திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 





சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.



1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்   

சனி, 4 ஏப்ரல், 2015

விதி எண் 72


முதலீட்டுக்கான வாய்ப்புகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு வேறு சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். நம் அனைவருக்கும் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்ற ஆசை கட்டாயமாக இருக்கும். அதற்க்கு நமக்கு பணம் வளர்ச்சி அடையும் வேகத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும்.

பள்ளி நாட்களில் நாம் சாதாரன வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றி படித்து இருப்போம். கூட்டு வட்டி என்பது வட்டிக்கு மேல்கிடைக்கும் வட்டி ஆகும். கூட்டுவட்டி முறையில் பணம் வளரும் வேகம் மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக பத்தாயிரம் ரூபாய் 12% வட்டி விகிதத்தில் வளர்ச்சி அடைந்தால் ஆறு வருடத்தில் ( 1,200 * 6) சாதாரண வட்டி முறையில் நமக்கு Rs 7,200/- கிடைக்கும். அதுவே கூட்டுவட்டி என்றால் Rs 9,738/-  கிடைக்கும்.


அதாவது கூட்டுவட்டி முறையில் ஆண்டு ஒன்றிற்கு 12% வளர்ச்சி அடைந்தது என்றல் உங்கள் பணம் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும். ஒரு முறை முதலீடு செய்துவிட்டு, அந்தப் பணத்தை எடுக்காமல், வட்டியையும் மறுமுதலீடு செய்து அதில் கிடைக்கும் வளர்ச்சி செய்தால் கிடைக்கும் வளர்ச்சி பற்றி இங்கே பார்த்தோம்.

ஆனால் ஆறு வருடங்கள் ஆண்டு ஒன்றிக்கு பத்தாயிரம் ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்து அந்தப் பணம் 12% வளர்ச்சி அடைந்தால், ஆறு வருட முடிவில் என்ன கிடைக்கும் என்றால்


அதாவது நீங்கள் முதலீடு செய்த பணம் அறுபதாயிரம் ரூபாய்கள், ஆனால் ஆறு வருட முடிவில் உங்களுக்கு அது தொண்ணூறாயிரம் ரூபாயாகப் பெருகி இருக்கும்.

அது என்ன விதி எண் 72 ?
அது உங்கள் பணம் வளரும் வேகத்தைக் குறிக்கும் எண். உதாரணமாக உங்கள் முதலீடு வருடம் ஒன்றிக்கு 8% வளர்ச்சி காணுகிறது என்றால், அது இரட்டிப்பாகும் காலம்

                         விதி எண்             72
                          -------------   =        -------   =     9 வருடங்கள்.
                         வளர்ச்சி                8

அது போல உங்கள் பணம் நான்கு வருடத்தில் இரட்டிப்பாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்குத் தேவையான வளர்ச்சி

                   விதி எண்             72
                   ----------------  =       ----   = 18 சதவிகிதம்
                   வருடம்                 4


உதாரணமாக உங்களால் மாதம் 2,500/- ரூபாய் சேமிக்க முடியும் என்று எடுத்துக் கொள்ளவோம். அதை முழுவதும் பாதுகாக்கப் பட்ட தேசியமயமாகிய வங்கியில் 7% வளர்ச்சியில் சேமிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சேமிப்பை நீங்கள் வேலை செய்யும் காலம் முழுவதும் தொடர்ந்தால், அதாவது முப்பது வருடம் முறையாகச் சேமித்தால் உங்கள் சேமிப்பு என்பது ரூபாய் ஒன்பது லட்சமாக இருக்கும். சரிதானே. அப்போது முப்பது வருட முடிவில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று நினைகிறீர்கள் ?

உங்களிடம் முப்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். நம்ம முடியவில்லை அல்லவா ? இதைப் பாருங்கள்






நாட்கள் செல்லச் செல்ல உங்கள் பணம் பெருகும் வேகம் அதிகரிப்பதைப் பாருங்கள். ரோமாபுரி நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை நண்பர்களே. எல்லா மிகப் பெரும் சாதனைகளுக்கும் தேவை கடின உழைப்பு, அளவற்ற பொறுமை. போதுமான கால அளவும், சரியான முதலீட்டைக் கண்டுகொள்ளும் திறனும் இருந்தால் நீங்களும் கோடிஸ்வரன் ஆகலாம். பணம் சம்பாதிப்பது என்பது ஓன்று, அதனைப் பாதுகாத்துப் பெருக்குவது என்பது வேறொன்று என்பதை மறக்கவேண்டாம்.

இதே முப்பதாயிரம் ரூபாய் வருடம்தோறும் 12 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றால் முப்பது வருட முடிவில் உங்கள்வசம் எண்பதுலட்ச ரூபாய்கள் இருக்கும்.






இப்போது மாதம் ஒன்றிற்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் எட்டாயிரம் ரூபாய் வெவ்வேறு அளவில் வளர்ச்சி அடைந்தால் முப்பது வருட முடிவில் உங்கள் வசம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம்.



ஆக, சில கோடி ரூபாய்களை கைவசமாக்குவது என்பது இயலாத விஷயம் இல்லை. முடிந்த அளவு சேமிப்பு, அதுவும் தொடர்ச்சியான சேமிப்பு, நீண்ட கால அளவு காத்திருக்கும் பொறுமை இருந்தால் உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எப்போது சேமிக்கத் தொடங்கப் போகிறீர்கள் ?
இன்றே இப்போதே என்பதுதான் பதிலா ?

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்புகள்
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம்   

வியாழன், 2 ஏப்ரல், 2015

முதலீட்டுக்கான சில வாய்புகள்

சரியான அளவில் ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் செய்து கொண்டு, அவசரக்கால தேவைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கான தொகையையும் பாதுகாப்பாக சேமித்துவைத்து விட்டீர்கள். அதனைத்தாண்டியும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் சேமிக்க முடியும், அதனை சரியாக முதலீடு செய்ய நினைகிறீர் என்றால் வாருங்கள் உங்களுக்காகத்தான் இந்தத் தொடர்.

இது நீங்கள் சம்பாதித்த பணம், அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருப்பீர்கள். ஆகவே மற்ற எவரைக்காட்டிலும் அந்தப் பணத்தை பாதுகாப்பதில் உங்களுக்குத்தான் கவனம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமாக இந்தப் பதிவு முதலீட்டுக்கான ஒரு ஆரம்பநிலை தகவல்கள்தானே தவிர உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இங்கே பதில் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாது. உங்கள் தேடல்கள்தான் உங்களுக்கான பாதையை உருவாக்கிகொடுக்கும்.

சேமிப்பு, முதலீடு இவைகளுக்கான வேறுபாடுகளை நாம் ஏற்க்கனவே பார்த்தோம் அல்லவா. உங்கள் சேமிப்பை பணமாகவோ இல்லை தங்க நாணயங்களாகவோ மாற்றி உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பது சேமிப்பு. திருட்டுப் போவதைத்தவிர இந்த சேமிப்பு உங்களை விட்டுப் போகும் அபாயம் வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து இருக்கும் பணம் பொதுவாக வளர்ச்சி அடையாது. அதனால் நாம் இங்கே இதுபோன்ற சேமிப்புகளைப் பற்றி இல்லாது, வளர்ச்சி அடையும் முதலீடு பற்றிதான் பேசப் போகிறோம். ஆனால் வளர்ச்சி விகிதம் கூடும்போது பணத்தை இழக்கும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு இருக்கும் முதலீட்டுக்கான சில வாய்புகள் என்ன என்று பார்த்தோம் என்றால்


1. வங்கி நிரந்தர வைப்புக் கணக்கு ( Fixed Deposit in Banks )
2. நிதி நிறுவங்களின் வைப்புக் கணக்கு ( Non Banking Finance Company - Deposits )
3. சீட்டு நிறுவனங்கள் ( Chit Funds )
4. தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு ( Investment in other commercial business )
5. தங்க நகைகள், தங்க நாணயங்கள் ( Gold Coins, Ornaments )
6. நிலம், வீடு, விவசாய நிலம் ( Land and Property )
7. பங்குச் சந்தை ( Share Market )
8. பரஸ்பர நிதித் திட்டங்கள் ( Mutual Funds )
9. கலைப் பொருள்கள் ( Art Collections )

இவைகளில் வங்கிகளில் நீண்டகால வைப்புக் கணக்கில் அநேகமாகப் பணம் பறிபோகும் வாய்ப்பு இல்லை, ஆனால் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். தேவைப்படும் போது மிகக் குறைந்த காலத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வங்கிகளைக் காட்டிலும் வட்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். இந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். குறுகியகாலத்தில் பணத்தைப் பெறுவது கொஞ்சம் கடினம்.

சிட்டு நிறுவனங்கள் குறுகிய கால சேமிப்பு என்ற பார்வையில் சிறந்தவை, ஆனால் அதிகம் நெறிமுறைப்படுத்தப் படாத தொழில். இழப்பின் வாய்ப்பு அதிகம்.

தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களின் தொழிலில் முதலீடு செய்வது வருமானம் அதிகம் வரும் ஆனால் இழப்பின் வாய்ப்பு மிக அதிகம். கவனம் தேவை.

தங்க நகைகள், தங்க நாணயங்கள் - அநேகமாக மனித சமுதாயம் தொடங்கிய உடனே ஆரம்பித்த சேமிப்பு. நம் எல்லோருக்கும் மனம் கவர்ந்த சேமிப்பு. உடனடியாக விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் செல்லக்கூடிய பொருள். ஆனால் சேமிப்பு என்றால் நகையைக் காட்டிலும் தங்க நாணயங்கள் இன்னும் மேல். நகைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கூலி சேதாரம் என்று இழக்க நேரிடும். பொது ஆண்டு 2000க்குப் பின்னர் அதிகமாக விலை ஏறியது. ஆனால் நீண்ட கால நோக்கில் லாபகரமான முதலீடாக வல்லுனர்கள் பரிந்துரை செய்வதில்லை.

நிலத்தில் சேமிக்க கைவசம் மிக அதிகமான பணம் வேண்டும். விற்பனை செய்வது கடினம். உடனடியாகப் பணமாக மாற்றமுடியாது. சட்டச் சிக்கல்களும், காப்பாற்றக் கடினமானதும் கூட.

பங்குக்சந்தை நீண்ட கால நோக்கில் மிக அதிகமான வருமானத்தைத் தரக்கூடியது. ஆனால் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளையும், அவர்கள் நடத்தும் தொழிலின் சர்வதேச மாற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்துவர வேண்டும். நிபுணர்கள் துணை அவசியம். உங்கள் முதலீட்டை இழக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் - பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மிகச் சிறந்த வழி. நிறுவனங்களின் நிபுணர்கள் வழிகாட்டலில் முதலீடு நடப்பதால் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பானது. தொடர்ச்சியான நீண்டகால முதலீடிற்கு சிறந்த வழி. முதலீட்டை இழக்கும் வாய்ப்பு நேரடியான முதலீட்டை விடக் குறைவு.

கலைப் பொருள்களில் முதலீடு செய்வது இன்னும் இந்தியாவில் வளர்ச்சி அடையாத துறை. சரியான, உண்மையான கலைப் பொருள்களைக் கண்டு அறியப் பயிற்சி தேவை. போலிகள் பல நடமாடும் துறை. சாதாரண முதலீட்டாளர்கள் இதனைத் தவிர்த்து விடுவது நலம்.

உதாரணமாக அஞ்சல் துறை சேமிப்பு, காப்பீட்டில் சேமிப்பு என்று, இங்கே கூறியதைத் தாண்டியும் முதலீடு செய்யப் பல வழிகள் இருக்கலாம்.  நாம் இங்கே பொதுவாக மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கும் துறைகளைப் பற்றித்தான் பேசி இருக்கிறோம்.

ஓரளவிற்கு பல்வேறு சேமிப்புக்கான வழிகளையும், அதில் உள்ள சாதக பாதகங்களையும் இப்போது நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்பட்டு கைவசம் இருக்கும் பணத்தை இழந்து விடாதீர்கள். அதுபோல உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல், பல்வேறு இடங்களில் பரவலாக்குங்கள். வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்யும்போது பணம் பறிபோகும் வாய்ப்பு மிகவாகக் குறைகிறது.



உங்களின் ஆசைகளைக் கனவுகளை இப்போது வரிசைப்படுத்தி எழுதுங்கள். இன்றிலிருந்து எந்த காலகட்டதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்கிடுங்கள். உதாரணமாக நீங்கள் வசிக்க ஒரு வீடு வாங்க எண்ணினால், எந்த வருடம் வாங்கப் போகிறீர்கள், அதற்க்கு எத்தனை பணம் தேவைப் படும் என்று யோசியுங்கள். உங்கள் குழைந்தைகளின் மேற்ப்படிப்பு, அவர்கள் திருமணம் இவைகளுக்கு எந்த வருடம் எவ்வளவு தேவைப்படும், உங்களுக்கான ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு தேவைப்படும் என்பதை எழுதிப் பார்த்தல், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்ல நினைக்கிறீர்கள், அதற்க்கான கால அவகாசம் உங்களிடம் எவ்வளவு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்போது நீங்க செல்ல நினைக்கும் இடத்திற்கு எப்படிப் போவது, அதற்க்கு எங்கே சேமிப்பது சரியாக இருக்கும் என்பதை மிக எளிதாகத் திட்டம் இட்டுவிடலாம்.


தொடர்புடைய பதிவுகள் 

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை 
பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்காலத் தேவைகளுக்கு 

செவ்வாய், 31 மார்ச், 2015

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை

சேமிப்புக்கான முதல் விதி என்ன என்றால் ஒருபோதும் வருமானத்திற்கு மேலாகச் செலவு செய்யக்கூடாது என்பதுதான். வரவு எட்டணா ஆனால் செலவு பத்தணா என்றால் கடைசியில் துந்தணாதான். நம்மில் பலருக்கு வருமானம் என்பது நிலையானதாகவே இருக்கும், ஆனால் செலவுகள்தான் நிலையானதாக இருக்காது.

நமது செலவுகளை திட்டமிட்ட செலவுகள் என்றும் திட்டமிடாக திடீர் செலவுகள் என்றும் பிரிக்கலாம். வீட்டு வாடகை அலது வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, நாம் பயன்படுத்தும் வண்டிக்கான தவணை, அதற்கான எரிபொருள், பராமரிப்புச் செலவு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாரதிர்க்கான கட்டணம், குழந்தைகளுக்கான கல்விக்கான செலவு, பால், அரிசி, மலிகைச்சாமான்கள் இன்னபிற உணவுப் பொருள்களுக்கான தேவை என்பவை திட்டமிட்டச் செலவுகளில் அடங்கும்.

எதிர்பாராமல் வரும் உடல்நலக் குறைவு, சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ள கைபேசி, தொலைகாட்சி ஆகியவற்றை வாங்குவது இவை எல்லாம் திட்டமிடாத செலவுகளில் வரும். உறவினர்கள் வீட்டு விசேச நிகழ்சிகள், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இதற்க்கான செலவுகள் ஒரு தனி அணியாக இருக்கும்.

சேமிப்பு என்றால் சாதாரணமாக நாம் அனுபவிக்கவேண்டிய விசயங்களைக் கூட அனுபவிக்காமல் கஞ்சத்தனமாக இருப்பது இல்லை. ஆனால் தேவைற்ற செலவுகளைக் குறைப்பதும் முடிந்தால் அவற்றை அறவே நிறுத்துவதும்தான் வாழ்கையை வாழும் வழி. வாழ்க்கை என்பது ஒருமுறைதான் நமக்குக் கிடைப்பது, அதை முறையோடு அனுபவிக்காமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களைப் பற்றி ஔவை

பாடுபட்டுத் தேடித் பணத்தைப் புதைந்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு 
ஆவிதான் போனபின்பு யாரோ அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம் ?  
என்று வினவுகிறார்.


ஆனால் அதே நேரத்தில் முதலுக்குமேல் செலவு செய்தால் என்ன நடக்கும் என்றால்
ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை 
எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு 

ஆகவே, உங்கள் செலவுக் கணக்கை முறையாக எழுத ஆரம்பியுங்கள். எழுதிப் பார்க்கும்போது எவை எல்லாம் தேவையான செலவுகள், எவை எல்லாம் தேவையற்ற தவிர்க்கக்கூடிய செலவுகள் என்பதனை நாம் கண்டுகொள்ள முடியும். சந்தையில் கிடைக்கும் பொருள்களில் பல நமக்கு தேவை இல்லாத பொருள்களே. எந்தப் பொருளை வாங்குமுன்பும் ஒருமுறைக்கு இருமுறை அந்தப் பொருள் நமக்குத் தேவைதான என்பதை யோசித்துப் பாருங்கள். 75% தள்ளுப்படி, அடக்கவிலைக்கே விற்பனை, ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் என்ற விளம்பரங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை தங்கள்வசம் இழுக்க விற்பனையாளர்கள் கையாளும் யுக்தி. அதில் மயங்கி தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள்.

கடன் அட்டையை உபயோகப்படுத்தி, அதையும் தவணை முறையில் அல்லது குறைந்த அளவிலான பணத்தைச் செலுத்துவது என்பது மீளமுடியாத குழியில் விழுவதற்குச் சமம். குறிப்பிட்ட காலஅளவை தாண்டினால் கடன் அட்டைகளின் வட்டிவிகிதம் ஏறத்தாழ 30% மேல் போகும்.

உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை விட  பலரிடம் அதிகமான பொருள்கள் இருக்கும். உங்களிடம் எவ்வளவு குறைவாக இருந்தாலும்  பலரிடம் அதனைவிட குறைவான பொருள்களே  இருக்கும்.  ஒருபோதும் மற்றவர்களைப் பார்த்தோ அல்லது பிறர் உங்களைப் புகழவேண்டும் என்றோ தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள். மற்றவர்களுக்காக பகட்டாகக் காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்க்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருள்களை வாங்காமல் இருந்தால் அதுவும் சேமிப்புதான்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

தொடர்புடைய பதிவுகள் 
பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்கால தேவைகளுக்கு   

ஞாயிறு, 29 மார்ச், 2015

பணவீக்கவிகிதம் - ஒரு எளிய அறிமுகம்

இதுவரை நாம் சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதைப் பற்றியும், மருத்துவக் காப்பீடு பற்றியும், அவசரத் தேவைக்கு தேவைப்படும் அளவிற்கு பணத்தைத் தனியாக வைத்துக் கொள்வது பற்றிப் பார்த்தோம்.

இதை எல்லாம் சரியாக முடித்த பின்னரே நாம் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். நம்மில் பலர் முதலீட்டையும் சேமிப்பையும் ஓன்று என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சேமிப்பு என்பது பணத்தைச் சேகரித்து அதனைப் பாதுகாப்பாக வைத்து இருப்பது. ஆனால் முதலீடு என்பது அப்படிச் சேமித்த தொகையில் இருந்து வருமானம் வரும் வகையில் சரியாகப் பயன்படுத்தும் வழியாகும். பொதுவாக சேமிப்பு என்று வரும் போது அதில் பணத்தை இழக்கும் சந்தர்ப்பம் இருக்காது. ஆனால் முதலீடு என்று வரும்போது, பணத்தை இழக்கும் வாய்ப்பு உண்டு. பணத்தை முதலீடு செய்யும் போது அதிக வருமானம் என்றால் இழக்கும் வாய்ப்பு அதிகமாகவும், வருமானம் குறையும் போது இழக்கும் வாய்ப்பு குறைவாகவும் இருக்கும்.

இதுபோக, சேமிப்போ அல்லது முதலீடோ பணவீக்க விகிதத்தைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும். பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்துக் கொண்டு நாம் வாங்கும் பொருளின் அளவு. உதாரணமாக 1985ல் ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் 2015ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் அறுபத்தி இரண்டு ரூபாய் கொடுக்கிறோம். அதாவது ஒரே பொருளுக்கு ஏறத்தாழ எட்டு மடங்குக்கு மேலே நாம் இன்று செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது அந்த அளவிற்கு இந்திய ரூபாய் தனது வாங்கும் சக்தியை இழந்து உள்ளது என்று பொருள்.

வல்லுனர்கள் கணிப்பின்படி இந்தியாவில் பணவீக்க விகிதம் என்பது எட்டு சதவிகித அளவில் இருக்கிறது. அப்படி என்றால் சென்ற வருடம் நீங்கள் நூறு ரூபாய் செலவில் வாங்கிய பொருளுக்கு இன்று நூற்றி எட்டு ரூபாய் செலவு செய்யவேண்டி இருக்கும். விலைவாசி அதிகரித்துவிட்டது என்று நாம் பேசுவது இந்தப் பணவீக்க விகிதத்தைப் பற்றிதான்.

பணவீக்கவிகிதம் எட்டு சதவிகிதம் என்றால் எல்லாப் பொருள்களும் ஒரே போன்று விலை ஏறியிருக்க வேண்டியது இல்லை. காய்கறிகள் ஐந்து சதவிகிதமும், உணவுப் பொருள்கள் பத்து சதவிகிதமும், வாடகை பதினைந்து சகவிகிதமும் கூடி, இது போன்று சராசரியாக எட்டு சதவிகிதம் என்று ஆகி இருக்கலாம்.

மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைத்து இந்தப் பணவீக்க விகிதம் மிகப் பெரிய அளவில் கூடாமலும் குறையாமலும் இருக்கும் வழிகளைக் கையாண்டு வருகின்றன. வங்கிகளில் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதின் மூலமும், சந்தையில் புழங்கும் பணத்தின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்க விகிதத்தை அவை சமன் செய்கின்றன.

சேமிப்போ அல்லது முதலீடோ, உங்கள் பணம் வளர்ச்சி அடையும்  அளவு என்பது இந்தப் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உண்மையில் உங்கள் கைவசம் இருக்கும் பணம் அதன் மதிப்பை இழந்துகொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சமாக  ஆரம்பநிலைப் பொருளாதார தகவல்களைப் பற்றிய புரிதல்களை கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சேமிப்பு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வளர்ச்சி காண்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


தொடர்புடைய பதிவுகள் 

அவசரக்காலத் தேவைகளுக்கு 
நினைவில் வைக்க 

வெள்ளி, 27 மார்ச், 2015

அவசரக்காலத் தேவைகளுக்கு

தனி மனிதனின் பொருளாதாரக் கனவு என்பது நான்கு அடுக்குகளைக் கொண்டது. ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் முதல் இரண்டு அடுக்குகள் என்றால், அவசரத் தேவைக்கான பணமும், சரியான முதலீடுகளும் அடுத்த அடுக்குகளாக ஆகும்.

இன்றைய நிலையில் நம்மில் யாருடைய வேலையும் நிரந்தரமானது இல்லை. தென்னைமரத்தில் தேள் கொட்டினால், இப்போது நிச்சயமாக பனைமரத்தில் நெறிகட்டுகிறது. உலகில் எங்கோ நடக்கும் எதோ ஒரு நிகழ்ச்சி, வேறு எதோ இடத்தில எதிரொலிக்கிறது. எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வேலை போய்விடும் சாத்தியக்கூறு எல்லார் வாழ்க்கையிலும் பிரிக்கமுடியாத உண்மையாக ஆகிவிட்டது.

இந்த நேரத்தில், அப்படி ஏதாவது ஒரு பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள போதுமான பணம் கைவசம் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஆறுமாத செலவுகளை சமாளிக்கும் அளவில் கைவசம் பணம் இருக்க வேண்டும் என்று பொருளாதார விற்ப்பனர்கள் கருத்து சொல்கிறார்கள்.

இந்த அவசரகால பணம் என்பது உங்கள் செலவுகளை ஆறுமாதம் சமாளிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும், உங்களது ஆறுமாத வருமானமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஒரு மாதத்திற்கான மிக அவசியமான செலவுகள் என்னவெலாம் என்பதைக் எழுதிப் பாருங்கள். நம் தேவைகள் ஒன்றாகவும் நமது ஆசைகளும் விருப்பங்களும் (needs & wants/desires) வேறொன்றாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பணம் என்பது தேவைப்படும் போது உடனே கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும். இந்தப் பணத்தை எந்த விதமான நிலையிலும் இழப்பை ஏற்ப்படுதாத வகையில் சேமிக்கப்பட வேண்டும். இந்தச் சேமிப்பில் மிகப் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம்.

பொதுவாக இந்த அவசரகால தேவைக்கான பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கிலோ அல்லது குறுகிய கால வைப்புத் திட்டங்களிலோ (Short Term Deposit) வைத்து இருக்கலாம். இந்த வகையில் எப்போது தேவையோ அப்போது இந்தப் பணத்தை திரும்பிப் பெற எளிதாக இருக்கும்.

1. உங்கள் ஆறுமாத அத்தியாவசியத் தேவைகள் எவையெல்லாம் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
2. சிறிய அளவிலாவது அந்தக் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பியுங்கள்.
3. குறிப்பிட்ட கால அளவில் அந்தப் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
4. அந்த இலக்கை எட்டும்வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
5. உங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை, மற்றும் வருமான வரித்துறையில் இருந்து திரும்பி வரும் தொகை போன்றவற்றை இந்த சேமிப்பில் செலுத்துங்கள்.
6. எந்தவிதமான பிரச்னையும் வராத முழுவதும் பாதுகாப்பான இடத்தில இந்த சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

இதுவரை இல்லை என்றால் உடனே செயல்படுத்தத் தொடங்குங்கள்.   

புதன், 25 மார்ச், 2015

நினைவில் வைக்க

பொருள் சம்பாதிப்பது தவறு என்றோ இல்லை பணத்தைச் சேமிப்பது தவறு என்றோ நான் நினைக்கவில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கு அழிக்கும்
எக்கு அதன் கூரியது இல் ( 759)

மிகத் தெளிவாக வள்ளுவர் செய்க பொருளை என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அந்தப் பொருள் என்பது சரியான வழியில் சம்பாதித்த வருமானமாக இருக்கவேண்டும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் ( 754)

சட்டப்படி சரி என்பதற்கும் அறநெறிக்கு உட்பட்டு என்பதற்கும் மிகச் சிறிய இடைவெளி உண்டு. ஆகவே சட்டப்படி மட்டுமல்லாது தர்மப்படியும் சரியான முறைப்படியே செல்வத்தை உருவாக்கவேண்டும்.

செல்வதைச் சேர்ப்பதற்கான வழிமுறையை அறிவதும், சரியான வழியில் அந்தப் பொருளை ஈட்டுவதும், ஈட்டிய பொருளைக் காப்பதும், அதனைப் பெருக்குவதும் அப்படிச் சேர்த்த பொருளை நல்ல வழியில் செலவு செய்வதும் அரசுக்கு மட்டும் இல்லை, தனிமனிதனுக்கும் ஏற்புடையதுதான்.

இதுவரை நாம் தனிமனிதனின் பொருளாதாரக் குறிக்கோளை நிறைவேற்ற சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்ய வேண்டியதின் அவசியம் பற்றியும், மனித உயிரின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்வது என்பது பற்றியும், மருத்தவக் காப்பீடு செய்வதன் தேவைகளைப் பற்றியும் பார்த்தோம்.

மற்ற எந்த பொருளையோ அல்லது சேவையையோ ஒரு வாடிக்கையாளராக நாம் வாங்குவதற்கும், காப்பீட்டை வாங்குவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த இரண்டு விற்பனைகளும் 1872 ஆம் வருடத்திய இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படியே நடந்தாலும் ( Indian Contract Act 1872 )  மற்றையப் பரிமாற்றங்கள் எல்லாம் CAVEAT EMPTOR  ( buyer's beware ) அதாவது வாங்குபவர்களின் கவனம் அவசியம் என்ற முறையில் செயல்படுகின்றது. தனக்குத் தேவையான பொருளை அல்லது சேவையை வாங்கும் வாடிக்கையாளர்,  பொருள்களின் சிறப்பை, அதற்க்கான விலையை மற்றும் இதர விசயங்களை சந்தையில் கிடைக்கும் அதே போன்ற பொருளோடு அல்லது சேவையோடு ஒப்பிடு முடிவு எடுத்துக்கொள்ளட்டும் என்ற முறையில் இயங்குகிறது. 

ஆனால் காப்பீடு துறையோ UBERRIMA FIDES  ( at most good faith ) என்ற முறையில் இயங்குகிறது. காப்பீடுத் துறையில் வாடிக்கையாளர் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடை வழங்குகின்றன. எனவே காப்பீடு நிறுவனங்கள் கேட்கும் தகவல்களை முழுமையாக, உண்மையாகத் தரவேண்டிய பொறுப்பு வாடிக்கையாளர்கள் வசமே இருக்கிறது. 

பொதுவாக, காப்பீடு செய்து கொள்ளுபவர் தங்கள் உடல் நிலை பற்றிய முழுமையான தகவல்களையும், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தகவல்களையும் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல், காப்பீடு நிறுவனத்திற்க்கு அளிக்க வேண்டும். இந்தத் தகவல்களைக் கொண்டே, நிறுவனங்கள் காப்பீடுக்கான தொகையை நிர்ணயம் செய்யும். 

ஆக, நேர்மையான முறையில் பொருளீட்டி, சரியான தகவல்களைக் கொடுத்து, எந்த உண்மைகளையும் மறைக்காமல் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

உங்கள் பார்வைக்கு :

1. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு ரூ ஐந்து லட்சம் அளவிலான ஆயுள் காப்பீடு (Endowment Plan)  முப்பது வருடத்திற்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 16,100

2. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு முப்பது வருடத்திற்கான  ஒரு கோடி ரூபாய்க்கான இறப்பு மட்டுக்குமான ( Term Insurance ) காப்பீடுக்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 33,600

3. முப்பத்தி ஐந்து வயதான ஆண் மகனைத் தலைவனாகக் கொண்ட குடும்பத்திற்கு ( மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு) ஐந்து லட்ச ரூபாய்க்கான    Floater முறையிலான மருத்துவக் காப்பீடுக்கான  வருடாந்திரப்  பிரிமியம் : Rs 10,600/-

மேற்குறிப்பிட்ட பிரிமியம் தொகைகள் சேவை வரி சேர்க்காமல்.
இவை இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் ( Life Insurance Corporation of India ), ஸ்டார் இன்சூரன்ஸ் கம்பனியின் பிரிமியம் தொகை. 

தொடர்புடைய பதிவுகள்.