திங்கள், 24 நவம்பர், 2025

நவம்பர் 24 - குரு தேஜ் பகதூர் பலிதானதினம்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும். 

ஞாயிறு, 23 நவம்பர், 2025

நவம்பர் 23 - தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் பிறந்தநாள்


பாரத நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தொழிலதிபரும், வால்சந்த் குழுமத்தைத் தொடங்கியவருமான வால்சந்த் ஹிராசந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. வியாபாரம் செய்யும் பின்னணியில் தொடங்கிய இவர் கப்பல்துறை, கப்பல் கட்டும் தொழில், கார் உற்பத்தி, விமான கட்டுமானம், கட்டடம் கட்டுதல், சர்க்கரை  உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் தயாரித்தல் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவராவார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சமண மரபினர் திரு ஹிராசந்த் நேம்சந்த் ஜோஷி. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மகனாக 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். சோலாப்பூர் அரசு பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து மும்பை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றார் வால்சந்த். அன்றய வழக்கப்படி படிக்கின்ற காலத்திலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இவர் மனைவி இறந்துவிட மறுமணம் செய்துகொண்டார்.

படித்து முடித்தபின் தந்தையின் தொழிலில் இணைந்த ஹிராசந்த், அதன் பின்னர் ரயில்வே துறையின் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தகாரராக உருவானார். தொடர்ந்து ஆங்கில அரசுக்கு பல்வேறு கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இவர் செய்து கொடுக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இந்திய தேசிய கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையாரோடு இணைந்து Free Press of India என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அநேகமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற செய்தி நிறுவனமாகவே இயங்கியது.

சில காலம் டாடா குழுமத்தோடு இணைந்து கட்டிடத்துறையில் செயல்பட்ட வால்சந்த் பிறகு டாடா குழுமத்தின் பங்குகளையும் வாங்கிக்கொண்டார். இன்று நாட்டின் முக்கியமான கட்டுமான நிறுவனமாக விலங்கு Hindustan Construction Company என்ற நிறுவனமும் இவர் நிறுவியதுதான். வால்சந்த் அவர்கள் சர்க்கரை தயாரிக்க 1908ஆம் ஆண்டு Walchandnagar Industries என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளை உருவாக்குதல், சிமெண்ட் தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி என்று பல்வேறு திசைகளில் வெற்றிகரமாகப் பயணித்தது. இன்று நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. பொக்ரானில் பாரதம் நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து அமெரிக்கா இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்தது, பின்னர் அது விளக்கிக்கொள்ளப்பட்டது.

குவாலியர் அரச குடும்பத்தினரிடம் இருந்து கப்பல் ஒன்றை வாங்கி வால்சந்த் சிந்தியா கப்பல் கம்பெனி என்ற பெயரில் ஒரு புது தொழிலைத் தொடங்கினார். சில காலத்தில் விசாகப்பட்டினதில் கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். கப்பல் தொழிலோடு இணைந்ததுதான் காப்பீடு நிறுவனம், எனவே அதையும் அவர் ஆரம்பித்தார். மைசூர் அரச குடும்பத்தோடு இணைந்து பெங்களூர் நகரில் விமான தயாரிப்பிலும் வால்சந்த் ஈடுபட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கப்பல் கட்டும் தளத்தையும், விமான தயாரிப்பு நிறுவனத்தையும் அன்றய அரசு நாட்டுடமை ஆக்கியது. அவை இன்று Hindustan Shipyard Ltd, Hindustan Aeronautical Ltd என்று அறியப்படுகின்றன. இதோடு வால்சந்த் கார் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் வரை புகழ்பெற்ற விளங்கிய Premier Padmini கார்கள் இவரது தயாரிப்பே.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் வால்சந்த் நிறுவினார். தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா மாநில தொழில்  தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றில் நீண்ட காலம் தலைவராகவும் வால்சந்த் பணியாற்றினார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பத்து  முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த வால்சந்த் ஹிராசந்த் 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் காலமானார். 

சனி, 22 நவம்பர், 2025

நவம்பர் 22 - மருத்துவர் ருக்மாபாய் பிறந்ததினம்

சிறுவயதில் நடைபெற்ற தனது திருமணம் செல்லாது என்று போராடி மருத்துவராக மாறிய ஒரு வீரப்பெண்ணின் கதை இது. மராத்தி குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயந்திபாய். பதினான்கு வயதில் திருமணமாகி பதினைந்து வயதில் தாயாகி பதினேழு வயதில் கணவரை இழந்தவர் ஜெயந்திபாய். கணவனை இழந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஜெயந்திபாய் சகாராம் அர்ஜுன் என்னும் மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயந்திபாய்க்கு முதல் திருமணத்தில் பிறந்த ருக்மாபாய் தன் தாயோடும் சகாராம் அர்ஜுனோடும் வசித்து வந்தார். அன்றய வழக்கத்தின்படி ருக்மாபாயின் பதினோராம் வயதில் அவருக்கு பத்தொன்பது வயதான தாதாஜி பிகாஜி என்பவரோடு திருமணம் நடந்தது.


குடும்பம் நடத்துவதற்கான வயதும் பக்குவமும் வராத காரணத்தால் ருக்மாபாய் தன் பெற்றோர்களோடு வசித்து வந்தார். அப்போது சகாராம் ருக்மாவிற்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை உருவாக்கினார். திருமணமாகி சிலகாலம் கழிந்த பிறகு தாதாஜி பிகாஜி தன் மனைவி ருக்மாபாய் தன்னோடு வந்து குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறினார். அன்றய காலகட்டத்தில் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் படிப்பின்மீதோ கல்வியின்மீதோ எந்த நாட்டமும் இல்லாத கணவரோடு வாழ ருக்மாபாய் மறுத்துவிட்டார். தனது முயற்சிகள் ஏதும் பலனைக்காததால் தாதாஜி பிகாஜி தன் மனைவி தன்னோடு வசிக்கவேண்டும் என கட்டளையிட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.

பிகாஜி எதிர் ருக்மாபாய் வழக்கு ( 1885 ) என்ற இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் பெரும் சர்சையைக் கிளப்பியது. ஹிந்து சட்டங்களுக்கும் ஆங்கில கிருஸ்துவ சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், மாறுதல் என்பது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் உள்ளே இருந்து வரவேண்டுமா அல்லது சட்டத்தின் மூலமாக வெளியே இருந்து திணிக்கப்பட்ட வேண்டுமா, பலகாலங்களாக நடைமுறையில் உள்ள முறைகளை மதிக்கவேண்டுமா அல்லது அவைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றலாமா  என்ற விவாதங்கள் எழுந்தன. தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் மனமுதிர்ச்சி இல்லாத காலத்தில் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிபதி ராபர்ட் ஹில் பின்ஹே தீர்ப்பளித்தார்.

இதனை ஏற்காத தாதாஜி பிகாஜி மேல்முறையீடு செய்தார். ருக்மாபாய் தன் கணவரோடு வாழவேண்டும் அல்லது ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பாரன் தீர்ப்பளித்தார். தன்மீது திணிக்கப்பட்ட மணவாழ்க்கையை விட சிறைத்தண்டனை ஏற்பது மேல் என்று ருக்மாபாய் முடிவு செய்தார். இதற்கிடையில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா மஹாராணி நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து ருக்மாபாயின் திருமணம் செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொண்டு தாதாஜி பிகாஜி தனது திருமண உரிமையை வீட்டுக் கொடுத்தார். 1891ஆம் ஆண்டு ஆங்கில அரசு தனது ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பிரதேசங்களிலும் பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை பத்தில் இருந்து பனிரெண்டாக உயர்த்தியது.

ஒருபுறம் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தாலும் ருக்மாபாய் மனதில் தனது வளர்ப்பு தந்தையைப் போல தானும் மருத்துவராக  வேண்டும் என்ற கனவு இருந்தது. மருத்துவம் படிக்க லண்டன் சென்ற ருக்மாபாய் 1894ஆம் ஆண்டு லண்டன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். காதம்பரி கங்குலி, ஆனந்தி ஜோஷி ஆகியோரோடு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற முன்னோடி பெண்மணிகளில் ஒருவராக அறியப்படலானார். 1895ஆம் ஆண்டு சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிய ருக்மாபாய் பின்னர் ராஜ்கோட் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் மும்பையில் வசித்து வந்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்த ருக்மாபாய் தனது தொன்னூறாவது வயதில் 1955ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 21 நவம்பர், 2025

நவம்பர் 21 - நாயக் ஜாதுநாத் சிங் பிறந்ததினம்

1947 - 1948 ஆண்டுகளில் நடைபெற்ற பாகிஸ்தானோடான போரில் மகத்தான வீரச் செயலுக்கான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் நாயக் ஜாதுநாத்சிங்.

 1916 நவம்பர் 21ல் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூர் அருகே கஜூரி என்ற கிராமத்தில் பிரபால்சிங் ரத்தோர் ஜமுனா கன்வார் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜாதுநாத். ஏழு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் என்ற எட்டுப்பேர் கொண்ட பெரிய குடும்பத்தின் மூன்றாவது மகன் இவர். பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்ததால் இவர் நான்காம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. பிறகு விவசாயத்தில் தனது தந்தைக்கு ஜாதுநாத் உதவியாக இருந்தார். வட இந்தியாவின் பல பகுதிகளில் மற்போர் ஒரு முக்கியமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். சிறு வயதில் இருந்தே மற்போரில் ஈடுபட்டு பல பரிசுகளையும் பதக்கங்களையும் ஜாதுநாத் வென்றார். ஹனுமான் போன்ற பலசாலி என்று மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜாதுநாத் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இணைந்துகொண்டார். முறையான ராணுவப் பயிற்சிகள் முடிந்த பிறகு ஜாதுநாத் ராஜ்புத் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். ராஜ்புத் படைப்பிரிவு ஏறத்தாழ இருநூற்று இருபத்தி ஐந்து ஆண்டு கால வரலாறு கொண்ட பாரத ராணுவத்தின் பழமையான படைப்பிரிவாகும். 1798ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் இந்தப் படைக்கு உண்டு. இந்தப் படையின் குறிக்கோள் "ஸர்வத்ர விஜய்" அதாவது எல்லா இடங்களிலும் வெற்றி அல்லது எல்லாப் போர்களிலும் வெற்றி என்பதாகும். இவர்களின் போர் முழக்கம் " போல் பஜ்ரங்கபலி கி ஜெய்" என்பது. ஒரு பரம்வீர் சக்ரா, மூன்று அசோக சக்ரா, ஐந்து பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், ஏழு மஹாவீர் சக்ரா, பனிரெண்டு கீர்த்தி சக்ரா, ஐந்து அதி விஷிஸ்ட சேவா பதக்கங்கள், அறுபத்தி ஆறு வீர் சக்ரா, இருபது சூரிய சக்ரா, எட்டு யுத்த சேவா பதக்கங்கள், முன்னூற்றி பதின்மூன்று சேவா பதக்கங்கள், பத்தொன்பது விஷிட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த பெருமை இந்தப் படைப்பிரிவுக்கு உண்டு. பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய ஜெனரல் கரியப்பா மற்றும் ஜெனரல் வி கே சிங் ஆகியோர் ராஜ்புத் படைப்பிரிவைச் சார்ந்தவர்கள். 

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தப் படை பர்மா நாட்டின் அர்கான் பகுதியில் நடைபெற்ற போரில் கலந்து கொண்டது. இவரது ராஜ்புத் படைப்பிரிவு அங்கே கிராமம் கிராமாக முன்னேறி ஜப்பானியப் படைகளை வென்றது. ஒரு கட்டத்தில் இவரது படைப்பிரிவு ஜப்பானிய தாக்குதலில் தனிமைப்படுத்தப்பட்டது. கடும் போருக்குப் பிறகு உயிருடன் இருந்தவர்களை மீட்டு இந்தியா கொண்டுவந்தனர்.

1945ல் இவரது படைப்பிரிவு அந்தமான் தீவுகளைக் காக்க அங்கிருக்கும் படையுடன் சேர்ந்துகொள்ள ஆணைவந்தது. அங்கே இருந்த ஜப்பானியப் படை சரணடைந்ததும் அக்டோபர் 1945ல் இவரது படைப்பிரிவு தில்லி வந்தது. சிப்பாய் ஜாதுநாத் நாயக்காக பதவி உயர்வு பெற்றார். தேச விடுதலைக்குப் பிறகு புதிய படைப்பிரிவுக்குப் போன ஜாதுநாத் அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வீரர்களை பலசாலிகளாக மல்யுத்ததிலும் பயிற்றுவித்தார்.

அதே காலகட்டத்தில் காஷ்மீரைக் கைப்பற்ற பட்டாணியர்களை பாகிஸ்தான் அனுப்பியது. காஷ்மீரைக் கைப்பற்ற பாரத ராணுவம் களம் இறங்கியது. ஒரே சமயத்தில் ஸ்ரீநகரையும் ஜம்மு பகுதியிலும் பாகிஸ்தான் ஊடுருவியது. வடக்கே பூஞ்ச் பகுதி முதல் தென்கிழக்கே கதுவா வரை கைப்பற்றுவது அவர்களின் இலக்கு. பூஞ்ச், கோட்லி, மிர்பூர், ஜங்கர், நௌஷாரா, ரஜோரி ஆகிய நகரங்களை அவர்கள் சுற்றி வளைத்தனர். பாரத ராணுவம் வரும்வரை ஜம்மு காஷ்மீர் மகாராஜாவின் படை ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தது. 

ஊடுருவல்காரர்கள் அனைவரையும் விரட்டி காஷ்மீரைக் காப்பாற்ற ராணுவத்திற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் கல்வந்சிங் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குர்தாஸ்புர் நகரில் இருந்து ஒரு படைப்பிரிவு ஜம்முவிற்கு விரைந்தது. ஜங்கர் மற்றும் நௌஷாரா பகுதிகளைக் காப்பாற்றுவது முக்கியமான சவாலாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜங்கர் பகுதியை பாரத ராணுவத்தால் காப்பாற்ற முடியவில்லை. 1947ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பாகிஸ்தானியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். மேலும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவாமல் தடுக்க நௌஷாரா நகரின் வடமேற்குத் திசையில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களை பாரத ராணுவம் மேற்கொண்டது. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரிகேடியர் முகமது உஸ்மான் தனது படையை சிறிய அணிகளாகப் பிரித்து பல்வேறு இடங்களில் நிறுத்தினார், நௌஷாரா நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது டைன்தர் என்ற இடம். இதனைக் காவல் காக்கும் பொறுப்பு ஜாதுநாத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய படைப்பிரிவு அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் படைக்கு அவர் தலைமை தாங்கினார். 

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள். அதிகாலை நேரம், சூரியன் அப்போதுதான் உதித்துக்கொண்டு இருந்தது. தொலைவில் ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஜாதுநாத் சிங் பார்த்தார். மலைமுகத்தில் இருந்து அலையலையாக பாகிஸ்தானிய ராணுவம் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. நூற்றுக்கணக்கான வீரர்கள் எதிரே வந்துகொண்டு இருந்தார்கள். ஜாதுநாத்சிங்கிற்கும் அவரது மிகச் சிறிய படைக்கும் ஓன்று போரிட்டு வீரமரணம் அடைவது அல்லது எதிரியிடம் சரணடைவது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுதான் இருந்தது. உயிரோடு திரும்பிச் செல்வது என்பது இயலாத ஓன்று என்பது நிச்சயமாகத் தெரிந்தது. 

வீரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இது இன்றும் விடை தெரியாத கேள்வி. சவாலான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுதான் ஒருவரை வீரர் என்று பிரகடனப் படுத்துகிறது. ஸர்வத்ர விஜய் - அதாவது எதிர்கொள்ளும் போரில் எல்லாம் வெற்றி, இதுதான் ராஜ்புத் படைப்பிரிவின் குறிக்கோள். உயிரைக் கொடுத்து முடிந்தவரை எதிரிப் படையை அழித்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பது என்று ஜாதுநாத்சிங் முடிவு செய்தார். 

இருபுறமும் துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியது. இயந்திரத் துப்பாக்கிகள் தோட்டாக்களை உமிழும் சப்தமும், கையெறி குண்டுகளால் ஏற்படும் புகையும் அந்த மலைப்பிரதேசத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. பணமும், பொருளும், கைபற்றிச் செல்ல இருக்கும் பெண்களும் பட்டாணியர்களை வெறியேற்ற,  நாட்டின் மானத்தையும்  படைப்பிரிவின் கௌரவத்தையும் காப்பாற்றும் தேவைக்காக ஜாதுநாத்சிங்கின் சிறிய படை அவர்களைத் தடுத்து நிற்க அந்த நிலம் ரத்தத்தால் சிகப்பு நிறமாக மாறத் தொடங்கியது. இறந்து விழும் ஒவ்வொரு பட்டாணியருக்கும் குறைந்தது இரண்டு பேர் அதே இடத்தில இருந்து தாக்கத் தொடங்கினார்கள். முதல் தாக்குதலை ஜாதுநாத்சிங்கின் படை வெற்றிகரமாக முறியடித்தது. ஆனால் பாரதப் படையில் பல வீரர்கள் படுகாயம் அடைந்தார்கள். 

பட்டாணியர்கள் இரண்டாவது முறையாகத் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். மீண்டும் கடுமையான சண்டை, இதில் ஜாதுநாத்சிங்கின் படைவீரர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். எதிரிகள் பக்கமும் கடுமையான உயிர்சேதம். மீண்டும் பின்வாங்கிய பட்டாணியர்கள் மீதமுள்ள தங்கள் ஆட்களையும் சேர்த்துக்கொண்டு அடுத்த தாக்குதலைத் தொடங்கினார்கள். தனி ஒருவனாக அவர்களை ஜாதுநாத்சிங் எதிர்கொண்டார். 

ரத்தம் சொட்டும் கையோடு பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்து எதிரிகளை நோக்கி ஜாதுநாத்சிங் சுடத் தொடங்கினார். தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் ஜாதுநாத்சிங் தாக்கத் தொடங்கியது எதிரிகளை குழப்பியது. ஏற்கனவே பலரை இழந்திருந்த பட்டாணியர்கள் நிலைகுலைந்து பின்வாங்கினார்கள். எட்டு குண்டுகளை உடல்முழுவதும் தாங்கி ஜாதுநாத்சிங் வீரமரணம் அடைந்தார். . 

எல்லையைக் காத்து நிற்கும் வீரர்களுக்கு துணையாக நமது படையின் பெரும் பிரிவு ஓன்று வந்து சேர்ந்தது.  தோற்று ஓடும் பட்டாணியர்களையும்,  அதனைப் பார்த்தவாறே கண்களைத் திறந்தபடி வீரமரணம் அடைந்த ஜாதுநாத்சிங் மற்றும் அவரது சகாக்களை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது. 

ஜாதுநாத்சிங்கின் மகத்தான வீரத்தைக் கெளரவம் செய்யும் வகையில் பாரத நாடு அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கியது.  

வியாழன், 20 நவம்பர், 2025

நவம்பர் 20 - தடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி பிறந்தநாள்



காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தவர், ஆனால் அந்த முறை பயன்தராது என்று உணர்ந்தபோது மிகச் குறைந்த அரசு கண்காணிப்பில் இயங்கும் தொழில்முறைக்கு ஆதரவாக செயல்பட்டவர், நேருவுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய தோழராகவும், பின்னர் அவரது கடுமையான விமர்சகராகவும் மாறியவர், கடவுள் நம்பிக்கை இல்லாத, மாட்டுக்கறி உண்ணும் பார்சி ஆனால் காலம் முழுவதும் மது அருந்தாத, மாமிசம் உண்ணாத ராஜாஜி தொடங்கிய ஸ்வராஜ்யா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்று பல்முக ஆளுமை மினு மசானியின் பிறந்தநாள் இன்று.

மும்பை பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் மும்பை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த சர் ருஸ்தம் மசானியின் மகனாக 1905ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் பிறந்தவர் மினோச்சேர் ருஸ்தம் மசானி, சுருக்கமாக மினு மசானி. மும்பையில் கல்வி கற்ற மினு மசானி லண்டனில் பொருளாதாரமும், அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்றார்.

1929ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய மினு மசானி மும்பையில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்குரைஞர் தொழிலை நிறுத்திக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார். 1932ஆம் ஆண்டு நாசிக் சிறையில் இருந்த போது ஜெயப்ரகாஷ் நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அன்றய இளைஞர்களுக்கு அதுவும் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர்களுக்கு இயல்பாகவே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. உலகில் பெரும்பாலான நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்கும் நேரத்தில், பாட்டாளி மக்களால் நடத்தப்படும் சோவியத் யூனியன் ஒரு கனவு தேசமாக தெரிந்ததால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

1934ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே இந்தியன் சோசலிஸ்ட் காங்கிரஸ் என்ற அமைப்பை சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவர்கள் தொடங்கினார்கள். அதில் மினு மசானி முக்கியமான ஒருவர். இளைய தலைமுறை தலைவராக உருவாக்கிக்கொண்டு இருந்த நேருவும் சோசலிச சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார். அதனால் இயல்பாகவே மசானி நேருவின் நெருங்கிய நண்பரானார். மினு மசானி மும்பை மாநகராட்சியின் மேயராகவும் அதன் பின்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலையான பிறகு பிரேசில் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு திரும்பிய மசானி Freedom First என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார்.

சோவியத் ரஷ்யா பற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் உண்மையில்லை என்பதை மிகவிரைவில் மினு மசானி புரிந்து கொண்டார். ஆனால் அவரின் இந்தப் புரிதல் அவர் மீது நேருவுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. நேரு நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ரஷ்யா போலவே விவசாய நிலங்களை எல்லாம் அரசின் கீழ் கொண்டுவந்து கூட்டுப் பண்ணை முறையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். சோசலிச முறை பாரத நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காது என்று கருதிய மசானி 1957ஆம் ஆண்டு தேர்தலில் ராஞ்சி தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. நாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக நேரு விளங்கினார். ஆனால் மக்களாட்சி முறைக்கு இது கேடு, நேருவின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றாது என்று எண்ணிய ராஜாஜி ஸ்வதந்தரா கட்சியைத் தொடங்கினார். அரசு என்பது அரசாட்சி செய்யவேண்டும், வணிகம் செய்வது அரசின் வேலை இல்லை என்பது ஸ்வதந்த்ரா கட்சியின் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் 1990இல் நரசிம்மராவ் முன்னெடுத்த தாராளமயமாக்கள்தான். பேராசிரியர் என் ஜி ரெங்கா போன்ற தலைவர்கள் ஸ்வதந்தரா கட்சியில் இருந்தார்கள். கட்சியின் தலைவராக மினு மசானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வதந்தரா கட்சி சார்பாக 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மசானி.

பாரதிய ஜனசங்கம் அப்போது பெரிய கட்சியாக உருவாகவில்லை. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக ஸ்வதந்தரா கட்சி விளங்கியது. நேருவிற்குப் பின் இந்திரா இன்னும் வேகமாக சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தார். தொழிலதிபர்களை பணக்காரர்களை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம், நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களின் ஓட்டைப் பெற்றுவிடலாம் என்று அவர் எண்ணினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் என்று இந்திரா அதிரடி ஆட்டங்களை ஆடினார். இவை சட்டபூர்வமானது அல்ல என்று மசானி நாடாளுமன்றத்தில் வாதாடினார். நீதிமன்ற உத்தரவுகளை புறம்தள்ளி அவசரச் சட்டங்களின் மூலம் தனது எண்ணத்தை இந்திரா நிறைவேற்றிக்கொண்டார்.

வங்க தேச விடுதலையை அடுத்து நடந்த 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா பெரும் வெற்றியைப் பெற்றார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மசானி கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த வருடத்தில் ராஜாஜி இறக்க, ஸ்வதந்த்ரா கட்சி இல்லாமலே போனது. ஆனால் ராஜாஜியும் அவரது சகாக்களும் கூறியது உண்மை என்று காலம் நிரூபித்தது. சோசலிச முறை தோல்வி அடைய, சுதந்திரப் பொருளாதார முறைக்கு நாடு திரும்பியது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிய மினு மசானி தனது பத்திரிகையை நடத்துவதிலும் பல்வேறு புத்தகங்களை எழுதுவதிலும் இயங்கி கொண்டு இருந்தார். 1975ஆம் ஆண்டு இந்திரா பிரகடனம் செய்த நெருக்கடி நிலை சமயத்தில் மசானியின் Freedom First பத்திரிகையும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி தணிக்கையை மசானி ரத்து செய்ய வைத்தார்.

ஒரு காலத்தில் பாரத நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்த மினு மசானி தனது தொண்ணூற்றி இரண்டாம் வயதில் 1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் காலமானார். 

