வெள்ளி, 20 ஜூன், 2025

ஜூன் 20 - தொழிலதிபர் லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் பிறந்தநாள்

புதுமையான பல தொழில்களை பாரத நாட்டில் உருவாக்கியவரும், கிர்லோஸ்கர் குழுமத்தின் நிறுவனருமான லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அன்றய மும்பாய் ராஜதானியின் அங்கமாக இருந்த பெல்காம் மாவட்டத்தில் வசித்துவந்த வேத பண்டிதரான காசிநாத் பண்ட் என்ற மஹாராஷ்டிர பிராமணரின் மகனாக 1869ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் திரு லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர். தன்னைப் போலவே தன் மகனும் வேத விற்பன்னராக இருப்பான் என்று தந்தை நினைக்க, லக்ஷ்மண்ராவின் விருப்பமோ ஓவியங்கள் வரைவதிலும், இயந்திரப் பொருள்களை உருவாக்குவதிலும்தான் இருந்தது.

தனது மூத்த சகோதரர் ராமண்ணா பொருளுதவி செய்ய லக்ஷ்மணராவ் மும்பையில் உள்ள ஜே ஜே நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் படிக்கச் சென்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது பார்வையில் ஏற்பட்ட குறைபாட்டால் அவர் அந்தத் துறையை விட்டு விட்டு இயந்திரங்களை உருவாக்கத் தேவையான ஓவியங்களை வரைவது பற்றிய படிப்பிற்கு மாற்றிக்கொள்ள நேரிட்டது. படிப்பை முடித்த பிறகு அவர் விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பல்வேறு இயந்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் வெளிநாட்டுப் புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், கல்வி நிலையத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் அந்த மாதிரிகளை உருவாகிப் பார்ப்பதன் மூலமும் லக்ஷ்மணராவ் தன்னை செதுக்கிக் கொண்டார்.

இதற்கிடையில் 1890களில் ராமண்ணா - லக்ஷ்மணராவ் சகோதர்கள் பெல்காம் நகரில் ஒரு மிதிவண்டி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்கள். மும்பையில் இருந்து லக்ஷ்மணராவ் மிதிவண்டிகளை வாங்கி அனுப்ப, ராமண்ணா அதனை விற்பனை செய்துகொண்டு இருந்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் விதை இந்த விற்பனை நிலையத்தில்தான் ஊன்றப்பட்டது. தகுதி இருந்தும் லக்ஷ்மன்ராவுக்கு கல்வி நிலையத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அது ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு அளிக்கப்பட்டது. மனம் நொந்த லக்ஷ்மணராவ் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்காம் திரும்பினார். சகோதர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து காற்றாடி ஆலைகளை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார். ஆனால் அதற்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக இல்லை.

பாரதம் போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துறைக்கான இயந்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கும் என்பதைக் கணித்த லக்ஷ்மணராவ் இரும்புக் கலப்பைகளை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் விவசாயிகள் அதனை பயன்படுத்தத் தயங்கினர். தொடர்ச்சியாக  விவசாயிகளோடு  பேசி, இரும்புக் கலப்பையின் சாதகங்களை எடுத்துக் கூறி லக்ஷ்மணராவ் அதனை விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒன்றை லக்ஷ்மன்ராவ் வடிவமைத்தார்.

லக்ஷ்மணராவின் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ குறுநில மன்னர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதல் தொழில்சாலை அங்கே நிறுவப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பல  பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும் லக்ஷ்மணராவ், அதுபோலவே தொழிலாளர்களுக்கான எல்லா வசதியும் உள்ள குடியிருப்புகளோடு தனது தொழில்சாலையை உருவாக்கினார். அன்றய காலகட்டத்தில் தனது தொழில்சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீண்டாமையை பின்பற்றக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அதுபோலவே தனது நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கர் உறுதியாக இருந்தார்.

மிகச் சாதாரணமாக மிதிவண்டி விற்பனை செய்வதில் தொடங்கிய பயணம் இன்று பல்வேறு இயந்திரங்களை உருவாகும் மிகப் பெரும் தொழில் குழுமமாக கிர்லோஸ்கர் குழுமம் வளர்ந்துள்ளது.

தொழில்துறையில் திரு லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கரின் சாதனைகளை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கூறுகிறது.  

வியாழன், 19 ஜூன், 2025

ஜூன் 19 - சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோபிந்த் பிறந்த நாள்


சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனக்குழுவாக வடிவமைத்த குரு ஹர்கோபிந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் அவர்களின் மகனாக 1595ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குரு அர்ஜன் தேவ் அவர்களின் பலிதானத்திற்குப் பிறகு சீக்கியர்களின் குருவாக ஹர்கோபிந்த் தனது பதினோராம் வயதில் பதவி ஏற்றார்.

கொடுமையான சித்திரவத்தையினால் குரு அர்ஜன்தேவ் மரணமடைய, பெரும்பலம் வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்க சீக்கியர்கள் உறுதி பூண்டனர். அந்த எண்ணத்தை ஆற்றுப்படுத்தி, தொடர்ந்த பயிற்சிகள் மூலம் சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனமாகிய பொறுப்பு குரு ஹர்கோபிந்த் அவர்கள் மீது விழுந்தது. அதுவரை ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு ஜாதி வேறுபாடுகளை களையும் அமைப்பாக இருந்த சீக்கியம் இவர் காலத்திலேயே தனக்கான ஒரு தனி அடையாளத்தைக் கைகொள்ளத் தொடங்கியது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மெய்காவல் படையை உருவாக்கிக் கொள்ளவும், மொகலாய அடக்குமுறையில் இருந்த மக்களைக் காக்க ஆயுதம் எந்த எப்போதும் தயாராக இருக்கவும் குரு அர்ஜன் தேவ் இவருக்கு ஆணையிட்டார். அதன் படி எழுநூறு குதிரைகள் கொண்ட படையையும், அறுபது பேர் கொண்ட பீரங்கி படையையும் குரு ஹர்கோவிந்த் உருவாக்கினார். குரு எப்போதும் இரண்டு வாள்களை அணிந்து இருந்தார், அதில் ஓன்று இவ்வுலக அதிகாரத்தையும், மற்றொன்று அவரது ஆன்மீக அதிகாரத்தையும் குறித்தது. அம்ரித்ஸர் நகரைச் சுற்றி குரு கோட்டையை எழுப்பினார். பொற்கோவிலில் உள்ள ஹர்மந்தர் சாஹிப் இவரால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து குரு சீக்கிய மதத்தைப் பரப்பினார்.

வளர்ந்து வரும் சீக்கிய மதத்தையும், அவர்களின் ராணுவ பலத்தையும் கண்டு பொறாமல் முகலாய மன்னர் ஜஹாங்கிர் குருவை குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். ஆனால் அப்போது லாகூர் நகரில் ஆளுநராக இருந்த வாஜிர் கான் மற்றும் குருவின் நண்பர்கள் ஜஹாங்கீரின் மனதை மாற்றி குருவை விடுவிக்க வைத்தனர். ஆனால் குரு ஹர்கோவிந்த் தன்னோடு சிறையில் இருந்த 52 ஹிந்து மன்னர்களையும் விடுவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் விடுவிக்க வைத்தார். விடுதலையான குரு அம்ரித்ஸர் நகருக்கு வந்தது ஒரு தீபாவளி நாள் அன்று. அதனால் இன்றும் சீக்கியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஜஹாங்கீருக்கும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட நல்லுறவு சிலகாலமே நீடித்தது. புதிதாக பதவிக்கு வந்த ஷாஜஹான் மீண்டும் சீக்கியர்களோடு மோத ஆரம்பித்தார். தொடர்ச்சியான போராட்டங்கள் ஆரம்பமானது. முழுமையாக இஸ்லாமும் சீக்கியமும் எதிர் அணிகளில் இருப்பதற்கான விதை ஷாஜஹானால் ஊன்றப்பட்டது.

வெளிப்பார்வைக்கு மன்னன், ஆனால் உள்ளுக்குள் துறவி, எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஆயுதம் ஏந்திய வீரன், உலகத்தைத் துறக்காமல் மாயையைத் துறந்த குரு என்று தன்னை பிரகடம் செய்துகொண்ட குரு தனது 48ஆவது வயதில் காலமானார்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்  

புதன், 18 ஜூன், 2025

ஜூன் 18 - சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் -


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  

திங்கள், 16 ஜூன், 2025

ஜூன் 16 - இந்தியவியல் சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் பிறந்தநாள்

புகழ்பெற்ற இந்தியவியல் சிந்தனையாளரும், களப்பணியாளரும், எழுத்தாளருமாகிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அரவிந்தன் நீலகண்டன் தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நாகர்கோவில் நகரைச் சார்ந்தவர். இவரது தந்தை நாகர்கோயில் ஹிந்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். இவர் தாயார் அதே கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். பெற்றோர் இருவருமே கல்விப் புலத்தில் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு புத்தகங்களை படித்து அது பற்றி விவாதிக்கும் வாய்ப்பு அரவிந்தனுக்கு கிட்டியது. கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மலர்வது போல, பல்வேறு புத்தகங்களை ஐயம் திரிபுர கற்ற அரவிந்தன் இந்தியவியல் சிந்தனையாளராக மலர்ந்தார்.

