திங்கள், 13 அக்டோபர், 2025

அக்டோபர் 13 - சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள்

பாரதிய மெய்யியல் ஞானத்தை நம்மவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே மேலைநாட்டவர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்படி கண்டுகொண்டு பாரத நாட்டுக்கும், பாரத பண்பாட்டிற்கும் தன்னலமற்ற சேவை புரிந்த சீமாட்டி, ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசு, மஹாகவி பாரதியின் குரு சகோதரி நிவேதிதையின் மஹாசமாதி தினம் இன்று. 



பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது போலவே, அயர்லாந்து நாட்டையும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருந்தார்கள். தங்கள் நாட்டை அடிமைப்பிடியில் இருந்து மீட்கப் போராடிய போராளிகளின் பரம்பரையில் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். மத போதகராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ரிச்மன்ட் நோபிள் - மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினரின் மகளாக 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர் மார்கெரெட் எலிசபெத் நோபிள். 

தனது கல்லூரிப் படிப்பை முடித்தபின் மார்கெரெட் நோபிள் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். சிறுவயதில் இருந்தே ஏசு கிருஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டவராகவே நோபிள் விளங்கினார். மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதில் இல்லை, மெய்ஞானப் பொருளைக் கண்டடைவது என்ற தெளிவில் இருந்த அவரின் தேடல்களுக்கு கிருஸ்துவத்தில் பதில் கிடைக்கவில்லை. அதனால் புத்தரின் போதனைகளை கற்கத் தொடங்கினார். புத்தரின் வாழ்க்கையால் கவரப்பட்டாலும், அவரது ஆழமான கேள்விகளுக்கு பௌத்த சித்தாந்தத்திலும் அவரால் விடை காண முடியவில்லை. 

1895ஆம் ஆண்டு தோழி ஒருவரின் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்க நோபிள் சென்றார். முதலில் அந்தப் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும் இல்லை என்றுதான் அவர் நினைத்தார். ஸ்வாமியின் கருத்துக்களோடு பல்வேறு இடங்களில் முரண்பட்ட நோபிள் ஸ்வாமியோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினார். மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுவார் என்ற கருத்துக்கு ஏற்ப, நோபிளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்வாமி விவேகானந்தர் விளக்கங்களை அளித்தார். 

பாரத நாட்டின் பெண்களுக்கு சரியான கல்வியை மார்கரெட் நோபிளால் வடிவமைத்து அளிக்க முடியும் என்று எண்ணிய ஸ்வாமி விவேகானந்தர், அவரை பாரத நாட்டிற்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று நோபிள் பாரதம் வந்தார். 1898ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதம் வந்த எலிசபெத் நோபிளுக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சன்யாசம் அளித்து அவருக்கு நிவேதிதை என்ற பெயரையும் விவேகானந்தர் சூட்டினார். 

1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்...

``இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.''

அந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்... ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை  தெரிந்துகொண்டார்.

மெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

``உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.

ஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.''அரங்கத்தில் ஒலித்த கரவொலி,  நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.

நிவேதிதை, முதலில் கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். ஒரு தாய் கற்றால், அந்தக் குடும்பமே பயனடை யும் என்ற எண்ணத்தில்  தாய்மார்களுக்கு கல்வி வழங்கினார். சித்திரம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் போன்ற நுண்கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையையும், தன்னுடைய இங்கிலாந்து நண்பர்கள் கொடுத்த நன்கொடைகளையும் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினார்.

கல்விப்பணி மட்டுமல்லாது, மருத்துவ சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருமுறை கல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த மக்களோடு மக்களாக நின்று  உதவிகள் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை 'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார். கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த 'நல்வாழ்த்து' என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்தார்.  

"தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்  

ஆய தென்றலின் அற்புத இனிமையும் 

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும் 

சீரிய எழிலும் திகழும் வலிமையும் 

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில் 

உனதென ஆகி ஓங்குக மென்மேல்! 

எதிர்காலத்தில் இந்திய மகனின் 

சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய் 

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!" 


நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் எப்போதும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட பின் அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.

இந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் 'எங்கே உங்கள் மனைவி?' என்று கேட்டார். அவர் 'எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.

"ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.

1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.

அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார். வங்காளத்தின் அனுசீலன் சமிதி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.

1902 டிசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.

உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார். 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பநிலை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார். அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு 'என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது' என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் சமாதியானார் சகோதரி நிவேதிதா.

இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது! எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம். 

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

அக்டோபர் 12 - ராம்மனோகர் லோகியா நினைவுதினம்

பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில், விடுதலையான நாட்டில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்துவது, வறுமையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது பற்றிய விவாதங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தன. வெளிநாடுகளில் படித்து பட்டம் வாங்கிய, ஆனால் நாட்டு மக்களின் நலனைப் பற்றி மட்டுமே யோசித்த பல தலைவர்கள் இருந்தார்கள். அதில் முக்கியமானவர் ராம்மனோகர் லோகியா. சோசலிச சித்தாந்தத்தை நமது நாட்டுக்கு ஏற்றதுபோல மாற்றி அமைத்துத் தந்த தன்னலமற்ற அந்தத் தலைவரின் நினைவுதினம் இன்று.



இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அக்பர்பூர் நகரில் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் மார்வாரி சமூகத்தைச் சார்ந்த ஹிராலால் - சாந்தா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்த லோகியாவை அவரது தந்தையே வளர்த்து வந்தார். மும்பையிலும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்று அதனைத் தொடர்ந்து பொருளாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஜெர்மனி சென்றார். அங்கே ஆங்கிலேயர்கள் பாரத நாட்டில் விதித்த உப்பின் மீதான வரியைப் பற்றிய ஆராய்ச்சி அவருக்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.

தாயகம் திரும்பிய லோகியா காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஏற்கனவே அவருக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரோடு நேரடித் தொடர்பு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே சோசலிச காங்கிரஸ் கட்சி என்ற பிரிவை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பத்திரிகையை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்தி வந்தார். 1936ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வெளியுறவுத் துறையின் செயலாளராக ஜவஹர்லால் நேருவால் நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஆறுதான். விடுதலை பெற்ற நாட்டின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய கொள்கை விளக்கத்தை அவர் அப்போது தயாரித்தார்.

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது, போரில் இங்கிலாந்து நாட்டிற்கு உதவாமல், நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக லோகியா கைது செய்யப்பட்டார். மாணவர்களின் எதிர்பால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் இன்றய சத்தியாகிரகம் என்ற கட்டுரையை எழுதி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினார் என்று மீண்டும் கைது செய்யப்பட்டார். 1941ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது லோகியாவும் விடுதலையானார்.

1941ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். லோகியா தலைமறைவானார். உஷா மேத்தா என்பவரோடு இணைந்து மூன்று மாதங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து ரகசிய வானொலியை நடத்தியும், அருணா ஆசப் அலியோடு இணைந்து காங்கிரஸின் இன்குலாப் என்ற மாதாந்திரப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். இதெல்லாம் அவர் தலைமறைவாக இருந்தபோது செய்தவை.

ஆங்கில அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவர் நேபாளத்தில் சில காலம் வாழ்ந்துவந்தார். மீண்டும் பாரதம் திரும்பிய லோஹியா ஆங்கில அரசால் சிறை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைக்கு ஆளான லோகியாவின் உடல்நிலை சீர்கெட்டது. உலகப் போர் முடியும் தருவாயில் லோகியா விடுதலையானார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிரஜா சோசலிச கட்சியை உருவாக்கினார். ஒரே நேரத்தில் முதலாளிகளின் ஏகாதிபத்யத்தையும் தொழிலார்களின் சர்வாதிகாரத்தியும் விலக்கி, நமது சூழலுக்கு ஏற்ற சோசலிச சித்தாந்தத்தை உருவாக்கி அதனை பரிந்துரைத்தார்.

நாட்டின் பொது மொழியாக ஆங்கிலம் அல்ல ஹிந்தியே இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. ஆங்கிலம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆங்கில மொழி நமது அசலான சிந்தனைகளை தடை செய்கிறது என்பது அவர் எண்ணம். அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் வளர்ச்சி அடைய ஆங்கிலம் பெரும் தடையாக இருக்கும் என்றார். மாநிலங்கள் தங்கள் மொழிகளில் மத்திய அரசோடு தகவல் பரிமாற்றம் செய்யும், மத்திய அரசு அந்தந்த மாநிலங்களோடு அவர்கள் மொழியில் பதில் தரவேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என்பது அவர் சிந்தனை.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் பிரச்சனையில் கேரளாவில் இருந்த பிரஜா சோசலிச அரசு பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலியானார்கள். இதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலகவேண்டும் என்று லோகியா கூறினார். கட்சி அதனை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து லோகியா கட்சியில் இருந்து விலகினார்.

மகளிர் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் முன்னேற்றம், ஒற்றை கட்சி ஆட்சி எதிர்ப்பு என்று லோகியாவின் பணி பல்வேறு தளங்களில் இருந்தது. பல்லாண்டுகள் நாட்டுக்காக பணியாற்றி இருக்கவேண்டிய ராம் மனோகர் லோகியா தனது 57ஆம் வயதில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் காலமானார்.

லோகியாவின் சிந்தனைகளும் கட்டுரைகளும் ஒன்பது தொகுதிகளாக வெளியாகி உள்ளன. 

சனி, 11 அக்டோபர், 2025

அக்டோபர் 11 - லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் பிறந்ததினம்

லோக்நாயக் என்றால் மக்கள் தலைவர் என்று பொருள். இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் பிஹார் மாநிலத்தில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், நெருக்கடியான நேரத்தில் பாரத நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றியவருமாகிய ஜெயப்ரகாஷ் நாராயணன்.



விடுதலைப் போராட்ட வீரர், சோசலிஸ கருத்துவாக்கத்தில் அமைந்த அரசியல் கட்சிகளின் ஆரம்பப்புள்ளி, சுதந்திரத்திற்குப் பிறகு எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர், ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கத்தின் பெரும் தலைவர், இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்த அனைவருக்கும் தளபதியாக இருந்து வழிகாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் திரு ஜெபி அவர்கள்.

ஜெபியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு, சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, பிறகு 1970 முதல் ஊழலுக்கு எதிராக, நெருக்கடி நிலையை எதிர்த்த அவரது போராட்டம் என்று பார்க்கலாம்.

ஹர்ஸ்தயாள் - புல்ராணி தேவி தம்பதியரின் மகனாக 1902ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் பிறந்த ஜெபி, பீஹாரிலும் பின்னர் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் பயின்றவர். அப்போதுதான் அவருக்கு கம்யூனிச / சோசலிச சித்தாந்தத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரஷ்ய நாட்டில் முனைவர் பட்டம் படிக்கச் வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு 1929ஆம் ஆண்டு அவர் பாரதம் திரும்பினார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெபி விரைவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவாக இருந்து போராட்டத்தை வழிநடத்தினார். கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெபி அங்கே ராம் மனோகர் லோஹியா, மினு மஸானி, அசோக் மேத்தா, அச்சுத பட்வர்தன் ஆகியோரோடு தோழமை பூண்டார். அவர்களுக்கிடையே நடந்த தொடர் விவாதங்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ கட்சி என்ற அமைப்பை உருவாக்குவதில் அடித்தளம் ஆனது. ஆச்சாரிய நரேந்திர தேவ் தலைவராகவும் ஜெ பி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

நாடு விடுதலை அடைந்த உடன், நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியாக பிரஜா சோஷலிச கட்சி விளங்கியது. நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாத ஜெ பி, ஆச்சாரிய வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பூதான இயக்கம் என்ற பெயரில் நாடெங்கும் பணக்காரர்களிடம் உள்ள நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைகளுக்கு அளிக்கும் பெரும்பணியும், சம்பல் பள்ளத்தாக்கில் வசித்து வந்த கொள்ளைக்காரர்களை திருத்தி அவர்களை அரசாங்கத்திடம் சரணடைய வைக்கும் பணியையும் வினோபா பாவே நடத்தி வந்தார். இந்த சேவைகளில் வினோபா பாவேவிற்கு உறுதுணையாக ஜெ பி விளங்கினார்.

சுதந்திரம் அடைந்து இருபதே ஆண்டுகளில் லட்சிய கனவுகள் கலைந்து, பதவியைத் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் வலுப்படத் தொடங்கியது. அதனைத் தடுத்து நாட்டை நல்வழிக்கு திருப்பும் பொதுமக்களின் மனசாட்சியாக மீண்டும் ஜெ பி அரசியலுக்கு வரவேண்டிய நேரமும் வந்தது.

அன்றய பிஹார் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. தங்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்க மாணவர்கள் ஜெ பியை அழைத்தனர். இன்று தேசத்தின் அரசியலில் முக்கியமான தலைவர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அன்று ஜெபியின் பின் அணிவகுத்த இளம் தலைவர்கள்.

அன்று பிரதமராக இருந்த இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெ பியும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் வைக்கப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திராவை எதிர்க்க எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும்கூட்டணியை உருவாக்க ஜெ பி முயற்சி எடுத்தார். ஏறத்தாழ பதினெட்டு மாதங்கள் நாடு தனது ஜனநாயக உரிமையை இழந்து இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது.

சுதந்திரம் அடைந்த நேரத்திலும் சரி, நெருக்கடி நிலையை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சமயத்திலும் சரி, ஜெ பி நினைத்து இருந்தால் எந்த பதவியை வேண்டுமானாலும் அடைந்து இருக்கலாம். பதவியை நாடாத உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் நலனைப் பற்றியே சிந்தித்த தவயோகி, நாட்டு நலனே உயிர்மூச்சாகக் கொண்ட லோகநாயகர் 1979ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் காலமானார். நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதை அவருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கி நாடு அவருக்கு தனது மரியாதையைச் செலுத்தியது.

சந்தேகத்தின் மேகங்கள் சூழும் போது, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களின் வாழ்க்கையே நமது வழிகாட்டியாக விளங்கும். 

வெள்ளி, 10 அக்டோபர், 2025

அக்டோபர் 10 - மால்குடி நகரின் நாயகன் ஆர் கே நாராயணன் பிறந்ததினம்

ஏற்கனவே உள்ள ஒரு நகரத்தை சுற்றி கதைக்களத்தை உருவாக்கி புதினங்களை உருவாகும் படைப்பாளிகள் உண்டு, கற்பனையில் ஒரு ஊரையே உருவாக்கி, அதில் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களை நடமாடவிடும் படைப்பாளிகளும் உண்டு. இரண்டாம் வகையில் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன்.



மால்குடி என்ற  சிறுகிராமம், அதன் ஒரு புறம் சரயு நதி, மறுபுறம் மெம்பி என்ற காடு, நகரின் வெளியில் ஒரு சிறு புகைவண்டி நிலையம், வெவ்வேறு சாலைகள், பல்வேறு சிறிய தொழில்முனைவர்கள், இவர்களுக்கு நடுவே ஸ்வாமிநாதன் என்ற சிறுவன், மணி, ராஜம், சோமு, சங்கர் என்று அவனின் நண்பர்கள், அவர்களைச் சுற்றிய கதை என்று உருவாக்கி படிப்பவர்களின் கண் முன்னே நடமாட்டமிட்டார் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் நாராயணன் சுருக்கமாக ஆர் கே நாராயணன்.

1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிவந்த திரு கிருஷ்ணஸ்வாமி என்பவரின் மகனாகப் பிறந்தவர் நாராயணன். எட்டு குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் இவர், இவரது சகோதர் புகழ்பெற்ற கோட்டோவிய கலைஞர் திரு ஆர் கே லக்ஷ்மணன். தந்தை தொடர்ச்சியாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றும் வேலையில் இருந்ததால் நாராயணனின் கல்வி சென்னையில் நடைபெற்றது. பாட்டியின் அரவணைப்பில் புரசைவாக்கத்தில் உள்ள லூர்தெரன் பள்ளியிலும் பின்னர் சென்னை கிருஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும் நாராயணன் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே நூலகங்களில் உள்ள பல்வேறு நூல்களை அவர் படித்து முடித்துவிட்டார். அதன் பின்னர் அவர் தந்தை வேலை பார்த்துவந்த மைசூர் நகரில் தனது படிப்பை தொடர்ந்தார்.

வருங்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய நாராயணன் கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் முறை வெற்றி பெறவில்லை, இளங்கலை படிப்பை ஓராண்டு கூடுதலாக எடுத்துக் கொண்டு நான்கு வருடங்களில் முடித்தார் என்பது விந்தையான செய்திதான். மிகக் குறிகிய காலம் ஆசிரியாகப் பணியாற்றி, பின்னர் முழுநேரமும் எழுத்தாளாகவே இருப்பது என்ற முடிவை அவர் எடுத்தார். சகோதர்களும் உறவினர்களும் ஆதரித்தால் ஆரம்பகாலத்தில் அவரால் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழமுடிந்தது.

1930ஆம் ஆண்டு ஸ்வாமியும் நண்பர்களும் என்ற புதினத்தை எழுதினார். மால்குடி என்ற கற்பனை ஊரை உருவாக்கி, அதன் பின்புலத்தின் நடைபெறும் கதையாக இதனை அவர் அமைத்தார். பாரதத்தில் பல பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த புதினத்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிரஹாம் க்ரீன் படிக்க நேர்ந்தது. அவரின் முயற்சியினால் இந்தப் புத்தகம் வெளியானது. ஏறத்தாழ ஸ்வாமிநாதன் என்ற கதாபாத்திரம் நாராயணனேதான். அவரது சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகளைத்தான் மெருகேற்றி அவர் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து Bachelor of Arts, The Dark Room என்ற புதினங்களையும் அவர் எழுதினார்.

வருடங்கள் செல்லச் செல்ல மால்குடியும் வளர்ந்தது, அநேகமாக அவரது கதைகளின் களமாக மால்குடியே அமைந்தது. சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை பற்றி, பள்ளிகளில் உள்ள தண்டனைகள் பற்றி, சுதந்திரப் போராட்டம் பற்றி, சமுதாயத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி என்று வாழ்க்கையை தொட்டுச் செல்லும் பல்வேறு விஷயங்கள் பற்றி மால்குடியை களமாக வைத்து நாராயணன் பல்வேறு புதினங்களை எழுதினார். பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் படிக்கத் தொடங்கும் போது தவற விடக் கூடாத புத்தகங்களாக நாராயணனின் புத்தகங்களைச் சொல்லலாம்.

1933ஆம் ஆண்டு கோயம்பத்தூர் நகரில் வசித்துவந்த தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற நாராயணன், அங்கே அருகில் வசித்து வந்த ராஜம் என்ற பதினைந்து வயது பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார். பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ராஜம் 1939ஆம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். அதன் பிறகு ஆர் கே நாராயணன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்துவந்தார்.

இவரது படைப்பாற்றலைப் பாராட்டும் விதமாக பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் பட்டங்களை வழங்கியது. The Financial Expert என்ற புதினம் இவருக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுக் கொடுத்தது. அரசு இவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. நாட்டின் மேலவையில் பள்ளி மாணவர்கள் பெரும் சுமையை புத்தகம் என்ற பெயரில் சுமக்க வேண்டி உள்ளது என்ற கவலையை நாராயணன் வெளிப்படுத்தினார்.

ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியத்தில் இயங்கிக்கொண்டு இருந்த திரு நாராயணன் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் காலமானார்.

மால்குடியும், ஸ்வாமிநாதனும் இருக்கும்வரை நாராயணனும் இருப்பார் என்பதில் ஐயமில்லை. 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

அக்டோபர் 7 - துர்காவதி தேவி பிறந்ததினம்

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் அவரது குடும்பமும் அங்கிருந்து ஹௌரா நகருக்குச் சென்றனர். சில காலம் கழித்து அந்தப் பெண்மணி மட்டும் தன் மகனோடு லாகூர் திரும்பினார்.

சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது, அப்படித்தானே. ஆனால் பயணம் செய்த அந்த கனவான் பகத்சிங், அவரது வேலையாள் ராஜகுரு. காவல் அதிகாரி சாண்ட்ராஸ் படுகொலையை அடுத்து ஆங்கில அரசு வலைவீசித் தேடிக்கொண்டு இருந்த குற்றவாளிகள் அவர்கள். நாம்  அறிந்த பகத்சிங் திருமணம் ஆகாதவர். அப்படியானால் அந்தப் பெண்மணி யார் ? அவருக்கும் பகத்சிங்குக்கும் என்ன தொடர்பு ?


எட்டும் அறிவினில் மட்டுமல்ல வீரத்திலும், தியாகத்திலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய பாரத நாரிமணிகளின் வரிசையில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்பவர் அந்தப் பெண்மணி. அவர் பெயர் துர்காவதி தேவி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  துர்கா பாபி அதாவது அண்ணி துர்காதேவி. இந்த நாட்டில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் மிக முக்கியமானவர் துர்காவதி தேவி. மிகப் பெரிய செயல்களைச் செய்து விட்டு, எந்த பலனையும், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வாழ்ந்து மறைந்த மகோன்னதமான பெண்மணி அவர்.

1907ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் துர்காதேவி அவர்கள். சிறுவயதிலேயே தனது தாயை இழந்து அதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். அன்றய காலசூழ்நிலையில் தனது பதினொன்றாம் வயதில் லாகூர் நகரைச் சார்ந்த பகவதி சரண் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பகவதி சரண் வோராவும் மிகப் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், புரட்சியாளர். நவ்ஜவான் பாரத் சபா மற்றும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன் என்ற புரட்சியாளர்கள் குழுவின் செயலாளராக இருந்து, அந்த புரட்சிப் பாதையின் கொள்கை விளக்க பிரகடனத்தை உருவாக்கியவர் திரு வோரா அவர்கள்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்று வோராவின் போராட்டத்திற்கு துர்காதேவி உறுதுணையாக இருந்தார். புரட்சியாளர் கர்டார் சிங்கின் பதினோராவது பலிதான தினத்தை லாகூர் நகரில் கொண்டாடியது, லாகூர் சிறையில் அறுபத்திமூன்று நாட்கள் உண்னாவிரதம் இருந்து உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸின் இறுதி ஊர்வலத்தை லாகூர் நகரில் இருந்து கொல்கத்தா நகர் வரை தலைமையேற்று நடத்தியது என்று துர்காதேவி பல்வேறு போராட்ட களங்களில் செயல்பட்டார்.

சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திய லாலா லஜபதி ராயை ஆங்கில காவலர்கள் தாக்கினர். படுகாயமுற்ற லாலா லஜபதி ராய் சிலநாட்களில் உயிர் துறந்தார். தலைவரின் மரணத்திற்கு பதிலடியாக காவல் அதிகாரி சாண்ட்ரஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நிகழ்த்தியது ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன. இதைச் செய்தது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்.

இருபத்தி ஏழு வயதான சீக்கிய இளைஞனை ஆங்கில அரசு தேட ஆரம்பித்தது. லாகூரில் இருந்து தப்பித்து கொல்கொத்தா செல்ல புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கில அரசிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்க ? அப்போதுதான் உதவிக்கு துர்காதேவி வந்தார். பகத்சிங்கின் மனைவியாக சென்றது துர்காதேவிதான். அன்றய காலகட்டத்தில் ( ஏன் இன்றும் கூட )  இன்னொரு ஆண்மகனின் மனைவியாக நடிக்க எந்த அளவு தியாக சிந்தனை இருக்கவேண்டும் என்பதை இன்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பாக புரட்சியாளர்களைத் தப்ப வைத்துவிட்டு அதன் பின்னர் துர்காதேவி மீண்டும் லாகூர் திரும்பினார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்கிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடிகுண்டு வீச முடிவு செய்தனர். படுகேஸ்வர்தத்துடன் இந்த சாகசத்தை மேற்கொள்ள பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காது கேட்காத அரசுக்கு எங்கள் பேச்சு புரிவதில்லை, எனவே சத்தமாக பேசுவோம் என்று புரட்சியார்கள் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, துண்டுப் பிரசுரங்களை விட்டெறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி படுகேஸ்வர் தத்தும் பகத்சிங்கும் கைதானார்கள்.

சர்வ நிச்சயமாக அவர்கள் தூக்கிலிப்படுவார்கள் என்பது புரட்சியாளர்களுக்குத் தெரியும். இதற்கு எதிர்வினையாக வைஸ்ராய் இர்வின் பயணம் செய்யும் ரயில் வண்டியை வெடிகுண்டு வைத்துக் கவிழ்க்க துர்காதேவியின் கணவர் பகவதி சரண் வோரா முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இர்வின் உயிர் தப்பினார். இர்வின் உயிர் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து புரட்சியாளர்களைக் கண்டித்து காந்தி வெடிகுண்டுகளை வழிபடுதல் ( The Cult of Bomb ) என்ற கட்டுரையை எழுதினார்.

இந்த கட்டுரைக்கு பதிலாக வெடிகுண்டுகளின் தத்துவம் ( Philosophy of Bomb ) என்ற கட்டுரையை பகவதி சரண்வோரா எழுதினார். " பாரதத்திற்கு மீது ஆங்கிலேய அரசு இழைக்காத குற்றம் என்பது எதுவுமே இல்லை, திட்டமிட்ட முறையில் ஆங்கில அரசு பாரதத்தை ஓட்டாண்டியாக மாற்றி உள்ளது. ஒரு இனமாகவும் பொது மக்களாகவும் இந்த அநீதியை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. சர்வ நிச்சயமாக நாங்கள் பழி தீர்ப்போம். சர்வாதிகாரத்திற்கு எதிராக பழி தீர்ப்பது என்பது மக்களின் கடமை. கோழைகள் பின்வாங்கி சமாதானத்தையும் அமைதியையும் யாசிக்கட்டும். ஆனால் நாங்கள் எங்களுக்கு கருணையே அல்லது மன்னிப்போ தேவை இல்லை, அதை நாங்கள் கேட்கவும் இல்லை. நாங்கள் நடத்துவது போர் - அதற்கு வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் முடிவாக இருக்கும்" என்று அவர் முழங்கினார்.

சிறையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிக்க சிறை வளாகத்தில் வெடிகுண்டு வீச வோரா முடிவு செய்தார். ஆனால் குண்டு தயாரிக்கும் முயற்சியில் துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து வோரா மரணமடைந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருக்கக் கூட துர்காதேவிக்கு நேரம் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலானார். கையெழுத்து இயக்கம், வழக்கு நடத்த பணம் வசூலித்தல், காந்தி உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுதல் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துர்காதேவி ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் காவல்துறைக்கு முழுவதும் தெரியாததால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னைக்கு வந்த துர்காதேவி சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொண்டு காஜியாபாத்திலும் பின்னர் லக்னோ நகரிலும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு சாதாரண பெண்மணி போல மற்றவர்கள் அறியாமல் வாழ்ந்து தனது 92ஆம் வயதில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துர்காதேவி பாரதமாதாவின் காலடியில் கலந்தார்.

புகழ்பெறவேண்டும் என்றோ மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ தியாகிகள் நாட்டுக்காக உழைப்பதில்லை. அது ஸ்வதர்மம் என்று எண்ணியே அவர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப் போற்றுவதும், அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதும் நம்மையும் அவர்கள் நடந்த பாதையில் நடக்கும் சக்தியைக் கொடுக்கும்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற தியாகிகள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். 

அக்டோபர் 7 - குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம்

இன்றிருக்கும் வகையில் சீக்கிய மதத்தை வடிவமைத்தவரும், சீக்கிய இனத்தவரை போராடும் குணம்கொண்ட குழுவாக மாற்றியவரும், மாவீரரும், கவிஞரும், தத்துவ ஞானியும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம் இன்று.



சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் ஒரே மகன் குரு கோவிந்தசிங். 1666ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் இன்றய பாட்னா நகரில் பிறந்தவர் கோவிந்தசிங் அவர்கள். அவரது இயற்பெயர் கோவிந்த் ராய். முதல் நாலாண்டுகளை பாட்னா நகரில் கழித்த கோவிந்தராய் அதன் பிறகு பஞ்சாபிற்கும் பின் இமயமலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அங்கேதான் அவரது படிப்பு ஆரம்பமானது.

1675ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் குரு தேஜ்பகதூரை காண வந்தனர். பண்டிதர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றினால், அதனைத் தொடர்ந்து மற்ற மக்களை எளிதாக மதம் மாற்றிவிட முடியும் என்று எண்ணிய முகலாய அதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் பயமுறுத்துதலில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் குரு தேஜ்பகதூரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து குரு தேஜ்பகதூரை மதம் மாற்ற முடிந்தால், தாங்களும் அதன் பிறகு மாறுகிறோம் என்று அவர்களை அவுரங்கசீப்பிடம் பதில் அளிக்க குரு தேஜ்பகதூர் அறிவுரை கூறினார்.

ஹிந்துஸ்தானத்தின் பாதுஷா அவங்கசீப்பை நேரில் வந்து காணுமாறு தேஜ்பகதூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூர் 1675ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீக்கியர்களின் பத்தாவது குருவாக கோவிந்த் ராய் நியமிக்கப்பட்டார்.

1699 ஆம் ஆண்டு பைசாகி திருவிழாவின்போது சட்லெஜ் நதிக்கரையில் அமைத்துள்ள அனந்தபூர் நகருக்கு வருமாறு சீக்கியர்களுக்கு குரு கோவிந்த்ராய் அழைப்பு விடுத்தார். நாடெங்கெங்கும் இருந்து சீக்கியர்கள் குழுமிய அந்த கூட்டத்தில் தர்மத்தைக் காப்பாற்ற அங்கேயே பலிதானமாக யார் தயாராக இருக்கிறார் என்று குரு வினவ, ஒருவர் முன்வந்தார். அவரை அழைத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குள் சென்ற குரு சிறிது நேரத்தில் ரத்தம் சொட்டும் வாளோடு வெளியே வந்தார். " இன்னும் பலிதானிகள் தேவை" இடி முழுக்கம் என எழுந்தது குருவின் குரல்.
அடுத்தவர் வந்தார், குருவோடு கூடாரத்திற்குள் சென்றார், குரு மீண்டும் வெளியே வந்து தர்மம் காக்கும் போரில் இன்னும் ஆள் தேவை என்று கூற அடுத்தது வீரர்கள் வந்தனர். மொத்தம் ஐந்து பேர் தங்களைப் பலியிட முன்வந்தனர். சிறிது நேரத்தில் அந்த ஐவரோடும் வெளியே தோன்றிய குரு அப்போதுதான் சீக்கிய மார்க்கத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார்.

பாய் தயாசிங், பாய் தரம்சிங், பாய் ஹிம்மத்சிங், பாய் மோகும்சிங், பாய் சாஹிப்சிங் என்று அறியப்படும் அந்த ஐவரும்தான் கல்சாவின் முதல் வித்தாக அமைந்தனர். இரும்பு கொள்கலத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரை தனது இருபுறமும் கூர்மையான குத்துவாளால் கலக்கி புனித குரு கிரந்தசாஹிப் மந்திரங்கள் ஓத அந்த ஐவருக்கும் அளித்து அவர்களை முறைப்படி சீக்கியர்களாக குரு கோவிந்தசிங் அறிவித்தார். பிறகு அவர்கள் கல்சாவின் புது உறுப்பினராக குருவை ஏற்றுக்கொண்டனர். சீக்கியம் என்ற மதம் முழுமையாக உருவான தினம் அதுதான். கேஷ் ( வெட்டப்படாத தலைமுடி ) கங்கா ( மரத்திலான ஆன சீப்பு ) காரா ( இரும்பினால் ஆனா கைவளை ) கிர்பான் ( கத்தி ) காசீரா ( அரையாடை ) ஆகிய ஐந்தும் சீக்கியர்களின் அடையாளமாகியது. புகையிலை பயன்படுத்துவது, ஹலால் முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை உண்பது ஆகியவை தடை செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் கொடுமைகளில் இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றுவது ஒவ்வொரு சீக்கியர்களின் கடமையாக அறிவிக்கப்பட்டது. குரு கோவிந்த்சிங்கின் காலத்திற்குப் பிறகு நிரந்தர குருவாக குரு கிரந்த சாஹிபே இருக்கும் என்றும், இனி சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் சிங் என்ற அடைமொழியை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று குரு ஆணையிட்டார்.

ஏற்கனவே சீர்கெட்டிருந்த மொகலாயர்களோடான உறவு குரு தேஜ்பகதூரின் பலிதானத்திற்குப் பிறகு இன்னும் விரிவடைந்தது. குருவின் படைகளும் மொகலாய படைகளும் பல்வேறு இடங்களில் மோதின. ஹிந்து தர்மத்தில் கிளைத்தெழுந்த சீக்கிய குரு தர்ம யுத்தத்தையே எப்போதும் மேற்கொண்டார். தேவையில்லாமல் போரில் இறங்குவதோ, பொதுமக்களை துன்புறுத்துவதோ அல்லது எந்த ஒரு வழிபாட்டுத்தளத்தை அழிப்பதோ ஒருபோதும் சீக்கியர்களால் முன்னெடுக்கப்படவில்லை.

குருவின் தாயாரும் அவரின் இரு சிறு பிள்ளைகளும் முகலாய தளபதி வாசிம்கான் என்பவனால் சிறை பிடிக்கப்பட்டனர். எட்டு வயதும் ஐந்து வயதான குழந்தைகளை சித்தரவதை செய்து முகலாயர்கள் கொண்டார்கள். இதனை கேட்டு மனமுடைந்து குருவின் தாயாரும் மரணமைடைந்தார்கள். பதினேழு மற்றும் பதிமூன்று வயதான மற்ற இரண்டு பிள்ளைகளும் போர்க்களத்தில் பலியானார்கள்.

1707ஆம் ஆண்டு அவுரங்கசீப் மரணமடைய, முகலாயப் பேரரசில் வாரீசுப் போர் உருவானது. கோதாவரி நதி கரையில் முகாமிட்டிருந்த குருவை கொலை செய்ய முகலாயத் தளபதி வாசிம்கான் இரண்டு ஆப்கானியர்களை அனுப்பினான். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் குருவின் கூடாரத்தில் நுழைந்து அவரை தாக்கி படுகாயமுற வைத்தார்கள். அவர்களில் ஒருவரை குரு கோவிந்தசிங்கே கொன்றார், மற்றவனை குருவின் படைவீரர்கள் கொன்றார்கள். தனது  மொத்த குடும்பத்தையும் தர்மம் காக்கும் போரில் பலிதானமாகிய குரு கோவிந்தசிங் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் மரணமடைந்தார்.

தர்மத்தை காக்க சீக்கியர்கள் மீண்டும் இஸ்லாமியர்களோடு மோதிக் கொண்டேதான் இருந்தார்கள். பாண்டாசிங் பகதூர், மஹாராஜா ரஞ்சித்சிங் ஆகியோரின் அயராத முயற்சியாலும், தொடர்ந்த மராட்டியர்களின் தாக்குதலாலும் முகலாய பேரரசு நாட்டில் இருந்து அகற்றப்பட்டது.

நெருக்கடியான காலகட்டத்தில் தர்மத்தை காக்க அவதரித்த குரு கோவிந்தசிங்கை என்றும் நாம் நினைவில் வைத்துப் போற்றுவோம். 

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

அக்டோபர் 5 - குரு வணக்கம் - சோ ராமஸ்வாமி பிறந்ததினம்

 வரலாற்றின் பக்கங்களில் இந்தியா என்றுமே ஒரு கொந்தளிப்பான நாடாகத்தான் இருந்துவந்தது. உலக சரித்திரத்தில் மிக முக்கியமான நாகரீகமாக, உலக வர்த்தகத்தில் முக்கியமான பங்கேற்பாளராக, அளவற்ற செல்வம் நிறைந்த நாடாக, அதனாலே அந்தச் செல்வத்தைக் கவர நினைத்த பலருக்கு ஒரு கனவு தேசமாக, மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் படையெடுக்கப்பட்ட தேசமாக, மீண்டும் மீண்டும் தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திய தேசம் என்றே இந்த நாட்டின் சரித்திரத்தைச் சொல்லிவிடலாம்.

இந்தக் கொந்தளிப்புக்கு சிறிதும் குறைந்ததல்ல சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டடமும். நாட்டின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இரண்டாக்கப் பிளவுபட்டதும், ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததும், அலகாபாத் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் பதவியில் இருக்கும் பிரதமமந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பதவியைத் தக்கவைக்க நாடெங்கும் நெருக்கடிநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களின் உரிமைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, எதிரணியில் இருந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் என்று இருந்த காலகட்டம் அறுபதுகளின் கடைசி வருடம் முதல் எழுபதுகளின் பாதிவரை இருந்த வரலாறு.

"நாங்கள் அவர்களை மண்டியிடச் சொன்னோம், அவர்கள் தவழவே செய்தார்கள்" இது அன்றய காலகட்டத்தின் பத்திரிகைகளை பற்றிய அதிகாரத்தின் கூற்று. அரசாங்கத்தின் கொள்கையாக தனிமனிதர்களின் துதிப்பாடல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. " இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா" என்று துதிபாடிகள் புகழ்பாட, ஏழ்மையை ஒழிப்போம் என்ற கோஷங்களும், பிரதமமந்திரியின் இருபது அம்சத் திட்டமும், அவர் மகனின் ஐந்து அம்சத் திட்டமும் பொன்னுலகைக் கொண்டுவரும் என்ற பிம்பங்களும் கட்டமைக்கப்பட்ட காலம் அது.

இதன் பின்புறத்தில் தனித்து ஒலித்த குரல் திரு சோ ராமஸ்வாமியின் குரல். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிறரை மிரட்டியும், யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்று தரகு வேலை பார்த்தும், நாட்டின் நலனை, நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது இருக்கும் நிலையில், தனக்கென ஒரு தனி வழியை, தான் நல்லது என்று நினைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடந்தவர் திரு சோ என்பது இன்றய தலைமுறைக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.

நாடக நடிகராக, திரைப்பட நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக என்று பல தொழில் செய்தவரின் எல்லாப் பாதைகளும் இறுதியாகச் சங்கமித்த இடம் பத்திரிகை ஆசிரியர் என்றானது. அதிகாரத்தின் மிக நெருக்கமான இடங்களில் இருந்தபோதும் அதை அவர் தனக்கான தனிப்பட்ட பலனுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவர்மீது யாரும் சுமத்த முடியாததே அவரின் தனிவாழ்வின் நேர்மைக்குச் சான்றாகும்.

அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத திரு சஞ்சய் காந்தி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதைக் கண்டிக்கும் விதமாக அந்த விபத்தில் மரணமடைந்த கேப்டன் சுபாஷ் சாஸ்சேனாவின் தபால் தலையை துக்ளக்கில் வெளியிட்டார். எம் ஜி யார் ஆட்சியை கேலி செய்து அவர் எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற தொடர் மிகவும் புகழ்வாய்ந்தது.

இந்து மஹா சமுத்திரம், மஹாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், எங்கே பிராமணன் ஆகிய புத்தகங்கள் ஒரு பண்பாட்டுத் துறையின் ஆரம்பநிலை வாசகன் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்.

