புதன், 28 மே, 2025

மே 28 - N T ராமாராவ் பிறந்ததினம்

 அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தங்கள் பதின்பருமத்தில் இருந்தவர்களின் நோக்கில் மஹாவிஷ்ணு எப்படி இருப்பார் என்று கேட்டால் அநேகமாக என் டி ராமாராவ் போல இருப்பார் என்றுதான் பதில் வரும். தென்னக திரைப்பட உலகத்தின் மிக முக்கியமான நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான நந்தமுனி தாரக ராமராவ் என்ற என் டி ராமராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று.   

1925ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் ஒருங்கிணைந்த மதராஸ் ராஜதானியின் பகுதியான குண்டூர் மாவட்டத்தில் நந்தமுனி லக்ஷ்மண சவுத்ரி - வேங்கட ராமண்ணா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் திரு ராமராவ். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமாராவை குழந்தை இல்லாத அவரது மாமா வளர்த்து வந்தார். முதலில் தனது கிராமத்திலும், பின்னர் விஜயவாடாவிலும், பின்னர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர கிருஸ்துவக் கல்லூரியிலும் படித்தார்.  1947ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த ராமராவ் மிகக் குறுகிய காலத்திலேயே அந்த வேலையை ராஜினாமா செய்து திரைப்படங்களில் வாய்ப்பு தேடத் தொடங்கினார். 

1949ஆம் ஆண்டு வெளியான மானதேசம் என்ற தெலுங்குப் படத்தில் இவர் அறிமுகமானார். பாதாளபைரவி என்ற இருமொழிப் படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் ஆகிய ரசிகர்களிடம் ராமராவ் பிரபலமானார். மாயாபஜார், கர்ணன் உள்ளிட்ட பதினேழு திரைப்படங்களில் ராமராவ் கிருஷ்ணர் வேஷம் ஏற்று நடித்தார். புராணப் படங்களைத் தொடர்ந்து சமுதாயத்தைப் பற்றிச் சித்தரிக்கும் படங்கள் வெளியாகத் தொடங்கியது. அதில் கோபமுள்ள உலகத்தை மாற்றும் சிந்தனையுள்ள இளைஞன் வேடத்தில் அவர் நடிக்கத் தொடங்கினார். திரைக்கதை எழுதுவது, திரைப்படங்களை தயாரிப்பது என்று திரையுலகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர் இயங்கிக்கொண்டு இருந்தார். 

1980 முதல் 1982ஆம் ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் நான்கு முதலமைச்சர்களை எந்தவிதமான காரணமும் இன்றி மாற்றியது. அப்போது ஆந்திராவின் மானத்தைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடு ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை 1982ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆந்திராவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தார்.  முதன்முதலில் அரசியல் பிரச்சாரத்திற்கு ரதம் போல மாற்றப்பட்ட வண்டிகளில் பயணம் செய்தது ராமாராவ்தான். பெரும் கூட்டங்களுக்குப் பதிலாக சாலையோரத்தில் எங்கேயும் நிறுத்தி சிறு கூட்டங்களில் பேசும் அவரது பாணி பாரத நாட்டின் அரசியல் பிரச்சாரத்தில் ஒரு புது பாணியாக உருவானது. 

1984ஆம் ஆண்டு இதய அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக நாடு திரும்பிய ராமராவ் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். 

1984ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையையும் மீறி ஆந்திராவில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி விளங்கியது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய முன்னணியை நிறுவ காரணமாக இருந்தார்.   

தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் அவரின் சுயசரித்திரத்தை எழுத முன்வந்த லட்சுமி பார்வதி என்ற பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்த ராமராவ் அவரை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் அவர் குடும்பத்திலும், கட்சியிலும் பிளவை உருவாக்கியது. 

1994ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற இவரின் ஆட்சி ஒரு வருடத்திற்குள் இவரது மருமகனான சந்திரபாபு நாயுடுவால் பறிபோனது. 1996ஆம் ஆண்டு தனது 72ஆம் வயதில் இவர் காலமானார். 

திரைத்துறையிலும் அதனைத் தொடர்ந்து அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்த திரு ராமாராவின் நினைவுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக