ஆர் எஸ் எஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர் எஸ் எஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 செப்டம்பர், 2025

செப்டம்பர் 11 - சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி பிறந்தநாள்

அந்த கனவின் விதை கருவானது ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால். எல்லா வளமும் எல்லா திறமையும் இருந்தும் ஏன் பாரதம் மீண்டும் மீண்டும் அந்நியர் கைகளில் சிக்குகிறது ? இந்த நிலை இன்னும் ஓர் முறை நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகப் பிறந்தது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம். பெரும் சிந்தனாவாதிகளும், செயல் வீரர்களும் தங்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தேசிய புனர்நிர்மாண சேவையில் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். சிறு விதை இன்று ஆலமரமாக வளர்ந்து நாட்டையும் பெருவாரியான மாநிலங்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துள்ளது. பெரும் வெற்றி இன்னும் மிகப் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சவால்களையும் முன்வைக்கிறது. அப்படியான காலத்தில் சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.



1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகரில் மதுகர் ராவ் பகவத் - மாலினி தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் மோகன் பகவத். மதுகர் ராவ் பகவத் சங்கத்தின் ஆரம்பகால பிரச்சாரக்களில் ஒருவர். குஜராத் மாநிலப் பொறுப்பாளராக அவர் பணியாற்றினார். தாயார் மாலினி தேவி ராஷ்டிரிய சேவிகா சமிதியின் உறுப்பினர்.

தனது ஆரம்ப கல்வியை லோகமானிய திலக் வித்யாலயாவில் முடித்த மோகன் பகவத், கால்நடை மருத்துவத்வ பட்டத்தை நாக்பூர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பெற்றவர். முதுகலை படிப்பில் சேர்ந்த பகவத் அதனை பாதியில் நிறுத்தி விட்டு சங்கத்தின் முழுநேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1975ஆம் ஆண்டு அவர் சங்கத்தில் இணைந்த சிறிது காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா பிரகடனம் செய்தார். சங்கம் தடை செய்யப்பட்டது. மோகன்ஜி தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தை சங்கம் முன்னெடுத்தது. அதில் மோகன்ஜி பெரும் பங்காற்றினார்.

படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் மோகன்ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத ஷைரிக் பிரமுக் மற்றும் அகில பாரத பிரச்சாரக் பிரமுக் ஆகிய பொறுப்புகளை மோகன்ஜி திறம்பட நிர்வகித்தார்.

2000ஆம் ஆண்டு அன்றய சர்சங்கசாலக் ராஜேந்திர சிங்ஜி  மற்றும் சர்காரியவாக் சேஷாத்ரிஜி ஆகியோர் தங்கள் உடல்நிலை காரணமாக விலகிக்கொள்ள சுதர்ஷன்ஜி சர்சங்கசாலக்காகவும் மோகன் பகவத்ஜி சர்காரியாவாக்காகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் மோகன் பகவத்ஜி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக நியமிக்கப்பட்டார்.

மோகன்ஜியின் வழிகாட்டுதலில் பரிவார் அமைப்புகள் புதிய உற்சாகத்தோடு செயல்படத் தொடங்கின. தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் புது உத்வேகம் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. 2025 ஆம் ஆண்டு தனது நூறாவது ஆண்டைக் கொண்டாட இருக்கும் சங்கத்தை அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்குமாறு மோகன் பகவத்ஜி வழி நடத்திக்கொண்டு உள்ளார்.

மானனீய சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 23 ஜூலை, 2025

ஜூலை 22 - தேவேந்திர பட்னவிஸ் பிறந்தநாள்



பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் இன்றய மஹாராஷ்டிரா முதல்வருமான திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பாட்னவிஸ் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிக இளைய வயதில் முதல்வராகத் தேர்வானவர்களில் இரண்டாமவர். இவர் தனது நாற்பத்தி நான்காவது வயதில் முதல்வர் பதவியை அடைந்தார். திரு சரத்பவார் தனது முப்பத்தி எட்டாவது வயதில் மஹாராஷ்டிரா முதல்வரானார்.

பட்னவிஸ் 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தை கங்காதர் பட்னவிஸ் பாரதிய ஜனசங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். அவர் மஹாராஷ்டிரா மாநிலம் மேலவையின் உறுப்பினராகப் பணியாற்றியவர். கங்காதர் பட்னவிஸ் நெருக்கடி நிலையின் போது சிறை தண்டனை அனுபவித்தவர்.

தனது பள்ளிக்கல்வியை நாக்பூர் நகரின் சரஸ்வதி வித்யாலயாவில் முடித்த பட்னவிஸ், தந்து சட்டப் படிப்பை நாக்பூர் அரசு சட்டக் கல்லூரியில் 19992ஆம் ஆண்டு முடித்தார். வணிக மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் முதுகலை பட்டய படிப்பையும் இவர் படித்துள்ளார்.

படிக்கும் காலத்திலேயே அகில பாரதிய விதார்த்தி பரீக்ஷித் அமைப்பில் இணைத்துக் கொண்ட பட்னவிஸ் பாரதிய ஜனதா கட்சியிலும், நேரடி அரசியலிலும் பல்வேறு பதவிகளை பெற்றுள்ளார். 1992 மற்றும் 1997 ஆகிய இரண்டு முறை பட்னவிஸ் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூர் மாநகராட்சியின் மிக இளைய மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

1999 மற்றும் 2004ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாக்பூர் மேற்கு தொகுதியில் இருந்தும் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் இருந்தும் பட்னவிஸ் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்னவிஸ் அவர்களின் மிகப்பெரும் சாதனை என்பது வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதிகளை அதில் இருந்து மீட்டெடுத்ததுதான். 2015ஆம் ஆண்டு அந்தப் பகுதியை பெரும் குடிநீர் தட்டுப்பாடு தாக்கியது. 3,600 கிராமங்களுக்கு 4,640 டேங்கர் லாரிகளில் அரசு குடிநீர் வழங்க வேண்டி இருந்தது. ஆனால் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தியத்தின் மூலம் 2017ஆம் ஆண்டுக்குள்ளாக 886 கிராமங்களுக்கு 669 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் அளவிற்கு பட்னவிஸ் அரசு நிலைமையை சரிசெய்து விட்டது.

இந்தியாவின் வணிக தலைநகரமாகவும், பொருளாதாரரீதியில் மிக முன்னேறிய மாநிலமாகவும் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு உள்கட்டுமானப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கிறது.

அரசியலில் ஐம்பது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நெடுங்காலம் உடல்நலத்தோடு வாழ்ந்து திரு பட்னவிஸ் பாரத நாட்டுக்கு தனது சேவையை ஆற்றவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது. 

வியாழன், 10 ஜூலை, 2025

ஜூலை 10 - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் -


பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தற்போதய மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ்நாத்சிங். இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தை கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். தனது 13ஆம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ்நாத், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மிர்சாபூர் நகரின் செயலாளராகவும் இருந்தார்.  அடுத்த ஆண்டே மாவட்ட தலைவராகவும் அதன்பின்னர் 1977ஆம் ஆண்டு உத்திரபிரதேச  சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பாஜகவின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவராக 1984ஆம் ஆண்டிலும், பின்னர் தேசிய செயலாளராக 1986ஆம் ஆண்டிலும், இளைஞர் அணி தேசிய தலைவராக 1988ஆம் ஆண்டிலும் தேர்வானார்.

1988ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மேல்சபைக்கு தேர்வான ராஜ்நாத் 1991ஆம் மாநிலத்தின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட ராஜ்நாத், பாஜகவின் கொறடாவாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு பாஜகவின் உத்திரப்பிரதேச மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசின் தரைவழி போக்குவரத்துதுறையின் அமைச்சராக ஏறத்தாழ ஓராண்டு காலம் பணியாற்றினார். வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கர சாலை அமைக்கும் திட்டத்தில் ராஜ்நாத்தின் பங்கு மகத்தானது.
2000 - 2002ஆம் ஆண்டுகளில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் பாஜகவின் தேசிய செயலாளராகவும் இருந்தார்.

மீண்டும் 2002ஆம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும், பின்னர் உணவு பதப்படுத்தும் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
2005 - 2009 காலகட்டத்திலும் அதன் பின்னர் 2013 - 2014 காலகட்டத்திலும் பாஜகவின் தேசிய தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக மத்திய அரசை அமைத்தது.

மோதி தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சராகவும், தற்போது பாதுகாப்புதுறை அமைச்சராகவும் ராஜ்நாத்சிங் பணியாற்றிவருகிறார்.

விஜயலக்ஷ்மி பண்டிட், ஷீலா கௌல், H N பகுகுணா அதன் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஐந்து முறை வாஜ்பாய் ஆகிய நட்சத்திர வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய லக்னோ தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 ஆண்டு தேர்தல்களில் ராஜ்நாத் வெற்றி பெற்று உள்ளார்.

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக தேசத்திற்காக உழைத்து வரும் திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 9 ஜூலை, 2025

ஜூலை 9 - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள்


நமது தேசம் அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த தேசத்தின் மாணவர்களுக்கு நமது பெருமையும் புகழும் மறந்தே போய்விட்டன. மீண்டும் இந்த பாரதம் தேசம் உலகின் குருவாக விளங்க வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் தேச பக்தியுடனும் தேச ஒற்றுமையுடனும் விளங்க வேண்டும். அதற்கான ஏற்பாடு அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படவில்லை.1948 -ம் ஆண்டு முதல் மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்க்க தேவையான முயற்சிகளை சில தலைவர்கள் முன்னெடுத்தனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1949 ஜூலை 9இல் தான் முறைப்படி பதிவு செய்யப்பட்டது . அந்த ஆண்டே நாடு முழுவதும் இந்த இயக்கம் பரவியது.

1948 -ம் ஆண்டு அக்டோபர் முதலே தமிழகத்தில் இந்த இயக்கத்தின் பணிகள் துவக்கப்பட்டது. இன்று இந்த இயக்கம் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமாக திகழ்கிறது. அறிவு , ஒழுக்கம், ஒற்றுமை - என்ற தாரக மந்திரம் ஏபிவிபி-ன் கொள்கை. சுவாமி விவேகானந்தர் கூறிய ஆன்மிகம் மற்றும் தேசபக்தி சிந்தனையுடன் செயல்பட்டு வரும் இயக்கம் ஏபிவிபி. 3 மில்லியன் எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரே பெரிய மாணவர் இயக்கம் ஏ பி வி பி தான். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 9-ஆம் நாள் ஏபிவிபி நிறுவப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த இயக்கம் ஆரம்பித்து 71 வருடங்கள் ஆகிவிட்டன. "மாணவர் சக்தியே தேசிய சக்தி" என்னும் பிரதான முழக்கத்தோடு கடந்த 71 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறது ஏபிவிபி. தேசிய புனரமைப்பு மற்றும் தேசத்தை கட்டமைத்தல் இவைதான் ஏ பி வி பி-யின் லட்சியம். இந்த இயக்கத்தின் ஓங்கி ஒலிக்கும் சுலோகம் "இன்றைய மாணவர்கள் இன்றைய குடிமகன்கள்". இதனடிப்படையில் உயர்கல்வித் துறையில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு தேவையான தேசப்பற்றுள்ள இளைஞர் சக்தியை உருவாக்கி வருகிறது. தேச பக்தி என்பது வெறும் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த மாணவர் இயக்கம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏபிவிபி-ன் களம் கல்லூரி வளாகங்கள் தான். இதன் செயல்பாட்டாளர்கள் மாணவர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள்.

பிரிவினைவாத சக்திகள் இந்த தேசத்துக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் அங்கு ஏபிவிபி வலிமையோடு எதிர்த்துப் போராடி வந்துள்ளது. "இந்த தேசம் ஒன்றுபட்ட தேசம்" "இந்த தேசம் நம் அனைவருக்கும் தாய்" -இத்தகைய உன்னதமான லட்சியத்தோடு தேசிய உணர்வை மாணவர்களின் மனதில் விதைத்து வருகிறது. இதன் மூலம் இந்த பாரத தேசத்தை நேசிக்கின்ற போற்றுகின்ற மதிக்கின்ற நல்ல குடிமகன்களை ஏபிவிபி உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு ஏபிவிபி மாணவனும் இந்த தேசத்திற்காக தியாகம் செய்ய தயாராக இருப்பான். தனது வாழ்நாளில் தனது நேரத்தை தேச வளர்ச்சிக்காக ஒதுக்கித்தர வேண்டும் தியாகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உணர்வு ஒவ்வொரு ஏபிவிபி மாணவன் இடத்திலும் காணமுடியும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக ஏபிவிபி பரிந்து பேசம் மாணவர் நலனுக்காக போராடவும் செய்யும்.

ஏபிவிபி எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. இது ஒரு தன்னாட்சி இயக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட இது ஒரு கல்வி குடும்பம். தொழில்நுட்ப மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்வி மாணவர்கள் , ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் போன்ற துறவாரியான மாணவர்களை ஒருங்கிணைக்க ஏபிவிபி-ல் பல்வேறு தளங்கள் உள்ளன. IIT போன்ற கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக THINKINDIA, சட்ட கல்லூரி மாணவர்களுக்காக FOTLAW, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக MEDIVISION, ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்காக JINGASA,தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்காக SETINDIA போன்ற பேரவைகள் (FORUM) மூலம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் தனது சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்வை நேரடியாக உணர வேண்டும் என்ற நோக்கத்தில் SOCIAL INTERNSHIP என்ற பெயரில் கிராம மற்றும் ஏழைமக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களின் வாழ்வை பதிவு செய்யும் பயிற்சிகள் கோடை விடுமுறையில் நடத்த படுகின்றன. மாணவர்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிக் கொண்டு வந்து நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் TECHNICAL EXPO நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தேசம் முழுக்க ஏபிவிபி நடத்தி வருகிறது. இதுவரை எண்ணற்ற சமுதாய தலைவர்களை, தேசிய அரசியல் தலைவர்களை ஏபிவிபி நாட்டிற்கு தந்துள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெகுஜன இயக்கமாக ஏபிவிபி திகழ்கிறது என்றல் மிகை அல்ல.

தேசத்தை நேசிக்கும் மாணவர் படையை உருவாக்க ஏபிவிபி இயக்கத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம். தேசிய சக்தியை வலுப்படுத்துவோம்.

ஜெய் ஹிந்த் 

ஞாயிறு, 6 ஜூலை, 2025

ஜூலை 6. - டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜீ பிறந்தநாள்

கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், வழக்கறிஞரும், இன்றய பாஜகவின் முன்னோடியான பாரதிய  ஜனசங்கத்தை நிறுவியவருமான திரு சியாமா பிரசாத் முகர்ஜீயின் பிறந்ததினம் இன்று.

வங்காளத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் திரு அஷுதோஷ் முகேர்ஜீ. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர், வழக்கறிஞர், கொல்கத்தா நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இப்படி புகழ்வாய்ந்த அஷுதோஷ் முகர்ஜீயின் மகனாக 1901  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் பிறந்தவர்தான் டாக்டர் சியாம பிரசாத் முகேர்ஜீ.

இயல்பிலேயே படிப்பில் சூடிப்பாக இருந்த சியாம பிரசாத் வங்காள மொழியில் முதுகலைப் பட்டமும், சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார். 1934ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இன்று வரை மிக இளையவயதில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே அறிஞராக சியாம பிரசாத் முகர்ஜீயே ஆவார். நான்கு வருடங்கள் அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். இவரது காலத்தில்தான் முதல்முறையாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் வங்காள மொழியில் உரையாற்றினார். அந்த விருந்தினர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர். முகேர்ஜியின் சேவையைப் பாராட்டி கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு 1938ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

1929ஆம் ஆண்டு தனது 29ஆவது வயதில் முகர்ஜீ வங்காள சட்ட மேல்சபைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே சட்டமன்றங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் தீர்மானிக்க, முகர்ஜியும் பதவி விலகினார். உடனடியாக சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 1937ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1941 - 42 ஆம் ஆண்டுகளில் வங்காள மாநிலத்தின் நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.

1939ஆம் ஆண்டு ஹிந்து மஹாசபையில் தன்னை இணைத்துக் கொண்ட முகர்ஜி அந்த ஆண்டே ஹிந்து மகாசபையின் தாற்காலிகத் தலைவராகவும், அடுத்த ஆண்டு செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுதந்திரத்தை அடுத்து ஜவாஹர்லால் நேரு தலைமையில் உருவான அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் உடன் நேரு 1950ஆம் ஆண்டு செய்து கொண்ட தில்லி ஒப்பந்தத்தை ஏற்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் கீழே நிம்மதியாக வாழமுடியாது, எனவே பாரதம் - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள மக்களை மதத்தின் படி மாற்றிக்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சியாம பிரசாத் முகர்ஜி கோரினார். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் படிக்காது, கனவுலகில் வாழ்ந்த நேரு அதனை நிராகரித்தார். ஆனால் முகர்ஜி கூறியது தான் நடந்தது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் அங்கே வாழ்வுரிமை இல்லாமல்தான் இன்றும் இருக்கிறார்கள். அப்படித் துன்பப்படும் சகோதர்களுக்கு உதவத்தான் மோதி அரசு குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்தி, அவர்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

நேருவோடு உருவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக்கான குருஜி கோல்வால்கர் அறிவுரையின் பேரில், முகர்ஜி பாரதிய ஜன் சங்கம் என்ற கட்சியை உருவாக்கினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் ஜன்சங் கட்சி மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை முகர்ஜி எதிர்த்து நாடாளுமண்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருந்தார். " ஒரு நாட்டில் இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு தேசிய சின்னங்கள் இருக்க முடியாது" என்பது அவரின் போர் முழக்கமாக இருந்தது. ஹிந்து மஹாசபா மற்றும் ஜம்மு பிரஜா பரிஷத் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஜன்சங் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரி சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
எந்தவிதமான அடையாள அட்டையைக் காட்டாமல் காஷ்மீருக்கு செல்லும் போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ளே நுழையும் போது 1953ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி முகர்ஜி கைது செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் முகர்ஜி மரணமடைந்தார்.
முகர்ஜியின் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு நிராகரித்தார். 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் முகர்ஜியின் மரணத்திற்கு பின்னர் நேருவின் சூழ்ச்சி இருந்தது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி, அஹமதாபாத் நகரில் ஒரு பாலம், டெல்லியில் ஒரு சாலை, கோவா பல்கலைக்கழகத்தில் ஒரு உள்ளரங்க விளையாட்டு அரங்கம், ராய்ப்பூர் நகரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்லூரி என்று பல்வேறு இடங்களுக்கு சியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு முழுமையாக இணைத்து மோதி அரசு முகர்ஜியின் பலிதானத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளது.  

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஜூலை 1 - வெங்கையா நாயுடு பிறந்தநாள்

பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

புதன், 18 ஜூன், 2025

ஜூன் 18 - சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் -


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.