியும். அதிலும் அங்கே பதுங்குகுழி அமைத்து எதிரிகள் தங்கி இருந்தனர். எந்தப் போரிலும் மலை உச்சியில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் அதிகம். பதுங்குகுழி என்பதால் விமானத்தின் மூலமான தாக்குதலும் பயன் தராது. மலையின் மீதேறி சென்ற வீரர்களுக்கு ஓன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். கட்டாயமாகஉயிரோடு  திரும்பி வரப்போவதில்லை, மூவர்ணக் கொடி போர்த்திய உடலாகத்தான் திரும்புவோம் என்பதில் அவர்கள் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால் வீரர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவது இல்லை. கெய்ஷிங் தலைமையில் ஒரு சிறு அணி முன்னேறத் தொடங்கியது.

மலைமுகட்டை நோக்கிச் சென்ற வீரர்களை தொடர்ச்சியான துப்பாக்கிக் குண்டுகளும், பீரங்கி குண்டுகளும் வரவேற்றன. மலை உச்சிக்கு அருகே செல்ல பத்து மணி நேரம் ஆனது. தொடர்ந்து வெடிக்கும் குண்டுகளுக்கு சிக்காமல் தரையோடு தரையாக ஊர்ந்து செல்ல வேண்டிய பாதை அது. மலை உச்சிக்கு மிக அருகே இருக்கும் போது, வேறு எந்த போர்முயையும் பயன் தராது நேரடியான போரைத்தான் தொடங்க வேண்டும் என்று கேப்டன் கெய்ஷிங் முடிவெடுத்தார். மழையென பொழியும் குண்டுகளுக்கு நடுவே புகுந்து தனது கையெறி குண்டுகளை வீசி எதிரிகளின் ஒரு பதுங்குகுழியை  அவர் அழித்தொழித்தார். அதோடு அங்கே பதுங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்களும் மரணம் அடைந்தனர்.

அடுத்த பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் கேப்டன் கெய்ஷிங் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். இதற்கு நடுவே அவரது வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மலைச்சிகரத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். ஆனால் எதிரிகளின் தொடர்ச்சியான துப்பாக்கி குண்டுகளை தன்மீது வாங்கி கேப்டன் கெய்ஷிங் வீரமரணம் அடைந்தார்.

கேப்டன் கெய்ஷிங் கிளிபோர்ட் நான்க்ராம் அவர்களின் வீரம் இந்தப் போரில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இருபத்தி நான்கு வயதே நிரம்பிய கேப்டன் கெய்ஷிங் அவர்களுக்கு போர்க்காலத்தில் அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மஹாவீர் சக்ரா விருதை வழங்கி நாடு தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.

தான் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பும் கேப்டன்  கெய்ஷிங் தனது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை ராணுவத்தில் சேரச் சொல்லி அதற்கான தயாரிப்புகள் பற்றி வகுப்புகள் எடுப்பது வழக்கம். இன்றும் அவரது படையணியைச் சார்ந்தவர்கள் அவர் நினைவாக ஷில்லாங் நகரின் பல கல்வி நிலையங்களில் ராணுவ சேவைக்காக மாணவர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நமது எதிர்காலத்திற்காக தங்கள் நிகழ்காலத்தை பணயம் வைக்கும் ராணுவ வீரர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகுக. 

சனி, 28 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 29 - மொரார்ஜி தேசாய்பிறந்தநாள்

காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரான திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பல்சார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் தேசாய் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை குஜராத்திலும், பட்டப்படிப்பை மும்பையில் முடித்த இவர் அரசு வேலையில் இணைந்தார். கோத்ரா மாவட்டத்தில் துணை ஆட்சியாளராக இருந்த இவர், காந்தியின் அழைப்பை ஏற்று பணியைத் துறந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கு கொண்டு பல்லாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சுதந்திரத்துக்கு முன்பு பிளவு படாத பம்பாய் ராஜதானியின் வருவாய் மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பம்பாய் ராஜதானியின் இரண்டாவது முதலமைச்சராகப் பணியாற்றினார்.

குராஜாத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1957ஆம் ஆண்டில் இருந்து ஐந்துமுறை ( இருபத்தி மூன்று ஆண்டுகள்)  வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் 1958ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராகப் பணியாற்றினார். நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசாய், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தால், அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு மீண்டும் பிரதமர் போட்டியில் குதித்த தேசாய், நேருவின் மகளான இந்திரா காந்தியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்திராவின் அமைச்சரவையில் 1967 முதல் 1969வரை துணைப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றனார்.

வங்கிகளைத் தேசியமயமாக்க இந்திரா முடிவு செய்து தேசாயிடமிருந்து நிதித்துறையை பறித்தார். ஆனாலும் துணைப்பிரதமராக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதை மறுத்து தேசாய் மந்திரிசபையில் இருந்து வெளியேறினார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டி வேட்பாளரை நிறுத்தி அவரை இந்திரா வெற்றிபெறவைத்தார். கட்சி பழைய தலைவர்களை முன்னிறுத்தி சிண்டிகேட் எனவும் இந்திராவை முன்னிறுத்தி இண்டிகேட் எனவும் இரண்டானது. அதைத்தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா பெரும் வெற்றிபெற்றார்.

நேரு குடும்பத்தின் ஆட்சிக்கான அட்சாரமாக எழுபதுகளின் தொடக்கம் இருந்தது. பிரதமர் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் முக்கியமான அதிகாரமையமாக உருவானார். நாடெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமானது. அரசியலை விட்டு விலகியிருந்த லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் ஓன்று திரண்டனர். இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பிரச்சனைகளை சமாளிக்க இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்.

சுதந்திரம் அடைந்து முப்பது ஆண்டுகளுக்கு உள்ளாக இந்தியா மீண்டும் தனது ஜனநாயக உரிமைகளை இழந்தது. அநேகமாக எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திராவே இந்தியா என்று இந்திரா காங்கிரஸின் தலைவர்கள் கோஷமிட்ட ஆரம்பித்தனர். பத்திரிகைகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. அரசை விமர்சிக்கும் எந்த செய்தியும் பிரசுரிக்கும் நிலை இல்லாமல் ஆனது.

1977ஆம் ஆண்டு திடீர் என்று இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் வழிகாட்டலில் பெருவாரியான எதிர்க்கட்சிகள் இணைத்து ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. நாட்டின் நான்காவது பிரதமராக, காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக தனது எண்பத்தி ஒன்றாம் வயதில் மொரார்ஜி தேசாய் தேர்வானார்.

உள்கட்சி பூசலால் ஜனதா கட்சியின் ஆட்சி கவிந்தது. 1980ஆம் ஆண்டு நேரடி அரசியலில் இருந்து தேசாய் விலகிக்கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் உண்மையான காந்தியவாதியாக இருந்த தேசாய் மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டார். நீண்ட அரசியல் வாழ்வில் அவரது எதிரிகள்கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை.

அரசியல் வாழ்வில் இருந்து விலகிய பிறகு, தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தால் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றால் இன்றய தலைமுறையால் அதனை நம்பவே  முடியாது.

இந்திய அரசு தேசாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் அரசு தனது உயரிய விருதான நிஷான் ஹி பாகிஸ்தான் விருதை அவருக்கு வழங்கியது

தனது 99 ஆம் வயதில் 1995 ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் மும்பையில் தேசாய் காலமானார்.

இந்த நாளில் தேசாயைப் போல ஒழுக்கமானவராக இருப்போம் என்று உறுதி பூணுவோம்.  

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 27 - நானாஜி தேஷ்முக் நினைவுநாள்

தான் உண்மை என்று நம்பும் கொள்கைக்காக எல்லா சுகங்களைளையும் துறந்து, மக்களின் பணிக்காக தங்களை முழுவதுமாக அர்பணித்துக்கொள்ளும் தனிமனிதர்கள் மீண்டும் மீண்டும் பாரத மண்ணில் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எந்த அங்கீகாரத்தை, புகழை, விளம்பர வெளிச்சத்தை விரும்பாத அப்படியான மகோன்னதமான மனிதர்களில் முக்கியமானவரான சந்திகதாஸ் அமிர்தராவ் தேஷ்முக் என்ற  திரு நானாஜி தேஷ்முக் அவர்களின் நினைவுநாள் இன்று.



1916ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கடோலி என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நானாஜி. வறுமை வாட்டியபோதும், காய்கறிகள் விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது படிப்பை தொடர்ந்தவர் இவர். ஷிகர் சமஸ்தான மன்னர் அளித்த உதவித்தொகையைக் கொண்டு தனது மேல்படிப்பை பிலானிலில் உள்ள பிர்லா கல்லூரியில் முடித்தார்.

சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ஜி அவர்களோடு நெருங்கிய பழகிய குடும்பத்தைச் சார்ந்தவர் திரு தேஷ்முக். பல்வேறு ஸ்வயம்சேவகர்கள் போலவே மிக இள வயதிலேயே இவரும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். படிப்பை முடித்தபின் சங்கத்தின் முழுநேரப் பிரச்சாரகராக பணியாற்றத் தொடங்கிய தேஷ்முக்கின் கர்மபூமியாக உத்திரப்பிரதேசம் ஆனது. ஆக்ராவிலும் கோரக்பூரிலும் தர்மசாத்திரங்களில் தங்கிப் பணியாற்றி உத்திரப் பிரதேசத்தில் சங்க கிளைகளை உருவாக்கினார். அந்த சமயத்தில்தான் தீன தயாள் உபாத்தியாவின் அறிமுகம் தேஷ்முக்கிற்கு கிடைத்தது.

கல்வி பற்றி மிகக் கறாரான தெளிவான பார்வை அப்போதே தேஷ்முக்கிற்கு இருந்தது. 1950ஆம் ஆண்டு கோரக்பூரில் சரஸ்வதி சிஷு மந்திர் என்ற கல்வி நிலையத்தை தேஷ்முக் தொடங்கினார். இன்று 12,000 பள்ளிகளோடு ஏறத்தாழ நாற்பது லட்சம் மாணவர்களுக்கு கல்வி தரும் நிறுவனமாக அதனை மாற்றியது நானாஜியின் சாதனைகளில் ஓன்று.

1947ஆம் ஆண்டு பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா என்ற மாத பத்திரிகைகளையும் ஸ்வதேஷ் என்ற நாளிதழையும் நானாஜி தொடங்கினார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆசிரியராககவும், தீனதயாள் உபாத்தியாய வழிகாட்டியாகவும் செயல்பட்டனர். ஆனால் சிறிது காலத்திலேயே காந்தி கொலையானதைத் தொடர்ந்து, சங்கம் தடை செய்யப்பட பத்திரிகைகளை தலைமறைவாக இருந்து நடத்த வேண்டி இருந்தது.

சங்கத்தின் மீதான தடை விலக்கப்பட்ட பின்னர், ஜனசங்கம் என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. கட்சியின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பொது செயலாளராக நானாஜி பணியாற்றத் தொடங்கினார். தீனதயாள் உபாத்தியாவின் லட்சிய நோக்கு, வாஜ்பாயின் பேச்சாற்றல், நானாஜியின் செயல்திறம் இவை அனைத்தும் இணைத்து வட பாரதத்தில் கட்சியை வளர்த்தன.

பிற கட்சித் தலைவர்களோடும் நானாஜி நெருங்கிய உறவை உருவாக்கி இருந்தார். சோஷலிச தலைவரான ராம் மானோஹர் லோஹியா உடன் நானாஜிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பது என்பது வெகு இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆச்சாரிய வினோபா பாவேயின் பூதான இயக்கத்திலும் நானாஜி இணைந்து பணியாற்றினார்.

காங்கிரஸ்ஆட்சியின்  ஊழலை எதிர்த்து மாணவர்கள் களம் கண்டனர். அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இயக்கத்தின் செயலாளராக நானாஜி பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து நாட்டில் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாகின.

நானாஜி மீண்டும் தலைமறைவானார். தலைமறைவாக இருந்தபடியே பல்வேறு செய்தி இதழ்களை வெளியிட்டு ஜனநாயகத்தைக் காக்க போராடிக்கொண்டுதான் இருந்தார். இப்படி வெளியாகும் எல்லா பத்திரிக்கைளின் எல்லா இதழ்களும் பிரதமர் இந்திராவுக்கு தவறாமல் அனுப்பப் பட்டது. எந்த விதமான அடுக்குமுறையையும் எதிர்த்து நிற்கும் பாரம்பரியம் அப்போதும் தொடர்ந்தது.

நெருக்கடிநிலையை இந்திரா விலக்கிக்கொள்ள, அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. உத்திரப்பிரதேசத்தின் பைராம்பூர் தொகுதியில் இருந்து நானாஜி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்றய பிரதமர் மொரார்ஜி நானாஜி அவர்களுக்கு மந்திரி பதவி அளிக்க முன்வந்தார். ஆனால் நானாஜி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

எண்பதுகளில் நேரடி அரசியலை விட்டு விலகி சமுதாய சேவையில் முழுவதும் ஈடுபடலானார். நமது திட்டங்கள் தலைகீழாக உள்ளது. பாரதத்தின் வளம் என்பது கிராமங்களில் உள்ளது. அதனைப் புறக்கணித்து விட்டு அரசு நகரங்களுக்கும், அதிகமான நுகர்வு கலாச்சாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது என்பது நானாஜியின் கருத்து.  உத்திரப்பிரதேசம். மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏறத்தாழ 500 கிராமங்களுக்கு மேலாக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும், கல்விப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் நானாஜி.  இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் சித்திரகூடப் பகுதியில் கிராமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் வேந்தராக நானாஜி நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நானாஜியை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது. அதே ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தனது 93ஆம் வயதில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் நானாஜி பாரத தாயின் காலடியில் சரண் புகுந்தார். வாழும் நாளெல்லாம் மக்களுக்காகவே பாடுபட்ட அந்த தலைவரின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது நானாஜிக்கு வழங்கப்பட்டது.

எண்ணற்ற தியாகிகள் இந்த மண்ணில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கம். 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 10 - மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் பிறந்ததினம்

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் இந்த சமுதாயத்தினரின் தொழிலாக இருந்தவை. 1803ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் பிறந்த ஜெகநாத்சேத் இவை இரண்டையும் விட்டு விட்டு வியாபாரத்தில் நுழைந்தார். தொழிலில் நாணயமானவர் என்று பெயர் எடுத்ததால், மிகச் சில காலத்திலேயே அன்றய மும்பை நகரின் முக்கியமான வணிகராக மாறினார். தொழில் சிறப்பாக நடைபெற்றதால், லாபமும் கணிசமாக வந்தது, நாளடைவில் பெரும்பணக்காரராக மாறினார்.

தனக்கு கிடைத்த செல்வதை மக்களின் சேவைக்கு ஜெகன்நாத்சேத் செலவிடத் தொடங்கினார். கல்வியின் முக்கியத்தை அறிந்த அவர் மும்பையில் கல்விச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஆண்களுக்கான பள்ளி, பெண்களுக்கான பள்ளி, சமிஸ்க்ரித பள்ளி, நூலகம் ஆகியவற்றைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் உருவானதுதான் இன்று மும்பை நகரின் புகழ்பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரி. தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, கோகுலே, திலகர் போன்ற பாரத நாட்டின் பெரும் தலைவர்களை உருவாக்கியது இந்தக் கல்லூரிதான்.

மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்பது ஜெகநாத்சேத்தின் கருத்து. ஆங்கிலத்தில்தான் கல்வி இருக்கவேண்டும் என்பது அரசின் எண்ணம். தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் உயர்நிலைக் கல்வி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

ரயில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஜெகநாத்சேத் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாயுடன் இணைந்து இந்தியன் ரயில்வே அஸோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் பாரத நாட்டுக்கு ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்று ஆங்கில அரசை வலியுறுத்தினார். இந்த அமைப்புதான் பின்னர் கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே என்று உருமாறி நாட்டின் ரயில் போக்குவரத்தை உருவாக்கியது. முதல் ரயில் மும்பை நகருக்கும் தானாவிற்கும் இடையே தொடங்கியது.

ஜெகநாத்சேத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஆங்கில அரசு அவரை மும்பை சட்டசபைக்கு நியமித்தது. அந்த சபையின் முதல் பாரதிய அங்கத்தினர் ஜெகநாத்சேத்தான். தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சதியை தடைசெய்ய வைத்தார், விசாலமான சாலைகள், சாலையின் இருபுறமும் மரங்கள் என்று மும்பை நகரின் விரிவாக்கத்திற்கு சேத் பெரும்பணியாற்றினார். பம்பாய் அஸோஸியேஷன் என்ற பெயரில் மும்பையின் முதல் அரசியலமைப்பையும் இவர் தொடங்கினார். 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் இவரது பங்கு இருக்கும் என்று ஆங்கில அரசு எண்ணியது. ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

பல்வேறு நிறுவனங்களை உருவாக்க பணம் அளித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக தனது சொந்த இடங்களையும் ஜெகநாத்சேத் வழங்கினார். இன்றய மும்பை நகரின் பிதாமகர் என்று அவரைச் சொன்னால் அது மிகையாகாது.

அறுபத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஜெகநாத் ஷங்கர்சேத் 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் காலமானர். 

திங்கள், 9 பிப்ரவரி, 2026

பிப்ரவரி 9 - அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள்

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று.


மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் இவர். பொதுவாக சந்யாசிகள் அல்லது முதியவர்களை பாபா என்று அழைப்பது வட இந்தியர்களின் பழக்கம். ஆனால் சிறுவயதிலேயே தங்கள் மகனை பாபா என்று இவரின் பெற்றோர்கள் அழைக்கத் தொடங்கி அதுவே இவரின் பெயராக மாறிவிட்டது.

கிட்டத்தட்ட சித்தார்த்தன் புத்தனாக மாறிய கதைதான் பாபா ஆம்தேவின் கதையும். சிறுவயதிலேயே  தனக்கான காரின் இருக்கையில் சிறுத்தையின் தோலால் தயாரான உறையை மாட்டிக்கொண்டு சொந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடுவதில் காலம் கழித்துக்கொண்டு இருந்த முரளிதர் நாட்டின் முக்கியமான சமூகசேவகராக மாறியது மிகப் பெரும் அதிசயம்தான்.   செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மக்களிடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு அவரின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தது.

காலனிய சக்தியான ஆங்கிலேய அரசிற்கு எதிராக விடுதலை போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் முரளிதரும் அன்றைய வேறு பல இளைஞர்களைப் போல்,  ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வன்முறை வழியை நம்பியவர்களுக்கு அவசியமான ஆயுதங்களை சேகரிப்பது முக்கியம் என நம்பினார். 1935ஆம் ஆண்டு பலூசிஸ்தான் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, முரளிதர் சீரமைப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு க்வேட்டா சென்றார்.

பெரும்பாலான அன்றய இளைஞர்கள்போல ஆம்தேவும் சட்டம் பயின்றார், வார்தா நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். நாட்டு விடுதலைக்காக போராடி அதனால் ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்ட விடுதலை வீரர்களுக்காக வாதாடத் தொடங்கினார். படிப்படியாக காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்தே காந்தி நிறுவிய சேவாகிராமத்தில் தங்கி கை ராட்டை சுற்றியும், கதர் துணியை நெய்தும் முழுமையான காந்தியவாதியாக மாறினார்.

ஆம்தே வரோரா நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அறைகூவலை ஏற்று நாளொன்றுக்கு நாற்பது கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தொடங்கினார். எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பதைக் காட்ட கழிப்பறை சுத்தம் செய்வதை காந்தி முன்னெடுத்தார். அதனை காந்தியின் சீடர்கள் பலர் பின்தொடர்ந்தனர்.

அப்படியொருநாள் தலைகூடையில் கழிவுகளை சுமந்துகொண்டு சென்ற மழைநாளில், நீர்தேங்கிய குட்டைக்கு அருகில் கோர முகத்துடன், விரல்களற்ற, புழுக்கள் மண்டி வலியில் துடித்த நிர்வாண மனிதர் ஒருவரைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முரளிதர் அப்போதுதான் தொழு நோயாளியை முதன்முதலாக கண்டிருந்தார். அந்தக் காட்சியும், தனக்கும் நோய் பரவிவிடும் எனும் அச்சமும் அவரைப் பீடித்ததால் வீட்டிற்கு ஓடி வந்தார். அவர் மீது படிந்த அழுக்குகளை சுத்தப்படுத்திகொள்ள குளித்தார்.

ஆனாலும் மனதளவில் அந்த காட்சியின் உக்கிரத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. “ஒருகால் தானோ, தன் மனைவி, பிள்ளைகளோ இந்நோயால் பீடிக்கப்பட்டால் எங்கு போவது?” எனும் கேள்வி அவருள் எழும்பியது. “எங்கு அச்சமிருக்கிறதோ அங்கு அன்பு இருக்க இயலாது, எங்கு அன்பு இல்லையோ அங்கு கடவுளும் இருக்க இயலாது. நான் இந்த அச்சத்தைப் போக்கியாக வேண்டும்” என்று தன்னையே தேற்றிக் கொண்டார். நோய்மையின் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்படி அப்படியே விட்டுவர தன்னால் முடிந்தது என எண்ணி வெட்கினார்.

மீண்டும் அங்கு சென்று அந்த மனிதருக்கு உணவளித்து, அவருக்கு சிறு மூங்கில் குடிலமைத்துக் கொடுத்து பராமரித்தார். அவர் பெயர் துளசிராம், துளசிராம் பாபா ஆம்தேவின் பராமரிப்பில்தான் மரித்தார். ஆம், முரளிதரின் வாழ்க்கையையே மாற்றி, பாபா ஆம்தேவின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்துவிட்டே மரித்தார்.

‘நான் எதற்குமே அஞ்சியதில்லை. ஆங்கிலேய இளைஞர்களை எதிர்த்து, இந்தியப் பெண்ணின் மானம் காக்க சண்டையிட்டிருக்கிறேன். காந்திஜி என்னை ‘அபய சாதகன்’, அதாவது ‘அச்சமற்று சத்தியத்தை தேடுபவன்’ என்றே அழைப்பார். வரோராவின் தோட்டிகள், 'கழிவறை சுத்தம் செய்திட முடியுமா?" என எங்களிடம் சவால்விட்டபோது, அதை ஏற்றுச் செய்தேன். குண்டர்களையும் கொள்ளைக்கார ஆங்கிலேயர்களையும் எதிர்த்து சண்டையிட்ட நானேதான் பிணம் போல் வாழ்ந்த துளசிராமைக் கண்டு அஞ்சி நடுங்கினேன். விரல்கள் இல்லை, துணிமணிகள் இல்லை, உடலெங்கும் புழுக்கள்.’

