வியாழன், 22 ஜனவரி, 2015

குறிப்புகளின் குறிப்புகள்

ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல்ப்பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி 

சனி, 10 ஜனவரி, 2015

வெற்றிக்கான நூறு விதிகள்



புகழ்பெற்ற தனிமனித மேம்பாட்டு பயிற்சியாளரான  ப்ரைன் டிரஸி எழுதியது இந்தப் புத்தகம். வெற்றி அடைவதற்கான நிச்சயமான நூறு மாற்றவியலாதா விதிகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. மிக முக்கியமாக ஆசிரியர், படிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமான சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ இந்த நூலில் பயன் படுத்தவில்லை.

புரிந்து கொள்ள எளிதாக இந்த விதிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

                          1. வாழ்க்கைக்கான விதிகள் 
                          2. வெற்றிக்கான விதிகள் 
                          3. வணிகத்திற்கான விதிகள் 
                          4. தலைமைப்பண்புக்கான விதிகள் 
                          5. பொருளாதார விதிகள் 
                          6. விற்ப்பனைக்கான விதிகள் 
                          7. பேரம் பேசுவதற்கான விதிகள் 
 8. நேர மேலாண்மைக்கான விதிகள் 

மனிதன் என்பவன் சிந்தனைகளின் தொகுப்பு. அதனால் சிந்தனைகளைச் சீர் செய்வதன் மூலம், மனிதன் தன வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தில் சொல்லும் கருத்து. எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னும் எதோ ஒரு காரணம் இருக்கிறது, அநேகமாக அது நமது செயலாகவே இருக்கிறது என்பதே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொண்டால் தங்கள் வாழ்கையில் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளும் பாடங்களை காலவிரயம் இல்லாமலே கற்றுக் கொண்டு முன்னேறிவிடலாம். 

வெள்ளி, 2 ஜனவரி, 2015

5. பழங்கால நாகரீகம்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

1931 ஜனவரி 9

வாரம் இருமுறை உலகச் செய்திகளைச் சுமந்துவரும் பாரத் என்ற ஹிந்தி இதழில் உன் தாயாரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் அதலால் அரசாங்கம் அவளை மலாக்கா சிறையில் இருந்து லக்னோ சிறைக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறது என்றும் படித்தேன். ஒரு வேளை இந்தச் செய்தி வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகம் கூட மன அமைதியைக் குலைக்கிறது. தனிப்பட்ட முறையில் நம்மால் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் துயரங்கள், அதிலும் அவர்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் போது நம்மைத் தாங்கவொண்ணா துயரில் தள்ளி விடுகிறது.

அதனால்தான் அந்தச் செய்தி உன் தாயாரைப் பற்றிய கவலையை உண்டாக்கி விட்டது. உன் தாயார் சிங்கம் போன்ற மன உறுதி கொண்டவள்தான். அவள் தைரியசாலி ஆனால் உடலளவில் பலவீனமானவள், மெலிந்தவள். இன்னும் அவள் நலிவடைவதை நான் விரும்பவில்லை. உள்ளம் உறுதியாக இருந்தாலும் உடல் வலிமையாக இல்லாவிட்டால் என்ன பயன் ? எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்து முடிக்க நமக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியமான ஓன்று.

அவள் லக்னோ சிறைக்கு மாற்றப்படுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். மலாக்காவில் அவள் தனியாக இருந்தால். லக்னோ சிறையில் அவளது தோழியர்கள் இருப்பதால் அவள் சற்றே மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். எனக்கும் அவள் அருகிலேயே இருப்பாள். இங்கே இருந்து லக்னோ வெறும் ஐந்து மைல் தொலைவுதான். இது ஒரு பொருளற்ற சிந்தனைதான். ஐந்து மைலோ நூற்றைம்பது மைலோ, இரு சிறைக்களின் உயர்ந்த மதில்சுவர்களை எண்ணிப் பார்த்தால் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தாத்தா (மோதிலால் நேரு) இன்று அலகாபாத் திரும்பிவிட்டார் என்பதையும் அவர் இப்போது உடல்நிலை தேறி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதையும் அறிந்தேன். அவர் மலாக்கா சிறையில் உனது தாயாரைக் கண்டு வந்தார் என்பதை அறிந்த உடன் மகிழ்ச்சி அடைந்தேன். கொஞ்சம் நல்லூழ் இருந்தால், உங்கள் அனைவரையும் நாளை நான் சந்திக்க முடியும். நாளை சிறையில் பார்வையாளர் நாள். சிறையில் இருப்பவர்களுக்கு அது ஒரு கொண்டாட்ட தினம். நான் உன் தாத்தாவை ஏறத்தாழ இரண்டு மாதங்களாகப் பார்க்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவர் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். உன்னையும் நீண்ட இருவாரங்களுக்குப் பின் நான் பார்க்கலாம். உன்னைப் பற்றியும், உன் தாயாரைப் பற்றியும் என்னிடம் சொல்ல உனக்கும் பல செய்திகள் இருக்கும் அல்லவா !

ஆஹா ! உனக்கு வரலாற்றை எழுத ஆரம்பித்து, வேறு எதையெல்லாமோ எழுதிக் கொண்டு இருக்கிறேன். நான் நிகழ்காலத்தை சற்றே மறந்து விட்டு, ஒரு மூவாயிரம் வருடத்திற்கு பின்னே செல்வோம்.

என் முந்தய கடிதங்களில் எகிப்து மற்றும் க்ரெட நகரத்தில் உள்ள  க்நோசஸ்  பற்றி உனக்கு சொல்லி இருந்தேன். மனித நாகரீகம் இந்த இரண்டு இடங்களிலும், இன்று ஈராக் என்று அழைக்கப்படும் மெசபடோமியாவிலும், சைனா, இந்தியா மற்றும் கிரேக்க நாட்டிலும் தான் ஆரம்பமானது. கால அளவில் கிரேக்கம் சற்றே இளைய நாகரீகம். இந்த நாகரீகங்கள்  இப்போது என்ன   நிலையில் இருக்கிறது ? கநோச்ஸ் நாகரீகம் இப்போது இல்லவே இல்லை. கிரேக்கம் அதனை அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டு செழித்து வளர்ந்த எகிப்திய நாகரீகம் இன்று பிரமிடு, பதப்படுத்தப் பட்ட சடலங்கள் மற்றும் அழிவுற்ற கோவில்களாக மட்டுமே எஞ்சிஉள்ளது. அங்கே நைல் நதி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது பழங்கால நாகரீகத்தில் இருந்து முழுதாக வேறுபட்டுத்தான் இருக்கிறார்கள்.

இராக்கிலும் பெர்சியாவிலும் எத்தனையோ பேரரசுகள் தோன்றி மறைத்து போயின. மகத்தான பாபிலோன் நகரைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாடில் விரவி இருக்கிறது. இந்தப் பழைய நகரில் எத்தனையோ அரசுகள் தோன்றி மறைந்து இருக்கிறது. மன்னர்களும் சக்கரவர்த்திகளும் குறைந்த கால அளவில் ஆட்சி செய்து உலகை விட்டு விலகிச் சென்று உள்ளார்கள். ஆனால் மனித நாகரீகம் இன்றும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரேபிய இரவு கதைகளின் களமான பாக்தாத் நகரம் இன்றும் துடிப்போடு இருக்கிறது. ஆனால் பெர்சியாவிலும், இராக்கிலும் இன்று உள்ள மக்கள் தங்கள் பழைய நாகரீகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இன்றும் மக்கள் வியப்போடு கற்கும் வரலாறு கிரேக்க வரலாறு. கிரேக்த்தின் இலக்கியமும் பளிங்குச் சிலைகளும் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய ஐரோப்பா புகழ்மிக்க அந்தப் பழைய கிரேக்கத்தின் குழந்தை. ஆனால் இன்றுள்ள கிரேக்கம் ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டுமே.

எகிப்து, கிரேக்கம், ஈராக், பெர்சியா - இந்த எல்லாப் பழைய நாகரீகங்களும் இன்று வரலாற்றின் பக்கங்களாகவே குறிக்கப்படுகிறது. இவைகளோடு சமமாகக் குறிக்கப்படும் மற்றைய இரண்டு நாகரீகங்கள் - சைனா மற்றும் இந்தியாவின் நிலை இன்று என்ன ? இங்கும் பேரரசுகள் தோன்றின, மறைந்தன. பெரும் படையெடுப்புகளும், கொள்ளைகளும், பெரிய அளவிலான அழிவும் நடந்தன.

ஆனால் மற்றைய நாடுகள்போல் இல்லாமல், இந்த இரு நாடுகளில் மட்டும் இன்னும் அந்தப் பழைய நாகரீகம் அறுபடாமல் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் தங்கள் தொட்ட உயரத்தில்  இருந்து விழுந்து விட்டன. கால ஓட்டத்தில் கசடுகளும், அழுக்குகளும் அதில் மண்டியுள்ளது. ஆனால் அதனைத் தாண்டியும் அவை உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இன்றைய இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்பது அந்தப் பழைய நாகரீகத்தின் தொடர்ச்சிதான்.

உலகம் இன்று எவ்வளவோ மாறிஇருக்கிறது. புகைவண்டிகளும், பெரும்கப்பல்களும், தொழிற்சாலைகளும் இன்று உலகத்தின் பார்வையையும், போக்கையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் போக்கையும் இந்த மாற்றங்கள் பாதிக்கவே செய்துகொண்டு உள்ளது. ஆனால் வரலாற்றின் கால ஓட்டத்தையும் தாண்டி, இன்றும் தொடர்ந்துவரும் இந்திய நாகரீகம் அனைவரையும் வியப்பிலாழ்த்தும் ஒரு அதிசயம்தான். நாம் புகழ் வாய்ந்த அந்த நாகரீகத்தின் வாரிசுகள். வடமேற்குக் கணவாய் வழியாக ஹிந்துஸ்தானம் என்றும் ஆரியவர்தனம் என்றும் பரதகண்டம் என்றும் இன்று குறிக்கப்படும்  இந்தப் பரந்த நிலப்பரப்பிற்கு வந்த அந்த மக்களின் நேரடி வாரிசு நாம். கடினமான மலைதொடர்களைத் தாண்டி முன்பின் தெரியாத அந்த நிலத்திற்கு அவர்கள் வருவதை உன்னால் காண முடிகிறதா?

எது வரும் என்ற அச்சம் இல்லாமல் மிகுந்த துணிச்சலோடும், சாகச உணர்வோடும் அவர்கள் முன்னேறிச் சென்றனர். இறப்பையும் அவர்கள் புன்முறுவலோடு எதிர்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையைக் காதலித்தனர். வாழும் வழி என்பது வாழ்க்கையை, அதன் சவால்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்று அவர்கள் உணர்ந்து இருந்தனர். அவர்களைத் தோல்வியோ பின்னடைவுகளோ கலங்க வைக்கவில்லை. நம்முடைய அந்த முகம் தெரியாத முதாதையர்கள் புகழ்வாய்ந்த கங்கை நதிக்கரையை அடைந்தனர். கங்கையின் பிரவாகம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். அவர்கள் கங்கையை வணங்கி தங்கள் இனிமையான மொழியில் அந்த நதியைப் போற்றிப் பாட ஆரம்பித்தனர்.

அவர்களின் வாரீசு நாம் என்பதை என்னும் போது நாம் பெருமிதம் அடைகிறோம். ஆனால் கால ஓட்டத்தின் நன்மைக்கும், தீமைக்கும் நாம் பொறுப்பெடுக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் தவறுகள் பல உள்ளன. உலகநாடுகள் பலவற்றின் கீழே நம்மைத் தள்ளிய தவறுகள் உள்ளன. வறுமையின் கோரத் தாண்டவமும், அன்னியர் கைகளில் பகடைக்காய் என்று நாம் இன்று உருண்டுகொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த இழிநிலை இன்னும் நீடிக்கக்கூடாது என்ற நினைப்பும் உறுதியும் இன்று நம்மிடையே உள்ளது. 

திங்கள், 22 டிசம்பர், 2014

4. ஐரோப்பாவும் ஆசியாவும்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 

                                  ---------------------------------------------------
ஜனவரி 8 - 1931.

எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. இந்த மாறுதல்களின் பதிவுதான் வரலாறு. இந்த மாற்றங்கள் குறைவாக இருக்குமானால், வரலாறு என்பதும் சிறியதாகத்தான் இருக்கும். 

நமது பாடத்திட்டத்தில் வரலாறு சரியான முறையில் கற்றுக்கொடுக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பிறரைப் பற்றி நான் அறியேன், ஆனால் நிச்சயமாக நான் பள்ளியிலும், கல்லூரியிலும் சரியான வரலாற்றைப் படிக்கவில்லை. இந்திய வரலாற்றைப் பற்றியும், இங்கிலாந்து நாட்டைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் கற்றுக்கொண்டேன். நான் படித்த குறைவான அளவிலான இந்திய வரலாறும், தவறானதாகவும், திரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தியாவைப் பற்றிய எந்தவிதப் புரிதலும் இல்லாத ஆசிரியர்களால் அவை எழுதப் பட்டு இருந்தது. பிற நாடுகளைப் பற்றியும் மிகக் குறைவாகவே நான் படித்து இருந்தேன். கல்லூரியை விட்டு வெளியேறிய பின்னரே நான் சரியான சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தேன் என்றே கூறலாம். நீண்ட எனது சிறைவாசங்கள் நான் படிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. 

எனது முந்தய கடிதம் ஒன்றில் நான்  உனக்கு இந்தியாவின் மிகப் பழங்கால நாகரீகத்தைப் பற்றியும், திராவிடர்கள் மற்றும் ஆரியர்கள் வருகை பற்றியும் கூறி இருந்தேன். ஆரியர்களுக்கு முந்தய காலம் பற்றி எனக்கு சிறிதளவே தெரியும் என்பதால், அந்தக் காலம் பற்றி நான் கூறமுடியாது. ஆனால் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மொஹஞ்சதாரோ என்ற இடத்தில ஒரு பழங்கால நாகரீகத்தை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எகிப்தில் உள்ளது போல, அங்கே பதப்படுத்தப் பட்ட சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அவற்றின் காலம் ஆரியர்களின் வருகைக்கு முன்னர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அநேகமாக அப்போது ஐரோப்பா இருளில் மூழ்கி இருந்திருக்கும். 

இன்று ஐரோப்பா வலிமையோடு இருக்கிறது, அதன் மக்கள் மற்ற எல்லோரையும் விட நாகரீகமானவர்கள், கலாசாரமானவர்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஆசிய மக்கள் அனைவரையும் கீழானவர்கள் என்று எண்ணி, இந்த கண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சூறையாடிச் செல்லுகிறார்கள். காலம் தான் எப்படி மாறி உள்ளது ?

உலக வரைபடத்தைப் பார்த்தோமானால், ஐரோப்பா ஆசியா கண்டத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதைக் காண முடியும்.  காலம் காலமாக ஆசியக் கண்டத்தைச் சார்ந்த மக்கள் அலைகடல் என ஐரோப்பியாவிற்கு படை எடுத்துச் சென்றனர், ஐரோப்பியாவை வென்று, அங்கே தங்கள் நாகரீகத்தை நிலைநாட்டினர். அங்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தனர் என்றே சொல்லலாம்.

ஆரியர்கள், ஹுனர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், அரபிக்கள் - இவர்கள் எல்லோரும் ஆசியாவின் எதோ ஒரு மூலையில்  கிளம்பி, ஆசியா மற்றும் ஐரோப்பியா முழுவதும் பரவினர். வெட்டுக்கிளிகள் போல அவர்களை ஆசியாக் கண்டம் உருவாக்கிக் கொண்டு இருந்தது. மிக நீண்ட  காலத்திற்கு ஐரோப்பா ஆசியாவின் காலனி நிலமாகவே இருந்தது. இன்றைய ஐரோப்பியர்கள், அந்த ஆசிய மக்களின் வம்சாவளிதான்.

உலக வரைபடத்தில் ஆசியக் கண்டம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனை ஒப்பிடும்போது ஐரோப்பா அளவில் மிகச் சிறியது. ஆனால் (நிலத்தின்) அளவை வைத்து ஒரு  மனிதனையோ அல்லது நாட்டையோ அளவிடுவது என்பது மிகத் தவறான முறை. இன்று, ஐரோப்பா அதன் புகழின் உச்சியில் இருக்கிறது. ஐரோப்பாவின் பல நாடுகள் மிகச் சிறந்த புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களை உலகத்திற்கு அளித்து உள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.  ஐரோப்பாவின்  அறிஞர்கள், சிந்தனையாளர்கள், இசைவாணர்கள், எழுத்தாளர்கள், நுண்கலை வல்லுனர்களைப் புறக்கணித்துவிட்டு நாம் உலகத்தின் வரலாற்றைப் பேச முடியாது.

அதைப் போலவே நாம் ஆசியாவின் பங்களிப்பையும் மறுக்கமுடியாது. உலகை மாற்றி அமைத்த சிந்தனையாளர்கள் உலகிற்கு ஆசியக் கண்டத்தின் கொடை. இன்று உள்ள மதங்களில் மிகப் பழமையான ஹிந்துமதம் நமது பாரதநாட்டில் தோன்றியது. இன்று ஜப்பான், சைனா, திபேத், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் புத்தமதமும் இந்தியாவில் தோன்றியதுதான். யூத மதமும், கிருஸ்துவமும் ஆசியாவின் மேற்க்குக் கரையில் உள்ள  பாலஸ்தீனத்தில் தோன்றியவை. முகமது நபி அரேபியாவைச் சார்ந்தவர். பார்சிகள் மதமும் இன்றைய ஈரானில்தான் ஆரம்பமானது.

கிருஷ்ணன், கௌதம  புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகமது நபி, கன்பூசியஸ் என ஆசியாவில் தோன்றிய சிந்தனையாளர்களின் வரிசை மிக நீண்ட ஓன்று. இதைப் போலவே செயல்வீரர்கள் பலரும் ஆசியக் கண்டத்தில் தோன்றி இருக்கிறார்கள்.

காலம்தான் எப்படி மாறி இருக்கிறது. இப்போது அது நம் கண் முன்னாலே மாறிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக வரலாறு மெதுவாகவே நடை போடும். ஆனால் இன்றோ அது மிக விரைவாக மாற்றம் அடைகிறது.

தனது நீண்ட  உறக்கத்தில் இருந்து ஆசியா விழித்துக் கொண்டு விட்டது. உலகம் முழுவதும் ஆசியாவையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகத்திற்கான தனது பங்களிப்பை ஆசியா தரும் காலம் நெருங்கி விட்டது என்பதை உலகம் புரிந்து கொண்டு விட்டது. 

சனி, 27 செப்டம்பர், 2014

கொஞ்சம் அரசியல் பேசலாமா ?

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இன்று குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டார். நான்கு வருட சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இனி என்ன நடக்கலாம் ?

அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் இப்போது உள்ள சட்டமன்றம் கலைக்கப் படாது என்று நான் நம்புகிறேன். வழக்கம் போல ஒரு புது முதல்வரை ஜெ கைகாட்டி, அவரை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வார்கள். கொள்கை அளவில் இதே ஆட்சி நீடிக்கும்.

ஆனால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அதன் பிறகு ஆறு ஆண்டு தேர்தலில் நிற்கத் தடை என்றால், நேரடி அரசியலில் ஜெ அடுத்த பத்து வருடத்தில் ஈடுபட முடியாது. அரசியலில் பத்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அத்தனை வருடம் கட்சியைத் தன் கட்டுப்பாடில் அவர் வைத்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத கட்சி காலப்போக்கில் காணமல் போகவே வாய்ப்பு இருக்கிறது.

நிச்சயமாக இந்தத் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் எங்கும் கிளை இயக்கங்கள், களத்திலும் இணையத்திலும் தீவிரமாக இயங்கக்கூடிய கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ நிச்சயமான ஒரு வாக்கு வங்கி என இன்றைய நிலை திமுகவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

ஆனால், பல திமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் மந்திரிகள் மீது மக்களுக்கு உள்ள கோபம், தலைமையின் குடும்ப வாரிசு அரசியல், அதன் வழி பற்றி மாவட்டங்களில் உள்ள வாரிசு அரசியல் என்று நம்பிக்கை இழந்த ஒரு பெருங்கூட்டம் திமுகவிற்கு பாதகமாகவே இருக்கறது.

2G அலைக்கற்றை வழக்கும், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது உள்ள வழக்குகளும் வேகம் பெற்று, ஒரு வேளை அந்தத் தீர்ப்புகள் திமுகவிற்கு பாதகமாக வந்தால், ஊழலைப் பற்றிய திமுகவின் பிரச்சாரம் மக்கள் மனதைக் கவருவது சங்கடமே.

2016 தேர்தலில் யார் முதல்வர் கலைங்கரா இல்லை ஸ்டாலினா என்ற விவாதம் தேர்தலில் எதிரொலிக்கும் என நான் நினைக்கிறேன்.

அதிமுகவின் வாக்கு வங்கி என்பது பெரும்பான்மையாக திமுகவின் எதிர்ப்பாளர்களால் கட்டமைக்கப் பட்டது. அதனை யார் கைப்பற்றுவார்கள் என்பது தான் இன்று பல கட்சிகளுக்கு முன் உள்ள கேள்வியாக இருக்கும். எம் ஜி யாரால் கட்டமைக்கப் பட்ட அந்த வாக்கு  எங்கே செல்லும், யார் அதனை அடைவார்கள் என்பதே இன்று பலர் முன் உள்ள வினா

காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் என்ற தேசியக் கட்சிகள் இங்கே பயன் அடையப் போகிறார்களா இல்லை மதிமுக, பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டும் ஊடுருவி உள்ள கட்சிகள் வளர்ச்சி காணுமா என்பதை வருங்காலம் காட்டும்.

எது எப்படி இருந்தாலும், தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தின் முன்னே இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை


வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஆழி பெரிதா





ஹிந்துத்வ இயக்கத்தினரால் சற்றே பயம் கலந்த மரியாதையுடனும், இடதுசாரி மற்றும் திராவிட இயக்கவாதிகளால் எரிச்சலுடனும் சுட்டப்படும் அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் தமிழ் பேப்பர் இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் பண்டைய காலத்தின் சிந்தனைப் போக்கையும், காலம் காலமாக அது எழுப்பி வந்த கேள்விகளைப் பற்றியும் ஆராய்கிறது இந்த நூல்.

வடக்கே சிந்து நதி முதல் தெற்க்கே கடல் கொண்ட ( அல்லது கொண்டதாகக் நம்பப்படும் ) லெமுரியா வரை பரவி இருந்தது தமிழர் நாகரீகம், அதனை கைபர்  கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் அழித்து விட்டார்கள் எனவும் பரந்த இந்த நிலப்பரப்பு  ஒரே நாடாக ஒருநாளும் இருந்தது இல்லை என்றும், பண்பாட்டு ரீதியாக, கலாசார ரீதியாக வெவ்வேறு தேசிய இனங்கள் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டது இந்தியா என்ற தோற்றம் என்றும் பேசுபவர்களுக்கு, பண்பாட்டு ரீதியாக எப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலப்பரப்பில் ஒரே தத்துவம் உயிர்ப்போடு இருக்கிறது என்று பதில் அளிக்கிறது இந்த நூல்.

ஒரே இறைவன் ஒரே இறைநூல் ஒரே மார்க்கம் என்ற தத்துவம் எதனாலோ இந்த மண்ணில் ஒருபோதும் வேர்விடவில்லை. உண்மையை அறிய பல்வேறு வழிகள் இருக்கலாம் என்ற பன்மைத்தன்மையை இந்த நாடு மீண்டும் மீண்டும் உரக்கக் கூறிக்கொண்டே இருக்கிறது.

இறை நம்பிக்கை மட்டும் அல்ல இறைமறுப்பும் இணைந்தே இங்கே வேர்விட்டு உள்ளது. படைப்புக்கு ஒரு முதல்வன் தேவையா ? படைப்பும் படைத்தவனும் வேறுவேறா அல்லது  ஓன்றுதானா ? படைத்தவன் முதல்பொருளா அல்லது காரணப் பொருளா ? படைப்பு என்பது அவனிடம் இருந்தே படைக்கப் பட்டதா இல்லை வேறு எதையோ வைத்து அவன் படைத்தானா என்ற விரிவான விவாதங்கள் இங்கே நடந்து இருக்கிறது.

"வேத ரிஷிகள் கேள்விகளைக் கேட்கத் தூண்டினார்கள். தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். என்றாலும் இறுதிவிடை உங்களிடமிருந்துதான் வரவேண்டும். கையேடு பாதையாகிவிடாது. அனுபவமே சத்தியம். வேதங்கள் அனுபவத்துக்கு கீழேதான். எனவே கேள்விகளை அவர்களே கேட்டார்கள்."

இப்படிக் கேட்ட கேள்விகளும் அதற்க்கு கிடைத்த கிடைத்த பதில்களும் தான் உபநிடதங்கள் எனத் தொகுக்கப் பட்டன. அதுபோலவே அரவிந்தன் இந்த நூலில் பலப் பல கேள்விகளை எழுப்பி அதற்க்கு விடை காண முயற்சி செய்கிறார்.

வேதத்தில் குறிக்கப்  படும் வேள்விகள் எதனைச் சுட்டுகின்றன, வேள்வி மேடைகளுக்கும் இன்றும் நமது வீடுகளில் வரையப்படும் கோலங்களுக்கும்  ஏதாவது தொடர்ப்பு இருக்கிறதா ?

இன்று போதை அளிக்கும் பானமாக காட்டப்படும் சோமம் என்ற பானம் உண்மையில் என்னவாக இருக்க முடியும் ?

அநேகமாக எல்லா இறைக் கோட்பாடுகளிலும் காட்டப் படும் பிரளயம் என்பது என்னவாக இருந்து இருக்கக் கூடும் ?

இன்றும் பல்வேறு மக்களின் நினைவில் வாழும் சரஸ்வதி நதி பற்றிய விவாதங்கள்

இந்திய நாகரீகத்தில் பெண் தெய்வங்கள் இருந்தனவா ? இருந்தால் அவர்கள் எந்த இடத்தைப் பெற்று இருந்தார்கள் ?

காலத்தையும் மனதைப் பற்றியும் வேத நூல்கள் என்ன கூறுகின்றன ?

பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு கடல் பற்றிய ஞானம் இருந்ததா, கடலோடிகள் அந்த சமுதாயத்தில் இருந்தார்களா ?

வேத நூல்கள் காட்டும்  அறம் என்பது எவையெல்லாம் ? விவசாயம் பற்றி, உணவைப் பகிர்ந்து அளிப்பது பற்றிய சிந்தனை எப்படி உருவாகி வளர்ந்து வந்து இருக்கிறது

வேத நாகரீகத்தில் எந்த எந்த மிருகங்கள் குறிக்கப் படுகின்றன ? குறிப்பாக அந்தக் காலக் கட்டத்தில் குதிரை பயன்படுத்தப் பட்டதா

அஸ்வமேத யாகம் என்பது என்ன ? அது வளமையைக் குறிக்கும் சடங்கா அல்லது திராவிடவாதிகள் சொல்வது போல வெறும் பாலியல் ஆபாசமா ?

( இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம், இந்தக் கலாசாரத்தில் ஆண் பெண் உறவு என்பது பாவம் என்று ஒருபோதும் கருதப்படவில்லை என்பது )

ஆரிய என்ற சொல் எதனைச் சுட்டுகிறது ? ஒரு தனி இனத்தையா ? அல்லது குணத்தைக் குறிக்கவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதா ?

தமிழர்கள் தனி இனம், அவர்களுக்கும் இந்தியப் பண்பாடு என்று குறிக்கப் படுவதற்கும் தொடர்ப்பு இல்லை என்ற கருத்து உண்மையா ?

புறநானூறும் மற்றைய சங்க இலக்கியங்களும் வேத நெறிகளைப் பற்றி, வேள்வி முதலான சடங்குகளைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

சதியைத் தடை செய்த ஆங்கிலேய அரசு, குழந்தைத் திருமணங்களை ஏன் தடை செய்ய விரும்பவில்லை ?


கேள்விகள் கேள்விகள், முடிவுறாது மீண்டும் மீண்டும் எழும்பும் கேள்விகள். இவற்றிக்கு மிகச் சிறந்த வழக்கறிஞர் போல வேத நூல்களில் இருந்தும், பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தரும் விவரங்கள் மூலமும் தனது வாதத்தை முன்வைக்கிறார்.

நல்ல விவாதச் சூழலில், அரவிந்தனின் இந்தப் புத்தகத்தை முன்வைத்து எதிர் வாதங்களும், அதற்க்கான ஆதாரங்களும் அளிக்கப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்ட வசமாக இணையத்தில் இந்தத் தொடர் வெளியாகும் போது  இதற்கான எதிர்மறை வெறும் கூச்சலும், பழிச் சொல்லுமாகவே முடிந்து போய் விட்டது.

ஹிந்துத்வர்களும், அவர்களை மறுப்பவர்களும் கட்டாயம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

ஆழி பெரிதா என்பதை நான் அறியேன், ஆனால் அரவிந்தனது படிப்பும் உழைப்பும் மிகப் பெரிது. 

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பிடித்த பத்து

எழுத்துக் கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த வயது முதல் இன்று வரை எனக்குப் பிடித்த பத்து புத்தகங்கள் இவை.

இதிகாச புராணம்

1. வியாசர் விருந்து - மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழில் எழுதிய மகாபாரதம். ஒரு கதைக்குள் பல கதை, பல கதைக்கும் ஒரு விதை என்று ஆழ்ந்து அகன்று விளங்கும் பாரதக் கதையைப் புரிந்து கொள்ள, எந்த ஆரம்ப நிலை வாசகனுக்கும் கட்டாயமாக மிக உதவியாக இருக்கும் நூல். அநேகமாக வியாசர் காட்டும் எல்லாப் பாத்திரங்களையும் விடாமல் ராஜாஜி இந்த நூலில் காட்டி இருப்பார்.

2. காவ்ய ராமாயணம் -  டெல்ஹியை சேர்ந்த K S ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதிய புத்தகம் இது. இந்தியாவின் புகழ் வாய்ந்த ராமாயணங்கள் மூன்று. வடமொழியில் ஆதிகவி வால்மீகி எழுதியது, தமிழில் கம்பன் படைத்தது, ஹிந்தி மொழியில் துளசிதாசர் யாத்தது. இதில் வால்மீகி காட்டும் ராமன் உயர்குணங்கள் கொண்ட அரசகுமாரன், ஆனால் கம்பனும் துளசியும் காட்டும் ராமன் அவதார புருஷன். இந்த மூன்று நூல்களும் எங்கே எல்லாம் ஒத்துப் போகிறது, எங்கே எல்லாம் மாறுபடுகிறது என்பதை ஆசிரியர் மிக விவரமாகக் கூறி இருப்பார். பொதுவாக பல புத்தகங்களில் இல்லாத உத்தரகாண்டதையும் எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு.


தொழில், சுய முன்னேற்ற நூல்கள் 

3. Lee Iaccoca - An Autobiography - போர்ட் மோட்டார் கம்பனியின் முதல்மைச் செயல் நிர்வாகியாக இருந்தவரின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சேர்ந்த இவரை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இரண்டாம் போர்ட் வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் லீ அயகோகா நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் க்ரைசெலர் மோட்டார் நிறுவனைத்தை லாபத்தில் மாற்றிய வரலாறு.

4. Seven Habits of Highly Effective People -  ஸ்டீபன் கோவே என்பவர் எழுதிய புத்தகம். மற்ற பல சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் மேற்கத்திய சிந்தனை மரபில் இருக்கும் போது, அதற்க்கு மாறாக கீழ்த்திசைச் சிந்தனையை முன்னெடுக்கும் நூல் இது. பிறரை மாற்ற முயற்சி செய்வதற்கு முன்னர் நம்மை மாற்றும் வழிகளை விவரிக்கும் நூல் இது.

5. Tough Time doesn't last long, tough people do - ராபர்ட் ஷுல்லர் என்ற கிருஸ்துவப் பாதிரியார் எழுதிய நூல் இது. தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும் போது துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்வது பற்றியும், தோல்வியில் இருந்து வெற்றிக்கு முன்னேறும் வழியையும் கூறும் நூல் இது.

வரலாறு 

6. Glimpses of World History -  பதின்ம வயதில் இருக்கும் தன் மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. அநேகமாக உலக வரலாற்றையும், கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்த இந்தியாவையும் அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல்.

7. சத்திய சோதனை - காந்திஜி அவர்களின் சுய சரிதை. அநேகமாக தான் உண்மை என்று நினைத்ததை, மறைக்காமல் சொன்ன மிகச் சில நூல்களில் இதுவும் ஓன்று.

8. May it please your honor - இதனை நூலாகக் கருத முடியுமா என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம். மகாத்மா என்று கொண்டாடிய ஒரு மனிதனின் முன்னின்று கைத்துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் எது என்று கோட்சேயின் கூற்று.

தமிழ் மொழிப் படைப்புகள் 

9. சுஜாதாவின் படைப்புகள் - சுஜாதா படிப்பாளியா, இலக்கியவாதியா என்ற கேள்விக்குள் போகாமல், ஒரு காலகட்டத்தில் பல மக்களைப் படிக்க தூண்டியவர் என்ற நிலையிலும், பல்வேறு விசயங்கள் பற்றி ஒரு கோடு காட்டிப் படிக்கத் தூண்டியவர் என்ற முறையிலும் இந்தப் பரிந்துரை.

10. பாரதியார் கவிதைகள் - இவனுக்கு முன்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனோடே முடிவடைந்து, இவனுக்குப் பின்னால் உள்ள தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இவனிடம்  ஆரம்பிக்கிறது என்ற பெருமை பெற்ற யுகசந்திக் கவிஞன். மொழியின் வீச்சைக் கற்க பாரதியை விடச் சிறந்த ஆசானை நான் படிக்கவில்லை இதுவரை.