பரம்வீர் சக்ரா விருதை முதன்முதலில் பெற்றவர் மேஜர் சோம்நாத் சர்மாவின் பிறந்ததினம் இன்று.
மேஜர் சோம்நாத் சர்மாவின் குடும்பமே ராணுவ வீரர்கள் குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. சோம்நாத் சர்மாவின் தந்தை அமர்நாத் சர்மா. அவர் ஒரு மருத்துவர். ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி அவர் மேஜர் ஜெனரல் என்ற நிலையில் பணி நிறைவு பெற்றவர். சோம்நாத் சர்மாவிற்கு இரண்டு சகோதரர்கள். சுரீந்தர்நாத் சர்மா பொறியியல் பட்டம் பெற்று ராணுவப் பணியில் இணைந்து லெப்டினென்ட் ஜெனரல் என்ற நிலைக்கு உயர்ந்தவர். இன்னொரு சகோதரர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா பாரத ராணுவத்தின் 14ஆவது தலைமைத் தளபதியாகப் பணியாற்றியவர். மருத்துவம் படித்த அவரது சகோதரி ராணுவத்தில் பணியாற்றனார். கமலாவும் அவரது மற்றொரு சகோதரியான மனோரமா இருவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்களையே மணந்து கொண்டார்கள். வீரமும் தியாகமும் அவர்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து என்றால் அது மிகையாகாது.
இன்றய ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் 1923ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் சோம்நாத். அந்தக் காலத்தில் இந்த மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பெரும் வீரத்தைக் காட்டி பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவும் இதே பகுதியைச் சார்ந்தவர்தான்.
சோம்நாத்திற்கு நான்கு வயதாக இருந்தபோது மருத்துவத்துறையில் மேற்படிப்பிற்காக அவர் தந்தை இங்கிலாந்து செல்ல வேண்டி இருந்தது. அவரோடு அவரது மனைவியும் சென்றார். எனவே சோம்நாத்தும் அவர் சகோதரர் சசுரீந்தர்நாத்தும் முசோரி நகரில் உள்ள ஹாம்ப்டன் கான்வென்டில் சேர்க்கப்பட்டார்கள். ஒரே வகுப்பிலும் ஒரே விடுதி அறையிலும் என்று அவர்கள் இளமைக்காலம் ஆரம்பமானது. பொது அறிவு மற்றும் வரலாறு ஆகிய படங்கள்தான் சோம்நாத்தைக் கவர்ந்தன. மற்ற பாடங்களைக் காட்டிலும் விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும்தான் அவரது நாட்டம் இருந்தது. அதனைத் தொடர்ந்து நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் படித்த சோம்நாத் பின்னர் டெஹ்ராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் சேர்ந்து ராணுவத்திற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார், 1941ஆம் ஆண்டு இந்திய ராணுவ அகாடெமியில் சோம்நாத் சேர்ந்தார். ஆனால் அது இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான காலம். எனவே பயிற்சி நிறுத்தப்பட்டு அங்கே பயின்றவர்கள் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்கள். 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 வயதேயான சோம்நாத் சர்மா 8/19 ஹைதராபாத் படைப்பிரிவின் இரண்டாம் லெப்டினென்டாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆங்கிலக் கல்வி பயின்றாலும் தனது பேரன்கள் பாரதப் பண்பாட்டில் இருந்து வழி மாறிவிடக் கூடாது என்று எண்ணிய சோம்நாத்தின் தாத்தா அவர்க்கு இதிகாசங்களைக் கற்பித்தார். குறிப்பாக பகவத்கீதை சோம்நாத்தின் மனதில் ஆழமாகப் பதிந்தது. கீதையே அவரின் வழிகாட்டியாக அமைந்தது.
ஹைதராபாத் படைப்பிரிவு பின்னாளில் குமாவுன் படைப்பிரிவு என்று பெயர் மாற்றம் பெற்றது. பாரதநாட்டின் வரலாற்றில் குமாவுன் பிரிவு நீண்ட வரலாறு கொண்ட படைப்பிரிவு. இதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா நகரின் அருகே உள்ள ராணிகெட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மஹாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம் இந்தப் பகுதியில்தான் நடைபெற்றது என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். கடினமான மலைப்பிரதேசத்தில் வாழ்க்கையை நடத்தவேண்டி உள்ளதால் இங்கே உள்ள மக்கள் இயற்கையாகவே வீரமிக்கவர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.
குமாவுன் படையின் வரலாறு ஏறத்தாழ பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் தொடங்குகிறது. இந்தப்பகுதியில் இருந்த இளைஞர்கள் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். ஹைதராபாத் நிஜாமின் படையை குமாவுன் மக்களை வைத்து ஆங்கில அரசு நிரப்பியது. பாரத நாட்டிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் ஆங்கில ஆட்சிக்காக உலகின் பல்வேறு நாடுகளிலும், நாடு விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற பல்வேறு போர்களிலும் குமாவுன் பிரிவு மிகப் பெரும் வீர சாகஸங்களைச் செய்து பெரும் புகழை அடைந்தது. மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் சைத்தான் சிங் இருவரும் பரம்வீர் சக்ரா விருது பெற்றார்கள். ஜெனரல் ஸ்ரீநாகேஷ், ஜெனரல் திம்மய்யா, ஜெனரல் ரெய்னா என்ற மூன்று தலைமைத் தளபதிகளை இந்தப் பிரிவு பாரதநாட்டின் ராணுவத்திற்கு அளித்துள்ளது.
சோம்நாத் சர்மா ஹைதராபாத் படைப்பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணம் அவரது தாய்மாமா லெப்ட்டினென்ட் கிருஷ்ணன்தத் வாசுதேவா. அவர் ஹைதராபாத் படையின் 4/19ஆம் பிரிவில் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் 1942ஆம் ஆண்டு மலேசியாவில் ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடும் போது வீரமரணத்தைத் தழுவியவர் அவர்.
சோம்நாத் சர்மா பணியாற்றிய 8/19 ஹைதராபாத் படைப்பிரிவு ஜப்பானியர்களை மியன்மார் நாட்டில் உள்ள அரக்கான் பகுதியில் எதிர் கொண்டது. தான் எதிர்கொண்ட முதல் போர்க்களத்திலேயே சர்மாவின் வீரம் அவரது மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. தனது உயிரையும் துச்சமாக எண்ணி படுகாயமுற்ற சக வீரர் ஒருவரை தன் தோளில் சுமந்து அவரை பத்திரமாக பாசறைக்கு சர்மா கொண்டு வந்தார். இந்த தீரச்செயல் அவரது உயரதிகாரிகளால் குறிப்பிட்டு ராணுவ தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் ஊடுருவியவர்களை விரட்டி காஷ்மீரைக் காக்கும் பணியில் முதலில் களம் இறங்கியவர்கள் 1 சீக்கியப் படைப்பிரிவு. லெப்ட்டினென்ட் கார்னெல் ரஞ்சித் ராய் இந்தப் படைக்குத் தலைமை தாங்கினார். 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் நாள் ஸ்ரீநகர் விமனநிலையத்திற்கு வந்தடைந்த இந்தப் படை, பாராமுல்லா நகருக்கு வெளியே பட்டாணியர்களை எதிர்கொண்டது. நடைபெற்ற போரில் ரஞ்சித்ராய் வீரமரணம் அடைந்தார். ஆனால் ஸ்ரீநகரில் பட்டாணியர்கள் ஊடுருவுவது தடுக்கப்பட்டது. போரின் திசையை பாரதநாட்டுக்கு சாதகமாக மாற்ற தனது உயிரை ரஞ்சித்ராய் பலி கொடுத்தார். நாடு அவருக்கு மஹாவீர் சக்ரா விருது வழங்கி கெளரவம் செய்தது. அக்டோபர் 27ஆம் நாள் பாரத ராணுவத்தின் காலாள்படைதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் படைகள் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் குமாவுன் படைப்பிரிவும் ஓன்று. அதற்கு சோம்நாத் சர்மா தலைமை தாங்கினார். அப்போது ஹாக்கி விளையாடி கையில் அடிபட்டுக் கொண்டிருந்தார் சோம்நாத். இவரது உயரதிகாரிகள் இவரை ஒய்வெடுக்கும் படி பணித்தனர். எதிரியை விரட்டியபின் ஓய்வெடுப்பேன் அல்லது அவனோடு போரிட்டு கட்டாய ஓய்வு பெறுவேன். இங்கே உட்கார்ந்திருக்க மாட்டேன் என்று சொல்லி படையோடு கிளம்பினார் சோம்நாத்.
நவம்பர் 3 ஆம் நாள் பட்காம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் இவரது படை வீரர்கள். பாகிஸ்தானிகள் உள்ளே புகுந்துவிடாமல் தடுப்பது அவர்கள் நோக்கம். அங்கே பொதுமக்கள் மட்டும்தான் இருப்பதாகத் தெரிந்தது. நிலைமை கட்டுக்குள் அடங்கி இருந்தது. எதிரி நடமாட்டம் ஏதுமில்லை என்று மூன்று படைப்பிரிவுகளில் இரண்டு கம்பெனிப் பிரிவுகள் ஸ்ரீநகருக்கு மதியம் திரும்பிவிட்டன. சோம்நாத்தின் படைப்பிரிவு மட்டும் காவலுக்கு நின்றது. மூன்று மணிவரை பணி, பிறகு வேறொரு பிரிவு வந்துவிடும் என்று உத்தரவு. ஆனால் உள்ளூர் மக்களோடு கலந்து இருந்த பட்டாணியர்கள் 2.30க்கு உள்ளூர்வாசிகள் வீடுகளுக்குள் இருந்து சுட ஆரம்பித்தனர். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று திருப்பிச் சுட சோம்நாத் உத்தரவு கொடுக்கவில்லை.
சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவு 100 பேர், ஆனால் தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் 700 பேர். இந்நிலையில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம் என்று உணர்ந்தார் சோம்நாத். ஆனால் படைப்பிரிவு இடத்தை விட்டுவிட்டு நகர்ந்தால் ஸ்ரீநகர் போக்குவரத்து வழியும், விமான நிலையமும் எதிரிகளின் வசமாகும். நம் ராணுவம் மேற்கொண்டு படைகளை அனுப்பினாலும் வரவோ இறங்கவோ இடமிருக்காது. ஆகவே தம் படைப்பிரிவுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தவும் அதே நேரம் தற்காப்பாக இருக்கவும் உத்தரவிட்டார். முடிந்தவரை இடத்தை விட்டு அகலாது பாதுகாக்க உறுதிபூண்டனர் நூறுபேர்.
ஆனாலும் ஆட்குறைவும் அடிபட்டு விழும் வீரர்களும் இவர்களது பாதுகாப்பைக் குறைத்தது. சோம்நாத் தானே ஒவ்வொரு போஸ்டுக்கும் ஓடி ஓடி ஆயுதங்களையும், குண்டுகளையும் விநியோகித்தார். ஒருவர் அடிபட்டு விழுந்தால் மற்றொரு வீரர் அந்த இடத்துக்கு வரும்வரை அங்கே நின்று துப்பாக்கி பிடித்துச் சுட்டார். தலைவர் இப்படிச் செய்து அவருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று அவரை பாதுகாப்பான இடத்தில் இருக்கச் சொன்னார்கள் இவரது படைப்பிரிவினர். போர்க்களத்தில் பத்திரமான இடத்தில அமர்ந்து ஆணை பிறப்பிப்பவன் நல்ல தலைவன் அல்ல, அவர் தனது வீரர்களோடு களத்தில் போராடவேண்டும், போர் என்று வந்து விட்டால் நமது பணி எதிரிகளை வெற்றி கொள்வது மட்டும்தான், அதனை மட்டும் இப்போது செய்வோம் என்று கீதையைக் காட்டி தனது வீரர்களை சர்மா உற்சாகமூட்டினார்.
தலைமையகத்துக்கு " எதிரிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாங்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறோம். ஆனாலும் இங்கிருந்து பின்வாங்க மாட்டேன். எங்கள் படைப்பிரிவில் கடைசி வீரனும் கடைசி குண்டும் இருக்கும்வரை போராடுவோம்" என்று தகவல் அனுப்பினார். தலைமையகம் உடனடியாக விமானத்தில் வேறு சில படைப்பிரிவுகளை அனுப்பியது. அவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையம் வந்திறங்கி பட்காம் வருவதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.
சோம்நாத் ஷர்மாவின் படைப்பிரிவில் ஒருவர் கூட எஞ்சவில்லை. ஆனால் 700 பேரில் 200 பேர் சாவும், 250 பேர் காயமும் பட்டதில் பாகிஸ்தானிய கூலிப்படையினர் சற்றே பின்னடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்களைத் திரட்டிக் கொண்டு வந்த போது 500 பேர் கொண்ட வலிமையான ராணுவப்படைப் பிரிவு வரவேற்றது. வர இயலாமல் மலையிறங்கி பாதிப்பேர் ஓடினர். மீதிப்பேர் ஒரேடியாக மலையேறினர். ஸ்ரீநகர் போக்குவரத்துச் சாலையும் விமான நிலையமும் காப்பாற்றப்பட்டு நமது கஷ்மீரத்தைக் கைப்பற்ற வந்தவர்கள் தோற்று ஓட முக்கியக் காரணமான சோம்நாத் ஷர்மாவும் அவரது படையில் பணியாற்றிய 20 அதிகாரிகளும் 70 சிப்பாய்களும் வீரமரணம் எய்தினர். பத்துப்பேர் குற்றுயிரோடு மீட்கப்பட்டனர். அவர்கள் சொன்னது மூலமாகவே சோம்நாத் ஷர்மாவின் சாகசங்கள் தெரியவந்தன.
மூன்று நாட்கள் போருக்குப் பிறகு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. சோம்நாத்தின் சட்டைப்பையில் ஒரு சிறு பகவத் கீதை புத்தகம் இருந்தது. அவரது துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடியே உயிர்நீத்திருந்தார். அவர் அனுப்பிய செய்தியும் காட்டிய வீரமும் மேஜர் ஜெனரல் திம்மையாவால் ஆவணப்படுத்தப்பட்டது. தலைமைத்தளபதிக்கும் தெரியப்படுத்தி அந்தப் படைப்பிரிவுக்கு உரிய கௌரவம் அளிக்க முடிவு செய்தனர்.
மரணம் அடையும்போது திருமணம் ஆகாத சோம்நாத் சர்மாவிற்கு இருபத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. பரம்வீர் சக்ரா விருதை முதலில் யாருக்கு அளிப்பது என்ற கேள்வி எழுந்தபோது யோசிக்காமல் தலைமைத் தளபதி கரியாப்பா சொன்ன பெயர் மேஜர் சோம்நாத் ஷர்மா.
நாட்டைக் காக்க தங்கள் நல்லுயிரை ஈந்த வீரர்களை என்றும் நினைவில் கொள்வோம்