வெள்ளி, 3 அக்டோபர், 2025

அக்டோபர் 3 - பாரதத்தின் முதல் பெண் மருத்துவர் - கதம்பினி கங்குலி நினைவுதினம்

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில சாம்ராஜ்யத்தில் பட்டப்படிப்பை முறைப்படி முடித்த பெண் இங்கிலாந்து நாட்டில் அல்ல பாரத நாட்டைச் சார்ந்தவர் என்பது பலருக்கு புது தகவலாக இருக்கும். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் பெண்களை படிக்க அனுமதிக்காதாத காலத்தில், கல்கட்டா பல்கலைக்கழகம் பெண்களை அனுமதித்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.



1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிஹாரில் உள்ள பகல்பூர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த பிரஜாகுமார் போஸ் என்பவரின் மகளாகப் பிறந்தவர் கதம்பினி. ப்ரம்மசமாஜத்தில் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருந்த தந்தை அன்றய நடைமுறைக்கு எதிராக தனது மகளை ஆங்கிலக் கல்வி பயில வைப்பதில் ஆர்வத்தோடு இருந்தார். மகள் கதம்பினியும் படிப்பில் சிறப்பானவராகவே இருந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை கதம்பினி முதலில் டாக்கா நகரிலும், பின்னர் கொல்கத்தா நகரிலும் முடித்தார். பள்ளியில் இவரது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் அமைந்தவர் துவாரகாநாத் கங்குலி. பள்ளிப்படிப்பை முடித்த கதம்பினி கல்லூரிப் படிப்புக்காக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அன்று ஆங்கில சாம்ராஜ்யத்தின் எந்த கல்லூரிகளிலும் பெண்களை அனுமதிக்கும் பழக்கம் இல்லை. துவாரகாநாத் கங்குலியின் தொடர்ந்த முன்னெடுப்பால் கொல்கத்தா பல்கலைக்கழகம் கதம்பினியை நுழைவுத் தேர்வு அனுமதித்தது. அவரோடு சரளா என்ற மாணவியும் தேர்வு எழுத இருந்தார். ஆனால் திருமணம் ஆனதால் அவர் தேர்வு எழுதவில்லை. கதம்பினி நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரும் சந்திரமுகி பாசு என்ற பெண்மணியும் 1882 ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின்  தேர்வில் வெற்றிபெற்று இந்தியாவில் ஏன் ஆங்கில சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் ஆனார்கள். அவர்களின் பட்டமளிப்பு விழா 1883ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மருத்துவம் படிக்க கதம்பினி முடிவு செய்தார். ஆனால் அப்போது கல்கத்தா மருத்துவக் கல்லூரி பெண்களை அனுமதிக்கவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி 1875ஆம் ஆண்டிலேயே பெண்களை மருத்துவம் படிக்க அனுமதிக்கத் தொடங்கிவிட்டது. மீண்டும் போராட்டம், அதன் பிறகு 1884ஆம் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கதம்பினி சேர்த்துக் கொள்ளப்பட்டார். பெண்களின் வெற்றி எல்லா காலங்களிலும் ஆண்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருக்கும். அப்படியான மனநிலையில் இருந்த ஒரு பேராசிரியர்  கதம்பினியை உடல்கூறு மருத்துவத்தில் தோல்வி அடைந்தார் என்று அறிவித்தார். எனவே மருத்துவப் பட்டம் அல்லாது மருத்துவத்தில் பட்டயம்தான் அவருக்கு வழங்கப்பட்டது.

1888ஆம் ஆண்டு கதம்பினி டூபரின் சீமாட்டி மகளீர் மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் மருத்துவத்தை தொழில்முறையில் செய்யத் தொடங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையும் கதம்பினி அவர்களையே சாரும், ஆனாலும் அன்றய வங்காளத்தில் இருந்த ஆங்கிலப் பெண்கள், இவருக்கான மரியாதையை அளிக்கவில்லை என்று எண்ணிய கதம்பினி மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார். 1893ஆம் ஆண்டு லண்டன் சென்ற கதம்பினி அங்கே மூன்று சிறப்பு தகுதிகளுக்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.

முன்னர் கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் இப்போது கிடைக்கத் தொடங்கியது. கொல்கத்தாவின் முக்கியமான மருத்துவராக கதம்பினி அறியப்படலானார். பலகாலமாக உடல்நலம் குன்றி இருந்த நேபாள அரச வம்சத்தின் ராஜமாதாவை நலமடைய வைத்ததன் மூலம், பல்வேறு அரச குடும்பங்கள் அவரின் சிகிச்சைக்காக அணுகத் தொடங்கினார்கள். 1923ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை அவர் தனது மருத்துவ சேவையை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருந்தார்.

மருத்துவதோடு சேர்ந்து பல்வேறு சமுதாயப் பணிகளிலும் கதம்பினி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1889ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தின் நன்றியுரை இவர் அளித்ததுதான். காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

ஆனந்திபாய் ஜோஷி என்ற பெண்மணி 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று இருந்தாலும், அவர் தனது பணியைத் தொடங்கும் முன்னே 1887ஆம் ஆண்டு காசநோயால் இறந்து போனார். எனவே பாரத நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட முதல் பெண் என்ற பெருமை கதம்பினி அவர்களையே சாரும்.

தனது ஆசிரியரான துவாரகாநாத்தை கதம்பினி திருமணம் செய்து கொண்டார். துவாரகாநாத் ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர், கதம்பினியை விட பத்தொன்பது வயது மூத்தவர். எனவே அன்றய ப்ரம்மசமாஜ உறுப்பினர்கள் இந்த மணத்தை ஏற்கவில்லை. ஆனால் அதனைப் பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்துகொண்ட கதம்பினி - துவாரகாநாத் தம்பதியினர் மகிழ்வோடுதான் இருந்தார்கள். கதம்பினியின் வெற்றிக்கு அவர் கணவர் காரணமாகவும் இருந்தார்.

பாரத பெண்களுக்கு உதாரணமாகத் திகழும் மருத்துவர் கதம்பினி கங்குலி 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் நாள் காலமானார். 

வியாழன், 2 அக்டோபர், 2025

அக்டோபர் 2 - ஸ்வாமி அபேதானந்தர் பிறந்ததினம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடராக, ஸ்வாமி விவேகானந்தரின் சக தோழராக, மேற்கு நாடுகளில் வேதாந்த அறிவைப் பரப்பிய ஞானியாகத் திகழ்ந்த  ஸ்வாமி அபேதானந்தரின் பிறந்ததினம் இன்று.



கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் ரஸிகலால் சந்திரா - நயன்தாரா தேவி தம்பதியினருக்கு 1866ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் ஸ்வாமிஜி. அவரின் இயற்பெயர் காளிபிரசாத் சந்திரா என்பதாகும்.

தனது 18ஆம் வயதில் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போது, தக்ஷிணேஸ்வரில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்கச் சென்றார். காளிபிரசாத் அவரிடம் யோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். காளிபிரசாத்தின் நாக்கில் தனது வலதுகை நடுவிரலால் காளி மாதாவின் பெயரை எழுதி அவரை தியானத்தில் ஈடுபட ராமகிருஷ்ணர் தூண்டினார். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் மங்கை தலைவன் தாளே என்று அப்பர் ஸ்வாமிகள் கூறியது போல, காளிபிரசாத் அன்றே ராமகிருஷ்ணரின் சீடராக மாறினார்.

தனியறையில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு நீண்டநேரம் சமாதியில் அமர்வது காளிபிரசாத்தின் வழக்கமாக இருந்தது. அதனால் அவரது தோழர்கள் அவரை காளி தபசி என்று அழைக்க ஆரம்பித்தனர். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் துறவறம் மேற்கொண்டு, வேதாந்த ஞானத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்ப உறுதி பூண்டனர். காளிபிரசாத் துறவறம் பூண்டார், அவருக்கு ஸ்வாமி அபேதானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. இரண்டல்ல ஒன்றேதான் உண்மை என்ற அத்வைத மரபை முன்னெடுத்தவருக்கு பேதம் என்பதே இல்லை என்ற பொருளில் பெயர் அமைந்தது சரிதானே.

நாடெங்கும் கையில் ஒரு பைசாவும் இல்லாமல் அலைந்து திரியும் பரிவ்ராஜ சன்யாசிகளின் வரிசை என்பது பாரத நாடு போன்றே என்று தோன்றினை என்று கூறவும் இயலாத பழமை வாய்ந்த ஓன்று. ஸ்வாமி அபேதானந்தாவும் நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு மேலாக பாரதம் முழுவதும் சுற்றி வந்தார். இமயமலை சாரல்களிலும், கங்கோத்ரியிலும், யமுனோத்ரியிலும் அவர் தவம் செய்தார். புகழ்பெற்ற பேச்சாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தலைசிறந்த அறிஞராகவும், அத்வைத வேதாந்தத்தில் கரைக்கண்ட ஞானியாகவும் ஸ்வாமிஜி விளங்கினார்.

1896ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து சென்ற அபேதானந்தர் அங்கே அத்வைத ஞானத்தைப் பரப்பினார். அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று நியூயார்க் நகரில் வேதாந்த நிலையத்தை நிறுவி அமெரிக்கா முழுவதும் பாரத ஞானமுறையை அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்கா மட்டுமல்லாது கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் வேதாந்தத்தை பரப்பினார்.

1922ஆம் ஆண்டு நாடு திரும்பிய ஸ்வாமிஜி திபெத் சென்று அங்கே புத்த தத்துவங்களையும் படித்தறிந்தார். 1923ஆம் ஆண்டு கொல்கத்தா நகரிலும் பின்னர் 1924ஆம் ஆண்டு டார்ஜிலிங் நகரிலும் ராமகிருஷ்ண வேதாந்த மடத்தை நிறுவினார். அதன் சார்பில் இன்றும் வெளியாகும் விஷ்வவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1938 வரை இருந்தார்.

ராமகிருஷ்ணரின் நற்செய்தி, ராமகிருஷ்ணரின் உபதேச மஞ்சரி, கல்வி பற்றிய சிந்தனைகள், இறப்பு என்னும் புதிர் - கடோபநிஷத், ஹிந்து தர்மத்தில் பெண்களின் பங்கு, கர்மா கோட்பாடு - செயல்பாட்டின் அறிவியலும், தத்துவமும் என்று பல்வேறு புத்தகங்களை ஸ்வாமிஜி எழுதியுள்ளார்.

1939ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஸ்வாமிஜி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

எத்தனையோ மஹான்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் குரு வணக்கம். 

புதன், 1 அக்டோபர், 2025

அக்டோபர் 1 - முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்ததினம்

மேற்கத்திய சிந்தனாவாதிகளால் பாரத நாட்டை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது எப்போதுமே சவாலான ஒன்றுதான். அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள சட்டத்திற்குள் ஒருநாளும் இந்த தேசம் அடங்குவதில்லை. சமுதாய சீர்கேட்டால் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, அதுவும் பொருளாதார ரீதியில் வறுமையின் பிடியில் இருந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த இந்த நாடு தயாராகவே இருக்கிறது. எல்லா அரச ஆணைகளும் அவர் பெயராலே வெளியாகின்றன. அவரே உலகத்தின் மிகப்பெரும் ஜனநாய நாட்டின் தலைவர், உலகத்தின் நான்காவது பெரிய ராணுவத்தின் தலைமைத்தளபதி.

இந்த மாறுதல் பலகோடி மக்களை பலி கொடுத்து, குருதியை ஆறாக ஓடவிட்டு நடக்கவில்லை. சற்றேறக்குறைய நூறாண்டுகள் எந்த பலனையும் எதிர்பாராது நாடுமுழுவதும் உழைத்த ஒரு அமைப்பாலே நடந்தது. அதுவும் மிக இயல்பாக இந்த சாதனையை அந்த இயக்கம் நடத்திக் காட்டியது. அந்த இயக்கம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம். தொடர்ந்த உழைப்பால், தனது தகுதியால் பாரதநாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக மலர்ந்த அந்த மனிதர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள்.   




உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் மிக எளிய குடும்பத்தில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளில் பிறந்தவர் திரு ராம்நாத் கோவிந்த். பட்டியல் சமுதாயத்திலும் ஓடுப்பட்ட பிரிவான கோரி பிரிவில் பிறந்தவர் திரு கோவிந்த். திரு கோவிந்த் அவர்களின் தாயார் கோவிந்தின் ஐந்தாம் வயதிலேயே ஒரு தீ விபத்தில் மரணமடைந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியையும், அதன் பிறகு கான்பூர் நகரில் உயர்நிலைப் படிப்பையும் முடித்தார். கான்பூர் நகரில் உள்ள டி ஏ வி கல்லூரியில் வணிகவியல் மற்றும் சட்டப் படிப்பையும் முடித்தார்.

அதன் பிறகு டெல்லிக்கு சென்று இந்திய குடிமைப்பணியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். தேர்வில் வெற்றிபெற்றாலும் முக்கியமான துறைகளில் தேர்வாகாததால், 1971ஆம் ஆண்டில் இருந்து வழங்கறிஞராக  பணியாற்றத் தொடங்கினார். டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்கறிஞராக அவர் விளங்கினார். சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்கள் பலரின் வழக்குகளை இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலமாக அவர் பணம் எதுவும் பெறாமல் வாதாடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்தார். 1980 முதல் 1993 வரை மத்திய அரசின் வழக்கறிஞராக திரு கோவிந்த் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார். 

1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி சார்பில் பிரதமராக திரு மொரார்ஜி தேசாய் பதவியேற்ற போது, அவரின் தனி உதவியாளராக திரு கோவிந்த் பணியாற்றினார்.பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திரு கோவிந்த், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக, தலித் மோர்ச்சா அணியின் தேசிய தலைவராக என்று பல்வேறு பொறுப்புகளை அவர் திறமையுடன் கையாண்டார்.

அவரது செயல்பாட்டை அங்கீகாரம் செய்யும் விதமாக 1994ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை, பனிரெண்டு ஆண்டுகாலம் கட்சி அவரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து மேலவைக்கு அனுப்பியது. 

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றய குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜீ ராம்நாத் கோவிந்த் அவர்களை பீகாரின் ஆளுநராக நியமித்தார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் 65.65% வாக்குகளைப் பெற்று பாரத நாட்டின் பதினான்காவது குடியரசு தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில்தான் திரு கோவிந்த் அவர்கள் குடியரசுத்தலைவராகப் பணியாற்றினார். கோவிட் பெருந்தொற்று உலகை உலுக்கிய இந்த காலத்தில் மத்திய அரசுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் திரு கோவிந்த் இருந்தார். 

உலகின் மிக உயரமான படைக்களமான சியாச்சின் பகுதிக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் பாரத நாட்டின் முப்படைகளின் தலைமைத்தளபதி என்ற முறையில் திரு கோவிந்த் விஜயம் செய்து அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தினார். 

பதவிக்காலம் முடிந்தபிறகு மத்திய அரசு அமைத்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமுல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக திரு கோவிந்த் பணியாற்றினார். 

நாட்டின் முதல்குடிமகனுக்கு, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.   

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

செப்டம்பர் 30 - குருஜியின் குரு ஸ்வாமி அகண்டானந்தா பிறந்ததினம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும், ஸ்வாமி விவேகானந்தரின் தோழரும், ராமகிருஷ்ணா மடத்தின் மூன்றாவது தலைவரும், பரம பூஜனிய குருஜி கோல்வால்கரின் ஆன்மீக குருவுமான ஸ்வாமி அகண்டானந்தாவின் பிறந்ததினம் இன்று.



ஸ்ரீமதா கங்கோபாத்யாய - வாமசுந்தரிதேவி தம்பதியினரின் மகனாக 1864ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர் சுவாமி அகண்டானந்தா. இவரது இயற்பெயர் கங்காதர் கதக். சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டமும், இரக்ககுணமும் கொண்டவராக அவர் விளங்கினார். தனது பத்தொன்பதாம் வயதில் கங்காதர்,  தனது நண்பர் ஹரிநாத்துடன் ( பின்னாளில் ஸ்வாமி துரியானந்தா என்ற பெயரில் அறியப்பவர் இவர் ) ராமகிருஷ்ண பரமஹம்சரைமுதன்முதலாக சந்தித்தார். ஆத்ம சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் கங்காதர் மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பிய ராமகிருஷ்ணர் அவரை நரேந்தரநாத் தத்தாவோடு ( ஸ்வாமி விவேகானந்தர் ) அறிமுகம் செய்துவைத்தார். கங்காதருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரோடும் விவேகானந்தரோடும் வாழ்நாள் முழுவதுமான உறவு இப்படித்தான் ஆரம்பமானது.

இல்லற வாழ்வில் கங்காதரரை ஈடுபடுத்த எண்ணிய அவர் தந்தை அவருக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் அந்த வேலையில் இருந்த கங்காதர், அதனை துறந்து முழுநேரமும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சேவைக்கே தன்னை அர்பணித்துக் கொண்டார். ராமக்ரிஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், கங்காதர் இமயமலை சாரலிலும் திபேத் நாட்டிலும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து, வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது பயண அனுபவங்களை அவர் ஸ்ம்ரிதி கதா என்ற புத்தகமாகவும் எழுதினார். கையில் பணமோ மாற்றுத்துணியோ இல்லாமல் அவர் சுற்றிவந்தார்.

1890 ஆம் ஆண்டு அவர் துறவறத்தை மேற்கொண்டார். அவருக்கு அகண்டானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. மீண்டும் ஸ்வாமி விவேகானந்தரோடு இமயமலைப் பயணங்களை அவர் தொடங்கினார். ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் பதினேழு பேர் முதலில் சன்யாசம் பெற்று, நாடெங்கும் அலைந்து திரிந்து சமுதாய சேவையையும் அதே நேரத்தில் வேதாந்த ஞானத்தை மக்களுக்கு புகட்டும் வேலையையும் செய்யத் தொடங்கினார்கள்.

ஸ்வாமி அகண்டானந்தா அவதூத கீதை, பாணினியின் வடமொழி இலக்கண நூலுக்கு பதஞ்சலி எழுதிய விளக்கவுரை, மஹாபாரதம், பஞ்சதஸி, மருத்துவம் பற்றிய சரகர் - சுஸ்ருதர் எழுதிய நூல்கள், சுக்ல யஜுர் வேதம், யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களில் சமுதாய சேவையை முன்னெடுத்தவர் என்ற பெருமை ஸ்வாமி அகண்டானந்தாவையே சாரும். 1894ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கத்ரி சமஸ்தானத்தில் இருந்தபோது வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, அவர்கள் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்குமாறு கூறினார். அவரது உழைப்பின் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகை பலமடங்கு உயர்ந்தது. அவரது வழிகாட்டுதலின் பேரில் கத்ரி சமஸ்தானத்தின் மன்னர் அஜித்சிங் பல்வேறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

1897ஆம் ஆண்டு வங்காளத்தில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்கொள்ள ஸ்வாமிஜி தயாரானார். கடுமையான முயற்சிக்குப் பிறகு அவர் உணவுப் பொருள்களை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து, வறுமையின் பிடியில் இருந்த ஏழைகளுக்கு வழங்கினார். பெர்ஹாம்பூர் நகரில் ஒரு ஆதரவற்ற குழைந்தைகள் விடுதி, சர்கஞ்சி பகுதியில் ஒரு ஆஸ்ரமம், பின்னர் அதோடு இணைந்த பள்ளி ஆகியவைகளை அவர் ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அந்தப் பள்ளியில் தச்சு வேலையும், துணி நெய்யும் படிப்பும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர், சுவாமி அகண்டானந்தாவின் சீடர். நீண்ட காலம் குருஜி ஸ்வாமிகளோடு தங்கி, வேதாந்தத்தைப் பயின்றார். ஸ்வாமிஜி குருஜி கோல்வாக்கர் அவர்களுக்கு தீக்ஷை அளித்தார்.

துறவிக்கான இலக்கணத்தோடு வாழ்ந்த ஸ்வாமிஜி 1937ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். ஸ்வாமிஜி காட்டிய வழியில் இன்றும் ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு துறவிகள் உலகெங்கிலும் சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

திங்கள், 29 செப்டம்பர், 2025

செப்டம்பர் 29 - நீதியரசர் கபாடியா பிறந்ததினம்

இரண்டு லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள ஒரு மிகச்சிறு சிறுபான்மையினத்தில் இருந்து, அதுவும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக உயர்ந்த திரு சரோஷ் ஹோமி கபாடியாவின் பிறந்தநாள் இன்று.



1947ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் எளியநிலையில் இருந்த ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தவர் திரு கபாடியா. ஆசியாவின் முதல் சட்டக் கல்லூரியான மும்பை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர் திரு கபாடியா. அந்த காலகட்டத்தில் மும்பையில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். பெரோஸ் தாமானியா என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மும்பை காட்கோபர் பகுதியில் 3,000 குடும்பங்களை வெளியேற்ற மும்பை மாநகராட்சி ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்வழக்காடி அந்த ஆணையை ரத்து செய்ய வைத்ததன் மூலம் கபாடியா மும்பையின் முக்கியமான வழக்கறிஞராக உருவானார்.

1991ஆம் ஆண்டு நாற்பத்தி நான்காம் வயதில் திரு கபாடியாவை அரசு மும்பை நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தது. 2003ஆம் ஆண்டு உத்திரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு பாரதத்தின் உச்சநீதிமன்றத்தின் முப்பத்தி எட்டாவது தலைமைநீதிபதியாக கபாடியா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகத் தொடங்கி உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக வளர திறமையும் உழைப்பும் நேர்மையும்தான் தேவை என்று திரு கபாடியாவின் வாழ்க்கை நமக்கு புலப்படுத்துகிறது. தனது நீண்ட நெடிய நீதிபதி வாழ்க்கையில் பல முக்கியமான தீர்ப்புகளை திரு கபாடியா வழங்கினார்.

நாட்டின் 14ஆவது மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையரைத்                       தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அன்றய பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கேரளாவைச் சார்ந்த திரு தாமஸ் அவர்களை சிபாரிசு செய்ய, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, அதன் முடிவு வராமல் அவரை இந்தப் பதவியில் நியமிக்கக் கூடாது என்று  சுஷ்மா ஸ்வராஜ் மறுத்தார். ஆனால் அரசு தாமஸை அந்தப் பதவியில் நியமித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த நியமனம் செல்லாது என்று நீதிபதி கபாடியா தீர்ப்பு வழங்கினார். நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் இந்த தீர்ப்பு உருவாக்கியது.

நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, நீதி வழங்கப்பட்டது என்பது மக்களால் உணரப்படவும் வேண்டும். எந்த ஒரு நாகரிக சமுதாயத்திற்கும் இது ஒரு முக்கியமான கொள்கையாகும். அப்படி மக்கள் நம்பவேண்டுமானால், நீதிபதிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். நீதிபதிகள் பொதுமக்களோடு, அரசு அதிகாரிகளோடு, அரசியல்வாதிகளோடு ஏன் மற்ற நீதிபதிகளோடுகூட கலந்து பழகுவது என்பது மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட இந்த விதிமுறையை நீதிபதி கபாடியா தனது வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய காலகட்டத்தில் நீதிபதி கபாடியா சந்தேகத்தின் நிழல்கூட தன்மீது படாதவாறு வாழந்தார்.

பதவியில் இருந்த காலத்தில், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையோ நீதிபதி கபாடியா தவிர்த்தே வந்தார். தனது இருபத்தி இரண்டு ஆண்டு கால நீதிபதி வாழ்வில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கள் விசாரிக்கப்படும் முறையை அவர் சீர்படுத்தினார்.

வரைமுறை இல்லாமல் இயற்கையை சிதைத்து சுரங்க பணிகள் நடைபெறுவதை அவர் தடுத்து நிறுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பொதுமக்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமை என்பது சுகாதாரமான சுற்றுப்புறத்தில் வாழ்வதை உள்ளடக்கியதாகும் என்று அவர் தீர்ப்பு வழங்கினார்.

பார்சி சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி கபாடியா பொருளாதாரம், ஹிந்து தத்துவவியல், புத்த தத்துவம், கோட்பாடு இயற்பியல் ஆகிய துறைகளிலும் அறிஞராக விளங்கினார்.

நீதிபதி கபாடியா தனது அறுபத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் காலமானார்.  

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

செப்டம்பர் 28 - இசைக்குயில் லதா மங்கேஷ்கர் பிறந்தநாள்

பாரத திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக எழுபதாண்டுகளாக கோலோச்சிவரும் லதா மங்கேஷ்கர் அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் இன்று.

 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் இந்தோரில் வசித்துவந்த பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் - செவ்வந்தி தம்பதியினரின் முதல் மகளாகப் பிறந்தவர் ஹேமா மங்கேஷ்கர். பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் ஒரு இசைக்கலைஞரும் நாடக நடிகருமாவார். அவரின் நாடகத்தின் கதாநாயகியின் பெயரான லதா பெயரைக் கொண்டே பெற்றோர்கள் அழைக்க, பின்னாளில் ஹேமா லதா என்றே அழைக்கப்படலானார்.

தனது ஐந்தாம் வயதில் இருந்தே தந்தையிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், பின்னர் அமான் அலிகான் சாஹிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரிடமும் பயின்றார். 1942ஆம் ஆண்டு அவரின் தந்தை மரணமடைய, குடும்ப நண்பரான விநாயக் தாமோதர் கர்நாடக்கி என்பவர் மங்கேஷ்கர் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அவர்தான் லதா மங்கேஷ்கரை திரைத்துறையில் அறிமுகம் செய்துவைத்தார். 1942ஆம் ஆண்டு மராத்திய திரைப்படம் ஒன்றில் லதா தனது முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல் திரையில் இடம்பெறவில்லை.

1942ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் ஒன்றில் சிறு வேடத்தில் நடித்தார், அதே படத்தில் அவர் பாடிய பாடல்தான் திரையில் வெளியான அவரின் முதல் பாடல். அன்று தொடங்கிய இசைப்பயணம் எழுபதாண்டுகளாக வெற்றிப்பயணமாக அமைந்தது. அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நௌஷத், எஸ் டி பர்மன், சலீம் சவுத்ரி, கல்யாணிஜி ஆனந்த்ஜி, அனு மாலிக், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் என்று இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களின் இசையில் பல்லாயிரம் பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு,   ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.

1961 ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல் ‘மீராபாய்” பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும் ‘உத் ஜா ரெ காக’, 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.

லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றிய “அபாங்க்ஸ்” என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.

ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டு “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்து ‘ஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும் ‘லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார். மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “சதி மனசே” என்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலா” என்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல் “ராம் ராம் பவ்ஹான” என்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல் ‘மராத்தா டிட்டுகா மேல்வாவ’ மற்றும் ‘மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.

முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை. பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.