புதன், 25 டிசம்பர், 2019

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம் - டிசம்பர் 25.

பாரத நாட்டின் வரலாற்றில் தாயகத்தைக் காக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராடியது உண்டு. கல்வியிலும் வீரத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று உதாரண நாயகியாக முதல் சுதந்திரப் போருக்கு முன்னே ஆங்கில ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாரின் நினைவுதினம் இன்று.



1730ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் ராமநாதபுர மன்னரான முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி - முத்தாசாள் நாச்சியார் தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். தனது ஒரே மகளை மகன் போலவே வளர்த்தார் விஜயரகுநாத சேதுபதி. வேலுநாச்சியாரும் சிலம்பம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என்று போர்கலைகளிலும் தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடத்திலும் சிறந்து விளங்கினார்.

உரிய வயதில் வேலுநாச்சியாரை சிவகங்கை இளவரசர் முத்துவடுகநாத உடையதேவர் திருமணம் செய்துகொண்டார். களரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் இணையற்ற வீரராக திகழ்ந்தவர் முத்துவடுகநாதர். வீரமும் இறை நம்பிக்கையும், மக்களின் நல்வாழ்வில் அக்கறையும் கொண்ட ஆதர்ச தம்பதியராக முத்துவடுகநாதரும் வேலுநாச்சியாரும் இருந்தனர்.

1772ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களோடு இணைந்து சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தார். காளையார்கோவிலில் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் உறுதியோடு வேலுநாச்சியார் சிவகங்கை சீமையை விட்டு வெளியேறினார். திண்டுக்கல் நகரின் அருகே உள்ள விருப்பாட்சிபாளையத்தின் அரசர் கோபாலநாயகர் வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தார். ஏற்கனவே ஆங்கிலேயர்களோடு சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஹைதர் அலியின் உதவியை வேலுநாச்சியார் நாடினார். ஹைதர் அலியும் வேலுநாச்சியாருக்கு உதவுவதாக வாக்களித்தார்.

விருப்பாட்சிபாளையத்தில் தங்கி இருந்தவாறே தனது படைகளைத் திரட்டிய வேலுநாச்சியார், முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்து சின்ன மருதுவின் தலைமையில் ஒரு பிரிவை திருப்பத்தூரில் தங்கி இருந்த ஆங்கிலப் படையை தாக்குமாறு கூறி, மற்றொரு பிரிவை பெரிய மருதுவின் தலைமையில் சிவகங்கையை தாக்குமாறும் ஆணையிட்டார்.

அது நவராத்திரி விழாக்காலம். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சக்தியை வழிபடும் விஜயதசமி திருநாள். அன்று தனது பெண்கள் படையோடு மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்த வேலுநாச்சியார், அங்குள்ள ஆங்கில வீரர்களைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார். ராணியின் மெய்க்காவல் படையைச் சேர்ந்த குழலி என்ற பெண் தன்னையே எரிந்துகொண்டு கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கினாள். உலகின் முதல் தற்கொலை தாக்குதல் இதுதான். ராணியைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெள்ளையரால் வெட்டுப்பட்டு மரணமடைந்த உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் நாட்டி, தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார் வேலுநாச்சியார்.  அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

சிவகங்கை மீண்டும் சுதந்திர நாடாக மாறியது. கோட்டையின் உச்சியில் சிவகங்கையின் அனுமக்கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கத் தொடங்கியது. இதனை அவர் நிகழ்த்திக் காட்டியது தனது ஐம்பதாவது வயதில். சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார்.

1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த  வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார் வேலு நாச்சியார்.  வெள்ளச்சியின் மறைவுக்குப்பின்னர் மனமுடைந்த வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில் தங்கலானார். அங்கேயே 1796ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் வேலுநாச்சியார் காலமானார்.

வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கு என்றுமே மரணம் கிடையாது. வேலுநாச்சியாரின் வழியில் இன்று பாரத தேசத்தின் ராணுவத்தில் பல பெண்கள் தங்களின் திறமையை தியாகத்தை பறை சாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக