திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 

சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்   

2 கருத்துகள்:

  1. Good One ..But //அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். // is a bit confusing and could have been avoided.Thanks

    பதிலளிநீக்கு