பாபா அவருடைய அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள முடிவெடுத்தார். அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் அப்படி எதிர்கொள்வதன் வழியாகவே அவற்றை வென்று கடந்து செல்ல இயலும் என்பதை புரிந்துகொண்டார். 

காந்தி தன்னுடைய ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழுநோய் பராமரிப்பையும் முன்னிலைப்படுத்தினார். வரோராவிற்கு அருகில் தத்தபுரத்தில் தொழுநோய் மருத்துவமனையும் வசிப்பிடமும் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு ஒரு சிறு குடிசை கட்டிக்கொண்டு அவர்களுடைய வாழ்வை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினார் முரளிதர். பின்னர் 1948ல் வரோராவில் சிறிய ஒரு தொழு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தை துவக்கினார். ஆனால் தொழுநோய் பற்றி பூரண அறிதல் அதை எதிர்கொள்ள அத்தியாவசியம் என உணர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் ட்ராபிக்கல் நோய் மையத்தில் சேர்ந்து தொழுநோய் தொடர்பான ஓராண்டு மருத்துவ பயிற்சி படிப்பில் சேர்ந்து கல்வி கற்றுத் தேர்ந்தார். வராரோவைச் சுற்றி ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் பதினோரு தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நான்காயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு மகாரோக சேவா சமிதி என்றொரு அமைப்பை தொழுநோயாளிகளின் பராமரிப்பிற்காக ஏற்படுத்தினார். அவர்கள் குணமாகி, சமூகத்திற்கு பயனுள்ள, தற்சார்புடைய வாழ்வு வாழ அனைவரும் இணைந்து வசிப்பதற்குரிய இருப்பிடம் தேவை என உணர்ந்துகொண்டார். பொருளியல் தற்சார்பு வழியாகத்தான் ஒருவன் பூரணமாக நோயிலிருந்து விடுபட்டு மீண்டெழ முடியும் என்று அவர் கருதினார். “விரல்கள் இன்றிக்கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும், ஆனால் சுயமரியாதையின்றி வாழ முடியாது”.

1951ஆம் ஆண்டில் சந்திரபூர் வனப்பகுதியில் சிறிது நிலத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கியது. மனைவி மற்றும் இரு கைக்குழந்தைகளுடன். பையிலிருந்த பதினான்கு ரூபாயுடன் ஆறு தொழுநோயாளிகளை அழைத்துக் கொண்டு கொடிய வனப்பகுதி நிலத்தைத் திருத்தி குடியேறினார். மூங்கில் கழிகளைக் கொண்டு சிறு குடில்களமைத்துக் கொண்டார், கிணறு வெட்டினார், அங்கேயே வசிக்கத் துவங்கினார். அப்படித்தான் ‘ஆனந்தவனம்’ உருவானது. வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே ஆம்தேயின் கருத்தாக இருந்தது. தொழுநோயாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் துளிர்க்கச் செய்வதே தன் வாழ்நாள் பணியென உறுதிகொண்டிருந்தார் அவர்.

மிகச் சிறிய மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்டு இன்றொரு பிரம்மாண்டமான மருத்துவமனையாக வளர்ந்து உருமாறி இருக்கிறது ஆனந்தவன். நாளொன்றிற்கு ஐநூறு புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள், ஆயிரத்து ஐநூறு உள் நோயாளிகள் தங்குவதற்கான இட வசதிகள் உண்டு. தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உண்டு.

1967 ஆம் ஆண்டு ஆனந்தவனத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோம்நாத்தில் மற்றுமொரு தொழுநோய் மையத்தை நிறுவ யத்தனித்தார் ஆம்தே. அங்கும் தொழுநோயாளிகளின் கூட்டு முயற்சியில் மருத்துவமனை உருவானது.

பாபா ஆம்தேவுடன் அவரது மனைவி, மகன்கள் மருமகள்கள் என்று மொத்த குடும்பமே தங்களை சேவைக்கு அர்பணித்துக்கொண்டு உள்ளனர். அவரது இரண்டு மகன்களும் இரு மருமகள்களும் மருத்துவம் படித்தவர்கள். இன்று அவரின் இரண்டு பேரன்களும் மருத்துவம் படித்துவிட்டு ஆனந்தவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

தன்னலம் கருதாது உழைத்தாலும், தகுதியானவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் வரத்தான் செய்யும். பாபா ஆம்தேவை நோக்கி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மாகஸே விருது, காந்தி அமைதிப் பரிசு ஆகியவை தேடி வந்தன.

அபய சாதகன் அதாவது பயமே இல்லாது சேவை புரிபவன் என்று காந்தியால் பாராட்டப்பட்ட பாபா ஆம்தே தனது தொண்ணூற்றி மூன்றாம் வயதில் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் காலமானார்.

நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உழைப்பதே இதுபோன்ற மகத்தான மனிதர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதின் பயனாக இருக்கும். 

சனி, 31 ஜனவரி, 2026

ஜனவரி 31 - மேஜர் சோம்நாத் சர்மா பிறந்ததினம்

பரம்வீர் சக்ரா விருதை முதன்முதலில் பெற்றவர் மேஜர் சோம்நாத் சர்மாவின் பிறந்ததினம் இன்று. 

மேஜர் சோம்நாத் சர்மாவின் குடும்பமே ராணுவ வீரர்கள் குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. சோம்நாத் சர்மாவின் தந்தை அமர்நாத் சர்மா. அவர் ஒரு மருத்துவர். ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி அவர் மேஜர் ஜெனரல் என்ற நிலையில் பணி நிறைவு பெற்றவர். சோம்நாத் சர்மாவிற்கு இரண்டு சகோதரர்கள். சுரீந்தர்நாத் சர்மா பொறியியல் பட்டம் பெற்று ராணுவப் பணியில் இணைந்து லெப்டினென்ட் ஜெனரல் என்ற நிலைக்கு உயர்ந்தவர். இன்னொரு சகோதரர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா பாரத ராணுவத்தின் 14ஆவது தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர். மருத்துவம் படித்த அவரது சகோதரி ராணுவத்தில் பணியாற்றனார். கமலாவும் அவரது மற்றொரு சகோதரியான மனோரமா இருவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்களையே மணந்து கொண்டார்கள். வீரமும் தியாகமும் அவர்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து என்றால் அது மிகையாகாது. 

இன்றய ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் 1923ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் சோம்நாத். அந்தக் காலத்தில் இந்த மாவட்டம்  பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பெரும் வீரத்தைக் காட்டி பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவும் இதே பகுதியைச் சார்ந்தவர்தான். 

சோம்நாத்திற்கு நான்கு வயதாக இருந்தபோது மருத்துவத்துறையில் மேற்படிப்பிற்காக அவர் தந்தை இங்கிலாந்து செல்ல வேண்டி இருந்தது. அவரோடு அவரது மனைவியும் சென்றார். எனவே சோம்நாத்தும் அவர் சகோதரர் சசுரீந்தர்நாத்தும் முசோரி நகரில் உள்ள ஹாம்ப்டன் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்கள். ஒரே வகுப்பிலும் ஒரே விடுதி அறையிலும் என்று அவர்கள் இளமைக்காலம் ஆரம்பமானது. பொது அறிவு மற்றும் வரலாறு ஆகிய படங்கள்தான் சோம்நாத்தைக் கவர்ந்தன. மற்ற பாடங்களைக் காட்டிலும் விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும்தான் அவரது நாட்டம் இருந்தது. அதனைத் தொடர்ந்து நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் படித்த சோம்நாத் பின்னர் டெஹ்ராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர்ந்து ராணுவத்திற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார், 1941ஆம் ஆண்டு இந்திய ராணுவ அகாடெமியில் சோம்நாத் சேர்ந்தார். ஆனால் அது இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான காலம். எனவே பயிற்சி நிறுத்தப்பட்டு அங்கே பயின்றவர்கள் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்கள். 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 வயதேயான சோம்நாத் சர்மா 8/19 ஹைதராபாத் படைப்பிரிவின் இரண்டாம் லெப்டினென்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

ஆங்கிலக் கல்வி பயின்றாலும் தனது பேரன்கள் பாரதப் பண்பாட்டில் இருந்து வழி மாறிவிடக் கூடாது என்று எண்ணிய சோம்நாத்தின் தாத்தா அவர்க்கு இதிகாசங்களைக் கற்பித்தார். குறிப்பாக பகவத்கீதை சோம்நாத்தின் மனதில் ஆழமாகப் பதிந்தது. கீதையே அவரின் வழிகாட்டியாக அமைந்தது. 

ஹைதராபாத் படைப்பிரிவு பின்னாளில் குமாவுன் படைப்பிரிவு என்று பெயர் மாற்றம் பெற்றது. பாரதநாட்டின் வரலாற்றில் குமாவுன் பிரிவு நீண்ட வரலாறு கொண்ட படைப்பிரிவு. இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா நகரின் அருகே உள்ள ராணிகெட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மஹாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம் இந்தப் பகுதியில்தான் நடைபெற்றது என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். கடினமான மலைப்பிரதேசத்தில் வாழ்க்கையை நடத்தவேண்டி உள்ளதால் இங்கே உள்ள மக்கள் இயற்கையாகவே வீரமிக்கவர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

குமாவுன் படையின் வரலாறு ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்குகிறது. இந்தப்பகுதியில் இருந்த இளைஞர்கள் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள்.  ஹைதராபாத் நிஜாமின் படையை குமாவுன் மக்களை வைத்து ஆங்கில அரசு நிரப்பியது. பாரத நாட்டிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் ஆங்கில ஆட்சிக்காக உலகின் பல்வேறு நாடுகளிலும், நாடு விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற பல்வேறு போர்களிலும் குமாவுன் பிரிவு மிகப் பெரும் வீர சாகஸங்களைச் செய்து பெரும் புகழை அடைந்தது. மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் சைத்தான் சிங் இருவரும் பரம்வீர் சக்ரா விருது பெற்றார்கள். ஜெனரல் ஸ்ரீநாகேஷ், ஜெனரல் திம்மய்யா, ஜெனரல் ரெய்னா என்ற மூன்று தலைமைத் தளபதிகளை இந்தப் பிரிவு பாரதநாட்டின் ராணுவத்திற்கு அளித்துள்ளது. 

சோம்நாத் சர்மா ஹைதராபாத் படைப்பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணம் அவரது தாய்மாமா லெப்ட்டினென்ட் கிருஷ்ணன்தத் வாசுதேவா. அவர் ஹைதராபாத் படையின் 4/19ஆம் பிரிவில் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் 1942ஆம் ஆண்டு மலேசியாவில் ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடும் போது வீரமரணத்தைத் தழுவியவர் அவர். 

சோம்நாத் சர்மா பணியாற்றிய 8/19 ஹைதராபாத் படைப்பிரிவு ஜப்பானியர்களை மியன்மார் நாட்டில் உள்ள அரக்கான் பகுதியில் எதிர் கொண்டது. தான் எதிர்கொண்ட முதல் போர்க்களத்திலேயே சர்மாவின் வீரம் அவரது மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. தனது உயிரையும் துச்சமாக எண்ணி படுகாயமுற்ற சக வீரர் ஒருவரை தன் தோளில் சுமந்து அவரை பத்திரமாக பாசறைக்கு சர்மா கொண்டு வந்தார். இந்த தீரச்செயல் அவரது உயரதிகாரிகளால் குறிப்பிட்டு ராணுவ தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

காஷ்மீரில் ஊடுருவியவர்களை விரட்டி காஷ்மீரைக் காக்கும் பணியில் முதலில் களம் இறங்கியவர்கள் 1 சீக்கியப் படைப்பிரிவு. லெப்ட்டினென்ட் கார்னெல் ரஞ்சித் ராய் இந்தப் படைக்குத் தலைமை தாங்கினார். 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் நாள் ஸ்ரீநகர் விமனநிலையத்திற்கு வந்தடைந்த இந்தப் படை, பாராமுல்லா நகருக்கு வெளியே பட்டாணியர்களை எதிர்கொண்டது. நடைபெற்ற போரில் ரஞ்சித்ராய் வீரமரணம் அடைந்தார். ஆனால் ஸ்ரீநகரில் பட்டாணியர்கள் ஊடுருவுவது தடுக்கப்பட்டது. போரின் திசையை பாரதநாட்டுக்கு சாதகமாக மாற்ற தனது உயிரை ரஞ்சித்ராய் பலி கொடுத்தார். நாடு அவருக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கி கெளரவம் செய்தது. அக்டோபர் 27ஆம் நாள் பாரத ராணுவத்தின் காலாள்படைதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் படைகள் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் குமாவுன் படைப்பிரிவும்  ஓன்று. அதற்கு சோம்நாத் சர்மா தலைமை தாங்கினார். அப்போது ஹாக்கி விளையாடி கையில் அடிபட்டுக் கொண்டிருந்தார் சோம்நாத். இவரது உயரதிகாரிகள் இவரை ஒய்வெடுக்கும் படி பணித்தனர். எதிரியை விரட்டியபின்  ஓய்வெடுப்பேன் அல்லது அவனோடு போரிட்டு கட்டாய ஓய்வு பெறுவேன். இங்கே உட்கார்ந்திருக்க மாட்டேன் என்று சொல்லி படையோடு கிளம்பினார் சோம்நாத்.

நவம்பர் 3 ஆம் நாள் பட்காம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் இவரது படை வீரர்கள். பாகிஸ்தானிகள் உள்ளே புகுந்துவிடாமல் தடுப்பது அவர்கள் நோக்கம். அங்கே பொதுமக்கள் மட்டும்தான் இருப்பதாகத் தெரிந்தது. நிலைமை கட்டுக்குள் அடங்கி இருந்தது. எதிரி நடமாட்டம் ஏதுமில்லை என்று மூன்று படைப்பிரிவுகளில் இரண்டு கம்பெனிப் பிரிவுகள் ஸ்ரீநகருக்கு மதியம் திரும்பிவிட்டன. சோம்நாத்தின் படைப்பிரிவு மட்டும் காவலுக்கு நின்றது. மூன்று மணிவரை பணி, பிறகு வேறொரு பிரிவு வந்துவிடும் என்று உத்தரவு. ஆனால் உள்ளூர் மக்களோடு கலந்து இருந்த பட்டாணியர்கள்  2.30க்கு உள்ளூர்வாசிகள் வீடுகளுக்குள் இருந்து சுட ஆரம்பித்தனர்.  பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று திருப்பிச் சுட சோம்நாத் உத்தரவு கொடுக்கவில்லை.

சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவு 100 பேர், ஆனால் தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் 700 பேர். இந்நிலையில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தார் சோம்நாத். ஆனால் படைப்பிரிவு இடத்தை விட்டுவிட்டு நகர்ந்தால் ஸ்ரீநகர் போக்குவரத்து வழியும், விமான நிலையமும் எதிரிகளின் வசமாகும். நம் ராணுவம் மேற்கொண்டு படைகளை அனுப்பினாலும் வரவோ இறங்கவோ இடமிருக்காது. ஆகவே தம் படைப்பிரிவுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தவும் அதே நேரம் தற்காப்பாக இருக்கவும் உத்தரவிட்டார். முடிந்தவரை இடத்தை விட்டு அகலாது பாதுகாக்க உறுதிபூண்டனர் நூறுபேர்.

ஆனாலும் ஆட்குறைவும் அடிபட்டு விழும் வீரர்களும் இவர்களது பாதுகாப்பைக் குறைத்தது. சோம்நாத் தானே ஒவ்வொரு போஸ்டுக்கும் ஓடி ஓடி ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்தார். ஒருவர் அடிபட்டு விழுந்தால் மற்றொரு வீரர் அந்த இடத்துக்கு வரும்வரை அங்கே நின்று துப்பாக்கி பிடித்துச் சுட்டார். தலைவர் இப்படிச் செய்து அவருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று அவரை பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சொன்னார்கள் இவரது படைப்பிரிவினர். போர்க்களத்தில் பத்திரமான இடத்தில அமர்ந்து ஆணை பிறப்பிப்பவன் நல்ல தலைவன் அல்ல, அவர் தனது வீரர்களோடு களத்தில் போராடவேண்டும், போர் என்று வந்து விட்டால் நமது பணி எதிரிகளை வெற்றி கொள்வது மட்டும்தான், அதனை மட்டும் இப்போது செய்வோம் என்று கீதையைக் காட்டி தனது வீரர்களை சர்மா உற்சாகமூட்டினார். 

தலைமையகத்துக்கு " எதிரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாங்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருந்து பின்வாங்க மாட்டேன். எங்கள் படைப்பிரிவில் கடைசி வீரனும் கடைசி குண்டும் இருக்கும்வரை போராடுவோம்" என்று தகவல் அனுப்பினார். தலைமையகம் உடனடியாக விமானத்தில் வேறு சில படைப்பிரிவுகளை அனுப்பியது. அவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையம் வந்திறங்கி பட்காம் வருவதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.

சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவில் ஒருவர் கூட எஞ்சவில்லை. ஆனால் 700 பேரில் 200 பேர் சாவும், 250 பேர் காயமும் பட்டதில் பாகிஸ்தானிய கூலிப்படையினர் சற்றே பின்னடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த போது 500 பேர் கொண்ட வலிமையான ராணுவப்படைப் பிரிவு வரவேற்றது. வர இயலாமல் மலையிறங்கி பாதிப்பேர் ஓடினர். மீதிப்பேர் ஒரேடியாக மலையேறினர். ஸ்ரீநகர் போக்குவரத்துச் சாலையும் விமான நிலையமும் காப்பாற்றப்பட்டு நமது கஷ்மீரத்தைக் கைப்பற்ற வந்தவர்கள் தோற்று ஓட முக்கியக் காரணமான சோம்நாத் ஷர்மாவும் அவரது படையில் பணியாற்றிய 20 அதிகாரிகளும் 70 சிப்பாய்களும் வீரமரணம் எய்தினர். பத்துப்பேர் குற்றுயிரோடு மீட்கப்பட்டனர். அவர்கள் சொன்னது மூலமாகவே சோம்நாத் ஷர்மாவின் சாகசங்கள் தெரியவந்தன.

மூன்று நாட்கள் போருக்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. சோம்நாத்தின் சட்டைப்பையில் ஒரு சிறு பகவத் கீதை புத்தகம் இருந்தது. அவரது துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியே உயிர்நீத்திருந்தார். அவர் அனுப்பிய செய்தியும் காட்டிய வீரமும் மேஜர் ஜெனரல் திம்மையாவால் ஆவணப்படுத்தப்பட்டது. தலைமைத்தளபதிக்கும் தெரியப்படுத்தி அந்தப் படைப்பிரிவுக்கு உரிய கௌரவம் அளிக்க முடிவு செய்தனர். 

மரணம் அடையும்போது திருமணம் ஆகாத சோம்நாத் சர்மாவிற்கு இருபத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. பரம்வீர் சக்ரா விருதை முதலில் யாருக்கு அளிப்பது என்ற கேள்வி எழுந்தபோது யோசிக்காமல் தலைமைத் தளபதி கரியாப்பா சொன்ன பெயர் மேஜர் சோம்நாத் ஷர்மா. 

நாட்டைக் காக்க தங்கள் நல்லுயிரை ஈந்த வீரர்களை என்றும் நினைவில் கொள்வோம் 

செவ்வாய், 20 ஜனவரி, 2026

ஜனவரி 20 - அஜித் தோவல் பிறந்தநாள்

 தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களின் பிறந்தநாள் இன்று 1945ஆம் ஆண்டு தற்போதுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த இவரின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. 1967ஆம் ஆண்டு தோவல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

1968ஆம் ஆண்டு அஜித் தோவல் இந்தியக் காவல் பணி தேர்வில் வெற்றிபெற்ற திரு தோவல் கேரள மாநில பணித்துறையில் சேர்ந்தார். 2005ஆம் ஆண்டு இவர் பணி நிறைவைடைந்தார். அப்போது இவர் இந்திய உளவுத்துறையின் தலைவராக இருந்தார்.

இவரது பணிக்காலத்தில் தோவல் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார். பல்லாண்டுகள் பாகிஸ்தானில் தலைமறைவாகப் பணியாற்றி ராணுவத்தில் முக்கிய அதிகாரியாகப் பாராட்டப்பெற்றார்.

2014ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோதி இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார். இந்தக் காலகட்டத்தில் ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய செவிலியர்களை விடுவிப்பது, மியான்மர் நாட்டில் இருந்து செயல்பட்ட வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளின் மீதான தாக்குதல் ஆகியவை இவரது திட்டமிடும் திறமைக்கு சான்றாக அமைகிறது.

இவரது பனிக்காலத்தில் ஆறே ஆண்டுகளில் காவல்துறைப் பதக்கம், காவல்துறைக்கான ஜனாதிபதியின் பதக்கம் மற்றும் அதுவரை ராணுவத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கீர்த்தி சக்ரா பதக்கம் ஆகியவைகள் இவரது சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கங்களால் தாக்குதல் நடத்த  இவரது  திறமைக்கு சான்றாகும்.

திங்கள், 12 ஜனவரி, 2026

ஜனவரி 12 - வீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்ததினம்


கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை                    குறள் 736

தன்னிலையில் கெடாமலும், ஒரு வேளை சூழ்நிலையால் கெட  நேர்ந்தாலும் தனது வளம் குன்றாது இருத்தலும் , மீண்டும் தனது வளத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் வலிமை உடையதுதான் நாடு என்று சொல்லப்பட வேண்டும் என்பது திருவள்ளுவர் காட்டும் நாட்டின் இலக்கியம். அப்படி பாரத நாட்டின் வளம் என்பது அதன் ஆன்ம பலத்தில்தான் உள்ளது. 

பாரதத்தின் ஆன்ம பலம் குன்றிப் போய் விடுமோ என்று அஞ்சும் காலத்தில், தகுதியான ஆசிரியர்கள் தோன்றி நாட்டின் ஆன்ம பலத்தை தூண்டி மக்களை வழிகாட்டிச் செல்வது என்பது பாரதத்தின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வுதான். அப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆசிரியர்தான் ஸ்வாமி விவேகானந்தர். 

பாரத நாட்டின் ஆன்ம பலம் என்பது அதன் ஆன்மீகத்தில் உள்ளது. ஆன்மீகத்தின் கருத்து என்பது உபநிடதங்களில் உள்ள நான்கு மஹாவாக்யங்களில் தெளிவாகிறது. ப்ரக்யானம் ப்ரம்ஹ, அயம் ஆத்மா ப்ரம்ஹ, தத் த்வ மஸி, அஹம் ப்ரம்ஹாஸ்மி என்பனவையே அந்த நான்கு மஹாவாக்யங்கள். அறிவே ப்ரம்ஹம், நானே ப்ரம்ஹம், நீயே அதுவாக ( ப்ரம்ஹமாக ) உள்ளாய், என்பதுதான் அந்த தத்துவம். எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுதான் என் உள்ளிலும் உள்ளது, நானும் ப்ரஹ்மமும் வேறில்லை, இந்த அறிவே ப்ரஹ்மம் எனவே உலக மக்கள் அனைவரும் ஒன்றே, என்னுள் இருக்கும் அதே ப்ரம்ஹம்தான் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் உள்ளது என்பதுதான் பாரத நாடு காட்டும் பாதை. 

ஆனாலும் காலவோட்டத்தில் மக்கள் இதனை மறந்து விடுகிறார்கள். அப்போது நாடு அதன் இயல்பான தன்மையை விட்டு விலகி இருளடைந்த காலத்தில் சென்று விடுகிறது. அந்த இருளை விரட்ட தகுதியான குருமார்கள் தோன்றி நாட்டை நல்வழியில் செலுத்துகின்றனர்.வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி நாட்டை அடிமையாக்கினார். மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அந்நியரை எதிர்த்து முதல் சுதந்திரப் போரை நடத்தினர். ஆனாலும் நவீன ஆயுதங்களை கொண்ட அன்னியர்களை பாரத மக்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்த காலகட்டத்தில்தான் ஸ்வாமி அவதரித்தார். இவரின் குருநாதர் இவருக்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே பிறந்து இவருக்காக காத்துகொண்டு இருந்தார். 

வங்காளத்தில் பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற ஞான சூரியன், உண்மையை அறிந்துகொள்ள வேண்டி பல்வேறு அறிஞர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அவரின் ஐயங்களின் தீர்வு படிப்பறிவே இல்லாத ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தது. "உன்னை நான் பார்ப்பது போல, காளியைப் பார்க்கிறேன்" என்று கூறி நரேந்திரனை அதிரவைத்தார் ராமகிருஷ்ணர். இது அல்லது அது என்ற இரட்டைப்படை சிந்தனையில் வளர்ந்த நரேந்திரனுக்கு உண்மைக்கு ஒரே வழி மட்டுமே இல்லை, எந்த வழியில் சென்றாலும் உண்மையை அறியலாம் என்பதை ராமகிருஷ்ணர் காட்டினார். உருவ வழிபாடோ அல்லது அருவ வழிபாடோ, பக்தி யோகமோ, கர்ம யோகமோ அல்லது ஞான யோகமோ எல்லாமே ஒரே இடத்தைச் சென்று சேர உதவும் பல்வேறு பாதைகள் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டார். ஆங்கிலப் படிப்பு படித்திருந்த நரேந்திரன், பெருமளவில் எதையும் படிக்காத, ஆனால் படிப்பதனால் மட்டுமே புலனாகாத உண்மையை அறிந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணரிடம் சரணடைந்தார். இல்லறத்தில் துறவறம் என்று வாழ்ந்த ராமகிருஷ்ணரின் பாதையில் செல்ல முடிவெடுத்த நரேந்திரர் துறவு பூண்டார். ஸ்வாமி விவேகானந்தர் என்ற யோகபட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 

அனைத்தையும் துறந்து பாரத நாட்டை சுற்றிவரும் பரிவ்ராஜக சன்யாசிகளின் வரிசையில் ஒரு புதிய வரவாக ஸ்வாமிஜி நாடு முழுவதும் சுற்றிவந்தார். பாரத மக்களின் வறுமையும், அறியாமையும் அவரின் இதயத்தை தாக்கியது. அந்த நேரத்தில், மூடநம்பிக்கைகளின் பிடிகளிலும், பரவலான எழ்மை நிலைகளிலும் பாரத தேச மக்கள் கடின வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சோர்வும், அடிமைத்தனமும் பாரத மக்களின் ரத்த்த்தோடு கலந்தவைகளாகவே தோற்றமளித்தன. மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களில் அனேகர் வெளி நாட்டுச் சரக்கு எதுவாக இருந்தாலும் அதைப் பெரிதாக மதித்தார்கள். நாட்டுப் பற்று கொண்ட தலைவர்களைக் காணமுடியவில்லை. 

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று கூறிச் செல்லும் திண்னை வேதாந்தி அல்ல ஸ்வாமிஜி. ஊழையும் உட்பக்கம் காணலாம் என்ற செயல்வீரர் அவர். பாரத தரிசனம் ஸ்வாமிக்கு அவரின் வாழ்வின் குறிக்கோளை உணரவைத்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்திய துணை கண்டத்தில் தென் கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகக் கூறினார். 

அமெரிக்காவில் நடைபெற இருந்த சர்வ சமய மகாநாட்டில் கலந்துகொள்ள அன்றய ராமநாதபுரம் அரசர் சேதுபதி ஸ்வாமியை கேட்டுக் கொண்டார். ஸ்வாமிஜி அமெரிக்காவிற்கு பயணப்பட்டார். சிகாகோ நகரில் " எனது அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று தொடங்கிய அவரது பேச்சு உலக அரங்கில் பாரதத்தின் இடம் எது என்பதை ஐயம்திரிபுர நிலை நாட்டியது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிகெட்ட நாடல்ல பாரதம், அது உலகின் ஆன்மீக குரு என்பதை ஸ்வாமியின் அமெரிக்கப் பயணம் உறுதி செய்தது. 

பாரதத்தின் ஆன்மீக ஞானத்தை உலகமெலாம் எடுத்துச் செல்லவும், பாரத நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கவும் என்று ராமகிருஷ்ணா மிஷன் என்ற நிறுவனத்தையும் ஸ்வாமி உருவாக்கினார். நாடெங்கிலும் பல்வேறு நலப்பணிகளை ராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் இன்று நடத்திக்கொண்டு வருகிறார்கள். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரத மக்களின் உந்து சக்தியாக விளங்கியவர் ஸ்வாமிஜிதான். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஹெட்கேவார், மஹரிஷி அரவிந்தர், ஸ்வாமி ராமதீர்த்தர், ஸ்வாமி சின்மயானந்தா, சி வி ராமன், ஜாம்ஷெட்ஜி டாடா, நானாஜி தேஷ்முக்  என்று பலரின் வாழ்வில் அவர்கள் வாழ்வின் குறிக்கோளை சுட்டிக் காட்டியவராகவும், அவர்களின் இலட்சியத்தை அடைய ஓயாது செயல்பட அவர்களைத் தூண்டியவராகவும் ஸ்வாமி விவேகானந்தர் விளங்குகிறார். 

எழுமின் விழுமின், எடுத்த செயல் நிறைவேறும் வரை துஞ்சாமல் உழைமின் என்ற உபநிடத வாக்கியத்தின் இலக்கணமாக வாழ்ந்து இன்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கும் ஸ்வாமி விவேகானந்தரின் பாத கமலங்களை வணங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு நமது வாழ்வை அர்பணிப்போம் என்று உறுதி கூறுவோம். 

செவ்வாய், 6 ஜனவரி, 2026

ஜனவரி 6 - கௌரவ கேப்டன் பானாசிங் பிறந்ததினம்

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வரும் அந்த முதியவர் வருடம் தோறும் ஜனவரி மாதம் தனது ராணுவ உடுப்புகளைகளையும் தான் பெற்ற விருதுகளையும் நெஞ்சில் தரித்துக் கொண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவருக்கு ராணுவ முறைப்படி வணக்கம் வைத்து மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்புவது வழக்கம். 

