திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 1 - காகா காலேல்கர்பிறந்ததினம்

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார். 


மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் காந்தியின் தூண்டுதலின் பேரில் குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் முக்கியமானது லோக மாதா அதாவது உலகின் தாய் என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் அவர் எழுதி தமிழில் ஜீவன் லீலா என்ற பெயரில் மொழிபெயராக்கப்பட்ட பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.


பள்ளிக்கல்வியும் பாடப்புத்தகங்களும் கற்றுக்கொடுக்காத பாடத்தை மனிதர்களுக்கு  பயணம் கற்றுக்கொடுக்கிறது. எதையோ தேடி வரலாறு முழுவதும் மனிதன் பயணம் செய்துகொண்டேதான் இருக்கிறான். பொருள் தேடியோ போர் நிமித்தமாக தலைவன் பிரிவதை பாலைத்திணை என்று தமிழ் வரையறை செய்கிறது. பத்திரிகைப் பணிக்காகவும் தேச விடுதலைக்கான இயக்க வேலைக்காகவும் காலேல்கர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்தார். எதனாலோ அவருக்கு நீர்நிலைகள்மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. தான் தேடிதேடிப் பார்த்த நதிகளைப் பற்றி கட்டுரைகளாக அவர் பதிவு செய்து இருக்கிறார்.   


நதிக்கரைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டிலாக உள்ளது. மலைகளில் சிறுதுளியாகத் தொடங்கி வழியில் பல்வேறு ஓடைகளை இணைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாக குதித்து, நின்று நிதானமாக ஓடி, தான் செல்லும் இடத்தையெல்லாம் குளிர்வித்து, செழிப்பாக்கி, பாலைவனங்களைச் சோலையாக்கி, விவசாய பூமியாக்கி, இறுதியில் கடலில் சங்கமிக்கும் இடங்கள் வரை காலேல்கர் தேடித்தேடி சென்று பார்த்தார். 


பாரதநாட்டின் பண்பாடு என்பது நதிகளை தெய்வமாக எண்ணித் தொழுவது. காலேல்கரின் தனது பயணங்களில் வெறும் கேளிக்கைக்காக கடல்களையும் நதிகளையும் காணச்  செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தப் பயணங்கள் என்பது ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒத்தது. இந்தக் கட்டுரைகளில் நீர்நிலைகள் மீதான அவரது நெருக்கமும் பக்தியும் தென்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றோடு தனக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கவேண்டும் என்ற அவரின் விருப்பமும் தவிப்பும் நமக்குப் புலனாகிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவர் " நின்று, கரம்குவித்துத் தொழுதல்" என்று தலைப்பிட்டிருப்பதை நோக்கினால் நீர்நிலைகளை அவர் தெய்வமாக எண்ணுவதை, ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்களை அவர் ஆன்மீக அனுபவத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணமாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடியும் 


இந்த நூலில் உள்ளவை வெறும் பயணம் பற்றிய தகவல்களோ அல்லது நதிகளைப் பற்றிய குறிப்புகளோ மட்டும் அல்ல. மனிதனின் வாழ்க்கைக்கும் நதிகளுக்கு இடையேயான ஒரு உணர்வுபூர்வமான இணைப்பின் ஒரு ஆய்வு இது. இந்த நாட்டின் எல்லா நதிகளைப் பற்றி எதோ ஒரு புராணக்கதை உள்ளது. எதோ ஒரு தெய்வத்தோடு அல்லது ஒரு முனிவரோடு இந்த நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 


புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.


மார்க்கண்டி நதி அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். கார்வார் கடற்கரையில் பெய்யும் மழைத்தாரைகளை கடலைத் வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதுகிறார். 


பாரதநாட்டின் எல்லா மக்களின் நினைவிலும் இருப்பது கங்கை நதி. அந்த நதியின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர்.  கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். இது நதியின் குழந்தைப் பருவம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். இது கங்கையின் குமரிப் பருவம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது. கங்கையைச் சகுந்தலையாகவும் யமுனையை திரௌபதி என்றும் மாற்றி அவர் குறிப்பிடுகிறார். அயோத்தி நகர் வழியாக பாயும் சரயுநதி, ராஜா  ரத்திதேவனோடு தொடர்புடைய சம்பல் நதி, கஜேந்திர மோட்ஷம் நடைபெற்ற சோணபத்ரநதி, கண்டகி நதி என்று பல்வேறு நதிகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். 

தண்டால் மலைப்பகுதியில் கங்கையும் யமுனையும் சந்திப்பது போல நெருங்கி வந்து பிறகு சங்கமிக்காமல் பிரிந்து போய்விடும். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது. இந்தத் தொன்மக் கதையையும் காலேல்கர் பதிவு செய்து இருக்கிறார். 

காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.

கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக