செவ்வாய், 26 நவம்பர், 2019

பாரதத்தின் பால்காரர் - வர்கீஸ் குரியன் - நவம்பர் 26

எனக்கும் ஒரு கனவு இருந்தது - அந்த மனிதரின் சுயசரித்திரத்தின் பெயர் இதுதான். ஆனால் அவருக்கு சிறுவயதில் இருந்த கனவு அல்ல அது. வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு, பாஷை தெரியாத ஒரு குக்கிராமத்தில் தனது பயணத்தைக் தொடங்கி, ஆனால் இந்த தர்மக்ஷேத்திரத்தை தனது குருஷேத்திரமாக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனி மனிதரின் கதை அது. தனி மனிதனாக ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ஆனாலும் அதில் தான் ஒரு வேலையாள் மட்டும்தான், நான் இதற்கு உரிமையாளன் அல்ல இது எனது சுதர்மம் என்ற மனப்பாங்கோடு கீதை காட்டிய வழியில் நடந்த மனிதரின் கதை. 


கேரளாவைச் சார்ந்த சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் வர்கீஸ் குரியன். அவரது தந்தை ஒரு மருத்துவர், தாயாரும் கல்வி கற்றவர். தந்தை பணிபுரிந்த கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளி கல்வியையும், அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டத்தையும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது காலம் டாடா குழுமத்தில் பணி புரிந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது, நாடு வெகு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் பிரகாசமாக இருந்தது, பொருளாதாரரீதியாக இரண்டு நூறாண்டுகளாக சுரண்டப்பட்டு இருந்த தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த இளைஞர் பட்டாளம் தேவை என்பதால் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று படித்து நாட்டுக்கு தனது திறமையை அர்ப்பணம் செய்யத் தயாராக உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்விக்கான பொருளாதார உதவியை அரசு செய்ய முடிவெடுத்தது. அதில் தேர்வான குழுவில் வர்கீஸ் குரியனும் ஒருவர். பால் பதனிடும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வருமாறு அரசு அவருக்கு உதவித்தொகை அளித்தது. ஆனால் குரியன் உலோகவியலும், அணு அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே பால் பதனிடும் நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். நாடு திரும்பிய குரியனை குஜராத் மாநிலத்தின் கைரா  மாவட்டத்தின் ஆனந்த் என்ற ஒரு சிறு கிராமத்தில் பணியாற்ற அரசு பணித்தது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையை  ஏற்றுக்கொண்டார். எப்போது அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார். 

காலம் குரியனுக்கு வேறு ஒரு பாதையை தீர்மானித்து வைத்திருந்தது. தேசபக்தரும் கூட்டுறவு இயக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திரிபவன்தாஸ் படேல் என்பவரின் அறிமுகம் குரியனுக்கு கிடைத்தது. பால் வியாபாரம் செய்யும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பது குரியனின் மனதைப் பாதித்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்களோடு தொடர்ந்தது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலைமையை முன்னேற்றி, பாரத நாட்டை பால் உற்பத்தியில் உலகின் முக்கியமான  நாடாக மாற்றி, பெரும் நிறுவனங்களை உருவாக்கி என்று அவரின் வாழ்க்கையே பலருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 

ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே அளவில் பால் கிடைப்பது இல்லை. அதிகமாக பால் கிடைக்கும் நேரங்களில் அதை விற்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். இதனை மாற்ற கூட்டுறவு முறையில் பாலை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முறையை குரியன் அறிமுகம் செய்தார். பால் மீதமாகும் நேரங்களில் அதனை பால் பவுடராக மற்றும் நுட்பத்தை குரியன் அறிமுகம் செய்தார். அதுவும் எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் நுட்பம் என்பது அதுவரை உலகில் எங்கும் இல்லாத ஓன்று. பிரச்சனைக்கு தீர்வுகளை சமுதாயத்தோடு இணைந்த தொழில்நுட்பதின் மூலம் கண்டறியும் குரியனின் செயல்திறனால் குஜராத்தில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவானது. 

ஆனந்த் பகுதியில் குரியன் செயல்படுத்திய முறையை நாடு முழுவதும் முன்னெடுக்க அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியைப் பேருக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு என்ற நிலைமையில் இருந்து பால் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பால் உற்பத்தியை அவர் அதிகப்படுத்தினார். அதோடு இணைந்து பல்வேறு நிறுவனங்களை குரியன் உருவாக்கினார். குஜராத் பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு ( Gujarat Cooperative Milk Manufacturer Federation ), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Board ) என்று பால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்,  அதோடு இணைந்து அறிவியல் முறையில் தொழில்நுட்பத்தை இணைந்து கிராம முன்னேற்றத்திற்காக மேலாண்மை கல்லூரியையும்  கிராம மேலாண்மை நிறுவனம் ( Institute of Rural Management - Anand ) அவர் உருவாக்கினார். 

எல்லாக் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள்தான் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள், தான் வேலைக்காரன் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து குரியன் மாறவே இல்லை. குரியனின் சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அங்கீகாரம் வந்து சேர்ந்தது. 1965ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ, 1966ஆம் ஆண்டு பத்மபூஷன் அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பாரத அரசு அளித்தது. 1963ஆம் ஆண்டு மகாசாய் விருது, 1986ஆம் ஆண்டு க்ரிஷி ரத்னா ஆகிய விருதுகள் அவரை வந்தடைந்தன. ஆனால் இவை அனைத்தையும் விட அவருக்கு நெருக்கமாக இருந்தது மக்கள் அவருக்கு அளித்த பாரத நாட்டின் பால்காரர் - Milkman of India - என்ற பட்டம்தான். 

வாழ்க்கையில் பாலே குடிக்காத அந்த தேசத்தின் பால்காரர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் காலமானார். வாழ்க்கை முழுவதும் ஆனந்த் கிராமத்திலேயே வாழ்ந்து அந்த  மக்களுக்காகவே யோசித்த குரியனின் இறுதிச் சடங்குகள் அதே பால் உற்பத்தியாளர்கள் கூடி நிற்க ஆனந்த் கிராமத்திலேயே நடந்தது. தனி ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யலாம் என்று யாராவது கேட்டால் அதன் பதில் வர்கீஸ் குரியனின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக