வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 28 - அறிவியல் அறிஞர் M G K மேனன் பிறந்தநாள்

அணு அறிவியல், மின்னணுவியல், விண்வெளி ஆராய்ச்சி, உயிர் தொழில்நுட்பம், சுற்றுப்புற சூழல், இயற்பியலில் உயர் ஆற்றல் துறை என்று அறிவியலின் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கிய பேராசிரியர் எம் ஜி கே மேனன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

மங்களூர் நகரை பிறப்பிடமாகக் கொண்ட திரு மேனன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நகரில் உள்ள ஜஸ்வந்த் கல்லூரியிலும் பின்னர் மும்பையில் உள்ள அரசு அறிவியல் நிறுவனத்திலும் பயின்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற சிசில் பாவெல் மேற்பார்வையில் துகள் இயற்பியலில் ( Particle Physics ) முனைவர் பட்டம் பெற்றார்.

நாடு திரும்பிய திரு மேனன், ஹோமி பாபாவின் அறிவுரையின் பேரில் 1955ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ( Tata Institute of Fundamental Research ) தன்னை இணைத்துக் கொண்டார். டாக்டர் பாபாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு தனது முப்பத்தி எட்டாம் வயதில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்றார்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் மரணத்தை அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஒரு ஆண்டு பணியாற்றினார். இந்திய புள்ளியில் நிறுவனத்தின் தலைவராகவும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும்,  அலகாபாத் நகரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.



கேரள மாநிலத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிறுவத் திட்டமிட்டிருந்த நீர்மின் நிலையம் உருவானால், அந்த வனப்பகுதி பாதிக்கப்படும் என்று அரசுடன் வாதாடி அதனை தடுத்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

திட்டக்குழு உறுப்பினராகவும், பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராகவும் பின்னர் அறிவியல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராகவும் திரு மேனன் பணியாற்றினார்.

1971முதல் 1982வரை பாரத அரசின் மின்னணுவியல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் துறைகளின் செயலாளராகவும் திரு மேனன் பணிபுரிந்தார். கணினி துறையில் நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியவர் திரு மேனன் என்றால் அது மிகையல்ல.

நாட்டின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி நாடு திரு மேனனை மரியாதை செலுத்தியது.

அறிவியலின் பல்வேறு தளங்களின் தனது பங்களைப்பைச் செலுத்திய திரு மேனன் தனது எண்பத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் காலமானார். 

புதன், 27 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 27 - சர் தோரப்ஜி டாடா பிறந்தநாள்

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகனும், டாடா குழுமத்தின் இரண்டாவது தலைவரும், தொழிலதிபருமான திரு தோரப்ஜி டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று,



1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் திரு ஜாம்ஷெட்ஜி டாடா - ஹீராபாய் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் திரு தோரப்ஜி டாடா. தனது பள்ளிக்கல்வியை மும்பையிலும் பின்னர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தில் இணைந்த திரு தோரப்ஜி டாடா முதலில் பாண்டிச்சேரி நகரில் நூற்பாலை ஒன்றை நிறுவ முடியமா என்பதை கண்டுபிடிக்கவும், பின்னர் நாக்பூரில் உள்ள அவர்களின் துணி ஆலையிலும் பணியாற்றினார். மைசூர் நகரில் வசித்து வந்த கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ஹோர்முர்ஷி பாபாவின் மகளான மெஹர்பாய் என்ற பெண்மணியை மணம் செய்தார். மெஹர்பாயின் சகோதர் மகன்தான் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபா.

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக திரு தோரப்ஜி டாடா பொறுப்பேற்றார். அப்போது டாடா குழுமத்தில் நூற்பாலைகளும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலும்தான் இருந்தன. தந்தையின் கனவை தனயன் நிறைவேற்றினார். டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான டாடா இரும்பு எக்கு தொழில்சாலை, டாடா மின் உற்பத்தி ஆலை, நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றை திரு தோரப்ஜி டாடா நிறுவினார். திரு ஜாம்ஷெட்ஜி டாடா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) திரு தோரப்ஜி டாடா காலத்தில்தான் முறையாகத் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.

இந்திய தொழில் முன்னேற்றத்தில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் வகையில் அன்றய ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது.

வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாது திரு தோரப்ஜி டாடா  ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், விளையாட்டு வீரர்களை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்குபெற்ற இந்திய அணியின் மொத்த செலவையும் டாடாவே அளித்தார்.

1931 ஆம் ஆண்டு திரு தோரப்ஜி டாடாவின் மனைவி மெஹர்பாய் தனது 52 ஆம் வயதில் ரத்த புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் நினைவாக திருமதி டாடா நினைவு அறக்கட்டளையை நிறுவி ரத்த புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக பொருளுதவி செய்தார். 1932 ஆம் ஆண்டு சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கல்வி, பேரிடர் மேலாண்மை போன்ற சமுதாய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

1932 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் தோரப்ஜி டாடா காலமானார். இன்று ஆல்போல் பெருகி அருகுபோல் வேரோடி இருக்கும் டாடா குழுமத்தை நிலைநிறுத்தியதில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்கு மகத்தானது. 

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 25 - திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் -

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். 



தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் மல்லையதாசருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பிறந்தவர் வாரியார் ஸ்வாமிகள். வீர சைவ மரபில் பிறந்த ஸ்வாமிகளுக்கு அவரது ஐந்தாம் வயதில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டது. 

இவரது தந்தையே இயல் இசை புராண வல்லுநர். அவரே ஸ்வாமிகளுக்கு குருவாக அமர்ந்து கல்வி கற்பித்தார். இயல் இசையிலும் இலக்கண இலக்கியங்களிலும் ஸ்வாமிகள் தேர்ச்சி பெற்றார். எட்டு வயதில் கவி பாடும் திறமையும் பதின்ம வயதிலேயே பன்னிரெண்டாயிரம் பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறமையும் ஸ்வாமிகளுக்கு அமைந்தது. தனது பதினெட்டாம் வயதில் இருந்து பக்தி பேருரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஸ்வாமிகள் வீணை வாசிப்பதிலும் நிபுணர். 

பண்டிதர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் புரியும் படி பேச்சு வழக்கில் உபன்யாசம் செய்வது ஸ்வாமிகளின் வழிமுறை. தனது பேச்சுக்களின் நடுவே திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பண்ணோடு பாடி அவைகளை மக்களிடம் சேர்த்தார். ஸ்வாமிகளின் பேச்சு முறை என்பது நாடக பாணியில், உயர்தர நகைச்சுவையோடு, அன்றாட நடப்புகளை கலந்து இருக்கும். 

1936ஆம் ஆண்டு முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திருப்புகழ் அமிர்தம் என்ற மாத பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ்  மாதம் தோறும் திருப்புகழ் பாடல் ஒன்றுக்கு உரை, கந்தர் அலங்காரத்திற்கு உரை, மற்றும் பல்வேறு கட்டுரைகளோடு வெளியானது. வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதி உள்ளார். 

கிருபை என்றால் கருணை, வாரி என்றால் கடல். மிகச் சரியாகத்தான் இவர் பெற்றோர்கள் இவருக்கு கிருபானந்த வாரியார் என்று பெயர் இட்டனர்  போலும்.பேருக்கு ஏற்றார் போல ஸ்வாமிகள் கருணைக் கடலாகவும் ஆனந்தக் கடலாகவும் விளங்கினார். பல்வேறு கோவில்களில் திருப்பணியும், பல்வேறு கல்வி நிலையங்களும் இவரால் உருவாக்கப்பட்டன. 

நாடெங்கும் சைவத்தையும் தமிழையும் வளர்த்து சிறப்பித்த வாரியார் ஸ்வாமிகள் 1993ஆம் நாள் நவம்பர் 7ஆம் நாள் முருகப் பெருமாள் திருவடிகளை அடைந்தார். பூத உடலைத் துறந்தாலும் தனது புத்தகங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மூலமாகவும் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 24 - அணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் -

அது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் தார் பாலைவனம் பரவிக் கிடைக்கும் பொக்ரான் நகரில் இருந்து டெல்லிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்தவர் அன்றய பிரதமர் இந்திரா காந்தி. பேசிய குரல் ஒரே ஒரு செய்தியைத்தான் கூறியது. " புத்தர் சிரித்தார் " இரண்டே சொற்களில் பாரதம் வெற்றிகரமாக தனது அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது என்பது அந்த சங்கேத வாக்கியத்தின் பொருள். இந்த மகத்தான சாதனை ஹோமி நுஸுர்வான்ஜி சேத்னா இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்றது.


பாரசீக நாட்டில் இருந்து தங்கள் மத நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள பாரத தேசத்திற்கு அடைக்கலம் வந்த இனம் பார்சி மக்கள். பாலில் கலந்த சர்க்கரை போல பாரத நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய சிறுபான்மை இனம் பார்சி இனம். புகழ்பெற்ற அறிஞர்களை தொழில்முனைவோர்களை ஆராய்ச்சியாளர்களை ராணுவ தளபதிகளை இந்த தேசத்திற்கு அளித்த இனம் அது. ஹோமி சேத்னாவும் பார்சி இனத்தைச் சார்ந்தவர்தான்.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் இன்றய மும்பை நகரில் பிறந்தவர் சேத்னா. மும்பை தூய சவேரியார் பள்ளியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்த சேத்னா அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். சிறிது காலம் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விட்டு பாரதம் திரும்பிய சேத்னா Indian Rare Earth நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

அணு உலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலையை மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுதியிலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் ஆலையை இன்றய ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் நாட்டின் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தை மும்பையிலும் உருவாக்கிய குழுக்களுக்கு தலைவராக இருந்து பணியாற்றினார்.

அடுத்தடுத்து மர்மமான முறையில் பாரத நாட்டின் முன்னோடி விஞ்ஞானிகளான ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உலக நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர்களான ஐந்து நாடுகள் தவிர வேறு எந்த நாடும் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த காலம் அது. அந்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்னர் பாரதம் அணு ஆயுத சோதனையைச் செய்ய முடிவு செய்தது. அந்த பொறுப்பு சேத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தர் சிரித்தார், பூமி அதிர்ந்தது. பாரதத்தின் திறமை உலகமெங்கும் ஐயமே இல்லாமல் நிலைநாட்டப்பட்டது.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஹோமி சேத்னாவுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. பட்நாகர் விருது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த முனைவர் பட்டங்கள் என்று சேத்னா கவுரவம் செய்யப்பட்டார்.

ஒரு சிறந்த தலைவரின் இலக்கணம் என்பது தன்னைக் காட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். ராஜா ராமண்ணா, பி கே ஐயங்கார் என்று அடுத்த தலைமுறை அணுசக்திதுறை தலைவர்களை பட்டை தீட்டி சேத்னா நாட்டுக்கு அளித்தார். ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும் அமைத்த பாதையில் இன்று நாடு நடை போடுகிறது.

தனது எண்பத்தி ஏழாவது வயதில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஹோமி சேத்னா காலமானார்.

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்பங்காற்றிய அறிஞருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்குகிறது. 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 22 - ஏக்நாத் ரானடே நினைவு தினம்


நீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே.



1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார்.

1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து " ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்" ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.

பாரதம்  முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.

எந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக  செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள்.

தனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.  

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 21 - ஜீவா என்றோர் மானிடன்

தமிழகம் கண்ட தன்னலம் இல்லா தலைவர்களில் முக்கியமான தோழர் ஜீவா என்ற ப ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று. காந்தியவாதியாகத் தொடங்கி பொதுவுடைமை போராளியாக பரிணமித்த தலைவர் ஜீவா. இந்த நாடுதான் எனது சொத்து என்று காந்தியிடம் ஜீவா கூற, இல்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று காந்தியால் புகழப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும், அறியாமையால் கம்பனையும் திராவிட இயக்கங்கள் அவதூறு செய்த காலத்தில், மேடைதோறும் பாரதியையும் கம்பனையும் முழங்கி அவர்களை மக்களிடம் சேர்த்த இலக்கியவாதி தோழர் ஜீவா.



நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி நகரில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளிக்காலத்திலேயே தனது எழுத்தின் மூலம் காந்தியைப் பற்றியும் கதர் பற்றியும் கவிதைகளும் நாடகங்களும் எழுதி அதனை மேடையேற்றவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போதுதான் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். போராளிகளின் மரணம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டு செய்தது. சிறையில் இருந்த ஜீவானந்தம் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக மீண்டும் சிறைப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட ஈ வே ரா மன்னிப்பு கோரி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி ஜீவா சிறையில் இருந்தார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஜீவா தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவரோடு தேர்வானவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோர். வழக்கம் போல உள்கட்சி பூசலால் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் பொது உடைமைவாதியாகவே ஜீவா வாழ்ந்தார். ஆங்கில அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. எனவே சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா.

கருத்துரீதியில் எதிரணியில் இருந்தாலும் எளிமையும், தூய்மையும், தேசபக்தியும் இணைந்து வாழ்ந்த மாமனிதன் தோழர் ஜீவாவின் வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும். 

புதன், 20 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 20 - கணினி உலகின் கதாநாயகன் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பிறந்ததினம்

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு.



கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தவர் நாராயணமூர்த்தி. அவரது தந்தைக்கு அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது எண்ணம். ஆனால் அன்றய இளைஞர்கள் போல நாராயணமூர்த்தி பொறியியல் துறையில் சேரவே ஆர்வம் கொண்டு இருந்தார். புகழ்வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT )  இடம் கிடைத்து இருந்தாலும், பொருளாதார நெருக்கடியால் அங்கே சேர முடியாமல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் ( REC ) மின் பொறியியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( IIT Kanpur ) முதுகலை பட்டம் பெற்றார்.

அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கிய நாராயணமூர்த்தி, கணினி துறையால் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் புனா நகரில் இருந்த பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு தன் நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பும் கணினிமயமாக்குதலும் அடுத்த இருபதாண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டது. தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த செலவில் அளிப்பதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தது. எனவே அதே துறையில் இருந்த பல நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் நரசிம்ம ராவால் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மிகப் பெரும் இளைஞர் சமுதாயம், அதுவும் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமையான இளைஞர் பட்டாளம் நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக அமைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இந்த இளைஞர்களை பணக்காரர்களாக மாற்றியது. அதிகமான சம்பளம், நிறுவனத்தின் பங்குகளை அளித்தல் என்று திறமை வாய்ந்த இளைஞர்களை இன்போசிஸ் தக்க வைத்துக் கொண்டது.
வறுமைக்கோட்டுக்கு கீழேயும், மத்தியதர வர்க்கமாகவும் இருந்த பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறின.  இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் பிறகு தனியாக நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்குகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் செய்து வருகிறார்.

பல்வேறு விருதுகளை பெற்ற நாராயணமூர்த்திக்கு பாரத அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மரியாதை செலுத்தி உள்ளது.

பாரத நாட்டின் அறிவின் கூர்மையை உலகமெங்கும் பறைசாற்றிய திரு நாராயணமூர்த்திக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறது.