தேசியக் கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியக் கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - ஆசிரியர்கள், மாணவர்கள்

ஆசிரியர்கள் : 

ஆசிரியர்களுக்கான தகுதி, அந்தப் பணிக்கான தேர்வு முறை பற்றி வரைவு அறிக்கையின் பரிந்துரைகள்

* கல்விநிலையங்களின் மேலாண்மையிலும், ஆசிரியர் பணிக்கான தேர்வு மற்றும் பணி உயர்விலும் தெளிவான, வெளிப்படையான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை முற்றிலுமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* தன்னதிகாரம் பெற்ற சுயேட்சையான ஆசிரியர் தேர்வுப் பணி ஆணையம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். அதன்மூலமாகவே ஆசிரியர் பணிக்கான தேர்வு நடத்தப்படவேண்டும்.

* பத்தாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆரம்ப / தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை இந்த பயிற்சி முடித்தவர்களிடம் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.

* இந்தத் தேர்வில் வெற்றிகரமாக முடித்து உள்ள மாணவர்களுக்கு ஒரு வருட உயர்நிலைப் பட்டய வகுப்புகள் நடத்தி, அதில் உள்ள மாணவர்களை உயர்நிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

*  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்னர் ஆசிரியர் பணி புரிய ஆசையும் தகுதியும் உள்ள மாணவர்களுக்கு நான்கு வருட பட்டப்படிப்பு வழங்கப்படவேண்டும். ஆசிரியர் பணிக்கு இந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

*  மலைவாழ் பகுதிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, அந்தப் பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு அரசின் செலவில் ஐந்து வருட ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு, அப்படிப் பயிற்சி பெற்ற பெண்களையே பணியில் அமர்த்தவேண்டும். இந்தப் பயிற்சி எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகளாகவோ அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகவோ இருக்கலாம்.

 *  ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பவேண்டும்.

*  பத்து வருட இடைவெளியில் ஆசிரியர்களின் திறன் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தரன் தன்னாட்சியான நிறுவனத்தால் அளவிடப்பட்டு ஆசிரியர்களுக்கு சான்றளிக்கப்பட வேண்டும்.

*  கல்லூரி விரிவுரையாளர் தகுதியில் உள்ள நபர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்தப்பட வேண்டும். இதற்காக தனியான தகுதியான பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டவேண்டும்.

* மலைவாழ்பகுதிகள், தொலைதூர இடங்கள், வாழக் கடினமான இடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை தரப்படவேண்டும்.

*  இந்திய குடிமைப் பணிகளுக்கு ( Civil Service ) இணையான இந்திய கல்வி பணி ( Indian Educational Service ) ஓன்று உருவாக்கப்பட வேண்டும். இதில் பணிபுரிபவர்கள் அவரவர் மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக பணியாற்றவேண்டும்.

*  தங்கள் பணியில்  ஆசிரியர்களும், பல்வேறு முறையீடுகளுக்காக கல்வி நிலையங்களும் அரசின் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து உள்ளனர். இவைகளை விரைவாகத் தீர்க்கும் வண்ணம் மாநில அரசுகளும், மத்திய அரசும் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவேண்டும். இந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்படவேண்டும்.

மாணவர்கள் :

 * மாணவர்கள் கல்விகற்கும் நிலையில் மூன்று இடங்களில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அவை தொடக்கக்கல்வி நிலையில், பதினொன்றாம் வகுப்பில் மற்றும் தாய்மொழியில் கற்கும் மாணவர்கள் தொழிற்கல்வி கற்கும் ஆரம்பநிலையில் என்பனவாகும். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளும், தனி கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.

*  சிறுபான்மைக் கல்வி நிலையங்களும் தங்கள் சேர்க்கையில் 25% பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தல்வேண்டும்.

*  எட்டாம் வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் தேர்ச்சி என்பது, பல மாணவர்களுக்கு கற்கும் தேவையை எதிர்மறையாகப் பாதித்து உள்ளது. எனவே இது ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்று மாற்றப்படவேண்டும். அதன் பிறகு தேர்ச்சி என்பது மாணவர்களின் மதிப்பெண்படியே அமைய வேண்டும்.

ஆனால் இது மாணவர்களை பாதிக்காமல் இருக்க, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மீண்டும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். இதற்கான சிறப்பு வகுப்புகள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

*  கல்வி உரிமைச் சட்டம் ஐந்தாம் வயதான குழந்தைகளுக்கு கல்வி கற்பது உரிமை என்று இருக்கிறது. அது நான்கு வயதான குழந்தைகளுக்கும் இனி நீட்டிக்கப் பட வேண்டும். நான்கு வயதான குழந்தைகளுக்கான மழலையர் வகுப்புகள் தொடங்கப்படவேண்டும்.

* கற்றல் குறைபாடு உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட குழைந்தைகளுக்கான கல்விக்கான தனி சட்டம் நிறைவேற்றப்படவேண்டும், அவை முறையாகப் பின்பற்றப்படவேண்டும்.

* மலைவாழ் பிரதேசங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிகளில் சேரும் சதவிகிதம் குறைவாகவும், பாதியில் படிப்பை நிறுத்துவார்கள் சதவிகிதம் அதிகமாகவும் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்.

* மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கான கல்வி என்பது மலைவாழ் மக்கள் நலத்துறையில்  பிரிக்கப்பட்டு அந்தந்த மாநில கல்வித்துறையில் தனி அலகாக மாற்றப்படவேண்டும்.

* பல இடங்களில் உள்ள மலைவாழ் குழைந்தைகள் அந்த மாநில மொழிகளைக் கற்பதில் ( அவர்களின் பேச்சு மொழி வேறாக இருப்பதால் ) உள்ள தடைகளைக் களைய, ஆரம்ப நிலைப் பாடங்களை அவர்கள் மொழியில் கற்பிக்கும் வகையில் புத்தகங்கள் தாயாரிக்கப்படவேண்டும். 

சனி, 13 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - உண்மையும் பொய்களும்

வழக்கம்போல தேசிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டம் பற்றிய பொய்களை நமது அறிவுஜீவிகள் அடித்துவிட ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வழக்கமான ஜல்லிகளும், உண்மைகளும் என்ன என்று பார்ப்போம்.


இந்தக் கல்விக் கொள்கையை எதோ சில தனிநபர்கள் வடிவமைத்து உள்ளனர். கல்வியாளர்களிடமோ, பொதுமக்களிடமோ கருத்துக் கேட்கவில்லை என்று கூறுகின்றனர்.

உண்மை என்னவென்றால் தொடக்கக்கல்வி, மேல்நிலை மற்றும் உயர்நிலைக்கு கல்வி, தொழில்சார் கல்வி, பள்ளிகளின் தேர்வு முறை, ஆசிரியர்கள் பணிக்கான படிப்பு மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை, பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மை மக்களின் கல்வியறிவை மேம்படுத்துதல், கணிணிகளின் பயன்பாட்டின்மூலம் கல்வி கற்றுத்தரும் முறையை முன்னெடுத்தல், கல்வி கற்ப்பிக்கும் முறையில் புதிய நவீன முயற்சிகள், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வழிமுறைகள், தாய்மொழி வழியாக கல்வி புகட்டுவதில் இன்று உள்ள சவால்களும் அதனை வெற்றிகாணும் வழிமுறைகளும், உடல்பயிற்சி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறை, கலைக்கல்வி,  நன்னெறிகளை பற்றிய அறிவைப் புகட்டும் வழிமுறைகள், மாணவர்கள் ஆரோக்கியம் என்ற தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதற்கான கலந்தாய்வுகள் கிராமப் பஞ்சாயத்தில் தொடங்கி, கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் நடத்தப்பட்டன. இவற்றில் கிடைத்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு தேசியஅளவில் ஆறு மண்டலங்களில் விவாதிக்கப்பட்டன.

பலநேரங்களில் அன்றய மனிதவளத் துறை அமைச்சர் திருமதி ஸ்ம்ரிதி இரானி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகக் கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டங்கள் பற்றிய சில செய்தித் தொகுப்புகள் 









இதுபோலவே அரசு இனி கல்வியில் எந்த முதலீடும் செய்யப்போவது இல்லை. ஐந்தாம் வகுப்பிலேயே மாணவர்கள் வடிகட்டப்பட்டு தொழில்கல்விக்கு அனுப்பிடப்பட்டுவிடுவார். மத்திய அரசு சமிஸ்கிரத மொழியைத் திணிக்கப் போகிறது, பள்ளிகள் அருகே உள்ள மடங்களோடு இணைக்கப்பட்டு விடும் என்று ஏதேதோ வதந்திகளை பொய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு என்ன சொல்கிறது என்பதை பாப்போம். 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை

2014 - 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் 75% தொடக்கப் பள்ளிகளும், 43% மேல்நிலைப்பள்ளிகளும் 40% உயர்நிலைப் பள்ளிகளும் அரசால் நடத்தப்படுகின்றன. மற்றப் பள்ளிகள் தனியார்களால் நடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் 25.95 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 19.77 கோடி மாணவர்கள் தொடக்கக் கல்வியும் 3.83 கோடி மாணவர்கள் மேல்நிலைப் படிப்பும் 2.35 கோடி மாணவர்கள் உயர்நிலைப் படிப்பும் படிக்கின்றனர்.

தொடக்கக் கல்வியில் 33% மாணவர்களும், மேல்நிலை வகுப்புகளில் 39% மாணவர்களும் உயர்நிலைப் படிப்பில் 42% மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மொத்தம் உள்ள பள்ளிகளில் 33% பள்ளிகளில் ஐம்பதிற்கும் குறைவான மாணவர்களும், 54% பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களுமே இருக்கின்றனர். ஏறத்தாழ 77% பள்ளிகள் இருநூறுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்குகின்றன.

ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களில் பத்தில்  ஆறு மாணவர்களே எட்டாம் வகுப்புவரை படிக்கிறார்கள். 47% மாணவர்கள் பத்தாம் வகுப்பைத் தாண்டுவது இல்லை.

இந்த மாணவர்களுக்கு கல்வி கற்ப்பிக்கும் பணியில் 80 லட்சம் ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளிலும் 20 லட்சம் ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 59% ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றினாலும் 8% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இன்னும் இருந்து வருகின்றன.

தொடக்கப் பள்ளி அளவில் ஏறத்தாழ 5 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. 14% அரசுப் பள்ளிகள் குறைந்த பட்ச இலக்கான 6 ஆசிரியர்கள் என்ற எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை. மலைவாழ் பகுதிகளிலும், தொலைதூரத்தில் உள்ள கிராமப் பகுதிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையே நீடிக்கிறது.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது 12% இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் 2011 ஆம் ஆண்டு 74%ஆக உயர்ந்து உள்ளது. இன்று 82.1% ஆண்களும் 65.5%  பெண்களும் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால் உலகளவில் கல்வி பெற்றவர்கள் 82.1% என்று இருக்கும் போது, நாம் கிடைக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

1968 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கைக்கான குழுக்கள் ஆண்டு ஒன்றுக்கு தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தாலும், சராசரியாக 3.5% என்ற அளவிலேயே கல்விக்கான ஒதுக்கீடு இருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளோடு தொடங்கப்பட்ட சர்வ சிக்க்ஷ அபியான்  என்ற தொடர் நிகழ்ச்சியின் மூலமாகவும், எட்டாம் வகுப்பு வரை தடை இல்லாக் கல்வி மூலமாகவும் ஆரம்பநிலைக் கல்விக்கு மாணவர் சேர்க்கை 95% மேலாக உயர்ந்து உள்ளது.

ஆனால் 17,000 கிராமங்களை உள்ளடக்கிய 570 புறநகர் மாவட்டங்களில் மூன்று முதல் பதினாறு வயதிற்கு உட்பட்ட  6 லட்சம் மாணவர்களிடம் பிரதம் என்ற அரசு சாரா அமைப்பு 2014ஆம் ஆண்டு அளித்த அறிக்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. இந்த அமைப்பின் அறிக்கையின் படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் சரி பாதிப் பேருக்கு இரண்டாம் வகுப்பிற்கான புத்தகங்களை படிக்கவோ அல்லது இரண்டாம் வகுப்பிற்கான கணித அறிவோ இல்லை என்று தெரிய வருகிறது.

மாணவர்களின் சேர்க்கையில் நாம் அடைந்த முன்னேற்றம் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மாணவர்கள் கற்கும் அளவு என்பது கவலைக்கிடமாகவே இருக்கிறது.

மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 75% பேரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 50% பேரும் எட்டாம் வகுப்பு மாணவர்களில் 25% பேரும் இரண்டாம் வகுப்புக்கான பாடங்களைப் படித்து புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.    கிராமப்புற மாணவர்களில் இரண்டாம் வகுப்பு மாணவர்களில் 32.5% பேர் எழுத்துக்களைக் கூட இனம் காண முடியாமல் இருக்கிறார்கள்.

எந்த ஒரு வேலை நாளிலும் ஏறத்தாழ 25% ஆசிரியர்கள் விடுப்பில் இருப்பது என்பது இந்தக் கற்றல் குறைபாட்டின் ஒரு முக்கியமான காரணமாக் கண்டறியப்பட்டு உள்ளது.

மாணவர்கள் சேர்க்கையில் பெண்குழந்தைகள், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் சேர்க்கை எண்ணிக்கை திருப்திகரமாக இருந்தாலும், கற்றலின் அளவில் பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்களும்,  முதல்தலைமுறை மாணவர்களும் பின்தங்கியே இருக்கின்றனர். இவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்காமல் போய்விடும் சாத்தியக்கூறும் இருக்கிறது. இதைத் தடுப்பதே நமக்கு முன் உள்ள சவால்.

இந்தியாவில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் என்பன

1, பாராளுமன்றத்தின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள்
2, மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்
3, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
4, பல்வேறு மாநில அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்
என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

பட்டம் வழங்கும் அதிகாரம் இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையிலான மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தனித்து இயங்கினாலும், பெருவாரியான பல்கலைக்கழகங்கள் தங்களோடு இணைந்துள்ள கல்லூரிகள் வழியாகவே கல்வி புகட்டுகின்றன.

இன்றய நிலையில் 46 மத்திய பல்கலைக்கழகங்களும் 128 நிகர்நிலைப் பல்கலைக்கலகங்களும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த நிறுவனத்திற்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கப்படவில்லை.  2014 - 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 711 பல்கலைக்கழகங்களும் 40,760 கல்லூரிகளும் இந்தியாவில் உள்ளன.

1,79 கோடி ஆண்களும் 1.54 கோடி பெண்களும் என்று மொத்தம் 3.33 கோடி மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்குப் பாடம் எடுக்க 14 லட்சம் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள், அவர்களில் 39% பெண் ஆசிரியர்கள்.

இந்த மாணவர்களில் 37.41% கலைப் பிரிவிலும், 17.59% அறிவியல் துறையிலும் 16.39% வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறையிலும் 28.61% பொறியியல் மற்றும் மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மொத்தம் உள்ள கல்லூரிகளில் 63.9% கல்லூரிகள் தனியார் நடத்துபவை, அவற்றில் 58.9% மாணவர்கள் படிக்கிறார்கள். மாநில அரசால் 35.6% கல்வி நிறுவனங்களும் மத்திய அரசால் 0.5% நிறுவனங்களும் நடத்தப்படுகின்றன.

ஆனாலும் உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இடம்பெறவில்லை. 147ஆவது இடத்தில IISc Banglore, 179ஆவது இடத்தில் IIT Delhi, 202ஆவது இடத்தில IIT Mumbai மற்றும் 271ஆவது இடத்தில IIT Kanpur ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

படித்த படிப்பிற்கான வேலை என்பது பலருக்குக் கிடைப்பதில்லை, அதே நேரத்தில் தகுதியான ஆட்கள் நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை என்ற நிலைதான் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான தேவையும், படிப்பும் ஒரே திசையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதன் பின்புலத்தில் நமது கல்விக் கொள்கை எப்படி அமையவேண்டும் என்பதை பற்றிய புதிய தேசியக் கல்விக் கொள்கை அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது.