செவ்வாய், 31 டிசம்பர், 2019

அறிவியல் தமிழ் வளர்த்த பெ நா அப்புஸ்வாமி பிறந்தநாள் - டிசம்பர் 31.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 
என்று முழங்கிய பாரதியின் கனவை நிறைவேற்றும் வண்ணம் எளிய தமிழில் அறிவியலை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்த அறிஞர் பெருங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி என்ற பெ நா அப்புஸ்வாமியின் பிறந்ததினம் இன்று.


இன்றய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்றான பெருங்குளம் கிராமத்தைச் சார்ந்த நாராயண ஐயர் - அம்மாகுட்டி ஆகியோரின் மகனாக 1891ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பிறந்தவர் பெ நா அப்புஸ்வாமி அவர்கள். சட்டப் படிப்பை முடித்த அப்புஸ்வாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். இவரது நெருங்கிய உறவினரும், தமிழ் புதினத்தில் முன்னோடியான அ மாதவையாதான் அப்புஸ்வாமியை எழுதத் தூண்டியவர். நான் முறையாகத் தமிழ் படித்தவன் அல்ல,  என் மனைவிக்குக் கூட இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியவன் அல்ல, நான் எப்படி தமிழில் எழுத என்று அப்புஸ்வாமி குழம்பி நின்றபோது, " உங்கள் வீட்டில் தமிழ் புத்தகங்கள் பல உண்டு, நீ அதனைப் படித்திருக்கிறாய், தமிழ் அறிஞர்கள் பலர் உன் நண்பர்கள், தயங்காமல் எழுது, தேவையென்றால் அதனை நான் திருத்திக் கொள்கிறேன்" என்று கூறி அப்புஸ்வாமியை ஆற்றுப்படுத்தியவர் அ மாதவையாதான்.

இப்படித் தயங்கி நின்ற அப்புஸ்வாமிதான் நூற்றுக்கும் மேலான புத்தகங்களை, ஐயாயிரத்திற்கும் மேலான கட்டுரைகளை எழுதிக் குவித்தார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் என்று பல்வேறு கட்டுரைகளை மொழிபெயர்த்து பிரசுரித்தார்.  இவரது கட்டுரைகள் கலைமகள், கலைக்கதிர், ஆனந்த விகடன், வீரகேசரி, தினமணி ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. கலைமகள் இதழின் ஆரம்ப காலத்தின் பொறுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.

கா சுப்ரமணிய பிள்ளை, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, பி ஸ்ரீ ஆச்சாரியா ஆகிய அறிஞர்கள் அப்புஸ்வாமியின் உடன் பயின்றவர்கள். அதுபோக உ வே சாமிநாத ஐயருடனும் அப்புஸ்வாமிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் இவரது இல்லத்தில் ராஜாஜி, டி.கே.சி, கல்கி, எஸ்.வையாபுரிப்புள்ளை, வாசன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.,  ராகவ அய்யங்கார், ரா.பி.சேதுபிள்ளை. அ.சீனிவாசராகவன், கி.பட்சிராஜன், ஆர்.ராகவ அய்யங்கார், டி.எல்.வெங்கட்ராம அய்யங்கார், நாராயணசாமி அய்யங்கார் ஆகியோர் கூடி தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

தனது  இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ நா அப்புஸ்வாமி தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும் வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்து பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்து விட்டு வரும் போதுதான்  இறந்தார்.

அற்புத உலகம், மின்சாரத்தின் கதை, வானொலியும் ஒலிபரப்பும், அணுவின் கதை, ரயிலின் கதை, அறிவியல் கதைகள்  என்று ஐம்பதுகளில் அறுபதுகளில் எளிய மொழியில் அறிவியலை தமிழர்களுக்கு அறிமுகம் செய்த  பெருமை அப்புஸ்வாமிக்கே சேரும். சிறுவர்களுக்காக சித்திர விஞ்ஞானம், சித்திர வாசகம், சித்திர கதைப் பாட்டு என்ற நூல்களையும் இவர் எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல நாம் வாழும் உலகம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே அப்புஸ்வாமி சரியாக கணித்து கூறுகிறார்.

அணுப்பிளவு (Atomic Fission), துணைக்கோள் (Satellite), நுண்ணணு, மின்னணு (Electron) , புத்தமைப்பு (Invention), மூலகம் (Element), வார்ப்படச்சாலை (Foundry), நுண்ணோக்கி (Microscope), கதிரியக்கம் (Radiation), உந்து கருவி (Rocket), அங்கக ரசாயணம் (Organic Chemistry), துரிதகாரி (Accelerator), கணையம் (Pancreas), பொங்கியெழு கேணி (Artesian Well),  அறிவிக்குறி எண் (Intelligent Quotient) என்று மிக இயல்பாக அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அப்புஸ்வாமி பயன்படுத்தி உள்ளார்.

ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அப்புஸ்வாமி பல்வேறு சங்கப் பாடல்களையும், பாரதியின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவ்வளவு எழுதிக் குவித்த பெ நா அப்புஸ்வாமி பெருமளவில் அங்கீகாரம் அடையவில்லை. அவரின் அறிவை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் மதிக்கவில்லை. ஆனாலும் பலனின் மீது பற்று வைக்காமல், தனது பணியை வாழ்வின் இறுதிநாள்வரை செய்து கொண்டே இருந்தார் திரு பெ நா அப்புஸ்வாமி அவர்கள்.

அப்புஸ்வாமியின் மகள் திருமதி அம்மணி சுப்பிரமணியம் திருநெல்வேலி காந்திமதி அம்பாள் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரின் மருமகன் வழக்கறிஞர் திரு எஸ் ஜி சுப்பிரமணியம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட சங்கசாலக்காக இருந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக