சனி, 20 செப்டம்பர், 2025

செப்டம்பர் 20 - தோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்  இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்  
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி  வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை 

இன்று உலகத்தின் சீண்டப்படாத சித்தாந்தமாக, பாரத தேசத்தில் பெருவாரியான மக்களால் கைவிடப்பட சித்தாந்தமாக இருக்கும் பொதுவுடமை சித்தாந்தம் சென்ற நூற்றாண்டில் உலகத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒன்றாகும். நேர்மையும் தியாகமும் பொருந்திய பலர் அந்த சித்தாந்தத்தின் தளகர்த்தார்களாக இருந்தனர். தமிழகத்தில் பிறந்து, பாரத நாட்டின் பொதுவுடமை சித்தாந்தத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் பி ராமமூர்த்தியின் பிறந்தநாள் இன்று.


1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
  
1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில், அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் என்று பல்வேறு  கட்சியின் வருடாந்திர மாநாடுகளிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார், அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றதுஇது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். தலைமறைவான கம்யூனிச தோழர்களை  கண்காணித்த போலீஸ் அவர்களில் பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். .எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் அடக்கம். 1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார்.

1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார்.  மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி..டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.


ஆரிய மாயையா - திராவிட மாயையா ? விடுதலை போராட்டத்தில் தமிழகம் என்று பி ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். விடுதலை போராட்ட காலத்தில் நடந்த பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

வியாழன், 18 செப்டம்பர், 2025

செப்டம்பர் 18 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா நினைவுநாள்

பல்வேறு நிறங்களும் மணங்களும் கொண்ட மலர்களைக் கொண்டு தொடுத்த அழகிய பூமாலைக்கு நிகரானது நமது தேசம். பல்வேறு மதங்களை, இனங்களை, மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரால் உருவாகி, திருவாகி இருக்கும் தேசத்தில் சட்டத்துறையில் கல்வித்துறையிலும் தலைசார்ந்து விளங்கிய நீதிபதி ஹிதயதுல்லா அவர்களின் நினைவுநாள் இன்று.



ஹிதாயதுல்லாவின் குடும்ப முன்னோர்களே பெரும் படிப்பாளிகள், புகழ் வாய்ந்தவர்கள். அவரது தாத்தா முன்ஷி குதருதுல்லா வாரணாசியில் வசித்துவந்த வழக்கறிஞர். அவர் தந்தை கான் பகதூர் ஹபிப் முஹம்மது வில்லயதுல்லாஹ் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர். உருது மொழியில் புகழ்பெற்ற கவிஞர். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய அவர் மத்திய சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். அவரது சகோதரர்கள் இக்ரமுல்லாஹ் மற்றும் அஹமதுல்லாஹ் ஆகியோர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றியவர்கள். இக்ரமுல்லாஹ் தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்தவர்.

தனது ஆரம்ப கல்வியை நாக்பூரில் உள்ள அரசு பள்ளியிலும் பின்னர் மோரிஸ் கல்லூரியிலும் முடித்த ஹிதயதுல்லா லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். பின்னர் அங்கேயே சட்டமும் பயின்றார்.

நாடு திரும்பிய ஹிதயதுல்லா நாக்பூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு அவர் நாக்பூரில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டவியல் மற்றும் முஸ்லீம் சட்டங்கள் பற்றிய துறைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நாக்பூர் உச்ச நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராகவும் பின்னர் அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஹிதயதுல்லா 1954ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் 1958ஆம் ஆண்டு நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அதனைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மிக இளைய வயதில் அட்வகேட் ஜெனரல், மிக இளைய வயதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதல் முஸ்லீம் தலைமை நீதிபதி என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு.

1969ஆம் ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரு சாகிர் ஹுசைன் திடீர் என்று மரணம் அடைய தற்காலிக தலைவராக அன்றய குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவருக்கான தேர்தலில் போட்டியிட திரு கிரி தனது பதவியை ராஜினாமா செய்ய, நீதிபதி ஹிதயத்துல்லா 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 24 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் வரை பணியாற்றிய ஹிதயதுல்லா 1979ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை குடியரசு துணைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அன்றய குடியரசு தலைவர் கியானி ஜெயில்சிங் அமெரிக்கா சென்ற போது, மீண்டும் குடியரசு தலைவராக பணியாற்றினார்.

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு துணை தலைவர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் வகித்த ஒரே இந்தியர் ஹிதயதுல்லா மட்டுமே. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கோகுல்நாத் எதிர் பஞ்சாப் அரசாங்கம் என்ற வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும்.

சட்டத்தில் மேன்மையுற்று விளங்கிய திரு ஹிதயதுல்லா கல்விப்பணியிலும் புகழ் பெற்று விளங்கினார். ன் எ நாக்பூர் சட்ட கல்லூரியில் பணியாற்ற அவர் அந்த துறையின் தலைவராகவும் இருந்தார். அதன் பின்னர் பல்வேறு சட்ட கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராகவும் அவர் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். பாரத சாரணர் இயக்கம், பாரத செங்சிலுவை சங்கம் ஆகியவற்றின் அகில இந்திய தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

ஆங்கிலம், உருது, ஹிந்தி, பாரசீகம், பிரெஞ்சு, வங்காள மொழி மற்றும் சமிஸ்க்ரித மொழிகளையும் அவர் அறிந்து இருந்தார். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் அவர் பெயராலே அமைந்துள்ளது.

தனது எண்பத்தி ஆறாம் வயதில் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் ஹிதயதுல்லா காலமானார். நாட்டின் சேவைக்கு வழிபாடு முறை தடையல்ல  என்பதற்கும், தலைமைப் பீடங்களை அலங்கரிக்க எல்லோருக்கும் இங்கே சம உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதற்கும் ஹிதயதுல்லாவின் வாழ்க்கையே ஒரு சரியான எடுத்துக்காட்டு.