அந்த எளிய மனிதரின் பெயர் பானாசிங். வீர சாகசச் செயலுக்காக பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர் அவர். அந்த வீரரின் பிறந்ததினம் இன்று.  பானாசிங் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர். அவரது குடும்பம் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தது. 1949ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்த பானாசிங், தனது இருபதாம் வயதில் பாரத ராணுவத்தில் காஷ்மீர் படைப்பிரிவில்  தன்னை இணைத்துக்கொண்டார். இமயமலைப் பகுதிகளைக் காப்பாற்ற நடைபெறும் போர்களில் பங்குகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி இவருக்கு அளிக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் தஜகிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக பாரதநாட்டைக் கடந்து சீனா வரை ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் அளவிலான  மலைத்தொடர் காரகோரம் மலைத்தொடர். துருவப்பகுதிகளுக்கு வெளியே பனிப்பாறைகள் அமைந்துள்ள இடம் இது. உடலை உருகவைக்கும் குளிர் பிரதேசமான இந்த மலைத்தொடரில் கடல்மட்டத்தில் இருந்து 18.875 அடி உயரத்தில் அமைந்துள்ளது  சியாச்சின் பகுதி. 

சியாச்சின் என்பது ஒரு தனி உலகம். அங்கே செல்லாதவர்களுக்கு அதன் அழகையோ  அல்லது அதனை காத்து நிற்கும் வீரர்கள் படும் துன்பங்களையோ புரிந்துகொள்ள முடியாது. உலகத்தின் கூரையாக பார்க்கும் இடங்களில் எல்லாம்  பனிப்பாறைகளும் பனிக்கட்டிகளும் நிறைந்திருக்கும் இடம் அது. கொஞ்சும் அழகோடு கவனமாக இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கும் அபாயகரமான இடம் அது.  பூஜ்யத்திற்கு கீழே நாற்பது  டிகிரி செல்சியஸ் குளிரும், அதோடு நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் உறைய வைக்கும் குளிர் காற்றும் வீசும் இடம் இது. 

இங்கே போரில் இறந்தவர்களை விட உறைய வைக்கும்  குளிரால், கடினமான காலநிலையால் மலைச்சரிவால் பனிப்பொழிவால்  என்று இயற்கைப் பேரிடர்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகின் மிக உயரமான இந்தப் பகுதியைக் கைப்பற்றவும், காப்பாற்றித் தக்கவைக்கவும் பல பாரத வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இடமும் இதுதான். உலகின் மிக உயரமான மற்றும் கடினமான போர்க்களம் இது. 

1987ஆம் ஆண்டு நடைபெற்ற  ஊடுருவல் மூலம் பாகிஸ்தான் சால்டோரா மலைத்தொடரில் பிலாபோண்ட் கணவாய் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கியது.  அதற்கு காயித் இ ஆசம் தளம் என்று பெயர் சூட்டியது. காயித் இ ஆசம் என்ற பெயர் பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவின் பெயர். இங்கிருந்து பாகிஸ்தான் படைகளால் பாரதத்தின் பாதுகாப்பு நிலையங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்கள் வருவதையும் கண்காணிக்க முடியும். மலை உச்சியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பாரத ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. தரைமட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி உள்ளது. 457 மீட்டர் உயரமுள்ள பனிப்பாறைகள் இதனைச் சுற்றி உள்ளது. ஏறக்குறைய செங்குத்தான பாறைகள் இவை. மேலே உள்ள எதிரியை கண்களில் படமால் இங்கே வந்து சேர்வது என்பது நடக்கவே முடியாத ஓன்று. எதிரிப் படைகளை அங்கே இருந்து அகற்றி, அந்தத் தளத்தைக் கைப்பற்றாமல் விட்டால் காஷ்மீரின் பல இடங்களை பாரதம் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தாக்குதல் என்பது அநேகமாக மரணத்தைத் எதிர்கொள்வதாதான் இருக்கும். ஆனால் இந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது.

 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் காலாள்படைப் பிரிவைச் சார்ந்த செகண்ட் லெப்ட்டினென்ட் ராஜிவ் பாண்டே தலைமையில் எட்டு வீரர்கள் கொண்ட படை பனிமலையில் எறத் தொடங்கியது. ஆபரேஷன் மேகதூத் என்று இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது. மலையுச்சியை அடைவதற்கு முப்பது மீட்டரே இருக்கும்போது அவர்களை பாகிஸ்தான் படை கண்டுகொண்டு துப்பாக்கியால் சுடச் தொடங்கியது. அதில் ராஜிவ் பண்டேயும் ஐந்து வீரர்களும் வீரமரணம் அடைந்தார்கள். ராஜிவ் பாண்டேவுக்கு வீர் சக்ரா விருது வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. 

காயித் இ ஆசாம் தளத்தைக் கைப்பற்றவும் ராஜிவ் பாண்டே மற்றும் அவரது அணியின் வீர மரணத்திற்குப் பழி வாங்கவும் அடுத்த தாக்குதலை நடத்த பாரத ராணுவம் தயாரானது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ராஜிவ் என்று பெயர் சூட்டப்பட்டது. மேஜர் வரீன்தர்சிங் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். கேப்டன் அணில்சர்மா உள்ளிட்ட அறுபத்தி இரண்டு வீரர்கள் இந்தத் தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

இரண்டு முறை முயற்சி செய்தும் அவை வெற்றியாடாததால் ஒரு இறுதித் தாக்குதலை நடத்த வரீன்தர்சிங் முடிவு செய்தார். எட்டு வீரர்களது வரீன்தர்சிங் ஒரு பக்கத்தில் இருந்தும் ஐந்து பேர் கொண்ட படையோடு மறுபக்கமாக பானாசிங் தலைமையில் மற்றொரு படையும் மலை ஏறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

நீண்ட கடினமான பாதையின் வழியாக மலையுச்சியை சென்றடைய பானாசிங் முடிவு செய்தார். இருளைப் பயன்படுத்தி செங்குத்தான மலையை பானாசிங் படை சென்றடைந்தது. பதுங்குகுழியில் இருந்த பாகிஸ்தான் ராணுவவீரர்கள்மீது கையெறிகுண்டை எறிந்து  அதோடு அந்தக் குழியின் கதவையும் பூட்டி அவர்களை பானாசிங் அழித்தொழித்தார். மீதி இருந்த பாகிஸ்தான் வீரர்களோடு நேருக்குநேரான சண்டையில் மீதம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். இமயத்தின் உச்சியில் மீண்டும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. 

காயித் இ ஆசம் முனைக்கு பானாசிங் முனை என்று பெயரிட்டு அந்த வீரனை பாரத ராணுவம் மரியாதை செலுத்தியது. மிகவும் கடினமான சூழ்நிலையில் தலைமைப் பண்பையும் மகத்தான வீரத்தையும் வெளிப்படுத்தியதற்காக பானாசிங்கிற்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் ராஜீவில் பங்குகொண்ட வீரர்களுக்கு  ஒரு பரம்வீர் சக்ரா, ஒரு மஹாவீர் சக்ரா, ஏழு வீர் சக்ரா, ஒரு சேனா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 

முப்பதாண்டு ராணுவ சேவைக்குப் பிறகு பானாசிங் 2000ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கௌரவ கேப்டன் பதவி கொடுத்து ராணுவம் மரியாதை செய்தது. பானாசிங்கின் மகன் ராஜிந்தர்சிங்கும் 2008ஆம் ஆண்டு முதல் பாரத ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.