வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அறிவியலறிஞர் அல்லாடி ராமகிருஷ்ணா பிறந்ததினம் - ஆகஸ்ட் 9

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவியலறிஞரும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் நிறுவனருமாகிய அல்லாடி ராமக்ரிஷ்ணாவின் பிறந்ததினம் இன்று. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அவர்களின் மகனாக 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் பிறந்தவர் திரு அல்லாடி ராமகிருஷ்ணா அவர்கள்.தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள பி எஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்த ராமகிருஷ்ணா,   இயற்பியல்துறையில் இளங்கலை பட்டத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் பெற்றார். வழக்கறிஞர் பட்டத்தைப் பெற்ற திரு ராமாகிருஷ்ணாவிற்கு அறிவியல் மீதான ஈர்ப்பு குறையவே இல்லை. அவர்  திரு சர் சி வி ராமன் அவர்களின் வழிகாட்டுதலினால் தத்துவார்த்த இயற்பியலிலும் ( Theoretical Physics ) சிறப்பு சார்பியல் துறையிலும் ( Special Relativity ) ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்தார். மும்பை நகரில் உள்ள அடிப்படை ஆராய்ச்சிக்கான டாட்டா நிறுவனத்தில் ( Tata Institute of Fundamental Research ) ஹோமி பாபா அவர்களின் வழிகாட்டுதலில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அல்லாடி ராமகிருஷ்ணா தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. மேலைநாடுகளில் பல்வேறு அறிவியலறிஞர்களோடு அவருக்கு தொடர்பும் நெருங்கிய நட்பும் உருவானது. அமெரிக்காவில் உள்ள பிரின்செஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ( Institute of Advance Studies ) சென்ற திரு ராமகிருஷ்ணா அதுபோன்ற அமைப்பை இந்தியாவிலும் ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார். புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் அந்த நிறுவனத்தில் மாணவர்களோடு உரையாடுதல் வழக்கம். புது கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், மாணவர்களை ஆராய்ச்சியின் பக்கம் தூண்டிவிட்டு திசைதிருப்பவும் இந்த உரையாடல்கள் பயன்பட்டன.

சுதந்திரம் அடைந்து பத்தே ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. பொருளாதாரத்தில் நாடு கடினமான பாதையில் முன்னேறிக்கொண்டு இருந்த நேரம் அது. அரசின் உதவியை எதிர்பாராது திரு ராமகிருஷ்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக பல்வேறு அறிவியலாளர்களால் நடத்தப்படும் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

அல்லாடி ராமகிருஷ்ணாவின் பரந்துபட்ட தொடர்புகளால் பல்வேறு அறிஞர்கள் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய உரைகளை நிகழ்த்தினார்கள். அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அழைப்பினை ஏற்று புகழ்பெற்ற அணு விஞ்ஞானி நீல்ஸ் போர் 1960ஆம் ஆண்டு பாரதம் வந்தார். சென்னையில் உள்ள அல்லாடி ராமகிருஷ்ணாவின் வீட்டிற்கு வந்து அவரும் மாணவர்களோடு உரையாடினார். அந்த மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்ற நீல்ஸ் போர் அந்த சந்திப்பைப் பற்றி பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். பிரதமரை நேரில் சந்திக்க வருமாறு அல்லாடி ராமகிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அந்த சந்திப்பில் அறிவியல் முன்னேற்றங்களை முன்னெடுக்க சென்னையில் Institute of Mathematical Science - தொடங்கப்பட்டது. அறிவியலின் பெரும்பான்மையான கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலம் நிரூபிப்பதே பல்வேறு ஆராய்ச்சிகளின் முதற்படியாகும். இந்த நிறுவனம் கணிதம், இயற்பியல், கணினிதுறை ஆகியவைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது. அல்லாடி ராமகிருஷ்ணா இந்த நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெறும்வரை ஏறத்தாழ இருபத்தி ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை வழிநடத்தினார்.

இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்னும் பல்வேறு உயர்கல்வி நிறுவங்களில் அறிவியல் முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்தியவாறே இருந்தார். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அவர் சென்னையில் இருக்கும் போது அவரை நேரில் சந்தித்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

தந்து எண்பத்தி ஐந்தாவது வயதில் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் நாள் அல்லாடி ராமகிருஷ்ணா தனது மகன் வீட்டில் அமெரிக்காவில் காலமானார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக