புதன், 30 ஏப்ரல், 2025

ஏப்ரல் 30 - இந்தியத் திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே பிறந்தநாள்

இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாஹேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் இன்று.


தாதாசாஹேப் பால்கே அவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரின் அருகில் உள்ள த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி 1870 ஆம் ஆண்டில் ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் தண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பதாகும். அவரது தந்தை ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.

தனது ஆரம்பக் கல்வியை த்ரயம்பகேஸ்வரில் படித்த தண்டிராஜ், பள்ளி இறுதி வகுப்பை மும்பையிலும் முடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெ ஜெ நுண்கலைக் கல்லூரியில் ஓவியப் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அவர் பரோடாவிலுள்ள கலா பவனில் சேர்ந்து, சிற்பம், பொறியியல், வரைதல், ஓவியம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு புகைப்படம் எடுப்பதில் பெரும் விருப்பம் இருந்தது,

குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா நகரில் முழுநேர புகைப்படக் கலைஞராக அவர் தொழில் செய்யத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அது லாபகரமாக அமையவில்லை. அப்போது அவரது மனைவியும் பிளேக் நோயினால் காலமாகிவிட்டார். அதற்கிடையில் மாயாஜால வித்தைகள் ( மாஜிக் ) செய்யவும் அவர் கற்றுக் கொண்டார். 1902ஆம் ஆண்டு பால்கே மறுமணம் செய்து கொண்டார்.

அவருக்கு இந்திய தொல்பொருள் ஆய்வகத்தில், வரைவாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. வரைவாளராகப் பணியில் ஈடுபட்ட அவர், அதில் திருப்தி அடையாமல் இருந்ததால், அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டு, அச்சிடும் தொழிலை சொந்தமாகத் தொடங்கினார். அவர் கல் அச்சுக் கலை (lithography) மற்றும் எண்ணெய் வண்ண அச்சுப்படத்தில் (oleograph) நிபுணத்துவம் பெற்றிருந்ததால், உலகப் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவி வர்மாவிடம் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், பால்கே  நண்பர்களோடு இணைந்து கூட்டாக ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். சிறிது காலத்திலேயே நண்பர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவர் அந்த கூட்டு வியாபாரத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

1911ஆம் ஆண்டு முதல்முறையாக ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் The Life of Christ என்ற திரைப்படத்தை பால்கே பார்த்தார். முதல்முறையாக திரையில் நகரும் பிம்பங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அதில் நமது இதிகாச நாயகர்களைக் காட்டினால் அதற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று சரியாகக் கணித்த பால்கே திரைப்படம் எடுக்க முடிவு செய்தார்.

வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேசிய ராஜா ஹரிச்சந்திராவின் கதையைத்தான் அவர் முதல்முதலாகப் படமாக்கினார். இத்திரைப்படம், மே 3, 1913 ஆம் ஆண்டில் மும்பை காரநேஷன் சினிமாவில் முதன்முதலில் திரையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர், ராமச்சந்திர கோபால் அவர்களின் படமான ‘பன்டாலிக்’ அதே திரையரங்கில் வெளியிடப்பட்டாலும், முதல் உள்நாட்டு இந்திய திரைப்படத்தைத் தயாரித்தப் பெருமை, தாதாசாகேப் பால்கே அவர்களையே சேரும், ஏனென்றால், “பண்டாலிக்” திரைப்படம் பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1937 வரை 19 ஆண்டுகளில் 19 ஆண்டுகளில் தனது 95 திரைப்படங்கள் மற்றும் 27 குறும்படங்களை மொத்தமாக பால்கே செய்தார். மோகினி பஸ்மசூர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹான், ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா மற்றும் காலியா மார்டன் ஆகியோரின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும்

பால்கேவின் சாதனைகளில் பெரும்பங்கு அவர் மனைவி சரஸ்வதிபாய் அம்மையாரையே சாரும். அதுவரை நாட்டில் இல்லாத ஓவர் தொழிலில் ஈடுபட்ட கணவருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்காக தன் நகைகளை எல்லாம் விற்று, படம் தயாரிப்பிலும் பல்வேறு பணிகளை சரஸ்வதிபாய் மேற்கொண்டார்.

இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள திரைத்துறையை நாட்டிற்கு அறிமுகம் செய்த பால்கே 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் காலமானார்.

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தாதாசாஹேப் பால்கே பெயராலே வழங்கப்படுகிறது.   

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஏப்ரல் 29 - ஓவிய அரசர் ராஜா ரவிவர்மா பிறந்தநாள்

கண்ணால் காணாதவற்றில் மனம் லயிப்பது என்பது மிக அபூர்வம். அதனால்தான் தியானம் செய்யத் தொடங்கும்போது எதோ ஒரு கடவுளின் உருவத்தை மனதில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பலர் மனதில் நிறுத்தும் கடவுள் உருவம் என்பது ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தில் உள்ள உருவமாக இருப்பதற்கான வாய்ப்பு மிகஅதிகம். ஆண்டவன் மனிதனைப் படைத்தான், ஆனால் சில கலைஞர்கள் இறைவனையே படைப்பிக்கிறார்கள் என்று சொல்வது போல, பலர் வீட்டு பூஜையறையில் ராஜா ரவிவர்மாவின் கடவுள் ஓவியங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் அருகிலுள்ள கிளிமானூர் அரண்மனையில் உமாம்பா - நீலகண்டன் பட்டத்ரிபாதி என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தாயாரே ஒரு கவிஞர். இவர் தந்தை சமிஸ்க்ரித மொழியிலும் ஆயுர்வேத மருத்துவமுறையில் சிறந்து விளங்கியவர். இவர்கள் குடும்பம் கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்க்கு மணஉறவு கொள்ளும் அந்தஸ்து படைத்தது. மருமக்கள்தாயம் என்ற முறைப்படி தற்போதுள்ள திருவனந்தபுரம் அரசர் இவரது மகள் வழி பேரன் ஆவார்.

சிறுவயதிலேயே இவருக்கு இருந்த ஓவியத்திறமையைக் கண்டு இவரது மாமா ராஜா ராஜ்வர்மா இவருக்கு அடிப்படைப் பயிற்சிகளை அளித்தார். பின்னர் தியோடர் ஜென்சன் என்ற ஐரோப்பியர் மூலம் எண்ணெய் ஓவிய ( Oil Painting ) முறையைக் கற்றுத் தேர்ந்தார். இந்தியாவில் பல்வேறு இடங்களையும் சுற்றி அலைந்த ரவிவர்மா தான் கண்ட பெண்களைக் கொண்டே தனது ஓவியங்களை உருவாக்கினார்.
             
பரோடா மன்னர் மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் அழைப்பை ஏற்று அங்கே பத்தாண்டுகள் தங்கி, பல ஓவியங்களை வரைந்தார். சரஸ்வதி, லட்சுமி போன்ற கடவுள்களின் படங்களும், அன்னப்பறவையோடு தமயந்தி, விஸ்வாமித்திரர் மேனகையை ஏற்க மறுப்பது, காலில் குத்திய முள்ளை நீக்கும் சகுந்தலை போன்றவை இவரது புகழ்பெற்ற ஓவியங்களாகும்.   
                    
எனினும் சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர் போன்றோர் ரவிவர்மாவின் ஓவியங்களை ஒத்துக்கொள்வதில்லை. இவை இந்திய கலாச்சாரத்தின் உள்ளீடற்றவை என்றே அவர்கள் கருதுகிறார்கள். எந்தக் கலைஞனும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. ஆனாலும் பெருவாரியான மக்கள் தங்கள் பூஜையறையில் வைத்திருக்கும் கடவுள்களின் படங்கள் என்று பார்த்தால் ரவிவர்மாவின் பங்களிப்பை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

இவர் நேரடியாக கேரளா ராஜ குடும்பத்தினர் இல்லை. ராஜாஎன்பது  வழங்கப்பட்ட பட்டம்தான். அதுபோல ஆங்கில அரசு இவர்க்கு கெய்சர் ஹி ஹிந்த் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தது.

கேரள மாநிலம் மாவேலிக்கரா நுண்கலை கல்லூரிக்கும் இன்னும் பல கல்வி நிலையங்களுக்கும் இவர் பெயரை சூட்டி அரசு கௌரவித்து உள்ளது. ராஜா ரவிவர்மா பெயரில் கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த கலைஞருக்கு பட்டம் அளித்து வருகிறது.

ராஜாரவிவர்மா 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தனது 58ஆம் வயதில் காலமானார். நூறாண்டுகள் கழிந்தும் இவரது ஓவியங்கள் இவரை உயிரோடு வைத்துள்ளது.

திங்கள், 28 ஏப்ரல், 2025

ஏப்ரல் 28 - இரா செழியன் பிறந்தநாள்

திராவிட இயக்கத்தில் தொடங்கி தேசியவாதியாக மலர்ந்த இரா செழியன் அவர்களின் பிறந்தநாள் இது. தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்ணபுரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் ராஜகோபால். அன்றய திராவிட சிந்தனைப்படி தனது பெயரை செழியன் என்று மாற்றிக்கொண்டார். நடமாடும் பல்கலைக்கழகம் என்று திராவிடவாதிகளால் கொண்டாடப்பட்ட நெடுஞ்செழியனின் உடன்பிறந்த சகோதரர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற செழியன், அண்ணாதுரை அவர்களுக்கு நெருக்கமானவராக மாறினார். அண்ணா திமுகவை ஆரம்பிக்கும்போதே உடனிருந்தவர்களில் இவரும் ஒருவர். திமுகவின் சார்பின் 1962ஆம் ஆண்டு பெரம்பலூர் தொகுதியில் இருந்தும், 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் கும்பகோணம் தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதி தலைமையிலான அரசு மாநில சுயாட்சித் தீர்மானத்தை, ராஜமன்னார் கமிட்டி மற்றும் இரா செழியன் - முரசொலி மாறன் இருவரும் அளித்த அறிக்கையின்படியே சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் டெல்லியில் திமுகவின் முகமாகவும் குரலாகவும் செழியன் விளங்கினார். இவரது நாடாளுமன்ற விவாதங்கள் பாடமாக வைக்கும் அளவிற்குத் தரமானவை. அவை மக்களுக்கான நாடாளுமன்றம் ( Parliament For the People ) என்று தொகுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக் கொள்ளும் இடமல்ல, அது மக்கள் நலனைப் பற்றி கவலைப்படவும், மக்கள் நிம்மதியாக வாழவும், அவர்கள் முன்னேறவும் தேவையானவற்றைப் பற்றி விவாதித்து சட்டம் இயற்றவேண்டிய இடம் என்பதில் செழியன் உறுதியாக இருந்தார்.

தலைநகர் அவருக்கு நண்பர்கள் பலரைக் கொடுத்தது. செழியனின் அறிவும் புலமையும் பிற கட்சியினரையும் அவர்பால் ஈர்த்தது. இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாக நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து  இவரைக் கைது செய்யக் காத்துக்கொண்டு இருந்த காவல்துறைக்கு சிக்காமல் நாடாளுமன்றத்தில்  அவர் முழங்கியது இந்திராவையே கலங்கடித்து. அந்த காலகட்டத்தில் ஜெயப்ரகாஷ் நாராயணனின் தலைமையினால் ஈர்க்கப்பட்ட செழியன் இந்திராவை எதிர்த்து உருவான ஜனதா கட்சியில் இணைந்தார். 1978 முதல் 1984 வரை ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசுக்கு இவர் அளித்த பரிந்துரைகள்தான் இன்று சட்டமாகி உள்ள "பஞ்சாயத்து ராஜ்" முறைக்கு அடித்தளமாக அமைந்தது.

1984ஆம் ஆண்டு தென்சென்னை தொகுதியில் செழியன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நிறுத்தியது நடிகை வைஜயந்திமாலா பாலியை. "அவரை லோக்சபாவிற்கு அனுப்புங்கள்,  வைஜயந்திமாலாவை ஆர் ஆர் சபாவுக்கு அனுப்புங்கள்" என்று துக்ளக் சோ அட்டைப்படம் போட்டார். ஆனால் சினிமா மோகத்தில் மூழ்கியுள்ள தமிழகம் ஒரு தலைசிறந்த நாடாளுமன்றவாதியைப் புறக்கணித்து நடிகையை தேர்ந்தெடுத்தது. முடியும் வரை ஜனதா பரிவாரத்தில் இயங்கிய செழியன் மெதுவாக பொது வாழ்க்கையை விட்டு விலகினார். அரசியலில் பணம் சேர்க்காத மிகச் சில அரசியல்வாதிகளில் ஒருவரான செழியன் தனது கடைசிக் காலத்தில் தனது நாடாளுமன்ற சகாவான விஸ்வநாதனின் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

நெருக்கடி நிலைக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஜனதா அரசு நீதிபதி ஷா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. ஆனால் அந்தக் குழு அறிக்கை சமர்பிப்பதின் முன்னமே ஜனதா அரசு கவிந்தது. அந்த நேரத்தில் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு தேடித்தேடி அந்த அறிக்கையை இல்லாமல் ஆக்கியது. எதிர்பாராத விதமாக செழியன் மூன்று பாகம் கொண்ட அந்த அறிக்கையை தனது சொந்த புத்தகச் சேகரிப்பில் கண்டெடுத்தார். அதை மீண்டும் பதிப்பித்து சுதந்திர இந்தியாவின் முக்கியமான ஆவணத்தை மீண்டும் உயிர்பெறச் செய்தார். அவரது பங்களிப்பில் மிக முக்கியமான ஒன்றாக இது விளங்கும்.

தனது தொன்னூற்று மூன்றாம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் செழியன் காலமானார். வெற்று அறிக்கைகளோடு நமது அரசியல் தலைவர்கள் தங்கள் கடமையை முடித்துக்கொண்டனர். தான் உண்மை என்று நம்பியதைக் காப்பாற்ற  வாழ்க்கை முழுவதும் போராடியே வாழ்ந்தவர்கள் சாகும்போதும் வழியனுப்ப மிகக் குறைவானவர்களே கூடுவதுதானே தமிழகத்தின் இயல்பு. அதுபோலவே செழியனும் வழியனுப்பப்பட்டார். ஆனால் இழப்பு அவருக்கல்ல., நமக்குத்தான்.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

ஏப்ரல் 27 - தொழிலதிபர் லாலா ஸ்ரீராம் பிறந்தநாள்

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பாரதநாட்டில் தொழில்துறையில் பெரும் சாதனைகளைச் செய்த லாலா ஸ்ரீராம் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த மதன்மோகன்லால் - சந்தோதேவி தம்பதியரின் முதல் மகனாக 1884ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் பிறந்தவர் லாலா ஸ்ரீராம் அவர்கள். மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து தனது வாழ்நாளில் பாரத  நாட்டின் முக்கியமான தொழில் குழுமத்தை உருவாக்கியவர் லாலா ஸ்ரீராம். தனது ஆரம்ப கல்வியை நகராட்சிப் பள்ளியிலும் பின்னர் மேற்படிப்பை ஹிந்து கல்லூரியில் முடித்தார்.

1891ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் Delhi Cloth and General Mills Co என்ற பெயரில் ஒரு நூற்பாலை நிறுவப்பட்டது. அந்த ஆலையின் செயலாளராக ஸ்ரீராமின் மாமா லாலா கோபால் ராய் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு  அந்த நூற்பாலையின் செயலாளராக ஸ்ரீராமின் தந்தை மதன்மோகன்லால் நியமிக்கப்பட்டார். 1909 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் வருவாய் துறையில் லாலா ஸ்ரீராம் பணிக்குச் சேர்ந்தார். படிப்படியாக பதவியில் உயர்ந்த லாலா ஸ்ரீராம் முதலாம் உலகப்போரில் ஆங்கில ஆட்சிக்கு கூடாரங்கள் தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்ததை நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுத்தார். இதன் மூலமாக ஒரு பெரும் பணம் அவருக்கு ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து லாலா ஸ்ரீராம் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தின் உரிமையாளராக மாறினார்.

அதிலிருந்து மின்னல் வேகத்தில் லாலா ஸ்ரீராம் தலைமையில் அந்த நிறுவனம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. எட்டே வருடத்தில் நிறுவனத்தின் விற்பனை பதினாறு லட்சத்தில் இருந்து தொண்ணூற்றி ஒரு லட்சமாகவும் லாபம் மூன்று லட்சத்தில் இருந்து பதினெட்டு லட்சமாகவும் உயர்ந்தது.

செல்வத்துப் பயனே ஈதல் என்ற வரையரைக்கு ஏற்ப லாலா ஸ்ரீராம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டார். Commercial Educational Trust என்ற அமைப்பை நிறுவி அதன் மூலமாக ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்ரீராம் தொடங்கினார். அந்தப் பள்ளி படிப்படியாக வளர்ந்து இன்று நாட்டின் புகழ்பெற்ற ஸ்ரீராம் கல்லூரியாக டெல்லியில் உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது மனைவியின் நினைவாக லேடி ஸ்ரீராம் கல்லூரி என்ற கல்வி நிலையத்தையும் லாலா ஸ்ரீராம் நிறுவினார்.

1930ஆம் ஆண்டு இந்திய தொழிமுனைவோர் கூட்டமைப்பின் ( Federation of Indian Chamber of Commerce & Industry ) தலைவராக லாலா ஸ்ரீராம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவரோடு மேடையில் இருந்தவர் காந்தி அடிகள். ஆங்கில ஆட்சி நடந்துகொண்டிருந்த சமயத்தில் இதனைச் செயல்படுத்த மிகப்பெரும் துணிவு வேண்டும்.

லாலா ஸ்ரீராம் நிறுவிய DCM குழுமம்  மின்விசிறிகள், சர்க்கரை போன்ற பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனத்தோடு இணைந்து சரக்கு வாகனங்களை உருவாகும் தொழிலிலும் இருந்தது. HCL நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ்நாடார் உள்பட பல தொழிலதிபர்கள் இந்த குழுமத்தில்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1963ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாள் லாலா ஸ்ரீராம் இயற்கை எய்தினார்.

நாட்டின் முன்னோடி தொழிலதிபர்களின் ஒருவரான லாலா ஸ்ரீராம் அவர்களின் பங்களிப்பை இன்று நினைவு கூறுவதில் ஒரே இந்தியா தளம் பெருமை கொள்கிறது.   

சனி, 26 ஏப்ரல், 2025

ஏப்ரல் 26 - கணிதமேதை ராமானுஜம் நினைவுநாள்

ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின்புதான் பாரதத்தில் அறிவு வளர்ச்சியே ஏற்பட்டது என்று குறைந்தபட்சம் மூன்று தலைமுறைகளாக நாம் நம்பவைக்கப் பட்டுளோம். ஆனால் வரலாறு பதிவான காலங்களிலேயே தக்ஷசீலத்தில், நாளந்தாவில், காஞ்சி நகரில் மிகப்பெரும் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தன. அங்கே உலகின் பல பாகங்களில் இருந்து மாணவர்கள் தங்கி பயின்று இருந்தார்கள் என்ற உண்மையை நம்மில் பலர் அறியோம்.

அந்த வகையில் இந்தியாவில் செழித்து வளர்ந்த ஒரு துறை கணிதம். ஆரியபட்டர், முதலாம் பாஸ்கராச்சாரியார், இரண்டாம் பாஸ்கராச்சாரியார், பிரம்மகுப்தர், ஆச்சாரியார் ஹேமச்சந்திரர், கேரளாவைச் சார்ந்த மாதவர், நீலகண்ட சோமயாஜி என்ற பெயர்கள் கூட நமக்கு அறிமுகம் ஆகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் சி ஆர் ராவ், காப்ரேகர், ஹரிஷ் சந்திரா, சத்யேந்திரநாத் போஸ், நரேந்திர கர்மார்கர், சி எஸ் சேஷாத்ரி ஆகியோர்களின் பெயர்களைக்கூட கணிதப் பேராசிரியர்களாவது அறிந்திருந்தால் அதுவே ஆச்சர்யம்தான்.

இதே வரிசையில் வாழும்போது வறுமையில் வாடி, இன்றும் சரியானபடி புகழப்படாத கணிதமேதை ராமானுஜத்தின் நினைவுநாள் இன்று. 1887ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார். படித்ததும் வளர்ந்ததும் கோவில் நகரமான கும்பகோணத்தில். ஏழை அந்தணக் குடும்பத்தைச் சார்ந்த இவர் தந்தை ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதி வந்தார். சிறுவயதிலேயே கணக்கில் மட்டும் ஆச்சரியமான திறமை கொண்டிருந்த ராமானுஜம் கல்லூரியில் பிற பாடங்களில் வெற்றி பெறவில்லை.

அன்றய காலகட்டத்தின் வழக்கத்தின்படி சிறுவயதிலேயே திருமணம் ஆனதால் பணத்திற்காக சென்னை துறைமுக நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவரது நல்லூழ் அங்கே இவரது கணித மேதமையை அறிந்துகொண்ட சிலர் ராமானுஜத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள கணித அறிஞர்களோடு தொடர்பு கொள்ளத் தூண்டினார்கள்.

சென்னையில் உள்ள ஒரு எளிய இளைஞரின் திறமையை இங்கிலாந்து நாட்டின் ஹார்டியும் அவர் நண்பர் ஜான் லிட்டில்வுட்டும் புரிந்து கொண்டனர். கணித ஆராய்ச்சியைத் தொடர வரும்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ராமானுஜத்திற்கு அழைப்பு விடுத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் சென்னை பல்கலைக்கழகமும் அவருக்கு உதவிநிதி அளிக்கத் தயாரானது. ராமானுஜத்தின் பயணம் தொடங்கியது.

ஹார்டிக்கு ராமானுஜம் எழுதிய கடிதம் படிப்பவர்களை உருக்கக்கூடியது. " நான் உங்களிடம் எதிர்பார்ப்பதெலாம் ஒன்றுதான். நான் உண்ண உணவின்றி பட்டினியாகக் கிடக்கும் மனிதன். என் மூளையைப் பாதுகாக்க என் அரை வயிற்றுக்காவது உணவு வேண்டும். இதுவே என் முதல் தேவை" என்று அவர் எழுதி உள்ளார்.  ராமானுஜத்திற்காவது ஒரு ஹார்டி கிடைத்தார். ஆதரிக்க யாருமில்லாமல் இந்த உலகத்தில் எத்தனை மேதைகள் வெளியே தெரியாமலே மறைந்தார்களோ - யார் அறிவார் ?

திருத்துவக் கல்லூரியில் ( Trinity College ) ராமானுஜமும் ஹார்டியும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துல்லியமாகத்  தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

எண்களை பற்றிய ராமானுஜத்தின் ஆய்வு மிக முக்கியமானது. இந்திய கணிதம் என்பது இந்திய தத்துவதோடு பிணைந்தது. முடிவின்மை என்பதும் கல்பகோடி வருடங்கள் என்பதும் நமது தத்துவத்தில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பவைதான். அதே வழியில் பல தேற்றங்களை நாமகிரி தாயார் தனது கனவில் கற்றுக்கொடுத்ததாக ராமானுஜம் பதிவு செய்து உள்ளார். அபோருக்ஷமேயமான வேதங்களை முனிவர்கள் கண்டடைந்தனர் என்ற பாரதிய சிந்தனையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே! ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! காசநோயால் பாதிக்கப்பட்டு ராமானுஜம் இந்தியா திரும்பினார். 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் ராமானுஜம் மரணத்தைத் தழுவினார்.

கும்பகோணத்தில் உள்ள ராமானுஜம் பிறந்த வீட்டை சாஸ்திரா நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் வாங்கி, அதனை நினைவில்லமாக நிர்வகித்து வருகிறார்கள். குறைந்த பட்சமாக வளரும் தலைமுறைக்காவது திரைதாரகைகளை அல்ல அறிஞர்களை அறிமுகம் செய்யத் தொடங்குவோம்.

வாழ்ந்தபோது கொண்டாடப்படாத அறிஞனுக்கு வாழ்கைக்குப் பிறகும் அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் தலைசிறந்த கணிதமேதை பெயரால் தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லை. தமிழகத்தின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழகத்திற்கு ராமானுஜம் பெயரல்லவா சூட்டப்பட்டு இருக்கவேண்டும்.

வியாழன், 10 ஏப்ரல், 2025

ஏப்ரல் 10 - பெரும் தொழிலதிபர் ஜி டி பிர்லா பிறந்தநாள்

பாரத நாட்டின் பெரும் தொழில் குழுமத்தை உருவாக்கிய கியான்ஷாம் தாஸ் பிர்லா அவர்களின் பிறந்தநாள் இன்று. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த பிலானி பகுதியில் வசித்துவந்த மார்வாடி சமுதாயத்தைச் சார்ந்த ராஜா ராஜா பல்தேவ்தாஸ் பிர்லாவின் மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் பிறந்தவர் ஜி டி பிர்லா. 


ராஜா பல்தேவ்தாஸ் பிர்லா மும்பை நகருக்கு குடிபெயர்ந்து அங்கே தொழில் செய்யத் தொடங்கினார். வெள்ளி, பருத்தி, தானியங்கள் போன்ற பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை அவர் நடத்தி வந்தார். காலப்போக்கில் அவரது நான்கு மகன்களும் அவரது வியாபாரத்தில் பங்குகொள்ளத் தொடங்கினார்கள்.
ஜி டி பிர்லா வியாபாரத்தில் இருந்து உற்பத்தித்துறையில் கால்பதிக்க முடிவு செய்தார். அவர் கொல்கத்தா நகருக்கு குடி பெயர்ந்து அங்கே சணல் வியாபாரத்தைத் தொடங்கினார். பின்னர் 1918ஆம் ஆண்டு சணல் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கினார். ஆனால் இந்த முயற்சியை அன்றுள்ள ஆங்கிலத் தொழிலதிபர்கள் பெருமளவில் முட்டுக்கட்டை போட்டனர். விடாமுயற்சியால் அந்த தடைகளை பிர்லா முறியடித்தார்.

முதலாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு பிர்லாவின் தொழிலை பெரிய அளவில் முன்னெடுக்கும் காரணியாக அமைந்தது. 1919ஆம் ஆண்டு பிர்லா ஐம்பது லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு பெரும் சணல் ஆலையை நிறுவினார். அதனைத் தொடர்ந்து சிமெண்ட், ஜவுளி, பல்வேறு ரசாயனங்கள், ரேயான் இழை தயாரிப்பு என்று பல்வேறு உற்பத்தித்துறைகளிலும் ஆலைகளை நிறுவினார். 1940ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற பெயரில் கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் பிர்லா தொடங்கினார். 1926ஆம் ஆண்டு பிர்லா அன்றய மத்திய சட்டசபைக்கு உறுப்பினராக தேர்வானார்.

பெரும் தொழிலதிபரான பிர்லா தேசபக்தராகவும் இருந்தார். காந்திஜியின் ஆணைக்கு ஏற்ப ஹரிஜன் சேவா சங்கத்தின் நிறுவி அதன் தலைவராகவும் பிர்லா விளங்கினார். அதே போல இந்திய தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பான FICCI ( Federation of Indian Chamber of Commerce and Industry ) அமைப்பை உருவாக்கியவரும் பிர்லாதான். கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு யூகோ வங்கியை பிர்லா நிறுவினார். காந்திஜியின் அணுக்கத் தொண்டராகவும் நெருங்கிய சீடராகவும் பிர்லா இருந்தார். காந்தி தனது வாழ்வின் கடைசி நான்கு மாதங்களை பிர்லா மாளிகையிலேயே கழித்தார்.

தொழில்துறையில் மட்டுமல்ல கல்வித்துறையிலும் பிர்லா அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. ராஜஸ்தான் மாநிலத்தில் எங்கோ இருக்கும் பிலானி நகரை இன்று கல்விப்புலத்தின் மிக முக்கியமான இடமாக பிர்லா மாற்றினார். அங்கே ஒரு பொறியியல் கல்லூரியை அவர் உருவாக்கினார். இன்று நாட்டின் மிக முக்கியமான பொறியியல் கல்லூரிகளில் முன்னணியில் பிர்லா கல்லூரி விளங்குகிறது. பிவானி நகரில் ஜவுளிதுறைக்கான ஒரு கல்விநிலையத்தையும் அவர் ஆரம்பித்தார்.

திரு ஜி டி பிர்லா எழுதிய பல்வேறு கடிதங்கள், கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் பல்வேறு புத்தகங்களாக வெளியாகி உள்ளது மகாத்மாவின் நிழலில் என்று காந்திஜியோடு பிர்லாவின் புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

1957ஆம் ஆண்டு பாரத நாட்டின் இரண்டாவது முக்கியமான விருதான பத்மவிபூஷண் விருதை அரசு பிர்லாவுக்கு அளித்து மரியாதை செய்தது.

ஒரு ஆயுள்காலத்தில் பெரிய தொழில் குழுமத்தை உருவாக்கி, அதோடு நாட்டின் பல்வேறு முன்னேற்றப்பணிகளுக்கும் பங்களிப்பு செய்த திரு ஜி டி பிர்லா தனது எண்பத்தி ஒன்பதாம் வயதில் 1983ஆம் ஆண்டு காலமானார்.

நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான திரு ஜி டி பிர்லா அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 9 ஏப்ரல், 2025

ஏப்ரல் 9 - ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தநாள்

ஆரம்பப்பள்ளிவரையே படித்தவர், ஆனால் பேரறிஞர். பட்டம் ஏதும் பெறாதவர், ஆனால் பல்கலைக்கழக பேராசிரியர், பன்மொழி வித்தகர், புகைப்படக் கலைஞர், புத்தமதத் துறவி அதேநேரம் பொதுவுடமைவாதி, தத்துவமேதை, வாழ்க்கை முழுவதும் பயணத்திலேயே கழித்தவர், ஹிந்தி மொழியில் பயண இலக்கியம் என்ற புதிய பாதையை உருவாக்கியவர் இப்படி பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம் இன்று.

இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். தன் வாழ்வில் இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், ப்ரெஞ்சு, ரஷ்யன் போன்ற 33 மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங் களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திபெத் மீது சீனா படையெடுத்த பிறகு இந்த இலக்கியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கும்.

இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமை தான் என்ன?, சிந்து முதல் கங்கை வரை, இந்து தத்துவ இயல், இஸ்லாமிய தத்துவ இயல், ஐரோப்பிய தத்துவ இயல், விஞ்ஞான லோகாயத வாதம் மற்றும் ஊர்சுற்றிப் புராணம் ஆகியவை அவற்றில் சில.

சிறுவயதிலேயே வீட்டைவிட்டு புறப்பட்டு விட்ட ராகுல்ஜி காசி நகரத்தில் சமிஸ்க்ரிதம் பயின்றார். அங்கிருந்து தமிழகம் வந்து தமிழ் கற்று சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆர்யா சமாஜத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு அதையும் பயின்றார். அதன் பிறகு புத்த மத துறவியாக மாறி பௌத்த நூல்களைக் கற்றார். இதற்கு நடுவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தார்.


அதிகாரபூர்வமாக பட்டம் எதையும் பெறாத ராகுல்ஜி சோவியத் ருஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். ஹிந்தி, சமிஸ்க்ரிதம், பாலி, போஜ்புரி, திபெத்திய மொழி ஆகியவற்றில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
மத்திய ஆசியாவின் வரலாறு என்ற புத்தகத்திற்காக இவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு 1963ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது.

1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல் சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.

ஹிந்தி மொழியில் எழுதப்படும் சிறப்பான பயண இலக்கியத்திற்கு மஹாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் விருது வழங்கப்படுகிறது.