புதன், 7 மே, 2025

மே 7 - குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் பிறந்தநாள்

தெளிவான கோடுகளால் நாடுகள் பிரிக்கப்படாத காலம் அது. பணம் சம்பாதிக்க ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து பாரத நாட்டின் கொல்கத்தா நகருக்கு கிஸ்மிஸ், முந்திரி போன்ற உலர்பழங்களை விற்றுவந்த ரஹ்மான் என்ற சிறுவியாபாரிக்கும்   ஐந்து வயதேயான மினி என்ற சிறுபெண்ணுக்கும் இடையே உருவான பாசத்தைப் படம் பிடித்துக் காட்டும் கதை காபூலிவாலா. இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் மகளின் கைத்தடத்தை தன் சட்டைப்பையிலும், மகளை மனதிலும் சுமந்து வாழும் ரஹ்மான்  மினியின் வடிவில் தன் மகளைப் பார்க்கும்  கதை இது. பொருள்தேடி குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் பலருக்கு தங்களையே காட்டும் கண்ணாடி அது. விஷ்வகவி என்றும் குருதேவ் என்றும் மரியாதையோடு அழைக்கப்படும் ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய பல்வேறு படைப்புகளில் இதுவும் ஓன்று.


பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காளமே முடிவு செய்தது. சிறந்த அறிஞர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் மேதைகள், தேசியத் தலைவர்கள் என்று சாரிசாரியாக தொடர்ந்து வங்காளம் அளித்துக் கொண்டே இருந்தது. அந்த வரிசையில் ஒளிவிடும் மாணிக்கமாக விளங்குபவர் ரபீந்த்ரநாத் தாகூர். பாரதம், வங்கதேசம் என்று இரு நாடுகள் இவரின் கவிதையை தங்கள் தேசியகீதமாக அறிவித்துள்ளன. கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், இசைக்கலைஞர், ஆயுர்வேத மருத்துவ நிபுணர் என்று தாகூர் பல்துறை விற்பன்னராக விளங்கினார்.

தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவி தம்பதியரின் மகனாக 1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் பிறந்தவர் ரபீந்த்ரநாத் தாகூர். மிகச் சிறுவயதிலேயே தாயாரை இழந்த ரபீந்த்ரநாத் தாகூர், உறவினர்களாலும், வேலையாள்களாலும் வளர்க்கப்பட்டார்.  கல்விக்கூடத்தில் சேர்ந்து முறையான கல்வியைப் பயிலாது, வீட்டிலேயே பல்வேறு ஆசிரியர்களால் தாகூர் கற்பிக்கப்பட்டார்.

பதின்மவயதில் தனது தந்தையோடு பாரதநாடு முழுவதும் சுற்றி அதன் மூலம் மிகச் சிறப்பான அனுபவங்களைப் பெற்ற தாகூர், சட்டம் படிக்க லண்டன் பயணமானார். ஆனால் சட்டத்தைக் காட்டிலும் இலக்கியம்தான் அவருக்கு நெருக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். பட்டம் எதுவும் பெறாமலேயே அவர் பாரதம் திரும்பினார். ஆனால் லண்டன் வாழ்க்கை அவருக்கு பாரத கலையை மேற்கத்திய வடிவில் கூறும் திறமையை அளித்தது.

வங்காளத்தில் தங்கள் குடும்ப சொத்தான சாந்திநிகேதன் என்ற போல்பூர் நகரில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குடிபெயர்ந்த தாகூர், அங்கே அவர் விஸ்வபாரதி சர்வகலாசாலையை உருவாக்கினார். பல்வேறு சிறுகதைகள், பாடல்கள், புதினங்கள், பயண கட்டுரைகள் நாடகங்கள்  என்று அவற்றின் படைப்புலகம் பெருகிக்கொண்டே போனது. அது போக ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேலான பாடல்களையும் தாகூர் இயற்றி உள்ளார். அந்தப் பாடல்கள் ரபீந்த்ர சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. தனது அறுபதாவது வயதில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு தாகூர் மிகச் சிறந்த ஓவியராகவும் புகழப் பெற்றார்.

தாகூரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ஆங்கில அரசு அவருக்கு சர் பட்டத்தை அளித்தது. ஆனால் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாகூர் அந்தப் பட்டத்தைத் துறந்தார். அன்றய தேசத்தலைவர்கள் பலரோடு தாகூருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. காந்தியை முதல்முதலாக மஹாத்மா என்று அழைத்தது தாகூர்தான். ஆனால் பிஹாரில் ஏற்பட்ட பூகம்பம், மக்களின் பாவத்திற்கான தண்டனை என்று காந்தி கூறியதை தாகூர் மறுத்து எழுதினார். அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற பல்வேறு அறிஞர்கள் தாகூரின் நெருங்கிய நண்பர்களாக  இருந்தனர்.

1905ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளப் பிரிவினையை எதிர்த்து தாகூர் எழுதிய அமர் சோனா பங்களா என்ற பாடலை வங்காளதேசம் தங்கள் தேசியகீதமாக ஏற்றுக்கொண்டது. ஆனந்த சமரக்கூன் என்ற சிங்களக் கவிஞர் எழுதிய ஸ்ரீலங்காமாதா என்ற பாடல் சிங்கள நாட்டின் தேசிய கீதமாக உள்ளது. சமரக்கூன் விஸ்வபாரதி சர்வகலாசாலையில் தாகூரின் சீடராக இருந்தவர். இந்தப்பாடல் தாகூரின் பாடல்களை ஒட்டியே எழுதப்பட்டது.

பாரதநாட்டிலும் வங்காளதேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் தாகூரின் பெயரைச் சூடி உள்ளன. நீண்ட தாடி, ஒளிவிடும் கண்கள் என்று பார்க்கும் போது பண்டையகால ரிஷிகளில் ஒருவர் போலத் தோற்றமளிக்கும் தாகூர் மரியாதையாக குருதேவ் என்ற அடைமொழியோடுதான் அளிக்கப்படுகிறார். தேசங்களின் எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகையே ஒன்றாக எண்ணி நேசித்த அந்த மகாகவிஞர் மிகப் பொருத்தமாகத்தான் விஸ்வகவி என்றும் போற்றப்படுகிறார். 

திங்கள், 5 மே, 2025

மே 5 - தமிழில் கலைக்களஞ்சியம் தந்த அவினாசிலிங்கம் செட்டியார் பிறந்தநாள்

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இல்லாமல் தமிழுக்கு உண்மையாகவே தொண்டு புரிந்த பலர் உண்டு. அதில் முக்கியமானவர் திரு திருப்பூர் சுப்ரமணிய அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். அன்றய கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கிய திருப்பூர் நகரின் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். திருப்பூர், கோவை மற்றும் சென்னையில் பயின்று சென்னை சட்டக்கல்லூரியில் படித்து, வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

படிக்கும் காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவி போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். அதே நேரத்தில் காந்தியின் பாதையை பின்பற்றி ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

ஈரோடு, திருப்பூர் ஆகிய இன்றய மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றய கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். ஹரிஜன மக்கள் முன்னேற்றம், விதவைகள் மறுமணம், கதர் துணி அணிவதை பரப்புதல் ஆகிய காந்திய வேலைத்திட்டத்தை கொங்கு பகுதியில் முன்னெடுத்தவர்.

கோவையில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அங்கே ஜாதி பேதமில்லாமல் எல்லா மாணவர்களையும் சேர்த்துக்கொண்டார். பெண்கள் கல்விக்காக கலைக் கல்லூரி ஒன்றையும் நிறுவினார். அந்த நிறுவனம் இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

சென்னை ராஜதானியின் பிரதமராக பிரகாசம் மற்றும் ஓமன்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பதவி ஏற்றபோது, அவர்கள் மந்திரிசபையில் அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்சி மொழியாகியது இவரது பெரும் சாதனையாகப் போற்றப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் பத்து தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு சிறுவர் கலைக்களஞ்சியம் உருவாகும் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் காலத்தில்தான் பாரதியார் பாடல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது. திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்த்ததும் இவரே.

1952இல் அமைந்த முதலாம் நாடாளுமன்றத்தில் திருப்பூர் தொகுதியின் பிரதிநிதியாகவும், 1958 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். அவினாசிலிங்கம் செட்டியாரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு இவருக்கு 1970ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

சமூக சீர்திருத்தவாதி, சமுதாய சேவகர், சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் என்று பல்முகப் பரிமாணம் கொண்ட அவினாசிலிங்கம் செட்டியார் தனது 1991ஆம் ஆண்டு தனது 88ஆம் வயதில் காலமானார்.

ஞாயிறு, 4 மே, 2025

மே 4 - இந்தியத் தொலை தொடர்புத் துறையின் நாயகன் - சாம் பிட்ரோடா பிறந்தநாள்

கையில் தொலைபேசிக் கருவியை வைத்துக்கொண்டு, நினைத்த நேரத்தில் வேண்டிய நபர்களோடு பேசிக்கொண்டிருக்கும் இன்றய தலைமுறைக்கு, ஒரு தொலைபேசி இணைப்பை பெற ஆறாண்டுகள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

சோசலிச பாதையில் பாரதம் நகன்று கொண்டிருந்த நேரம் ஒன்று இருந்தது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது என்பது பணக்காரர்களை ஏழைகளாக மாற்றுவதன் மூலமே முடியும் என்று நமது ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டடிருந்தார்கள். இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, தொலைபேசியோ பணக்காரர்களுக்கானது; எனவே அதன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற சித்தாந்தம் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம்.

அது வருடம் 1980. அமெரிக்காவில் வசிக்கும் நாற்பது வயதான இளைஞர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். அவரச வேலையாக உடனடியாக அமெரிக்காவிற்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும் என்று முயற்சி செய்தபோது, அவர் அடைந்த துன்பங்கள் அவரைக் கவலையில் ஆழ்த்தின.

குஜராத்தை சேர்ந்த அவர் பிறந்தது ஒடிஷா மாநிலத்தில். படித்தது குஜராத்தில். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபின் அமெரிக்காவின் சிகாகோ நகரின் இல்லினோசிஸ் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் தொலை தொடர்புத்துறையில் பல்வேறு சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர். அந்தத் துறையில் பல்வேறு காப்புரிமைகளைப் பெற்றவர். அவர் பெயர் சத்யன் கங்காரம் பிட்ரோடா, அமெரிக்கர்கள் அழைப்பது சாம் பிட்ரோடா. 

மிகப் பெரும் வருத்தங்களும் ஏமாற்றங்களும் மிகப்பெரும் மாறுதலுக்கு அடித்தளமாக இருக்கும். அதுதான் அங்கும் நடந்தது. இந்தியத் தொலை தொடர்புத்துறையின் அபார வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சியே காரணமானது.
தான் படித்த படிப்பும், தனது திறமையும் தன் நாட்டு மக்களுக்குப் பயன்பெற வேண்டும் என்று நினைத்த பிட்ரோடா, அரசு இயந்திரத்தோடு போராடத் தொடங்கினார். அவர் அளித்த ஆலோசனைகள் எப்படியோ ராஜிவின் பார்வைக்குப் போனது. புதிய சிந்தனைகளும், கனவுகளுமாக இருந்த அந்த இளைஞர் அன்றைய பிரதமர் இந்திராவுடன் பிட்ரோடாவிற்கு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்திரா தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்திற்கு குறிப்பிட்ட மத்திய மந்திரிகளும், ராஜிவும் பங்கேற்றார்கள். அவர்களிடம் இந்தியத் தொலை தொடர்புதுறைக்கான தனது கனவையும், அதை நிறைவேற்றும் செயல்திட்டத்தையும் பிட்ரோடா விவரித்தார். பிரதமர் அதனை ஏற்றுக்கொள்ள, தனது அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.

காலாவதியான இயந்திரவியல் மின்நிலைமாற்றிகளுக்கு (Mechanical Switches) பதிலாக இந்தியாவிலேயே தயாரான எண்ணியல் மின்நிலைமாற்றிகளுக்கு (Digital Switches) இந்தியத் தொலை தொடர்புத்துறை மாறத் தொடங்கியது. நாடெங்கும் தனியார் நடத்தும் பொது அழைப்பு நிலையங்கள் உருவாகின. கிராமங்கள்தோறும் தொலைபேசி இணைப்புகள் கிடைக்கத் தொடங்கின. தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் தொலைபேசி உடனே கிடைக்கும் நிலை உருவானது. இந்தியாவின் கணினி மற்றும் மென்பொருள் துறைக்கு உறுதியான அடித்தளம் இடப்பட்டது. இதனிடையில் இந்திரா மரணமடைய, ராஜிவ் பதவி ஏற்றார். சாமுக்கும் ராஜிவ்குமான உறவு வலுவாகத் தொடங்கியது

போபோர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜிவ் தோல்வியடைய, வி.பி.சிங் பிரதமரானார். பெரும் குற்றச்சாட்டுகள் பிட்ரோடா மீது சுமத்தப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்த அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடைந்த மனதோடு சாம் அமெரிக்கா திரும்பினார். காலம் மாறியது, காட்சிகளும் மாறின. நரசிம்மராவ் தலைமையில் புது அரசு உருவானது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2004ம் ஆண்டு மன்மோகன்சிங் தேசிய அறிவுத்தள ஆணைக்குழுவிற்குத் தலைவராகப் பதவி ஏற்குபடி பிட்ரோடாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்தப் பொறுப்பையும் சாம் பிட்ரோடா திறம்பட நிர்வகித்தார்.

பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான சாம் பிட்ரோடாவிற்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியத் தொலைத்தொடர்புத் துறையை நவீனமாகிய சாமின் பங்களிப்பை இன்று நன்றியோடு நினைவுகூர்வோம்.

சனி, 3 மே, 2025

மே 3 - வாத்தியார் சுஜாதா பிறந்தநாள்


அது எண்பதுகளின் தொடக்கம். ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்த காலம். அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, காமிஸ் கூடவே கொஞ்சம் ராஜாஜி எழுதிய ‘ராமாயணம்’, ‘மஹாபாரதம்’, தமிழ்வாணன் எழுதிய ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ கதைகள், துக்ளக் என்று படித்துக்கொண்டிருந்த காலம். 

அப்போதுதான் தஞ்சையில் இருந்து மாற்றலாகி வந்திருந்த என் பெரியப்பா வீட்டில் வாராவாரம் ஆனந்தவிகடன் இதழில் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரின் இரண்டாவது பாகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பதின்மவயதைக்கூட எட்டாத சிறுவன் கண்முன்னே அமெரிக்க கல்வியின், அமெரிக்க வாழ்வின் வீச்சு புலனாகத் தொடங்கியது. அங்கே தொடங்கிய உறவு அந்த எழுத்தாளனோடு இன்றும் தொடர்கிறது.

‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’, ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்’, ‘மத்யமர் கதைகள்’, ‘நகரம்’, ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்று நெஞ்சை உலுக்கும் கதைகள், கணேஷ் வசந்த் என்று துப்பறியும் கதைகள் என்று எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தொட்டுப் பார்த்த படைப்பாளி சுஜாதா. கைவிரலில் எந்தத் தகவலையும் தேடி எடுக்கும் காலமல்ல அது. இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு முன்னால் விகடனில் ‘ஏன் எதற்கு எப்படி' என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள், கணினித்துறையில் ஆரம்ப காலகட்டத்தில் ‘சிலிக்கான் சில்லு புரட்சி' என்றும் ‘தலைமைச்செயலகம்’ என்று மூளையின் செயல்பாடுகளைப் பற்றி, அறிவியலும் ஆன்மீகமும் இணைகோடுகளாக இருக்கும் ‘கடவுள் இருக்கிறாரா' என்றும், பல்வேறு அறிவியல் / விஞ்ஞான புனைகதைகளை எழுதிப் பலரை அறிவியலின் பக்கம் ஈர்த்தார் என்றால் அது மிகையில்லை.

பரம்பரையாக வந்த வைஷ்ணவ தாக்கம், படித்த படிப்பால் அறிவியலும், பொறியியலும், டெல்லி, பெங்களூர் என்று பெருநகரங்களில் வசித்ததால் ஏற்பட்ட பல்வேறு மக்களைப் பற்றிய புரிதல், விமானம் ஓட்டுவது, இசைக்கருவிகளைக் கற்பது, என்று பல சோதனை முயற்சிகளின் அனுபவம், பரந்துபட்ட வாசிப்பு இவையெல்லாம் சுஜாதாவின் எழுத்துக்களில் வெளிப்பட்டது. 1960களில் தொடங்கி நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக வெகுஜன வாசிப்பின் முடிசூடா மன்னராக சுஜாதா விளங்கினார்.

ஒரே நேரத்தில் பல்வேறு வார இதழ்களிலும் அவரது தொடர்கதைகள் வெளியாயின. அவரது சலவைக்கணக்கைகூடப் பத்திரிகைகள் பிரசுரிக்கும் என்று பேசும் அளவிற்கு அவர் புகழ்பெற்றிருந்தார்.பல முக்கியமான கவிஞர்களை, எழுத்தாளர்களை, புத்தகங்களை, கோட்பாடுகளை வாசகர்களுக்கு சுஜாதா அறிமுகம் செய்து வைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். சிறுபத்திரிகைகளும் இலக்கியவாதிகளும் அவரை அங்கீகரிக்காவிட்டாலும், பெருவாரியான வாசகர்கள் அவரைக் கொண்டாடவே செய்தார்கள். இணையத்தில் இயங்கும் பலருக்கு சுஜாதாவின் பாதிப்பு இருக்கிறது என்பது உண்மைதான். பொழுதுபோக்க படிப்பு என்பதிலிருந்து வாசகர்களை அடுத்த படிக்கு மேலேற்றும் ஒரு பணியைத் தன் வாழ்வின் இறுதிவரை செய்துகொண்டே இருந்ததால்தான் அவரை வாத்தியார் என்று மக்கள் கொண்டாடினார்கள்.

வாத்தியாரின் கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதையோடு இந்தப் பிறந்தநாளில் அவரை நினைவு கொள்கிறேன்

குழந்தைகள் தினம் 
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டல்களில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் பிளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகல் இரவாய்த் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்லுடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப் போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழாவெடுக்கப் போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் தின்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைபிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைப்பட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்.
--- ஆனந்த விகடனில் வெளியானது.

வெள்ளி, 2 மே, 2025

மே 2 - பன்முகக் கலைஞர் சத்யஜித் ரே பிறந்த தினம் -


உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவே பொதுவாக அறியப்படும் சத்யஜித் ரே, கூடுதலாக, எழுத்தாளர், இசையமைப்பாளர், ஓவியர், புத்தகப் பதிப்பாளர், வரைபட வடிவமைப்பாளர், சித்திர எழுத்துக்கள் எழுதுபவர், சிற்பக்கலை வல்லுநர் என்ற பல திறமைகளுக்குச் சொந்தக்காரர்.

இவரது தாத்தா உபேந்திரா கிஷோர் ராய் எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, வானவியல் நிபுணர் மற்றும் அன்றய சமுதாய இயக்கமான ப்ரம்மசமாஜத்தின் முக்கிய அங்கத்தினர். இவர் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், வங்க மொழி எழுத்தாளர், சிறுவர் இலக்கியம் படைத்தவர் என்று குடும்பமே கலைகளில் சிறந்த விளங்கிய ஒன்று. இந்தச் சூழ்நிலையில் 1921ம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் சுகுமார் ராய் சுமத்ரா தம்பதியினருக்கு மகனாக சத்யஜித் ரே பிறந்தார்.

மிகச் சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பட்டம் பெற்ற ரே சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியம், வரைகலை, வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக்கொண்டார்.

ஒரு பிரித்தானிய விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ரே பின்னர் பதிப்பகம் ஒன்றில் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றார். ஜிம் கார்பட் எழுதிய புத்தகங்கள், ஜவாஹர்லால் நேரு எழுதிய இந்தியாவைக் கண்டுணர்தல் (Discovery of India) போன்ற புத்தகங்களின் அட்டைப்படங்களை வடிவமைத்தார். அப்போதுதான் வீபூதிபூஷன் பந்தோபாத்யாய் எழுதிய பதேர் பாஞ்சாலி நாவலின் சிறுவர் பதிப்பைக் கண்டடைந்தார். இந்த நாவல் சத்யஜித் ரேயின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையல்ல.

தனது வேலை நிமித்தமாக லண்டன் சென்ற ரே அங்கே பல்வேறு உலகத் திரைப்படங்களைப் பார்த்தார். மீண்டும் இந்தியா திரும்பிய ரே பதேர் பாஞ்சாலி நாவலைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். தயாரிப்பாளர்கள் யாரும் இந்தப் படத்திற்குப் பணம் தர முன்வராத காரணத்தால் தன் சேமிப்பையும், தனது மனைவியின் நகைகளையும் விற்றுப் படம் எடுக்கத் தொடங்கினார் ரே. பின்னர் நேருவின் சிபாரிசினால் அன்றய வங்காள அரசு பண உதவி செய்ய முன்வந்தது. வெளியான உடனேயே பதேர் பாஞ்சாலி படம் உலகமெங்கும் பெரும் புகழ்பெற்றது. 

இந்திய சினிமாவை பதேர் பாஞ்சாலிக்கு முன்னென்றும் பின்னென்றும் பிரிக்கவேண்டும் என்ற நிலைமை உருவானது. அப்பு என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் கதை இது. இதனைத் தொடர்ந்து வளர்ந்துவிட்ட அப்புவுக்கும் அவன் தாய்க்குமான உறவுச்சிக்கலைச் சொல்லும் அபராஜிதோ, அப்புவின் மணவாழ்க்கையைப் பேசும் அப்பு சஞ்சார் ஆகிய படங்களையும் சத்யஜித் ரே இயக்கினார். இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.  திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என 36 படங்களை இவர் இயக்கியுள்ளார்.

திரைப்படங்களைத் தாண்டி, வங்காள மொழியின் சிறுவர் இலக்கியத்திற்கும் ரே பெரும் பங்காற்றியுள்ளார். ப்ரொதோஷ் சந்திரா மித்ரா என்ற துப்பறிவாளர், பேராசிரியர் ஷான்கோ என்ற அறிவியலாளர் என்ற பாத்திரங்களை உருவாக்கி பல சிறுவர் கதைகளையும் இவர் எழுதி உள்ளார். வங்காள மொழியில் எழுத்துருவங்களை உருவாக்குவதிலும் ரே தலைசிறந்து விளங்கினார்.

திரைப்படத்துறையில் ரேயின் பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பாரத்ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. வாழ்நாள் சாதனையாளர் என்று இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகமும், டெல்லிப் பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. இதுபோக இந்திய அரசின் திரைப்பட விருதுகளும், உலக அளவின் சிறந்த சினிமாவுக்கான பல்வேறு விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகளவில் இந்திய சினிமாவின் முகம் சத்யஜித் ரே என்றால் அது உண்மைதான்.

வியாழன், 1 மே, 2025

மே 1 - தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பிறந்தநாள்


இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவின் பிறந்தநாள் இன்று. மஹிந்திரா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான ஆனந்த் 1955ஆம் ஆண்டு பிறந்தவர்.

தனது பள்ளிக்கல்வியை ஊட்டியை அடுத்துள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியிலும் கட்டடக்கலை மற்றும் திரைப்படத் தயாரிப்பில் பட்டப்படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தனது மேலாண்மை கல்வியையும் அங்கேயே பெற்ற ஆனந்த் தாய்நாடு திரும்பி மஹிந்திரா குழுமத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1981 முதல் பல்வேறு மஹிந்திரா குழும நிறுவனங்களில் பணியாற்றிய ஆனந்த் 1991ஆம் ஆண்டு மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உதய் கோடக் அவர்களோடு இணைந்து கோடக் மஹிந்திரா வங்கியை உருவாக்கினார்.
இவர் தலைமையில் மஹிந்திரா குழுமம் டிராக்டர்கள் மற்றும் வாகனத் தயாரிப்பைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் கால் பதித்தது. இவர் பொறுப்பேற்ற காலம்தான் இந்தியா தனது கட்டுப்பாடான தொழில் கொள்கைகளைக் கைவிட்டு உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் மற்றும் தனியார்மயமாக்கம் என்று மாறியது. இந்த மாற்றங்கள் அளித்த வாய்ப்புகளை ஆனந்த் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். பஞ்சாப் டிராக்டர் நிறுவனம் மற்றும் மின்வாகனங்கள் தயாரிப்பில் இருந்த ரேவ் நிறுவனம் போன்ற நிறுவனங்களை மஹிந்திரா குழுமம் வசப்படுத்தியது.

மோசடியான கணக்கை தாக்கல் செய்து பிரச்சனையில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை தனது டெக் மஹிந்திரா நிறுவனத்தோடு ஆனந்த் இணைத்தார். இரு சக்கர வாகனங்கள், மின் வாகனத் தயாரிப்பு, படகு தயாரிப்பு, சிறிய விமானங்கள் தயாரிப்பு, கணினி மென்பொருள் துறை, இந்திய ராணுவத்திற்க்கான வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பு, நகர நிர்மாணம் என்று பல்வேறு துறைகளில் மஹிந்திரா நிறுவனம் இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் நகருக்கான குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் ஆகிய சேவைகளை மஹிந்திரா நிறுவனம் நடத்தி வருகிறது.

நான்ஹி காலி என்ற பெயரில் திரு ஆனந்த் ஒரு சமுதாய சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். நான்ஹி காலி என்றால் அரும்புகள் அல்லது மொட்டு என்று பொருள். இதன்வழியாக ஒரு லட்சத்திற்கும் மேலான பொருளாதாரரீதியில் நலிவடைந்த குழந்தைகளின் படிப்பிற்க்கான உதவியை ஆனந்த் செய்து வருகிறார். இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கோடி ரூபாயை ஒரு மனிதர் தருவதைக் காட்டிலும் ஒரு கோடி மக்கள் சிறிது பணம் கொடுப்பதுதான் சரி என்று கூறுவார். பல்வேறு தனிமனிதர்கள் சிறிய அளவில் பணம் அளிப்பதற்கான முறையை ஆனந்த் உருவாக்கி உள்ளார். பணத்தின் அளவல்ல, தரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே முக்கியம் என்பது அவர் கருத்து.

தொழிலில் சேர்ந்த 1981ஆம் ஆண்டே சிறு அளவில் தொடங்கிய இந்த முயற்சி இன்று மிகப் பெரும் அளவில் வளர்ந்துள்ளது. சமுதாயப் பணிக்காக நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை அளிக்கவேண்டும் என்று அரசு சட்டமியற்றும் முன்பாகவே தானாகவே முன்வந்து தங்கள் நிறுவனத்தின் லாபத்தில் 1% அளவிற்கு சமுதாயப் பணிக்கு அளித்தவர் ஆனந்த். பொதுவாக கல்வி, அதிலும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், சுகாதாரம் ஆகிய துறைகளில் ஆனந்த் கவனம் செலுத்துகிறார்.

ஆனந்த் மஹிந்திரா போல, இன்னும் பல பணம் படைத்தவர்கள் சமுதாய சேவையில் ஈடுபட்டால் இந்தியாவின் மனிதவளம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றும் என்பதில் ஐயமில்லை. 

புதன், 30 ஏப்ரல், 2025

ஏப்ரல் 30 - இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்தநாள்

இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாஹேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் இன்று.


தாதாசாஹேப் பால்கே அவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரின் அருகில் உள்ள த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.

தனது ஆரம்பக் கல்வியை த்ரயம்பகேஸ்வரில் படித்த தண்டிராஜ், பள்ளி இறுதி வகுப்பை மும்பையிலும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெ ஜெ நுண்கலைக் கல்லூரியில் ஓவியப் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அவர் பரோடாவிலுள்ள கலா பவனில் சேர்ந்து, சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு புகைப்படம் எடுப்பதில் பெரும் விருப்பம் இருந்தது,

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா நகரில் முழுநேர புகைப்படக் கலைஞராக அவர் தொழில் செய்யத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அது லாபகரமாக அமையவில்லை. அப்போது அவரது மனைவியும் பிளேக் நோயினால் காலமாகிவிட்டார். அதற்கிடையில் மாயாஜால வித்தைகள் ( மாஜிக் ) செய்யவும் அவர் கற்றுக் கொண்டார். 1902ஆம் ஆண்டு பால்கே மறுமணம் செய்து கொண்டார்.

அவருக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில், வரைவாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. வரைவாளராகப் பணியில் ஈடுபட்ட அவர், அதில் திருப்தி அடையாமல் இருந்ததால், அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டு, அச்சிடும் தொழிலை சொந்தமாகத் தொடங்கினார். அவர் கல் அச்சுக் கலை (lithography) மற்றும் எண்ணெய் வண்ண அச்சுப்படத்தில் (oleograph) நிபுணத்துவம் பெற்றிருந்ததால், உலகப் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவிடம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், பால்கே  நண்பர்களோடு இணைந்து கூட்டாக ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். சிறிது காலத்திலேயே நண்பர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் அந்த கூட்டு வியாபாரத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

1911ஆம் ஆண்டு முதல்முறையாக ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் The Life of Christ என்ற திரைப்படத்தை பால்கே பார்த்தார். முதல்முறையாக திரையில் நகரும் பிம்பங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அதில் நமது இதிகாச நாயகர்களைக் காட்டினால் அதற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று சரியாகக் கணித்த பால்கே திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.

வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேசிய ராஜா ஹரிச்சந்திராவின் கதையைத்தான் அவர் முதல்முதலாகப் படமாக்கினார். இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர், ராமச்சந்திர கோபால் அவர்களின் படமான ‘பன்டாலிக்’ அதே திரையரங்கில் வெளியிடப்பட்டாலும், முதல் உள்நாட்டு இந்திய திரைப்படத்தைத் தயாரித்தப் பெருமை, தாதாசாகேப் பால்கே அவர்களையே சேரும், ஏனென்றால், “பண்டாலிக்” திரைப்படம் பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1937 வரை 19 ஆண்டுகளில் 19 ஆண்டுகளில் தனது 95 திரைப்படங்கள் மற்றும் 27 குறும்படங்களை மொத்தமாக பால்கே செய்தார். மோகினி பஸ்மசூர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹான், ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா மற்றும் காலியா மார்டன் ஆகியோரின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும்

பால்கேவின் சாதனைகளில் பெரும்பங்கு அவர் மனைவி சரஸ்வதிபாய் அம்மையாரையே சாரும். அதுவரை நாட்டில் இல்லாத ஓவர் தொழிலில் ஈடுபட்ட கணவருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்காக தன் நகைகளை எல்லாம் விற்று, படம் தயாரிப்பிலும் பல்வேறு பணிகளை சரஸ்வதிபாய் மேற்கொண்டார்.

இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள திரைத்துறையை நாட்டிற்கு அறிமுகம் செய்த பால்கே 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் காலமானார்.

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தாதாசாஹேப் பால்கே பெயராலே வழங்கப்படுகிறது.