வியாழன், 17 ஜூலை, 2025

ஜூன் 17 - வீர வாஞ்சியின் பலிதான நாள்

ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து ஸ்வதேசி கப்பல் கம்பெனியை நடத்தி, தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளிகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் வ உ சி அவர்கள். அவரையும், சுப்ரமணிய சிவாவையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது ஆங்கில அரசு.

வஉசி கைதானபின்பு அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் ஆக்க முழு மூச்சாய் செயல்பட்டவன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். அந்தக் கொடுமையை கண்டு சகிக்காமல் நீலகண்ட ப்ரம்மச்சாரியின் தோழர்கள் ஆஷை கொலை செய்ய முடிவு செய்கின்றனர். அதன் படி ஆஷை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றவர் வாஞ்சி நாதன். அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான் இது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நகர்ப்புற நஸ்சல் கூட்டங்களும், இந்தியாவை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் சில வெளிநாட்டு புல்லுருவிகளும் புதிய கதை ஒன்றை உருவாக்குகின்றனர். இதற்கு பின்புலமாக நிற்பது பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி நிர்வாகம்.

இவர்கள் எழுதும் கதையின் படி ஆஷ் குற்றாலத்து அருவிகளில் எல்லா ஜாதிகளும் குளிக்கலாம் என்று ஆணை பிறப்பித்ததாகவும், பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்த பட்டியல் இனப் பெண்ணை செங்கோட்டை நகர அக்கிரகாரத்தில் வழியே அழைத்துச் சென்றதாகவும் அதனால் கோபமடைந்த பிராமணர்கள் ஆஷை கொன்றுவிட்டார்கள் என்றும் ஆஷ் எதோ ஒரு புரட்சி நாயகன் என்றும் சித்தரித்து வருகிறார்கள்.

முதலில் திருநெல்வேலி கலெக்டர் அதிகாரம் செங்கோட்டை நகரில் செல்லாது, அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த பகுதி, அது போக செங்கோட்டை அக்கிரகாரத்தின் வழியே சென்றால் ஆற்றங்கரைக்குத்தான் செல்ல முடியுமே அன்றி, மருத்துவமனைக்கு அந்த வழி இட்டுச் செல்லாது.

ஆஷ் கொலை நடந்தது 1911ஆம் ஆண்டு. அதன் பிறகு 1930களில் காந்தி திருநெல்வேலிக்கு வருகிறார். நெல்லையில் சாவடி பிள்ளை என்பவரின் வீட்டில் தங்குகிறார். அப்போது கூட எல்லா சமுதாய மக்களும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவரும் குற்றால அருவிகளில் குளிக்க மறுத்து விடுகிறார்.

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில அரசின் ஏகபோக பிரதிநிதியான மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை இல்லாமல் ஆக்கும் அளவுக்கா திருநெல்வேலியில் உள்ள மக்கள் அதிகாரத்தோடு இருந்தனர் ? மிக சமீப காலத்தில் நடந்த நிகழ்வையே திரித்து கூறும் இவர்கள், இன்னும் எந்த எந்த பொய்களை நம்மீது சுமத்தி உள்ளார்கள் என்பதை கண்டறிந்து உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.

கால் வாய்த்த இடங்களில் எல்லாம் பார்த்த மக்களை கொன்று, அவர்களை அடிமைகளாக மாற்றி, அடிமை வியாபாரத்தை உலகெங்கும் பரப்பி, அவர்களின்மதங்களை, கலாச்சாரத்தை அழித்து வெறியாட்டம் ஆடிய கிருத்துவத்தின் கோர முகத்தை வெளிக்கொண்டு வருவது நமது கடமையாக இருக்க வேண்டும். 

ஜூலை 17 - ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ஐ ஜி படேல் நினைவுநாள்


இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் நான்காவது கவர்னர் இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலின் நினைவுதினம் இன்று. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த திரு படேல் 1924ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் தனது இளங்கலை பட்டத்தை மும்பை பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். வெளிநாடு சென்று படிக்க, அன்றைய பரோடா மன்னர் இவருக்கு பண உதவி செய்தார். புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய திரு படேல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் அதன் பின்னர் அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு International Monetary Fund தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு படேலை அழைத்துக் கொண்டது. ஐந்தாண்டுகள் அந்தப் பணியில் இருந்த திரு படேல், அதன் பிறகு இந்தியா திரும்பி இந்திய அரசின் நிதிதுறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மீண்டும் 1972ஆம் ஆண்டு ஐநா சபையின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் பணி செய்துவிட்டு, 1977ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவர் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அன்றய ஜனதா அரசு உயர்மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் ( 1000, 5000, 10,000 ) செல்லாது என்று அறிவித்தது.

தனது நீண்ட பணிக்காலத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தேசியமயமாக்கம், தொழில் தொடங்கவும், விரிவு படுத்தவும் மிக அதிகமான அரசின் கட்டுப்பாடு, 100% அந்நிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு படேல் சாட்சியாக இருந்தார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற படேலை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரி ( London School of Economics ) தனது இயக்குனர் குழுவில் ஒருவராக நியமித்தது. இந்த பதவிக்கு தேர்வான முதல் இந்தியர் இவர்தான்.

1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற நேரத்தில், படேலைதான் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும்படி கோரினார். ஆனால் எதனாலோ படேல் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

பொருளாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக திரு படேல் அவர்களுக்கு பாரத அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் படேல் தனது எண்பதாவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார்.