வேளாண்மைத் துறை மாணவராகத் தொடங்கிய அரவிந்தன் நீலகண்டன் பொருளாதாரம் மற்றும் உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இவரது கட்டுரைகள் திண்ணை இணையத்தளத்தில் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் தினமணி, சொல்வனம், தமிழ் பேப்பர் ஆகிய பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை வெளியிட்டன. தமிழ் ஹிந்து இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பங்களித்தார். வலம் பத்திரிகை மற்றும் ஸ்வராஜ்யா போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பல்வேறு சக்திகள் பற்றி ராஜிவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து, பல்வேறு ஆரய்ச்சிகளுக்குப் பிறகு ‘உடையும் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
‘நம்பக்கூடாத கடவுள்’, ‘ஆழி பெரிது’, ‘ஹிந்துத்துவச் சிறுகதைகள்’, ‘இந்திய அறிதல் முறைகள்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளார். ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ என்ற புத்தகத்தில் கம்யூனிச சித்தாந்தத்தின் கோர முகத்தைப் பற்றியும், அதனால் உலகத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் விரிவாக ஆய்வுமுறையில் பதிவு செய்துள்ளார். இன்றுவரை இப்புத்தகம் எந்த ஒரு கம்யூனிஸ்ட்டாலும் மறுக்கப்படவில்லை என்பது முக்கியமான செய்தி.

நான்கு பக்க கட்டுரைக்கு எட்டுப் பக்கத்திற்கு ஆதாரங்களை அளித்து எழுதுவது என்பது இவர் பாணி. அதனாலேயே இவர் எழுதும் கட்டுரைகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ, எதிர் முகாமில் இருந்து வசைபாடல்கள் இருக்குமே அன்றி, தர்க்கபூர்வமான எதிர்ப்புகள் என்பது பொதுவாக இருப்பதில்லை.

நண்பரும், ஆசானும், சகோதரனும், ‘ஒரே இந்தியா’ தள நிர்வாகிகளின் ஆதர்ச நாயகனுமான அரவிந்தன் நீலகண்டனுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.


பாரத நாட்டுக்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் அரவிந்தர்கள் தேவை.

சனி, 14 ஜூன், 2025

ஜூன் 14 - தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா பிறந்தநாள்

பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறப்பது என்பது எப்படி ஒரு பெரும் வாய்ப்போ அதுபோலவே அது பெரும் சவால்கூட. குடும்பத்தின் பெருமையைக் காப்பதுவும், குடும்ப முன்னோர்களின் சாதனையைத் தாண்டிச் செல்வது என்பதும் மிகக் கடினமான ஓன்று. அந்த சவாலை சந்தித்து வெற்றிகரமாக விளங்கும் குமார்மங்கலம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


புகழ்பெற்ற பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு குமாரமங்கலம் பிர்லா. கொல்கத்தா நகரில் பிறந்த பிர்லா, மும்பையில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற பிர்லா அதனைத் தொடர்ந்து லண்டன் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்தார். 

பிர்லா குழுமத்தின் அன்றய தலைவரும், குமாரமங்கலம் பிர்லாவின் தந்தையுமான ஆதித்ய விக்ரம் பிர்லா புற்றுநோய் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது ஐம்பது ஒன்றாம் வயதில் மரணமடைய தனது இருபத்தி எட்டாம் வயதில் பிர்லா குழுமத்தின் தலைவராக குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்றுக் கொள்ள நேர்ந்தது. அவரது தலைமையில் பிர்லா குழுமம் இருபத்தி நான்கு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தில் இருந்து நாற்பத்தி எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடைந்தது. 

அலுமினியம், தாமிரம், சிமெண்ட், துணிவகைகள், சூரிய மின்சக்தி, விவசாயப் பொருள்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், நிதி சம்மந்தமான சேவைகள் என்று பல்வேறு துறைகளில் பிர்லா குழுமத்தை முக்கியமான ஒன்றாக குமார்மங்கலம் பிர்லா மாற்றி உள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் கனடா, சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள  நாற்பது நிறுவனங்களை கையகப்படுத்தி பல துறைகளில் முக்கியமான நிறுவனமாக பிர்லா குழுமத்தை உயர்த்தி உள்ளார். நாற்பத்தி இரண்டு நாடுகளைச் சார்ந்த 1,20,000 தொழிலாளர்கள் பிர்லா குழுமத்தில் வேலை செய்கிறார்கள். 

தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு பிர்லா குழுமம் நாட்டில் பல முக்கியமான கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது. புகழ்வாய்ந்த பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தராகவும் குமார்மங்கலம் பிர்லா பணியாற்றி வருகிறார். அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் உள்ளார். 

குமார்மங்கலம் பிர்லா முக்கியமான தொழிலதிபர் என்பதோடு தனது குழுமத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார். ஏறத்தாழ ஐயாயிரம் கிராமங்களில் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வி, சுகாதார வசதிகளை செய்து வருகிறார். நாற்பத்தி ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் ஐம்பத்தி ஆறு பள்ளிகளையும் இருபத்தி இரண்டு மருத்துவமனைகளையும் பிர்லா குழுமம் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சேவைக்காக நடத்தி வருகிறது, இது போன்ற சேவைப் பணிகளுக்காக வருடம் ஒன்றுக்கு இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது. 

குமார்மங்கலம் பிர்லாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலை, கோவிந்தவல்லப பந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை அளித்துள்ளன. 

பாரத நாட்டு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆகவும், அதில் வரும் பணத்தை சமுதாயப் பணிகளுக்காகச் செலவிடவும் குமார்மங்கலம் பிர்லா வழிகாட்டியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. 

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது. 

வெள்ளி, 13 ஜூன், 2025

ஜூன் 13 - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள்

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 11 ஜூன், 2025

ஜூன் 11 - புரட்சிவீரர் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலை என்பது பல்வேறு தியாகிகள் தங்களையே ஆகுதியாக்கி அதனால் கிடைத்த பலனாகும்.  அப்படியான தியாகிகளின் வரிசையில் முக்கியமான ராம் பிரசாத் பிஸ்மில் அவர்களின் பிறந்ததினம் இன்று. 

தனது ஒரு கையில் ஏந்திய துப்பாக்கியினால் உமிழும் தோட்டாக்கள் மூலமாகவும், மறுகையில் ஏந்திய பேனா முனையில் இருந்து வெளியாகும் கவிதைகள் மூலமாகவும்  ஒரே நேரத்தில் ஆங்கிலேயர்களின் நிம்மதியைக் குலைத்த வீரர் அவர்.

 இன்றய உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் முரளிதர் - மூல்மதி தம்பதியரின் மகனாக 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர். தன் தந்தையிடம் ஹிந்தி மொழியையும் அதனைத் தொடர்ந்து ஒரு இஸ்லாமிய மதகுருவிடம் உருது மொழியையும் ராம் பிரசாத் கற்றுத் தேர்ந்தார். அன்றய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தியோடு இருந்த ஆரியசமாஜத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து ஞானமரபுதான் அன்னியர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்  உத்வேகத்தை மக்களுக்கு எப்போதும் அளித்து வந்துள்ளது. ஆர்யசமாஜத்தில் இருந்த ஸ்வாமி சோமதேவ் என்பவர்தான் ராம் பிரசாத்தின் வழிகாட்டியாக அமைந்தார்.

ராம்பிரசாத் மாத்ரிவேதி ( தாய்நாட்டின் பலிபீடம் ) என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அப்போது ஸ்வாமி சோமதேவ் ராம்பிரசாத்தை கென்லாலால் தீக்ஷித் என்ற பள்ளி ஆசிரியரோடு தொடர்பு கொள்ள வலியுறுத்தினார். கென்லாலால் தீக்ஷித் சிவாஜி சமிதி என்ற இயக்கத்தை உருவாக்கி இளைஞர்கள் மனதில் தேசபக்திக் கனலை எரியவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  இருவரும் இணைந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.

தனது மைன்புரியின் உறுதிமொழி என்ற கவிதையோடு நாட்டுமக்களுக்கு ஒரு செய்தி என்ற துண்டறிக்கையைத் தயாரித்து ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் விநியோகித்தனர். ஆயுதம் வாங்க பணம் வேண்டும், அந்தப் பணத்தை ஆங்கில அரசிடமே கொள்ளையடிப்பது என்று வீரர்கள் தீர்மானித்து, மூன்று முறை ஆங்கில ஆட்சியாளர்களின் கருவூலத்தைக் கொள்ளை அடித்தனர். டெல்லிக்கு ஆக்ராவிற்கும் நடுவே கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது காவல்துறையோடு பெரும் சண்டை நடந்தது. ராம்பிரசாத் யமுனா நதியில் குதித்தார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்க, நதியின் உள்ளே நீந்தித் தப்பித்தது ராம்பிரசாத் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். கென்டாலால் தீக்ஷித் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப் பட்டார். அவரும் சிறையில் இருந்து துணிகரமாகத் தப்பித்து தலைமறைவானார். மைன்புரி சதிவழக்கில் எல்லாக் குற்றவாளிகளும் விடுதலையானார். ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் காணாமல் போய் விட்டார்கள் என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார்.

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராம்பிரசாத் பல்வேறு நூல்களை எழுதினார். வங்காள மொழியில் இருந்தும் ஆங்கில மொழியில் இருந்தும் புத்தகங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். ராம், பிஸ்மில், அக்யாத் என்று பல்வேறு புனைபெயர்களை அவர் பயன்படுத்தினார். மைன்புரி சதிவழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ராம்பிரசாத் ஷாஜஹான்பூர் திரும்பினார். எந்த அரசு விரோத செயல்களிலும் தான் ஈடுபடமாட்டேன் என்று அவர் காவல்துறையிடம் உறுதிமொழி அளித்தார். அதை அரசும் நம்பவில்லை, ராம்பிரசாத்தும் உறுதிமொழிக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

1921ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராம்பிரசாத் தன் நண்பர்களோடு கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் மௌலானா ஹஸ்ரத் மொஹைனி முன்மொழிந்த பூர்ண ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. பூரண ஸ்வராஜ்யம் தேவையில்லை டொமினியன் அந்தஸ்து போதும் என்ற  காந்தியின் கருத்து  இளைஞர்களின் ஆவேசத்தின் முன் பயனில்லாமல் போனது. மாநாடு முடிந்து ஷாஜஹான்பூர் திரும்பிய ராம்பிரசாத் இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அஹிம்சை முறையில் விடுதலை அடைய முடியாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் சவுரிசவுராவில் நடைபெற்ற வன்முறையால் நாடு இன்னும் அஹிம்சை முறைக்குத் தயாராகவில்லை என்று கூறி காந்தி இயக்கத்தை ஒத்தி வைத்தார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்தார்.  காந்தியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் அந்த ஆண்டுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பதவி விலகினார். சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை உருவாக்கினார்கள். தேர்தலைச் சந்தித்து நேரடி அரசியலில் ஈடுபட ஸ்வராஜ்ய கட்சி முடிவு செய்தது. காந்தியின் அகிம்சை வழி பயன்தராது, ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் சரி என்று முடிவுக்கு இளைஞர்கள் வந்தனர்.

லாலா ஹர்தயாள் வழிகாட்ட, சச்சிந்திரநாத் சன்யால், ஜடுகோபால் முகர்ஜீ ஆகியோரின் உதவியோடு ராம்பிரசாத் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்க அதன் சட்டதிட்டங்களை வடிவமைத்தார். ஹிந்துஸ்தான் ரிபப்லிக் அசோசியேஷன் உருவானது. இதில் கிளைத்து எழுந்தவர்கள்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், ஜதின்தாஸ் போன்ற போராளிகள்.

ஆயுதம் வாங்க பணம் வேண்டும், பணம் திரட்டும் வழியோ ஏற்கனவே தெரியும். ஆங்கில அரசு பெரும் பணத்தை லக்னோ நகருக்கு கொண்டு செல்லும் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக்  கிடைத்தது. ககோரி பகுதியில் ரயிலை நிறுத்தி கஜானாவை கொள்ளை அடிக்க முடிவானது. மன்மதநாத் குப்தா, அஷ்பாகுல்லா கான் ஆகியோரின் துணையோடு பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற ககோரி சதிவழக்கு ஆரம்பமானது. சசீந்திரநாத் சன்யால், சசீந்திரநாத் பக்ஷி ஆகியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மன்மதநாத் குப்தாவிற்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, என்று பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. ராம்பிரசாத் பிஸ்மில், தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மேல்முறையீடுகளிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ராம்பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையிலும், ரோஷன்சிங் பிரயாக்ராஜ் சிறையிலும் அஷ்பாகுல்லா கான் ஃபைஸாபாத் சிறையிலும் 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தூக்கிலிடப் பட்டார்கள். ராஜேந்திரநாத் லஹரி இரண்டுநாட்களுக்கு முன்பாக கோண்டா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

முப்பது ஆண்டுகளே வாழ்ந்த ராம்பிரசாத் பிஸ்மில் பாரத நாட்டில் வரலாற்றில் ஒளிவிடும் விண்மீனாக விளங்குகிறார். மகத்தான தியாகியின் நினைவுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துவோம்.