விளையாட்டாகத்தான் அவர் பத்திரிகை ஆரம்பித்தார், ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கட்டாயத்தை கலைஞர் செய்தார். துக்ளக் பத்திரிகையைப் பறிமுதல் செய்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு புத்தகம் வாங்கவைத்த பெருமை அன்றைய முதல்வரையே சாரும். இப்படிப்பட்ட கைங்கரியத்தைச் செய்தவரைதான் மாபெரும் அரசியல் அறிஞர் என்றும், மூத்த பத்திரிகையாளர் என்றும் கருத்துரிமையின் காவலர் என்று சிலர் சொல்லித் திரிகின்றனர்.

அதையும் தாண்டி நெருக்கடிநிலைமையைக் கலைஞர் எதிர்த்ததை பாராட்டி, மத்திய அரசை விமர்சிக்கும் உரிமை கிடைக்கும்வரை மாநில அரசை விமர்சிக்கப் போவது இல்லை என்று சொன்னவர். தணிக்கைத்துறை அதிகாரிகளிடம் " என் வேலையை நீங்கள் செய்கிறீர்கள், அதனால் எனது சம்பளத்தையும் நீங்கள்தான் வாங்கிக் கொள்ளவேண்டும்" என்று கூறி திகைக்க வைத்தவர்.

அவர் ஒரு பழமைவாதி என்று சனாதனவாதி என்று இன்று சிலர் கூறுகின்றனர். அவர் என்று தனது கொள்கைகளை மறைத்து வேஷம் போட்டார் ? அவர் சரி என்று நினைத்தத்தைச் சொன்னார், எழுதினார். இந்த நாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு, அதற்க்கு ஒரு சிறப்பு உண்டு என்று அவர் உளமார நம்பினார். போலி அறிவுஜீவிகள் போல நடித்து இருந்தால் அவருக்கும் உலகளாவிய புகழ் கிடைத்து இருக்கும், அது வேண்டாம் என்று நினைத்தார், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

பெண்ணுரிமையை அவர் ஆதரிக்கவில்லை என்று சொல்வார்கள் எது உரிமை ? கட்டற்ற உரிமை என்பது எங்குமே இருக்க முடியாது. எல்லா உரிமைகளும் கடமைகளின் மீது அமைக்கப்பட்டவைதான். புகைபிடிப்பதும், மது அருந்துவதும், கட்டற்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதும்தான் பெண்ணுரிமை என்று கூறுபவர்கள் அவர்கள் குடும்பத்து பெண்களுக்கு அதையா கூறுகிறார்கள் ?

அவர் எண்ணங்களை கூறப் பயன்படுத்தினாலும், எதிர்கருத்துக்களுக்கும் சோ இடம் அளித்தே வந்தார். அதனால்தான் வலதுசாரி கருத்துடைய திரு குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளையும் அதே நேரத்தில் அதற்க்கு எதிரான கம்யூனிஸ்ட் தலைவர்களின் கட்டுரைகளும் துக்ளக்கில் வெளிவந்தன. பத்திரிகை என்பது அறிவார்ந்த விவாதங்களை உருவாகும் இடமாக இருக்கவேண்டும் அதற்க்கு எதிரும் புதிருமான தகவல்களைத் தரவேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.

பல்வேறு தலைவர்கள் அவர்களது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய சித்திரங்களை துக்ளக்கில் எழுதி உள்ளனர். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகர் திரு சூரியநாராயணராவும் திரு அப்துல் சமது அவர்களுக்குமான உரையாடல் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றிய ஒரு தெளிவை மக்களுக்குத் தந்தது.

எண்பதுகளில் விடுதலைப் புலிகளை பற்றித் தவறாகச் சொன்னாலே கிடைக்கும் வசைகளைத் தாண்டி அவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் தான், அவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது என்று எச்சரித்தவர் சோ மட்டும்தான். அதைத்தான் இன்று கழகக் கண்மணிகளும் கூறுகின்றனர் என்பதுதான் நகைமுரண்.

சில ஆயிரம் விற்பனையாகும் பத்திரிகையின் ஆசிரியர் என்று சிலர் எழுதியதை பார்த்தேன். வீட்டு வாசல்படியில் பாலும், வரிசையில் இருந்து சாராயமும் விற்பனையாகும் மாநிலத்தில் ரோஜாப் பூக்கும் கள்ளிச் செடிக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

முழுவாழ்விலும் பிரிவினை சக்திகளுக்கு எதிராகவே சோ நின்றிருந்தார். ஹிந்து மதத்தைத் தாக்குவது ஒன்றே பகுத்தறிவு என்று பேசியவர்களின் இடையே நெற்றி நிறைய திருநீரோடு காட்சி அளித்தார்.

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் என்னால் ஏற்கமுடியாதவைதான் என்றாலும், எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த நாள்முதலாக பல வருடங்களாக நான் படித்த ஒரு பத்திரிகையின் ஆசிரியர், பெருவாரியான மக்களின் கருத்து எப்படி இருந்தாலும் என் நெஞ்சுக்கு சரியென்று தோன்றியதை எதற்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டியதின் அவசியத்தைப் புரியவைத்தவர். நடுநிலைமை என்பது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அல்ல, ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுத்தியவர் அவர்.

சிலநேரங்களில் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் நின்றுவிடலாம் , அவர்களைத் தாண்டி அவர்கள் கற்றுக்கொடுத்தவற்றில் சரியானவற்றை மாணவர்கள் முன்னெடுப்பதுதான் ஆசிரியர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சென்று வாருங்கள் ஆசிரியரே.

ஆசிரியர் சோ அவர்களின் மறைவை ஒட்டி வலம் இதழில் வெளியான கட்டுரை