செவ்வாய், 6 ஜனவரி, 2026

ஜனவரி 6 - கௌரவ கேப்டன் பானாசிங் பிறந்ததினம்

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வரும் அந்த முதியவர் வருடம் தோறும் ஜனவரி மாதம் தனது ராணுவ உடுப்புகளைகளையும் தான் பெற்ற விருதுகளையும் நெஞ்சில் தரித்துக் கொண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவருக்கு ராணுவ முறைப்படி வணக்கம் வைத்து மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்புவது வழக்கம். 

அந்த எளிய மனிதரின் பெயர் பானாசிங். வீர சாகசச் செயலுக்காக பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர் அவர். அந்த வீரரின் பிறந்ததினம் இன்று.  பானாசிங் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர். அவரது குடும்பம் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தது. 1949ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்த பானாசிங், தனது இருபதாம் வயதில் பாரத ராணுவத்தில் காஷ்மீர் படைப்பிரிவில்  தன்னை இணைத்துக்கொண்டார். இமயமலைப் பகுதிகளைக் காப்பாற்ற நடைபெறும் போர்களில் பங்குகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி இவருக்கு அளிக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் தஜகிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக பாரதநாட்டைக் கடந்து சீனா வரை ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் அளவிலான  மலைத்தொடர் காரகோரம் மலைத்தொடர். துருவப்பகுதிகளுக்கு வெளியே பனிப்பாறைகள் அமைந்துள்ள இடம் இது. உடலை உருகவைக்கும் குளிர் பிரதேசமான இந்த மலைத்தொடரில் கடல்மட்டத்தில் இருந்து 18.875 அடி உயரத்தில் அமைந்துள்ளது  சியாச்சின் பகுதி. 

சியாச்சின் என்பது ஒரு தனி உலகம். அங்கே செல்லாதவர்களுக்கு அதன் அழகையோ  அல்லது அதனை காத்து நிற்கும் வீரர்கள் படும் துன்பங்களையோ புரிந்துகொள்ள முடியாது. உலகத்தின் கூரையாக பார்க்கும் இடங்களில் எல்லாம்  பனிப்பாறைகளும் பனிக்கட்டிகளும் நிறைந்திருக்கும் இடம் அது. கொஞ்சும் அழகோடு கவனமாக இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கும் அபாயகரமான இடம் அது.  பூஜ்யத்திற்கு கீழே நாற்பது  டிகிரி செல்சியஸ் குளிரும், அதோடு நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் உறைய வைக்கும் குளிர் காற்றும் வீசும் இடம் இது. 

இங்கே போரில் இறந்தவர்களை விட உறைய வைக்கும்  குளிரால், கடினமான காலநிலையால் மலைச்சரிவால் பனிப்பொழிவால்  என்று இயற்கைப் பேரிடர்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகின் மிக உயரமான இந்தப் பகுதியைக் கைப்பற்றவும், காப்பாற்றித் தக்கவைக்கவும் பல பாரத வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இடமும் இதுதான். உலகின் மிக உயரமான மற்றும் கடினமான போர்க்களம் இது. 

1987ஆம் ஆண்டு நடைபெற்ற  ஊடுருவல் மூலம் பாகிஸ்தான் சால்டோரா மலைத்தொடரில் பிலாபோண்ட் கணவாய் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கியது.  அதற்கு காயித் இ ஆசம் தளம் என்று பெயர் சூட்டியது. காயித் இ ஆசம் என்ற பெயர் பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவின் பெயர். இங்கிருந்து பாகிஸ்தான் படைகளால் பாரதத்தின் பாதுகாப்பு நிலையங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்கள் வருவதையும் கண்காணிக்க முடியும். மலை உச்சியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பாரத ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. தரைமட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி உள்ளது. 457 மீட்டர் உயரமுள்ள பனிப்பாறைகள் இதனைச் சுற்றி உள்ளது. ஏறக்குறைய செங்குத்தான பாறைகள் இவை. மேலே உள்ள எதிரியை கண்களில் படமால் இங்கே வந்து சேர்வது என்பது நடக்கவே முடியாத ஓன்று. எதிரிப் படைகளை அங்கே இருந்து அகற்றி, அந்தத் தளத்தைக் கைப்பற்றாமல் விட்டால் காஷ்மீரின் பல இடங்களை பாரதம் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தாக்குதல் என்பது அநேகமாக மரணத்தைத் எதிர்கொள்வதாதான் இருக்கும். ஆனால் இந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது.

 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் காலாள்படைப் பிரிவைச் சார்ந்த செகண்ட் லெப்ட்டினென்ட் ராஜிவ் பாண்டே தலைமையில் எட்டு வீரர்கள் கொண்ட படை பனிமலையில் எறத் தொடங்கியது. ஆபரேஷன் மேகதூத் என்று இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது. மலையுச்சியை அடைவதற்கு முப்பது மீட்டரே இருக்கும்போது அவர்களை பாகிஸ்தான் படை கண்டுகொண்டு துப்பாக்கியால் சுடச் தொடங்கியது. அதில் ராஜிவ் பண்டேயும் ஐந்து வீரர்களும் வீரமரணம் அடைந்தார்கள். ராஜிவ் பாண்டேவுக்கு வீர் சக்ரா விருது வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. 

காயித் இ ஆசாம் தளத்தைக் கைப்பற்றவும் ராஜிவ் பாண்டே மற்றும் அவரது அணியின் வீர மரணத்திற்குப் பழி வாங்கவும் அடுத்த தாக்குதலை நடத்த பாரத ராணுவம் தயாரானது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ராஜிவ் என்று பெயர் சூட்டப்பட்டது. மேஜர் வரீன்தர்சிங் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். கேப்டன் அணில்சர்மா உள்ளிட்ட அறுபத்தி இரண்டு வீரர்கள் இந்தத் தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

இரண்டு முறை முயற்சி செய்தும் அவை வெற்றியாடாததால் ஒரு இறுதித் தாக்குதலை நடத்த வரீன்தர்சிங் முடிவு செய்தார். எட்டு வீரர்களது வரீன்தர்சிங் ஒரு பக்கத்தில் இருந்தும் ஐந்து பேர் கொண்ட படையோடு மறுபக்கமாக பானாசிங் தலைமையில் மற்றொரு படையும் மலை ஏறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

நீண்ட கடினமான பாதையின் வழியாக மலையுச்சியை சென்றடைய பானாசிங் முடிவு செய்தார். இருளைப் பயன்படுத்தி செங்குத்தான மலையை பானாசிங் படை சென்றடைந்தது. பதுங்குகுழியில் இருந்த பாகிஸ்தான் ராணுவவீரர்கள்மீது கையெறிகுண்டை எறிந்து  அதோடு அந்தக் குழியின் கதவையும் பூட்டி அவர்களை பானாசிங் அழித்தொழித்தார். மீதி இருந்த பாகிஸ்தான் வீரர்களோடு நேருக்குநேரான சண்டையில் மீதம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். இமயத்தின் உச்சியில் மீண்டும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. 

காயித் இ ஆசம் முனைக்கு பானாசிங் முனை என்று பெயரிட்டு அந்த வீரனை பாரத ராணுவம் மரியாதை செலுத்தியது. மிகவும் கடினமான சூழ்நிலையில் தலைமைப் பண்பையும் மகத்தான வீரத்தையும் வெளிப்படுத்தியதற்காக பானாசிங்கிற்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் ராஜீவில் பங்குகொண்ட வீரர்களுக்கு  ஒரு பரம்வீர் சக்ரா, ஒரு மஹாவீர் சக்ரா, ஏழு வீர் சக்ரா, ஒரு சேனா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 

முப்பதாண்டு ராணுவ சேவைக்குப் பிறகு பானாசிங் 2000ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கௌரவ கேப்டன் பதவி கொடுத்து ராணுவம் மரியாதை செய்தது. பானாசிங்கின் மகன் ராஜிந்தர்சிங்கும் 2008ஆம் ஆண்டு முதல் பாரத ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.  

திங்கள், 5 ஜனவரி, 2026

ஜனவரி 5 - முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் -


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான திரு முரளி மனோகர் ஜோஷியின் பிறந்தநாள் இன்று. 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாள் இன்றய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா பகுதியில்  பிறந்த ஜோஷி, இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை அலஹாபாத் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். நிறமாலையில் ( Spectroscopy ) முனைவர் பட்டம் பெற்ற ஜோஷி, அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னாளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக இருந்த பேராசிரியர் ராஜேந்திரசிங்கின் மாணவர் திரு ஜோஷி. முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஹிந்தி மொழியில் சமர்பித்தவர் ஜோஷி. பாரதத்தில் முதல் முறையாக ஹிந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை இதுதான்.

சிறு வயதிலேயே பசு பாதுகாப்பு இயக்கத்திலும், நிலவரி குறைப்பு போராட்டங்களிலும் ஜோஷி பங்கு பெற்றார். பாரதிய ஜன சங்கத்திலும், அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷித் அமைப்பிலும் ஜோஷி பல்வேறு பொறுப்புகளை வகித்தார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்ட தலைவர்களில் ஜோஷியும் ஒருவர்.

அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களவைக்குத் தேர்வான ஜோஷி, ஜனதா கட்சியின் நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பேற்றார். ஜனதா கட்சி உடைந்த பிறகு உருவான பாரதிய ஜனதா கட்சியில் அகில பாரத செயலாளராகவும் பின்னர் பொருளாளராகவும் பணியாற்றினார்.

பிஹார், வங்காளம், வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றிய ஜோஷி, அங்கெல்லாம் பாஜக காலூன்ற வகை செய்தார். 1991 - 1993 காலகட்டத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவராகவும் ஜோஷி பொறுப்பு வகித்தார்.

1977, 1996, 1998, 1999, 2009, 2014 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அல்மோரா, அலஹாபாத், வாரணாசி, கான்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து ஜோஷி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 1992, 2004ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபை உறுப்பினராகவும் ஜோஷி தேர்வானார்.

முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் உருவான அரசின் உள்துறை அமைச்சராகவும், பின்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் ஜோஷி பணியாற்றி உள்ளார்.

நூற்றுக்கும் மேலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் விகல்ப் மற்றும் பிரக்யா பிரவாக் என்ற நூல்களையும் ஜோஷி எழுதியுள்ளார். ஜோஷியின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் உலகின் புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. திருப்பதி சமிஸ்க்ரித பல்கலைக்கழகம் முரளி மனோகர் ஜோஷிக்கு மஹோமஹோபாத்தியாய பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது. ஜோஷியின் சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாரத அரசு அவருக்கு 2017ஆம் ஆண்டு பத்மவிபூஷன் பட்டத்தை அளித்துள்ளது.

முதுபெரும் தலைவர் முரளி மனோகர் ஜோஷி இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ்ந்து கட்சியையும், நாட்டையும் அறிவுரை கூறி வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, திரு ஜோஷி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஜனவரி 4 - பொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம்

நீண்டதொரு வரலாறும், நெடிய பாரம்பரியமும் கொண்டது நமது பாரத நாடு. நம் நாட்டின் பிரச்சனைகளும் சவால்களும் தனித்துவமானவை. அதற்கான தீர்வை நமது வேர்களில் இருந்துதான் கண்டடைய வேண்டுமேயன்றி, மேலைநாட்டுச் சிந்தனைகளில் இருந்து நமக்கான தீர்வுகளை கண்டுகொள்ள முடியாது. இந்த நாட்டைப் பற்றி தெரிந்தவர்களின் எண்ணம் இப்படித்தான் இருக்க முடியும். அப்படி காந்திய சிந்தனைகளின் வழியே பொருளாதாரக் கொள்கையை வகுத்தளித்த ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ்.என்ற ஜே சி குமரப்பாவின் பிறந்ததினம் இன்று.


தஞ்சாவூரில் அரசு பொதுப்பணித்துறை ஊழியரான சாலமன் துரைசாமி கொர்னிலியசுக்கும், எஸ்தருக்கும்  ஏழாவது குழந்தையாக 1892 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் குமரப்பா பிறந்தார். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் படித்த குமரப்பா, பட்டயக் கணக்காளர் பட்டதைப் பெற்று, அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்திலும் மேலாண்மைத் துறையிலும் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆங்கில ஆட்சி பாரத மக்களை மேம்படுத்தியது என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், மக்களின் வறுமைக்கான அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களைத் தேடி தனது ஆய்வை குமரப்பா மேற்கொண்டார். பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்தான் பாரத நாட்டின் வறுமைக்குக் காரணம் என்பதை தனது ஆய்வின் மூலம் கண்டறிந்த குமரப்பா, அந்நிய ஆட்சியை அகற்றினால்தான் மக்களின் வறுமை அகலும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தார். தனது ஆய்வுக் கட்டுரைக்கு முன்னுரை வழங்குமாறு, அதனை காந்திக்கு அனுப்பி வைத்தார். தனது சுதேசிக் கொள்கைக்கு குமரப்பாவின் ஆய்வு வலுச் சேர்ப்பதை அறிந்த காந்தி தனது எண்ணங்களுக்குக் கருத்தாக்க வடிவம் கொடுக்கவும், கிராமப்புற மேம்பாடு பற்றிய தனது கனவுகளை நனவாக்கவும், அவருடைய பணி உதவும் என நம்பினார்.

காந்தியின் அறிவுரையின் பேரில் குமரப்பா, குஜராத் வித்யாபீடத்தின் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒன்பது மாணவர்களின் துணையோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றித் திரிந்து அதன் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை ஒன்றை காந்தியிடம் அளித்தார். தற்சார்புடைய கிராமங்கள், எதற்கும் எந்த பெருநகரத்தையும் நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லாத கிராமங்கள், இயந்திரங்கள் மூலமான உற்பத்தி அல்லாது, பலர் உழைப்பின் மூலம் பொருள்கள் உருவாக்கம், மிகச் குறைந்த அளவில் மக்களின் வாழ்வில் தலையிடும் அரசாங்கம் இதுதான் காந்தி கனவு கண்ட இந்தியா. அசைக்கமுடியாத ஆதாரங்களின் மீது உருவான குமரப்பாவின் ஆய்வு, காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்தது. அரசின் திட்டங்கள் எப்படி தேவைப்படும் ஏழைகளை அடைவதில்லை என்பதையும் உண்மையில் பாரத மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதையும் மட்டுமல்லாது, அதற்கான தீர்வையும், மாற்றுத் திட்டங்களையும் சேர்த்தே குமரப்பா கொடுத்தார்.

வசதியான குடும்பப் பின்னணி, அதிலும் அந்நிய நாட்டில் பெரிய படிப்பு எனவே குமரப்பா ஆங்கில உடைகளைத்தான் அதுவரை அணிந்திருந்தார். ஆனால் மக்களின் நிலைமை அவர் மனதை மாற்றியது. ஆங்கில உடைகளைத் தவிர்த்து அவர் பாரத நாட்டின் உடைகளை கதர் ஜிப்பா, கதர் வேஷ்டி, கதர் குல்லாய் என்று அணியத் தொடங்கினார். கொர்னிலியஸ் என்ற பெயரையும் துறந்து தங்கள் குடும்பப் பெயரான குமரப்பாவை இணைத்துக்கொண்டு ஜே சி குமரப்பா என்று அறியப்படலானார்.

காந்தி தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். கருத்துச் செறிவு, அசைக்கமுடியாத ஆதாரங்களின் மேல் எழுதப்படும் கட்டுரைகள், ஆவேசமான நடை இவை குமரப்பாவிற்கு இயல்பாகவே கைவசம் ஆனது. இவை பிரிட்டிஷ் அரசை தடுமாறச் செய்தது. ஆங்கில அரசு யங் இந்தியா அச்சகத்தைப் பறிமுதல் செய்தது. பத்திரிகையை தட்டச்சு செய்து, நகலெடுத்து குமரப்பா வெளியிட்டார். இன்றய இந்திய அரசு பிரிட்டிஷ் மக்களின் எண்ணத்திற்கேற்பவே நடைபெறுகிறது, இது இந்திய மக்களுக்காக நடைபெறவில்லை. எனவே சட்டப்படி டெல்லியில் இருந்தல்ல லண்டனிலில் இருந்துதான் அரசு செயல்படவேண்டும் என்று குமரப்பா எழுதிய கட்டுரைக்காக அரசு அவரைச் சிறை பிடித்தது. மொத்தம் மூன்று முறை அவர் எழுதிய கட்டுரைகளுக்காக குமரப்பா சிறையானார்,

எந்தத் திட்டத்தையும் தீட்டும் முன்பு ஏழை மனிதன் ஒருவனின் விலா எலும்புகளை எண்ணிப் பாருங்கள். திட்டம் நிறைவேறிய பிறகு, அந்த விலா எலும்புகள் தெரியாத வண்ணம் அவனுக்கு சதை போட்டிருக்குமானால், உங்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டது என்று கூறிவிடலாம். இதுதான் நாட்டின் திட்டத்தின் அளவுகோல் என்பது குமரப்பாவின் கருத்து.

சுரண்டலற்ற பொருளாதாரம் சாத்தியம் என்றும் அதுவே பாரதத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றும் குமரப்பா நம்பினார். இயற்கை வளம் என்பது நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து பெற்ற கடன்தான், இயற்கை வளத்தை அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் குமரப்பாவின் கருத்து. ஆனால் அரசின் திட்டப்படி அமையும் பொருளாதாரம், பெரும் அணைகள், பெரிய தொழில்சாலைகள் ஆகியவை நேருவின் கனவாக இருந்தது. குமரப்பா ஓரம் கட்டப்பட்டார்.

உடல்நலம் குன்றிய குமரப்பா கல்லுப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் வந்து வசிக்கத் தொடங்கினார். நினைத்திருந்தால் பெரிய பதவிகளில் அமர்ந்து பெரும் பொருள் ஈட்டி இருக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டு, திருமணமே செய்து கொள்ளாமல், நாட்டின் பொருளாதார சிந்தனையை கட்டமைப்பதிலே குமரப்பா தன்னை அர்ப்பணித்தார்.

நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத்தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார். சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் குமரப்பா பாரதத்தாயின் காலடியில் அர்ப்பணமானார் 

சனி, 3 ஜனவரி, 2026

ஜனவரி 3 - வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்ததினம்

பாரத நாட்டின் வரலாற்றில் தாயகத்தைக் காக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராடியது உண்டு. கல்வியிலும் வீரத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று உதாரண நாயகியாக முதல் சுதந்திரப் போருக்கு முன்னே ஆங்கில ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாரின் பிறந்ததினம் இன்று.



1730ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் ராமநாதபுர மன்னரான முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி - முத்தாசாள் நாச்சியார் தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். தனது ஒரே மகளை மகன் போலவே வளர்த்தார் விஜயரகுநாத சேதுபதி. வேலுநாச்சியாரும் சிலம்பம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என்று போர்கலைகளிலும் தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடத்திலும் சிறந்து விளங்கினார்.

உரிய வயதில் வேலுநாச்சியாரை சிவகங்கை இளவரசர் முத்துவடுகநாத உடையதேவர் திருமணம் செய்துகொண்டார். களரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் இணையற்ற வீரராக திகழ்ந்தவர் முத்துவடுகநாதர். வீரமும் இறை நம்பிக்கையும், மக்களின் நல்வாழ்வில் அக்கறையும் கொண்ட ஆதர்ச தம்பதியராக முத்துவடுகநாதரும் வேலுநாச்சியாரும் இருந்தனர்.

1772ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களோடு இணைந்து சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தார். காளையார்கோவிலில் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் உறுதியோடு வேலுநாச்சியார் சிவகங்கை சீமையை விட்டு வெளியேறினார். திண்டுக்கல் நகரின் அருகே உள்ள விருப்பாட்சிபாளையத்தின் அரசர் கோபாலநாயகர் வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தார். ஏற்கனவே ஆங்கிலேயர்களோடு சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஹைதர் அலியின் உதவியை வேலுநாச்சியார் நாடினார். ஹைதர் அலியும் வேலுநாச்சியாருக்கு உதவுவதாக வாக்களித்தார்.

விருப்பாட்சிபாளையத்தில் தங்கி இருந்தவாறே தனது படைகளைத் திரட்டிய வேலுநாச்சியார், முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்து சின்ன மருதுவின் தலைமையில் ஒரு பிரிவை திருப்பத்தூரில் தங்கி இருந்த ஆங்கிலப் படையை தாக்குமாறு கூறி, மற்றொரு பிரிவை பெரிய மருதுவின் தலைமையில் சிவகங்கையை தாக்குமாறும் ஆணையிட்டார்.

அது நவராத்திரி விழாக்காலம். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சக்தியை வழிபடும் விஜயதசமி திருநாள். அன்று தனது பெண்கள் படையோடு மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்த வேலுநாச்சியார், அங்குள்ள ஆங்கில வீரர்களைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார். ராணியின் மெய்க்காவல் படையைச் சேர்ந்த குழலி என்ற பெண் தன்னையே எரிந்துகொண்டு கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கினாள். உலகின் முதல் தற்கொலை தாக்குதல் இதுதான். ராணியைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெள்ளையரால் வெட்டுப்பட்டு மரணமடைந்த உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் நாட்டி, தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார் வேலுநாச்சியார்.  அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

சிவகங்கை மீண்டும் சுதந்திர நாடாக மாறியது. கோட்டையின் உச்சியில் சிவகங்கையின் அனுமக்கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கத் தொடங்கியது. இதனை அவர் நிகழ்த்திக் காட்டியது தனது ஐம்பதாவது வயதில். சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார்.

1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த  வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார் வேலு நாச்சியார்.  வெள்ளச்சியின் மறைவுக்குப்பின்னர் மனமுடைந்த வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில் தங்கலானார். அங்கேயே 1796ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் வேலுநாச்சியார் காலமானார்.

வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கு என்றுமே மரணம் கிடையாது. வேலுநாச்சியாரின் வழியில் இன்று பாரத தேசத்தின் ராணுவத்தில் பல பெண்கள் தங்களின் திறமையை தியாகத்தை பறை சாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 


வியாழன், 1 ஜனவரி, 2026

ஜனவரி 1 - காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் பிறந்ததினம்



நாடு சுதந்திரம் அடைய மிகச் சரியாக ஐந்தாண்டுகள் இருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் அது. ஐம்பது வயதான அந்த மனிதர் உயிரற்ற உடலாக ஆகாகான் மாளிகையில் கிடத்தப்பட்டு இருந்தார். எழுபத்தி மூன்று வயதான முதியவர் "மஹாதேவ், மஹாதேவ்" என்று குரல் கொடுத்து அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். " இருபத்தி ஐந்தாண்டுகளாக எனது எந்த ஆணையையும் இவன் மீறியதே இல்லை, இன்றுதான் பதில் சொல்லாமல் இருக்கிறான்" என்று கூறியபடி உயிரற்ற அந்த உடலை குளிப்பாட்டி, தன் மகனைப் போல இருந்தவனுக்கு அந்த முதியவர் தந்தைக்கு மகன் செய்வது போல இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார். தந்தை இருக்கும்போது மகன் இறக்க நேரிடும் இல்லங்களில் நாம் காணும் காட்சிதான் இது. ஆனால் அங்கே இறந்து கிடந்தவர் மஹாதேவ தேசாய், இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியவர் காந்தி.

காந்தியின் செயலாளராக, அவரின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சராக, காந்தியின் வாழ்வின் முக்கியமான கட்டத்தைப் பதிவு செய்தவராக, பல நேரங்களில் காந்தியின் சமையல்காரராக, காந்தியின் மகனாக  இருந்த மஹாதேவ தேசாயின் பிறந்ததினம் இன்று. இன்றய குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் பிறந்தவர் மஹாதேவ் தேசாய். எளிய குடும்பத்தில் பிறந்த தேசாய், தனது ஆரம்ப கல்வியை சூரத்தில் முடித்து பின்னர் மும்பை எலிபென்டைன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். இதற்கிடையில் அன்றய வழக்கத்தின்படி தனது பதின்மூன்றாம் வயதில் மஹாதேவ தேசாய் துர்காபென் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி அப்போதுதான் பாரதம் திரும்பி இருந்தார். 1915ஆம் ஆண்டு முதல்முறையாக மஹாதேவ தேசாய் காந்தியை சந்திக்கச் சென்றார். ஜான் மோர்லே என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அவர் அப்போது குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அதனைப் பிரசுரம் செய்வது பற்றி காந்தியின் ஆலோசனையை அவர் கேட்க விரும்பினார். அந்த சந்திப்பு பின்னர் பலமுறை காந்தியை நேரில் கண்டு பழகும் வாய்ப்பை தேசாய்க்கு அளித்தது. 1917ஆம் ஆண்டு தேசாயை தன்னோடு தங்கி இருக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள், அதாவது தான் இறப்பதற்கு முன்தினம் வரை முழுமையாக தேசாய் பதிவு செய்துள்ளார்.

காந்தியோடு இணைந்த பிறகு தேசாய் முதன்முதலாக பிஹார் மாநிலத்திற்கு காந்தியோடு சென்றார். அநேகமாக தேசாய் இல்லாது காந்தி யாரையும் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். காந்தி இங்கிலாந்து சென்றபோது, அன்றய பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார், அந்த சந்திப்பில் உடனிருந்த ஒரே ஒருவர் தேசாய்தான் என்றால் காந்தியின் மனதில் தேசாயின் இடம் என்ன என்பது நமக்குப் புரியும். சொல்லப்போனால் விடுதலைப் போரில் காந்தியின் முக்கியத் தளபதிகளாக இருந்த நேரு, படேல் இவர்களைக் காட்டிலும் தேசாய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். காந்தியோடு இருப்பது என்பது எந்த நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருப்பது என்றுதான் பொருள். தேசாயும் பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது. தான் எழுதிய கட்டுரைக்காக 1921ஆம் ஆண்டு முதன்முதலில் சிறையான தேசாய், பின்னர் உப்பு சத்தியாகிரஹம், சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

மஹாதேவ தேசாய் ஒரு சிறந்த எழுத்தாளருமான இருந்தார். குஜராத்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் அவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். நவஜீவன், எங் இந்தியா, ஹரிஜன், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆனந்த பஜார் பத்திரிகா ஆகிய பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. பர்தோலி சத்தியாகிரஹம் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் எழுதினார். காந்தி தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தேசாய்தான். கீதை பற்றி காந்தி பல்வேறு இடங்களில் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து காந்தியின் பார்வையில் கீதை என்ற நூலை அவர் எழுதினார். வல்லபாய் படேல், கான் அப்துல் கபார் கான் ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள், வங்கத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர் சரத்சந்திர சட்டோபாத்யாய எழுதிய பல்வேறு சிறுகதைகள், மற்றும் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம் ஆகியவற்றை தேசாய் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

காந்தியோடு அவர் இருந்த காலத்தில் எழுதிய நாள்குறிப்புகள் இருபத்தி இரண்டு தொகுதி கொண்ட மஹாதேவபாய் டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இது தேசாயின் மரணத்திற்குப் பிறகு பிரசுரமானது. காந்தியின் வாழ்வைப் பற்றியும், பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பல முக்கியமான தகவல்கள் கொண்ட களஞ்சியமாக இது விளங்குகிறது. இந்த நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது தேசாய்க்கு அவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்று மக்களுக்கு அறிவுரை பிறந்தது. இந்த நாட்டை யாரிடம் கொடுப்பது என்று கேட்கிறார்கள்,யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள், திருடனிடமோ, கொள்ளைக்காரனிடமோ யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கூறப்பட்டது. முழு பலத்தோடு ஆங்கில அரசு போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்தது. நாட்டின் பல்வேறு தலைவர்கள் உடனைடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் நாள் காந்தி கைதானார். மஹாதேவ தேசாயும் அவரோடு கைது செய்யப்பட்டார். அவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். ஆறே நாட்களில் மாரடைப்பால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் தேசாய் காலமானார்.

நாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவரான மஹாதேவ தேசாயின் பிறந்ததினத்தில் ஒரே இந்தியா தளம் அவருக்கு தன் மரியாதையை செலுத்துகிறது. 

புதன், 31 டிசம்பர், 2025

டிசம்பர் 31 - அறிவியல் தமிழ் வளர்த்த பெ நா அப்புஸ்வாமி பிறந்தநாள்

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 
என்று முழங்கிய பாரதியின் கனவை நிறைவேற்றும் வண்ணம் எளிய தமிழில் அறிவியலை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்த அறிஞர் பெருங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி என்ற பெ நா அப்புஸ்வாமியின் பிறந்ததினம் இன்று.


இன்றய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்றான பெருங்குளம் கிராமத்தைச் சார்ந்த நாராயண ஐயர் - அம்மாகுட்டி ஆகியோரின் மகனாக 1891ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பிறந்தவர் பெ நா அப்புஸ்வாமி அவர்கள். சட்டப் படிப்பை முடித்த அப்புஸ்வாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். இவரது நெருங்கிய உறவினரும், தமிழ் புதினத்தில் முன்னோடியான அ மாதவையாதான் அப்புஸ்வாமியை எழுதத் தூண்டியவர். நான் முறையாகத் தமிழ் படித்தவன் அல்ல,  என் மனைவிக்குக் கூட இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியவன் அல்ல, நான் எப்படி தமிழில் எழுத என்று அப்புஸ்வாமி குழம்பி நின்றபோது, " உங்கள் வீட்டில் தமிழ் புத்தகங்கள் பல உண்டு, நீ அதனைப் படித்திருக்கிறாய், தமிழ் அறிஞர்கள் பலர் உன் நண்பர்கள், தயங்காமல் எழுது, தேவையென்றால் அதனை நான் திருத்திக் கொள்கிறேன்" என்று கூறி அப்புஸ்வாமியை ஆற்றுப்படுத்தியவர் அ மாதவையாதான்.

இப்படித் தயங்கி நின்ற அப்புஸ்வாமிதான் நூற்றுக்கும் மேலான புத்தகங்களை, ஐயாயிரத்திற்கும் மேலான கட்டுரைகளை எழுதிக் குவித்தார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் என்று பல்வேறு கட்டுரைகளை மொழிபெயர்த்து பிரசுரித்தார்.  இவரது கட்டுரைகள் கலைமகள், கலைக்கதிர், ஆனந்த விகடன், வீரகேசரி, தினமணி ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. கலைமகள் இதழின் ஆரம்ப காலத்தின் பொறுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.

கா சுப்ரமணிய பிள்ளை, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, பி ஸ்ரீ ஆச்சாரியா ஆகிய அறிஞர்கள் அப்புஸ்வாமியின் உடன் பயின்றவர்கள். அதுபோக உ வே சாமிநாத ஐயருடனும் அப்புஸ்வாமிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் இவரது இல்லத்தில் ராஜாஜி, டி.கே.சி, கல்கி, எஸ்.வையாபுரிப்புள்ளை, வாசன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.,  ராகவ அய்யங்கார், ரா.பி.சேதுபிள்ளை. அ.சீனிவாசராகவன், கி.பட்சிராஜன், ஆர்.ராகவ அய்யங்கார், டி.எல்.வெங்கட்ராம அய்யங்கார், நாராயணசாமி அய்யங்கார் ஆகியோர் கூடி தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

தனது  இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ நா அப்புஸ்வாமி தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும் வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்து பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்து விட்டு வரும் போதுதான்  இறந்தார்.

அற்புத உலகம், மின்சாரத்தின் கதை, வானொலியும் ஒலிபரப்பும், அணுவின் கதை, ரயிலின் கதை, அறிவியல் கதைகள்  என்று ஐம்பதுகளில் அறுபதுகளில் எளிய மொழியில் அறிவியலை தமிழர்களுக்கு அறிமுகம் செய்த  பெருமை அப்புஸ்வாமிக்கே சேரும். சிறுவர்களுக்காக சித்திர விஞ்ஞானம், சித்திர வாசகம், சித்திர கதைப் பாட்டு என்ற நூல்களையும் இவர் எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல நாம் வாழும் உலகம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே அப்புஸ்வாமி சரியாக கணித்து கூறுகிறார்.

அணுப்பிளவு (Atomic Fission), துணைக்கோள் (Satellite), நுண்ணணு, மின்னணு (Electron) , புத்தமைப்பு (Invention), மூலகம் (Element), வார்ப்படச்சாலை (Foundry), நுண்ணோக்கி (Microscope), கதிரியக்கம் (Radiation), உந்து கருவி (Rocket), அங்கக ரசாயணம் (Organic Chemistry), துரிதகாரி (Accelerator), கணையம் (Pancreas), பொங்கியெழு கேணி (Artesian Well),  அறிவிக்குறி எண் (Intelligent Quotient) என்று மிக இயல்பாக அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அப்புஸ்வாமி பயன்படுத்தி உள்ளார்.

ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அப்புஸ்வாமி பல்வேறு சங்கப் பாடல்களையும், பாரதியின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவ்வளவு எழுதிக் குவித்த பெ நா அப்புஸ்வாமி பெருமளவில் அங்கீகாரம் அடையவில்லை. அவரின் அறிவை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் மதிக்கவில்லை. ஆனாலும் பலனின் மீது பற்று வைக்காமல், தனது பணியை வாழ்வின் இறுதிநாள்வரை செய்து கொண்டே இருந்தார் திரு பெ நா அப்புஸ்வாமி அவர்கள்.

அப்புஸ்வாமியின் மகள் திருமதி அம்மணி சுப்பிரமணியம் திருநெல்வேலி காந்திமதி அம்பாள் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரின் மருமகன் வழக்கறிஞர் திரு எஸ் ஜி சுப்பிரமணியம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட சங்கசாலக்காக இருந்தவர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

டிசம்பர் 30 - குலபதி முன்ஷி பிறந்தநாள்

வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரத அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த குழுவின் உறுப்பினர், எழுத்தாளர், பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியவர் என்று பல்முக ஆளுமையாக விளங்கிய கனையாலால் மனேக்லால் முன்ஷி என்ற குலபதி முன்ஷியின் பிறந்தநாள் இன்று.



குஜராத் மாநிலத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த முன்ஷி 1887ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் பிறந்தவர். பரோடா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திலும், பின்னர் மும்பை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்த முன்ஷி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பரோடாவில் இவரது ஆசிரியராக இருந்தவர் மஹரிஷி அரவிந்த கோஷ் அவர்கள். முன்ஷியின் மனதில் தேசபக்தியை விதைத்தது அரவிந்தரே ஆவார்.

மும்பையில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது முன்ஷி, ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பம்பாய் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராக முன்ஷி தேர்ந்ததெடுக்கப்பட்டார். பர்தோலி சத்தியாகிரஹப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்ஷி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரஹம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு முறை சிறையானார். அன்றய ஐக்கிய மஹாராஷ்டிரா பகுதியின் முக்கியமான தலைவராக காங்கிரஸ் கட்சியால் இனம் காணப்பட்ட முன்ஷிக்கு பல்வேறு கட்சிப் பொறுப்புகள் வரத் தொடங்கின. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் செயலாளர் என்ற பொறுப்புகளும், மஹாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவியும் முன்ஷியைத் தேடி வந்தது. சிறிதுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த முன்ஷியை, காந்தி வற்புறுத்தி மீண்டும் கட்சியில் இணைய வைத்தார்.

நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், முன்ஷி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய ஏழு உறுப்பினர் அடங்கிய குழுவின் உறுப்பினராகவும் முன்ஷி பணியாற்றனார். நாட்டின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் ஹிந்தி இருக்கும், பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும்  என்று வரையறை செய்த அரசியலமைப்பின் 17ஆவது பிரிவு என்பது முன்ஷி - கோபால்சாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதிகள் முன்ஷியால் முன்னெடுக்கப்பட்டவைதாம்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்தார் வல்லபாய் படேல் முடிவு செய்தார். ஆனால் அந்தப் பணி முடியும் முன்னரே படேல் இறந்து போக, அந்தப் பணியை முன்ஷி தொடர்ந்தார், இன்று சோமநாதபுரத்தில் சிவனின் ஆலயம் எத்தனை முறை ஆக்கிரமிக்கப்பட்டாலும் மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பாரத ஆன்மாவின் குறியீடாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

1950 - 1952 ஆண்டுகளில் இடைக்கால அரசின் விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக முன்ஷி நியமிக்கப்பட்டார். நாடெங்கும் நடைபெறும் மரம் நடு விழாவான வனமஹோஸ்தவம் முன்ஷியின் திட்டமே ஆகும். 1952 முதல் 1957ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராகவும் முன்ஷி பணியாற்றினார். நாட்டின் முன்னேற்றம் சோசலிசத்தின் மூலமாகவே நடைபெறும் என்று நேரு எண்ணினார். ஆனால் தாராள பொருளாதாரத் கொள்கைதான் பலன் அளிக்கும் என்று எண்ணிய முன்ஷி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்தரா கட்சியில் இணைந்து கொண்டார். ராஜாஜியின் மறைவுக்குப் பின்னர் ஸ்வதந்திரா கட்சி செயல்படாமல் போக, முன்ஷி ஜனசங் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சங்கத்தின் முக்கியமான சகோதர அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர்களில் முன்ஷியும் ஒருவர்.

நெடுங்காலம் அரசியலில் இருந்தாலும், கல்விப் புலத்திலும், இலக்கியத்திலும் முன்ஷியின் பங்களிப்பு மகத்தானது. மும்பை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் முன்ஷி செயல்பட்டார். அவர் தொடங்கிய பாரதிய வித்யா பவன் நிறுவனம் இன்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் பல்வேறு புத்தகங்களை முன்ஷி எழுதி உள்ளார். கிருஷ்ணாவதார் என்ற ஏழு பகுதிகள் கொண்ட மஹாபாரதம் பற்றிய தொகுப்பு அவர் எழுதியதில் முக்கியமான ஒன்றாகும்.

பல்வேறு ஆசிரியர்களைக் கொண்டு பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் குருமார்களை குலபதி என்று பெருமையாக அழைப்பது நமது வழக்கம். அப்படியான கல்வி சேவையைச் செய்ததால் முன்ஷியை நாடு குலபதி முன்ஷி என்று கொண்டாடுகிறது.

எண்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு பெரும் சேவையாற்றிய குலபதி முன்ஷி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார். சோமநாதபுர ஆலயம் உள்ளவரை, பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனங்கள் உள்ளவரை முன்ஷியும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.