வெள்ளி, 30 மே, 2025

மே 30 - குரு அர்ஜன்சிங் பலிதான தினம்


சீக்கியர்களின் ஐந்தாவது குருவும் தர்மத்திற்காக பலியான முதல் குருவுமான குரு அர்ஜன்சிங் அவர்களின் பலிதான தினம் இன்று. சீக்கியர்களின் மத நம்பிக்கைப்படி அவர்கள் குரு பரம்பரை குரு நானக்கில் தொடங்கி குரு கோவிந்த் சிம்மன் வரை பத்து குருக்களும் அதன் பிறகு குரு கிரந்த சாஹப் புத்தகம் குருவாகவும் மதித்து வணங்கப்படுகிறது.

அந்த குருபரம்பரையின் ஐந்தாவது குரு அர்ஜன் சிங். அவர் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராமதாஸின் இளைய மகனாக 1563ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இவரது தாயார் மூன்றாவது குருவான குரு அமர்தாஸின் மகள். குரு ராமதாஸின் மறைவிற்குப் பிறகு 1581ஆம் ஆண்டு குரு அர்ஜன்சிங் சீக்கியர்களின் குருவாக நியமிக்கப்பட்டார்.

இவரது வழிகாட்டலில் பல்வேறு மக்கள் சீக்கிய மதத்தில் இணைந்தனர். சொல்லப்போனால் அன்று அது ஒரு தனி மதமாகவே இல்லை. அது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகவே இருந்தது. குரு அர்ஜன்சிங்கின் பெருமை வடநாடு முழுவதும் பரவியது.

குரு அர்ஜன்சிங் சீக்கிய மத பாடல்களைத் தொகுத்தார், அது ஆதி கிரந்தம் என்று அழைக்கப்பட்டது. அந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே குரு கிரந்த சாஹப் என்று இன்று அழைக்கப்படுகிறது. அமிர்தஸர் நகரில் உள்ள தர்பார் சாஹப் என்று அழைக்கப்படும் பொற்கோவிலின் ஆரம்ப வடிவம் இவராலே உருவாக்கப்பட்டது.

மசந்த் எனப்படும் சீக்கிய குருக்களின் நேரடி பிரதிநிதிகளின் நியமனத்தை குரு அர்ஜன்சிங் ஒழுங்கு படுத்தினார். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் சீக்கியர்களின் நன்கொடைகளை வசூலித்து அதனைக் கொண்டு புது குருத்துவாராக்களை உருவாக்கவும், லங்கர் என்னும் உணவு வழங்கும் நிறுவனங்களை அவர்களே நிர்வகித்தனர். சீக்கியர்கள் தங்கள் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை வறியவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று குரு அர்ஜன் வலியுறுத்தினார்.

சீக்கியர்கள் ஒரு வலிமையான குழுவாக உருவானது முகலாய மன்னர் ஜஹாங்கீரின் கண்ணை உறுத்தியது. அவர் குரு அர்ஜன்சிங்கை கைது செய்து, அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கூறினார். அதனை குரு சந்தேகமே இல்லாமல் நிராகரித்தார்.

அதனால் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆணையின்படி குரு அர்ஜன்சிங் சித்திரவதைக்கு உள்ளானார். கொதிக்கக் காச்சிய இரும்பு தகட்டில் அமரவைக்கப்பட்டு, மணலை சூடாக்கி அவர் மீது கொட்டி, பின்னர் கொதிக்கும் தண்ணீரை அவர்மீது கொட்டப்பட்டது. 1606ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் ராவி நதியில் குளிக்கச் சென்ற குரு அர்ஜன்சிங் நதியில் முங்கி தனது உயிரை தியாகம் செய்தார்.

அவருக்கு பின் அவரது மகன் குரு ஹர்கோபிந்த் சீக்கியர்களின் ஆறாவது குருவாக நியமிக்கப்பட்டார். குரு அர்ஜன்சிங்கின் பலிதானதால் சீக்கியர்கள் போராட்ட குணம் கொண்ட பிரிவாக உருவானார்கள்.

இந்த நாட்டின் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிர் கொடுத்த தியாகிகளின் தியாகத்தை மனதில் நிறுத்துவோம். தர்மத்தை காக்க நமது பங்களிப்பை அளிப்போம்.

வியாழன், 29 மே, 2025

மே 29 - முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம்


விடுதலைப் போராட்ட வீரரும், உத்தரபிரதேசத்தில் நெடுங்காலம் அமைச்சராகவும், காங்கிரஸ் அல்லாத கட்சியின் சார்பாக முதல்முதலில் முதல்வராகவும், இந்திய நாட்டின் மிகக் கூறிய கால பிரதமராகவும், வட இந்திய விவசாயிகளின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய சவுத்திரி சரண்சிங் நினைவுதினம் இன்று.

ஹரியானவைச் சார்ந்த முதல் விடுதலைப் போரின் முன்னணி தலைவராக இருந்த பாலாபாக் அரசர் ராஜா நாகர்சிங் பரம்பரையில் பிறந்தவர் சரண்சிங் அவர்கள். விடுதலைப் புரட்சியின் முடிவில் ராஜா நாகர்சிங் ஆங்கில அரசால் மரணதண்டனை விதிக்கப்பட, அவர் குடும்பம் ஹரியானாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடி பெயர்ந்தது. அந்தப் பரம்பரையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் சரண்சிங் பிறந்தார்.
அறிவியலில் முதுகலைபட்டமும், சட்டப் படிப்பும் முடித்த சரண்சிங் கசியாபாத் நகரில் தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். தனது 34ஆவது வயதில் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார்.

1937, 1946, 1952, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். முதல் முறை தேர்வானபோதே விவசாயிகளின் நலன்களை காக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக வாதாடினார். அவைகளில் பலவற்றை இன்று பல்வேறு மாநிலங்கள் சட்டமாக்கி உள்ளது.

இந்திய மனப்பான்மைக்கு சோவியத் வழிமுறையிலான கூட்டு விவசாயம் சரிவராது, விவசாய நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமை என்பது அவர்களின் சுயமதிப்பு சார்ந்தது என்று நேரு முன்வைத்த கூட்டு விவசாய முறையை எதிர்த்துப் பேசியதால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

பின்னர் தனிக் கட்சியை உருவாக்கி உத்திர பிரதேச முதல்வராக தேர்வானார். காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரண்சிங், பல்வேறு பதவிகளில் இருந்தாலும் ஊழலை ஏற்றுக்கொள்ளாத, உறுதியான, அரசு செலவழித்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியானபடி விளக்கம் கேட்கும் நேர்மையாளராக இருந்தார்.
இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களோடு சரண்சிங்கும் கைதானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உருவான ஜனதா கட்சி அரசில் உதவிப் பிரதமராக பதவி வகித்தார்.

உள்கட்சி பூசலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகியபோது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கான ஆதரவை இந்திரா விலக்கிக் கொள்ள சரண்சிங் பதவி விலகினார்.

1985ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் காலமானார்.

லக்னோ விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவரது பிறந்த தினம் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புதன், 28 மே, 2025

மே 28 - N T ராமாராவ் பிறந்ததினம்

 அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தங்கள் பதின்பருமத்தில் இருந்தவர்களின் நோக்கில் மஹாவிஷ்ணு எப்படி இருப்பார் என்று கேட்டால் அநேகமாக என் டி ராமாராவ் போல இருப்பார் என்றுதான் பதில் வரும். தென்னக திரைப்பட உலகத்தின் மிக முக்கியமான நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான நந்தமுனி தாரக ராமராவ் என்ற என் டி ராமராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று.   

1925ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் ஒருங்கிணைந்த மதராஸ் ராஜதானியின் பகுதியான குண்டூர் மாவட்டத்தில் நந்தமுனி லக்ஷ்மண சவுத்ரி - வேங்கட ராமண்ணா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் திரு ராமராவ். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமாராவை குழந்தை இல்லாத அவரது மாமா வளர்த்து வந்தார். முதலில் தனது கிராமத்திலும், பின்னர் விஜயவாடாவிலும், பின்னர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர கிருஸ்துவக் கல்லூரியிலும் படித்தார்.  1947ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த ராமராவ் மிகக் குறுகிய காலத்திலேயே அந்த வேலையை ராஜினாமா செய்து திரைப்படங்களில் வாய்ப்பு தேடத் தொடங்கினார். 

1949ஆம் ஆண்டு வெளியான மானதேசம் என்ற தெலுங்குப் படத்தில் இவர் அறிமுகமானார். பாதாளபைரவி என்ற இருமொழிப் படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் ஆகிய ரசிகர்களிடம் ராமராவ் பிரபலமானார். மாயாபஜார், கர்ணன் உள்ளிட்ட பதினேழு திரைப்படங்களில் ராமராவ் கிருஷ்ணர் வேஷம் ஏற்று நடித்தார். புராணப் படங்களைத் தொடர்ந்து சமுதாயத்தைப் பற்றிச் சித்தரிக்கும் படங்கள் வெளியாகத் தொடங்கியது. அதில் கோபமுள்ள உலகத்தை மாற்றும் சிந்தனையுள்ள இளைஞன் வேடத்தில் அவர் நடிக்கத் தொடங்கினார். திரைக்கதை எழுதுவது, திரைப்படங்களை தயாரிப்பது என்று திரையுலகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர் இயங்கிக்கொண்டு இருந்தார். 

1980 முதல் 1982ஆம் ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் நான்கு முதலமைச்சர்களை எந்தவிதமான காரணமும் இன்றி மாற்றியது. அப்போது ஆந்திராவின் மானத்தைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடு ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை 1982ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆந்திராவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தார்.  முதன்முதலில் அரசியல் பிரச்சாரத்திற்கு ரதம் போல மாற்றப்பட்ட வண்டிகளில் பயணம் செய்தது ராமாராவ்தான். பெரும் கூட்டங்களுக்குப் பதிலாக சாலையோரத்தில் எங்கேயும் நிறுத்தி சிறு கூட்டங்களில் பேசும் அவரது பாணி பாரத நாட்டின் அரசியல் பிரச்சாரத்தில் ஒரு புது பாணியாக உருவானது. 

1984ஆம் ஆண்டு இதய அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக நாடு திரும்பிய ராமராவ் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். 

1984ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையையும் மீறி ஆந்திராவில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி விளங்கியது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய முன்னணியை நிறுவ காரணமாக இருந்தார்.   

தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் அவரின் சுயசரித்திரத்தை எழுத முன்வந்த லட்சுமி பார்வதி என்ற பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்த ராமராவ் அவரை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் அவர் குடும்பத்திலும், கட்சியிலும் பிளவை உருவாக்கியது. 

1994ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற இவரின் ஆட்சி ஒரு வருடத்திற்குள் இவரது மருமகனான சந்திரபாபு நாயுடுவால் பறிபோனது. 1996ஆம் ஆண்டு தனது 72ஆம் வயதில் இவர் காலமானார். 

திரைத்துறையிலும் அதனைத் தொடர்ந்து அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்த திரு ராமாராவின் நினைவுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

செவ்வாய், 27 மே, 2025

27 மே - பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள்


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள். 

திங்கள், 26 மே, 2025

மே 26 - ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை - நினைவு தினம்

பாரதநாட்டின் விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம், ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்று பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் செண்பகராமன் பிள்ளை. அந்தக் காலத்தில் பாரத நாட்டு விடுதலைக்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பல போராளிகள் இயங்கிக்கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசர் மற்றும் ரஷிய அரசோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டு இருந்த காலம் அது. 

1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் - ஆஸ்திரிய நாட்டு இளவரசரும் அவர் மனைவியும் செர்பியாவைச் சேர்ந்த ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆஸ்ட்ரியா செர்பியாமீது படையெடுத்தது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் எதோ ஒரு அணியில் இணைய முதல் உலகப் போராக சண்டை மாறியது. பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப் பட்டன. ஏற்கனவே ஜெர்மனியில் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் என்ற அமைப்பை செண்பகராமன் பிள்ளை நடத்திவந்தார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்த கதர் இயக்கத்தினரோடு இணைந்து ஜெர்மனியின் உதவியோடு ஆயுதங்களை பாரத நாட்டுக்கு கடத்தி, அங்கே பெரும் ராணுவப் புரட்சியை உருவாக்க போராளிகள் திட்டமிட்டனர். 

இதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் போராளிகள் தற்காலிக சுதந்திர பாரத அரசு ஒன்றை நிறுவினார்கள். ராஜா மகேந்திரபிரதாப் ஜனாதிபதியாகவும் மௌலானா பரகத்துல்லா பிரதமமந்திரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை
பாரதநாட்டில் உருவாக்க எண்ணிய ஆயுதப்புரட்சி ஆங்கில உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி காரணமாக போரில் இருந்து ரஷ்யா விலகிக்கொள்ள ஜெர்மனி தோற்க நேர்ந்தது. பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக தற்காலிக இந்திய அரசு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. 

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். அந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை செண்பகராமன் பிள்ளை சந்தித்தார். பிள்ளை உருவாகியிருந்த பாரத தேசிய தன்னார்வப் படை நேதாஜியைக் கிளர்ச்சியூட்டியது. அந்த வழியில்தான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். பிள்ளை உருவாகியிருந்த ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நேதாஜியின் போர் முரசாக மாறியது. பல ஆயிரம் தேசபக்தர்களை உற்சாகமூட்டும் கோஷமாக இன்றும் அதுவே திகழ்கிறது. 
முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். பாரதம் குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை பாரத நாட்டுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.

முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

ஞாயிறு, 25 மே, 2025

மே 25 - ராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பலரின் பெயர்கள் பொதுமக்களின் மனதில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது. வீடு மனையைத் துறந்து, குடும்பத்தினரைப் பிரிந்து, வெளிநாடுகளில் தங்கி பாரதநாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகம் செய்த பெருமைமிக்க புதல்வர்கள் பலர். அதில் முக்கியமானவர் ராஷ்பிஹாரிபோஸ். சுபாஷ் சந்திர போஸுக்கு முன்னரே ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கே இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடும் படையை உருவாக்கியவர் இவர். இந்தப் படையின் தலைமையைத்தான் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டார்.

வங்காளத்தின் பார்த்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 1886ஆம் ஆண்டு பினோத் பிஹாரி போஸ் - புவனேஸ்வரி தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை கொல்கத்தா நகரில் முடித்தார். படிக்கின்ற காலத்திலேயே ஆங்கில அரசை ஆயுதம் தாங்கியே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. டெல்லி நகரில் அன்றய வைஸ்ராய் ஹார்டிங் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் யானை மீது பவனி வந்தார். சாந்தினி சவுக் பகுதியில் ஊர்வலம் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. காயங்களோடு ஹார்டிங் உயிர்தப்பினார். வெடுக்குண்டு வீசியது பசந்த் பிஸ்வாஸ் எனும் 16 வயது சிறுவன். அவனைப் பயிற்றுவித்தது போஸ்.

போஸ் அப்போது டெஹ்ராடூன் நகரில் உள்ள வனத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதும் அறியாதது போல அவர் மீண்டும் டெஹ்ராடூன் சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் இந்த வெடிகுண்டு வீச்சுக்குப் பின்னால் போஸ்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட ஆங்கில அரசு போஸ்மீது கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. போஸ் தலைமறைவானார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது.

தலைமறைவு வாழ்க்கையை நடத்தும் போதே இந்திய அளவில் ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்கு போஸ் முயற்சி செய்து கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த கதர் கட்சி ( அரபி மொழியில் இருந்த வந்த உருது சொல் - இதற்கு புரட்சி என்று பொருள் ) ஜெர்மன் நாட்டில் இருந்து இயங்கிய இந்திய விடுதலைக்கான கூட்டமைப்பு, இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆயத புரட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள வீரர்களோடு இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே நாளில் போராட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஆங்கில உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டம் தோல்வியில் முடிந்தது.

போஸ் இந்தியாவை விட்டு நீங்கி ஜப்பான் சென்றார். ஜப்பானிலும் ஆங்கில அரசு அவரைப் பின்தொடர்ந்து. அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜப்பான் அரசை நிர்ப்பந்தித்தது. இந்தியாவின் வீர மைந்தன் ஜப்பான் நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. ஆனால் இதற்கு நடுவே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உறவு சீர்குலைந்ததால் போஸ் ஜப்பானில் நிம்மதியாக இயங்க முடிந்தது. களங்கள்தான் மாறியது கடமை மாறவில்லை. ஜப்பானில் இருந்து போஸ் இந்திய விடுதலைக்கான வேலையைச் செய்து கொண்டுதான் இருந்தார். பல பத்திரிகைகளில் தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பான் ஆதரவு தரவேண்டும் என்று எழுதி, ஜப்பான் நாட்டை இந்திய போராளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றினார். இந்திய விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஜப்பானில் உருவாக்கினார். இதன் தலைமைப் பொறுப்பையே பின்னாளில் நேதாஜி ஏற்றுக்கொண்டார்.

ஜப்பானில் நாகமுறையா உணவகத்தின் உரிமையாளரின் மகள் டோஷிகோ சோமோ என்பவரை போஸை மணந்துகொண்டார். அவருக்கு ஜப்பான் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. எட்டாண்டுகளே இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். உடல்நலக் குறைவால் டோஷிகோ சோமோ மரணமடைய, அதன் பின்னர் தனியாகவே போஸ் வாழ்ந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவின் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் ராஷ்பிஹாரிபோஸ்தான். "நான் காந்தியை மதிக்கிறேன், அவர் புனிதமானவர். ஆனால் அவர் கடந்த காலத்தவர், சுபாஷ் வருங்காலத்தை சேர்ந்தவர்" என்று கூறி சுபாஷுக்கு ஆசி வழங்கினார் ராஷ்பிஹாரிபோஸ்

இந்தியாவின் புகழ்வாய்ந்த தேசபக்தர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தந்து 58ஆம் வயதில் காலமானார்.

எதையும் எதிர்பாராமல் நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். அவர்கள் வழியில் நடப்போம் என்று ராஷ்பிஹாரிபோஸ் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

சனி, 24 மே, 2025

மே 24 - தியாகி கர்தார் சிங் சரபா பிறந்ததினம்

 பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி தன் பத்தொன்பதாம் வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் கர்தார் சிங் சரபாவின் பிறந்ததினம் இன்று. 
பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருந்து சீக்கிய வீரர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம் என்பது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஓன்று. கதர் கட்சி என்று உருவான புரட்சி இயக்கமும் அதில் இணைந்து தங்களை ஆகுதியாகிய வீரர்களும் இன்று மக்களிடம் மறைக்கப்பட்டது நமது துரதிஷ்டமே. அந்த வீரர்களில் முக்கியமானவர் கர்தார் சிங்.

1896ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் லூதியான மாவட்டத்தில் உள்ள சரபா என்ற கிராமத்தில் ஜாட் வகுப்பைச் சார்ந்த சீக்கியரான மங்கள்சிங் - சாஹிப் கௌர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் கர்தார் சிங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த கர்தார் சிங்கை அவரது தாத்தாதான் வளர்த்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை லூதியானாவிலும் பின்னர் ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரிலும் முடித்த கர்தார் சிங், பட்டப்படிப்பு படிக்க 1912ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஆங்கில அரசின் வரைமுறை அற்ற வரிவசூலால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறிக்கொண்டு இருந்தனர். தாய்நாட்டின் அவலநிலையைக் கண்டு கொதித்த தேசபக்தர்கள் அங்கங்கே கூடி இந்த தாழ்வுநிலையை மாற்றுவது பற்றியும், ஆங்கில அரசை தூக்கி எறிவது பற்றியும் சிந்தித்துக் கொண்டு இருந்தனர்.

தேசபக்தர்கள் இணைந்து கதர் கட்சி என்ற புரட்சி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். சோஹன்சிங், லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இரும்பைக் காந்தம் ஈர்ப்பது போல, கர்தார் சிங்கை லாலா ஹர்தயாள் ஈர்த்தார். ஹிந்தி உருது பஞ்சாபி குஜராத்தி குர்முகி ஆகிய மொழிகளில் கதர் என்ற பெயரில் பத்திரிகையை சின்ஹட்ட புரட்சி இயக்கம் வெளியிட்டுக்கொண்டு இருந்தது. அந்தப் பத்திரிகையில்  கட்டுரைகள் கவிதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி கர்தார் சிங் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டு இருந்தார். வெளிநாடுகளில் வாழும் பாரதியர்களிடம் ஆங்கில அரசின் கொடுமையை கொண்டு செல்லும் பணியை கதர் பத்திரிகை செய்து கொண்டு இருந்தது.

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் கதர் கட்சி முறைப்படி ஆங்கில ஆட்சி மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தது. பாரத நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கர்தார் சிங் உள்பட பல்வேறு வீரர்கள் பாரத நாட்டுக்கு திரும்பினார். கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த கர்தார் சிங் அங்கே ஜுகாந்தர் இயக்கத்தின் தலைவரான ஜதின் முகர்ஜியின் அறிமுகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாரணாசி சென்று ராஷ்பிஹாரிபோஸை சந்தித்தார். போராட்டத்தை முன்னெடுக்க அரசு கருவூலங்களையும், பணக்காரர்களையும் கொள்ளை அடிப்பது என்றும் பெராஸ்பூர் நகரில் ஊழல் ராணுவ பாசறையைக் கைப்பற்றி ஆயத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்களின் ஊடே நுழைந்த துரோகி ஒருவனால் இந்த செய்திகள் ஆங்கில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடங்கியது. பல்வேறு வீரர்கள் தப்பியோடினார். பலர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பினார்கள். ஆனால் தனது தோழர்கள் சிறையில் வாடும்போது தலைமறைவாக இருக்க கர்தார் சிங் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானிலில் இருந்து பாரதம் திரும்பினார். மீண்டும் ராணுவ வீரர்களை புரட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கதர் கட்சியைச் சார்ந்த 17 வீரர்களுக்கு மரண தண்டனையும், மேலும் பலருக்கு பல்வேறு தண்டனைகளும் அளிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் தனது பத்தொன்பதாம் வயதில் தூக்குமேடையில் பாரத தேவியின் காலடியில் தனது உயிரை ஆகுதியாகினார் அந்த வீரர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது கர்தார் சிங் போன்ற பல்வேறு தியாகிகளின் வீரத்தால், தியாகத்தால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டும்.