புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 6 - நீர் மேலாண்மை நாயகன் ராஜேந்திரசிங் பிறந்ததினம்

நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே   - புறம் 18. 

வாழும் உயிர்களுக்கு எல்லாம் மிக மிக அத்தியாவசியமானது தண்ணீர். ஆனாலும் பூமிப்பந்தில் இருக்கும் நீரில் 90% மேலான நீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. எனவே இருக்கும் நீரை, அதோடு மழைநீரை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அதனை காப்பாற்றினால்தால் மனிதர்கள் குடிக்கவும், பிற தேவைகளுக்கு பயன்படுத்தவும், விவசாயத்திற்கும், மாற்ற கால்நடைகள் பயன்படுத்தவும் உபயோகிக்க முடியும். அப்படியான ஒரு சேவையில் பல்லாண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாக்பட் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வசதியான குடும்பத்தில் முதல் மகனாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் பிறந்தவர் ராஜேந்திரசிங். அவர் தந்தை அறுபது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த செல்வந்தர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இவரது கிராமத்திற்கு ரமேஷ் ஷர்மா என்ற காந்தியவாதி வருகை புரிந்தார். அவரது தொடர்பு ராஜேந்திரசிங்கை சமுதாயப் பணியில் ஈடுபட வைத்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தொடங்கிய சத்தியாகிரக போராட்டமும், கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இவரை இன்னும் ஆற்றுப்படுத்தியது. ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், ஆயுர்வேத மருத்துவர் பட்டமும் என்று இரண்டு பட்டங்களை ராஜேந்திரசிங் முடித்தார்.

பட்டப்படிப்பை முடித்த டாக்டர் ராஜேந்திரசிங்  ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். அங்கே அவர் தருண் பாரத் சங்கா ( இந்திய இளைஞர் அமைப்பு ) என்ற தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்றே வருடத்தில் அந்த அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு திசைகளில் அமைப்பு செயலாற்றிக்கொண்டு இருக்கிறது, அதனால் ஒரு நீடித்த மாறுதலை உருவாக்க முடியவில்லை என்று அவர் கருதினார். அதனை மற்ற அமைப்பாளர்களோடு விவாதித்தார். அமைப்பின் முழுப் பொறுப்பையும் ராஜேந்திரசிங் வசம் ஒப்படைத்து விட்டு மற்ற அமைப்பாளர்கள் விலகிக் கொண்டனர். அரசாங்க வேலையில் சலிப்படைந்த ராஜேந்திரசிங்  தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் நண்பர்கள் நால்வருடன் ஒரு பேருந்தில் ஏறி அது செல்லும் கடைசி கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவர் சென்றடைந்த இடம் ஆல்வார் மாவட்டத்தின் கிஷோரி கிராமம்.



ராஜேந்திரசிங்கும் அவர் நண்பர்களும் அங்கே மக்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியிலும், மருத்துவத்திலும் ஈடுபட்டனர். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பிரதேசம், அங்கே பெய்யும் மழையின் அளவு மிகக் குறைவு. மக்கள் தண்ணீர்க்குக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம் அது. பெய்யும் மழையை குளங்களிலும், கசிவுநீர் குட்டைகளிலும் சேமிக்கும் பழக்கம் மறைந்து, ஆழ்துளை கிணறுகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி இருந்த காலம் அது. குளங்கள் தூர்வாரப்படாமல், அதனால் மழைநீர் சேமிக்கப்படாது, எனவே நிலத்தடிநீர் இன்னும் இன்னும் கீழே சென்று கொண்டு இருந்தது. "குடிநீர் என்பது இப்போது கல்வியை விட முக்கியம்" என்று ஒரு கிராமத்துவாசி சொன்னது ராஜேந்திரசிங்கை உலுக்கியது. அருகில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் கடினமான உடலுழைப்புக்கு தயாராக இல்லாத அவரது நண்பர்கள் ராஜேந்திரசிங்கை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

உள்ளூர் இளைஞர்களின் துணையோடு ராஜேந்திரசிங் ஒரு குளத்தை தூர்வாரி அதன் கரைகளை உயர்த்தினார். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமல்லவா, அதுபோல மழைக்காலம் வந்தது, குளமும் நிரம்பியது, மெல்ல மெல்ல அருகில் உள்ள நிலத்தடிநீரின் மட்டமும் உயரத் தொடங்கியது. அருகிலுள்ள கிராம மக்கள் இந்த விளைவைப் பார்த்து தங்கள் கிராமங்களிலும் மழைநீர்  சேமிப்பைத் தொடங்கினர். வறட்சியான மாவட்டங்கள் என்று அரசு குறிப்பிட்டிருந்த இடங்கள் வளமையான பகுதிகளாக மாறத் தொடங்கின.

அருகிலுள்ள கிராமங்களில் எல்லாம் சென்று மக்களிடம் பேசிப் பேசி ராஜேந்திரசிங் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீரோட்டம் இல்லாமல் இருந்த ஆர்வரி நதியை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமானது. மழைநீரை சேமிக்கவும், தொடர்ச்சியான தடுப்பணைகளை கட்டியும் என்ற முயற்சிகளின் மூலம் இன்று ஆர்வரி நதியில் வருடம் முழுவதும் நீரோட்டம் உள்ளது.

அரசாங்கத்தோடு இணைந்து சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ராஜேந்திரசிங் உருவாக்கினார். அந்த சரணாலயத்தில் வெளிப்பகுதியில்தான் இன்று தருண் பாரத் சங்காவின் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ராஜேந்திரசிங் உருவாக்கி வருகிறார்.

தன்னலமற்ற சேவைக்காக இவருக்கு மகாசாய் விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. திரு ராஜேந்திரசிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 3 - சோதனைகளை வென்று சாதனை அனு ஆகா பிறந்ததினம்



அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும். இது ஒரு குடும்பத்தலைவியின் கதை. ஒரு மத்தியதர பார்சி குடும்பத்தைச் சார்ந்தவர் அவர்.  அவரின் தந்தை சிறிய அளவில் ஒரு தொழில்சாலையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார். இவரோ மும்பை  நகரில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும் அதன் பின்னர் டாடா சமுதாய சேவைக்கான கல்லூரியில் ( Tata Institute of Social Science ) சமுதாய சேவை துறையில் மருத்துவமும் மனநலமும் பற்றிய உயர்கல்வியை முடித்திருந்தார். தந்தையின் தொழில்கூடத்தில் வேலை பார்த்துவந்த ரோஹின்டன் ஆகாவை திருமணம் செய்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பராமரித்துக்கொண்டு, கூடவே சமுதாயசேவைகளையும் செய்து கொண்டு இருந்தார். அவர்தான் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் பிறந்த அனு ஆகா அவர்கள்.

தனது மாமனாரின் தொழிலை நல்லமுறையில் விரிவு செய்த ரோஹின்டனுக்கு  1982ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நடக்கும்போது அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். எண்களை, எழுத்துக்களை ஏன் மனைவி குழைந்தைகளைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலை உருவானது. ஆனால் தொடர்ந்த பயிற்சியினால் அவர் அந்த தடைகளை உடைத்துக் கொண்டு நலமடைந்து மீண்டும் தொழிலை நடத்தத் தொடங்கினார். கணவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தால் அனு ஆகா தங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1995ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டு முதல் திரட்டியது.

தனது மகளின் பிள்ளைபேறுக்கு உதவி செய்ய அமெரிக்கா சென்று இருந்த அனு 1995 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பூனாவில் இருந்து மும்பை நகருக்கு சென்று அவரை வரவேற்க வந்துகொண்டு இருந்த அவரது கணவர் அடுத்த மாரடைப்பால் மரணமடைந்தார். தெர்மாக்ஸ் நிறுவனம் இப்போது பங்குதாரர்களாக பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்ட ஓன்று. அந்த நிறுவனத்தின்  பங்குகளின் விலை ரூபாய் நானூற்றில் இருந்து ரூபாய் முப்பத்தி ஆறாகச் சரிந்தது. ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனு ஆகாவை தெர்மாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.இந்திய தொழில்துறைக்கு அது ஒரு சோதனையான காலகட்டம். பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரண்கள் விலக்கப்பட்டு, இந்திய தொழில்கள் நரசிம்மராவ் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போடும் சூழலில் இருந்த நேரம் அது.

தனது கடின உழைப்பாலும், சரியான ஆலோசகர்களின் அறிவுரையை செயல்படுத்தியதாலும் அனு தனது நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக மாற்றிக் காட்டினார். ஆனாலும் விதியின் கை அவரின் வாழ்க்கையோடு மீண்டும் விளையாடியது.கணவன் இறந்த ஒரே வருடத்தில் அனு ஆகாவின் மகன் குருஷ் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும்.. தொடர்ந்த தனிப்பட்ட துயரங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்காமல் இருக்கும்படி அனு ஆகா பார்த்துக்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையில் அவர் நிறுவனம் திறமையாகச் செயல்பட்டு இன்றும் லாபகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பாரத அரசு இவருக்கு 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  2012ஆம் ஆண்டு இவர் நாட்டின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அனு ஆகா Teach for India என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளின் கல்விக்கு இந்த நிறுவனம் உதவி செய்து வருகிறது.

பாரத நாட்டின் பெண்களின் சக்திக்கு உதாரணமாக விளங்கும் அனு ஆகாவிற்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 2 - மக்களிடம் இருந்து மகோன்னதத்தை நோக்கி பங்கர்ராய் பிறந்ததினம்




மிகப்பெரும் அளவில் தேசிய கல்விக்கொள்கைக்கான ஆதரவான குரல்களும், எதிர்கருத்துகளைம் ஓங்கி ஒலித்துத்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் இதுதான் கல்வியா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கல்விமுறை இன்றும் நமது நாட்டில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. நமது நாட்டின் சவால்களும் பிரச்சனைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வுகளை முதலில் நமது மண்ணின் வேர்களில் இருந்துதான் தேடவேண்டும். நமது சவால்களின் விடைகள் இறக்குமதியான சித்தாந்தங்களில், கருத்துக்களில் இல்லை என்று நினைப்பவர்கள், அப்படி தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பங்கர்ராய்.

ராஜிவ் காந்தி போன்ற உயர்வர்கத்தினர் பயிலும் டூன் பள்ளியில், டெல்லியின் ஸ்டீபன் கல்லூரியில் படிப்பு, ஸ்கவாஷ் விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிகள், அந்த விளையாட்டில் உலக அளவிலான போட்டிகளில் பாரத நாட்டின் பிரதிநிதி என்று இருந்த இளைஞரின் கதை இது. அடுத்தபடியாக இந்திய ஆட்சிப் பணியிலோ அல்லது வெளிநாட்டில் படிப்பு அங்கேயே வேலை என்று சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை. ஆனால் நினைத்தது போல நடக்காமல் இருப்பதால்தான் வாழ்வின் சுவையே இருக்கிறதல்லவா !.

1967  ஆம் ஆண்டு பங்கர்ராய் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் பிஹாரில் பெரும் பஞ்சம் வந்தது. சமுதாய பணிக்கு வருமாறு இளைஞர்களை ஜெயப்ரகாஷ் நாராயணன் அழைத்தார். சிறிது காலம் அங்கே சென்று ஏதாவது செய்யலாம் என்று பங்கர் கிளம்பியபோது அந்த அனுபவம் தன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்று நினைத்திருக்கவே மாட்டார். பஞ்சமும் பட்டினியும், மரணங்களும் அவரை உலுக்கி விட்டது.

பிஹார் - எப்படிப்பட்ட இடம். செழிப்பான கங்கை நதி பாயும் பிரதேசம், மாபெரும் மகத சாம்ராஜ்யம் உருவான நிலம். உலகின் செழிப்பான பாடலிபுத்திர நகரம் இருக்கும் மாநிலம். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கல்விபெற மாணவர்கள் தேடி வந்த நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடம். ஆனால் தொடர்ந்த சுரண்டலால் வளம் இழந்து, தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற மாகாணம் பங்கர்ராயின் போதிமரமானது. தனது வாழ்வின் குறிக்கோளை  அவர் அங்கே கண்டுகொண்டார். வசதியான அதிகாரமிக்க வாழ்க்கை என்ற எண்ணம் மாறி, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

நாட்டின் கிழக்கு பகுதியில் உருவான எண்ணம் செயலானது மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தானில். வறட்சி புரட்டிப் போடும் பாலைவனப் பிரதேசம். பெண்கள் தண்ணீருக்கே பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம், இதில் படிக்க எங்கே நேரம் ? கடுமையான சவால்களுக்கு புதுமையான தீர்வுகள்தான் சரியாக இருக்கும். தண்ணீர் எடுக்கவும் ஆடு மாடு மேய்க்கவும் மட்டுமே  செய்து கொண்டு இருந்த குழந்தைகளை, அதிலும் பெருவாரியானவர்கள் தாழ்த்தப்பட்ட பொருளாதாரரீதியில் சங்கடப்படும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்காக இரவில் நடைபெறும் பள்ளிகள் உருவாகின. வெளிச்சத்திற்கு சூரிய ஒளியைச் சேமித்து வைத்து இரவில் ஒளி கொடுக்கும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான விளக்குகளை உருவாகும் தொழில்நுட்பம் மக்களுக்கு கற்பிக்கப்பட்டு அவர்கள் தயாரிக்கும் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் வாழ்க்கைக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது. அடிப்படை அறிவியல், ஆரம்ப சுகாதாரம், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை. இதில் கற்ற மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு மற்ற பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இந்தப் பள்ளிகள் இங்கே படிக்கும் மாணவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. ஒரு பிரதமர், அவருக்கு துணையாக அமைச்சர் குழு என்று மாணவர்களின் பிரதிநிதிகளே பள்ளி நிர்வாகத்தை நடத்துகிறார்கள்.

மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் இயங்கும் விளக்குகளும், அடுப்புகளும் அளிக்கப் படுகிறது. அதாவது அதனை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் இருக்கும் மூதாட்டியை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இதனை கற்றுக்கொள்ளும் தாய்மார்கள், பின்னர் தங்கள் கிராமங்களில் சூரிய விளக்குகளை தயாரித்து மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா என்று உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து எண்பத்தி ஐந்து நாடுகள் தங்கள் குடிமக்களை இங்கே அனுப்பி இந்த தொழில் நுட்பத்தில் பயிற்சி பெற வைத்துளார்கள்.

இந்தக் கல்லூரி எந்த விதமான சான்றிதழ்களை அல்லது பட்டங்களை அளிப்பதில்லை, ஆனால் வாழ்கைக்குத் தேவையான திறன்களை அளிக்கிறது. அதனால் தான் பங்கர்ராய் தனது கல்வி நிலையத்தை வெறும்பாத கல்லூரி என்று அழைக்கிறார்.

சற்றே நாம் கண்களை அகல விரித்துப் பார்த்தால் நமக்கு மிக அருகிலேயே யாரோ ஒருவர் எந்த பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு உழைத்துக் கொண்டுதான் இருப்பார்.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதை எட்டிப் பிடிக்கும் பங்கர்ராய் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் ஆயிரம் ஆயிரம் பங்கர்ராய்கள் பாரத தாயின் சேவைக்கு உருவாகட்டும்.


வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 1 - ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் பிறந்ததினம்

உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன் அவர்களின் பிறந்த தினம் இன்று 

1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத்  தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார். 1906ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் சேவையைத் தொடங்கிய டான்டன் 1921ஆம் ஆண்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி முழுநேர மக்கள் பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். 



மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.

1948ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் - ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது - பட்டாபி சீதாராமையாவை எதிர்த்துப் போட்டி இட்டார். ஆனால் அந்த ஆண்டு அவர் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆச்சாரிய கிருபளானியை எதிர்த்துப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக தேர்வானார்.  1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.

இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன்  காலமானார்.  

வியாழன், 31 ஜூலை, 2025

ஜூலை 31 - ஹிந்தி மொழியின் உபன்யாஸ சாம்ராட் முன்ஷி பிரேம்சந்த் பிறந்தநாள்


ஹிந்தி மொழியின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நாவலாசிரியர்களில் சக்கரவர்த்தி ( உபன்யாஸ சாம்ராட் ) என்று போற்றப்படும் முன்ஷி பிரேம்சந்த்  அவர்களின் பிறந்தநாள் இன்று. பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த்.

புனிதமான காசிநகரின் வடக்குப் பகுதியில் உள்ள லாம்ஹி பகுதியில் தபால் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்த அஜெய்ப் ராய் - ஆனந்தி தேவி தம்பதியினரின் மகனாக 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் பிரேம்சந்த்.  இவரின் இயற்பெயர் தன்பதி ராய். இவரது பெற்றோருக்கு முதலில் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட, மூன்றாவது ஒரு சகோதரியுடன் இவர் நான்காவது மகவு.

இவரது மாமா இவரை நவாப் என்று செல்லமாக அழைப்பது உண்டு. அதனால் இவர் முதலில் எழுதும்போது நவாப் ராய் என்ற புனைபெயரிலேயே எழுதத் தொடங்கினார். தனது ஏழாவது வயதில் ஒரு மதராசாவில் தனது படிப்பைத் தொடங்கினார் தன்பதிராய். இவரது எட்டாவது வயதில் தாயாரும், அதனைத் தொடர்ந்து சிறுது காலத்திலேயே தாயாரின் தாயரும் இறந்து போக, அதற்கு முன்பே இவரின் சகோதரிக்கு திருமணம் ஆகிவிட, தன்பதி ராய் தனித்து விடப்பட்டார்.

வேலை நிமித்தமாக கோரக்பூர் நகருக்கு மாற்றலாகிய இவரின் தந்தை மறுமணம் செய்துகொண்டார். சித்தியிடம் இருந்து தன்பதி ராய்க்கு எந்த பரிவும் கிடைக்கவில்லை. பிரேமச்சந்தின் படைப்புகளில் இப்படியான சித்தி பாத்திரம் மீண்டும் மீண்டும் வருவதை நாம் பார்க்கலாம். கவனிப்பார் யாருமில்லாத தன்பதி ராய் புத்தகம் படிப்பதிலும், அதுபற்றிய எண்ணங்களில் திளைத்து இருப்பதுமாக தனது இளமைப்பருவத்தை கழித்தார். தொடர்ந்து சோதனைகள் அவரை வாட்டியது. தனது பதினேழாம் வயதில் தந்தையையும் இழந்தார். இதற்கு நடுவில் அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. படிப்பிலும் சிறப்பானவராக இல்லை. பள்ளி இறுதி தேர்வில் இரண்டாம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற முடிந்தது. சிறிது காலம் வாரணாசியிலேயே பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் இவர் எழுதத் தொடங்கினார்.

இவரது தொடக்ககால படைப்புகள் விடுதலைப் போராட்டத்தை களமாகக் கொண்டே படைக்கப்பட்டது. திலகர் வழியில் தீவிரமாக போராடவேண்டும் என்பதே இவரின் எண்ணமாக இருந்தது. இவரது சில படைப்புகள் அரசால் தடை செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அரசு வேலையில் இருந்துகொண்டே எழுதியதால் இவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் நவாப்ராய் என்ற புனைபெயரில் இருந்து பிரேம்சந்த் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

தனது வேலையின் காரணமாக கான்பூர் கோரக்பூர் என்று பல்வேறு நகரங்களில் வசித்து வந்த பிரேம்சந்த் தனது நாற்பதாவது வயதுக்குளாகவே பல்வேறு படைப்புகளை உருவாக்கி உருது மற்றும் ஹிந்தி மொழியின் முக்கிய படைப்பாளியாக அறியப்பட்டு இருந்தார். அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். சிறிதுகாலம் மும்பையில் திரைத்துறையில் பணியாற்றினார்.

பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன்  காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்தி மற்றும் உருது மொழியில் ஒரு புது பாதையைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை முன்ஷி பிரேம்சந்த் அவர்களையே சாரும். சேவா சதன், நிர்மலா, கோதான், கர்மபூமி என்பவை இவரின் முக்கியமான சில படைப்புகள், இவரது பல புத்தகங்கள் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் பிரேம்சந்த் காலமானார்.  

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஜூலை 29 - ஜெ ஆர் டி டாடா பிறந்ததினம்


இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து தப்பி ஜொராஸ்டர்கள் என்னும் பார்சி இன மக்கள் பாரத நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அன்று குஜராத்  பகுதியை ஆண்ட மன்னன் ஒரு கொள்கலம் நிறைய பாலை அவர்களுக்கு அனுப்பி வைத்தானாம். பார்சி மத பூசகர் கையளவு சர்க்கரையை அதில் போட்டு திருப்பி அனுப்பினாராம். எங்கள் நாட்டில் ஏற்கனவே அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்பது அந்த மன்னன் அனுப்பிய செய்தி, பாலில் கலக்கும் சர்க்கரை தனியாகத் தெரிவதில்லை ஆனால் அது சுவையைக் கூடும் அதுபோல நாங்கள் இந்த மண்ணில் வேறுபட்டுத் தெரியமாட்டோம், ஆனால் இந்த மண்ணின் வளத்தைக் கூட்ட எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம் இது அந்த பூசகரின் பதில். நடந்ததோ இல்லையோ தெரியாது, ஆனால் பாரத நாட்டில் மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய இனம் பார்சி இனம். அந்த இனத்தின் தன்னிகரில்லாத தாரகையாக ஒளிவீசியவர் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - சுருக்கமாக ஜெ ஆர் டி டாடா.

புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கும்  பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த அவரது மனைவியான சூஸ்சானாவிற்கும் மகனாக 1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் பிறந்தவர் ஜஹாங்கிர் டாடா. தாயார் பிரெஞ்சு நாட்டவர் என்பதால் ஜஹாங்கீரின் இளமைப் பருவம் பிரெஞ்சு நாட்டிலேயே கழிந்தது. அவரது பள்ளிப்படிப்பும் அங்கேயே நடந்தது. டாடா நிறுவனங்களின் பணிக்காக அவரது தந்தை வேறுவேறு நாடுகளில் பணியாற்ற இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா என்று குடும்பமும் அவரோடு செல்ல பல்வேறு இடங்களில் ஜஹாங்கிர் படிக்க நேர்ந்தது. தாயாரின் மரணத்தை அடுத்து ரத்தன்ஜி தனது குடும்பத்தை இந்தியாவுக்கே கொண்டு வந்தார். தனது மேல்நிலைக் கல்வியை இங்கிலாந்து நாட்டில் முடித்த ஜஹாங்கிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க முடிவு செய்தார். ஆனால் அப்போது பிரெஞ்சு நாடு இருபது வயதான இளைஞர்கள் அனைவரும் இரண்டாண்டு கட்டாய ராணுவ சேவை புரியவேண்டும் என்று சட்டமியற்றியது. ஆமாம், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் அப்போது பிரெஞ்சு குடிமகனாகத்தான் இருந்தார். அரசின் ஆணையை ஏற்று ஜஹாங்கிர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். தரைப்படையில் இணைந்த அவ்ருக்கு பிரெஞ்சு மொழியோடு ஆங்கிலமும் பேசவும் எழுதவும் தெரியும் என்பதையும் அதோடு அவருக்கு தட்டச்சும் தெரியும் என்பதால் அவரை பிரெஞ்சு தளபதி ஒருவரின் உதவியாளராக ராணுவம் பணிமாற்றம் செய்தது. கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஜஹாங்கிர் திட்டமிட்டுக் கொண்டு இருந்தபோது, அவர் தந்தை அவரை டாடா நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தார். தனது பிரெஞ்சு குடியுரிமையை 1929ஆம் ஆண்டு துறந்த ஜஹாங்கிர் முறைப்படி இந்திய குடிமகனாக மாறினார்.

இதனிடையே 1925ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் சம்பளம் இல்லாத பயிற்சி பெரும் தொழிலாளியாக இணைந்தார். மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பும் வரலாறு அங்கேதான் தொடங்கியது. 1938ஆம் ஆண்டு தனது 34ஆவது வயதில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான TATA SONS நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐம்பது  ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருந்து செயல்பட்டார். பதினான்கு நிறுவனங்களாக இருந்த குழுமத்தை தொண்ணூற்று ஐந்து நிறுவனங்கள் கொண்ட மாபெரும் ஸ்தாபனமாக அவர் வார்த்தெடுத்தார். நிறுவங்களின் எண்ணிக்கை, கொள்முதல் வரவு செலவு, நிகர லாபம், மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியது என்பதெல்லாம் போக டாடா நிறுவனம் என்றால் ஒரு நெறிமுறை தவறாத நிறுவனம் என்றும் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெயரை எடுத்ததுதான் அவரது ஆகப் பெரும் சாதனையாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ், டைட்டான் கடிகாரத் தொழில்சாலை, டாடா கம்ப்யூட்டர்ஸ், டாடா கன்சுலேட்டன்சி சர்வீசஸ் என்று டாடா நிறுவனங்களின் பொருள்களை உபயோகிக்காத இந்திய மக்களே இருக்க முடியாது.



பாரத நாட்டில் முதல் முதலாக விமானம் ஓட்டும் தகுதிச் சான்றிதழைப் பெற்றவர் ஜஹாங்கிர் டாடாதான். அவர் தொடங்கிய டாடா விமான போக்குவரத்து நிறுவனம்தான் இன்று ஏர் இந்தியா நிறுவனமாக மாறி உள்ளது. ஆனாலும் அவரது விமான சேவையை தேசியமயமாக்கியத்தில் டாடாவிற்கு வருத்தம்தான். 1932ஆம் ஆண்டு கராச்சியில் இருந்து அஹமதாபாத் வழியாக மும்பை நகருக்கு தபால்களை தன்னந்தனியாக ஜஹாங்கிர் தனது விமானத்தில் கொண்டு வந்தார். இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அன்றுதான் தொடங்கியது. இந்த நிகழ்வின் முப்பதாவது ஆண்டு நிறைவிலும் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அதே போன்ற சிறிய விமானம் ஒன்றை அதே கராச்சி மும்பை நகருக்கு இடையே ஜஹாங்கிர் ஓட்டினார். இந்த நிகழ்வின் ஐம்பதாவது ஆண்டு என்பது 1982, அப்போது அவருக்கு வயது எழுபத்தி எட்டு.



வெறும் தொழிலதிபராக மட்டும் இருந்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே பொதுவாக பார்சி தொழிலதிபர்களும் குறிப்பாக டாடா குழுமமும் தங்கள் இலக்காக வைத்துக் கொள்வதில்லை. பொதுவாக அவர்களின் குழுமங்களின் பெரும்பான்மையான பங்குகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களின் பெயரில்தான் இருக்கும். எனவே பெரும்பான்மையான லாபம் என்பது மக்களின் தேவைகளுக்கே செலவிடப் படும். அப்படி டாடா நிறுவனம் முன்னெடுத்த இயக்கம் குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது.

அதுபோக மும்பை நகரில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை, Tata Institute of Social Science, Tata Institute of Fundamental Research ஆகியவை ஜஹாங்கிர் டாடாவால் நிறுவப்பட்டவை. அரசால் சட்டப்படி கட்டாயமாக்குவதற்கு முன்னமே தங்கள் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர விலை, இலவச மருத்துவ சிகிச்சை, தொழிலாளர் சேம நிதி ஆகியவற்றை தங்கள் நிறுவனங்களில் ஜஹாங்கிர் டாடா அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு விருதுகளையும் மரியாதைகளையும் பெற்ற ஜஹாங்கிர் டாடாவிற்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை அரசு 1992ஆம் ஆண்டு வழங்கியது. இந்த விருதை பெற்ற முதல் தொழிலதிபர் டாடாதான். இன்றுவரை வேறு எந்த தொழிலதிபரும் இந்த விருதைப் பெறவில்லை.

1993ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம்  நாள் ஸ்விட்சர்லாந்து நாட்டில் தனது 89ஆம் வயதில் ஜெ ஆர் டி டாடா காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடாளுமன்றம் தனது நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. பொதுவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மறைவுக்கு இப்படி செய்வது மிக அரிது.

பாரத பொருளாதார வரலாற்றையோ அல்லது தொழில் வரலாற்றையோ எழுதும் போது ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவிற்கு ஒரு தனி இடம் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

திங்கள், 28 ஜூலை, 2025

28 ஜூலை - கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் பிறந்தநாள்

கல்வித்துறையின் கதாநாயகன் H S S லாரன்ஸ் - பிறந்தநாள் 28 ஜூலை

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கல்வித்துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதில் பெரும்பங்காற்றி ஆனாலும் இன்று நினைவில் இல்லாமல் போன ஒரு அறிஞரைப் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம். தமிழகத்தின் கல்வித்துறை என்றால் பொதுவாக  நாம் நினைவு கூறுவது காமராஜரைத்தான். கொஞ்சம் யோசித்தால் நெ து சுந்தரவடிவேலுவின் பெயர் நினைவுக்கு வரலாம், அவர்கள் அளவிற்கு தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு துணை நின்றவர்தான் திரு ஹாரிஸ் ஸாம் சகாயம் லாரன்ஸ் அவர்கள்.

1923ஆம் ஆண்டு நாகர்கோவில் நகரைச் சார்ந்த ஸாம் - அருளம்மாள் ஹாரிஸ் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர்  இவர்.இந்தியாவின் வைஸ்ராயாகப் பணியாற்றிய ஜான் லாரன்ஸ் நினைவாக இவருக்கு பெயரிடப்பட்டது. தனது பள்ளிப்படிப்பை நாகர்கோவில் நகரிலும், பின்னர் வரலாறு மற்றும் பொருளாதாரத்துறைகளில் தனது இளங்கலை பட்டத்தை திருவனந்தபுரத்தில் இவர் முடித்தார். பாரத அரசு இவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்கு அனுப்பியது. அங்கே லாரன்ஸ் தனது முதுகலைப் பட்டத்தையும் கல்வித்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

காலிகட் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் பின்னர் வேலூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் பின்னர் வேலூர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த லாரன்ஸ் 1976ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்விதுறையின் இயக்குநராகப் பணியாற்றினார். இவரது காலத்தில்தான் தமிழக கல்வித்துறையின் 150ஆவது ஆண்டு விழா 1977ஆம் ஆண்டு கொண்டாடப் பட்டது.

1976ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி சீரமைப்பு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாக இவர் பணியாற்றியபோது அளித்த அறிக்கையின்படிதான் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முடித்தபின் பள்ளி வளாகத்திலேயே உயர்நிலை வகுப்புகள் பின்னர் கல்லூரிப் படிப்பு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. அதுவரை பள்ளி வளாகத்தில் பதினோராம் வகுப்பு வரை, பின்னர் கல்லூரியில் ஓராண்டு பின்னர் பட்டப்படிப்பு என்ற முறைதான் இருந்து வந்தது. கல்வித்துறையின் இந்த மாற்றத்தால் உருவான உயர்நிலைப் பள்ளி இயக்குநரகத்தின்  முதல் இயக்குனராக  திரு லாரன்ஸ் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த மெட்ரிகுசேஷன் பள்ளிகளை நிர்வகிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை ஐநா நிறுவனத்தின் சார்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வித்துறையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு  அந்த நாட்டின் கல்வித்துறையை நவீனமயமாக்கினார்.

பள்ளிகல்விதுறையில் லாரன்ஸின் பங்களிப்பு மகத்தானது. அகில இந்திய வானொலி நிலையத்தின் கல்வி ஒலிபரப்பை மாணவர்கள் அனைவரும் கேட்கும் விதமாக 31,000 பள்ளிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்போடு வானொலிப்பெட்டிகள் வழங்க வழிவகுத்தது, அதுவரை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் பற்றிய அறிக்கையை அரசுக்கு வழங்கியது, 1977ஆம் ஆண்டு முதல் அரசு பொதுதேர்வுகளில் முதலிடம் வாங்கும் மாணவர்களுக்கு பாராட்டு  பட்டயம் வழங்குவது, பொறியியல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்திற்கான பரிசு வழங்குதல், பள்ளிகளில் புத்தக வங்கிகளை உருவாக்குவது என்று பல்வேறு முன்னெடுப்புக்களை திரு லாரன்ஸ் மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தல் என்று மாணவர்களுக்கு பள்ளிகளை, பாடங்களைத் தாண்டி சமுதாய கடமைகளை மேற்கொள்ளும் எண்ணத்தை விதைக்க இவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து நடுநிலைப் பள்ளிகள், பத்து முதல் இருபது தொடக்கப்பள்ளிகள் என்ற பள்ளித் தொகுதிகள் ( School Complex ) என்ற முறையை லாரன்ஸ் உருவாக்கினார். தமிழக அரசின் இந்த புதுமையான முயற்சிகளை பாரத அரசு பாராட்டியது. இன்று 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கல்விக்கொள்கையில் உள்ள இதே கருத்தை தமிழக்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

பள்ளித்துறையில் இருந்து ஓய்வு பெற்றபின் வங்கி பணியாளர் தேர்வாணையத்திலும் திரு லாரன்ஸ் திறம்படப் பணியாற்றினார்.

இவர் தனது 85ஆவது வயதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் காலமானார்.