வியாழன், 19 மார்ச், 2015

காப்பீடு, காப்பீடு, காப்பீடு

நாள்தோறும் பல மனிதர்கள் இறப்பதைப் பார்த்தபின்னரும், தான் நிரந்தரமாக இருப்போம் என்று மனிதன் எண்ணுவதுதான் உலகின் ஆச்சரியமான விஷயம் 

யக்ஷப்ப்ரச்னம் - மகாபாரதம்


பணத்தை சேமிக்கும் வழியைக் கேட்டால், காப்பீடில் சேர்ந்து செலவழிக்கும் வழியை ஏன் பேச ஆரம்பிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? எப்படி அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டடம் கட்ட முடியாதோ அது போலவே காப்பீடு இல்லாமல் முதலீட்டைப் பற்றி பேச முடியாது.

நீங்கள் சமீபத்தில் எப்போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டீர்கள் ? அப்போது அந்த காப்பீடு நிறுவனத்தின் முகவர் என்ன சொல்லி உங்களிடம் கையெழுத்து வாங்கினார் ?

வரியை சேமிக்கலாம் என்றா ? இல்லை உங்கள் குழந்தையின் பெயரில் காப்பீடு செய்யுங்கள், அந்தக் குழந்தை வளர்ந்து சரியான வயதில் படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க பணம் கிடைக்கும் என்றா ? இல்லை வருடம் ஐந்தாயீரம் வீதம் முதலீடு செய்தால் இருபது வருடங்கள் கழித்து உங்களுக்கு நீங்கள் செலுத்திய ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றா ? வாருங்கள், உங்களுக்காகத்தான் இந்தப் பகுதி.

காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது 
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் 

காப்பீடு நிறுவன முகவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் பாடமே இதுதான். அதனாலே பல முகவர்கள் வாடிக்கையாளர்கள் தலையில் அமர்ந்து காப்பீடை விற்கிறார்கள். 

இறப்பு என்பது உறுதி, ஆனால் அது நமக்கு வரவே வராது என்பது தான் பொதுவாக மனித மனதின் நம்பிக்கை. அதுவும் நீங்கள் இறந்து போனால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று பேச ஆரம்பித்தால், ஒரு சராசரி இந்தியனால் கோபப்படாமல் இந்தப் பேச்சை கேட்கவே முடியாது. 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சராசரி இந்தியனின் ஆயுள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் முப்பதுகளின் மத்தியில், நாற்பதின் ஆரம்பத்தில், ஐம்பதின் அருகில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் வெளி உலகம் தெரியாத மனைவி, படிப்பை முடிக்காத பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் இத்தோடு முடிவையாத கனவுகள் என்று அவர்கள் குடும்பம் சந்திக்கும் சவால்களை நினைத்துப் பாருங்கள். அநேகமாக உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் உறுப்பினராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து போய் இருக்கும் இன்றைய காலகட்டதில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது நண்பர்களே, ஆனால் நாம் சற்றே சுதாரிப்பாக இருப்பதில் தவறு இல்லை அல்லவா. காப்பீட்டின் பல் வேறு வடிவங்களை நாம் சற்றே உற்று நோக்குவோம்.  

5 கருத்துகள்:

  1. உங்கள் அப்பா நீங்க கஷ்டப்படக்கூடாது என்பதற்காக என்ன விட்டுச் சென்றார்? எவையெல்லாம் பாதுகாப்பாக உங்களுக்கு வழங்கி விட்டுச் சென்றார். குறைந்தபட்சம் எத்தனை லட்சங்கள் அவர் வங்கிக் கணக்கில் வைத்து விட்டுச் சென்றார்? இதற்குப் பதில் நம்மில் பெரும்பாலும் புன்னகையாகத்தான் இருக்கும்.

    நாலைந்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற பயங்கள் இருக்கத்தான் செய்தது. அய்யோ நமக்கு ஏதாவது ஒன்று ஆனால்? மனைவியில் நிலைமை? மகள்களின் கதி? என்று வாழும் போதே நம் அன்றாட வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்ததை ஆழமாக யோசித்த போது எவரும் நம்மை இருக்கவில்லை. எவரையும் நம்பிக்கையுடன் இந்த காலம் விட்டு வைக்காது என்பது தான் உண்மை. திருப்பூரில் நூறு கோடி சேர்த்து வைத்தவர்களின் சொத்துக்களை அடுத்த வாரிசு கைக்கு வந்து சேர்ந்த போது அது சில லட்சமாக மாறி விடுவதை பலமுறை பார்த்துள்ளேன். என் அனுபவப்படி நாம் இல்லாத போது ஒரு வருடமாவது நம்மை நம்பி இருப்பவர்கள் சங்கடப்படாமல் இருக்கும் அளவிற்கு உருவாக்கி இருந்தாலே போதுமானது. அப்புறம் அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சார்ந்து இருத்தல் என்பது தான் இந்தியாவின் மிகப் பலம் அதே சமயத்தில் மிகப் பெரிய பலவீனமும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் யாரை நம்பியும் இல்லை என்ற புரிதல் வருவதற்கு காலம் பிடிக்கும் ஜோதிஜி. கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் என்பது சரியான கேள்விதான் என்றாலும், நமக்கென்று கடமைகள் உண்டல்லவா. கூடியவரை அவைகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது அல்லவா. பணம் எல்லாப் பிரச்சனையையும் தீர்த்து விடாது ஆனால் பணம் இல்லை என்ற பிரச்சனையைத் தீர்ப்பதில் நேரம் முடிந்து விடக்கூடாது.

      நீக்கு
  2. காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது
    அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் ...

    அருமை...

    பதிலளிநீக்கு
  3. In an inflationary economy, one Crore life cover for the suggested case may not be sufficient. Assuming a long term inflation of 5%, the required cover comes to 30x the annual income. Also, constant resetting of the cover level is required if there is any substantial increase in the income. This is very difficult in practice due to the fact that increase in age and gradual deterioration of health makes the premium costly. Also, it is advisable to target a cover- end -age (say 65) so that the premium is affordable.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Point well taken Ashok, I am just trying to give some ideas on what should have been the right amount of cover, but the readers are advised to consult financial planners or to do a proper homework

      நீக்கு