புதன், 5 நவம்பர், 2025

நவம்பர் 5 - தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் பிறந்ததினம்

பாரத நாட்டின் மறுமலர்ச்சி அலை என்பது முதலில் வங்காளத்தில்தான் தொடங்கியது. பெரும் அறிவாளிகளும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும், வழக்கறிஞர்களும்,  தத்துவ ஞானிகளும் விடுதலைப் போராட்ட வீரர்களும் என்று அலையலையாக தோன்றி பாரதத்தின் பாதையை வங்காளிகளே சமைத்தனர். வங்காளத்தில் தோன்றிய விடுதலைப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சித்தரஞ்சன் தாஸ். தேசத்தின் தேச மக்களின் நண்பர் என்ற பொருள்படும் தேசபந்து என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் அவர்.


இன்றய பங்களாதேஷ் நாட்டில் உள்ள டாக்கா நகரில் பூபன் மோகன் தாஸ் - நிஷாரிணி தேவி தம்பதியரின் 1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர் சித்தரஞ்சன் தாஸ். தனது சகோதர்கள் அடியொற்றி சித்தரஞ்சன் தாஸும் வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக லண்டன் மாநகரம் சென்றார். அன்றய லண்டன் நகரம் பாரத நாட்டின் தேசபக்தர்களை உருவாக்கும் இடமாகவும் இருந்தது. லண்டன் நகரில் அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, அதுல் பிரசாத் சென் ஆகிய தேசபக்தர்கள் நட்பு சித்தரஞ்சன் தாஸுக்கு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பட்டம் பெற்று நாடு திரும்பிய சித்தரஞ்சன் தாஸ் வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவானார். நீதிபதி கிங்ஸ்போர்ட என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியை விசாரிக்கும் அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்த கோஷுக்கு வாதாடி வெற்றி பெற்று அவரை சிறைத்தண்டனையில் இருந்து தாஸ் விடுவித்தார். அன்றய வங்காளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த அனுசீலன் சமிதியின் செயல்பாடுகளுக்கு சித்தரஞ்சன் தாஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காந்தியின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட சித்தரஞ்சன் தாஸ் அன்னியத் துணி பகிஷ்கரிப்பு, கதர் துணியை ஆதரித்தல், ஒத்துழையாமை இயக்கம் என்று போராடத் தொடங்கினார். சட்டமன்றங்களில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற கருத்துக்கு எதிராக காந்தி இருந்ததால் மோதிலால் நேருவுடன் இணைந்து ஸ்வராஜ்யா கட்சியை தாஸ் ஆரம்பித்தார். கொல்கத்தா மாநகராட்சி அமைக்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட்டு அதன் முதல் மேயராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சித்தரஞ்சன் தாஸின் சீடராகவும், உதவியாளராகவும் இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்.

தாஸின் மனைவி பஸந்தி தேவி  அம்மையார். தன்னளவிலேயே அவரும் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக விளங்கினார். 1921ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு பஸந்தி தேவியும் சித்தரஞ்சன் தாஸின் சகோதரி ஊர்மிளா தேவியும் கைதானார்கள். பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குறிப்பாக சுபாஷ் சந்திரபோஸுக்கு அவர் காட்டிய பாசம் பலர் பஸந்தி தேவியை தங்கள் தாயாகவே எண்ண வைத்தது.

சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகள் சாகர் சங்கீத் என்ற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. அரவிந்தர் வங்காள மொழியில் அமைந்த இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சுதந்திரம் என்ற பெயரில் நாளிதழையும் நாராயணா என்ற பெயரில் நாளிதழ் ஒன்றையும் சித்தரஞ்சன் தாஸ் நடத்திவந்தார். பிபின் சந்திர பால், சரத்சந்திர சட்டோபாத்யாய, ஹரிப்ரசாத் சாஸ்திரி உள்ளிட்ட வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தார்கள்.

தொடர்ச்சியான செயல்பாட்டால் சித்தரஞ்சன் தாஸின் உடல்நலம் சீர்கெட்டது. ஓய்வெடுக்கவும் உடல்நலத்தைப் பேணவும் அவரை மலைப்பிரதேசத்தில் சிறுது காலம் இருக்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். சித்தரஞ்சன் தாஸ் டார்ஜலிங் நகருக்குச் சென்றார். 1925ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் டார்ஜிலிங் நகரில் தாஸ் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. சித்தரஞ்சன் தாஸின் இறுதி ஊர்வலம் காந்தியின் தலைமையில் நடந்தது.

தனது சொத்துக்களை எல்லாம் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்திருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அவர் அளித்த நிலத்தில் இன்று சித்தரஞ்சன் தாஸ் புற்றுநோய் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தாலும் அதற்குள் மகத்தான சேவைகளை புரிந்த தலைவரை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 4 நவம்பர், 2025

நவம்பர் 4 - தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்ததினம்



தாளாற்றித் தந்த  பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள் 212.

அறத்தின் வழிநின்று ஒருவன் ஈட்டிய பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும். சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் பிரதமர் மோதி சுட்டிக் காட்டிய குறள் இது. இதன்படி வாழ்ந்த பெருமகனார் தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள்.

கனிராம் பிரடிபாய் தம்பதியரின் மூன்றாவது மகனாக ராஜஸ்தான் மாநிலத்தில் காசி கா பாஸ் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜம்னாலால். இயல்பாகவே தொழில்முனைவோர்களான மார்வாடி வகுப்பைச் சேர்ந்தவர் இவர். வசதியான குடும்பத்தைச் சாராத ஜம்னாலாலை பஷிராஜ் - சாதிபாய் தம்பதியினர் தங்கள் வாரிசாக தத்து எடுத்துக் கொண்டனர். ராஜஸ்தானைச் சார்ந்த இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தாவில் வசித்து வந்தனர்.

சேத் பஷிராஜ் மேற்பார்வையில் ஜம்னாலால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். சரியான நேரத்தில் சரியான விலையில் பொருள்களை வாங்கவும், அதனை லாபத்தில் விற்கவும், அதற்கான கணக்குகளை பராமரிக்கவும் திறமைசாலியாக விளங்கினார். ஜம்னாலால் தொடங்கிய தொழில்கள்தான் இன்று பஜாஜ் குழுமமாக பரந்து விரிந்து நிற்கிறது.

பொதுவாகவே வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கூடியவரை அரசைப் பகைத்துக் கொள்ளாமலே இருப்பார்கள். ஜம்னாலாலும் அப்படிதான் இருந்தார். முதல் உலகப் போரில் அவர் ஆங்கில அரசுக்கு அளித்த ஒத்துழைப்பை அங்கீகாரம் செய்யும் விதமாக அரசு அவரை கவுரவ நீதிபதியாக நியமித்தது. ஜம்னாலாலுக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தையும் அளித்தது.

திலகர், கோகுலே இவர்களின் சகாப்தம் முடிந்து காந்தியின் காலம் தொடங்கிய நேரம் அது. ஜம்னாலால் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அஹிம்சை, தாழ்த்தப்பட்ட சகோதர்களின் நல்வாழ்வு, எளிய வாழ்க்கை என்ற கொள்கைகளை அந்த தொழிலதிபர் பேசவில்லை, செயல்படுத்தத் தொடங்கினார். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தன் குடும்பத்தினரோடு வாழ ஆரம்பித்தார்.

காந்தியின் நெருக்கம் ஜம்னாலாலை ஆங்கில அரசு அளித்த ராவ் பகதூர் பட்டத்தையும் கௌரவ நீதிபதி பதவியையும் துறக்கத் தூண்டியது. அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், கொடி சத்தியாகிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஜம்னாலால் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

காந்தி சேவா சங்கத்தின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு  உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பல்லாண்டு பொறுப்பு வகித்தார்.

தேசத்தின் புனர்நிர்மாணப் பணி என்பது ஹரிஜன சகோதர்களை விட்டு விட்டு நடக்க முடியாது என்பதை உளப்பூர்வமாக நம்பிய ஜம்னாலால் தங்கள் குடும்ப கோவிலை ஹரிஜன மக்களின் தரிசனத்திற்காக திறந்து விட்டார். பல்வேறு கோவில்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரின் தொடர்ந்த முயற்சியால் திறக்கப்பட்டது. பல்வேறு குளங்களிலும், கிணறுகளிலும் ஹரிஜன சகோதர்கள் பயன்பாட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

தென்னக மக்களும் ஹிந்தி மொழியைப் படிக்க வேண்டும் என்பதற்காக தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக் சபா என்ற அமைப்பை ஜம்னாலால் நிறுவினார். கதர் துணி உற்பத்தி, கைத்தொழில் வழியாக கிராம முன்னேற்றம் ஆகிய துறைகளில் ஜம்னாலால் தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொழிலில் தனது பங்கு முழுவதையும் ஆதாரமாகக் கொண்டு ஜம்னாலால் பஜாஜ் தொண்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களை வழக்கறிஞர் என்ற முறையில் காந்திதான் எழுதினார் என்றால் காந்திக்கு ஜம்னாலால் மீதான அன்பும் மரியாதையும் புலனாகிறதுதானே.

தனது நான்கு குழந்தைகளோடு ஜம்னாலால் பஜாஜை காந்தி தனது ஐந்தாவது மகனாகவே நடத்திவந்தார். "நான் தர்மகர்த்தா முறையில் பாரத தொழிலதிபர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதும் போதெல்லாம் என் கண்ணில் நிழலாடுவது இந்த தொழில்துறை இளவரசர்தான்" என்று ஜம்னாலாலைப் புகழ்ந்து அவரின் இறப்பிற்குப் பின்னர் காந்தி எழுதி உள்ளார்.

தனது ஐம்பத்தி ஏழாவது வயதில் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் ஜம்னாலால் பஜாஜ் காலமானார்.

ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய நிறுவனங்கள் இன்று பல்வேறு தொழில்களில் காலூன்றி பஜாஜ் குழுமமாக உருவாகி உள்ளது. 


திங்கள், 3 நவம்பர், 2025

நவம்பர் 3 - ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் கபூர் பிறந்தநாள்



இசையும் நாடகமும் பாரத நாகரீகத்தில் பிரிக்க முடியாத  ஒரு அங்கம். அதனால்தான் நாடகத்தின் நீட்சியான சினிமாவும் மக்களின் எண்ணத்தோடு ஒட்டியே உள்ளது. பாரத திரையுலக வரலாற்றில் குறிப்பாக ஹிந்தி திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய பிரிதிவிராஜ் கபூரின் பிறந்ததினம் இன்று. இன்றய பாகிஸ்தான் பகுதியில் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் பிரிதிவிராஜ். அவர் தந்தை அன்றய ஆங்கில காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பிரிதிவிராஜ், தான் படித்துக்கொண்டு இருந்த சட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்க மும்பைக்கு சென்றார். 1929ஆம் ஆண்டு தயாரான சினிமா கேர்ள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது ஒரு பேசாத ஊமைப் படம். இந்தியாவில் தயாரான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற படத்தில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 1941ஆம் ஆண்டு வெளியான சிக்கந்தர் என்ற படத்தில் அலெக்சாண்டர் வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படம்தான் பிரிதிவிராஜ் கபூரை ஹிந்தி திரைப்பட உலகத்தின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

அன்றய காலத்தில் திரைப்பட நடிகர்கள் நாடகங்களிலும் நடிப்பது வழக்கமாக இருந்தது. பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும்  நடித்துக்கொண்டு இருந்த பிரிதிவிராஜ் பிரிதிவி தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழுவை தொடங்கினார். நாடு சுதந்திரம் அடையும் காலம் வெகுவிரைவில் இருந்தது, ஆனால் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடும் என்பதும் உறுதியான காலம் அது. நாட்டை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சனையான பிரிவினைதான் பிரிதிவிராஜ் கபூரின் நாடகங்களின் மையக் கருத்தாக இருந்தது. தீவார், பதான், கதர், ஆஹுதி என்று தொடர்ந்து நான்கு நாடகங்கள் நாடு பிளவுபட்டால் அதனால் விளையும் இன்னல்களைப் பற்றி கபூரின் நாடகக்குழு அரங்கேற்றியது. திரைத்துறை நாடகத்தை விழுங்கியது. நாடகங்களுக்கான ஆதரவு குறைய, பிரிதிவிராஜ் புது நாடங்களை மேடையேற்றுவது இல்லாமலானது. ஏறத்தாழ பதினைந்தாண்டு காலத்தில் பிரிதிவி தியேட்டர்ஸ் 2,600 முறை பல்வேறு நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

பிரிதிவிராஜ் கபூரின் மகன்களான ராஜ்கபூர், ஷம்மிகபூர் மற்றும் சஷிகபூர் ஆகியோரும் திரையுலகின் முக்கிய நடிகர்களாக விளங்கினார்கள். ராஜ்கபூர் தயாரித்த ஆவாரா என்ற திரைப்படத்திலும், மகன் ராஜ்கபூர் பேரன் ரன்திர்கபூர்  ஆகியோருடன் இணைந்து கல் ஆஜ் அவுர் கல் எந்த படத்திலும் பிரிதிவிராஜ்கபூர் நடித்துள்ளார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஓன்று.

முகலாய இளவரன் சலீமுக்கும் நாட்டிய தாரகை அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பேசிய படமான முகல் இ ஆசம் என்ற படத்தில் பிரிதிவிராஜ் கபூர் முகலாயப் அரசர் அக்பரின் வேடத்தில் நடித்தார். மிகப் பெரும் பொருள்செலவில் உருவான இந்தப் படம், பெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத் தக்க படங்களில் ஒன்றாக இந்தப்படம் விளங்குகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிதிவிராஜ் கபூர் 1972ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரின் கலையுலக சேவையைப் பாராட்டி அரசு 1969ஆம் ஆண்டு பத்மபூஷன் பட்டத்தை அளித்தது. திரையுலகத்தில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது. 

ஞாயிறு, 2 நவம்பர், 2025

நவம்பர் 2 - அருண் ஷோரி பிறந்தநாள்

நில்லாமல்  ஓடிக்கொண்டு இருக்கும் காலம் இரக்கமற்றது. மிகப்பெரும் ஆதர்சனங்களாக இருந்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து வீழும் துர்பாக்கியத்தைப் பார்க்கும் வாய்ப்பை அது பலருக்கு அளித்து விடுகிறது. நிறைவேறாத ஆசைகள், கலந்த கனவுகள், ஒட்டாமல் போன உறவுகள் என்று இந்த வரிசை மிகப் பெரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் அப்படி பெரும் ஆளுமையாக விளங்கிய பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான அருண் ஷோரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



மிகப் பெரிய அளவில் அருண் ஷோரி வெளியுலகத்திற்கு தெரியவந்தது எண்பதுகளின் தொடக்கத்தில். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர். பழுத்த காந்தியவாதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரும், பிறவிப் போராளியுமாகிய ராம்நாத் கோயங்காவின் தளபதியாக அருண் ஷோரி செயல்பட்டு வந்தார். கத்தியைக் காட்டிலும் பேனாவின் முனை கூர்மையானது என்பதை பாரத மக்களுக்கு அருண் ஷோரி நிரூபித்துக் காட்டினார். அவரது எழுத்துக்கள் அன்றய மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலேவை ஊழல் குற்றசாட்டுகளால் துளைத்தது. அந்துலே பதவி விலக வேண்டி வந்தது. கோயங்காவும், ஷோரியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் குறிவைத்தது இந்திரா மீதும் அவர் மகன் ராஜீவ் மீதும். அந்துலேவைத் தொடர்ந்து, போபோர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம், ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் முறைகேடுகள் என்று தங்கள் எழுத்துக்களால் அவர்கள் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தனர்.

அன்றய இந்திய ஆட்சிப் பணியில் இருந்த ஹரிதேவ் ஷோரியின் மகனாக 1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் அருண் ஷோரி. ஹரிதேவ் ஷோரி நுகர்வோர் உரிமைக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் அருண் ஷோரி. அதனைத் தொடர்ந்து உலகவங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அதே காலகட்டத்தில் 1972 - 1974ஆம் ஆண்டுகளில் பாரத நாட்டின் திட்டக்குழுவின் ஆலோசகராகவும் இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து ராம்நாத் கோயங்கா அவரது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அந்த போராட்டத்தில் அருண் ஷோரியும் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1979ஆம் ஆண்டு கோயங்கா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக அருண் ஷோரியை நியமித்தார். ஷோரியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயல்களை விமர்சிக்கும் பணி இன்னும் முனைப்போடு நடைபெற்றது. அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு 1982ஆம் ஆண்டு மகாசாய் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களையும் அருண் ஷோரி எழுதியுள்ளார். பொய்யான கடவுளை வழிபடுதல் என்று அம்பேத்கார் பற்றிய புத்தகம், பத்வாகளின் உலகம் என்று ஷரியா சட்டங்களைப் பற்றி, இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி அனிதாவுக்கு பிணை ஆணை கிடைத்தது, இறைவனுக்கு தாயின் மனம் தெரியுமா என்று நரம்பு சீர்கேட்டால் அவதிப்படும் தனது மகனைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களை அருண் ஷோரி எழுதி உள்ளார்.

1998 முதல் 2010ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஷோரி பாஜகவின் மத்திய மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாஜ்பாய் அரசின் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனியார்மயமாக்கல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் ஷோரி பணியாற்றி உள்ளார்.

ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது அவர்க்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை கான்பூர் ஐ ஐ டி நிறுவனத்தில் உயிர் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வகம் அளிக்க அவர் வழங்கினார்.

தற்போதய அருண் ஷோரியின் எண்ணப்போக்கு ஒரே இந்தியா தளத்தின் அலைவரிசைக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், ஆசிரியர் குழுவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் அருண் ஷோரி விளங்கியது என்னவோ உண்மைதான்.

மனம் திருந்திய மைந்தராக தேசத்தின் புனர்நிர்மாணப் பணிக்கு அருண் ஷோரி திரும்பவேண்டும் என்ற பிரார்தனையோடு அவர்க்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

வியாழன், 30 அக்டோபர், 2025

அக்டோபர் 30 - பிரமோத் மகாஜன் பிறந்தநாள்

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும், பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

புதன், 29 அக்டோபர், 2025

அக்டோபர் 29 - கலையரசி கமலாதேவி சட்டோபாத்யாய நினைவு நாள்



பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த பலர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாமல், தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்பது பல நாடுகளில் நாம் காண முடியாத ஓன்று. அப்படி அரசியலை விட்டு விட்டு வேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் கமலாதேவி சட்டோபாத்தியாய அவர்கள்.

மங்களூரில் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிவந்த ஆனந்தைய தாரேஸ்வர் - கிரிஜாபாய் தம்பதியரின் நான்காவது மகளாக 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் கமலாதேவி. கமலாதேவியின் பாட்டி சமிஸ்க்ரித நூல்கள் வழியாக பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தவராக இருந்தார். அவரின் வழிகாட்டல் கமலாதேவிக்கு தேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகுலே, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் அறிமுகம் கமலாதேவியின் சிந்தனைகளை வடிவமைத்தன

இதற்கிடையில் கடுமையான சோதனைகளை கமலாதேவி சந்திக்க நேர்ந்தது.  அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. அப்போது அதுதான் சட்டம். அந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பயனாளி, மாதாமாதம் கமலாதேவி குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த குறிப்பிட்ட அளவு பணத்தை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கமலாதேவியின் தாயார் கிரிஜாபாய் அந்தத் தீர்ப்பை நிராகரித்தார். தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவையில்லை என்று கூறி  தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

கமலாதேவிக்கு அவரின் 14ஆம் வயதில் திருமணமானது. ஆனால் இரண்டே வருடத்தில் அவர் கணவர் மரணமடைந்தார்.  இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா. அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், நாடகக் கலைஞருமான  ஹரிந்தரநாத் சட்டோபாத்யாவை  அறிமுகம் செய்து வைத்தார். இருவரின் கலை ஆர்வமும் ஒன்றாக இருக்க இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தனது 20ஆவது வயதில்  ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என கமலாதேவி முடிவெடுத்தார்.

அன்றய காலகட்டத்தில் இது ஒரு பெரும் புரட்சி.  திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. அவர் லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

ஆனாலும் கமலாதேவியின் திருமண வாழ்வு ஆனந்தமாக இல்லை. அதனால் கமலாதேவி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுவும் அன்று விவாதப் பொருளானது. . ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளம் அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

அகதிகளாக வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் அல்லவா. அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பொருளாதாரத்தை  உருவாக்கும் பொருட்டு
 மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்  கமலா தேவி  என்றால் மிகையில்லை

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்மபூஷன்  விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்மவிபூஷண்  விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது

வாழ்க்கை முழுவதும் ஓயாமல் இயங்கிக்கொண்டு இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் காலமானார். 

செவ்வாய், 28 அக்டோபர், 2025

அக்டோபர் 28 - இந்திரா நூயி பிறந்தநாள்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.