"42.34 மீட்டர் அலைவரிசையில் பாரத நாட்டின் ஒரு பகுதியில் இருந்து காங்கிரஸ் வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு இது" - 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் அது. பாரத நாட்டின் வானொலிகளில் இந்தக் குரல் திடீர் என்று கேட்டது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாக் குரல்களையும் ஒடுக்கி விட்டோம் என்று இறுமார்ந்திருந்த ஆங்கில ஆட்சிக்கு ஒரு நேரடி சவாலை அந்தக் குரல் எழுப்பியது.
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நகரில் கூடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாட்டில் " வெள்ளையனே வெளியேறு" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஆங்கில அரசு எல்லாத் தலைவர்களையும் கைது செய்து வெவ்வேறு சிறைகளில் அடைத்தது. நாட்டு மக்களுக்கு விடுதலைப் போராட்டத்தில் செய் அல்லது செத்து மடி என்ற அறிவுரை வழங்கப்பட்டது. ஆங்கில அரசோடு எந்த வகையிலும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும், கல்வி நிலையங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாகாணங்களில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கம் அனைத்தும் ராஜினாமா செய்தன.
தலைவர்கள் இல்லாத நிலையில் மாநாட்டுப் பந்தலில் காங்கிரஸ் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக போராட்டத்தை தொடங்கி வைத்து விட்டு அருணா ஆசப் அலி தலைமறைவானார். போராட்டத்தை தொடர்ந்து நடத்தவும், போராட்டக்காரர்களை ஊக்குவிக்கவும், போராட்டம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலி நிலைய சேவையை உருவாக்கி நடத்தியவர்தான் போராளி உஷா மேத்தா.
தொடர்ச்சியான அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பித்து பல்வேறு இடங்களில் இருந்து இந்த வானொலி தனது ஒளிபரப்பை நடத்தி வந்தது. ராம் மனோகர் லோஹியா, ஜெயப்ரகாஷ் நாராயணன், அச்சுத பட்வர்தன் முதலியோர் உஷாவிற்கு துணையாக இருந்தார்கள். இறுதியில் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் நாள் உஷா கைது செய்யப்பட்டார். எல்லா ஒலிபரப்பு கருவிகளும் அரசால் கைப்பற்றப்பட்டன.
உஷா மேத்தா 1920ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் பிறந்தவர். இவரது தந்தை ஆங்கில அரசில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் பகுதியில் சரஸ் என்ற கிராமமே உஷாவின் பிறந்த இடமாகும். உஷாவின் ஐந்தாவது வயதில் அந்தப் பகுதிக்கு காந்தி வருகை தருகிறார். அங்கே காந்தி நடத்திய முகாமில் கலந்து கொண்டு உஷா ராட்டையில் துணி நெய்யக் கற்றுக்கொள்கிறார். சைமன் கமிஷனை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் உஷா கலந்து கொள்கிறார்.
அரசு அதிகாரியான உஷாவின் தந்தைக்கு உஷாவின் நிலைப்பாடு பிடிக்கவில்லை. உஷாவின் தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் குடும்பம் மும்பை நகருக்குக் குடியேறுகிறது. இங்கே உஷாவிற்கு பல்வேறு அரசியல்வாதிகளோடு நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. மிகச் சிறு வயதிலேயே உஷாவின் மனதில் காந்தியின் தாக்கம் ஏற்பட்டதால், வாழ்க்கை முழுவதும் கதர் துணியை மட்டுமே அணிவதாகவும், திருமண உறவில் ஈடுபடாமல் இருக்கப் போவதாகவும் உஷா உறுதி எடுத்துக் கொள்கிறார். மும்பை நகரில் வில்சன் கல்லூரியில் தத்துவத் துறையில் இளம்கலை பட்டம் பெற்ற பிறகு உஷா சட்டம் படிக்கத் தொடங்குகிறார். ஆனால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தால் அவர் சட்டக் கல்லூரியில் இருந்து விலகுகிறார்.
1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் சரியான தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால்தான் வெற்றி அடையவில்லை என்று நம்பிய உஷா வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அப்படி முடிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ் வானொலி நிலையத்தை தலைமறைவாக நடத்தி வந்தார். அரசின் தணிக்கை முறை கடுமையாக இருந்த காலம் அது. பத்திரிகைகள் மூலமாக எந்த விதமான தகவல்களும் நாட்டு மக்களுக்கு சென்று சேரவில்லை. அந்தக் குறையை உஷா நடத்திவந்த காங்கிரஸ் வானொலி தீர்த்து வைத்தது. பதிவு செய்யப்பட்ட பல்வேறு தலைவர்களின் சொற்பொழிவுகள், போராட்டம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இதில் ஒலிபரப்பானது
கைது செய்யப்பட்ட உஷா ஆறுமாதங்கள் தன்மைசிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வானொலியை தான் மட்டுமே நடத்தியதாகவும் இதில் வேறு எவருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்று உஷா கூறினார். அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உஷாவிற்கு நான்காண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு அவர் பூனா நகரில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பாம்பாய் ராஜதானியின் தற்காலிக உள்துறை அமைச்சர் திரு மொரார்ஜி தேசாய் உஷாவை விடுதலை செய்து ஆணை பிறப்பித்தார்.
நாடு விடுதலை அடைந்த பிறகு தனது படிப்பை மீண்டும் தொடர்ந்த உஷா மேத்தா, காந்திய சித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கிய உஷா மேத்தா வரலாறு மற்றும் குடிமையியல் துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் உஷா பல்வேறு கையேடுகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார்.
காந்தி அமைதி இயக்கம் மற்றும் பாரதிய வித்யாபவன் ஆகிய அமைப்புகளோடு இணைத்து உஷா பல்வேறு சேவைகளை முன்னெடுத்தார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உஷா நோய் வாய்ப்பட்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் காலமானார்.
உஷா மேத்தாவின் சேவைகளை அங்கீகாரம் செய்யும்விதமாக பாரத அரசு 1998ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி சிறப்பித்தது.
உஷா மேத்தா போன்று பல்வேறு தியாகிகளின் வீரச் செயல்களால் கிடைக்கப்பெற்றது நமது சுதந்திரம். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை என்று நினைவில் வைப்போம்.