செவ்வாய், 28 அக்டோபர், 2025

அக்டோபர் 28 - இந்திரா நூயி பிறந்தநாள்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

அக்டோபர் 26 - புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் -

அக்டோபர் 26, வருடம் 2000. அது ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள் 

வெள்ளி, 24 அக்டோபர், 2025

அக்டோபர் 24 - கேலிச்சித்திர கலைஞர் R K லக்ஷ்மன் பிறந்தநாள்

பாரதம் அப்போதுதான் ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை அடைந்து இருந்தது. அந்நியர் ஆட்சி அகன்றதால் இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் அரசியல்வாதிகள் விதைத்துக்கொண்டு இருந்தனர். அரசியலமைப்பு சட்டம் நிறைவேறி, பாரதம் தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து இருந்தது. வயது வந்த அனைவரும் ஒட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் ஒரு ஆண்டு காலம் இருந்தது.



பாராளுமன்றத் தேர்தல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு,ஐந்தாண்டு திட்டங்கள், சீனா உடனான போர், நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றல், பாகிஸ்தானுடனான போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சாஸ்திரி மறைவு, இந்திரா பிரதமராகுதல், காங்கிரஸ் கட்சி பிளவு அடைதல், பாரதம் சோசலிச சித்தாந்தத்தில் கரைதல், வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்காள தேச விடுதலைக்காக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், நெருக்கடி நிலை, ஜனதா கட்சி ஆட்சி, இரண்டரை ஆண்டுகளில் அதுவும் கவிழ்தல், மீண்டும் இந்திரா, பஞ்சாப் தீவிரவாதம், பொற்கோவிலில் ராணுவம் நுழைதல், இந்திராவின் படுகொலை, ராஜிவ் பதவி ஏற்பு , டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், போபால் விஷவாயு கசிவு, போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஜனதாதளத்தின் சார்பில் வி பி சிங், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராகுதல், ராஜிவ் படுகொலை, நரசிம்மராவ் பிரதமராகுதல், பொருளாதார தாராளமயமாக்கல், மீண்டும் தேவ கௌடா மற்றும் குஜரால் பிரதமர் பதவிக்கு வருதல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பதவி ஏற்றல், கார்கில் போர். மிகச் சரியாக பாரதம் விடுதலை பெற்ற ஐம்பது ஐந்து கால வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், இப்படி சொல்லி முடிக்கலாம்.

இந்த வரலாற்றை அருகில் இருந்து எதுவும் பேசாமல், சாட்சியாக மட்டும் இருந்து கவனித்து பதிவு செய்த ஒரு மனிதர் உண்டு. அவருக்கு பெயர் கூடக் கிடையாது. வேண்டுமானால் நாம் அவரை திருவாளர் பொதுஜனம் ( The common man ) என்று பெயரிட்டு அழைக்கலாம். அவரது உடையை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டு உருவான ஆடை அது. ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஒரு வங்காளி பீஹாரியைப் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்த பாரதப் பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்து நிற்பதோடு, வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டு இருப்பதுதான். அப்படியான மக்களின் பிரதிநிதி பேசவா செய்வார் ? அவர் எல்லாவற்றையும் பேசாமலேயே பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் அவர் பேசவேண்டியவற்றை அவரது முகபாவங்களே காட்டி விடும். அப்படியான மக்களின் பிரதிநிதியை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மன் சுருக்கமாக ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.



பாரதத்தின் முக்கியமான கதை சொல்லிகளின் ஒருவரான திரு ஆர் கே நாராயணனின் சகோதரர் ஆர் கே லக்ஷ்மன். இவர் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். ஆறு மகன்களும், இரண்டு பெண்களும் உள்ள பெரிய குடும்பத்தின் கடைசி பிள்ளை லக்ஷ்மன். தந்தை மைசூரில் பணி புரிந்ததால், லக்ஷ்மன் படிப்பு மைசூர் நகரிலேயே நடைபெற்றது. சிறு வயதில் இருந்தே தரைகளிலும், சுவர்களிலும், பள்ளி புத்தகங்களிலும் படங்கள் வரைவது லக்ஷ்மணின் பழக்கம். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், தனது சகோதர்கள் ஆதரவில் லக்ஷ்மன் வளர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும் போதே பல்வேறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுப்பது இவரின் பகுதி நேரத் தொழிலாக இருந்தது.

ஸ்வராஜ்யா, பிளிட்ஸ், ஹிந்து போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொண்டிருந்த லக்ஷ்மன், Times of India பத்திரிகையில் இணைந்து கொண்டார். அப்போது அவரோடு சித்திரக்காரராக பணியாற்றியவர் மகாராஷ்டிராவின் முக்கியத் தலைவராக பின்னாளில் உருவெடுத்த பால் தாக்கரே. அப்போது உருவானவர்தான் இந்த திருவாளர் பொதுஜனம்.

சிறுது சிறிதாக உருமாறி, பாரத பிரஜைகளின் ஒட்டு மொத்த உருவமாக, அவர்களின் மனசாட்சியாக மாறியவர் அவர். ஐம்பதாண்டுகால பாரத நாட்டின் வரலாற்றை திருவாளர் பொதுஜனத்தின் பார்வையில் பார்ப்பது என்பது நமது வரலாற்றை நாமே மீள்பார்வையை பார்ப்பதாகும். கேப்டன் கோபிநாத் தொடங்கிய டெக்கான் விமான நிறுவனத்தின் அடையாளமாகவும் திருவாளர் பொதுஜனமே இருந்தார். திருவாளர் பொதுஜனத்திற்கு பூனா நகரிலும் மும்பையிலும் சிலைகள் உள்ளன.



 புகழ்பெற்ற நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான பேபி கமலா என்பவரை லக்ஷ்மன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை. முறையான விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமலா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்மணியை அவர் மணந்து கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காலமானார். 

வியாழன், 23 அக்டோபர், 2025

அக்டோபர் 23 - சுபேதார் ஜோகிந்தர் சிங் - நினைவுநாள்

இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர்சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர்சிங் அவர்களின் நினைவுநாள் இன்று. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் பெரும் வீரத்தைக் காட்டி, உச்சகட்டமாக தன உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர் திரு ஜோகிந்தர்சிங் அவர்கள்.



பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஷேர்சிங் சஹனான் - கிருஷ்ணன் கவுர் தம்பதியரின் மகனாக 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் திரு ஜோகிந்தர் சிங். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவர் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். அவர் அன்றய ராணுவத்தின் சீக்கிய பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ராணுவத்தில் சிறப்பு பயிற்சிகளை முடித்து அவர் வீரர்களின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போரிலும், பின்னர் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரிலும் ஜோகிந்தர் கலந்துகொண்டார்.

1962ஆம் ஆண்டு சீனா இந்தியாமீது படையெடுத்தது. களநிலவரம் தெரியாமல் கற்பனையில் மூழ்கி இருந்த தலைமையால் இந்திய ராணுவம் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் எல்லா இடர்களுக்கு நடுவிலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துணிச்சலைக் காட்டி பெரும் சாகசங்களை நிகழ்த்தினர்.

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்கா சூ என்ற ஆற்றின் அருகே உள்ள தளத்தைக் காக்க சீக்கியப் படை பிரிவு களம் இறங்கியது. மிகக் குறைவான தளவாடங்களையும் அதைவிடக் குறைவான வீரர்களையும் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு முழுவதுமாக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, முடிந்தவரை சீனப் படைகளைத் தடுத்து நின்றனர். ஆனாலும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த சீனப் படை எல்லா இந்திய வீரர்களையும் கொன்று அந்தத் தளத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து முன்னேறிய சீனப்படையை பும்லா கணவாய் அருகே சீக்கியப் படையின் இன்னொரு பிரிவு எதிர்கொண்டது. அந்த படைக்கு தலைமை வகித்தவர் சுபேதார் ஜோகிந்தர் சிங். மொத்தம் இருபது வீரர்கள் கொண்ட படை அது. கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தளத்தை கைப்பற்ற அடுத்தடுத்து மூன்று முறை தலா 200 வீரர்கள் கொண்ட படையை சீனா அனுப்ப வேண்டி வந்தது. இரண்டு முறை வந்த படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து, எதிரிகளை முழுவதுமாக சீக்கியப் படைப்பிரிவு கொன்றது. ஆனால் அதில் நமது படையின் பாதி வீரர்கள் மரணமடைந்தார். மூன்றாம் முறை அடுத்த 200 சீன வீரர்கள் தாக்குதலை பத்தே இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் இந்தியப் படையின் குண்டுகள் எல்லாம் காலியாகி விட்டது.

கையில் துப்பாக்கியோடு 200 சீன வீரர்கள் ஒருபுறம், தாயகத்தைக் காக்கும் பணியில் எந்த தளவாடங்களும் இல்லாத பத்து இந்திய வீரர்கள் மறுபுறம். ஆனாலும் போரில் பின்வாங்குவது என்பது சீக்கிய வீரர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஓன்று. துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டால் என்ன ? துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி உள்ளதே. 'ஜெய் போலோ ஸோ நிஹால் ஸத் ஸ்ரீ அகால்' இதுதான் சீக்கியப் படைப்பிரிவின் போர் முழக்கம். குரு கிரந்த சாஹிபின் புனித மந்திரமான ஸத் ஸ்ரீ அகால் என்ற முழக்கத்தோடு துப்பாக்கியில் உள்ள கத்தியை ஆயுதமாக கையில் ஏந்தி சுபேதார் ஜோகிந்தர்சிங் தலைமையில் மீதம் இருந்த பத்து வீரர்களும் எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். எதிரியின் படையில் பெரும் சேதத்தை உருவாக்கி, அவர்கள் பாரத வீரத்தை பாரெங்கும் பறை சாற்றினர்.

எண்ணிக்கையிலும், தளவாடத்திலும் அதிகமாக இருந்த சீனர்கள் அந்தப் போரில் வெற்றி அடைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அளிக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருந்தது. சுபேதார் ஜோகேந்தர்சிங் போர் கைதியாக சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடைந்தார்.

பிரமிக்கத் தக்க வீரத்தைக் காட்டி, மிகப் பெரும் தியாகத்தைச் செய்து பலிதானியான சுபேதார் ஜோகேந்தர்சிங் அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிகப் பெரும் விருதான பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. முழுமரியாதையோடு ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை சீனா பாரத நாட்டிடம் ஒப்படைத்தது.

எண்ணற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள். 

புதன், 22 அக்டோபர், 2025

22 அக்டோபர் - புரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள்

பாரதநாட்டின் விடுதலை என்பது பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் பலிதானத்தால் கிடைத்த ஓன்று. கத்தியின்றி ரத்தமின்றி என்று கூறப்பட்டாலும், தூக்குமேடையை முத்தமிட்டவர்கள், பீரங்கி குண்டுகளில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து புரட்சிகீதம் இசைத்தவர்கள் என்று பலப்பல தியாகசீலர்களின் உதிரத்தால் உருவானது நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கும் சுதந்திரம். திட்டமிட்டு பல்வேறு தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது என்றாலும் அதனைத் தாண்டி அந்த வீரர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதும், அதனை ஆவணப்படுத்துவதும் நமது கடமையாக இருக்கவேண்டும். எரிநட்ஷத்திரம் போல மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும், சர்வ நிச்சயமாக மரணம்தான் என்பதை உணர்ந்து, இன்று உந்தன் பாதத்தில் தாயே! நானே அர்ப்பணம் என்று பலிதானியான புரட்சிவீரர்களில் முக்கியமானவர் அஷ்பாகுல்லாகான்.



இன்றய உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் ஷபியுல்லாகான் - மெஹரின்நிசா   தம்பதியரின் ஆறாவது மகனாக 1900ஆவது ஆண்டில் அக்டோபர் 22ஆம் நாள் பிறந்தவர் அஷ்பாகுல்லாகான். இவர்கள் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பட்டாணி இனத்தவர். அஷ்பாகுல்லாகான் வளரும் காலம் என்பது இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். வங்கப் பிரிவினையும், திலகரின் பூரண ஸ்வராஜ் முழக்கமும், பின்னர் காந்தியின் விஸ்வரூபமும், ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பல்வேறு ஆயுதம் ஏந்திய போராட்ட முயற்சிகளும் என்று நாடு ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது. இதன் தாக்கம் அஷ்பாகுல்லாகான் வாழ்க்கையிலும் எதிரொலித்தது.

1922ஆம் ஆண்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். நாடெங்கும் ஆங்கில ஆட்சிக்கு பாரத மக்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்று போராடத் தொடங்கினார்கள். ஆனால் சவுரிசவுரா என்ற இடத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்த மக்கள் ஒரு காவல் நிலயத்தைத் தாக்கி அதனை தீக்கிரையாக்கினார். இதில் சில காவலர்கள் இறக்க நேரிட்டது. மக்கள் அஹிம்சை முறையிலான போராட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று கூறி காந்தி போராட்டத்தை திரும்பப் பெற்றார்.

இதனால் மனசோர்வுற்ற பல்வேறு இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு திரும்பினார். பாரத நாடெங்கும் பல்வேறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் தங்களைத் தயார் செய்து கொண்டுதான் இருந்தார்கள், அவர்களுக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசித்துவந்த பாரத மக்கள் உதவிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பதுதான் உண்மை. அஷ்பாகுல்லாகான்ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்துகொண்டார். அதாவது அஷ்பாகுல்லாகான் புகழ்பெற்ற புரட்சிவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோரின் தோழரும், சகபோராளியுமாவார்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றால் ஆயுதம் வேண்டாமா ? ஆயுதம் வாங்க பணம் வேண்டாமா ? எப்படி பணம் சம்பாதிக்க ? ஒரே வழி கொள்ளை அடிப்பதுதான், ஆனால் அதற்காக சக பாரத மக்களிடம் கொள்ளை அடிப்பது தவறு, வேறு என்ன செய்ய ? ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்து கொள்ளை அடிப்போம், அந்தப் பணத்தை வைத்து ஆயுதம் வாங்குவோம், அந்த ஆயுதங்களைக் கொண்டு ஆங்கில ஆட்சியை விரட்டுவோம் என்று வீரர்கள் முடிவு செய்தனர்.

1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் - ஷஹரான்பூரில் இருந்து லக்நோ நகருக்கு வந்து கொண்டிருந்த புகைவண்டியை ககோரி என்ற இடத்திற்கு அருகே அபாயச்சங்கிலியை இழுத்து நிறுத்தினார்கள் புரட்சியாளர்கள். அதில் இருந்த பணம் ஏறத்தாழ ஒருலட்சம் ரூபாயை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். துணிகரமான இந்த செயலில் அஷ்பாகுல்லாகான் உடன் ராம் பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத், சசீந்திர பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத்நாத் குப்தா, முராரிலால் குப்தா, பன்வாரிலால், முகுந்த்லால் ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் நடைபெற்ற கைகலப்பில் அஹ்மத் அலி என்ற பயணி கொல்லப்பட்டார்.

நாடெங்கும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. நாற்பது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தமான் சிறை வாசம் உள்பட பல்வேறு தண்டனைகள் வீரர்களுக்கு விதிக்கப்பட்டது. ராம் பிரசாத் பிஸ்மி, தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லாகான் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் அஷ்பாகுல்லாகான் தூக்கிலிடப்பட்டு மரணம் அடைந்தார். இருபத்தியேழு ஆண்டுகளே வாழ்ந்த அந்த வீரன் நாட்டின் விடுதலைக்காக தன்னையே தியாகம் செய்தார்.

பல்லாயிரம் வீரர்களின் பெரும் தியாகத்தால் கிடைத்தது நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். அந்த வீரர்களை ஒரு நாளும் மறக்காமல் இருப்பது நமது கடமை. 

செவ்வாய், 21 அக்டோபர், 2025

அக்டோபர் 21 - சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள்

ஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.

முதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 

அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார். 

திங்கள், 20 அக்டோபர், 2025

அக்டோபர் 20 - எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள்

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 



இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார்.