சனி, 9 மே, 2020

காந்தியின் குரு - கோபால கிருஷ்ண கோகுலே மே 9

பாரதநாட்டின் சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுதம் தாங்கிப் போராடிய வீரர்களாலும், ஆங்கிலச் சட்டத்தின் துணையோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களாலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒன்றாகும். அந்த வீரர்கள் தீவிரவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் அறியப்பட்டனர். ஏற்றுக்கொண்ட பாதை வேறாக இருந்தாலும் அவர்களின் தியாகம் என்பது சமமானதுதான். மிதவாதிகளின் முன்னோடியாக அறியப்பட்ட கோபாலகிருஷ்ண கோகுலே அவர்களின் பிறந்தநாள் இன்று.


மஹாராஷ்டிர மாநிலத்தின் ரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சாதாரண சித்பவன் ப்ராமண குடும்பத்தில் கிருஷ்ணாராவ் கோகுலே - சத்தியபாமாபாய் தம்பதியரின் மகனாக 1866 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பிறந்தவர் கோபாலகிருஷ்ண கோகுலே அவர்கள். பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் அவர் குடும்பம் கல்வியின் முக்கியத்தை அறிந்தே இருந்தது. ஆங்கிலக் கல்வி அரசு இயந்திரத்தில் எங்காவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் குடும்பம் கோகுலேயின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. கோல்காபூர் நகரின் ராஜாராம் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து மும்பையின் எலிபைன்ஸ்டோன் கல்லூரியிலும் கோகுலே கல்வி பயின்றார். ஆங்கிலக் கல்வி கோகுலேவிற்கு அரசியல் அறிவையும் சேர்த்தே அளித்தது. தனது படிப்பை முடித்த கோகுலே பூனா நகரில் உள்ள பார்கூசன் கல்லூரியில் கணிதப் பேராசிரிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மஹாதேவ கோவிந்த ராணடேயின் சீடராக கோகுலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ச்சியான விவாதங்களின் மூலமாகவும், ஆங்கிலச் சட்டத்தின் மூலமாகவும் பாரதியர்களுக்கு அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் பெறலாம் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே காலகட்டத்தில் அதே சித்பவன் ப்ராமண வகுப்பில் தோன்றிய திலகர் பூரண ஸ்வராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கிக்கொண்டு இருந்தார். நேரடியான போராட்டங்களின் மூலம் ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்று நம்பிய தேசபக்தர்கள் திலகரின் வழியைப் பின்பற்றினர். 1895ஆம் ஆண்டு கோகுலேவும் திலகரும் காங்கிரஸ் கட்சியின் துணைச்செயலாளர்களாகப் பணிபுரிந்தனர். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டு கோகுலே காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் போக்கை மிதவாதிகளா அல்லது தீவிரவாதிகளா யார் நிர்ணயிப்பது என்ற கருத்து வேறுபாடு முற்றி 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. 1908ஆம் ஆண்டு திலகர் கைது செய்யப்பட்டு பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி மிதவாதிகளின் கைகளுக்குச் சென்றது. கொள்கைரீதியாக வேறுபட்டு இருந்தாலும் தேசபக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த மரியாதை குறையவே இல்லை என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் மக்கள் அனைவர்க்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது கோகுலேவின் விருப்பமாக இருந்தது. பாரத்தின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யவும், தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் பற்றி ஆராயவும்  அமைக்கப்பட்ட வெல்பி கமிஷனிடம் தேவையற்ற பல செலவுகளை ஆங்கில அரசு செய்கிறது என்றும், போதுமான அளவு கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கோகுலே வாதாடினார். குறைந்தபட்சம் நான்காம் வகுப்புவரையாவது கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சிறந்த கல்வியை அளித்து தகுதியான தலைவர்களை உருவாக்க கோகுலே இந்தியாவின் பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  அன்றய ஆங்கில சட்டத்துக்கு உள்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பதுதான் கோகுலேவின் வழிமுறையாக இருந்தது.  1899 முதல் பல்லாண்டுகள் மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கும் கோகுலே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாட்டின் பட்ஜெட் பற்றிய அவரது விவாதங்கள் செறிவு மிகுந்ததாக இருந்தது.

காந்தி கோகுலேவைதான் தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். தென்னாபிரிக்காவில் இருந்து பாரதம் திரும்பிய காந்தியை நாடு முழுவதும் சுற்றி வந்து, நேரடியாக நாட்டின் நாட்டுமக்களின் நிலைமையை அறிந்து கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு கோகுலே அறிவுறுத்தினார். பளிங்கைப் போன்ற தூய்மை, சிங்கத்தைப் போன்ற துணிவு, அரசியல் வானில் குறையே சொல்லமுடியாத சரியான மனிதர் என்று காந்தி கோகுலேவைப் புகழ்ந்து எழுதினார்.

பாரத நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகுலே தனது 48ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் காலமானார்.

தேசியத் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக