திங்கள், 11 நவம்பர், 2019

அபுல் கலாம் ஆசாத் - நவம்பர் 11.



உலகத்தின் ஞான ஒளியாக பாரதம் என்றுமே திகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆப்கானிய வம்சாவளியைச் சார்ந்த ( பாரதம் என்பது இன்றய ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ) டெல்லியில் வசித்து வந்த மௌலானா சையத் முஹம்மத் கைருதீன் பின் அஹமத் அல் ஹுசைனி என்பவர் இஸ்லாமிய தத்துவத்தில் பெரும் அறிஞராக இருந்தார். அவரை இஸ்லாத்தின் அஸ்திவாரமாக மெக்கா நகருக்கு வரவழைத்து அவரிடம் அரேபியர்கள் இஸ்லாமிய தத்துவத்தின் விளக்கத்தை கேட்டறிந்தார்கள் என்றால் அவரது ஆழ்ந்த புலமையை நாம் அறியலாம். மெக்கா நகரில் அவர் வசித்து வந்த காலத்தில் அரேபிய நாடு முழுவதும் அறியப்பட்ட அறிஞரான ஷேக் முஹம்மத் பின் சாஹீர் அல்வட்ரி என்பவரின் மகளான ஆலா பின்த் முஹம்மத் என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியரின் மகனாக இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகரில் 1888ஆம் ஆண்டு பிறந்தவர்தான் செய்யத் குலாம் முஹைதீன் அஹமத் பின் கைருதீன் அழ ஹுசைனி என்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள்.

1890ஆம் ஆண்டே ஆசாத்தின் பெற்றோர்கள் பாரதம் திரும்பி கொல்கத்தா நகரில் வசிக்கத் தொடங்கினார்கள். அபுல் கலாம் ஆசாத் தனது படிப்பை தனது வீட்டிலேயே ஆரம்பித்தார். தகுதியான ஆசிரியர்கள் அவருக்கு ஹிந்தி, பாரசீகம், ஆங்கிலம், வங்காளம், அரபி உருது ஆகிய மொழிகளையும், கணிதம், வரலாறு, அறிவியல் தத்துவம் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கவியல்  ஆகிய பாடங்களையும் கற்றுக் கொடுத்தனர். இயல்பிலேயே சூட்டிகையான மாணவனாக இருந்த ஆசாத், மிக விரைவில் பல்மொழி புலவராகவும், பல துறை அறிஞராகவும் அறியப்பட்டார். பதின்ம வயதிலேயே பத்திரிகை நடத்தவும், தனக்கு மூத்த மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அவர் ஆரம்பித்தார்.

படித்த படிப்பின் படி அவர் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவரது படிப்பு அவரை ஒரு பத்திரிகையாளராக மாற்றியது. இளம் பருவத்தில் அவர் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் கூட்டத்தில் ஒருவராகத்தான் இருந்தார். ஷியாம் சந்திர சக்கரவர்த்தி, அரவிந்த கோஷ் போன்ற வீரர்களின் நண்பராக இருந்தார். பல முஸ்லிம்களின் எண்ணத்திற்கு எதிராக வங்காளப் பிரிவினையை அவர் எதிர்த்தார்.

அமிர்தஸர் நகரில் இயங்கிக்கொண்டு இருந்த வக்கீல் என்ற செய்தித்தாளில் ஆசாத் பணியாற்றினார். பின்னர் 1912ஆம் ஆண்டு அல் ஹிலால் என்ற உருது மொழி நாளிதழை தொடங்கினார். அதில் தொடர்ந்து  ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் எழுதிக்கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போர் தொடங்கியதை அடுத்து ஆங்கில அரசு இந்தப் பத்திரிகையை தடை செய்தது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஆசாத் அல் பலாஹ் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஆங்கில ஆட்சியைத் தாக்கி எழுதலானார். வழக்கம் போல ஆங்கில அரசு இவரை கைது செய்து ராஞ்சி சிறையில் அடைத்தது. மும்பை, பஞ்சாப், டெல்லி, ஆக்ரா ஆகிய மாகாணங்கள் தங்கள் எல்லைக்குள் ஆசாத் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது.

சிறைவாசம் முடித்து ஆசாத் விடுதலையாகும் சமயம் பாரதத்தின் அரசியல் களம் மொத்தமாக மாறி இருந்தது. அடக்குமுறையின் உச்சமாக ரௌலட் சட்டம் அமுலில் இருந்தது. ஜாலியன்வாலாபாக் நகரில் அப்பாவி பொதுமக்களை காக்கை குருவி சுடுவது போல அரசு சுட்டுக் தள்ளி இருந்தது. அரசியல் களத்தின் தலைமை சந்தேகமே இல்லாமல் காந்தியின் கையில் வந்து சேர்ந்திருந்தது. ஆசாத் காந்தியின் நெருங்கிய தோழரும் தொண்டருமாக உருவானார். அன்னியத் துணிகளைத் துறந்து ராட்டை சுற்றி, நூல் நூற்று காந்தியோடு ஆசிரமங்களில் தங்கி எளிய வாழ்க்கை வாழ்ந்து என்று ஆசாத் முழுவதுமாக மாறிப் போனார். காந்திக்கு மட்டுமல்ல ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, நேதாஜி ஆகிய தலைவர்களின் தோழராகவும், நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் ஆசாத் அறியப்படலானார்.

1922ஆம் ஆண்டு ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். மிக இளைய வயதில் தேர்வான தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆசாத். மீண்டும் 1940ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜின்னா சுதந்திரம் அடையும் சமயத்தில் நாடு மதரீதிரியாகப் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்திருந்த நேரம் அது. அந்த குரலுக்கு முஸ்லீம் மக்கள் பலரின் ஆதரவும் இருந்தது.ஆனால் கணிசமான இஸ்லாமியர்கள் அதனை எதிர்த்து நின்றதும் வரலாறு. அதில் முக்கியமான குரல் ஆசாத்தின் குரல்.

" இந்த நாட்டு மக்களின் மதமாக ஹிந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளாக விளங்குகிறது, அது போலவே ஆயிரம் ஆண்டுகளாக இஸ்லாம் மதமும் இந்த நாட்டின் மக்களின் மதமாக உள்ளது. நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று பெருமையோடு கூறுவது போல, நான் இஸ்லாம் மார்கத்தைப் பின்பற்றும் பாரதீயன் என்றும் நான் கிறிஸ்துவை வழிபடும் இந்தியன் என்று பெருமையோடு கூறலாம். நமது வழிபாடு முறைகள்தான் வேறுபட்டு உள்ளது, ஆனால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே" இது ஆசாத் அளித்த தலைமையுரையில் ஒரு பகுதி.

தவிர்க்க முடியாமல் நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப் பட்டது. இஸ்லாமின் பிறப்பிடமான மெக்கா நகரில் பிறந்த அபுல் கலாம் ஆசாத் உள்பட பல இஸ்லாமியர்கள் பாரத நாட்டிலேயே இருப்பது என்ற முடிவை எடுத்தனர். ஆசாத் நேருவின் நண்பராகவும், உற்ற தோழராகவும், அமைச்சரவை சகாவாகவும் விளங்கினார். நாட்டின் கல்வி அமைச்சராக அவர் பணியாற்றினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஐ ஐ டிகள் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அவரின் முயற்சியால் உருவானவைதான். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கல்விக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. விடுதலை அடையும் சமயத்தில் மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. தொடக்கக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி, தொழிற்கல்வி என்று பல்வேறு தளங்களில் பெரும் சவால்களை ஆசாத் எதிர்கொண்டு நாட்டின் கல்வித் திட்டத்தை வடிவமைத்தார்.

அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நாடு தேசிய கல்வி நாளாக அனுசரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக