பாரத ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரத ராணுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 டிசம்பர், 2025

டிசம்பர் 27 - லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா பிறந்ததினம்

இன்றய ஜார்காலாந்து மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உள்ள கும்லா மாவட்டத்தில் ஜாரி கிராமத்தில் வசித்து வந்த ஆதிவாசி வகுப்பைச் சார்ந்த ஜூலியஸ் எக்கா - மரியம் எக்கா தம்பதியரின் மகனாக 1942ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தவர் ஆல்பர்ட் எக்கா. மலையும் காடுகளும் சூழ்ந்த நிலத்தில்  வசித்து வந்த காரணத்தால் பொதுவாகவே ஆதிவாசிகள் வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆல்பர்ட் எக்காவும் அதில் விதிவிலக்காக இல்லை. துணிச்சலும் வீர சாகசங்களிலில் நாட்டமும் இருந்த ஆல்பர்ட் ராணுவத்தில் சேருவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். தனது இருபதாவது வயதில் ஆல்பர்ட் பாரத ராணுவத்தில் இணைந்தார். பின்னர் அவர் Brigade of the Guards - காவலர்களின் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  

Brigade of the Guards படைப்பிரிவானது பாரத நாடு முழுவதிலும் உள்ள எல்லா இனக்குழுக்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு. பொதுவாக பாரத ராணுவத்தில் சீக்கியர்கள் படை, கூர்க்கா படை, மராட்டா படை என்று இனக்குழுவாரியாக வீரர்களை இணைத்து படைப்பிரிவுகளை உருவாக்குவதே வழக்கம். எல்லாப் பகுதி மக்களும் இணைந்து உருவான முதல்படைப்பிரிவு இதுதான். ஜெனரல் கரியப்பா உருவாக்கிய படைப்பிரிவு இது. பஞ்சாப் ராணுவப்பிரிவு, ராஜ்புதான துப்பாக்கிப்படை மற்றும் கையெறி குண்டுகள் வீசும் கிரான்டியர் படை ஆகியவற்றில் இருந்து படைகளை இணைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. 

இதப்படையின் குறிக்கோள் பஹலா ஹமேஷா பஹலா அதாவது முதலில் எப்போதும் முதலில் என்பதாகும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போர், 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர்கள், சீக்கிய தீவிரவாதிகள் வசம் இருந்த பொற்கோவிலை விடுவிக்க நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்பாக அமைதிப்படையாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், அங்கோலா மற்றும் காசா பகுதிகளில் பணியாற்றி உள்ளது. பல்வேறு களங்களில் பணியாற்றி இரண்டு அசோகா சக்ரா, எட்டு பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், எட்டு மஹாவீர் சக்ரா, நான்கு கீர்த்தி சக்ரா, நாற்பத்தி ஆறு வீர் சக்ரா, எழுபத்தி ஏழு சேனா பதக்கங்கள், பத்து அதி விஷிட்ட சேவா பதக்கங்கள், மூன்று யுத்த சேவா பதக்கங்கள், பதினாறு விஷ்ட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு பதக்கங்களை இந்தப் படை பெற்றுள்ளது. அதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இந்தப் படைப் பிரிவுக்கு ஆல்பர்ட் எக்கா பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றுத் தந்துள்ளார்.

வில்லையும் அம்புகளையும் வைத்து வேட்டையாடுவதில் ஆல்பர்ட் எக்காவிற்கு இருந்த தேர்ச்சி அவரை துப்பாக்கி சுடுவதில் திறமையானவராக ஆக்கியது. குறி தவறாமல் சுடும் அவரின் திறமையை அவரது மேலதிகாரிகள் எப்போதும் பாராட்டுவது வழக்கம். ராணுவத்தில் சேர்ந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலகங்களை அடக்குவதில் எக்கா ஈடுபட்டு இருந்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாரத ராணுவம் ஒரே நேரத்தில் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் போரிட வேண்டிய நிலைமை உருவானது. பங்களாதேஷ் நாட்டை விடுவிப்பதில் கங்காசாகர் பகுதியில் நடைபெற்ற போர் முக்கிய பங்கு வகித்தது. அந்தப் பகுதி டாக்கா நகரை இணைக்கும்  முக்கியமான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து அஹாவுரா பகுதியைக் கைப்பற்றினால்தான் டாக்கா நகரில் நுழையமுடியும்.  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்திருந்தது. பாரத படைகள் முன்னேறுவதைத் தடுக்க சாலையெங்கும் கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருந்தது. அங்கேதான் டிசம்பர் 3ஆம் நாள் Brigade of the Guards படையின் 14ஆம் பிரிவு தங்கள் தாக்குதலைத் தொடங்க வேண்டும். கேப்டன் கோலி தலைமையில் படைகள் அங்கே அணி வகுத்து இருந்தது. கடினமான இந்தப் பணியை மேற்கொள்ள துணிச்சலுடனும் உறுதியுடனும் ஆல்பர்ட் எக்கா தயாராகிக்கொண்டு இருந்தார்.  தனது உயிரைப் பணயம் வைத்து தனியொருவனாக எக்கா எதிரிப்படையை அழித்தார். 

பாகிஸ்தான் படைகள் ரயில்வே தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து செல்வதை பாரத ராணுவம் பார்த்தது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து பாரத ராணுவம் தங்கள் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகள் இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் அருகே வரும் நேரத்தில் கடுமையான எதிர் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. பதுங்குகுழியின் மேலே அமைக்கப்பட்டு இருந்த இயந்திரத் துப்பாக்கி மூலம் தொடர்ச்சியான துப்பாக்கிச் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. பாதுகாப்பான இடத்தில இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குவதும், அதோடு நேருக்கு நேராக அவர்களை எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று எக்கா தீர்மானம் செய்தார். பாக்கிஸ்தான் ராணுவம் அமைத்திருந்த சுவரில் ஏறி அவர் பதுங்குகுழியில் வெடிகுண்டுகளை வீசினார். அதோடு இரண்டு வீரர்களை தன் துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருந்த கத்தியால் குத்திக் கொன்றார். எதிர் தாக்குதலில் காயமடைந்த நிலையிலும் எக்கா மற்றொரு பதுங்குகுழியையும் தனது குண்டுவீச்சால் அழித்தார். தனது கடமையை முடித்த நிம்மதியில் எக்கா போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். 

அவரது அச்சமற்ற தன்மை, தனது கடமையின் மீது அவரின் பக்தி ஆகியவை இந்தப் போரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. அவரது வீரத்தைப் பாராட்டும் விதமாக ஆல்பர்ட் எக்காவிற்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. 

திங்கள், 7 ஜூலை, 2025

ஜூலை 7 - கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பலிதான தினம்


போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன்,  அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன்,  எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன். 

எப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பலிதான நாள் இன்று.

1974 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பலம்பூர் என்ற நகரில் வசித்துவந்த கிரிதர் லால் பத்ரா - கமல் பத்ரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் பத்ரா. பள்ளியிறுதி வரை பலம்பூர் நகரில் படித்த விக்ரம் பல்வேறு விளையாட்டுகளிலும், கராத்தே போன்ற பாதுகாப்பு முறைகளிலும் சிறந்து விளங்கினார்.

சண்டிகர் நகரில் உள்ள DAV கல்லூரியில் இளங்கலை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு படிக்க சேர்ந்த விக்ரம் பத்ரா அங்கே தேசிய மாணவர் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அவர் பங்கேற்றார். கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் பணியாற்றுவதே தனது இலக்கு என்று முடிவு செய்தார். சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்த விக்ரம் ராணுவத்தில் இணைவதற்கான தேர்வுகளை எழுதத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று டெஹ்ராடூன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்தார்.

ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விக்ரம், தரைப்படையைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிப் பிரிவில்  லெப்டினண்ட்டாகப்  பணியாற்றத் தொடங்கினார். அப்போது கூடுதல் பயிற்சிக்காக மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார். தீவிரவாதிகள் அதிகமுள்ள காஷ்மீரின் பாராமுல்லா பகுதிகளில் அவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
குளிர்காலத்தைப் பயன்படுத்தி இமயத்தின் சிகரங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. பிடிபட்ட இடங்களை மீட்க இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இந்தியர்களின் வீரமும் தியாகமும் கார்கில் போரில் உலகமெங்கும் தெரிய வந்தது. விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்கள் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அப்படி வந்தவர்களில்  விக்ரம் பத்ராவும் ஒருவர். எப்போது திரும்பி வருவாய் என்று அவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள்.  “போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்."

1999ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் 5140 என்கிற சிகரத்தை மீட்டெடுக்க விக்ரம் பத்ராவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மலை உச்சியில் இருக்கும் எதிரியை மலையின் மீதேறி தாக்கி வெற்றி கொள்வது என்பது சுலபமான வேலை அல்ல. ஆனால் இந்தத் தடைகள் எல்லாம் வீரர்களுக்கு இல்லை. எந்த விதமான உயிரிழப்பும் இல்லாமல் விக்ரம் பத்ரா அந்த சிகரத்தை மீட்டெடுத்தார். " யே தில் மாங்னே மோர்" பெப்சி குளிர்பானத்தின் விளம்பர வரி இது. இன்னும் அதிகமான போர்க்களங்கள், இன்னும் அதிகமான வெற்றிகள், என் மனம் விரும்புவது அதைத்தான் என்று இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு விக்ரம் கூறினார். மிக முக்கியமான வெற்றியை ஈட்டித் தந்ததைப் பாராட்டும் விதமாக விக்ரம் பத்ரா இந்திய ராணுவத்தின் கேப்டன் பதவிக்கு உயர்வு செய்யப்பட்டார்.

17,000 அடி உயரமுள்ள அநேகமாக செங்குத்தான 4875 என்னும் மலை சிகரத்தைக் கைப்பற்ற விக்ரமின் அடுத்த முயற்சி தொடங்கியது. 16,000 அடி உயரத்தில் எதிரிகள், முழுவதும் பனி மூடிய மலை. இரண்டு பக்கமும் குண்டுகள் வெடிக்க விக்ரமின் படை முன்னேறியது. குண்டடி பட்ட இந்தியப் படை வீரரை மீட்க முன்வந்த சுபேதார் ரகுநாத் சிங்கை தடுத்து நிறுத்தி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், நான் செல்கிறேன் என்று முன்னேறி நேருக்கு நேரான சண்டையில் எதிரிகளை கொன்று இமயத்தின் உச்சியில் இந்தியை கொடியை விக்ரம் பறக்கவிட்டார். ஆனால் இந்தக் கைகலப்பில் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த வீரர் மரணமடைந்தார்.

“எந்தக் களத்திலும் நாடு முதலில், எனது சக பணியாளர்கள் அடுத்தது, கடைசியாகத்தான் எனது பாதுகாப்பு" பதவியேற்கும் நேரத்தில் ராணுவ அதிகாரிகள் எடுக்கும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உயிரை கொடுத்து விக்ரம் உண்மையாக்கினார். அவர் கைப்பற்றிய 4875 என்கிற சிகரம் இன்று விக்ரம் பத்ரா சிகரம் என்று அழைக்கப்படுகிறது.
கேப்டன் விக்ரம் பத்ராவின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாரதத்தின் மிக உயரிய ராணுவ விருதான பரம வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. டெஹ்ராடூனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமின் உணவருந்தும் கூடத்திற்கு கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வீரமும், துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட விக்ரம் தனது மனதை தன்னோடு கல்லூரியில் படித்த டிம்பிள் சீமா என்ற பெண்ணிடம் பறிகொடுத்தார். அந்த காதல் கனிந்து திருமணத்தில் முடியவில்லை, அதற்குள்ளாகவே கார்கில் போர் தொடங்கி அதில் விக்ரம் வீரமரணம் அடைந்து விட்டார். ஆனால் இன்று வரை டிம்பிள் திருமணம் செய்து கொள்ளாமல் விக்ரமின் நினைவோடு வாழ்ந்து வருகிறார்.

இன்று நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு விக்ரம் போன்ற வீரர்களும், அந்த வீரர்களின் குடும்பத்தினரும்தான் காரணம் என்பதை நினைவில் கொள்வோம்.

