வெள்ளி, 13 ஜூன், 2025

ஜூன் 13 - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள்

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 11 ஜூன், 2025

ஜூன் 11 - புரட்சிவீரர் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலை என்பது பல்வேறு தியாகிகள் தங்களையே ஆகுதியாக்கி அதனால் கிடைத்த பலனாகும்.  அப்படியான தியாகிகளின் வரிசையில் முக்கியமான ராம் பிரசாத் பிஸ்மில் அவர்களின் பிறந்ததினம் இன்று. 

தனது ஒரு கையில் ஏந்திய துப்பாக்கியினால் உமிழும் தோட்டாக்கள் மூலமாகவும், மறுகையில் ஏந்திய பேனா முனையில் இருந்து வெளியாகும் கவிதைகள் மூலமாகவும்  ஒரே நேரத்தில் ஆங்கிலேயர்களின் நிம்மதியைக் குலைத்த வீரர் அவர்.

 இன்றய உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் முரளிதர் - மூல்மதி தம்பதியரின் மகனாக 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர். தன் தந்தையிடம் ஹிந்தி மொழியையும் அதனைத் தொடர்ந்து ஒரு இஸ்லாமிய மதகுருவிடம் உருது மொழியையும் ராம் பிரசாத் கற்றுத் தேர்ந்தார். அன்றய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தியோடு இருந்த ஆரியசமாஜத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து ஞானமரபுதான் அன்னியர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்  உத்வேகத்தை மக்களுக்கு எப்போதும் அளித்து வந்துள்ளது. ஆர்யசமாஜத்தில் இருந்த ஸ்வாமி சோமதேவ் என்பவர்தான் ராம் பிரசாத்தின் வழிகாட்டியாக அமைந்தார்.

ராம்பிரசாத் மாத்ரிவேதி ( தாய்நாட்டின் பலிபீடம் ) என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அப்போது ஸ்வாமி சோமதேவ் ராம்பிரசாத்தை கென்லாலால் தீக்ஷித் என்ற பள்ளி ஆசிரியரோடு தொடர்பு கொள்ள வலியுறுத்தினார். கென்லாலால் தீக்ஷித் சிவாஜி சமிதி என்ற இயக்கத்தை உருவாக்கி இளைஞர்கள் மனதில் தேசபக்திக் கனலை எரியவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  இருவரும் இணைந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.

தனது மைன்புரியின் உறுதிமொழி என்ற கவிதையோடு நாட்டுமக்களுக்கு ஒரு செய்தி என்ற துண்டறிக்கையைத் தயாரித்து ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் விநியோகித்தனர். ஆயுதம் வாங்க பணம் வேண்டும், அந்தப் பணத்தை ஆங்கில அரசிடமே கொள்ளையடிப்பது என்று வீரர்கள் தீர்மானித்து, மூன்று முறை ஆங்கில ஆட்சியாளர்களின் கருவூலத்தைக் கொள்ளை அடித்தனர். டெல்லிக்கு ஆக்ராவிற்கும் நடுவே கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது காவல்துறையோடு பெரும் சண்டை நடந்தது. ராம்பிரசாத் யமுனா நதியில் குதித்தார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்க, நதியின் உள்ளே நீந்தித் தப்பித்தது ராம்பிரசாத் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். கென்டாலால் தீக்ஷித் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப் பட்டார். அவரும் சிறையில் இருந்து துணிகரமாகத் தப்பித்து தலைமறைவானார். மைன்புரி சதிவழக்கில் எல்லாக் குற்றவாளிகளும் விடுதலையானார். ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் காணாமல் போய் விட்டார்கள் என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார்.

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராம்பிரசாத் பல்வேறு நூல்களை எழுதினார். வங்காள மொழியில் இருந்தும் ஆங்கில மொழியில் இருந்தும் புத்தகங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். ராம், பிஸ்மில், அக்யாத் என்று பல்வேறு புனைபெயர்களை அவர் பயன்படுத்தினார். மைன்புரி சதிவழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ராம்பிரசாத் ஷாஜஹான்பூர் திரும்பினார். எந்த அரசு விரோத செயல்களிலும் தான் ஈடுபடமாட்டேன் என்று அவர் காவல்துறையிடம் உறுதிமொழி அளித்தார். அதை அரசும் நம்பவில்லை, ராம்பிரசாத்தும் உறுதிமொழிக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

1921ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராம்பிரசாத் தன் நண்பர்களோடு கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் மௌலானா ஹஸ்ரத் மொஹைனி முன்மொழிந்த பூர்ண ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. பூரண ஸ்வராஜ்யம் தேவையில்லை டொமினியன் அந்தஸ்து போதும் என்ற  காந்தியின் கருத்து  இளைஞர்களின் ஆவேசத்தின் முன் பயனில்லாமல் போனது. மாநாடு முடிந்து ஷாஜஹான்பூர் திரும்பிய ராம்பிரசாத் இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அஹிம்சை முறையில் விடுதலை அடைய முடியாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் சவுரிசவுராவில் நடைபெற்ற வன்முறையால் நாடு இன்னும் அஹிம்சை முறைக்குத் தயாராகவில்லை என்று கூறி காந்தி இயக்கத்தை ஒத்தி வைத்தார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்தார்.  காந்தியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் அந்த ஆண்டுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பதவி விலகினார். சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை உருவாக்கினார்கள். தேர்தலைச் சந்தித்து நேரடி அரசியலில் ஈடுபட ஸ்வராஜ்ய கட்சி முடிவு செய்தது. காந்தியின் அகிம்சை வழி பயன்தராது, ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் சரி என்று முடிவுக்கு இளைஞர்கள் வந்தனர்.

லாலா ஹர்தயாள் வழிகாட்ட, சச்சிந்திரநாத் சன்யால், ஜடுகோபால் முகர்ஜீ ஆகியோரின் உதவியோடு ராம்பிரசாத் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்க அதன் சட்டதிட்டங்களை வடிவமைத்தார். ஹிந்துஸ்தான் ரிபப்லிக் அசோசியேஷன் உருவானது. இதில் கிளைத்து எழுந்தவர்கள்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், ஜதின்தாஸ் போன்ற போராளிகள்.

ஆயுதம் வாங்க பணம் வேண்டும், பணம் திரட்டும் வழியோ ஏற்கனவே தெரியும். ஆங்கில அரசு பெரும் பணத்தை லக்னோ நகருக்கு கொண்டு செல்லும் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக்  கிடைத்தது. ககோரி பகுதியில் ரயிலை நிறுத்தி கஜானாவை கொள்ளை அடிக்க முடிவானது. மன்மதநாத் குப்தா, அஷ்பாகுல்லா கான் ஆகியோரின் துணையோடு பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற ககோரி சதிவழக்கு ஆரம்பமானது. சசீந்திரநாத் சன்யால், சசீந்திரநாத் பக்ஷி ஆகியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மன்மதநாத் குப்தாவிற்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, என்று பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. ராம்பிரசாத் பிஸ்மில், தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மேல்முறையீடுகளிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ராம்பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையிலும், ரோஷன்சிங் பிரயாக்ராஜ் சிறையிலும் அஷ்பாகுல்லா கான் ஃபைஸாபாத் சிறையிலும் 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தூக்கிலிடப் பட்டார்கள். ராஜேந்திரநாத் லஹரி இரண்டுநாட்களுக்கு முன்பாக கோண்டா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

முப்பது ஆண்டுகளே வாழ்ந்த ராம்பிரசாத் பிஸ்மில் பாரத நாட்டில் வரலாற்றில் ஒளிவிடும் விண்மீனாக விளங்குகிறார். மகத்தான தியாகியின் நினைவுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துவோம்.

வெள்ளி, 6 ஜூன், 2025

ஜூன் 6 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் -

கன்னட மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். கன்னட மொழி படைப்புகளுக்காக ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பிறந்த தினம் இன்று. அவரின் நினைவு தினமும் இன்றுதான். 

1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள் கோலார் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர் வெங்கடேச ஐயங்கார். தனது இளமைக்காலத்தில் மாஸ்தி கிராமத்தில் கழித்த ஐயங்கார், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அன்றய மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பணியில் வேலை பார்க்கத் தொடங்கிய ஐயங்கார் 1943 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வேலை பார்க்கும் காலத்திலேயே ஸ்ரீனிவாஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிக்கொண்டிருந்தார்


ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஐயங்கார் பின்னர் கன்னட மொழியில் எழுதலானார். இவர் எழுதிய முதல் நூல் ரங்கன மதுவே 1910ஆம் ஆண்டு வெளியானது. அதில் தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை  தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றிய பல கவிதைகள், பல நாடகங்கள், மொழிபெயர்ப்பு என்று எழுத்தில் எல்லா தளங்களிலும் ஐயங்கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். இவரது கடைசி நூல் மாதுகரே ராமண்ணா 1985ஆம் ஆண்டு வெளியானது. மாஸ்தி எழுதிய  கேலவு சன்ன கேட்டகளு ( சில சிறுகதைகள் ) என்ற தொகுப்பு நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கன்னட மொழியில் 123 புத்தகங்களும் ஆங்கிலத்தில் 17 புத்தகங்களும் இவரால் எழுதப்பட்டன. ஜீவனா என்ற மாத இதழின் ஆசிரியராகவும் மாஸ்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். 

கர்நாடகத்தின் குடகு பகுதியை ஆண்ட கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன். கட்டுப்பாடற்ற வளர்ப்பினால் ஒரு அரசனுக்குரிய எந்த தகுதியையும் வளர்த்துக் கொள்ளாத மன்னன் இவன். தொடர்ந்து இவன் செய்த தவறுகளால் அரச குடும்பத்தினரும், மந்திரிகளும் மன்னனுக்கு எதிராகத் திரும்ப, ஆங்கிலேயர் வசம் குடகு அடிமைப்பட நேர்ந்தது. இந்தக் களத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய சிக்கவீர ராஜேந்திரன் என்ற புதினம் ஐயங்காருக்கு ஞானபீடப் பரிசைப் பெற்றுத் தந்தது. இந்த புதினத்தை ஐயங்கார் தனது 92ஆம் வயதில் எழுதினார். 

ஒழுங்கீனமும் பொறுப்பற்ற தன்மையும் சிக்கவீர ராஜேந்திரன் போன்ற பல மன்னர்களின் பழக்கமாக இருந்திருந்திருக்கலாம். அதனாலேயே ஆங்கில ஆட்சிக்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பதவியை இழந்த ராஜேந்திரன் லண்டன் சென்று விக்டோரியா மஹாராணியைச் சந்தித்து தனது நாட்டை மீண்டும் ஒப்படைக்கக் கோருகிறான். தனது பெண்ணான கௌரியம்மாவை ராணியின் வசத்தில் அவன் ஒப்படைக்கிறான் அங்கே கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படும் ராஜகுமாரி, தன்னை விட முப்பது வயது மூத்த ஒரு ராணுவ அதிகாரியை மணந்து தனது இருபத்திமூன்றாம் வயதில் லண்டன் நகரிலேயே காலமாகிறார்.  

தனது 95ஆம் வயதில் காலமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் நினைவாக கர்நாடக அரசு கன்னட மொழி எழுத்தாளர்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கிறது. இவர் வாழ்ந்த வீடு இவரது நினைவில்லமாக செயல்பட்டு வருகிறது. 

வியாழன், 5 ஜூன், 2025

ஜூன்- 5அரசாளும் துறவி யோகி ஆதித்யநாத் பிறந்ததினம்

நாடாளும் அரசர்கள் பற்றற்று துறவிகள் போல இருக்கவேண்டும் என்பது பாரத சித்தாந்தம். ஆனால் ஒரு துறவியே அரசாள்வது என்பது ஒரு புதிய பார்வை. அப்படி நாட்டின் மிகப்பெரும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் கோரக்பூர் மடத்தின் பீடாதிபதியான யோகி ஆத்யநாத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


உத்திரப்பிரதேச வனத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆனந்த்சிங் பிஷ்ட் என்பவரின் மகனாக 1972ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் அஜய்மோகன் பிஷ்ட். ஆம் இதுதான் யோகியின் இயற்பெயர். நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் யோகி. ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா அஜய்மோகன் ராம்ஜன்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார். அப்போது கோரக்பூர் மடத்தின் அன்றய பீடாதிபதியாக மஹந்த் அவைத்யநாத் அவர்களின் சீடரானார். உலக வாழ்வைத் துறந்தது துறவியான அஜய்மோகனுக்கு ஆதித்யநாத் என்ற யோகபட்டம் அளிக்கப்பட்டது.

கோரக்பூர் மடத்தின் அதிபதிகள் பல்லாண்டுகளாகவே ராமஜன்ம பூமியை விடுவிக்கும் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர்கள். அந்தப் பாதையை யோகி ஆதித்யனாத்தும் பின்தொடர்ந்தார். மஹந்த் அவைத்யநாத் மஹாசமாதி அடைந்த பிறகு யோகி கோரக்பூர் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கோரக்பூர் மடம் கல்வி நிலையங்கள் நடத்துவது, மருத்துவமனைகளை நடத்துவது போன்ற பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் அந்த சமூகப் பணிகளை இன்னும் யோகி விரிவுபடுத்தினார்.

தீவிரமான ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட கோரக்பூர் மடாதிபதிகள் திக்விஜயநாத், அவைத்யநாத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள். யோகியும் தனது 26ஆம் வயதில் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐந்து முறை தொடர்ச்சியாக அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக யோகி பணியாற்றினார். 16ஆவது நாடாளுமன்றத்தில் யோகி 77% கூட்டங்களில் கலந்து கொண்டு 284 கேள்விகளை எழுப்பி 56 விவாதங்களில் கலந்து கொண்டு தன் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி உள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. பாஜக யோகி ஆதித்யநாத்தை உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக நியமித்தது. பல ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கி இருந்த மாநிலத்தை மாற்ற யோகி பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடைக்கப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கல்வி மட்டும்தான் தொடர்ச்சியான மாறுதலைக் கொண்டு வரும் என்பதை முழுமையாக அறிந்த யோகி, கல்வித்துறையில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். மாநிலத்தில் உள்ள ஒருலட்சத்து அறுபதாயிரம் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் காயகல்ப் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, புதிய வகுப்பறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உருவாகும் திட்டம் இது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இவை முன்னெடுக்கப்பட்டது.  பல்வேறு அமைச்சர்களும் அதிகாரிகளும் எதிர்பாராத நேரங்களில் பள்ளிகளைப் பார்வையிட்டு போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். இதுவரை நாற்பத்தி ஆறாயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் எழுபதாயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. அதுபோல மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வழிகளும் அதற்கான முன்னெடுக்களும் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தோற்று உத்திரப்பிரதேசத்திற்கு புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது. பாரதம் முழுவதும் பரவியுள்ள பல லட்சம் தொழிலார்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பெரும் பணி யோகியின் முன் உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் யோசனையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை உத்திரப்பிரதேசத்திற்கு வரவழைக்கும் வாய்ப்பையும் இந்த நோய்தோற்று யோகிக்கு தந்துள்ளது. அதற்கான முயற்சியில் யோகி முழு மூச்சாக இயங்கிக்கொண்டு உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத் வெற்றி அடையட்டும் என்ற வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக்கொள்கிறது. 

புதன், 4 ஜூன், 2025

ஜூன் 4 - மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் பிறந்ததினம்

கர்நாடக மாநிலத்தின் இன்றய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட பெருமைக்குரியவர் மைசூர் ராஜ்யத்தைஆண்ட கிருஷ்ணராஜ உடையாரே ஆவார். 1884ஆம் ஆண்டு மஹாராஜா சம்மராஜேந்திர உடையாரின் முதல் மகனாகப் பிறந்தார். இவரது சிறு வயதிலேயே இவர் தந்தை மரணமடைந்தால் இவரின் தாயார் கிருஷ்ணராஜ உடையாரின் பிரதிநிதியாக ஆட்சி செய்துவந்தார். 1902ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் கிருஷ்ணராஜ உடையார் அரியணை ஏறினார்.

ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமிஸ்க்ரித மொழிகளில் பயிற்சி, குதிரையேற்றம், நீதி வழங்குதல், அரசாட்சி செய்யும் முறை, இந்திய மற்றும் மேல்நாட்டு கலைகளில் தேர்ச்சி என்று நாடாளும் மன்னருக்கு தேவையான பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட்டது.
மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் இந்திய வரலாற்றில் ஜனகரைப் போல ராஜரிஷியாக அசோகரைப் போல பொது மக்களின் மனத்தைக் கவர்ந்த அரசராக விளங்கினார். மிகப்பெரும் உள்கட்டுமானப் ணிகள் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

காசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலையின் முதலாம் வேந்தராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ராஜா செயல்பட்டார். ஒரு இந்திய அரசால் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை மைசூர்  பல்கலைக்கழத்திற்கு உண்டு.


தீண்டாமையை ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று ராஜா பிரகடனம் செய்தார். சிறுவயது திருமணத்தை தடை செய்தார். விதவையான பெண்களின் கல்விக்காக உதவித்தொகை அளித்தார். தனது சொந்தப் பணத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு மாற்றுத் திறனாளி குழைந்தைகள் கல்விக்காக ஒதுக்கீடு செய்தார். கல்வி நிலையங்களில் 25% இட ஒதுக்கீடு அளித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்கினார். இவரது காலத்தில் 1927ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி மைசூர் சமஸ்தானத்தில் 8000 பள்ளிகளில் ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்தனர். அரசு நாற்பத்தி ஆறு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்தது.

ஆரம்பக்கல்வியை ராஜா கட்டாயமாக்கினார், அதனை இலவசமாகவும் அளித்தார். எல்லா பள்ளிகளிலும் பட்டியல் இன மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார். மைசூர் விவசாய பல்கலைக்கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிவை இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவை தனது திவானாக ( பிரதம மந்திரியாக ) நியமித்தார். சிவசமுத்திரம் நீர்மின்நிலையம், ஆசியாவில் முதல்முறையாக பெங்களூரு நகர் முழுவதும் மின்சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கினார்.

காவேரி நதியின் குறுக்கே அணை கட்டி, விவசாய நிலங்களை பெருக்கினார். அந்த அணை கிருஷ்ணராஜ சாகர் என்று அழைக்கப் படுகிறது. பெங்களூர் நகரில் மிகப் பெரும் பரப்பளவிலான நிலத்தை ஜெ ஆர் டி டாட்டாவிற்கு அளித்தார். அந்த இடத்தில்தான் இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) செயல்பட்டு வருகிறது.

ராஜா கிருஷ்ணராஜ உடையார் வயலின், புல்லாங்குழல், வீணை, சித்தார், போன்ற பல இசைக்கருவிகள் வாசிப்பதில் நிபுணராக விளங்கினார். பல்வேறு கலைஞர்களை ஆதரித்தார். சுருக்கமாக சொல்வது என்றால் அவரது ஆட்சிக்காலம் மைசூர் ராஜ்யத்தின் பொற்காலம் என்று கூறலாம். இதன் காரணமாக காந்தி ராஜா கிருஷ்ணராஜ உடையாரை ராஜரிஷி என்று புகழ்ந்து கூறினார்.


அரசாட்சி செய்த மன்னர்களில் காலம் கடந்தும் மக்களால் நினைக்கப்படவேண்டும் என்றால் கிருஷ்ணராஜ உடையாரைப் போல மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும்.  

செவ்வாய், 3 ஜூன், 2025

ஜூன் 3 - போராளியாகவே வாழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள்

போராட்டகுணம் கொண்ட தொழில்சங்கவாதி, ஜனநாயகத்தைக் காக்க இந்திராவை எதிர்த்து நின்ற வீரர், சிறந்த பாராளுமன்றவாதி, மத்திய அமைச்சர், எழுத்தாளர், பல மொழி விற்பன்னர், பத்திரிகையாளர் என்ற பன்முக பரிமாணம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள் இன்று.

மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிருத்துவ இறையியல் படிப்பதற்காக பெங்களூரு வந்தார். ஆனால் அதில் சலிப்புற்று மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே சோசியலிச சித்தாந்தவாதியாக மாறி, ரயில்வேதுறை தொழிலார்களின் தலைவராக உருவானார். ராம்மனோஹர் லோகியாவின் சீடராக, சோஷலிச கொள்கைகளை முன்னெடுப்பவராக மாறினார். மும்பை மாநகராட்சியின் உறுப்பினனராக 1961 முதல் செயல்பட்டார்.

இன்றுபோல் அன்றும் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற முனைப்போடு உள்ள மக்களை ஈர்த்துக்கொண்டு இருந்தது. அந்த நகரத்தில் குடியிருக்கும் அமைப்புசாரா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அப்போது ஜார்ஜ் வடிவமைத்தார்.
ரயில்வே துறை தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி சார்பாக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975ஆம் ஆண்டுஇந்தியாவில் எல்லா ஜனநாயக முறைகளையும் இல்லாமலாக்கி இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டார். பரோடா ரயில்பாலத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் கொல்கத்தா நகரில் கைது செய்யப்பட்டார்.

1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த ஜனதா கட்சியின் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். குறுகிய காலத்தில் ஜனதா ஆட்சி கலைய, மீண்டும் இந்திரா பிரதமரானார்.
1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் வி பி சிங் தலைமையில் அமைந்த ஜனதாதள் அரசில் ரயில்வேத்துறை மந்திரியாகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கொங்கன் ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டது.

சமதா கட்சியின் நிறுவனரான 1996ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவில் இருந்தார். வாஜ்பாய் அரசில் ராணுவ அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதும், கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.
கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை கொண்டுசெல்லும் சவப்பெட்டியில் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை இவர் மீது சுமத்தியது. ஆனால் விசாரணை முடிவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார்.

கொங்கணி, துளு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், உருது, லத்தின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1967 முதல் 2004 வரை ஒன்பது முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.


உடல்நலம் சரியில்லாது இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் காலமானார்.  

திங்கள், 2 ஜூன், 2025

ஜூன் 2 - இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேனி பிறந்தநாள்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இந்தியாவின் குடிமக்கள் பற்றிய முழு தகவல்களை சேகரிக்கும் ஆதார் கார்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய திரு நந்தன் நிலகேனி அவர்களின் பிறந்தநாள் இன்று.

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த திரு நந்தன் தனது ஆரம்ப கல்வியை தார்வாட் நகரிலும் தனது பொறியியல் கல்வியை மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விநிலையத்திலும் ( IIT Bombay ) முடித்தார். தனது தொழில்வாழ்வை மும்பையில் உள்ள பாட்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தொடங்கிய திரு நந்தன் பிறகு அதே நிறுவனத்தில் பணி புரிந்த நாராயணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராகவன், தினேஷ், அசோக் அரோரா மற்றும் ஷிபுலால் ஆகியோருடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். இன்று இந்திய நாட்டை கணினி மென்பொருள் துறையில் உலகத்தின் முக்கிபற்றிய முக்கியமான நாடாக மாற்றியதும், பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததன் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது இன்போசிஸ் நிறுவனம்.

இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நந்தன் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய மக்களைப் பற்றிய முழு தகவல்களைத் தொகுக்கும் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய மந்திரிக்கு இணையான பதவி இது. இந்த ஆணையத்தின் முயற்சிதான் இன்று நாடுமுழுவதும் பொதுமக்களுக்கான அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் அட்டையாகும். இதன்படிதான் பல்வேறு பொருளாதார பலன்கள் தேவைப்படும் தகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாகக் கூறி அந்தத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெரும் பணக்கார வேட்பாளராக அறியப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் நந்தன் வெற்றிபெறவில்லை.

பல்வேறு தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களில் நந்தன் முதலீடு செய்து அவர்களுக்கு வழிகாட்டியாகும் இருந்துவருகிறார். தனது சொத்தில் சரிபாதி அளவை சமுதாயப் பணிகளுக்கு அளிக்கவும் நந்தன் உறுதி ஏற்றுள்ளார்.


சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தனது படிப்பின் மூலமும் அயராத உழைப்பின் மூலமும் மிகப்பெரும் உயரங்களை நந்தனின் வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு ஒரு உந்துகோலாக ஐயமில்லை.