ஞாயிறு, 5 ஜூலை, 2020

வெற்றிகரமான முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஜூலை 5


நீண்டகால அளவில் மிகுந்த லாபகரமான முதலீடு என்பது நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதுதான். எதிர்காலத்தில் எந்த துறைகள் ஏற்றமடையும் என்பதை இனம் கண்டுகொண்டு அந்தத் துறைகளில் உள்ள நிறுவங்களில் சிறந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து போதுமான அளவு காத்திருந்தால் அதுபோன்ற லாபமான முதலீடு எதுவும் இல்லை. ஆனால் பாரத நாட்டில்  பங்குசந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதிகமான லாபம் தரும் முதலீடு என்பது அதற்க்கு குறைவில்லாத இழப்பையும் தரும் வாய்ப்புள்ளதால் பொதுவாகவே பாதுகாப்பை விரும்பும்  பாரத மக்கள் பங்குசந்தையில் அதிகமாக முதலீடு செய்வது இல்லை.

ஆனால் இதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பவர் திரு ராஜேஷ் ஜுன்ஜுன்வலா. மும்பையில் பணியாற்றிவந்த, மத்தியதர குடும்பத்தைச் சார்ந்த வருமானவரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ் 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் பூர்வீகம். கல்வித்தகுதியில் ராகேஷ் ஒரு பட்டய கணக்காளர்.
கடந்த முப்பத்தி ஐந்தாண்டு காலமாக பங்குசந்தையில் முதலீடு செய்து வரும் ராகேஷ் சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர். பொருளாதார தாராளமயமாக்கம், ஹர்ஷத் மேத்தா சகாப்தம், கணினிமயக்காத்தால் உருவான புது தொழில்கள், பல்வேறு பங்குச்சந்தை முறைகேடுகள் என்று சுழன்றடிக்கும் சூறாவளிக்கு நடுவே இவரது பயணம் நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு இவர் பங்குசந்தையில் முதலீட்டை தொடங்கும்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 150ஆக இருந்தது. இன்று அது ஏறத்தாழ 40,000 என்று உள்ளது.

படிப்பை முடித்த கையேடு பங்குசந்தையில் முதலீடு செய்ய ராகேஷ் திட்டமிட்டார். ராகேஷின் தந்தை பங்குசந்தையில் முதலீடு செய்ய இவருக்கு எந்தப் பணத்தையும் அளிக்கவில்லை. ஆனால் கூட்டுக்குடும்பம் என்பதால் உணவுக்கும், உறைவிடத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலீடு செய்யும் பணத்தை ராகேஷே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வேளை பங்குச்சந்தை முதலீடு அவருக்கு லாபகரமாக இல்லை என்றால் படிப்பை கொண்டு ஏதாவது வேலைக்கு சென்று விடலாம் என்று அவர் தந்தை அறிவுரை கூறினார்.

மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா முதலான நிறுவனங்களில் இவர் செய்த முதலீடு நல்ல லாபத்தை அளித்தது. அந்த லாபத்தையும் ராகேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டான் நிறுவனப் பங்கில் செய்த முதலீடுதான். 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள் ரூபாய் மூன்று என்ற அளவில் இருந்தது. அது இன்று ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. ஏறத்தாழ ஐந்து கோடிக்கும் அதிகமான டைட்டான் நிறுவன பங்குகளை ராகேஷ் இன்று வைத்துள்ளார்.

ராகேஷும் அவர் மனைவி ரேகாவும் இணைந்து நடத்தும் Rare Enterprises நிறுவனத்தின் மூலமாக ராகேஷ் தனது முதலீடுகளை மேற்கொள்கிறார். செல்வத்தை சேர்ப்பது என்பது ஓன்று, அதனை தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு / சமுதாயத்திற்கு அளிப்பது என்பது மற்றொன்று. ராகேஷ் தனது செல்வத்தை பல்வேறு சமுதாயப் பணிகளுக்கும் அளித்து வருகிறார். கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான கல்வி, மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ராகேஷ் முன்னுரிமை அளித்து, அதற்கான தொண்டு நிறுவங்களுக்கு பண உதவி செய்து வருகிறார்.

செய்க பொருளை என்று வள்ளுவர் கட்டளை இட்டதுபோல பணத்தை சம்பாதிப்பதில், செல்வத்துப் பயனே ஈதல் என்ற வாக்குப்படி வாழ்ந்து வரும் ராகேஷின் வாழ்க்கை பல்வேறு பாரத இளைஞர்கள் பின்பற்ற தகுந்ததாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக