வியாழன், 27 நவம்பர், 2025

நவம்பர் 27 - நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் கணேஷ் மாவலங்கர் பிறந்தநாள்

தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், கல்வியாளர், பாராளுமன்றவாதி என்ற பல்முக ஆளுமையாகத் திகழ்ந்த கணேஷ் வாசுதேவ மாவலங்கரின் பிறந்தநாள் இன்று.


மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவலங்கர் 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் பரோடா நகரில் நாள் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை அன்றய பம்பாய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முடித்த மாவலங்கர் மேற்படிப்புக்காக இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தார். 1908ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்று அதனைத் தொடர்ந்து 1912ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அதனைத் தொடர்ந்து அஹமதாபாத் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில் நாட்டில் சூறாவளியாக வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை மாவலங்கரையும் பற்றிக் கொண்டது.  குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால், காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது. அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக 1919ஆம் ஆண்டு தேர்வானார். 1919 - 1922, 1925 - 1928, 1930 - 1933, 1934 - 1937  ஆகிய காலகட்டத்திலும் அவர் அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் மாவலங்கர் நியமிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால் குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாவலங்கர் அறியப்படலானார். பல்வேறு  போராட்டங்களில் கலந்து கொண்டு ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1934ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்வான மாவலங்கர் 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சாசன சபையின் சபாநாயகராகவும் அவர் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுதேர்தலில் அஹமதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாவலங்கர் முதல் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிகரமான வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தகுதியான பாராளுமன்றவாதியாகவும் இருந்த மாவலங்கர், குஜராத் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். அஹமதாபாத் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதன் தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் சட்டதுறை பேராசிரியராக பணியாற்றனார். குஜராத் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்தார். காந்தியோடு தனது அனுபவங்கள், சிறையில் தான் சந்தித்த பல்வேறு கைதிகள் பற்றி, தனது வழக்கறிஞர் வாழ்க்கையைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களையும் மாவலங்கர் எழுதி உள்ளார்.

1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் அவதிப்பட்ட மாவலங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1946ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபை, சுதந்திர பாரதத்தின் முதல் நாடாளுமன்றம் ஆகியவற்றை பத்தாண்டுகள் வழிநடத்திய கணேஷ் வாசுதேவ மாவலங்கர் 1956ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் காலமானார். எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் ஜனநாயக வழியில் பாரதம் நடைபோடுகிறது என்றால் அது மாவலங்கர் போன்ற அறிஞர்கள் அமைத்துக் கொடுத்த அடிப்படைகளே காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

புதன், 26 நவம்பர், 2025

நவம்பர் 26 - பாரதத்தின் பால்காரர் - வர்கீஸ் குரியன்

எனக்கும் ஒரு கனவு இருந்தது - அந்த மனிதரின் சுயசரித்திரத்தின் பெயர் இதுதான். ஆனால் அவருக்கு சிறுவயதில் இருந்த கனவு அல்ல அது. வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு, பாஷை தெரியாத ஒரு குக்கிராமத்தில் தனது பயணத்தைக் தொடங்கி, ஆனால் இந்த தர்மக்ஷேத்திரத்தை தனது குருஷேத்திரமாக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனி மனிதரின் கதை அது. தனி மனிதனாக ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ஆனாலும் அதில் தான் ஒரு வேலையாள் மட்டும்தான், நான் இதற்கு உரிமையாளன் அல்ல இது எனது சுதர்மம் என்ற மனப்பாங்கோடு கீதை காட்டிய வழியில் நடந்த மனிதரின் கதை. 


கேரளாவைச் சார்ந்த சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் வர்கீஸ் குரியன். அவரது தந்தை ஒரு மருத்துவர், தாயாரும் கல்வி கற்றவர். தந்தை பணிபுரிந்த கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளி கல்வியையும், அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டத்தையும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது காலம் டாடா குழுமத்தில் பணி புரிந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது, நாடு வெகு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் பிரகாசமாக இருந்தது, பொருளாதாரரீதியாக இரண்டு நூறாண்டுகளாக சுரண்டப்பட்டு இருந்த தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த இளைஞர் பட்டாளம் தேவை என்பதால் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று படித்து நாட்டுக்கு தனது திறமையை அர்ப்பணம் செய்யத் தயாராக உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்விக்கான பொருளாதார உதவியை அரசு செய்ய முடிவெடுத்தது. அதில் தேர்வான குழுவில் வர்கீஸ் குரியனும் ஒருவர். பால் பதனிடும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வருமாறு அரசு அவருக்கு உதவித்தொகை அளித்தது. ஆனால் குரியன் உலோகவியலும், அணு அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே பால் பதனிடும் நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். நாடு திரும்பிய குரியனை குஜராத் மாநிலத்தின் கைரா  மாவட்டத்தின் ஆனந்த் என்ற ஒரு சிறு கிராமத்தில் பணியாற்ற அரசு பணித்தது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையை  ஏற்றுக்கொண்டார். எப்போது அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார். 

காலம் குரியனுக்கு வேறு ஒரு பாதையை தீர்மானித்து வைத்திருந்தது. தேசபக்தரும் கூட்டுறவு இயக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திரிபவன்தாஸ் படேல் என்பவரின் அறிமுகம் குரியனுக்கு கிடைத்தது. பால் வியாபாரம் செய்யும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பது குரியனின் மனதைப் பாதித்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்களோடு தொடர்ந்தது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலைமையை முன்னேற்றி, பாரத நாட்டை பால் உற்பத்தியில் உலகின் முக்கியமான  நாடாக மாற்றி, பெரும் நிறுவனங்களை உருவாக்கி என்று அவரின் வாழ்க்கையே பலருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 

ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே அளவில் பால் கிடைப்பது இல்லை. அதிகமாக பால் கிடைக்கும் நேரங்களில் அதை விற்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். இதனை மாற்ற கூட்டுறவு முறையில் பாலை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முறையை குரியன் அறிமுகம் செய்தார். பால் மீதமாகும் நேரங்களில் அதனை பால் பவுடராக மற்றும் நுட்பத்தை குரியன் அறிமுகம் செய்தார். அதுவும் எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் நுட்பம் என்பது அதுவரை உலகில் எங்கும் இல்லாத ஓன்று. பிரச்சனைக்கு தீர்வுகளை சமுதாயத்தோடு இணைந்த தொழில்நுட்பதின் மூலம் கண்டறியும் குரியனின் செயல்திறனால் குஜராத்தில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவானது. 

ஆனந்த் பகுதியில் குரியன் செயல்படுத்திய முறையை நாடு முழுவதும் முன்னெடுக்க அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியைப் பேருக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு என்ற நிலைமையில் இருந்து பால் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பால் உற்பத்தியை அவர் அதிகப்படுத்தினார். அதோடு இணைந்து பல்வேறு நிறுவனங்களை குரியன் உருவாக்கினார். குஜராத் பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு ( Gujarat Cooperative Milk Manufacturer Federation ), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Board ) என்று பால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்,  அதோடு இணைந்து அறிவியல் முறையில் தொழில்நுட்பத்தை இணைந்து கிராம முன்னேற்றத்திற்காக மேலாண்மை கல்லூரியையும்  கிராம மேலாண்மை நிறுவனம் ( Institute of Rural Management - Anand ) அவர் உருவாக்கினார். 

எல்லாக் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள்தான் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள், தான் வேலைக்காரன் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து குரியன் மாறவே இல்லை. குரியனின் சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அங்கீகாரம் வந்து சேர்ந்தது. 1965ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ, 1966ஆம் ஆண்டு பத்மபூஷன் அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பாரத அரசு அளித்தது. 1963ஆம் ஆண்டு மகாசாய் விருது, 1986ஆம் ஆண்டு க்ரிஷி ரத்னா ஆகிய விருதுகள் அவரை வந்தடைந்தன. ஆனால் இவை அனைத்தையும் விட அவருக்கு நெருக்கமாக இருந்தது மக்கள் அவருக்கு அளித்த பாரத நாட்டின் பால்காரர் - Milkman of India - என்ற பட்டம்தான். 

வாழ்க்கையில் பாலே குடிக்காத அந்த தேசத்தின் பால்காரர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் காலமானார். வாழ்க்கை முழுவதும் ஆனந்த் கிராமத்திலேயே வாழ்ந்து அந்த  மக்களுக்காகவே யோசித்த குரியனின் இறுதிச் சடங்குகள் அதே பால் உற்பத்தியாளர்கள் கூடி நிற்க ஆனந்த் கிராமத்திலேயே நடந்தது. தனி ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யலாம் என்று யாராவது கேட்டால் அதன் பதில் வர்கீஸ் குரியனின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். 

செவ்வாய், 25 நவம்பர், 2025

நவம்பர் 24 - தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே பிறந்ததினம்

கன்னட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மங்களூர் நகருக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி நதியின் கரையில் அமைந்துள்ள சிறு நகரம் தர்மசலா. மஞ்சுநாத ஸ்வாமி என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டு இருக்கும் நகரம் அது. அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலராக, தர்மாதிகாரியாக எட்டு நூறாண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வரும் சமண சமயத்தைச் சார்ந்த  பெர்கடே குடும்பத்தின் வாரிசாக ஹெக்கடே என்ற பட்டதோடு இருபத்தியோராம் தர்மாதிகாரியாக இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களின் பிறந்ததினம் இன்று.


திரு ரத்னவர்ம ஹெக்கடே -  திருமதி ரத்னம்மா ஹெக்கடே தம்பதியரின் முதல் மகனாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் திரு வீரேந்திரா. தந்தையின் மறைவுக்குப் பிறகு  தர்மசாலாவில் இருபத்தியோராம் தர்மாதிகாரியாக 1968ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் திரு வீரேந்திரா நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் வீரேந்திர ஹெக்கடே என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

தர்மத்தின் இருப்பிடத்தின் அதிகாரி என்பதால், பெர்கடே குடும்பத்தினர் பசியில் இருந்து, பிணையில் இருந்து, பயத்தில் இருந்து அறியாமையில் இருந்து விடுதலை என்ற சேவையை எட்டு நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். மாறிவரும் சமுதாயத்தின் தேவைங்களை இனம் கண்டு வீரேந்திர ஹெக்கடே இந்த சேவைகளை கடந்த ஐம்பதாண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.

மஞ்சுநாத ஸ்வாமி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. கேரள மற்றும் கர்நாகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் இயல்பான ஒன்றுதான் இது. ஆனால் முழுவதும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதிலும், உணவு பரிமாறப்படும் இலைகள் முதல் அனைத்து உணவுப் பொருள்களையும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உருவாக்குவதிலும் தர்மசாலா கோவில் தனித்து விளங்குகிறது. வீரேந்திர ஹெக்கடே பொறுப்புக்கு வந்த பிறகு பக்தர்கள் உணவருந்த பிரமாண்டமான உணவுக்கூடத்தை உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக முப்பதாயிரம் பக்தர்களும் பண்டிகை தினங்களில் எழுபதாயிரம் பக்தர்களும் இங்கே உணவு உண்கிறார்கள்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி என்பது மலைப் பிரதேசம். அங்கிருந்து மருத்துவ உதவிக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாத கிராமவாசிகளுக்காக வீரேந்திர ஹெக்கடே நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளார். தேவையான மருந்து மற்றும் உபகாரணங்களோடு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைத் தேடிச் சென்று சேவை புரிகின்றனர். தர்மசாலாவில் அருகில் உள்ள உஜிரி  நகரில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, மங்களூர்  நகரில் கண்மருத்துவமனை, தார்வாத் நகரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் 400 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தனி கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழிப்பது என்று மருத்துவத் துறையிலும் ஹெக்கடேயின் சேவை மகத்தானது.

மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் ஹெக்கடே தொடங்கி உள்ளார். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் படிப்பு, மருத்துவம், மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் உயர் கல்விக்கான நிறுவனங்களை ஹெக்கடே நடத்தி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், கிராமப்புற சுயசார்பு, கைத்தொழில் வளர்ச்சி,  நலிவடைந்த கோவில்களை சீரமைப்பு செய்தல் என்று பல்வேறு துறைகளில் வீரேந்திர ஹெக்கடே செயலாற்றி வருகிறார். இது போக பல்வேறு வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் அவர் உள்ளார். அவரது தீர்ப்பை பொதுவாக மக்கள் மீறுவது இல்லை.

பலனில் பற்று வைக்காமல் கடமையை கடமைக்காகவே செய் என்று கீதை கூறுகிறது. எந்த செயலுக்கும் அதற்கான பலன் வந்தே சேரும் ஆனால் பலனுக்காகவே செயல் செய்வது தவறு என்பது கீதை காட்டும் பாதை. நீண்ட காலம் சமுதாய சேவையை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் விருதுகளும் தானாகவே வந்து சேர்ந்தது. 2009ஆம் ஆண்டு  கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா என்ற விருதை வழங்கியது. பாரத அரசு 2000ஆம் ஆண்டில்  பத்ம பூஷன் விருதையும் பின்னர் 2015ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க விருதான பத்மவிபூஷண் விருதையும் வழங்கி அவரை சிறப்பித்தது.

அறம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்ற மொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு  ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
வீரேந்திர ஹெக்கடேயின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக என்றும் இருக்கும். 

திங்கள், 24 நவம்பர், 2025

நவம்பர் 24 - குரு தேஜ் பகதூர் பலிதானதினம்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும். 

ஞாயிறு, 23 நவம்பர், 2025

நவம்பர் 23 - தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் பிறந்தநாள்


பாரத நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தொழிலதிபரும், வால்சந்த் குழுமத்தைத் தொடங்கியவருமான வால்சந்த் ஹிராசந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. வியாபாரம் செய்யும் பின்னணியில் தொடங்கிய இவர் கப்பல்துறை, கப்பல் கட்டும் தொழில், கார் உற்பத்தி, விமான கட்டுமானம், கட்டடம் கட்டுதல், சர்க்கரை  உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் தயாரித்தல் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவராவார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சமண மரபினர் திரு ஹிராசந்த் நேம்சந்த் ஜோஷி. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மகனாக 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். சோலாப்பூர் அரசு பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து மும்பை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றார் வால்சந்த். அன்றய வழக்கப்படி படிக்கின்ற காலத்திலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இவர் மனைவி இறந்துவிட மறுமணம் செய்துகொண்டார்.

படித்து முடித்தபின் தந்தையின் தொழிலில் இணைந்த ஹிராசந்த், அதன் பின்னர் ரயில்வே துறையின் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தகாரராக உருவானார். தொடர்ந்து ஆங்கில அரசுக்கு பல்வேறு கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இவர் செய்து கொடுக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இந்திய தேசிய கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையாரோடு இணைந்து Free Press of India என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அநேகமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற செய்தி நிறுவனமாகவே இயங்கியது.

சில காலம் டாடா குழுமத்தோடு இணைந்து கட்டிடத்துறையில் செயல்பட்ட வால்சந்த் பிறகு டாடா குழுமத்தின் பங்குகளையும் வாங்கிக்கொண்டார். இன்று நாட்டின் முக்கியமான கட்டுமான நிறுவனமாக விலங்கு Hindustan Construction Company என்ற நிறுவனமும் இவர் நிறுவியதுதான். வால்சந்த் அவர்கள் சர்க்கரை தயாரிக்க 1908ஆம் ஆண்டு Walchandnagar Industries என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளை உருவாக்குதல், சிமெண்ட் தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி என்று பல்வேறு திசைகளில் வெற்றிகரமாகப் பயணித்தது. இன்று நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. பொக்ரானில் பாரதம் நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து அமெரிக்கா இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்தது, பின்னர் அது விளக்கிக்கொள்ளப்பட்டது.

குவாலியர் அரச குடும்பத்தினரிடம் இருந்து கப்பல் ஒன்றை வாங்கி வால்சந்த் சிந்தியா கப்பல் கம்பெனி என்ற பெயரில் ஒரு புது தொழிலைத் தொடங்கினார். சில காலத்தில் விசாகப்பட்டினதில் கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். கப்பல் தொழிலோடு இணைந்ததுதான் காப்பீடு நிறுவனம், எனவே அதையும் அவர் ஆரம்பித்தார். மைசூர் அரச குடும்பத்தோடு இணைந்து பெங்களூர் நகரில் விமான தயாரிப்பிலும் வால்சந்த் ஈடுபட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கப்பல் கட்டும் தளத்தையும், விமான தயாரிப்பு நிறுவனத்தையும் அன்றய அரசு நாட்டுடமை ஆக்கியது. அவை இன்று Hindustan Shipyard Ltd, Hindustan Aeronautical Ltd என்று அறியப்படுகின்றன. இதோடு வால்சந்த் கார் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் வரை புகழ்பெற்ற விளங்கிய Premier Padmini கார்கள் இவரது தயாரிப்பே.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் வால்சந்த் நிறுவினார். தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா மாநில தொழில்  தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றில் நீண்ட காலம் தலைவராகவும் வால்சந்த் பணியாற்றினார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பத்து  முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த வால்சந்த் ஹிராசந்த் 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் காலமானார். 

சனி, 22 நவம்பர், 2025

நவம்பர் 22 - மருத்துவர் ருக்மாபாய் பிறந்ததினம்

சிறுவயதில் நடைபெற்ற தனது திருமணம் செல்லாது என்று போராடி மருத்துவராக மாறிய ஒரு வீரப்பெண்ணின் கதை இது. மராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயந்திபாய். பதினான்கு வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் தாயாகி பதினேழு வயதில் கணவரை இழந்தவர் ஜெயந்திபாய். கணவனை இழந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயந்திபாய் சகாராம் அர்ஜுன் என்னும் மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயந்திபாய்க்கு முதல் திருமணத்தில் பிறந்த ருக்மாபாய் தன் தாயோடும் சகாராம் அர்ஜுனோடும் வசித்து வந்தார். அன்றய வழக்கத்தின்படி ருக்மாபாயின் பதினோராம் வயதில் அவருக்கு பத்தொன்பது வயதான தாதாஜி பிகாஜி என்பவரோடு திருமணம் நடந்தது.


குடும்பம் நடத்துவதற்கான வயதும் பக்குவமும் வராத காரணத்தால் ருக்மாபாய் தன் பெற்றோர்களோடு வசித்து வந்தார். அப்போது சகாராம் ருக்மாவிற்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை உருவாக்கினார். திருமணமாகி சிலகாலம் கழிந்த பிறகு தாதாஜி பிகாஜி தன் மனைவி ருக்மாபாய் தன்னோடு வந்து குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறினார். அன்றய காலகட்டத்தில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் படிப்பின்மீதோ கல்வியின்மீதோ எந்த நாட்டமும் இல்லாத கணவரோடு வாழ ருக்மாபாய் மறுத்துவிட்டார். தனது முயற்சிகள் ஏதும் பலனைக்காததால் தாதாஜி பிகாஜி தன் மனைவி தன்னோடு வசிக்கவேண்டும் என கட்டளையிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.

பிகாஜி எதிர் ருக்மாபாய் வழக்கு ( 1885 ) என்ற இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் பெரும் சர்சையைக் கிளப்பியது. ஹிந்து சட்டங்களுக்கும் ஆங்கில கிருஸ்துவ சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மாறுதல் என்பது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் உள்ளே இருந்து வரவேண்டுமா அல்லது சட்டத்தின் மூலமாக வெளியே இருந்து திணிக்கப்பட்ட வேண்டுமா, பலகாலங்களாக நடைமுறையில் உள்ள முறைகளை மதிக்கவேண்டுமா அல்லது அவைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா  என்ற விவாதங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி இல்லாத காலத்தில் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிபதி ராபர்ட் ஹில் பின்ஹே தீர்ப்பளித்தார்.

இதனை ஏற்காத தாதாஜி பிகாஜி மேல்முறையீடு செய்தார். ருக்மாபாய் தன் கணவரோடு வாழவேண்டும் அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாரன் தீர்ப்பளித்தார். தன்மீது திணிக்கப்பட்ட மணவாழ்க்கையை விட சிறைத்தண்டனை ஏற்பது மேல் என்று ருக்மாபாய் முடிவு செய்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மஹாராணி நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ருக்மாபாயின் திருமணம் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொண்டு தாதாஜி பிகாஜி தனது திருமண உரிமையை வீட்டுக் கொடுத்தார். 1891ஆம் ஆண்டு ஆங்கில அரசு தனது ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பிரதேசங்களிலும் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பத்தில் இருந்து பனிரெண்டாக உயர்த்தியது.

ஒருபுறம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தாலும் ருக்மாபாய் மனதில் தனது வளர்ப்பு தந்தையைப் போல தானும் மருத்துவராக  வேண்டும் என்ற கனவு இருந்தது. மருத்துவம் படிக்க லண்டன் சென்ற ருக்மாபாய் 1894ஆம் ஆண்டு லண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். காதம்பரி கங்குலி, ஆனந்தி ஜோஷி ஆகியோரோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முன்னோடி பெண்மணிகளில் ஒருவராக அறியப்படலானார். 1895ஆம் ஆண்டு சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிய ருக்மாபாய் பின்னர் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மும்பையில் வசித்து வந்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ருக்மாபாய் தனது தொன்னூறாவது வயதில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 21 நவம்பர், 2025

நவம்பர் 21 - நாயக் ஜாதுநாத் சிங் பிறந்ததினம்

1947 - 1948 ஆண்டுகளில் நடைபெற்ற பாகிஸ்தானோடான போரில் மகத்தான வீரச் செயலுக்கான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் நாயக் ஜாதுநாத்சிங்.

 1916 நவம்பர் 21ல் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் அருகே கஜூரி என்ற கிராமத்தில் பிரபால்சிங் ரத்தோர் ஜமுனா கன்வார் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜாதுநாத். ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் என்ற எட்டுப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தின் மூன்றாவது மகன் இவர். பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்ததால் இவர் நான்காம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. பிறகு விவசாயத்தில் தனது தந்தைக்கு ஜாதுநாத் உதவியாக இருந்தார். வட இந்தியாவின் பல பகுதிகளில் மற்போர் ஒரு முக்கியமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். சிறு வயதில் இருந்தே மற்போரில் ஈடுபட்டு பல பரிசுகளையும் பதக்கங்களையும் ஜாதுநாத் வென்றார். ஹனுமான் போன்ற பலசாலி என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜாதுநாத் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இணைந்துகொண்டார். முறையான ராணுவப் பயிற்சிகள் முடிந்த பிறகு ஜாதுநாத் ராஜ்புத் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். ராஜ்புத் படைப்பிரிவு ஏறத்தாழ இருநூற்று இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு கொண்ட பாரத ராணுவத்தின் பழமையான படைப்பிரிவாகும். 1798ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் இந்தப் படைக்கு உண்டு. இந்தப் படையின் குறிக்கோள் "ஸர்வத்ர விஜய்" அதாவது எல்லா இடங்களிலும் வெற்றி அல்லது எல்லாப் போர்களிலும் வெற்றி என்பதாகும். இவர்களின் போர் முழக்கம் " போல் பஜ்ரங்கபலி கி ஜெய்" என்பது. ஒரு பரம்வீர் சக்ரா, மூன்று அசோக சக்ரா, ஐந்து பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், ஏழு மஹாவீர் சக்ரா, பனிரெண்டு கீர்த்தி சக்ரா, ஐந்து அதி விஷிஸ்ட சேவா பதக்கங்கள், அறுபத்தி ஆறு வீர் சக்ரா, இருபது சூரிய சக்ரா, எட்டு யுத்த சேவா பதக்கங்கள், முன்னூற்றி பதின்மூன்று சேவா பதக்கங்கள், பத்தொன்பது விஷிட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த பெருமை இந்தப் படைப்பிரிவுக்கு உண்டு. பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் கரியப்பா மற்றும் ஜெனரல் வி கே சிங் ஆகியோர் ராஜ்புத் படைப்பிரிவைச் சார்ந்தவர்கள். 

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தப் படை பர்மா நாட்டின் அர்கான் பகுதியில் நடைபெற்ற போரில் கலந்து கொண்டது. இவரது ராஜ்புத் படைப்பிரிவு அங்கே கிராமம் கிராமாக முன்னேறி ஜப்பானியப் படைகளை வென்றது. ஒரு கட்டத்தில் இவரது படைப்பிரிவு ஜப்பானிய தாக்குதலில் தனிமைப்படுத்தப்பட்டது. கடும் போருக்குப் பிறகு உயிருடன் இருந்தவர்களை மீட்டு இந்தியா கொண்டுவந்தனர்.

1945ல் இவரது படைப்பிரிவு அந்தமான் தீவுகளைக் காக்க அங்கிருக்கும் படையுடன் சேர்ந்துகொள்ள ஆணைவந்தது. அங்கே இருந்த ஜப்பானியப் படை சரணடைந்ததும் அக்டோபர் 1945ல் இவரது படைப்பிரிவு தில்லி வந்தது. சிப்பாய் ஜாதுநாத் நாயக்காக பதவி உயர்வு பெற்றார். தேச விடுதலைக்குப் பிறகு புதிய படைப்பிரிவுக்குப் போன ஜாதுநாத் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வீரர்களை பலசாலிகளாக மல்யுத்ததிலும் பயிற்றுவித்தார்.

அதே காலகட்டத்தில் காஷ்மீரைக் கைப்பற்ற பட்டாணியர்களை பாகிஸ்தான் அனுப்பியது. காஷ்மீரைக் கைப்பற்ற பாரத ராணுவம் களம் இறங்கியது. ஒரே சமயத்தில் ஸ்ரீநகரையும் ஜம்மு பகுதியிலும் பாகிஸ்தான் ஊடுருவியது. வடக்கே பூஞ்ச் பகுதி முதல் தென்கிழக்கே கதுவா வரை கைப்பற்றுவது அவர்களின் இலக்கு. பூஞ்ச், கோட்லி, மிர்பூர், ஜங்கர், நௌஷாரா, ரஜோரி ஆகிய நகரங்களை அவர்கள் சுற்றி வளைத்தனர். பாரத ராணுவம் வரும்வரை ஜம்மு காஷ்மீர் மகாராஜாவின் படை ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது. 

ஊடுருவல்காரர்கள் அனைவரையும் விரட்டி காஷ்மீரைக் காப்பாற்ற ராணுவத்திற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் கல்வந்சிங் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குர்தாஸ்புர் நகரில் இருந்து ஒரு படைப்பிரிவு ஜம்முவிற்கு விரைந்தது. ஜங்கர் மற்றும் நௌஷாரா பகுதிகளைக் காப்பாற்றுவது முக்கியமான சவாலாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜங்கர் பகுதியை பாரத ராணுவத்தால் காப்பாற்ற முடியவில்லை. 1947ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பாகிஸ்தானியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். மேலும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவாமல் தடுக்க நௌஷாரா நகரின் வடமேற்குத் திசையில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை பாரத ராணுவம் மேற்கொண்டது. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரிகேடியர் முகமது உஸ்மான் தனது படையை சிறிய அணிகளாகப் பிரித்து பல்வேறு இடங்களில் நிறுத்தினார், நௌஷாரா நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது டைன்தர் என்ற இடம். இதனைக் காவல் காக்கும் பொறுப்பு ஜாதுநாத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய படைப்பிரிவு அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் படைக்கு அவர் தலைமை தாங்கினார். 

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள். அதிகாலை நேரம், சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டு இருந்தது. தொலைவில் ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஜாதுநாத் சிங் பார்த்தார். மலைமுகத்தில் இருந்து அலையலையாக பாகிஸ்தானிய ராணுவம் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் எதிரே வந்துகொண்டு இருந்தார்கள். ஜாதுநாத்சிங்கிற்கும் அவரது மிகச் சிறிய படைக்கும் ஓன்று போரிட்டு வீரமரணம் அடைவது அல்லது எதிரியிடம் சரணடைவது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுதான் இருந்தது. உயிரோடு திரும்பிச் செல்வது என்பது இயலாத ஓன்று என்பது நிச்சயமாகத் தெரிந்தது. 

வீரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இது இன்றும் விடை தெரியாத கேள்வி. சவாலான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஒருவரை வீரர் என்று பிரகடனப் படுத்துகிறது. ஸர்வத்ர விஜய் - அதாவது எதிர்கொள்ளும் போரில் எல்லாம் வெற்றி, இதுதான் ராஜ்புத் படைப்பிரிவின் குறிக்கோள். உயிரைக் கொடுத்து முடிந்தவரை எதிரிப் படையை அழித்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பது என்று ஜாதுநாத்சிங் முடிவு செய்தார். 

இருபுறமும் துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியது. இயந்திரத் துப்பாக்கிகள் தோட்டாக்களை உமிழும் சப்தமும், கையெறி குண்டுகளால் ஏற்படும் புகையும் அந்த மலைப்பிரதேசத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. பணமும், பொருளும், கைபற்றிச் செல்ல இருக்கும் பெண்களும் பட்டாணியர்களை வெறியேற்ற,  நாட்டின் மானத்தையும்  படைப்பிரிவின் கௌரவத்தையும் காப்பாற்றும் தேவைக்காக ஜாதுநாத்சிங்கின் சிறிய படை அவர்களைத் தடுத்து நிற்க அந்த நிலம் ரத்தத்தால் சிகப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இறந்து விழும் ஒவ்வொரு பட்டாணியருக்கும் குறைந்தது இரண்டு பேர் அதே இடத்தில இருந்து தாக்கத் தொடங்கினார்கள். முதல் தாக்குதலை ஜாதுநாத்சிங்கின் படை வெற்றிகரமாக முறியடித்தது. ஆனால் பாரதப் படையில் பல வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள். 

பட்டாணியர்கள் இரண்டாவது முறையாகத் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். மீண்டும் கடுமையான சண்டை, இதில் ஜாதுநாத்சிங்கின் படைவீரர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். எதிரிகள் பக்கமும் கடுமையான உயிர்சேதம். மீண்டும் பின்வாங்கிய பட்டாணியர்கள் மீதமுள்ள தங்கள் ஆட்களையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தாக்குதலைத் தொடங்கினார்கள். தனி ஒருவனாக அவர்களை ஜாதுநாத்சிங் எதிர்கொண்டார். 

ரத்தம் சொட்டும் கையோடு பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்து எதிரிகளை நோக்கி ஜாதுநாத்சிங் சுடத் தொடங்கினார். தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஜாதுநாத்சிங் தாக்கத் தொடங்கியது எதிரிகளை குழப்பியது. ஏற்கனவே பலரை இழந்திருந்த பட்டாணியர்கள் நிலைகுலைந்து பின்வாங்கினார்கள். எட்டு குண்டுகளை உடல்முழுவதும் தாங்கி ஜாதுநாத்சிங் வீரமரணம் அடைந்தார். . 

எல்லையைக் காத்து நிற்கும் வீரர்களுக்கு துணையாக நமது படையின் பெரும் பிரிவு ஓன்று வந்து சேர்ந்தது.  தோற்று ஓடும் பட்டாணியர்களையும்,  அதனைப் பார்த்தவாறே கண்களைத் திறந்தபடி வீரமரணம் அடைந்த ஜாதுநாத்சிங் மற்றும் அவரது சகாக்களை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது. 

ஜாதுநாத்சிங்கின் மகத்தான வீரத்தைக் கெளரவம் செய்யும் வகையில் பாரத நாடு அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கியது.