புதன், 19 நவம்பர், 2025

நவம்பர் 19 - ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் பிறந்ததினம்

பாரதப் பெண்களின் வீரத்திற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் அனைவரும் ஒருமித்த குரலில் கூறும் பதில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்றுதான் இருக்கும். அந்த வீரத்தாயின் பிறந்ததினம் இன்று. 


ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு  வாரணாசி நகரில்  ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா என்பதாகும். தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்திச்சண்டை போன்றவற்றில் பயிற்சி பெற்று இருந்தார்.
1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மஹாராஜாவாக இருந்த கங்காதர்ராவ் நிவால்கர் என்பவரை மணந்து கொண்டார். அதன் பிறகு லக்ஷ்மிபாய் என்று அழைக்கப்படலானார். இவர்களுக்கு 1851ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான், ஆனால் சில மாதங்களிலேயே அந்த மகன் இறந்துவிட்டான்.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற மாவீரன் தாந்தியா தோபேவை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். ராணியின் உடலைக்கூட எதிரிகள் கைப்பற்றி விடக்கூடாது என்று அவரின் வீரர்கள் ராணியின் உடலை எரித்து விட்டனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் அணிக்கு ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் அணி என்றுதான் பெயரிட்டார். காலங்களைக் கடந்தும் அந்த வீரப்பெண்மணியின் வரலாறு நாடு மக்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

செவ்வாய், 18 நவம்பர், 2025

நவம்பர் 18 - திரைப்பட இயக்குனர் V சாந்தாராம் பிறந்தநாள்

வெற்றிகரமான இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு சாந்தாராமின் பிறந்தநாள் இன்று. திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி.


1901  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் இன்றய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர் நகரில் பிறந்தவர் சாந்தாராம். இள வயதிலேயே கலையார்வம் கொண்டவராக விளங்கிய சாந்தாராம், பாபுராவ் என்பவர் நடத்திய திரைப்பட நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1921ஆம் ஆண்டு சுரேகா ஹரன் என்ற மௌன படத்தில் அறிமுகமானார். நேதாஜி பால்கர் என்ற படத்தை முதல்முதலாக 1927ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் படைத் தளபதி நேதாஜி பாலகர் பற்றிய படம் இது.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு நண்பர்கள் சிலரோடு இணைந்து பிரபாத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 1932ஆம் ஆண்டு தயாரான அயோத்திசா ராஜா என்ற படம்தான் மராட்டி மொழியில் தயாரான முதல் படம். அதற்கு முன் அநேகமாக மௌனப் படங்கள்தான் பாரதத்தில் தயாரிக்கப் பட்டு வந்தன. ஒரே நேரத்தில் மராத்தி மொழியிலும் ஹிந்தி மொழியிலும் சாந்தாராம் இயக்கி இருந்தார்.

சமகால வாழ்க்கையைப் பதிவு செய்ததிலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் இயக்குனர் சாந்தாராம் இன்றும் நினைக்கப்படுகிறார். காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மனூஸ் என்ற மராத்தி மொழிப் படத்தில் கையாண்டார் சாந்தாராம். மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹிந்து சமயத் துறவியான ஏகநாதரைப் பற்றி தர்மாத்மா, வயதான முதியவரை திருமணம் செய்ய மறுக்கும் இளம் பெண்ணைப் பற்றி துனியா ந மானே ஆகியவை இவர் ஆரம்ப காலங்களில் இயக்கிய முக்கியமான படங்களாகும்.

பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இருந்து விலகி 1942ஆம் ஆண்டு ராஜ்கமல் கலாமந்திர் என்ற திரைப்பட நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சாந்தாராம் திரைத்துறையில் பங்களித்து வந்தார். ஜனக் ஜனக் பாயல் பஜே என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம்தான் முதல் வண்ணப்படம். நடனக் கலைஞர்களை கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

சிறைத்தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை விதைக்கும் தோ ஹங்கேன் பாரா ஹாத் ( இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும் ) என்ற படம் திரையுலகில் ஒரு மைல்கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும் அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம் ஜி ஆர் நடிப்பில் தமிழிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது.

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சாந்தாராமுக்கு 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இயக்குநர் சாந்தாராம் காலமானார்.