செவ்வாய், 27 மே, 2025

27 மே - பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள்


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள். 

திங்கள், 26 மே, 2025

மே 26 - ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை - நினைவு தினம்

பாரதநாட்டின் விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம், ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்று பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் செண்பகராமன் பிள்ளை. அந்தக் காலத்தில் பாரத நாட்டு விடுதலைக்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பல போராளிகள் இயங்கிக்கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசர் மற்றும் ரஷிய அரசோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டு இருந்த காலம் அது. 

1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் - ஆஸ்திரிய நாட்டு இளவரசரும் அவர் மனைவியும் செர்பியாவைச் சேர்ந்த ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆஸ்ட்ரியா செர்பியாமீது படையெடுத்தது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் எதோ ஒரு அணியில் இணைய முதல் உலகப் போராக சண்டை மாறியது. பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப் பட்டன. ஏற்கனவே ஜெர்மனியில் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் என்ற அமைப்பை செண்பகராமன் பிள்ளை நடத்திவந்தார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்த கதர் இயக்கத்தினரோடு இணைந்து ஜெர்மனியின் உதவியோடு ஆயுதங்களை பாரத நாட்டுக்கு கடத்தி, அங்கே பெரும் ராணுவப் புரட்சியை உருவாக்க போராளிகள் திட்டமிட்டனர். 

இதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் போராளிகள் தற்காலிக சுதந்திர பாரத அரசு ஒன்றை நிறுவினார்கள். ராஜா மகேந்திரபிரதாப் ஜனாதிபதியாகவும் மௌலானா பரகத்துல்லா பிரதமமந்திரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை
பாரதநாட்டில் உருவாக்க எண்ணிய ஆயுதப்புரட்சி ஆங்கில உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி காரணமாக போரில் இருந்து ரஷ்யா விலகிக்கொள்ள ஜெர்மனி தோற்க நேர்ந்தது. பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக தற்காலிக இந்திய அரசு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. 

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். அந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை செண்பகராமன் பிள்ளை சந்தித்தார். பிள்ளை உருவாகியிருந்த பாரத தேசிய தன்னார்வப் படை நேதாஜியைக் கிளர்ச்சியூட்டியது. அந்த வழியில்தான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். பிள்ளை உருவாகியிருந்த ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நேதாஜியின் போர் முரசாக மாறியது. பல ஆயிரம் தேசபக்தர்களை உற்சாகமூட்டும் கோஷமாக இன்றும் அதுவே திகழ்கிறது. 
முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். பாரதம் குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை பாரத நாட்டுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.

முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

ஞாயிறு, 25 மே, 2025

மே 25 - ராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பலரின் பெயர்கள் பொதுமக்களின் மனதில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது. வீடு மனையைத் துறந்து, குடும்பத்தினரைப் பிரிந்து, வெளிநாடுகளில் தங்கி பாரதநாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகம் செய்த பெருமைமிக்க புதல்வர்கள் பலர். அதில் முக்கியமானவர் ராஷ்பிஹாரிபோஸ். சுபாஷ் சந்திர போஸுக்கு முன்னரே ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கே இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடும் படையை உருவாக்கியவர் இவர். இந்தப் படையின் தலைமையைத்தான் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டார்.

வங்காளத்தின் பார்த்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 1886ஆம் ஆண்டு பினோத் பிஹாரி போஸ் - புவனேஸ்வரி தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை கொல்கத்தா நகரில் முடித்தார். படிக்கின்ற காலத்திலேயே ஆங்கில அரசை ஆயுதம் தாங்கியே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. டெல்லி நகரில் அன்றய வைஸ்ராய் ஹார்டிங் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் யானை மீது பவனி வந்தார். சாந்தினி சவுக் பகுதியில் ஊர்வலம் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. காயங்களோடு ஹார்டிங் உயிர்தப்பினார். வெடுக்குண்டு வீசியது பசந்த் பிஸ்வாஸ் எனும் 16 வயது சிறுவன். அவனைப் பயிற்றுவித்தது போஸ்.

போஸ் அப்போது டெஹ்ராடூன் நகரில் உள்ள வனத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதும் அறியாதது போல அவர் மீண்டும் டெஹ்ராடூன் சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் இந்த வெடிகுண்டு வீச்சுக்குப் பின்னால் போஸ்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட ஆங்கில அரசு போஸ்மீது கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. போஸ் தலைமறைவானார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது.

தலைமறைவு வாழ்க்கையை நடத்தும் போதே இந்திய அளவில் ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்கு போஸ் முயற்சி செய்து கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த கதர் கட்சி ( அரபி மொழியில் இருந்த வந்த உருது சொல் - இதற்கு புரட்சி என்று பொருள் ) ஜெர்மன் நாட்டில் இருந்து இயங்கிய இந்திய விடுதலைக்கான கூட்டமைப்பு, இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆயத புரட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள வீரர்களோடு இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே நாளில் போராட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஆங்கில உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டம் தோல்வியில் முடிந்தது.

போஸ் இந்தியாவை விட்டு நீங்கி ஜப்பான் சென்றார். ஜப்பானிலும் ஆங்கில அரசு அவரைப் பின்தொடர்ந்து. அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜப்பான் அரசை நிர்ப்பந்தித்தது. இந்தியாவின் வீர மைந்தன் ஜப்பான் நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. ஆனால் இதற்கு நடுவே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உறவு சீர்குலைந்ததால் போஸ் ஜப்பானில் நிம்மதியாக இயங்க முடிந்தது. களங்கள்தான் மாறியது கடமை மாறவில்லை. ஜப்பானில் இருந்து போஸ் இந்திய விடுதலைக்கான வேலையைச் செய்து கொண்டுதான் இருந்தார். பல பத்திரிகைகளில் தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பான் ஆதரவு தரவேண்டும் என்று எழுதி, ஜப்பான் நாட்டை இந்திய போராளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றினார். இந்திய விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஜப்பானில் உருவாக்கினார். இதன் தலைமைப் பொறுப்பையே பின்னாளில் நேதாஜி ஏற்றுக்கொண்டார்.

ஜப்பானில் நாகமுறையா உணவகத்தின் உரிமையாளரின் மகள் டோஷிகோ சோமோ என்பவரை போஸை மணந்துகொண்டார். அவருக்கு ஜப்பான் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. எட்டாண்டுகளே இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். உடல்நலக் குறைவால் டோஷிகோ சோமோ மரணமடைய, அதன் பின்னர் தனியாகவே போஸ் வாழ்ந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவின் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் ராஷ்பிஹாரிபோஸ்தான். "நான் காந்தியை மதிக்கிறேன், அவர் புனிதமானவர். ஆனால் அவர் கடந்த காலத்தவர், சுபாஷ் வருங்காலத்தை சேர்ந்தவர்" என்று கூறி சுபாஷுக்கு ஆசி வழங்கினார் ராஷ்பிஹாரிபோஸ்

இந்தியாவின் புகழ்வாய்ந்த தேசபக்தர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தந்து 58ஆம் வயதில் காலமானார்.

எதையும் எதிர்பாராமல் நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். அவர்கள் வழியில் நடப்போம் என்று ராஷ்பிஹாரிபோஸ் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

சனி, 24 மே, 2025

மே 24 - தியாகி கர்தார் சிங் சரபா பிறந்ததினம்

 பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி தன் பத்தொன்பதாம் வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் கர்தார் சிங் சரபாவின் பிறந்ததினம் இன்று. 
பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருந்து சீக்கிய வீரர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம் என்பது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஓன்று. கதர் கட்சி என்று உருவான புரட்சி இயக்கமும் அதில் இணைந்து தங்களை ஆகுதியாகிய வீரர்களும் இன்று மக்களிடம் மறைக்கப்பட்டது நமது துரதிஷ்டமே. அந்த வீரர்களில் முக்கியமானவர் கர்தார் சிங்.

1896ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் லூதியான மாவட்டத்தில் உள்ள சரபா என்ற கிராமத்தில் ஜாட் வகுப்பைச் சார்ந்த சீக்கியரான மங்கள்சிங் - சாஹிப் கௌர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் கர்தார் சிங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த கர்தார் சிங்கை அவரது தாத்தாதான் வளர்த்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை லூதியானாவிலும் பின்னர் ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரிலும் முடித்த கர்தார் சிங், பட்டப்படிப்பு படிக்க 1912ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஆங்கில அரசின் வரைமுறை அற்ற வரிவசூலால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறிக்கொண்டு இருந்தனர். தாய்நாட்டின் அவலநிலையைக் கண்டு கொதித்த தேசபக்தர்கள் அங்கங்கே கூடி இந்த தாழ்வுநிலையை மாற்றுவது பற்றியும், ஆங்கில அரசை தூக்கி எறிவது பற்றியும் சிந்தித்துக் கொண்டு இருந்தனர்.

தேசபக்தர்கள் இணைந்து கதர் கட்சி என்ற புரட்சி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். சோஹன்சிங், லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இரும்பைக் காந்தம் ஈர்ப்பது போல, கர்தார் சிங்கை லாலா ஹர்தயாள் ஈர்த்தார். ஹிந்தி உருது பஞ்சாபி குஜராத்தி குர்முகி ஆகிய மொழிகளில் கதர் என்ற பெயரில் பத்திரிகையை சின்ஹட்ட புரட்சி இயக்கம் வெளியிட்டுக்கொண்டு இருந்தது. அந்தப் பத்திரிகையில்  கட்டுரைகள் கவிதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி கர்தார் சிங் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டு இருந்தார். வெளிநாடுகளில் வாழும் பாரதியர்களிடம் ஆங்கில அரசின் கொடுமையை கொண்டு செல்லும் பணியை கதர் பத்திரிகை செய்து கொண்டு இருந்தது.

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் கதர் கட்சி முறைப்படி ஆங்கில ஆட்சி மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தது. பாரத நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கர்தார் சிங் உள்பட பல்வேறு வீரர்கள் பாரத நாட்டுக்கு திரும்பினார். கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த கர்தார் சிங் அங்கே ஜுகாந்தர் இயக்கத்தின் தலைவரான ஜதின் முகர்ஜியின் அறிமுகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாரணாசி சென்று ராஷ்பிஹாரிபோஸை சந்தித்தார். போராட்டத்தை முன்னெடுக்க அரசு கருவூலங்களையும், பணக்காரர்களையும் கொள்ளை அடிப்பது என்றும் பெராஸ்பூர் நகரில் ஊழல் ராணுவ பாசறையைக் கைப்பற்றி ஆயத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்களின் ஊடே நுழைந்த துரோகி ஒருவனால் இந்த செய்திகள் ஆங்கில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடங்கியது. பல்வேறு வீரர்கள் தப்பியோடினார். பலர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பினார்கள். ஆனால் தனது தோழர்கள் சிறையில் வாடும்போது தலைமறைவாக இருக்க கர்தார் சிங் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானிலில் இருந்து பாரதம் திரும்பினார். மீண்டும் ராணுவ வீரர்களை புரட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கதர் கட்சியைச் சார்ந்த 17 வீரர்களுக்கு மரண தண்டனையும், மேலும் பலருக்கு பல்வேறு தண்டனைகளும் அளிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் தனது பத்தொன்பதாம் வயதில் தூக்குமேடையில் பாரத தேவியின் காலடியில் தனது உயிரை ஆகுதியாகினார் அந்த வீரர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது கர்தார் சிங் போன்ற பல்வேறு தியாகிகளின் வீரத்தால், தியாகத்தால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டும். 

வெள்ளி, 23 மே, 2025

மே 23 - மஹாராணி காயத்ரி தேவி பிறந்ததினம்

ராஜாஜியின் ஸ்வராஜ்யா கட்சியின் மூத்த தலைவரும், ஜெய்பூர் சமஸ்தானத்தின் முன்னாள் மஹாராணியுமான ராஜமாதா காயத்ரிதேவியின் பிறந்ததினம் இன்று.


வங்காளத்தில் உள்ள கூச் பெஹர் சமஸ்தான அரசராக இருந்த மஹாராஜா ஜிதேந்த்ர நாராயணன் - இந்திரா ராஜே தம்பதியரின் மகளாக 1919ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. பரோடா அரசர் ஷாயாஜிராய் கெய்வர்டின் மகள்தான் இந்திரா ராஜே. தனது ஆரம்ப கல்வியை லண்டன் நகரிலும் பின்னர் ரபீந்த்ரநாத் டாகுரின் சாந்திநிகேதனிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் பயின்றவர் காயத்ரி தேவி. ஜெய்பூர் சமஸ்தானத்தின் அரசரான மான்சிங் பகதூரை காயத்ரி தேவி மணந்து கொண்டு ஜெய்பூர் அரசியானார்.

நாடு விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து ஜெய்பூர் சமஸ்தானம் பாரத நாட்டோடு இணைந்தது. ராஜா மான்சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜபிரமுக் என்று அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சுவீடன் நாட்டுக்கான பாரத நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சுதந்திர சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் கொண்ட மஹாராணி காயத்ரி தேவி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்த்ரா கட்சியில் இணைந்து, அதன் முக்கியமான தலைவராக உருவானார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்வதந்திரா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிச பொருளாதார கொள்கைகளை கடுமையாக எதிர்த்த காயத்ரி தேவியை நெருக்கடி நிலைமை காலத்தில் இந்திரா கைது செய்து திஹார் சிறையில் அடைத்தார். ராஜாஜியின் மறைவைத் தொடர்ந்து ஸ்வதந்த்ரா கட்சி அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழக்க, மஹாராணி காயத்ரி தேவியும் அரசியலில் இருந்து விலகினார்.

மஹாராணி காயத்ரி தேவி குதிரை சவாரி செய்வதிலும், போலோ விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அதுபோலவே வனவிலங்குகளை வேட்டையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். மஹாராணி காயத்ரி தேவி நினைவாக ஆண்டுதோறும் போலோ விளையாட்டுப் போட்டியை ஜெய்பூர் அரச குடும்பம் நடத்தி வருகிறது. தனது ஆட்சியில் இருந்த பகுதியில் பல்வேறு கல்வி நிலையங்களை மஹாராணி தொடங்கினார். அதுபோலவே நகை தயாரிப்பு, கைத்தறி துணிகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிப்பிலும், சந்தைப்படுத்துவதிலும் கலைஞர்களுக்கு மஹாராணி உறுதுணையாக இருந்தார்.

பனிரெண்டு வயதில் சிறுத்தையை வேட்டையாடியது, மஹாராணி என்ற நிலையில் பர்தா முறையில் சிக்கிக் கொள்ளாதது, அரசியலிலும் சமூக சேவையிலும் ஒரே நேரத்தில் தீவிரமாக இயங்கியது, சிறை தண்டனை அனுபவித்தது என்று வாழ்வின் பல்வேறு பகுதிகளையும் வாழ்ந்து பார்த்தவர் மஹாராணி காயத்ரி தேவி.

நெருக்கடி நிலையில் சிறையில் இருந்த மகாராணியின் உடல்நிலை மோசமடைந்தது. வாய் புற்றுநோயால் அவதிப்பட்ட ராஜமாதா காயத்ரி தேவி 2009ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் காலமானார். 

வியாழன், 22 மே, 2025

மே 22 - சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன்ராய்



அது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டம். பாரதம் முழுவதும் ஆட்சி செய்த முகலாய வம்சம் வலிமை இழந்து இருந்தது. பெரும்பலத்தோடு எழுந்து வந்த மராத்தியப் பேரரசு மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானியர்களிடம் தோற்று, நாடு முழுவதும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த காலம் அது. ஆங்கில ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வலுவான அடித்தளம் இட்டிருந்தார். பாரதத்தில் தழைத்திருந்த சனாதன தர்மமும், அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமிய கருத்துக்களும், ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான கிருஸ்துவ சிந்தனைகளும், அதோடு ஆங்கிலப் படிப்பும் என்று ஒரு புதிய காலத்திற்கு பாரதம் தயாராகிக்கொண்டு இருந்த காலம் அது.  பல்வேறு சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பாரதத்தை வழிநடத்தும் முக்கியமானவர்கள் தோன்றிய காலமும் இதுதான். இந்த புகழ்வாய்ந்த முன்னோடிகளில் முக்கியமானவரான ராஜா ராம்மோகன்ராய் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ராதாநகர் கிராமத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் ராம்காந்தோராய் - தாரணிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ராம்மோகன்ராய். முகலாய ஆட்சியாளர்களின் சார்பாக வரிவசூலிக்கும் வேலையில் ராம்காந்தோராய் ஈடுபட்டு இருந்தார். அன்றய வழக்கத்தின்படி ராம்மோகன்ராய் வங்காள மொழியையும் பாரசீக மொழியையும் கற்றுத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக பாட்னா சென்ற ராம்மோகன் அங்கே அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வாரணாசியில் சமிஸ்க்ரித மொழியையும் கற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன் என்று மேலைநாட்டு மொழிகள் பலவற்றையும் அவர் கற்றார். பல மொழி தெரிந்து இருந்ததால், பல்வேறு சமயங்களின் மூலநூல்களை அந்தந்த மொழிகளில் ராம்மோகன் படிக்கத் தொடங்கினார்.

ஆழமான படிப்பு அவரிடம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. தொடர்ந்த விவாதங்கள் அவருக்கும் அவர் தந்தைக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது. வீட்டை விட்டு வெளியேறிய ராம்மோகன்ராய், இமயமலை சாரல்களிலும் பின்னர் திபெத்திலும் அலைந்து திரிந்து பின்னர் சில காலம் கழித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 1803ஆம் ஆண்டு அவர் தந்தை இறந்து விட ராம்மோகன்ராய் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்துறையில் சிறுது காலம் பணியாற்றினார்.

சமுதாயத்தில் நிலவிவந்த பல்வேறு மூடநம்பிக்கைகளை மாற்றும் பணியில் ஆத்மீய சபை என்ற அமைப்பை நிறுவினார். உருவ வழிபாடு, இறுக்கமான ஜாதியமுறை ஆகியவற்றை எதிர்த்தும், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்றும், பலதார மணம், சதி ஆகியவற்றை எதிர்த்தும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ரபீந்த்ரநாத் தாகூரின் தந்தையான தேவேந்த்ரநாத் தாகூரோடு இணைந்து ப்ரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாரதத்தின் கடைசி முகலாய மன்னராக இருந்த பகதூர்ஷா ஜாபரின் தந்தையான இரண்டாம் அக்பர் ராம்மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். முதன்முதலாக பாரத நாட்டின் செல்வதை ஆங்கிலேயர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று பதிவு செய்தது ராஜா ராம்மோகன்ராய்தான்.

மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அளிக்கப்படவேண்டும் என்பதுதான் ராம்மோகன்ராயின் எண்ணமாக இருந்தது. இதற்காக கொல்கத்தா நகரில் அவர் 1817ஆம் ஆண்டே ஹிந்து கல்லூரியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலோ ஹிந்து பள்ளி, ஸ்காட் சர்ச் கல்லூரி, வேதாந்தா கல்லூரி  ஆகிய நிறுவனங்கள் உருவாகவும் ராம்மோகன் உதவியாக இருந்தார். பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

பாரதத்தின் மறுமலர்ச்சி காலத்தை தொடங்கி வைத்த ராஜா ராம்மோகன்ராய் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.   

செவ்வாய், 20 மே, 2025

மே 20 - பிபின் சந்திர பால் நினைவு தினம்


இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த முன்னோடி தலைவராகவும், பால் லால் பால் என்று அழைக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பிபின் சந்திரபால் அவர்களின் நினைவு தினம் இன்று. பஞ்சாபில் லாலா லஜபதி ராய், மஹாராஷ்டிராவில் பால கங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திர பால் ஆகியோர்தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர்கள். தமிழகத்தின் முன்னணி சுதந்திர வீரர்களாக விளங்கிய வ உ சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் இந்த மூவருமே.

பிபின் சந்திர பால் இன்று வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தில் போயல் என்ற கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை ராமச்சந்திர பால் ஒரு பாரசீக மொழி அறிஞர். தாயார் நாராயணி. வைஷ்ணவ பாரம்பரியத்தைக் கொண்ட இவர்கள் குடும்பம் ஓரளவு வசதியானதுதான். அன்றய வங்காளம் என்பது ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் சேவையால் புதிய கருத்துக்களை வரவேற்கும் நிலையில் இருந்தது.

கல்கத்தா மாநிலக் கல்லூரிக்கு படிக்கச் சென்ற பிபினுக்கு ப்ரம்மசமாஜ தொடர்பு உருவாகிறது. கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்ட பிபின் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகவும் பிறகு கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றினார். அப்போது ஒரு விதவையை மணம் புரிந்து கொண்டதால் குடும்பத்தாரோடு அவரது உறவு சீர்குலைகிறது. நாடெங்கிலும் உருவாகிக்கொண்டு இருந்த விடுதலை உணர்ச்சியால் பிபினும் தனது வேலையத் துறந்து முழுநேரமும் நாட்டுக்காக உழைக்கத் தொடங்குகிறார்.

வங்காளம் இரண்டாகப் பிரிவுபடுவதை தீவிரமாக எதிர்த்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார் பிபின். ஸ்வராஜ்யம், சுதேசி, அந்நிய துணிகளை உபயோகிக்காமல் இருப்பது, அன்னியத் துணிகளை எரிப்பது என்று ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். வந்தேமாதரம் வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததால் ஆங்கில அரசு இவரைக் கைது செய்கிறது.
அந்த சிறைத்தண்டனை முடிந்தது பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடியதற்குத்தான் வ உ சி மற்றும் சுப்ரமணிய சிவாவின் மீது தமிழகத்தில் வழக்கு பதிவாகிறது.

அந்நியப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, புதிய தொழில்களை இந்தியர்களே தொடங்கவேண்டும், பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார ரீதியில் நாம் அவர்களை தோற்கடித்தால் சுதந்திரம் விரைவாகக் கிடைக்கும் என்பது பிபின் சந்திர பாலின் முழக்கமாக இருந்தது.
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிபின் சந்திர பால், கீதை மற்றும் உபநிஷதங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் செல்லத் தொடங்கிய போது, அரசியலில் இருந்த விலகிக் கொண்டார்.

வங்காளம் தந்த இந்த வீரர் தனது 73ஆவது வயதில் 1932ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் பாரதத்தாயோடு கலந்தார்.

தன்னலம் கருதாத தியாகிகளின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்.