சனி, 24 மே, 2025

மே 24 - தியாகி கர்தார் சிங் சரபா பிறந்ததினம்

 பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி தன் பத்தொன்பதாம் வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் கர்தார் சிங் சரபாவின் பிறந்ததினம் இன்று. 
பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருந்து சீக்கிய வீரர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம் என்பது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஓன்று. கதர் கட்சி என்று உருவான புரட்சி இயக்கமும் அதில் இணைந்து தங்களை ஆகுதியாகிய வீரர்களும் இன்று மக்களிடம் மறைக்கப்பட்டது நமது துரதிஷ்டமே. அந்த வீரர்களில் முக்கியமானவர் கர்தார் சிங்.

1896ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் லூதியான மாவட்டத்தில் உள்ள சரபா என்ற கிராமத்தில் ஜாட் வகுப்பைச் சார்ந்த சீக்கியரான மங்கள்சிங் - சாஹிப் கௌர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் கர்தார் சிங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த கர்தார் சிங்கை அவரது தாத்தாதான் வளர்த்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை லூதியானாவிலும் பின்னர் ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரிலும் முடித்த கர்தார் சிங், பட்டப்படிப்பு படிக்க 1912ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஆங்கில அரசின் வரைமுறை அற்ற வரிவசூலால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறிக்கொண்டு இருந்தனர். தாய்நாட்டின் அவலநிலையைக் கண்டு கொதித்த தேசபக்தர்கள் அங்கங்கே கூடி இந்த தாழ்வுநிலையை மாற்றுவது பற்றியும், ஆங்கில அரசை தூக்கி எறிவது பற்றியும் சிந்தித்துக் கொண்டு இருந்தனர்.

தேசபக்தர்கள் இணைந்து கதர் கட்சி என்ற புரட்சி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். சோஹன்சிங், லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இரும்பைக் காந்தம் ஈர்ப்பது போல, கர்தார் சிங்கை லாலா ஹர்தயாள் ஈர்த்தார். ஹிந்தி உருது பஞ்சாபி குஜராத்தி குர்முகி ஆகிய மொழிகளில் கதர் என்ற பெயரில் பத்திரிகையை சின்ஹட்ட புரட்சி இயக்கம் வெளியிட்டுக்கொண்டு இருந்தது. அந்தப் பத்திரிகையில்  கட்டுரைகள் கவிதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி கர்தார் சிங் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டு இருந்தார். வெளிநாடுகளில் வாழும் பாரதியர்களிடம் ஆங்கில அரசின் கொடுமையை கொண்டு செல்லும் பணியை கதர் பத்திரிகை செய்து கொண்டு இருந்தது.

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் கதர் கட்சி முறைப்படி ஆங்கில ஆட்சி மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தது. பாரத நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கர்தார் சிங் உள்பட பல்வேறு வீரர்கள் பாரத நாட்டுக்கு திரும்பினார். கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த கர்தார் சிங் அங்கே ஜுகாந்தர் இயக்கத்தின் தலைவரான ஜதின் முகர்ஜியின் அறிமுகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாரணாசி சென்று ராஷ்பிஹாரிபோஸை சந்தித்தார். போராட்டத்தை முன்னெடுக்க அரசு கருவூலங்களையும், பணக்காரர்களையும் கொள்ளை அடிப்பது என்றும் பெராஸ்பூர் நகரில் ஊழல் ராணுவ பாசறையைக் கைப்பற்றி ஆயத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்களின் ஊடே நுழைந்த துரோகி ஒருவனால் இந்த செய்திகள் ஆங்கில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடங்கியது. பல்வேறு வீரர்கள் தப்பியோடினார். பலர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பினார்கள். ஆனால் தனது தோழர்கள் சிறையில் வாடும்போது தலைமறைவாக இருக்க கர்தார் சிங் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானிலில் இருந்து பாரதம் திரும்பினார். மீண்டும் ராணுவ வீரர்களை புரட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கதர் கட்சியைச் சார்ந்த 17 வீரர்களுக்கு மரண தண்டனையும், மேலும் பலருக்கு பல்வேறு தண்டனைகளும் அளிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் தனது பத்தொன்பதாம் வயதில் தூக்குமேடையில் பாரத தேவியின் காலடியில் தனது உயிரை ஆகுதியாகினார் அந்த வீரர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது கர்தார் சிங் போன்ற பல்வேறு தியாகிகளின் வீரத்தால், தியாகத்தால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டும். 

வெள்ளி, 23 மே, 2025

மே 23 - மஹாராணி காயத்ரி தேவி பிறந்ததினம்

ராஜாஜியின் ஸ்வராஜ்யா கட்சியின் மூத்த தலைவரும், ஜெய்பூர் சமஸ்தானத்தின் முன்னாள் மஹாராணியுமான ராஜமாதா காயத்ரிதேவியின் பிறந்ததினம் இன்று.


வங்காளத்தில் உள்ள கூச் பெஹர் சமஸ்தான அரசராக இருந்த மஹாராஜா ஜிதேந்த்ர நாராயணன் - இந்திரா ராஜே தம்பதியரின் மகளாக 1919ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. பரோடா அரசர் ஷாயாஜிராய் கெய்வர்டின் மகள்தான் இந்திரா ராஜே. தனது ஆரம்ப கல்வியை லண்டன் நகரிலும் பின்னர் ரபீந்த்ரநாத் டாகுரின் சாந்திநிகேதனிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் பயின்றவர் காயத்ரி தேவி. ஜெய்பூர் சமஸ்தானத்தின் அரசரான மான்சிங் பகதூரை காயத்ரி தேவி மணந்து கொண்டு ஜெய்பூர் அரசியானார்.

நாடு விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து ஜெய்பூர் சமஸ்தானம் பாரத நாட்டோடு இணைந்தது. ராஜா மான்சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜபிரமுக் என்று அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சுவீடன் நாட்டுக்கான பாரத நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சுதந்திர சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் கொண்ட மஹாராணி காயத்ரி தேவி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்த்ரா கட்சியில் இணைந்து, அதன் முக்கியமான தலைவராக உருவானார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்வதந்திரா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிச பொருளாதார கொள்கைகளை கடுமையாக எதிர்த்த காயத்ரி தேவியை நெருக்கடி நிலைமை காலத்தில் இந்திரா கைது செய்து திஹார் சிறையில் அடைத்தார். ராஜாஜியின் மறைவைத் தொடர்ந்து ஸ்வதந்த்ரா கட்சி அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழக்க, மஹாராணி காயத்ரி தேவியும் அரசியலில் இருந்து விலகினார்.

மஹாராணி காயத்ரி தேவி குதிரை சவாரி செய்வதிலும், போலோ விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அதுபோலவே வனவிலங்குகளை வேட்டையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். மஹாராணி காயத்ரி தேவி நினைவாக ஆண்டுதோறும் போலோ விளையாட்டுப் போட்டியை ஜெய்பூர் அரச குடும்பம் நடத்தி வருகிறது. தனது ஆட்சியில் இருந்த பகுதியில் பல்வேறு கல்வி நிலையங்களை மஹாராணி தொடங்கினார். அதுபோலவே நகை தயாரிப்பு, கைத்தறி துணிகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிப்பிலும், சந்தைப்படுத்துவதிலும் கலைஞர்களுக்கு மஹாராணி உறுதுணையாக இருந்தார்.

பனிரெண்டு வயதில் சிறுத்தையை வேட்டையாடியது, மஹாராணி என்ற நிலையில் பர்தா முறையில் சிக்கிக் கொள்ளாதது, அரசியலிலும் சமூக சேவையிலும் ஒரே நேரத்தில் தீவிரமாக இயங்கியது, சிறை தண்டனை அனுபவித்தது என்று வாழ்வின் பல்வேறு பகுதிகளையும் வாழ்ந்து பார்த்தவர் மஹாராணி காயத்ரி தேவி.

நெருக்கடி நிலையில் சிறையில் இருந்த மகாராணியின் உடல்நிலை மோசமடைந்தது. வாய் புற்றுநோயால் அவதிப்பட்ட ராஜமாதா காயத்ரி தேவி 2009ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் காலமானார். 

வியாழன், 22 மே, 2025

மே 22 - சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன்ராய்



அது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டம். பாரதம் முழுவதும் ஆட்சி செய்த முகலாய வம்சம் வலிமை இழந்து இருந்தது. பெரும்பலத்தோடு எழுந்து வந்த மராத்தியப் பேரரசு மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானியர்களிடம் தோற்று, நாடு முழுவதும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த காலம் அது. ஆங்கில ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வலுவான அடித்தளம் இட்டிருந்தார். பாரதத்தில் தழைத்திருந்த சனாதன தர்மமும், அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமிய கருத்துக்களும், ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான கிருஸ்துவ சிந்தனைகளும், அதோடு ஆங்கிலப் படிப்பும் என்று ஒரு புதிய காலத்திற்கு பாரதம் தயாராகிக்கொண்டு இருந்த காலம் அது.  பல்வேறு சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பாரதத்தை வழிநடத்தும் முக்கியமானவர்கள் தோன்றிய காலமும் இதுதான். இந்த புகழ்வாய்ந்த முன்னோடிகளில் முக்கியமானவரான ராஜா ராம்மோகன்ராய் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ராதாநகர் கிராமத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் ராம்காந்தோராய் - தாரணிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ராம்மோகன்ராய். முகலாய ஆட்சியாளர்களின் சார்பாக வரிவசூலிக்கும் வேலையில் ராம்காந்தோராய் ஈடுபட்டு இருந்தார். அன்றய வழக்கத்தின்படி ராம்மோகன்ராய் வங்காள மொழியையும் பாரசீக மொழியையும் கற்றுத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக பாட்னா சென்ற ராம்மோகன் அங்கே அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வாரணாசியில் சமிஸ்க்ரித மொழியையும் கற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன் என்று மேலைநாட்டு மொழிகள் பலவற்றையும் அவர் கற்றார். பல மொழி தெரிந்து இருந்ததால், பல்வேறு சமயங்களின் மூலநூல்களை அந்தந்த மொழிகளில் ராம்மோகன் படிக்கத் தொடங்கினார்.

ஆழமான படிப்பு அவரிடம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. தொடர்ந்த விவாதங்கள் அவருக்கும் அவர் தந்தைக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது. வீட்டை விட்டு வெளியேறிய ராம்மோகன்ராய், இமயமலை சாரல்களிலும் பின்னர் திபெத்திலும் அலைந்து திரிந்து பின்னர் சில காலம் கழித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 1803ஆம் ஆண்டு அவர் தந்தை இறந்து விட ராம்மோகன்ராய் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்துறையில் சிறுது காலம் பணியாற்றினார்.

சமுதாயத்தில் நிலவிவந்த பல்வேறு மூடநம்பிக்கைகளை மாற்றும் பணியில் ஆத்மீய சபை என்ற அமைப்பை நிறுவினார். உருவ வழிபாடு, இறுக்கமான ஜாதியமுறை ஆகியவற்றை எதிர்த்தும், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்றும், பலதார மணம், சதி ஆகியவற்றை எதிர்த்தும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ரபீந்த்ரநாத் தாகூரின் தந்தையான தேவேந்த்ரநாத் தாகூரோடு இணைந்து ப்ரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாரதத்தின் கடைசி முகலாய மன்னராக இருந்த பகதூர்ஷா ஜாபரின் தந்தையான இரண்டாம் அக்பர் ராம்மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். முதன்முதலாக பாரத நாட்டின் செல்வதை ஆங்கிலேயர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று பதிவு செய்தது ராஜா ராம்மோகன்ராய்தான்.

மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அளிக்கப்படவேண்டும் என்பதுதான் ராம்மோகன்ராயின் எண்ணமாக இருந்தது. இதற்காக கொல்கத்தா நகரில் அவர் 1817ஆம் ஆண்டே ஹிந்து கல்லூரியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலோ ஹிந்து பள்ளி, ஸ்காட் சர்ச் கல்லூரி, வேதாந்தா கல்லூரி  ஆகிய நிறுவனங்கள் உருவாகவும் ராம்மோகன் உதவியாக இருந்தார். பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

பாரதத்தின் மறுமலர்ச்சி காலத்தை தொடங்கி வைத்த ராஜா ராம்மோகன்ராய் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.   

செவ்வாய், 20 மே, 2025

மே 20 - பிபின் சந்திர பால் நினைவு தினம்


இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த முன்னோடி தலைவராகவும், பால் லால் பால் என்று அழைக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பிபின் சந்திரபால் அவர்களின் நினைவு தினம் இன்று. பஞ்சாபில் லாலா லஜபதி ராய், மஹாராஷ்டிராவில் பால கங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திர பால் ஆகியோர்தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர்கள். தமிழகத்தின் முன்னணி சுதந்திர வீரர்களாக விளங்கிய வ உ சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் இந்த மூவருமே.

பிபின் சந்திர பால் இன்று வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தில் போயல் என்ற கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை ராமச்சந்திர பால் ஒரு பாரசீக மொழி அறிஞர். தாயார் நாராயணி. வைஷ்ணவ பாரம்பரியத்தைக் கொண்ட இவர்கள் குடும்பம் ஓரளவு வசதியானதுதான். அன்றய வங்காளம் என்பது ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் சேவையால் புதிய கருத்துக்களை வரவேற்கும் நிலையில் இருந்தது.

கல்கத்தா மாநிலக் கல்லூரிக்கு படிக்கச் சென்ற பிபினுக்கு ப்ரம்மசமாஜ தொடர்பு உருவாகிறது. கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்ட பிபின் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகவும் பிறகு கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றினார். அப்போது ஒரு விதவையை மணம் புரிந்து கொண்டதால் குடும்பத்தாரோடு அவரது உறவு சீர்குலைகிறது. நாடெங்கிலும் உருவாகிக்கொண்டு இருந்த விடுதலை உணர்ச்சியால் பிபினும் தனது வேலையத் துறந்து முழுநேரமும் நாட்டுக்காக உழைக்கத் தொடங்குகிறார்.

வங்காளம் இரண்டாகப் பிரிவுபடுவதை தீவிரமாக எதிர்த்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார் பிபின். ஸ்வராஜ்யம், சுதேசி, அந்நிய துணிகளை உபயோகிக்காமல் இருப்பது, அன்னியத் துணிகளை எரிப்பது என்று ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். வந்தேமாதரம் வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததால் ஆங்கில அரசு இவரைக் கைது செய்கிறது.
அந்த சிறைத்தண்டனை முடிந்தது பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடியதற்குத்தான் வ உ சி மற்றும் சுப்ரமணிய சிவாவின் மீது தமிழகத்தில் வழக்கு பதிவாகிறது.

அந்நியப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, புதிய தொழில்களை இந்தியர்களே தொடங்கவேண்டும், பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார ரீதியில் நாம் அவர்களை தோற்கடித்தால் சுதந்திரம் விரைவாகக் கிடைக்கும் என்பது பிபின் சந்திர பாலின் முழக்கமாக இருந்தது.
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிபின் சந்திர பால், கீதை மற்றும் உபநிஷதங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் செல்லத் தொடங்கிய போது, அரசியலில் இருந்த விலகிக் கொண்டார்.

வங்காளம் தந்த இந்த வீரர் தனது 73ஆவது வயதில் 1932ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் பாரதத்தாயோடு கலந்தார்.

தன்னலம் கருதாத தியாகிகளின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்.

திங்கள், 19 மே, 2025

மே 19 - நாதுராம் கோட்ஸே பிறந்தநாள்

நாதுராம் கோட்ஸேவின் இயற்பெயர் ராமச்சந்திர கோட்ஸே. ஆங்கிலேய ஆட்சியில் தபால் துறையில் பணியாற்றிவந்த விநாயக கோட்ஸே - லக்ஷ்மி தம்பதியினரின் மகன் இவர். இவருக்கு முன் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், இவர் பெற்றோர் இவரின் சிறுவயதில் பெண் குழந்தையைப் போல வளர்த்தனர். இவரின் சகோதர் பிறந்த பிறகே இவருக்கு ஆண் உடைகளை அணிவித்தனர். ஒரு பெண்ணைப் போல இவருக்கு முக்குத்தி அணிவித்து இருந்ததால் இவரை நாதுராம் ( முக்குத்தி அணிந்த ராமன் ) என்று அழைத்தனர். அந்தப் பெயராலேயே அவர் தனது வாழ்நாள் எல்லாம் அறியப்பட்டார்.

ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா இயக்கங்களோடு தொடர்பில் இருந்த நாதுராம் அக்ரிணி என்ற மராத்திய மொழி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். 1940ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா ஆகிய இயக்கங்கள் மீது அதிருப்தி அடைந்து ஹிந்து ராஷ்ட்ரதள் என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கிடையே ஹைதராபாதில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

நாடு சுதந்திரத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. நாட்டைப் பிரிப்பது என்பது தடுக்கமுடியாத செயலாக ஆகிக்கொண்டு இருந்தது. நேரடி நடவடிக்கை நாள் என்ற பெயரில் கலவரத்திற்கு ஜின்னா நேரடி அழைப்பு விடுத்தார். கல்கத்தா நகரம் பற்றி எரிந்தது. " நாங்கள் போரை விரும்பவில்லை. ஓன்று நாட்டைப் பிரிக்கவும், அல்லது நாடு என்பதே இல்லாமல் ஆக்கிவிடுவோம்" என்று ஜின்னா அறைகூவல் விடுத்தார்.
வங்காளத்தின் அன்றய முதல்வர் சுஹ்ரவாதி காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் வங்காள ஹிந்துக்களுக்கு கருப்பு தினமாக விடிந்தது. ஏழாயிரத்தில் இருந்த பத்தாயிரம் வரை இறந்தவர்கள் எண்ணிக்கை இருக்குமென்று கூறப்படுகிறது. மத ரீதியில் நாட்டைப் பிரிப்பதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை உருவானது.

ரத்தத்தில் கோடு கிழித்து பாரதம் துண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லீம் நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. ஓநாய்களுக்கு நடுவில் எங்களைத் தள்ளிவிட்டீர்கள் என்று கான் அப்துல் கபார் கான் கதறினார். மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். எல்லையோரத்தில் இருந்த ஹிந்துக்கள் தங்கள் பதிலடியை ஆரம்பித்தனர். இரு நாடுகளிலும் உடமைகளை இழந்து, உறவுகளைப் பலி கொடுத்த அகதிகள் குவிந்தார்கள். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பாரத நாட்டைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் சிரில் ஜான் ராட்கிளிப் கிழித்த கோடு பல லட்சக்கணக்கான மக்களின் தலையெழுத்தை புரட்டிப் போட்டது.

நாட்டைத் துண்டாடிய ஆங்கிலேய அரசு பாரதத்தில் இருந்த சமஸ்தானங்களை பாரதநாட்டில் இணைய வேண்டுமா, பாகிஸ்தானோடு இணைய வேண்டுமா அல்லது தனியே சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பதை அந்தந்த மன்னர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு பிச்சைக்காரன் கையில் உள்ள கிழிந்த துணியைப் போல விட்டுச் சென்றது. காஷ்மீர் மன்னர் தனித்து இயங்க முடிவு செய்தார். பாகிஸ்தான் படைகள் மலைவாழ் மக்கள் என்ற போர்வையில் காஷ்மீரத்தைக் கைப்பற்ற சென்றது. காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய சம்மதித்தார். அந்த இணைப்புக்கு காரணமாக இருந்தவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர் அவர்கள்.

நாடு பிரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பில் விகிதாச்சார அடிப்படையில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படவேண்டிய பங்கை அன்றய ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு நிறுத்தி வைத்தது. அந்தப் பணம் பாகிஸ்தானை ஆயுதங்கள் வாங்கவும், பாரதநாட்டுக்கு எதிராகவும் பயன்படும் எனவே அதனைத் தரக்கூடாது என்று அன்றய அரசு முடிவு செய்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும், பணத்தை தரவேண்டும் இல்லை என்றால் வழக்கம் போல சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று காந்தி கூறினார்.

மீண்டும் மீண்டும் ஹிந்து மக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இனியும் அவர் உயிரோடு இருந்தால் ஹிந்து மக்கள் வாழவே முடியாது எனவே அவரைக் கொன்று விட வேண்டியதுதான் என்று கோட்ஸே அப்போதுதான் முடிவெடுக்கிறார்.
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள், தனது வழக்கமான பிரார்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டு இருந்த காந்தியை நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுடுகிறார். நெஞ்சைத் துளைத்த குண்டினால் காந்தி மரணமடைகிறார். சுட்டுவிட்டு தப்பியோட கோட்ஸே முயற்சி செய்யவே இல்லை.

காந்தி கொலை வழக்கு
கோட்ஸே உடன் நாராயண ஆப்தே, திகம்பர் பாட்கே, சங்கர் கிஸ்தயா, விஷ்ணு கார்கே, கோபால் கோட்ஸே, மதன்லால் பாவா, தாத்தாத்ரேய பார்ச்சூரே மற்றும் விநாயக தாமோதர சாவர்க்கர் ஆகியோர் மீது கொலை குற்றம், கொலை செய்ய சதி செய்தது என அரசு வழக்கு தொடர்ந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர் எஸ் எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். நீதிபதி ஆத்மசந்திரன் நாதுராம் கோட்ஸே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர்க்கு மரணதண்டனை விதித்தும், சாவர்க்கரை விடுதலை செய்தும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
கோட்ஸேவைத் தவிர்த்து மற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். சங்கர் கிஸ்தயா மற்றும் தாத்தாத்ரேய பார்ச்சூரேஇருவரை விடுவித்தும் மற்றவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1948ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நீதிபதி ஆத்மசரண் முன்னிலையில் கோட்ஸே தனது வாக்குமூலத்தை வாசித்தார். அதில் அவர் இந்தக் கொலைக்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் காந்தி கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்றும் தான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நேர்ந்தது என்றும் விளக்கினார். இந்த நீண்ட வாக்குமூலத்தை காங்கிரஸ் அரசு யாரும் பிரசுரம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. வரலாற்றின் பக்கங்களில் தான் செய்தது சரிதான் என்றுதான் தீர்ப்பு எழுதப்படும் என்று கோட்ஸே கூறினார். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி அரசு இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பித்தது.

காந்தி கொலைவழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான திரு ஜி டி கோஸ்லா எழுதிய The Murder of Mahathma என்ற நூலில் உள்ள வரிகள் இவை
The audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. The silence was accentuated and made deeper by the sound of an occasional subdued sniff or a muffled cough. It seemed to me that I was taking part in some kind of melodrama or in a scene out of a Hollywood feature film. Once or twice I had interrupted Godse and pointed out the irrelevance of what he was saying, but my colleagues seemed inclined to hear him and the audience most certainly thought that Godse's performance was the only worth-while part of the lengthy proceedings. A writer's curiosity in watching the interplay of impact and response made me abstain from being too conscientious in the matter. Also I said to myself: 'The man is going to die soon. He is past doing any harm. He should be allowed to let off steam for the last time.'
I have, however, no doubt that had the audience of that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse's appeal, they would have brought in a verdict of ' not guilty' by an overwhelming majority.

கோட்ஸே மற்றும் ஆப்தே ஆகியோரின் மரண தண்டனை 1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் அம்பாலா சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டது. கோட்ஸேயின் கடைசி ஆசை தனது அஸ்தி அகண்ட பாரதம் உருவான பின்பு சிந்து நதியில் கரைக்கப்பட்ட வேண்டும் என்பதே.

கோட்ஸே காந்தி கொலைக்கான முழுப் பொறுப்பையும், தண்டனையையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். கொலைக்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அவர் தரப்பு நியாயத்தையும் கேட்பதில் தவறில்லைதானே

மே 19 - முதல் சுதந்திரப் போரின் நாயகன் நானா சாஹேப் பிறந்தநாள்

வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி சிறிது சிறிதாக பாரதம் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் ஆளுமைக்கு கொண்டுவந்தனர். அந்நிய ஆட்சியை வேரோடு அகற்றி சுதந்திரத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் முகமாக உருவான முதல் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கதாநாயகன் நானா சாஹேபின் பிறந்தநாள் இன்று. 


மூன்றாவது மராட்டியப் போரில் ( 1817 - 1818 ) மராட்டியர்களைத் தோற்கடித்து அவர்களிடம் இருந்து பாரத நாட்டின் பெரும்பான்மையான பகுதியின் ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் உருவானார்கள். மராட்டியப் படை முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அடுத்த நாற்பது வருடங்களில் தங்கள் நடவடிக்கைள் மூலம் அதுவரை முக்கிய சக்தியாக விளங்கிய மராட்டியர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். மராட்டியப் பகுதியில் இருந்து பேஷ்வா இரண்டாம் பாஜிராவை கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பிதூர் பகுதியில் வசிக்குமாறு கம்பெனி. .வாரிசு இல்லாத பேஷ்வா நாராயண் பட் - கங்காபாய் தம்பதியரின் மகனான நானா கோவிந்த் டோண்டு பந்த் என்ற இளைஞரை தத்து எடுத்துக்கொண்டார். 

1818-ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலோ-மராட்டா போரின் தொடர்ந்த நடைபெற்றது தான் 1857 போர். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்திருந்தது. பல்வேறு குடிசைத் தொழில்களும், சிறு தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உள்ளாயினர். மறைமுக மதமாற்றம் மிக தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக கிறித்துவ மதத்திற்கு மாறுவதன் மூலம் பெரும் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரப்பப்பட்டது. கோயில் சார்ந்த குடியிருப்புகளும், தொழில்களும் பெரும் வன்முறைக்கு இலக்காயின. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்கள் பலரும் “சுபேதார்” என்ற பணிநிலைக்கு மேல் உயர்த்தப்படவில்லை. வாரிசு இல்லாத மன்னர்களின் அரசை எந்த தர்ம நியாயமும் இல்லாமல் ஆங்கில ஆட்சி அபகரித்துக் கொண்டது. பேஷ்வாவின் வாரிசான நானா சாஹேபை ஆங்கில ஆட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. 

மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2  தனது 62-வது வயதில் 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 ஆட்சியில் அமர ஆங்கிலேய ஆட்சி  ஒப்புதல் கொடுத்தது.

இந்தியாவின் பெரும்பாலான ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே ஆங்கிலேயர் வசம் வந்திருந்தன. பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் பென்ஷன் கொடுத்து விட்டு, ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டனர். ஒரு சிறு பகுதியில் மட்டும் பெயருக்கு வசூல் பண்ணிக்கொள்ளவும், தனது சொந்த பாதுகாப்பிற்கென ஒரு சிறுபடையை வைத்துக் கொள்ளவும் பகதூர் ஷாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த அழுத்தம் பெரும் போராட்டமாக வெடித்தது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் இணைந்து துப்பாக்கி குண்டை உபயோகம் செய்யவேண்டி உள்ளது என்ற வதந்தி இந்த எரிமலையை பற்ற வைத்தது. 

நானா சாஹேபின் சிறு வயது நண்பர்களான தாந்தியா தோபே, ஜான்சியின் மகாராணியாக இருந்த லக்ஷ்மிபாய், அஸிமுல்லா கான் ஆகியோர் இந்த சுதந்திரப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் முன்னெடுத்தனர். முதல் இந்திய சுதந்திரப் போர் 29 மார்ச், 1857 அன்று துவங்கியது. மங்கள் பாண்டேயின் புரட்சியுடன் இது தொடங்கியது. இதை தொடர்ந்த அடுத்த சில மாதங்களில், புரட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அதே வருடம் மே மாதம் 10-ஆம் தேதியன்று தில்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது. 

தில்லியை தொடர்ந்து கான்பூர், லக்னொ, குவாலியர் மற்றும் பாண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதே வருடம் ஜூன் மாதம், 4, 5, மற்றும் 6 ஆகிய தேதிகளில், அசம்கர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. ஜூன் 11 அன்று, ஃபைசாபாத், தைராபாத்/பாராபங்கி, சலன், சுல்தான்பூர் மற்றும் கோண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதே சமயத்தில், மத்திய இந்தியா, ஜான்சி, நெளகான், குருசராய், பண்பூர  மற்றும் ஓராய் ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளுடன் போர் நடந்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 27 ஜூனன்று கான்பூர், ஜூலை 5 லக்னொ ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 

பகதூர் ஷா ஜபரின்(Bahadur Shah Zafar) தலைமையில் 15 ஆகஸ்டு 1857-அன்று ஒரு இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மே 1858 வரை தொடர்ந்து செயல்பட்டது. கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் படையை சுதந்திரப் வீரர்களோடு நானா சாஹேப் முற்றுகை இட்டார். ஆங்கிலத் தளபதி வீலர் நானா சாஹேபிடம் சரணடைந்தார். மீண்டும் ஆங்கிலப் படை கான்பூரைத் தாக்கி அதனை தங்கள் வசம் கொண்டுவந்தனர். 

இந்தப் போரில் இந்தியர்கள் ஈட்டிய வெற்றியில் கிராமங்களுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிப் படைக்குத் தேவையான உணவை இந்த கிராமங்கள் போதுமானளவு அளித்துவந்தன. இதை அறிந்த பிரிட்டிஷார் பல்வேறு கிராமங்களை தரைமட்டமாக்கினர். கிராமத்து மனிதர்களை அவர்கள் பூமியிலிருந்து விரட்டினர். குறிப்பாக தற்கால டாக்கா தொடங்கி பேஷாவர்(பாகிஸ்தான்) வரையிலான நீண்ட “நெடுஞ்சாலை”யில்(Grand Trunk Road) இருந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாயின. இதனால் இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடங்கள் அவர்களின் அதிகார எல்லையில் இருந்து நழுவின. இதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியப் படை மீதான தாக்குதலுக்கு வசதியாக தங்கள் படைகளை இந்த இடங்களில் நிறுவியது. தங்கள் படைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல இந்த பெரும் “நெடுஞ்சாலை” அவர்களுக்கு பெரிதும் உதவியது. தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து பிரிட்டிஷ் படை இந்தியப் படை மீது தாக்குதலை துவங்கியது. இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பிரிட்டிஷ் படை மிக மூர்க்கமான தாக்குதலை நடத்தியது. இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை எதிர்பார்த்திராத இந்தியப் படை பெரும் இழப்பை சந்தித்தது. கொல்கத்தா முதல் கான்பூர் வரை இடங்களை கைப்பற்றியபடி முன்னேறிய பிரிட்டிஷ் படையினரின் மூர்க்கமான தாக்குதலில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 

கான்பூர் ஆங்கிலேயர்கள் வசமானதைத் தொடர்ந்து நானா சாஹேப் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். மீண்டும் ஒருமுறை கான்பூர் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதுவும் வெற்றிகரமாக முடியவில்லை. 

புரட்சிக் களத்தில் ஒவ்வொரு மாவீரரும் வரிசையாக களப்பலி ஆனார்கள்.  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். குமாரசிம்மன் உயிரிழந்தார். மெளல்வி அகமதுஷா நண்பன் என கருதிய ஒரு இந்திய சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டார். பகதூர் ஷா நாடுகடத்தப்பட்டார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார். நேபாளத்திலும் இமயமலைக் காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்த நானா சாஹேப் மரணமடைந்து விட்டதாக ஆங்கில அரசு அறிவித்தது.  ஆனால் 1906 அல்லது 1907ஆம் ஆண்டில் நானா சாஹேப் மஹாகவி பாரதியைச் சந்தித்ததாக பாரதியின் நண்பர்கள் பதிவு செய்துள்ளார்கள் 

ஆனாலும் நானா சாஹேப் போன்ற தியாகிகளின் பலிதானம் வீணாகவில்லை. அவர்கள் காலடியில் இருந்து இன்னும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்கள் தோன்றினார்கள். தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் பாரதம் முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு தொன்னூறு ஆண்டுகள் கழித்து சுதந்திரம் அடைந்தது. இன்று நாம் சுதந்திரமாக இருக்க தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.   

திங்கள், 12 மே, 2025

மே 12 - நாகஸ்வர இசைக்கலைஞர் ஷேக் சின்ன மௌலானா

எந்த நல்ல நிகழ்ச்சி என்றாலும் இசைக்கப்படும் மங்கள வாத்தியம் நாகஸ்வரம். நல்ல உடல்வலுவும், தேர்ந்த மூச்சுப்பயிற்சியும் உடையவர்களால் மட்டுமே இந்த வாத்தியத்தைக் கையாளமுடியும். அப்படியான சவாலான வாத்தியத்தில் இருந்து அற்புதமான இசையை அளித்த கலைஞர் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பிறந்ததினம் இன்று. 



பாரம்பரியமான ஒரு இசைக்குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் பிறந்தவர் மௌலானா ஸாஹிப். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரவடி என்ற சிற்றூர்தான் இவரது பூர்வீகம். தொடக்கத்தில் தனது தந்தையிடம் நாகஸ்வரம் பயின்ற ஷேக் பின்னர் நாச்சியார்கோவிலைச் சார்ந்த ராஜம் - துரைக்கண்ணு சகோதர்களிடம் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பிரபல நாகஸ்வரக் கலைஞர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களை தனது மானசீகக் குருவாகக் கொண்டு தஞ்சாவூர் பாணி என்ற முறையில் விற்பன்னராக விளங்கினார். 

தமிழ், தெலுங்கு, சமிஸ்க்ரிதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஷேக் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கற்றிருந்தார். இவரது சகோதருக்கும் மௌலானா என்பதுதான் பெயர். எனவே இவரை சின்ன மௌலானா என்று மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். ஷேக் என்பது மரியாதைக்குரியவர்களே அழைக்கும் சொல். இரண்டும் சேர்ந்து இவர் ஷேக் சின்ன மௌலானா என்று இசை உலகத்தில் அறியப்பட்டார். 

ரெங்கநாத ஸ்வாமியின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ஷேக், ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலும் சிருங்கேரி சாரதா பீடத்திலும் இவர் ஆஸ்தான இசைக்கலைஞராக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சாரதா நாகஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற அமைப்பை நிறுவி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். திருவையாறு ராஜா இசைக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 

25-வது சுதந்திர தின கொண்டாட்டம், 50-வது சுதந்திர தின கொண்டாட்டம் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இவர் வாசிப்பு இடம்பெற்றது. இலங்கை, அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மங்கல வாத்ய விசாரதா, கலைமாமணி, பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி விருது,  கந்தர்வ கலாநிதி, நாதஸ்வர கலா பிரவீணா, அகில பாரத நாதஸ்வர ஏக சக்ராதிபதி, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இறுதிவரை நாதஸ்வர இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வந்த ஷேக் சின்ன மவுலானா 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 75-வது வயதில் மறைந்தார்.

கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் கலையால் ரசிகர்களின் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.