ஞாயிறு, 24 ஜூலை, 2011

செந்தமிழ் வரலாறு

 என் மகளுக்கும் அவள் சேர்ந்த எட்டு பேர் கொண்ட  குழுவிற்கும் செந்தமிழ் வரலாறு என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் எழுதியது. அவர்கள் எல்லோரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்வதர்காகவும், சரி செய்வதற்காகவும் இங்கே வலை ஏற்றயுள்ளேன். 

காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே!

பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே!
அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும் ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம் கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே நிலைபெறநீ வாழியவே

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று உலகில் சுமார் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. அதில் 2000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையும், இன்றும் வழக்கில் உள்ள தொடர்ச்சியும் உள்ளது நமது  தமிழ் மொழி. உலகில் மிக சில மொழிகளுக்கே செம்மொழி என்ற பெருமை உள்ளது. செம்மொழி என்ற தகுதி பெற வல்லுநர் குழு கூறும் தகுதிகள் வருமாறு 

அ. மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு
ஆ. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டு்ப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள்.
இ. அம்மொழிக்கே உரியதாகவும் ,மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.

இந்த சிறப்புக்கள் எல்லாம் முழுவதும் பொருந்திய உயர்தனி செம்மொழி நமது தாய்மொழி. அந்த தமிழ்மொழி வரலாறை உங்கள் முன் கூறுவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.  
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய முத்த குடி நமது தமிழ்குடி. தமிழ் மொழியின் வரலாறு சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், சிற்றிலக்கிய காலம், தற்கால வரலாறு என பிரிக்கப்படும். அதுபோல இயல் தமிழ், இசை தமிழ், நாடக தமிழ், உரைநடை தமிழ், அறிவியல் தமிழ் என்றும் பிரிக்கப்படும். 

இயற்கையோடு ஒன்றி வாழ்வு நடத்தியவர்கள் நம் முன்னோர்கள். தமிழகம்நில அமைப்பின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப்  பிரிக்கப்படுகிறது.  மலைப்பகுதிவனப்பகுதிசமநிலப்பகுதி (வயல்வெளி)கடற்பகுதி மற்றும் பாலைநிலம். தமிழக மக்களும் இந்த ஐந்து நிலப்பகுதிகளிலும் விரவி இருந்தனர். மனிதனாகதமிழனாக பொதுவில் இருந்தும் அவர்கள் வாழ்க்கைமுறை இந்த நில அமைப்பினால் பெரிதும் வேறுபட்டது. ஒவ்வொரு நிலத்தின் இயல்புக்கேற்ப மனிதனின் வாழ்க்கை முறையும்எண்ண உணர்வுகளும் வேறுபடலாம் என்ற உளவியல் கோட்பாடும் தமிழர்களுக்கு தெரிந்து இருந்தது. 

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே என்பது தொல்காப்பியர் வகுத்த விதி. ஐவகை நிலம் என்று சொல்லி, இங்கே நான்கு பிரிவுகள் தான் சொல்லப்படுகிறது. ஏன் என்றால், பாலை என்ற நிலம் நிரந்தரமாக தமிழ் நாட்டில் கிடையாது. 
 முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவங் கொள்ளும்” என்பது இளங்கோ அடிகள் கூறுவது. 
நிலத்தை பிரித்து போல, தமிழர்கள் காலத்தையும் ஆறு பிரிவாக பிரித்தனர். ஒரு ஆண்டினை ஆறு பிரிவுகளாகப் பிரித்தால், ஒவ்வொரு பிரிவும் ஒரு பெரும்பொழுது ஆகும். பெரும்பொழுது ஒவ்வொன்றும் இரண்டு மாத கால அளவுடையது. சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு கூறுகள். சிறுபொழுது ஒவ்வொன்றும் பத்து நாழிகை (4 மணிநேர)க் கால அளவுடையது. 
இது போலவே ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்ப உணர்வுகளை அயலார்க்குக் கூற இயலாது, அகத்தாலே உணரக்கூடியன அகப்பொருள் ஆகும். அகப்பொருள் பற்றிய ஒழுக்கம் அகவொழுக்கம், அகத்திணை எனப்படும். மக்களின்   கல்வி,  வீரம், ஆட்சிமுறை,  வெற்றி, அறம், கொடை,    ஒழுக்கம், பண்பாடு,பழக்கவழக்கங்கள் முதலியனவற்றைப் பற்றி அமைவது புறத்திணை. போரும், வீரமும், வெற்றியுமே தமிழனின் புறஒழுக்கத்தில் முன்னிலைப் பெற்றன.
இன்று காலமும், கறையானும் தின்று தீர்த்தது போக நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும். இது ஒரு இலக்கண நூல். இலக்கியம் தோன்றிய பின்னரே இலக்கணம் உருவாக முடியும் என்பதால், நமது தமிழின் பழமையை நாம் உணந்து கொள்ளலாம். 


பத்து பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ் கணக்கு என்று பாடல் தொகுப்புகள் சங்க காலத்தினை சேர்ந்தவை. இதில் மிகப் புகழ் பெற்றவை புறநானுறு மற்றும் அகநானுறு ஆகும். இரண்டு வரிகளில் மனித வாழ்விற்கு தேவையான எல்லா பொருட்களையும் பாடியது திருக்குறள். அது போல நாலடியாரும் பல வாழ்கை வழிகளை கூறும் நூல். சங்க கால பாடல்களில் இருந்து பண்டைய தமிழர்களின் வாழ்வு முறையை நாம் அறிந்து கொள்ளலாம். 

சங்க காலத்திற்கு பின்னர் வருவது பக்தி இலக்கிய காலம். நாளும் தமிழ் பரப்பி நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழுக்கு புது பொலிவு சேர்த்தனர். அப்பரும், ஞானசம்பந்தரும், சுந்தரரும் இந்த காலத்தின் சிறந்த தமிழ் பணி செய்தனர். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் மிகப் புகழ் பெற்ற ஒரு நூலாகும். திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி

ஆழ்வார்களும் , நாயன்மார்களும் பாடிப் பணிந்த கோவில்கள் பாடல் பெற்ற தலங்கள் என்று புகழ் பெற்று விளங்குகின்றன.  பண்ணுடன் அமைந்த இந்தப் பாடல்களை, இசையுடன் பாடியும், நடனம் ஆடியும் மக்கள் வழிபட்டனர். இந்த கால கட்டத்தில் கருங்கற்களால் பல கோவில்கள் கட்டப்பட்டன. கோவில்கள் தமிழ் இசைக்கும், நடனத்திற்கும் களமாக விளங்கியது. 
ஆண்டவனை பாடி பரவிய இதே காலத்தில், மனிதனைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் சித்தர்கள் பாடிய பாடல்கள் சித்தர் பாடல்கள் என்று வழங்கப் பட்டன. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றும் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்று பல தத்துவங்களை சித்தர்கள் மிக எளிதாக கூறினார்கள். 

இந்த கால கட்டத்தின் சிறப்பான படைப்புக்கள் கம்பர் எழுதிய ராமாயணமும், சேக்கிழார் எழுதிய பெரிய புராணமும். நள வெண்பாவும், கலிங்கத்து பரணியும் இந்த காலத்தில் தோன்றியவை ஆகும். 

பதின்முன்றாம் நுற்றாண்டிற்குப் பிறகு, முகலாய மன்னர்களின் ஆதிக்கம் இந்தியா எங்கும் ஓங்கியது. தமிழையும், புலவர்களையும் ஆதரிக்கும் மன்னர்கள் இல்லாத ஒரு நிலை வந்த போது, சிற் இலக்கிய காலம் ஆரம்பம் ஆனது. சிற் இலக்கியங்கள் தொண்ணுற்று ஆறு வகை படும். அவைகளில் தூது,கலம்பகம்,அந்தாதி, பிள்ளைதமிழ், உலா, குறவஞ்சி என்பன ஆகும். பொதுவாக இது குறு நில மன்னர்களையும், பணம் படைத்தவர்களையும் பாட்டுடை தலைவர்களாக கொண்டு இருக்கிறது. 
முகலாய ஆட்சி முடியும் போது இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழ் நாடும் இதற்கு விலக்காக இல்லை. கிருஸ்துவ மதத்தை பரப்ப பல பாதிரிகள் இந்தியா முழுதும் பணி செய்ய வந்தனர். பாடல்கள் மூலம் வளர்ந்த தமிழ், உரைநடைக்கு மாறத்தொடங்கியது. வீரமாமுனிவரும், ராபர்ட் கார்ட்வேல்லும், சீகன் பால்க் ஐயரும், ஜி யு போப் அடிகளும் உரைநடை மூலம் தமிழ் பணி செய்தனர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் நாட்டின் முதல் புதினம் என்ற புகழோடு ஒரு புது பாணியை ஆரம்பித்து வைத்தது. பல கிருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப் பட்டது. இந்தியா மொழிகளில் விவிலியம் தமிழில் தான் முதல் முதலாக மொழி மாற்றம் செய்யப் பட்டது. முதல் அச்சு பதிப்பகம் கடலூர் அருகே ஆரம்பிக்கப்பட்டது. 

ஏட்டு சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களை உ வே சுவாமிநாத ஐயர் தமிழகம் எங்கும் தேடித் தேடி, சரி பார்த்து பதிப்பித்தார். அவர் மூலமாகவே நாம் தமிழர்களின் பழம் பெருமைகளை அறிய முடிகிறது. அதனால் சுவாமிநாத ஐயர் தமிழ் தாத்தா என்று அழைக்கப் படுகிறார். 
இலக்கியங்களை பாடிய தமிழ், கால மாற்றத்தை மேற்கொண்டு விடுதலைப் போரில் ஒரு ஆயுதமாக பயன் பட ஆரம்பித்தது. பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமணிய சிவாவும் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் மக்களை அன்னியர் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழ வைத்தனர். 
வ வே சு ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். புதுமைப் பித்தனும், கல்கி கிருஷனமூர்த்தியும், அகிலனும், நா பார்த்தசாரதியும் உரை நடையின் உச்சத்தை தொட்ட சில எழுத்தாளர்கள், தமிழ் உரை நடையில் மணிக்கொடி காலம் என்பது ஒரு புது பாய்ச்சலை உருவாக்கியது. சி சு செல்லப்பா, லா சா ராமாமிர்தம், ஜெயகாந்தன் ஆகியோர் இருபதாம் நுற்றாண்டு கண்ட சில புகழ் பெற்ற ஆசிரியர்கள். 
வளர்ச்சின் அடுத்த கட்டம், நாடகங்கள் மூலமும், திரைப்படங்கள் வழி நடந்தது. அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும், பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் திரைப் படங்கள் மூலம் தமிழ் வளர்த்தனர். டெல்லி மாநகரத்தில் இருந்து வெளிவந்த கணையாழி பத்திரிகை முலமாக சுஜாதா உரைநடைக்கு ஒரு புது வடிவம் தந்தார். திசைகள் என்ற இதழ் மாலன் முலமாக பல புது படைப்பாளிகள் வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டனர். கலாப்ரியாவும், வண்ண தாசனும், வண்ண நிலவனும் நமது திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாளிகள். 
தமிழகத்தில்  மட்டும் இல்லாது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் விஞ்ஞான வளர்ச்சி முலமாக தமிழுக்கு தொண்டு செய்து வருகின்றனர். இன்று உலகில் வலை பூக்கள் மூலமாக, உலகம் எங்கும் தமிழை வளர்த்து வரும் பணி பலர் மூலமாக நடந்து வருகிறது. பல் வேறு கலை சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி இது போன்ற அன்பர்களால் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 
நண்பர்களே, வெறும் பழம் பெருமை பேசுவதற்காக இந்த செம்மொழி வரலாற்றை நாங்கள் உங்களுக்கு நினைவு படுத்தவில்லை, இத்தனை ஆண்டு காலம் கடந்து வந்த நமது மொழியை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய நமது கடமையை நினைவு படுத்தவே  இந்த வரலாறு சொல்லப்பட்டது. தமிழையும் தமிழ் மக்களையும் மேலும் ஒரு படி உயர்த்தும் கடமை நமக்கு உள்ளது. கடமையை செய்யத் தவறிய மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நினைவில் இருத்துங்கள். 

வாழிய செந்தமிழ், வாழ்க நல்தமிழர் வாழிய பாரத மணித்திரு நாடே 


5 கருத்துகள்:

  1. சோர்வடையாமல் இது குறித்து அப்படியே தொடர் போல எழுதிக் கொண்டு செல்லவும். நிச்சயம் பலருக்கும் இது உதவக்கூடும்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, மிகவும் நன்றாக உள்ளது. நான் நம் தமிழ் பற்றி பல விபரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. பணி தொடர வாழ்த்துகள். By. v.s. murugesan

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. மனித வாழ்வின் அடித்தளம் மொழிதான். மொழி என்ற அஸ்திவாரத்தில் இருந்துதான் வாழ்வியல் கட்டுமானங்களை உருவாக்க முடியும் என்ற கூற்றை அற்புதமாக பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் இப்பணி.

    Kailash
    Goa
    India

    பதிலளிநீக்கு