ஆயுள் காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுள் காப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்

ஆமாம், ஒரு லட்ச ரூபாய் மாத வருமானத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யவேண்டும் என்றால், அதற்கான ப்ரீமியம் எவ்வளவு இருக்கும் ?
உங்கள் வயது முப்பத்தி ஐந்து என்றால், நீங்கள் காப்பீடு செய்யும் காலம் முப்பது வருடங்கள் என்றால் நீங்கள் செலுத்தும் தொகை வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ ஐந்து லட்சம் வரை வரும்.

வருட வருமானம்               : பனிரெண்டு லட்சம்
உங்கள் செலவு                    : முன்றரை லட்சம்
காப்பீடுக்கான தொகை     : ஐந்து லட்சம்.

சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, காப்பீடு செய்ய என்று எடுத்து வைத்துவிட்டால் அப்புறம் எப்படி மற்றச் செலவுகளைச் செய்ய ? கணக்கு இடிக்கிறது இல்லையா. இதைச் சற்றே ஒரு பக்கமாக வைத்து விட்டு காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

பலரிடம் இருந்து பணம் பெற்று, சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்வதுதான் காப்பீடு நிறுவனங்களின் வேலை என்று முன்னர் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த சேவையைச் செய்ய காப்பீடு நிறுவனங்கள் ஆள்களை வேலைக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அதற்கான அலுவலகம், அதற்கான வாடகை, மற்றச் செலவுகள் இவை எல்லாம் இருக்கிறது அல்லவா. இந்தச் செலவுகளை அந்த நிறுவனம் எவ்வாறு ஈடுகட்டும் ? அந்தச் செலவுகளையும் நாம்தான் கொடுக்கிறோம்.

இருபது வருடங்கள் நீங்கள் பணம் கட்டினால், அந்தக் காலம் முடிந்தபின் நீங்கள் கட்டிய பணம் வட்டியோடு திரும்பி வரும் என்றுதானே காப்பீடு நிறுவனத்தின் முகவர்கள் உங்களுக்கு சொல்லிருக்கிறார். உங்களுக்கு மீண்டும் திரும்பி வரும் அந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இருபது வருடங்களுக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்து கொண்டால், நீங்கள் வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறைவாகத்தானே பணம் கட்ட வேண்டி இருக்கும். நீங்கள் வருடாவருடம் அளிக்கும் பணத்திற்கு வட்டியைக் கணக்கிட்டால் நீங்கள் செலுத்தும் தொகை இன்னும் குறைவாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செலுத்தும் தொகை அதிகமாகத்தானே இருக்கிறது. அது ஏன் ?

இங்கேதான் நீங்கள் காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டும் ப்ரீமியம் தொகை மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. காப்பீடுக்கான தொகை
2. நிறுவனத்தின் செலவுகளுக்கான தொகை
3. முதலீடு செய்யப்படும் தொகை.

யாரோ சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை இந்தக் காப்பீடுக்கான தொகையில் இருந்தே நிறுவனங்கள் திருப்பித் தருகின்றன. நிறுவனத்தின் செலவுகள் அதற்காக  ஒதுக்கப் படும் தொகையில் இருந்து செய்யப்படுகிறது.

முதலீடு செய்வதற்காக ஒதுக்கப் படும் தொகையும் அந்த முதலீட்டினால் கிடைக்கும் வருவாயும்தான் காப்பீடு முதிவடையும்போது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. பொருளாதார பயன்பாடு உள்ள ஒரு பொருளுக்கு எந்த வகையில் எல்லாம் இழப்பு வரலாம் என்பதை கணித முறையில் கணிக்கும் வல்லுனர்கள் எந்த அளவு பணம் பெற்றுக் கொண்டால் இழப்பை ஈடுகட்டி, வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால முடிவில் பணம் திருப்பித் தரமுடியும் என்பதை முடிவு செய்கிறார்கள். இந்த வல்லுனர்களுக்கு அக்சோரியல்கள்  என்று பெயர். மிக அதிகமான வருமானம் தரும் துறைகளில் இதுவும் ஓன்று.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை என்றால்
காப்பீடு என்பது எதிர்பாராமல் ஏற்ப்படும் இழப்பை ஈடுசெய்ய மட்டுமே தவிர காப்பீடு என்பது சேமிப்புக்கான வழிமுறை இல்லை.

அநேகமாக ஆயுள் காப்பீடு முகவர்கள் பேசாத ஒரு காப்பீடுத் திட்டம் ஓன்று உள்ளது. முழுவதும் இழப்பை மட்டுமே ஈடு கட்டும் திட்டம் அது. ஆங்கிலத்தில் அதனை TERM INSURANCE என்று சொல்லுவார்கள். நான் என் உயிரை குறிப்பிட்ட தொகைக்கு காப்பீடு, குறிப்பிட்ட கால அளவிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை நான் ப்ரீமியம் செலுத்தி வர வேண்டும். அந்தக் கால அளவிற்கு உள்ளாக நான் உயிர் இழக்க நேர்ந்தால் காப்பீடு நிறுவனம் அந்தப் பணத்தை நான் ஏற்க்கனவே நியமித்து உள்ள என் உறவினருக்கு அளிக்கும். ஆனால் ஒப்பந்த காலம் தாண்டி நான் உயிரோடு இருந்தால் நான் கட்டிய பணம் எதுவும் எனக்குத் திரும்பிக் கிடைக்காது.


ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அல்லவா ?
சரி நமது வண்டிக்கு வருடாவருடம் காப்பீடு செய்கிறோம், ஏதாவது விபத்து நடந்தால் மட்டும்தானே இழப்பீடு கிடைக்கிறது. இல்லை என்றால் நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடுத்த வருட பிரீமியத்தை கட்டத்தானே செய்கிறோம். அப்போது அதே எண்ணத்தை ஏன் ஆயுள் காப்பீடுக்கும் கொண்டு செலுத்தக் கூடாது ?

இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் (Life Insurance Corporation of India) உருவாக்கப்பட்ட போது, அதாவது பல ஆயுள் காப்பீடு நிறுவனங்களை தேசியமயமாக்கி ஒன்றாக இணைத்த போது, பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவித்து, அதை அரசாங்கத்தின் வசம் சேர்த்து, அதனை வைத்து பல்வேறு கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டி இருந்தது. அது போக காப்பீடு செய்துகொண்டவர் இறந்து போனால் அதற்க்கு இழப்பீடு கிடைக்கும் என்பதனை நேரடியாகச் சொல்ல இயலாத நிலை இருந்தது. எனவே ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிறந்த சேமிப்பாக மட்டுமே மக்களிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மாதம் ஒன்றிக்கு ஐம்பதாயிரம் தேவைப் படும் ஒரு குடும்பத்திற்கு, அந்தக் குடும்பத்தின் சம்பாதிக்கும் உறுப்பினர் இழப்பால் பத்து லட்சம் ரூபாய் காப்புத்தொகையாகக் கிடைத்தாலும், அந்தப் பணம் அக்குடும்பத்தின் இரண்டு வருடத்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது.

பொருளாதாரத்தில் சுயசார்ப்பு அடையநினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, சரியான அளவில் தங்களைக் காப்பீடு செய்து கொள்வதுதான். இதனை சிறுவயதில் ( முப்பது வயதிற்கு உள்ளாக) செய்து கொண்டால் ப்ரீமியம் தொகை மிகக் குறைவாகவே இருக்கும்.

மற்றைய அசையும் அசையாச் சொத்துகள் போலல்லாது மனித உயிரின் மதிப்பு வயது ஏற ஏறக் கூடும். உங்கள் வருடவருமானதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்ததுபோல உங்கள் ஆயுள் காப்பீட்டை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வீடு கட்டுவது போன்ற பெரும் முதலீட்டில், பெரிய அளவு கடன் வாங்கும் போது, அந்தக் கடனின் அளவிற்கு தனியாகக் காப்பீடு செய்து கொள்ளுங்கள். 

சனி, 21 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - எது சரியான அளவு ?

ஒரு சமுதாயத்தில் அல்லது  ஒரு குழுவில் உள்ள மிகச் சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை அந்தக் குழுவில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறைதான் காப்பீட்டின் உட்கருத்து.

உதாரணமாக ஒரு கிராமத்தில்  நூறு  வீடுகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீடும் ஆயிரம் ரூபாய் மதிப்பு உடையவை. எதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு  வருடமும் இரண்டு வீடுகள் வசிக்க இயலாமல் போய் விடுகிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது ரூபாய் இரண்டாயிரம். இதனை அந்த நூறு வீட்டின் உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வது என்றால் அவர்கள் அனைவரும் இருபது ரூபாய் பங்களிப்பு செய்தால் போதும் அல்லவா. இப்படிதான் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல மக்களின் பங்களிப்பைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் பணியே காப்பீடு நிறுவனங்களின் பணி.

மனித வாழ்வில் இரண்டு பிரச்சனைகள் வரலாம்.
                       1. மிகச் சிறிய வயதில் ஒருவர் இறக்கநேரிடலாம்
                       2. மிக அதிகமான ஆயுளோடு ஒருவர் உயிர்வாழலாம்.

முதல் நிலையில் அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவி தேவைப்படலாம். இரண்டாவது நிலையில் அவருக்கே வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பணம் தேவைப்படலாம். இதற்கு ஆயுள் காப்பீடு எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்போம்.

அநேகமாக நம் அனைவருக்கும்  ஒரு இரண்டு சக்கர வண்டியோ இல்லை நான்கு சக்கர வண்டியோ வாங்கிய அனுபவம் இருக்கும். அப்போது அந்த வண்டிக்கு காப்பீடு செய்து இருப்போம். அந்தக் காப்பீடு என்பது அந்த வண்டியின் விற்பனை விலைக்கே செய்வோம்.எந்தப் பொருளுக்கும் அதிகபட்சமான காப்பீடு என்பது அதன் விற்பனை விலைதான்.

அப்படி என்றால் மனித உயிருக்கு விலை என்ன ? அதனை எப்படி நிர்ணயம் செய்வது. இந்தக் கேள்விக்கான பதிலை காப்பீடு செய்யப்படும் மனிதரின் வருமானத்தை வைத்து நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

நாம் உரிய முறையில் காப்பீடு செய்து கொண்டு இருக்கிறோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது. இதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உதாரணமாக நான் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் உத்தேசமாக எழுவது சதவிகிதம்தான் என் குடும்பத்திற்கு வந்து சேரும். மீதி உள்ள முப்பது சதவிகிதம் பணம் பொருளீட்ட செலவாகிவிடும். வருமான வரியாகவோ, நான் பணிசெய்யும் நிறுவனத்திற்கு போய் வரும் போக்குவரத்து செலவாகவோ, என் வேலைக்காக நான் அணியும் உடைகள் என்று இந்தப் பணத்தை நான் செலவு செய்து விடுகிறேன்.

ஒரு வேலை நாளை நான் இல்லை என்றால், இந்த எழுவது சதவிகித அளவிலான பணம் என் குடும்பத்திற்கு மாதாமாதம் வரும் என்றால், அவர்கள் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருப்பார்கள் அல்லவா ?

எவ்வளவு ஒரு தொகையை முழுவதும் பாதுகாக்கப் பட்ட முதலீட்டில் இட்டு, அதன் வட்டி வருமானம் இந்த எழுவது சதவிகித வருமானத்தை அளிக்குமோ அந்தத் தொகையே என் உயிரின் மதிப்பாக இருக்க முடியும், அந்த அளவிற்கு நான் ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக

மாத வருமானம்                                     1,00,000
என் செலவுகள்                                           30,000
குடும்பத்திற்கு கிடைப்பது                70,000

இன்றைய நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதம் 8%.

என் குடும்பத்தின் தேவை ஒரு ஆண்டிற்கு       8,40,000
ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் என் குடும்பத்திற்கு என்று வங்கியில் முதலீடாக இருந்தால் இந்த அளவு பணம் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆக, ஏறத்தாழ சரியான அளவிலான ஆயுள் காப்பீடு என்பது  குறைந்தபட்சமாக வருடவருமானத்திற்கு பத்து மடங்கு. ஆனால் உலக அளவில் நோக்கும்போது 8% வருட வட்டி என்பது மிக அதிகம். இது நிச்சயமாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சமாக உங்கள் வருட வருமானத்திற்கு இருபது மடங்கு காப்பீடு தேவை என்று வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

உங்கள் வருட வருமானம் என்ன ?
உங்களின் மொத்த ஆயுள் காப்பீடு எவ்வளவு ?  

வியாழன், 19 மார்ச், 2015

காப்பீடு, காப்பீடு, காப்பீடு

நாள்தோறும் பல மனிதர்கள் இறப்பதைப் பார்த்தபின்னரும், தான் நிரந்தரமாக இருப்போம் என்று மனிதன் எண்ணுவதுதான் உலகின் ஆச்சரியமான விஷயம் 

யக்ஷப்ப்ரச்னம் - மகாபாரதம்


பணத்தை சேமிக்கும் வழியைக் கேட்டால், காப்பீடில் சேர்ந்து செலவழிக்கும் வழியை ஏன் பேச ஆரம்பிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? எப்படி அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டடம் கட்ட முடியாதோ அது போலவே காப்பீடு இல்லாமல் முதலீட்டைப் பற்றி பேச முடியாது.

நீங்கள் சமீபத்தில் எப்போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டீர்கள் ? அப்போது அந்த காப்பீடு நிறுவனத்தின் முகவர் என்ன சொல்லி உங்களிடம் கையெழுத்து வாங்கினார் ?

வரியை சேமிக்கலாம் என்றா ? இல்லை உங்கள் குழந்தையின் பெயரில் காப்பீடு செய்யுங்கள், அந்தக் குழந்தை வளர்ந்து சரியான வயதில் படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க பணம் கிடைக்கும் என்றா ? இல்லை வருடம் ஐந்தாயீரம் வீதம் முதலீடு செய்தால் இருபது வருடங்கள் கழித்து உங்களுக்கு நீங்கள் செலுத்திய ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றா ? வாருங்கள், உங்களுக்காகத்தான் இந்தப் பகுதி.

காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது 
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் 

காப்பீடு நிறுவன முகவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் பாடமே இதுதான். அதனாலே பல முகவர்கள் வாடிக்கையாளர்கள் தலையில் அமர்ந்து காப்பீடை விற்கிறார்கள். 

இறப்பு என்பது உறுதி, ஆனால் அது நமக்கு வரவே வராது என்பது தான் பொதுவாக மனித மனதின் நம்பிக்கை. அதுவும் நீங்கள் இறந்து போனால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று பேச ஆரம்பித்தால், ஒரு சராசரி இந்தியனால் கோபப்படாமல் இந்தப் பேச்சை கேட்கவே முடியாது. 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சராசரி இந்தியனின் ஆயுள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் முப்பதுகளின் மத்தியில், நாற்பதின் ஆரம்பத்தில், ஐம்பதின் அருகில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் வெளி உலகம் தெரியாத மனைவி, படிப்பை முடிக்காத பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் இத்தோடு முடிவையாத கனவுகள் என்று அவர்கள் குடும்பம் சந்திக்கும் சவால்களை நினைத்துப் பாருங்கள். அநேகமாக உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் உறுப்பினராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து போய் இருக்கும் இன்றைய காலகட்டதில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது நண்பர்களே, ஆனால் நாம் சற்றே சுதாரிப்பாக இருப்பதில் தவறு இல்லை அல்லவா. காப்பீட்டின் பல் வேறு வடிவங்களை நாம் சற்றே உற்று நோக்குவோம்.