எங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் சூழினும் 
ஒரு துளியும் இடம் கொடோம் ஒரு பிடியும் மண் கொடோம் 
ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும். 

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஜூலை 1 - ஹவில்தார் அப்துல் ஹமீத் பிறந்தநாள்

பாரத நாட்டின்  சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் தன் உயிரையே பலிதானமாகத் தந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் பிறந்தநாள் இன்று.  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளித்து நாடு அப்துல் ஹமீதைக் கௌரவித்தது.


இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூர் மாவட்டத்தின் தமுப்பூர் என்ற கிராமத்தில் தையல் கலைஞராக தொழில் செய்து வந்த மொஹம்மத் உஸ்மான் என்பவரின் மகனாக 1933ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் அப்துல் ஹமீத். இவர் தாயார் பெயர் சகினா பேகம். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் இரண்டு சகோதிரிகளும். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே அப்துல் ஹமீதின் கனவாக இருந்து வந்தது.

1954ஆம் ஆண்டு இறுதியில் ஹமீது பாரத ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். க்ரெண்டியர்ஸ் என்று அழைக்கப்படும் காலாள்படை பிரிவில் ஹமீது பணியாற்றினார். தனது படைப்பிரிவொடு ஆக்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அமிர்ஸ்தர், டெல்லி என்று பல்வேறு இடங்களில் இவர் வேலை பார்த்து வந்தார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போரிலும் ஹமீது கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவம் 30,000 தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து காஷ்மீரில் ஊடுருவியது. வழக்கம் போல அது மக்கள் புரட்சி என்று கூறி அவர்களுக்குத் துணையாக ராணுவம் களமிறங்கியது என்று கூறுவதுதான் அவர்கள் திட்டம்.

பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பு செம்பருந்துப் படை என்று அழைக்கப்படும் காலாள்படையின் நான்காம் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படையின் ஒரு பகுதிதான் க்ரெண்டியர் படை.  1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் இரவில் க்ரெண்டியர் படை பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.  விமானம் மூலமாகவும், பீரங்கிகளைக் கொண்டும் பாரத எல்லையை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. அமெரிக்க நாடு அளித்திருந்த பட்டன் பீரங்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது.

அதுவரை அன்றய நிலையில் உலகத்தின் மிகச் சிறப்பான பீரங்கி என்ற பெருமை பட்டன் பீரங்கிக்கு இருந்தது. ஆனால் தனது ராணுவ ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு இரண்டு நாள்களில் எட்டு பட்டன் பீரங்கிகளை அப்துல் ஹமீது அழித்தொழித்தார். பட்டன் பீரங்கி பற்றிய பிம்பம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. உயர்தர தளவாடங்களால் அல்ல, நாட்டுப் பற்றும் வீரமும் கொண்ட வீரர்களாலதான் போர்கள் வெல்லப்படுகின்றன என்ற உண்மையை ஹவில்தார் அப்துல் ஹமீது உறுதியாக்கினார்.

இந்தப் போர்முனையில் நாட்டைக் காக்கும் பணியில் அப்துல் ஹமீது தனது உயிரை ஆகுதியாக்கினார். நாட்டின் கௌரவத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் உயிரையும் கொடுப்பேன் என்று பாரத ராணுவத்தில் சேரும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தன் இன்னுயிரைக் கொடுத்து அப்துல் ஹமீது உண்மையாக்கினார்.

போர்க்களத்தில் மிகப் பெரும் வீர சாகசத்தை நடத்திக் காட்டி, பலிதானியான அப்துல் ஹமீது அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அவர் நினைவாக அவர் போரிட்ட பஞ்சாபில் உள்ள அசல் உத்தார் கிராமத்தில் செப்டம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்துல் ஹமீதின் பிறப்பிடமான தமுப்பூர் கிராமத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாவீரர் அப்துல் ஹமீது அவர்களின் பிறந்தநாளான இன்று ஒரே இந்தியா தளம் அவர்க்கு புகழஞ்சலி செலுத்துகிறது. 

சனி, 21 ஜூன், 2025

ஜூன் 21 - மேஜர் பத்மநாப ஆச்சார்யா பிறந்ததினம்


அது 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் நாள். ஹைதராபாத் நகரில் உள்ள மேஜர் பத்மநாப ஆச்சாரியாவின் வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அதனை எடுத்தவர் மேஜர் ஆச்சாரியாவின் மனைவி சாருலதா. அவர் அப்போது ஆறு மாதம் கர்ப்பம். சாருலதா தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு, அப்போதும் எடுத்தவர் சாருலதா. மீண்டும் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்தமுறை அழைப்பை எடுத்தவர் மேஜர் பத்மநாப ஆச்சார்யாவின் தந்தை விங் கமாண்டர் ஜெகநாத ஆச்சார்யா. பாரத விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அவர். பாகிஸ்தானோடு நடைபெற்ற 1965 மற்றும் 1971ஆம் நடைபெற்ற போர்களில் பங்குபெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவர் ராணுவ ஆராய்ச்சி சாலையில் பணியாற்றிவந்தார்.

எந்த ராணுவவீரரின் குடும்பத்தினரும் கேட்க விரும்பாத செய்திதான் தொலைபேசி வழியே பகிரப்பட்டது. " உங்கள் மகன் மேஜர் பத்மநாப ஆச்சார்யா தீரத்துடன் போரிட்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை தன் உயிரைக் கொடுத்து அவர் பெற்றுக்கொண்டார்" என்று பத்மநாப ஆச்சார்யாவின் வீரமரணத்தைப் பற்றிய தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் பத்மநாப ஆச்சார்யா அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரின் பலிதானத்தை கௌரவிக்கும் வகையில் பாரதநாடு அவருக்கு ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருதை அளித்தது.

ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த பத்மநாப ஆச்சார்யா இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை ஜகந்நாத் ஆச்சார்யா பாரதநாட்டின் விமானப்படை அதிகாரியாக சேவை செய்தவர்.  1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்த பத்மநாப ஆச்சார்யாவும் தனது தந்தையைப் பின்பற்றி பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையில் தனது சேவையைத் தொடங்கினார்.

1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் டோலோலிங் மலை உச்சியில் இருந்த பகைவர்களை விரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும் பொறுப்பு மேஜர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐயாயிரம் அடி உயரத்தில் இருந்த முகாம் அது. உச்சியில் இருக்கும் பகைவர்களைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவது என்பது நேரடியாக மரணத்தைச் சந்திக்கும் வேலை. ஆனால் அந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது. கடுமையான உயிரிழப்பை தாங்கி ராஜ்புதான துப்பாக்கிப் படை மலையின் உச்சியை அடைந்தது. படையை முன்னிருந்து நடத்திய ஆச்சார்யா எதிரியின் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறாமல், முன்னேறிச் சென்று தனது படையினரோடு எதிரிகளை சர்வநாசம் செய்து தனக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தார். அதற்கான களத்தில் அவர் பணயமாக வைத்தது அவரது உயிரை.

எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் நாட்டின் மரியாதையும், பாதுகாப்பும் முதலில், நான் நடத்திச் செல்லும் படையின் பாதுகாப்பு அடுத்ததாக, எனது பாதுகாப்பு அதற்கும் பின்னால்தான், பாரத ராணுவத்தில் பணியாற்றச் சேரும் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உதிரத்தால், உயிரால் காப்பாற்றிய வீரர் மேஜர் பத்மநாப ஆச்சார்யா.

தன் தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காதவர் மேஜர் ஆச்சார்யாவின் மகள் அபராஜிதா. அவர் தன் தந்தையின் நினைவாக அவரது படங்களும், அவர் எழுதிய கடிதங்களையும் தொகுத்து மேஜர் ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  மேஜர் ஆச்சார்யாவின் மனைவி சாருலதா, போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உளவியல் சவால்களைச் சரிசெய்யும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.

பத்மநாப ஆச்சார்யாவின் இளைய சகோதர் பத்மசாம்ப ஆச்சார்யாவும் பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 

நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக விளங்கும் மேஜர் பத்மநாப ஆச்சார்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.