திங்கள், 29 பிப்ரவரி, 2016

மதிப்பிற்குரிய காம்ரேட் மருதன் அவர்களே

விகடன் வார இதழில் உங்கள் கட்டுரையைப் படிக்கும் பேறு பெற்றேன். வழக்கம் போலவே, வாயில் நுழையாத பெயர்களைச் சுட்டி, எட்டடுக்கு மாளிகையின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மற்றவர்களை எள்ளி நகையாடி, அவர்கள் அறிவிலிகள் என்று முடித்து இருக்கிறீர்கள்.

அதிலும் ஜவஹர்லால் நேருவை வெறுக்கவும், அவர் பெயரால் நடைபெறும் பல்கலைக்கழகத்தை மூடவும் துடிப்பவர்களைப் புரிந்து கொள்ளமுடியும் என்று கூறி இருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட் மக்களுக்கு எப்போது இருந்து இந்த மனமாற்றம் வந்தது ? உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கிறதே, ஒரு வேளை மோடி பதவி ஏற்றதால் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கலாம் என்று மாறிவிட்டீர்களா என்ன ?

முன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த ஜான் காட்டன் பாதிரியாரைப் பற்றிப் பார்பதற்கு முன்னால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தோழர் ஸ்டாலின் ஆட்சியில் சைபீரியச் சிறையில் எத்தனை பேர் கம்யுனிச வழியில் பொன்னுலகை அடைந்தனர் என்று பார்க்கலாமே ?

சரி அது வேண்டாம், சென்சீனத்தில் தினாமென் சதுக்கத்தில் உரிமைக்காகப் போராடிய மாணவர்களை எப்படி உங்கள் பொன்னுலக அரசு நடத்தியது என்பது மறந்து போய் இருந்தால், உங்கள் பார்வைக்காக இந்தப் படம்



சரி, இதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, இப்போதாவது மாறிவிட்டீர்களா என்று பார்த்தால், இன்று பத்திரிகைகள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று தலைவர் சொல்லுவது இங்கே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டோடு நடைபெறும் செய்து நிறுவனங்களின் கட்டுப்பாடு எது என்று பார்க்க வேண்டுமா ? இங்கே பாருங்கள்.

தேசம் என்பது வெறும் கற்பிதம், தேசபக்தி தேவை இல்லை என்று கூறுவதற்கு முன்னால், உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சீனா வழிகாட்டும் நிலை இங்கே இருக்கிறது

சரி இது எல்லாம் வெளிநாட்டு நிகழ்சிகள், மண் சார்ந்த மார்சியமே எங்கள் கருத்து என்று கூடச் சிலர் சொல்லலாம். ஐநாவிற்கான இந்திய தூதுவரை ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த போது உங்கள் மாணவ அணியினர் தந்த அன்பான வரவேற்பு என்ன என்று தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

கலாசாரப் புரட்சி என்றும், ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்றும் மாற்றுக் கருத்து கூறுபவர்களை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை இங்கே நிருபிக்கிறார்கள் பாருங்கள்.

கோல்வார்கர், சவர்கார் பற்றி மட்டும் அல்ல, தெனிந்தியாவில் உள்ள பலருக்கு சந்திரசேகர ஆசாத், கோவிந்த வல்லபபந்த், ஆச்சாரிய கிருபளானி, விபின் சந்திரபால், தேசபந்து ஆண்டருஸ், ஏன் காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே பற்றிக்கூடத் தெரியாது. கக்கனைப் பற்றி, ஜீவாவைப் பற்றி, பி ராமமூர்த்தி பற்றி எத்தனை வட இந்தியர்களுக்குத் தெரியும் ? நெருக்கடி நிலையைப் பற்றி, அதை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பற்றி எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும் ? மக்களிடம் மறைக்கப்பட்டதால் இவர்கள் தியாகங்கள் இல்லை என்றா ஆகிவிட்டது ?  ஏன் இவர்களைப் பற்றிய குறிப்புகள்கூட பாடப்புத்தகங்களில் இல்லை என்று இந்த அறிவாளிகள் என்றாவது கேள்வி எழுப்பியது உண்டா ?

கோசாம்பியைத் தெரிந்தவர்களைக் காட்டிலும், ராகுல்ல சங்க்ரஹ்ரித்யாயனைத் தெரிந்தவர்களைக் காட்டிலும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாவைத் தெரிந்தவர்கள் அதிகம் தான் தோழரே. ஹிந்துவர்களில் அறிஞர்கள் இல்லையா ? ராம் ஸ்வரூப், சீதாராம் கோயல் இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? தரம்பாலின் சிந்தனைகளை இன்றுவரை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதுதானே உங்களுக்குக் கசப்பான உண்மை.

நீங்கள் நீட்டி முழங்கும் பல்கலைக்கழத்தின் நிலை என்ன என்று உண்மையில் உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் இடமாகவல்லவா, இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருக்கிறது, உங்கள் பார்வைக்கு இரண்டு செய்தி இணைப்புகள்.

இதுநாள் வரை மேடையில் முழங்கவும், பத்திரிகையில் எழுதவும் உங்களைப் போன்ற சில அறிவாளிகளுக்கு மட்டுமே இடம் இருந்தது, என்ன உங்கள் போதாத நேரம் என்னைப் போன்ற மூடர்கள் சிலரும் இப்போது பொதுவெளியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள், அது  பத்திரிக்கைகாரர்கள் என்று கூறிக் கொள்ளும் பலருக்குப் பொறுக்க முடிவவில்லை. அவர்கள் இப்போது அரசாங்கத்தில் யார் அமைச்சராக வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்துகொண்டு இருந்தார்கள், இப்போது அது முடியவில்லை. அதனால் கம்பன் சொல்வது போல " திகைத்தனர் போலும் செய்கை" என்று ஆகிவிட்டார்கள் போல.

ஊடகங்களின் நேர்மையைப் பற்றி, சன் தொலைகாட்சி நிறுவனரின் வாக்குமூலம் இங்கே இருக்கிறது. இவர்களையா நீங்கள் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் போகிறார்கள் என்று சொல்கிறீர்கள் ?

எந்த வயதுவரை ஒரு மாணவன் கல்லூரியில் / பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் என்று கருதப்படலாம் ? 2002இல் பள்ளிப்படிப்பை முடித்த ஒருவர் 2005இல் பட்டப்படிப்பை முடித்து, 2007இல் முதுகலைப் படிப்பையும் முடித்து இருப்பார், அப்படி என்றால் எட்டு வருடங்களாக ஆராய்ச்சி மாணவராகவா இருக்கிறார் ? அதுவும் ஆப்ரிக்கா பற்றிய ஆராய்ச்சியில் ? இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் இந்த மாணவர்களின் கல்விக்கு மட்டுமே தவிர, அவர்களின் அரசியலுக்கு அல்ல, அப்படி அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதை அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொடுக்கட்டும், பொதுமக்களின் பணத்திற்கு வேறு நல்ல பணிகள் இருக்கின்றன.

அது சரி ரோஹித் வெமுலாவின் சந்தேகத்திற்கு இடமான தற்கொலையை நீங்கள் சொல்லும் அறிவாளிகள் எப்படி வர்ணமடிதார்கள் ? மாணவன் தற்கொலை என்றா இல்லை ஒரு தலித் மாணவன் தற்கொலை என்றா ? அப்போது அவர் தலித்தா இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதானே ?  நான் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை என் எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள், நான் சொல்லவில்லை இதை, செஞ்சட்டைப் போராளி ஒருவர் சொன்னது இது.



இவை மாணவர் அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இதைப் பேச்சுரிமை என்றா சொல்லுவீர்கள் ? வரைமுறை அற்ற உரிமை என்பது எங்குமே கிடையாது, எல்லா உரிமையும் கடமைகளோடு இணைந்தே உள்ளது. எங்கும் நடக்கும் உரிமை உள்ளது என்று புகைவண்டிப் பாதையில் நடந்தால் என்ன ஆகும் ?

நீங்கள் ஏன் கார்ல் மார்க்ஸ் போல புத்தகம் எழுதவில்லை என்ற கேள்வி காந்தியிடம் கேட்கப்பட்ட போது, அவரைப் போன்று எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கவில்லை என்று காந்தி சொன்னார். அரசாங்கப் பணத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் நாங்கள் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு இருக்கவில்லை. இந்தியா எங்கும் ஓராசிரியர் பள்ளிகளும், ஏகல் வித்யாலைகளும், வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளும் என்று பரவி இருப்பதை நீங்கள் அறிவீர்களா ? ஒரே ஒரு நானாஜி தேஷ்முக் செய்த பணியை நீங்கள் கூறும் எந்த அறிஞர்களும் செய்யவில்லை. மந்தாகினி நதிக்கரையில், சித்திரகூடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கிராமியப் பல்கலைக்கழகம் அவர் உருவாக்கியது. நாங்கள் நிறுவனங்களை உருவாக்குபவர்கள், இடதுசாரி அறிவிஜீவிகள் போல மற்றவர் பணத்தில் நீச்சல் அடிப்பவர்கள் அல்ல.

ஏறக்குறைய பதினாறு வருடத்தில் இந்த நாட்டுக்குள் ஏழைகளுக்கு சேவை செய்ய என்ற போர்வையில் வந்த பணம் ஏறத்தாழ தொண்ணுற்று ஐந்தாயிரம் கோடி ரூபாய்கள்.  எதுவுமே செய்யாமல் எல்லா இந்தியர்களுக்கும் இந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து இருந்தாலே, தலைக்கு அறுநூறு கோடி ரூபாய்கள் வந்து இருக்குமே ? எங்கே போனது இவ்வளவு பணமும், அது என்ன ஆனது என்று கேட்டால், கேட்பவர்கள் அறிவிலிகளா ?

இந்த நாடு உடையவேண்டும் என்று நீங்கள் கூட்டம் போட்டு, கோசம் எழுப்பிக்கொண்டு இருக்கும்போது, 1947இல் காஷ்மீரத்தில் உயிரைப் பணயம் வைத்து ராணுவத்திற்கு உதவியது யார் ? 1962இல் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தபோது, ராணுவத்திற்கு உதவியது யார் ? எதற்க்காக நேரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களைக் குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ளக் கேட்டுக்கொண்டார் ?

எங்கே உங்கள் ஜேஎன் யு என்று கேட்கிறீர்களே, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்விக்கூடம் நடத்தக் கூடாது என்று சட்டம் மட்டும்தான் இல்லை, அதற்கான தடைகள் என்னவெல்லாம் என்று தெரியுமா ? சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்விக்கூடத்தில் அரசின் பல சட்டங்களே செல்லாது என்பதையும் நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கவேண்டும். ஏன் சமூகநீதி என்று குரல் குடுப்பவர்கள், சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடே கிடையாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

எல்லாவற்றிலும் சமத்துவம் பேசும் நீங்கள், கல்விக்கூடங்கள் நடத்துவதிலும் சமத்துவ நிலைமைக்காகப் போராடுங்கள், பின்னர் கேள்விகளைக் கேளுங்கள்.

நேர்மையாளர்கள் அதைதான் செய்வார்கள்.

இன்னொன்று கம்யுனிச தத்துவம் என்பது உலகம் முழுவதும் தோல்வி அடைந்த ஓன்று என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன்
இராமச்சந்திரன்  

சனி, 20 பிப்ரவரி, 2016

நண்பரிடம் சில கேள்விகள்

எனது கெழுதகை நண்பரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடமாநிலத் தளகர்த்தர்களில் ஒருவரும், தனியார் பொறியியல் கல்லூரித் தலைவருமான ஒருவர் தனது நிலைத் தகவலில் இவ்வாறு பகிர்ந்து இருந்தார்.


// தேசபக்தி
1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது.
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.
இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.
இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்.
ஒரு அரசியல் அமைப்பின் மீது யாருக்கும், எந்தக் கருத்தும் இருக்கலாம்! ஆனால், அதன் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்புவது என்பது, அந்தக் கட்சியை அங்கீகரித்து இந்த ஜனநாயகத்தில் இடமளிக்கும் நம் அரசியல் அமைப்பின் மீது கேள்வி எழுப்புவது ஆகும். இதை, நாம் எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளவே கூடாது.
எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.
எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.
நான் எப்போதுமே சொல்வதுதான்!
சரித்திரம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
அது ஈவிரக்கமற்றது.//

நண்பருக்கு என் கேள்விகள் 

 // 1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது. 
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.//

இது தேசபக்தி பற்றிய உங்கள் வரையறை, நல்லது இதன்படி இந்த நாடு துண்டாடப்பட வேண்டும் என்று கோஷம் எழுப்புவது மற்றும் அரசியலமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்கள் கூடி இருந்த நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவது, அந்தக் குற்றத்தை நிருபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்த நீதிமன்றத்தை அவதூறு செய்வது இதில் அடங்காது அல்லவா, இல்லை கருத்துரிமை என்ற பெயரால் இதனை அனுமதிப்பது பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன ? 

// இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.//
நல்லது, இதுவரை உங்கள் தேசபக்தியை யாரும் கேள்வி கேட்கவில்லை, இனியும் கேட்காத அளவில் நம் ( எல்லோரின் ) நடத்தையும் இருக்கட்டும். 

//இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்போம், இதுதான் நமது வழிமுறை நண்பரே. 

// இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்//

மிகத் தவறான புரிதல், எந்த சாதாரண இஸ்லாமியர் மீதும் இப்படிக் குற்றச்சாட்டு சூட்டப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மதத்தின் பின்னும், ஜாதியின் பின்னும் ஒளிந்துகொண்டு தாங்கள் அதனாலே பழிவாங்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இன்று இந்த தேசத்தில் எந்த  இஸ்லாமியரும்  முதல் குடிமகன் என்ற அளவு வரை உயர்ந்து இருக்க முடியாது. இந்த நாட்டின் எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஆளுநர்கள், எத்தனை ராணுவத் தளபதிகள், எத்தனை உயர்நீதிமன்ற / உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற பொறுப்புகளை வகித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அல்ல, அவர்களின் தகுதியால், திறமையால் இந்தப் பதவிகளை அலங்கரித்து உள்ளனர். இன்னும் இதுபோன்ற பதவிகளுக்கு பலப்பல இஸ்லாமிய சகோதரர்கள் வருவார்கள், தங்கள் பங்களிப்பை இந்த நாட்டுக்குத் தருவார்கள்.

உதாரணமாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக திரு அசாருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர் திறமையால். ஆனால் கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டு அவர் மீது நிருபிக்கப்பட்டபோது தான் இஸ்லாமியர் என்பதால் பழிவாங்கப்பட்டேன் என்ற அவரது பேச்சை இந்த நாட்டின் இஸ்லாமியர்கள் யாரும் ஏற்கவில்லை. ஆனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என்பது வரலாறு.

ஆக இல்லாததையும் பொல்லாததையும் கூறி இந்த மண்ணின் மக்களைப் பிரித்துவிடாதீர்கள் நண்பரே. 

// இப்போது, அந்தக் கொடிய கரங்கள் கம்யூனிஸ்டுகள் மீதும் நீண்டிருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி மீது இந்தோ-சீனப் போரின் போது கேள்வி எழுப்பியவர்கள் கூட பின்னாளில் ஒவ்வொருவராக அதற்கு வருத்தம் தெரிவித்தது வரலாறு.//
கேள்வி எழுப்புவதே தவறு அல்ல நண்பரே, சீனப் போரின் போது நடந்தவைகளைச் சற்றே படித்துப் பாருங்கள். 

// எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.//

இது உங்கள் கருத்து, இதை வெளிப்படையாகச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு. 

//எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.//

 நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் நூறு நிரபராதி தப்பிக்கப்படலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற முறையில்  நடைபெறுபவை. சட்டத்திற்கு தேவை சாட்சிகள், முழுமையான ஆதாரங்கள். " சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்"  என்ற வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

சட்டத்தின்படி சரி என்பதற்கும் - தர்மத்தின்படி / அறநெறிகளின் படி சரி என்பதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

ஒரு அரசு தான் தொடுத்த வழக்கில் வெற்றியடையவில்லை என்றால் அந்த அரசின் பிரதமர் அதற்குப் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி அரசு தான் தொடுத்த எல்லா வழக்கிலும் வெற்றி அடைந்துவிட்டதா ? அப்படி இல்லாத நிலையில் உங்கள் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்தவர் எந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பதைத் தெளிவு படுத்த முடியுமா ? 

நீங்கள் எடுத்த நிலைப்பாட்டையே இன்றைய பிரதமர் எடுக்கலாம் அல்லவா ? கோபாலபுரம் கைகாட்டித்தானே டெல்லி செயல்படுகிறது என்று நீங்கள் பெருமையோடு பேசலாம் அல்லவா ? 

இறுதியாக எனக்கு ஒரே ஒரு ஐயம் - நீங்கள் தலைவராக இருந்து நடத்தும் கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த உங்கள் மாணவர்கள் முடிவு செய்தால், அதில் பாராளுமன்றத் தாக்குதலை சரி என்று கூறி, இந்தியா துண்டாடப்படவேண்டும் என்ற முழக்கங்களை எழுப்ப விரும்பினால்  உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? 
கருத்து சுதந்திரம் என்ற நிலையில் அனுமதிப்பீர்களா அல்லது உங்கள் தேசபக்தி என்ற நிலையில் மறுப்பீர்களா ? உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறலாமா ? 

அன்புடன் 
இராமச்சந்திரன்