புதன், 24 ஜூலை, 2019

விப்ரோ நிறுவன உரிமையாளர் ஆசிம் பிரேம்ஜி பிறந்தநாள் - ஜூலை 24.


பாரதத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தனது சொத்தில் பெரும்பங்கை கல்விக்காக அளித்தவருமான திரு ஆசிம் பிரேம்ஜியின் பிறந்தநாள் இன்று. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சார்ந்த ஷியா முஸ்லீம் வகுப்பை சார்ந்தவர் ஆசிம்.  இவரது தந்தை முகம்மது அலி ஜின்னாவிற்கு மிக நெருக்கமானவர். ஆனாலும் ஜின்னாவின் அழைப்பை நிராகரித்து விட்டு நாடு பிரிவினையாகும் போது பாரத நாட்டிலேயே தங்கிவிட்டவர்.

1946ஆம் ஆண்டு ஆசிம் பிரேம்ஜியின் தந்தை முஹம்மது ஹாசிம் பிரேம்ஜி மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜாலேகான் மாவட்டத்தில் ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலையை நிறுவினார். 1966ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் இறந்து போக, அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியிலாளர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருந்த ஆசிம் பிரேம்ஜி உடனடியாக நாடு திரும்ப வேண்டி இருந்தது. குடும்ப தொழிலின் நிர்வாகப் பொறுப்பை ஆசிம் பிரேம்ஜி ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தி ஓன்று மட்டுமே.

இளமைத் துடிப்போடு இருந்த ஆசிம் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கினார். மின்விளக்குகள், சிறு குழந்தைகளுக்கான சோப்பு முதலியவை விப்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட தொடங்கின. அது நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த நேரம். அரசின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் இருந்து ஐபிஎம் நிறுவனம் வெளியேறியது. கணினி துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதைக் கணித்த பிரேம்ஜி கணினி தயாரிப்பில் இறங்கினார்.
அதன் நீட்சியாக மென்பொருள் சேவை வழங்கும் தொழிலையும் அவர் தொடங்கினார். இன்று விப்ரோ நிறுவனம் ஏறத்தாழ அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் செய்கிறது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பணியாளர்கள் இதில் வேலை பார்த்து வருகிறார்கள்.

வணிகம் செய்வதில் திறமைசாலியாக பலர் இருக்கலாம், ஆனால் தனது சொத்தில் பெரும்பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கும் பரந்த மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. தான் சார்ந்து இருக்கும் சமுதாயம் நல்லபடி வாழவேண்டும் என்ற எண்ணத்தால் பிரேம்ஜி அவர் பெயரிலேயே ஒரு சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். தேவைப்படுபவர்களுக்கு பணம் அளிப்பது என்ற எண்ணத்தில் அல்லாது சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை கல்வி.

சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வை கல்வியின் மூலம்தான் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்ததால் அவர் இன்று ஆறு மாநிலங்களில் தனது தொண்டு நிறுவனம் மூலமா பள்ளிகளை நடத்திவருகிறார். அதோடு ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகளையும் அவரது தொண்டு நிறுவனம் முன்னெடுக்கிறது. கர்நாடக அரசு அவருக்கு ஒரு தனியார் பல்கலைக் கழகம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதிலும் கல்வி, பொருளாதாரம், சட்டம் போன்ற பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன.

விப்ரோ நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை ஆசிம் பிரேம்ஜி தனது சேவை நிறுவனத்திற்கு அளித்துள்ளார். தொடர்ந்து அந்த சேவை நிறுவனத்துக்கான பொருளாதார கட்டமைப்பை அவர் இதன் மூலம் உறுதி செய்துள்ளார்.

ஆசிம் பிரேம்ஜியின் பங்களிப்புக்காக பாரத அரசு அவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பட்டத்தை அளித்து சிறப்பித்து உள்ளது.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் பிரேம்ஜி இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, இந்திய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கவேண்டும் என்று ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக