செவ்வாய், 1 அக்டோபர், 2019

நாட்டின் தலைமகனின் பிறந்தநாள் - அக்டோபர் 1

மேற்கத்திய சிந்தனாவாதிகளால் பாரத நாட்டை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது எப்போதுமே சவாலான ஒன்றுதான். அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள சட்டத்திற்குள் ஒருநாளும் இந்த தேசம் அடங்குவதில்லை. சமுதாய சீர்கேட்டால் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, அதுவும் பொருளாதார ரீதியில் வறுமையின் பிடியில் இருந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த இந்த நாடு தயாராகவே இருக்கிறது. எல்லா அரச ஆணைகளும் அவர் பெயராலே வெளியாகின்றன. அவரே உலகத்தின் மிகப்பெரும் ஜனநாய நாட்டின் தலைவர், உலகத்தின் நான்காவது பெரிய ராணுவத்தின் தலைமைத்தளபதி.இந்த மாறுதல் பலகோடி மக்களை பலி கொடுத்து, குருதியை ஆறாக ஓடவிட்டு நடக்கவில்லை. சற்றேறக்குறைய நூறாண்டுகள் எந்த பலனையும் எதிர்பாராது நாடுமுழுவதும் உழைத்த ஒரு அமைப்பாலே நடந்தது. அதுவும் மிக இயல்பாக இந்த சாதனையை அந்த இயக்கம் நடத்திக் காட்டியது. அந்த இயக்கம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம். தொடர்ந்த உழைப்பால், தனது தகுதியால் பாரதநாட்டின் தலைவராக மலர்ந்த அந்த மனிதர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள்.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் மிக எளிய குடும்பத்தில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளில் பிறந்தவர் திரு ராம்நாத் கோவிந்த். பட்டியல் சமுதாயத்திலும் ஓடுப்பட்ட பிரிவான கோரி பிரிவில் பிறந்தவர் திரு கோவிந்த். திரு கோவிந்த் அவர்களின் தாயார் கோவிந்தின் ஐந்தாம் வயதிலேயே ஒரு தீ விபத்தில் மரணமடைந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியையும், அதன் பிறகு கான்பூர் நகரில் உயர்நிலைப் படிப்பையும் முடித்தார். கான்பூர் நகரில் உள்ள டி ஏ வி கல்லூரியில் வணிகவியல் மற்றும் சட்டப் படிப்பையும் முடித்தார்.

அதன் பிறகு டெல்லிக்கு சென்று இந்திய குடிமைப்பணியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். தேர்வில் வெற்றிபெற்றாலும் முக்கியமான துறைகளில் தேர்வாகாததால், 1971ஆம் ஆண்டில் இருந்து வழங்கறிஞராக  பணியாற்றத் தொடங்கினார். டெல்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்கறிஞராக அவர் விளங்கினார். சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்கள் பலரின் வழக்குகளை இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலமாக அவர் பணம் எதுவும் பெறாமல் வாதாடி, அவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்தார்.

1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி சார்பில் பிரதமராக திரு மொரார்ஜி தேசாய் பதவியேற்ற போது, அவரின் தனி உதவியாளராக திரு கோவிந்த் பணியாற்றினார்.பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திரு கோவிந்த், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக, தலித் மோர்ச்சா அணியின் தேசிய தலைவராக என்று பல்வேறு பொறுப்புகளை அவர் திறமையுடன் கையாண்டார்.

அவரது செயல்பாட்டை அங்கீகாரம் செய்யும் விதமாக 1994ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை, பனிரெண்டு ஆண்டுகாலம் கட்சி அவரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து மேலவைக்கு அனுப்பியது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பீகாரின் ஆளுநராக நியமித்தார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் 65.65% வாக்குகளைப் பெற்று பாரத நாட்டின் பதினான்காவது குடியரசு தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் முதல்குடிமகனுக்கு, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக