ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் - ஏப்ரல் 5

சுதந்திரத்திற்குமுன் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் மிக இளைய அமைச்சர், இந்தியாவின் முதல் அமைச்சரவையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், 1936 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் பாராளுமன்றத்திற்கு தேர்வானவர், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகிய பிரதமர்களின் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றியவர், ஜனதா ஆட்சியின் உதவிப் பிரதமமந்திரி என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள்.

பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்வா நகரில் 1909ஆம் ஆண்டு ஜெகஜீவன்ராம் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவர் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். பின்னர் அவர்  சிவ நாராயணி வழிபாட்டு மடத்தின் தலைமைப் பூசகராகவும் இருந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் ஜெகஜீவன்ராம் வறுமையில் வாடினார். ஆனாலும் தனது மேற்படிப்பை காசி ஹிந்து சர்வகலாசாலையிலும் பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

படிக்கின்ற காலத்திலேயே மாணவர் தலைவராகவும், சமுதாய சேவையில் ஆர்வம் உடையவராகவும் விளங்கினார். 1928ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணியும், அதன் பின்னர் 1934ஆம் ஆண்டு பீகாரை தரைமட்டமாகிய நிலநடுக்கத்தை அடுத்து நடந்த நிவாரணப் பணிகளும் இவரை பல்வேறு அரசியல் தலைவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை உருவாக்கியது.

1935ஆம் ஆண்டு இவர் பிஹார் சட்டசபைக்கு தேர்வானார். அதன் பிறகு இறக்கும் வரை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகத் தொடங்கி அதன் பிறகு தொழிலார்நலம், தகவல் தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம்  என்று பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.

இவர் விவசாய மந்திரியாக இருந்த காலகட்டத்தில்தான் ( 1967 - 1970 ) விவசாய விளைச்சலைப் பன்மடங்கு அதிகரிக்கும் பசுமைப் புரட்சி திட்டம் செயலாக்கப்பட்டது. பங்களாதேஷ் உருவான பாகிஸ்தானுடனான போரின்போது ஜெகஜீவன்ராம்தான் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

நாட்டின் முதல் பொதுத்தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தல் தொடங்கி 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை மொத்தம் எட்டு தேர்தல்களில் பிஹார் மாநிலத்தின் சசாரம் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாபு ஜெகஜீவன் ராம். இது ஒரு அரிய  சாதனையாகும். 

நெருக்கடி நிலைக்குப் பிறகு உருவான ஜனதா கட்சி அமைச்சரவையில் துணை பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.

2009 ஆண்டு அமைந்த பாராளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றிய திருமதி மீராகுமார் இவரது மகளாவார்.

1946ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ஜெகஜீவன்ராம் 1984ஆம் ஆண்டு முதல் முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் இவர் காலமானார்.
இவரது பிறந்தநாள் சமத்துவதினமாக அனுசரிக்கப்படுகிறது.


1 கருத்து: