புதன், 24 ஜூலை, 2019

புரட்சிவீரன் சந்திரசேகர ஆசாத் பிறந்த நாள் - ஜூலை 23


ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது.

நீதிபதி     : உனது பெயர்
சிறுவன்  : விடுதலை ( ஆசாத் )

நீதிபதி     : உனது தந்தையின் பெயர்
சிறுவன்  : சுதந்திரம்

நீதிபதி     : உனது இருப்பிடம்
சிறுவன்  : சிறைச்சாலை

இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார் - பதினைந்து கசையடிகள். அந்த சிறுவனும் தனக்குத் தானே ஒரு தீர்ப்பை வழங்கிக் கொண்டான்  - இனி ஒருபோதும் வெள்ளையர்களிடம் கைதியாகப் பிடிபடப் போவதில்லை. உயிரோடு என்னை இவர்கள் பிடிக்கக் கூடாது என்று.

பாரத நாட்டின் பெரும்புரட்சியாளர்களில் ஒருவராகவும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் தளபதியாகவும், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, படுகேஸ்வர் தத் போன்ற போராட்ட வீரர்களின் வழிகாட்டியாக, நண்பனாக விளங்கிய சந்திரசேகர ஆசாத்தின் பிறந்தநாள் இன்று.

சீதாராம் திவாரி ஜக்ரானி தேவி திவாரி தம்பதியினரின் மகனாக 1906ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாள் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபாரா கிராமத்தில் பிறந்தவர் சந்திரசேகர திவாரி. இவரின் முன்னோர்கள் இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரைச் சார்ந்தவர்கள்.

தனது மகன் வடமொழியில் புலமை பெறவேண்டும் என்று நினைத்த தாயார் சந்திரசேகரை காசி சர்வகலாசாலைக்கு படிக்க அனுப்பி வைத்தார். ஆனால் நாட்டில் வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை சந்திரசேகரை காந்தியின் பக்கம் கொண்டு சேர்த்தது. காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார் சந்திரசேகர திவாரி. அப்போது நடந்த விசாரணைதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள். இதற்குப் பிறகு அவர் சந்திரசேகர ஆசாத் என்றே அழைக்கப்பட்டார்.

ஆயுதம் ஏந்தாத அஹிம்சைவழிப் போராட்டத்தை காந்திஜி முன்னெடுத்தார். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சவுரிசவுரா என்ற இடத்தில் போராட்ட வீரர்களை அடக்க தடியடியும் பின்னர் துப்பாக்கி சூடும் நடைபெற்றது, தன்னிலை இழந்த போராட்டக் குழுவினர் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்தனர். இருபத்தி இரண்டு காவலர்கள் இந்த கலவரத்தில் இறந்ததாக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அஹிம்சை வழியில் போராடும் பக்குவத்திற்கு நாடு வரவில்லை என்று கூறி காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைத்தார். காந்தியின் முடிவை மறுதலித்து மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர்  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுதந்திரா கட்சியைத் தொடங்கினர். அதுவரை காந்தியின் அணியில் இருந்த சந்திரசேகர ஆசாத் புரட்சியாளராக மாறினார்.

ஆசாதுக்கு இந்திய குடியரசு இயக்கம் ( ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அஸோஸியேஷன் ) என்ற புரட்சி அமைப்பை தொடங்கி நடத்திக்கொண்டு இருந்த ராம் பிரசாத் பிஸ்மி மற்றும் மன்மத்நாத் குப்தா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அஹிம்சாவாதி ஆயுதவாதி ஆனார். 1925ஆம் ஆண்டு நடந்த ககோரி ரயில் கொள்ளை, 1926ஆம் ஆண்டு வைஸ்ராய் பயணம் செய்த ரயில்பெட்டியை கவிழ்க்கும் முயற்சி, லாலா லஜபதி ராயின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக காவல் அதிகாரி சாண்டர்ஸ் கொலையானது, நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு என்று புரட்சியாளர்கள் ஆங்கில அரசின் கண்களில் தங்கள் விரலை விட்டு ஆட்டினர். பல்வேறு புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், தூக்கில் இடப்பட்டனர், அந்தமான் சிறையிலும் மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். ஆனால் கடைசி வரை சந்திரசேகர ஆசாத்தை மட்டும் பிடிக்கவே முடியவில்லை.

ஒரு பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, இந்திய சமதர்ம குடியரசு ராணுவத்தின் தலைமைத் தளபதி பல்ராஜ் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியீட்டுக்க கொண்டு, அதே நேரத்தில் இன்றய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரின் சத்தார் நதியின் ஓரத்தில் உள்ள ஒரு ஹனுமார் கோவிலுக்கு அருகே குடிசையில் பண்டிட் ஹரிசங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் சிறுவர்களுக்கு ஆன்மீகமும் சமிஸ்க்ரித மொழியும் சொல்லிக் கொடுப்பதுபோல மாறுவேட வாழ்க்கையையும் அவரால் வாழ முடிந்தது.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள ஆல்பிரெட் பூங்காவில் சந்திரசேகர ஆசாத் இருக்கிறார் என்ற தகவல் ஆங்கில அரசாங்கத்திற்கு கிடைத்தது. அவரைப் பிடிக்க பெரும் படை அந்தப் பூங்காவை சுற்றிவளைத்தது. தன்னோடு இருந்த மற்றொரு புரட்சியாளர் சுகதேவ்ராஜ் தப்பிக்கும் வரையில் சுற்றிவளைத்த காவலர்களை தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தடுத்துக் கொண்டு இருந்த சந்திரசேகர ஆசாத் கடைசி தோட்டாவால் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இனி ஒரு முறை உயிரோடு ஆங்கில அரசிடம் பிடிபடப் போவதில்லை என்று அவர் எடுத்த முடிவை கடைசிவரை காப்பாற்றிவிட்டார்.

பெரும் புரட்சியாளனாகவும், புரட்சியாளர்களின் வழிகாட்டியாகவும், மிகப் பெரும் வீர தீர செயல்களை செய்து அந்நிய ஆட்சியாளர்களை கலங்கடித்த அந்த வீரன் வாழ்ந்தது என்னவோ இருபத்தி நான்கு வயது வரை மட்டுமே.

எத்தனையோ வீரர்கள் இந்த நாட்டில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக