ஞாயிறு, 20 ஜூலை, 2025

ஜூலை 20 - மறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் நினைவுநாள்

பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மண்ணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று.



எந்த ஒரு பாரதியரும் இல்லாமல் உருவான சைமன் குழுவை நாடு புறக்கணிக்க முடிவு செய்தது. சைமன் குழுவை புறக்கணித்து லாகூர் நகரில் நடந்த அமைதியான ஊர்வலத்தை பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையேற்று நடத்தினார். அன்றய ஆங்கில காவல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் கண்மூடித்தனமாகத் தாக்கினான். குண்டாந்தடிகளின் அடியை உடல்முழுதும் ஏந்திய லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் மரணமடைந்தார். " என்மீது விழுந்த அடிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியை மூடும் ஆணிகள்" என்று அவர் கூறினார்.

தலைவரின் மரணத்திற்கு பழிவாங்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது. 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி காவல் அதிகாரி சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய  இந்திய சோசலிச குடியரசு ராணுவத்தைச் ( Hindustan Socialist Republic Army ) சார்ந்த பகத்சிங்கும் அவர் நண்பர்களும் இந்த பழிவாங்குதலை செய்துமுடித்தார்கள்.

காது கேளாத அரசுக்கு கேட்கவேண்டுமானால் நாம் உரக்கத்தான் பேசவேண்டும் என்று முடிவு செய்த இளைஞர் படை நாட்டின் பாராளுமன்றத்தின் உள்ளே வெடிகுண்டை வீச முடிவு செய்தது. அது 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.  பாராளுமன்ற கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்தனர். தங்கள்வசம் இருந்த வெடிகுண்டுகளை ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி வீசினார். யாரையும் கொல்ல வேண்டும் என்று நினைக்காததால், அந்த குண்டு பெரும் சத்தத்தையும் புகையையும் மட்டுமே வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் குண்டு வீசிய இளைஞர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. " புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக" என்றே அவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அந்த இளைஞர்களில் ஒருவர் பகத்சிங். இன்னொருவர் படுகேஸ்வர் தத். பகத்சிங்கை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க முடியாதவர்களால் படுகேஸ்வர் தத் பெயரை மறைக்க முடிந்ததுதான் இந்த தேசத்தின் சோகம்.

1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் இன்றய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த தத், கான்பூர் நகரில் கல்வி கற்றார். அபோது சந்திரசேகர ஆசாத் போன்ற புரட்சியாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கையெறி குண்டுகள் தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் தத்தும் பகத்சிங்க்கும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளை முறையாக நடத்தவேண்டும் என்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தோழர்கள் தொடங்கினார்கள். ஓரளவுக்கான வசதிகளும் சலுகைகளும் அரசியல் கைதிகளுக்கு வழங்க ஆங்கில அரசு ஒத்துக்கொண்டது.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். படுகேஸ்வர் தத் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரை காசநோய் பற்றியது. விடுதலையான படுகேஸ்வர் தத் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர், அரசின் உதவிக்காக விண்ணப்பித்த அந்த வீரனுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. வறுமையிலும் காசநோயால் வாடிய அந்த வீரன் 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்ப்பூர் நகரின் அருகே உள்ள ஹுசைனிவாலா என்ற கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகாக்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடுகாட்டில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. வீரத்தையும், தேசபக்தியையும் விதைத்த அந்த மாவீரனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

குறைந்தபட்சம் போற்றப்படாத, பாராட்டப்படாத, சொல்லப்படாத அந்த தியாகிக்கு ஒரு துளி கண்ணீரை நாம் இன்று காணிக்கையாகச் செலுத்துவோம்.

ஜூலை 19 - வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம்

பாரத நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு இன்று. 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாம் அரசு 14 பெரும் வங்கிகளை தேசியமயமாகியது. அரசாங்கம் ஒரு முன்னெடுப்பைச் செய்கிறது என்றால் அதன்பின் உள்ள சமூக, பொருளாதார காரணிகளை மட்டுமல்லாது அரசியல் பின்புலத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.



நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை அடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்தார். நாடு இரண்டு பெரும் போர்களை சந்தித்து இருந்தது. சீனாவுடனான போரில் தோல்வியும், அதன் பின்னர் பாகிஸ்தானுடனான போரில் வெற்றியும் பெற்றிருந்தது. கம்யூனிச, சோசலிஸ சித்தாந்தங்கள் கவர்ச்சியாக தோன்றிய காலம் அது. ஆனால் அதற்கு நேரெதிராக வலதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் ஸ்வதந்த்ரா மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆகிய கட்சிகளும் வலுவோடு இருந்தன. அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்டுவிட்டால் பெருமளவு வறுமைநிலை மாறிவிடும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்கள் ஏமாற்றத்தில் இருந்த காலம்.

சாஸ்திரிக்குப் பிறகு யார் ? சங்கடமான இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு காமராஜரிடம் வந்தது. அவரது தேர்வு இந்திரா பிரியதர்சினி காந்தியாக இருந்தது. மொரார்ஜி தேசாய்க்குப் பதிலாக காங்கிரஸ் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்தது. அப்போது இந்திராவிற்கு வயது நாற்பத்தி ஒன்பது மட்டுமே. நேருவின் மகள் என்பதைத் தவிர வேறு எந்த பின்புலமும் இல்லாதவர், அதனால் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று மக்கள் நினைக்க, இந்திராவிற்கு வேறு எண்ணங்கள் இருந்தன. வலிமைவாய்ந்த மாநிலத்தலைவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாக அவர் இருக்க விரும்பவில்லை. கவர்ச்சிகரமான கோஷங்கள், அதிரடியான செயல்கள் மூலம் அவர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்பினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல், வலிமையான மாநில தலைவர்களை இல்லாமல் ஆக்கி, அங்கே தனக்கு கட்டுப்பட்ட ஆட்களை நியமித்தல் என்று அவர் திட்டமிடத் தொடங்கினார்.

இன்றய வடிவிலான வங்கி சேவை என்பது 1770ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிந்துஸ்த்தான் வங்கி என்ற நிறுவனத்தின் மூலம் பாரத நாட்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1796ஆம் ஆண்டு ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. 1806ஆம் ஆண்டு பேங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி பேங்க் ஆப் பெங்கால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1840ஆம் ஆண்டு பேங்க் ஆப் பாம்பே மற்றும் 1843ஆம் ஆண்டு பேங்க் ஆப் மதராஸ் ஆகிய வங்கிகள் உருவானது. 1921ஆம் ஆண்டு இந்த மூன்று வங்கிகளும் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்று ஆனது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 1955ஆம் ஆண்டு இந்த வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக உருவெடுத்தது. 1959ஆம் ஆண்டு அன்றய சமஸ்தானங்கள் நடத்திவந்த வங்கிகள் ஸ்டேட் பாங்கின் துணை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டுதான் ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்த போது பல்வேறு வங்கிகளை தேசியத்தலைவர்கள் உருவாக்கினார்கள். 1894ஆம் ஆண்டு லாகூர் நகரில் பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவப்பட்டது. கத்தோலிக் சிரியன் பேங்க், கார்பொரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகியவை இன்றுவரை இயங்கிக் கொண்டு உள்ளன. ஆனால் இதற்கிடையே பல்வேறு வங்கிகள் திவாலானதும் நடந்தது.

பல்வேறு வங்கிகள் வெவ்வேறு தொழில்நிறுவங்களால் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சேமிக்கும் பணத்தை வங்கி நிர்வாகம் தங்களின் முதலாளிகளாக தொழிலதிபர்களுக்கு கடனாகக் கொடுத்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதனாலோ பெரும்தொழிலதிபர்கள் மீது இந்திராவுக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. கடுமையான சோசலிஸ பொருளாதாரத்தை அவர் முன்னெடுத்தார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க அனைவரையும் ஏழைகளாக மாற்றும் திட்டம்தான் செயலில் இருந்தது.

வங்கி சேவை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற அரசின் முக்கியமான திட்டங்களுக்கு கூடுதல் கடன் அளிக்கப்படவேண்டும். இதற்க்கு வங்கிகள் தனியார்வசம் இருந்தால் சரிப்படாது, அவை அரசின் கைவசம் இருக்கவேண்டும் என்று இந்திரா நினைத்தார்.

1966இல் இந்திரா பதவியேற்றத்தில் இருந்து 1969 ஜூலை மாதத்திற்குள் என்ன நடந்தது என்பதையும் நாம் இங்கே பார்க்கவேண்டும். அதில் மிக முக்கியமானது 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைக்கான நான்காவது பொது தேர்தல். முதல் மூன்று பொதுத்தேர்தல்களை காங்கிரஸ் கட்சி நேருவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்று இருந்தது. 1962ஆம் ஆண்டு தேர்தலில் அது 361 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 283 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனசங், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சி, ஸ்வதந்திரா கட்சி, திமுக ஆகிய கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தன. அதோடு ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து இருந்தது.

கல்வியாளரும்  நாட்டின் மூன்றாவது குடியரசுத்தலைவருமான ஜாகிர் ஹுசைன் எதிர்பாராத விதமாக 1969ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி குடியரசின் தாற்காலிகத் தலைவராக பதவி ஏற்றார். குடியரசுத்தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தியது. ரிசெர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் என்ற பெருமையைப் பெற்ற திரு சி டி தேஷ்முக்கை எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளராக அறிவித்தன. சுயேச்சை வேட்பாளராக வி வி கிரி களமிறங்களினார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் மனச்சாட்சியின்படி ஓட்டளிக்குமாறு இந்திரா கேட்டுக்கொண்டார்.

ஜூலை 20ஆம் தேதி கிரி, குடியரசின் தாற்காலிகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்தினம் ஜூலை 19ஆம் தேதி வங்கிகள் தேசியமாகும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பதினான்கு பெரும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. மீண்டும் 1980ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதில் நியூ பேங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் பாங்கோடு இணைக்கப்பட்டது.

பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்த சிறிய தனியார் வங்கிகள் அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டன. உதாரணமாக மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பாண்டியன் வாங்கி கனரா பாங்கோடும், தஞ்சாவூரைச் சார்ந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் இந்தியன் பாங்கோடும், நெல்லையைச் சார்ந்த பேங்க் ஆப் தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியொடும் இணைக்கப்பட்டன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் வங்கி சேவைகள் நாடெங்கும் பரவியது. கிராமங்களில் கூட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. அதுவரை வங்கி சேவைகளை உள்வாங்காத மக்களுக்கு சேவைகள் அளிக்கப்பட்டன. விவசாயம், சிறுதொழில் போன்ற அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவில் கடன் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையால் பெரும் மாற்றங்கள் உருவானது. வங்கி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதனால் வேலைவாய்ப்பு பெருகியது.

அதே நேரத்தில் வங்கியில் உள்ள மக்களின் பணத்தை அரசியல் லாபத்திற்காக கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அள்ளி விடுவதும் நடந்தது. 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஜனார்தன் பூஜாரி  கடன் திருவிழாக்களைத் தொடங்கி வைத்தார். வங்கி கடன்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்கள் வாக்குவங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உருவானது.

சக்கரம் சுழன்றது. 90களில் உருவான பொருளாதார தாராளமயமாக்கல் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. குறைவான பணியாளர்கள், தொழில்நுட்ப வசதிகள் மூலம் துரிதமான சேவை, அதிக கட்டணம் என்ற புதிய போக்கு உருவானது.

இன்று பல்வேறு வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு, பலரும் அந்தப் பங்குகளை வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை, வங்கிகளின் தேசியமயமாக்கலும் அதுபோன்றதுதான். நாம்தான் வரலாற்றில் இருந்து பாடம் படித்து, நல்லவற்றை அதிகரித்து தீமைகளை கூடியவரை குறைத்து செயல்படவேண்டும்.

ஜூலை 18 - மைசூரின் கடைசி மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையார் பிறந்தநாள்


மைசூர் சமஸ்தானத்தின் இருபத்தி ஐந்தாவது மஹாராஜாவும் ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பரம்பரையின் கடைசி வாரிசாகவும் இருந்த மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் பிறந்தநாள் இன்று.

மைசூரின் மன்னராக இருந்த நாலாம் கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரர் இளவரசர் நரசிம்மராஜஉடையார். இளவரசர் நரசிம்மராஜ உடையாரின் மகனாகப் பிறந்தவர் ஜெயசாம்ராஜேந்திர உடையார். தந்தை இறந்ததால் இவர் இளவரசனாக நியமிக்கப்பட்டார். மஹாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் மறைவுக்குப் பிறகு ஜெயசாம்ராஜேந்திர உடையார் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக 1940ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். 1947ஆம் ஆண்டு பாரத நாடு சுதந்திரம் அடையும் நேரத்தில் மஹாராஜா தனது சமஸ்தானத்தை பாரத நாட்டோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதோடு தனி மைசூர் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்து கர்நாடக மாநிலமாக உருவானது.

ஜெயசாம்ராஜேந்திர உடையாரை மைசூர் சமஸ்தானத்தின் ராஜபிரமுக் என்ற பதவியில் பாரத அரசு நியமித்தது. அதன் பின்னர் மதராஸ் மாகாணம் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இருந்த கன்னட மொழி பேசும் இடங்களை இணைத்து உருவான மைசூர் மாகாணத்தின் ஆளுநராகவும், அதன் பின்னர் அன்றய  மதராஸ் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.

பொதுவாகவே மைசூர் மன்னர்கள் நாட்டு மக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்கள். ஜெயசாம்ராஜேந்திர உடையாரும் அவர் காலத்தில் கல்வி அறிவைப் பரப்ப பெரும்பணத்தை ஒதுக்கினார். மருத்துவம், விவசாயம், தொழில்துறை ஆகிய துறைகளிலும் மைசூர் சமஸ்தானம் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்தது.

அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் பவ்லி என்பவரோடு இணைந்து இந்திய தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் கொடுத்த திட்டத்தை ஏற்று பெங்களூரு நகரில் இந்தியன் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மஹாராஜா தொடங்கினார். விமானங்களை உருவாகும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பாரத நாட்டின் பாதுகாப்புதுறையில் முன்னணியில் உள்ளது.

ஜெயசாம்ராஜேந்திர உடையார் கர்நாடக இசையிலும், மேற்கத்திய இசையிலும் திறமைசாலியாக விளங்கினார். தனது தாயிடம் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட மஹாராஜா பல்வேறு மேலைநாட்டு இசை விற்பனர்களுக்கு உதவி செய்தார். கர்நாடக இசையிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கிய மஹாராஜா 94 சாகித்யங்களை இயற்றியுள்ளார். ஸ்ரீ வித்யா என்பது இவர் இயற்றிய சாகித்யங்களில் இவரது முத்திரை சொல்லாகும்.

இந்திய தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயசாம்ராஜேந்திர உடையார் வேதாந்தம் பற்றி, கீதை பற்றி, இந்திய தத்துவவியல் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். பல்வேறு சமிஸ்க்ரித நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்க்கும் அமைப்பை நிறுவி அதன் புரவலாராகவும் இருந்தார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தி உள்ளன.

வழமையான சாம்ராஜ்யத்தின் மன்னராகத் தொடங்கி, பல்வேறு துறைகளில் பெரும்பங்களிப்பை நல்கிய அரசர் தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் காலமானார். 

வியாழன், 17 ஜூலை, 2025

ஜூன் 17 - வீர வாஞ்சியின் பலிதான நாள்

ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து ஸ்வதேசி கப்பல் கம்பெனியை நடத்தி, தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளிகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் வ உ சி அவர்கள். அவரையும், சுப்ரமணிய சிவாவையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்தது ஆங்கில அரசு.

வஉசி கைதானபின்பு அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் ஆக்க முழு மூச்சாய் செயல்பட்டவன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். அந்தக் கொடுமையை கண்டு சகிக்காமல் நீலகண்ட ப்ரம்மச்சாரியின் தோழர்கள் ஆஷை கொலை செய்ய முடிவு செய்கின்றனர். அதன் படி ஆஷை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றவர் வாஞ்சி நாதன். அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வரலாறுதான் இது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நகர்ப்புற நஸ்சல் கூட்டங்களும், இந்தியாவை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் சில வெளிநாட்டு புல்லுருவிகளும் புதிய கதை ஒன்றை உருவாக்குகின்றனர். இதற்கு பின்புலமாக நிற்பது பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி நிர்வாகம்.

இவர்கள் எழுதும் கதையின் படி ஆஷ் குற்றாலத்து அருவிகளில் எல்லா ஜாதிகளும் குளிக்கலாம் என்று ஆணை பிறப்பித்ததாகவும், பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்த பட்டியல் இனப் பெண்ணை செங்கோட்டை நகர அக்கிரகாரத்தில் வழியே அழைத்துச் சென்றதாகவும் அதனால் கோபமடைந்த பிராமணர்கள் ஆஷை கொன்றுவிட்டார்கள் என்றும் ஆஷ் எதோ ஒரு புரட்சி நாயகன் என்றும் சித்தரித்து வருகிறார்கள்.

முதலில் திருநெல்வேலி கலெக்டர் அதிகாரம் செங்கோட்டை நகரில் செல்லாது, அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த பகுதி, அது போக செங்கோட்டை அக்கிரகாரத்தின் வழியே சென்றால் ஆற்றங்கரைக்குத்தான் செல்ல முடியுமே அன்றி, மருத்துவமனைக்கு அந்த வழி இட்டுச் செல்லாது.

ஆஷ் கொலை நடந்தது 1911ஆம் ஆண்டு. அதன் பிறகு 1930களில் காந்தி திருநெல்வேலிக்கு வருகிறார். நெல்லையில் சாவடி பிள்ளை என்பவரின் வீட்டில் தங்குகிறார். அப்போது கூட எல்லா சமுதாய மக்களும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவரும் குற்றால அருவிகளில் குளிக்க மறுத்து விடுகிறார்.

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில அரசின் ஏகபோக பிரதிநிதியான மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை இல்லாமல் ஆக்கும் அளவுக்கா திருநெல்வேலியில் உள்ள மக்கள் அதிகாரத்தோடு இருந்தனர் ? மிக சமீப காலத்தில் நடந்த நிகழ்வையே திரித்து கூறும் இவர்கள், இன்னும் எந்த எந்த பொய்களை நம்மீது சுமத்தி உள்ளார்கள் என்பதை கண்டறிந்து உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்.

கால் வாய்த்த இடங்களில் எல்லாம் பார்த்த மக்களை கொன்று, அவர்களை அடிமைகளாக மாற்றி, அடிமை வியாபாரத்தை உலகெங்கும் பரப்பி, அவர்களின்மதங்களை, கலாச்சாரத்தை அழித்து வெறியாட்டம் ஆடிய கிருத்துவத்தின் கோர முகத்தை வெளிக்கொண்டு வருவது நமது கடமையாக இருக்க வேண்டும். 

ஜூலை 17 - ரிசர்வ் பேங்க் முன்னாள் கவர்னர் ஐ ஜி படேல் நினைவுநாள்


இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கியின் நான்காவது கவர்னர் இந்திரபிரசாத் கோர்தன்பாய் படேலின் நினைவுதினம் இன்று. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த திரு படேல் 1924ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பிறந்தவர்.

பொருளாதாரத்தில் தனது இளங்கலை பட்டத்தை மும்பை பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்தார். வெளிநாடு சென்று படிக்க, அன்றைய பரோடா மன்னர் இவருக்கு பண உதவி செய்தார். புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இந்தியா திரும்பிய திரு படேல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் அதன் பின்னர் அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1949ஆம் ஆண்டு International Monetary Fund தனது ஆராய்ச்சிப் பிரிவுக்கு படேலை அழைத்துக் கொண்டது. ஐந்தாண்டுகள் அந்தப் பணியில் இருந்த திரு படேல், அதன் பிறகு இந்தியா திரும்பி இந்திய அரசின் நிதிதுறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றினார். மீண்டும் 1972ஆம் ஆண்டு ஐநா சபையின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் பணி செய்துவிட்டு, 1977ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவர் ஆளுநராகப் பணியாற்றிய காலத்தில் அன்றய ஜனதா அரசு உயர்மதிப்பீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் ( 1000, 5000, 10,000 ) செல்லாது என்று அறிவித்தது.

தனது நீண்ட பணிக்காலத்தில் வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தேசியமயமாக்கம், தொழில் தொடங்கவும், விரிவு படுத்தவும் மிக அதிகமான அரசின் கட்டுப்பாடு, 100% அந்நிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு படேல் சாட்சியாக இருந்தார்.

அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற படேலை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரி ( London School of Economics ) தனது இயக்குனர் குழுவில் ஒருவராக நியமித்தது. இந்த பதவிக்கு தேர்வான முதல் இந்தியர் இவர்தான்.

1991ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற நேரத்தில், படேலைதான் நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும்படி கோரினார். ஆனால் எதனாலோ படேல் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

பொருளாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக திரு படேல் அவர்களுக்கு பாரத அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி மரியாதை செலுத்தியது.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் நாள் படேல் தனது எண்பதாவது வயதில் நியூயார்க் நகரில் காலமானார். 

புதன், 16 ஜூலை, 2025

ஜூலை 16 - விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தனது உயிரை துச்சமாக எண்ணி போராட்டத்தை முன்னெடுத்த அருணா ஆசப்அலியின் பிறந்தநாள் இன்று.


அன்றய பஞ்சாப் மாநிலத்தில் கல்கா நகரில் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டு இருந்த வங்காளத்தை சேர்ந்த உபேந்திரநாத் கங்குலி - அம்பாலிகா தேவி தம்பதியினரின் மகளாக 1909 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணா கங்குலி. இவர் தாயார் வழி தாத்தா த்ரிலோக்நாத் சன்யால் பிரம்ம சமாஜத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தனது பள்ளிக்கல்வியை லாகூர் நகரிலும் கல்லூரிப்படிப்பை நைனிடால் நகரிலும் முடித்த அருணா கங்குலி கொல்கத்தா நகரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அலஹாபாத் நகரில்  புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆசப் அலி பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக  வாதாடியவர். விடுதலைப் போராட்ட களத்தில் அருணா கங்குலி சகபோராளியாக நண்பராக ஆசப் அலியோடு அறிமுகமானார். ஒத்த அலைவரிசையில் இருந்த அவர்கள் காதல் வயப்பட்டார்கள் 

இருபத்தி ஒரு வயது வித்தியாசமும், வெவ்வேறு மதம் என்பது அருணாவின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அருணா ஆசப் அலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு காந்தி, நேரு, ராஜாஜி,  சரோஜினி நாயுடு, அபுல் கலாம் ஆஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆசப் அலி விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால், அருணாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார். 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து நாட்டின் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்ட போதும் அருணா விடுதலை செய்யப்படவில்லை. அவரோடு சிறையில் இருந்த எல்லா பெண் கைதிகளும் தாங்களும் சிறையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று போராடியபிறகே அருணா விடுதலை செய்யப்பட்டார்.

1932ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அருணா ஆசப் அலி, சிறையில் அரசியல் கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கைதிகளின் நிலையில் மாற்றம் வந்தது, அதோடு அருணா அம்பாலா சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தனிமைச்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான அருணா ஆசப் அலி, சிறிது காலம் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாட்டின் கொந்தளிப்பான நிலைமை அவரை அமைதியாக இருக்கவிடவேயில்லை. 1942ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கி வைத்த அருணா தலைமறைவானார். ஆகஸ்ட் புரட்சியின் கதாநாயகி தலைமறைவு வாழ்க்கையில் இருந்தாலும் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை கொழுந்து விட்டு எரியச் செய்துகொண்டுதான் இருந்தார். 

ராம் மனோகர் லோஹியாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் இன்குலாப் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டுக்கொண்டும், வானொலி ஒலிபரப்பின் மூலமாக மக்களிடம் உரையாடிக்கொண்டும் இருந்தார். இன்குலாப் பத்திரிகையின் 1944ஆம் ஆண்டு இதழில் ஆயுதம் ஏந்தியா அல்லது அகிம்சை வழியிலா என்று விவாதித்துக் கொண்டு இருக்காதீர்கள், போராட்டத்தில் இறங்குங்கள், எந்த வழியானாலும் தவறில்லை என்று ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து பாரத நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அரசியல் வாரிசுகள் இப்போது மார்க்ஸின் மாணவர்களாக மாறிவிட்டார்கள் என்று அன்றய பத்திரிகைகள் எழுதின.

அருணாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்று ஆங்கில அரசு அறிவித்தது. 1946ஆம் ஆண்டு அவர் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் அருணா வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொண்டார். சூரியனே அஸ்தமிக்காத அரசு என்று பெருமை பேசிக்கொண்ட ஆங்கில அரசு ஒரு பாரதப் பெண்மணியிடம் தோற்று மண்டியிட்டது. பம்பாயில் தொடங்கிய இந்தியா கப்பல் படை கிளர்ச்சியை அருணா ஆதரித்தார். இது இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கு முஸ்லீம்களுக்குமான உறவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா ஆசப் அலி காங்கிரஸ் கட்சியின் சோசலிச பிரிவில் தீவிரமாக இயங்கினார். பின்னர் சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியின் முதல் மேயர் பதவியை வகித்தார்.

நேரடி அரசியலில் இருந்து விலகிய அருணா பெண்கள் முன்னேற்றதிற்காக கமலாதேவி சட்டோபாத்யாய உடன் இணைந்து பணி செய்யத் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு சோவியத் அரசு அருணாவிற்கு லெனின் அமைதிப் பரிசை வழங்கியது. 1992ஆம் ஆண்டு பாரத அரசு பத்ம விபூஷண் விருதையும் அவர் மரணத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கி அவரை கவுரவித்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருணா ஆசப் அலி காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் அருணா ஆசப் அலிக்கு தனியான இடம் ஓன்று எப்போதும் இருக்கும்.  

திங்கள், 14 ஜூலை, 2025

ஜூலை 14 - தொழிலதிபர் சிவநாடார் பிறந்தநாள்


கணினி மென்பொருள்துறையில் முக்கிய நிறுவனமான HCL நிறுவன அதிபரான திரு சிவ நாடார் அவர்களின் பிறந்தநாள் இன்று. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகே உள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் திரு சிவநாடார். இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் தாயார் வாமசுந்தரிதேவி. இவர் தாய்வழி தாத்தா வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தன், இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு சி பா ஆதித்தனார்.

தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், பின்னர் மதுரையிலும் பயின்ற சிவநாடார் தனது பொறியியல் படிப்பை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் முடித்தார். டெல்லியில் உள்ள DCM நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய சிவ்நாடார் தனது நண்பர்களோடு இணைந்து 1976ஆம் ஆண்டு மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வடிவில் வந்தது. 1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. இதனை ஏற்காத கோகோகோலா ஐ பி எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிட முடிவு செய்தன.

எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம் ஏறத்தாழ இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் பாரத நாட்டில் விற்பனையான கணினிகளில் பெரும்பான்மையானவை ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

மென்பொருள்துறையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஹெசிஎல் நிறுவனத்தில் இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார். பாரத நாட்டில் கணினி விற்பன்னர்கள் பலர் உருவானதற்கு இந்த நிறுவனத்தின் பயிற்சி மிக முக்கியமான காரணமாகும்.

தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார். சென்னையில் சிவநாடார் அறக்கட்டளை நடத்தும் எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ள தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க தமிழக அரசு சிவநாடாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, பொருளை உருவாக்குவதிலும், அப்படி உருவாக்கிய பொருளை தேவை உடையவர்களுக்கு அளிப்பதிலும் முன்னுதாரணமாக விளங்கும் திரு சிவநாடார் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.